Monday, 21 March 2016

முதிர்ந்த நாற்றுக்களே கேளுங்கள் ! *

*

    உங்களை வேரறுக்க வந்தேன் என
    எண்ணாதீர்- வேருடன் பிடுங்கி
    வேறிடத்தில் ஊன்றிடவே வந்தேன்!

முதிர்ந்த நாற்றுக்களே வாருங்கள்!
நீங்கள் எந்த நிலத்தில் முளைத்து
வளர்ந்து  வாழ்ந்து வருகிறீர்களோ
அந்நிலம் சத்திழந்து,சாரமற்றுப்
போய்விட்டது - இனியும்
அந்நிலம் உங்களுடைய
வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும்
சிறிதும் உதவிடாது!

ஆகவே உங்களைப்பிடுங்கி
வேறு வளமான நிலத்தில் நட்டிட
என்னை அனுமதியுங்கள் !

இப்புதிய நிலத்தில் நீங்கள் ஆழமாக
வேரூன்றி நிலைத்திடும் வரையில்
நான் பாய்ச்சும் தெளிந்த நன்னீரை
தினமும் பருகுங்கள் !

முதிய நாற்றுக்களே !
உங்களை வேறு நல்ல நிலத்தில்
நட வேண்டுமானால் இப்போது
நீங்கள் இருக்கிற நிலத்திலிருந்து
உங்களைப் பிடுங்கியாக வேண்டும்!
ஆகவே அமைதியாக என்னுடன்
ஒத்துழையுங்கள் !

உங்களை வேரறுக்க வந்தேன் என
அஞ்சாதீர் - வேருடன் பிடுங்கி
வேறு நிலத்தில் ஊன்றிடவே வந்தேன் !

ஆகவே ஏற்கனவே நீங்கள் அறிந்த
அனுபவித்து வருகிற அந்தப் பழகிய
பழைய சூழலை வாழ்க்கையை
இழக்கப் போவது குறித்து
வருத்தமடையாதீர் - மாறாக
புதிய இடத்தில் புதிய வாழ்க்கையை
தொடங்கப் போகிறீர்கள் என்பதைக்
குறித்து உற்சாகம் கொள்ளுங்கள் !

ஆம், எந்தச் சூழ்நிலைமையிலும்
வாழ்க்கை மீதான ஆர்வத்தை மட்டும்
இழந்து விடாதீர் - ஆர்வத்தை இழப்பது
அனைத்தையும் இழப்பதாகும்!
ஏனெனில் சூழல்களை விட
நிலைமைகளைவிட வாழ்க்கையே
முக்கியம்!
வாழ்க்கை மீதான பேரார்வமே
அடிப்படை உந்துவிசை - உண்மையில்
பேரார்வமே அனைத்து இருப்பின்
வாழ்க்கையின் சாரம் !

உண்மையில் வாழ்க்கை
புறத்தே யாதொரு சூழலையும்
நிலைமையையும் சார்ந்திருப்பதில்லை !
சூழலின் விளைவே வாழ்க்கை என்பது
தலைகீழ் பார்வை !
சூழல் அல்ல வாழ்க்கையை உருவாக்கியது
வாழ்க்கை (மிக ஆழமான அர்த்தத்தில்)
தன்னைத்தானே வெளிப்படுத்திக்
கொள்ளவே சூழலையும் அதில்
ஜீவிகளையும் உருவாக்கியது !

சூழலுக்கு ஏற்ப தகவமைதல் அல்ல
வாழ்க்கை - சூழலையும் ஜீவிகளையும்
கடந்து செல்வதே வாழ்க்கை !

உங்களுக்குத் தெரியும் - காற்று
நீர் உணவு இன்றி உங்களால்
உயிர் பிழைத்திருக்க முடியாது !
அதே வேளையில் காற்று நீர் உணவு
இருந்தாலும் உங்கள் வாழ்க்கை
முழுமையடைந்து விடுவதில்லை!
ஏனெனில் உயிர்-பிழைத்திருத்தலும்
வாழ்தலும் ஒன்றல்ல !

வாழ்க்கை என்பது தன்னைத் தானே
கடந்து வளர்ந்து செல்லும்
பேரியக்கம் ஆகும்  - அது
தன் முழுமையை முழுச்சுதந்திரத்தை
நோக்கிச் செல்கிறது !
ஆகவே வாழ்க்கை
எவ்வொரு சூழலையும் ஜீவியையும்
பயன் படுத்திக்கொள்கிறது - அதன்
முன்னோக்கிய பாய்ச்சலில் இறுதியில்
அது எதையும் சார்ந்திராத
தன்னில் தானே முடிவான
முழுமையான நிலையை நோக்கிச்
செல்கிறது !

ஆனால் இறுதியானது என்பது
கடைசியில் வருவதில்ல - மாறாக
முடிவானது என்பது முழுமையானது
என்கிறஅர்த்தத்தில் இறுதியானது !
ஆம்  இறுதியானதை இன்றே இப்போதே
அடைய முடியும் !
உடனே "அது எப்படி ?" என்று கேட்காதீர் !

உங்கள் வளர்ச்சியும் பரிணாமமும்
இனியும் புறக் காரணிகளைச்
சார்ந்திருக்கவில்லை - மாறாக
நீங்கள் எவ்வளவு (முழுமையாக)
உணர்வு பூர்வமாக மாறுகிறீர்கள்
என்பதைப் பொறுத்தது !

இறுதி முழுமையை இப்போதே
அடைய முடியும் என்பது வெறும்
சாத்தியப்பாடோ அல்லது ஊகக்
கோட்பாடோ அல்ல !
இவ்விஷயத்தில் 'முடியும்'  'முடியாது'
என்கிற நிலைபாடுகள் அர்த்தமற்றவை!
மாறாக "முழுமையடைய வேண்டும்!"
என்கிற தேவையை அவ்வளவு ஆழமாக
தீவிரமாக உணர்வதொன்றே உங்களை
முழுமைக்கு இட்டுச் செல்லும் !

உங்களுக்கு ஒரு ரகசியத்தை  இங்கே
சொல்கிறேன்  - முழுமையடைவதன்
தேவையை முழுமையாக உணர்வதும்
முழுமை மீது நீங்கள் கொள்ளும்
அதீத பேரார்வமும் தான் அந்த
முழுமை நிலை யாகும் !

வாழ்க்கை என்பது எவ்வளவுஆரோக்கியமாக
எவ்வளவு சௌகரியமாக  எவ்வளவு
நீண்ட காலம் உயிர்- பிழைத்திருக்கிறீர்
என்பது பற்றியதல்ல - மாறாக
எவ்வளவு விரைவாக நீங்கள்
மலர்கிறீர்கள் என்பது பற்றியது !

நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாகவும்
சௌகரியமாகவும் வாழ்ந்தாலும்
எவ்வளவு காலம் வாழ்ந்திடப்போகிறீர்கள்?
விரைவாகவோ அல்லது ச ற் று
தா ம த மா க வோ  மரணம் வரும் வரை
மட்டும் தானே வாழ்வீர்கள்!
மரணம் வந்து யாவற்றையும்
அர்த்தமற்றதாக்கிவிடுகிறதே !

நீங்கள் தற்போது வேர் கொண்டிருக்கும்
நிலம் மரணத்தின் விதிக்குட்பட்டது !
ஆகவேதான் உடனே உங்களை
மரணம் தீண்ட வியலாத
நித்தியத்தின் நிலத்தில் ஊன்றிட
விரும்புகிறேன் !

ஆனால் நீங்களோ அப்படியொரு
நிலமோ நித்திய உலகமோ
இருக்கவியலுமா என சந்தேகிக்கிறீர்!
உங்கள் கனவிலும்கூட அதற்கான
சாத்தியம் பற்றி யோசித்திருக்க
மாட்டீர் - ஆயினும்  உங்களுக்குத்
தெரியாத புரியாத எதையும் நீங்கள்
மறுக்கவே செய்வீர்கள் !
ஏனெனில் அன்றாடத்தேவைகளாலான
வாழ்க்கையைக் கடந்து வேறு
எதைப்பற்றியும் யோசிக்கமுடியாதபடிக்கு
இந்த உலகியலில் நீங்கள் மூழ்கிக்
கிடக்கிறீர்கள் !

ஆனால் சாத்தியமற்றதைச் சிந்திப்பவனே
சாதிப்பவனே மனிதன் !
மேலும் இத்தகைய சவால் ஏதுமற்ற
ஒரு வாழ்க்கை மனித-ஜீவிகளுக்கு
உரியதாயிருக்க முடியாது - மாறாக
அது மண்புழுக்களுக்கே உரியதாயிருக்கும் !

முதிர்ந்த நாற்றுக்களே காலம்
விரைவாகக்கடந்து போய்க்கொண்டே
இருக்கிறது  -நாளுக்கு நாள்
நீங்கள் முதிர்வடைந்து கொண்டே
போகிறீர்கள் - பிறகு
உங்களைப் பிடுங்கி வேறு நல்ல நிலத்தில்
நடுவது என்பது அதி சிரமம் !
அப்படியே பிடுங்கி நட்டாலும்-அப்புதிய
நிலத்தில்  புதிதாய் வேர் பிடித்து
வளர்வது என்பது மிகக் கடினம் !
ஆகவே மேலும் காலம் காலம் கடந்து
போவதற்குள் உங்களைப் பிடுங்கி
நடுவதற்கேதுவாய்  தளர்வாய் இருங்கள்!
விடாப்பிடியாக நீங்கள் பற்றிக்
கொண்டிருக்கும் பழைய சிந்தனைகளை
கோட்பாடுகளை  கைவிட்டு  புதிய
சிந்தனைகளைக் கைக்கொள்ளுங்கள்!
பழையதின் குறிப்பும் தொடர்பும்
வாசணையும்  உள்ளவரை புதிய
உணர்வுக்குள் நீங்கள் பிரவேசிக்க
இயலாது !

புதிய-உணர்வு என்றவுடன் உடனே
அது பற்றிய கற்பனைகளில் இறங்கி
விடாதீர் - அது
கற்பனைகளுக்கு எட்டாதது - உங்கள்
கனத்த சிந்தனைகளுக்குள்ளும் அது
அகப்படாது !

முதலில் உணர்வுக்கு வாருங்கள் !
நீங்கள் ஒரு  'உணர்வு'  என்பதை
நேரே முழுமையாய் உணருங்கள் !
உடனே நீங்கள் விழித்துக்கொள்வீர்கள் !
விழிப்பு தான் அந்த புதிய
முழு-உணர்வுக்கான ஒரே பிரதான
வாயில் !

புத்தர் இயேசு ரமணர் ஆகியோர்
தாங்கள் தோன்றிய இடத்திலிருந்து
தங்களைத் தாங்களே பிடுங்கி
வேறு இடத்தில் ஊன்றிக்கொண்டு
வளர்ந்து மலர்ந்தவர்கள் !

அவர்கள் வேற்று கிரகங்களிலிருந்து
வந்தவர்களோ விசேடப் பிறவிகளோ
அவதாரப் புருஷர்களோ
விதிவிலக்கானவர்களோ விசேடமாய்
தெரிவுசெய்யப்பட்டவர்களோ அல்ல !

மாறாக அவர்கள் தங்களைத் தாங்களே
தெரிவுசெய்து கொண்டவர்கள் !
வடிவமைத்துக்கொண்டவர்கள் !
விபத்து போன்றமைந்த
சூழ் நிலைமைகளின் அடிமைத்
தனத்திலிருந்து தங்களது விழிப்பினால்
தங்களை விடுவித்துக்கொண்டவர்கள் !

மனிதன் தனது பிறப்பினால்
மனிதனாவதில்லை !
மாறாக தனது விழிப்பினால் தான்
முழுமையாக  மனிதனாகிறான் !

         *****
   
  * இப்பதிவு விசார மார்க்க உள்-வட்டப்
    பங்கேற்பாளர்களுக்காக விசேடமாக
    எழுதப்பட்டது.
    மா.கணேசன் / 13.03.2011  
         *****





No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...