
"என்னால் இது முடியல!", "எனக்கு இது புரியல!" எனும் வெளிப்பாடுகள்
எதைக் குறிக்கின்றன? இதுதான் இருப்புக்கு, வாழ்க்கைக்கு நீ தரும் பதில
ளிப்பா? இவ்வாறு சொல்வதற்குத்தான் நீ பிறப்பு எடுத்தாயா, மனிதா?
"இல்லை, நானாக இந்த இருப்பை, வாழ்க்கையை, விரும்பித் தேர்ந்தெடுக்க
வில்லை!" என்று நீ சொல்கிறாயா? ஒரு வகையில், உனது விருப்பத்தைக்
கேட்காமலேயேதான் நீ இங்கு கொண்டுவரப்பட்டுள்ளாய் என்றே வைத்துக்
கொண்டாலும், உனக்குக்கொடுக்கப்பட்ட இந்த வாழ்க்கையில், நீ உனக்குப்
பிடித்தவை என எதையுமே நீ விரும்பாமலும், தெரிவு செய்யாமலும் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறாயா? உனது வாழ்க்கையில், சிறிதளவு மகிழ்ச்சி
யை, இனிமையைக்கூட நீ ருசித்ததில்லையா? உயிரின் மீது உனக்கு ஆசை
யில்லையா? அன்றாடம் நீ அருந்தும் காப்பியில் சர்க்கரையின் அளவு கூடி
விடக்கூடாது என நீ கவனமாகப் பார்த்துக் கொள்வதில்லையா? அட, உனது விருப்பத்தைக்கேட்காமலேயே உனக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாழ்க்
கையின் ஒரு ஓரத்தையேனும் நீ ருசித்திருக்கிறாய், உனக்குப் பிடித்தவை
என எதையேனும் நீ ரசித்திருப்பாய்; காப்பியில் சர்க்கரையின் அளவு
குறித்து அக்கறை கொள்ளும் அளவிற்கு வாழ்க்கையில் பிடிப்பு கொண்ட
உனக்கு, உன்னைக்கேட்காமலேயே இந்த வாழ்க்கை கொடுக்கப்பட்டதில்
தவறேதுமிருக்க வியலாது! பெரிதாக உணர்வின்றியும், விழிப்பின்றியும்;
ஆழமான சிந்தனையின்றியும், புரிதலின்றியும்; தானியங்கித்தனமாக, ஒரு
உயிருள்ள எந்திரம்போல இத்தனை வருடங்கள் நீ வாழ்க்கையின் ஒரு சிறு
பகுதியையாவது ரசித்து, ருசித்து, அனுபவித்து வாழ்ந்து வந்திருக்கிறாயல்
லவா! அச்சிறு பகுதியை "உன்னுடையது" என நீ சொந்தம் கொண்டாடவில்
லையா! நீ ஆசைப்பட்ட அளவிற்குரிய வாழ்க்கையை நீ உன் வசப்படுத்திக்
கொண்டாய், அல்லது அப்பகுதி உன்னை வசப்படுத்திக்கொண்டுவிட்டது!
அதே போல, வாழ்க்கை மொத்தத்தையும் உன்னால் எளிதாக வசப்படுத்த
இயலவில்லை எனும் போது தானே முரண்பாடு எழுகிறது? நன்றாகப் பார்!
முரண்பாடு வாழ்க்கையில் உள்ளதா, அல்லது உன்னிடம், உனது அணுகு
முறையில், உனது பேராசையில் உள்ளதா? பெரிதாக ஆசைப்படுவதில் தவ
றில்லை; அதற்குரிய தகுதியை வளர்த்துக்கொள்ளாதது தான் தவறு! அட,
வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை, ஒரு ஓரத்தை ருசித்த உனக்கு, மொத்த
வாழ்க்கையையும் முழுமையாக ருசிக்க வேண்டும், தரிசிக்க வேண்டும்
எனும் ஆவல் ஏன் உன்னுள் எழவில்லை? "என்னால் இது முடியல!", "எனக்கு
இது புரியல!" என்று நீ கூறுவதன் அர்த்தம் என்ன?இக்கூற்றுகளின் வழியாக
நீ என்ன சொல்ல வருகிறாய்? வாழ்க்கையை முழுமையாகத் தரிசிக்கவும்,
தழுவிக் கொள்ளவும் உண்மையிலேயே நீ பேராவல் கொண்டாயா? அப்
பேரார்வத் தீக்கு உன்னை முழுவதுமாக, மிச்சம் மீதமின்றி அப்படியே
கொடுத்தாயா? விரும்பியோ, விரும்பாமலோ ஆடுகளத்தில் இறக்கப்பட்ட
பிறகு, ஆட்டத்திலும் ஈடுபட்ட பிறகு, பாதியாட்டம் மட்டும்தான் ஆடுவேன்
என்பது முறையாகுமா? உண்மையில் பிரச்சினை, கடினம், மட்டுப்பாடு என்
பதெல்லாம் வாழ்க்கையில் இல்லை! மாறாக, உனது விருப்பங்களிலும்,
தெரிவுகளிலும், அற்பமான உனது எதிர்பார்ப்புகளிலும்; புதிய விஷயங்கள்,
ஆழமான அம்சங்கள், மற்றும் உயர்-மெய்ம்மை நிலைகளுக்கு நீ தயாராக
இல்லை என்பதிலும் தான் உள்ளன! உனது விருப்பத்தைக்கேட்காமலேயே நீ
இந்த இருப்பிற்குள், வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டதாக நீ எண்ணலாம்!
ஆனாலும், வாழ்க்கை அவ்வளவு கடுமையாகவோ, கறாராகவோ நடந்து
கொள்வதில்லை! உனது சொந்த விருப்பங்களுக்கும், சின்ன சின்ன ஆசை
களுக்கும் அது நிச்சயம் இடமளிக்கவே செய்கிறது! நீ விரும்பினால், ஒரு
மூடனாக, அற்பனாக, காமுகனாக, கொலைஞனாக, கேடுகெட்டவனாக,
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், வாழலாம்! வாழ்க்கை ஒருபோதும்
உன்னை ஒரு நன்னெறியாளனாகவோ, உயர்பேரறிவாளனாகவோ ஆகிட
வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதில்லை! நீ விரும்பி முயன்றால், வாழ்க்கை
யின் முழுமைக்கும், உச்சத்திற்கும் நீ உயரலாம்! அதுவே வாழ்க்கையின்
விருப்பமும்கூட! ஆனால், வாழ்க்கை தனது விருப்பத்தை உன் மீது திணிப்ப
தில்லை! எத்தகைய வாழ்க்கையையும் நீ தெரிவு செய்யலாம், அதற்கான
முழுச்சுதந்திரத்தையும் வாழ்க்கை உனக்குக்கொடுத்துள்ளது! நீ தெரிவு
செய்த வாழ்க்கை உன்னை நிறைவுசெய்யவில்லை, துன்பம், வெறுமை
யுணர்வு, விரக்தி இவை தான் மிச்சம் என்பதாயிருந்தால், அதற்கு உனது
தெரிவு தான், அதாவது, நீயே தான் பொறுப்பே தவிர வாழ்க்கையல்ல!
வாழ்க்கை என்பது நீ விரும்பாமலே, கேட்காமலே கொடுக்கப்பட்ட அற்புதப்
பரிசு ஆகும்! வாழ்க்கை என்பது முழுமையானதொரு மெய்ம்மையாகும்!
அதன் பல்வேறு வெளிப்பாடுகளில் மனிதனாகிய நீ ஒரு மையமான விசேட
மான வெளிப்பாடு ஆவாய்! வாழ்க்கை எவருக்கும் எடுத்த எடுப்பிலேயே
தன்னை முழுவதுமாகத் திறந்து காட்டுவதில்லை! ஏனெனில், அதன் மடை
திறந்த ஆனந்த வெள்ளத்தைத் தாங்கும் சக்தி எவருக்கும் கிடையாது!
மலையிலிருந்து சிறு சிறு நீர்த்தாரைகள் ஒன்று சேர்ந்து அருவியாகி, பிறகு
சிற்றோடையாகி, பிறகு நதியாகி, மிகுந்த தண்ணீரைத் தன்னுள் கொள்ள
வியலாது வெள்ளப்பெருக்கெடுத்து, முடிவில் சமுத்திரத்தில் கலப்பது தான்
பாதுகாப்பு ஆகும்! சமுத்திரம் நதிக்குள் பாய்ந்தால் நதி சின்னாபின்னமாகி
விடும்! ஒருவன் வாழ்வின் முழுமையைச் சந்திக்கவேண்டுமெனில், அவன்
தன்னை அதற்காகத் தயார்படுத்திக்கொள்வது அவசியமாகும்!ஆனால்,
ஒருவன் ஏன் வாழ்வின் முழுமையைச் சந்தித்தாக வேண்டும்,அதனுடன் ஏன்
ஐக்கியமாகிட வேண்டும், வாழ்க்கையை ஏன் முழுமையாக வாழ்ந்திட
வேண்டும்? ஏனெனில், ஒருவனும் வாழ்வின் முழுமையும் வேறு வேறு அல்ல!
ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தனது உட்பொதிவில் முழுமையானவனா
வான்! வாழ்க்கை சிறிது சிறிதாகத் தனது வெளிப்பாடுகளின் வழியாகத்
தன்னை வெளிப்படுத்துகிறது! எவனொருவன் வாழ்க்கைக்குத் தன்னை
முழுவதுமாகத் திறக்கிறானோ, அவனும் முழு-வாழ்க்கையும் ஒன்றாக
ஆகிறார்கள்! எவனொருவன் தனது விருப்பத்தை முன்னிறுத்தி, வாழ்க்கை
யிலிருந்து ஒரு சில பகுதிகளை, கூறுகளை, துண்டு துணுக்குகளைத் தெரிவு
செய்து அவற்றுடன் தங்கிவிடாது, வாழ்வின் விருப்பத்தை முன்னிறுத்தி
வாழ்க்கை மொத்தத்தையும் தெரிவு செய்கிறானோ, அவனே உண்மையில்
வாழ்க்கையுடன் பொருந்துகிறான், அவனே உண்மையில் வாழ்கிறான்! எவ
னொருவன் வாழ்க்கைக்காக வாழ்க்கையை நேசிக்கிறானோ, அவனுக்கே
வாழ்க்கை தனது ஞானப் பொக்கிஷங்களை வழங்குகிறது! "என்னால் இது
முடியவில்லை!", "எனக்கு இது புரியவில்லை!" என்று புலம்பும் மனிதா! உன்
னால் எல்லாம் எப்படி முடியும்? எல்லாம் எப்படிப் புரியும்? உனது முக்கியத்
துவத்தை மையமாகக்கொண்டு இயங்கும் வரை எப்படி எல்லாம் முடியும்?
எல்லாவற்றையும் சாத்தியமாக்கிடும் அந்த ஒன்றை மையமாகக்கொள்ளா
மல், அந்த ஒன்றுடன் பொருந்தாமல், உன்னுடைய உண்மையான முக்கியத்
துவத்தை நீ உணரமுடியாது! ஆம், ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் உன்னுள்ளே
யும்,ஒவ்வொரு மனிதனினுள்ளேயும் குவிகிறது என்பதென்னவோ உண்மை
தான்! ஆனால், அதன் குவி-மையம் உண்மையில், உன் வழியாகக் குவிந்து
உன்னைக் கடந்த அந்த இறுதியான புள்ளியைத் தேடுகிறது! நீ தேட வேண்
டிய புள்ளியும் அதுவே!
மா.கணேசன்/ நெய்வேலி/ 31.01.2017
----------------------------------------------------------
No comments:
Post a Comment