
நம் முன்னே இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன! முதலாவது : முழு-நிறை
வான வாழ்க்கையை வாழ்வது! இரண்டாவது : முதலாவது சவாலை நிறை
வேற்றுவதற்கான அடிப்படையைத் தக்க வைத்துக்கொள்வது, அதாவது
உயிர்-பிழைத்திருப்பது!
முதலில், முதலாவது சவால் தொடர்பான சில குறிப்புகளைக் காண்போம்!
வாழ்க்கையில் எது முக்கியமானது என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமே
முக்கியமானது! பிற யாவும் இரண்டாம் அல்லது மூன்றாம் பட்சமானவை!
இல்லாவிடில், நம் வாழ்க்கை இரண்டாம் அல்லது மூன்றாம் தரத்து விஷய
மாகிடும்! பிறகு வாழ்க்கை துன்பமயமாக உள்ளது, அர்த்தமற்றதாக
உள்ளது என்றெல்லாம் பயனற்றுப் புலம்பவும், புகார் கூறிடவும் நேரிடும்!
புலம்புவதும், புகார் கூறுவதும் பயனற்றது; ஏனெனில், நமது புலம்பலைக்
கேட்பதற்கும், புகார்களைப் பதிவு செய்வதற்கும் இங்கு எவருமில்லை!
ஏனெனில், இங்கு புலம்பலின்றி, புகார் பட்டியல் இன்றி ஒருவருமில்லை!
எல்லோரும் இங்கு ஒரே படகில் தான் பயணிக்கின்றோம்; ஆனால், படகு
கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக்கொண்டுள்ளது!
எல்லா வலிகளும், துன்ப துயரங்களும், நமக்கு நாமே வருவித்துக்கொள்ப
வையே! எல்லா வெறுப்புகளும், சண்டை சச்சரவுகள், போர்கள், அமைதிக்
கான போர் உட்பட யாவும் நம் சொந்த உருவாக்கங்களே! நம்முடைய
இதயங்கள், மனங்களிலிருந்து வெளிப்படுபவையே, நம்முடைய குழப்பங்
களிலிருந்து வெளிப்படுபவையே!
ஆம், இன்பமோ, துன்பமோ, யாவற்றுக்கும் நாமே பொறுப்பு; வாழ்க்கை
நிறமற்றது, அதற்குத் தெரிவுகள் எதுவும் தெரியாது! வாழ்க்கை துன்பத்தை
வரவேற்பதுமில்லை; இன்பத்தை விலக்குவதும் இல்லை! வாழ்க்கை துன்ப
கரமானதுமல்ல, இன்பமயமானதுமல்ல! மொத்தத்தில், மனிதனுக்கு- மனித
உணர்வுக்கு - வெளியே வாழ்க்கை என்பது இல்லை! உண்மையில், உணர்வு
தான் வாழ்க்கையும், வாழ்க்கையின் அளவீடும்! அதாவது, உணர்வின்
அளவிற்கு ஏற்பவே வாழ்க்கை அமைகிறது! கொஞ்ச உணர்வு என்றால்
கொஞ்ச வாழ்க்கை; அதிக உணர்வு என்றால் அதிக வாழ்க்கை! அப்படி
யானால், முழு நிறைவான வாழ்க்கையை அடைய என்ன தேவை என்பதை
இந்த எளிய சமன்பாட்டிலிருந்தே புரிந்துகொள்ளலாம்; ஆம்,முழு உணர்வை
எட்டுவதே முழு நிறைவான வாழ்க்கையாகும்!
மனித ஜீவிகளாகிய நாம் உணர்வற்றவர்களாயிருந்தால், குறிப்பாக, "நான்
இருக்கிறேன்!" என்றுணரக்கூடிய "சுய-உணர்வு" என்பதில்லையென்றால்,
விலங்குஜீவிகளைப் போலவே நமக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது!
அப்படியே இருந்தாலும், அவை குறித்து நாம் புலம்பவோ, யாரிடமும் புகார்
கூறவோ மாட்டோம்! ஆனால், நாம் விலங்கு ஜீவிகளுமல்ல, உணர்வற்றவர்
களுமல்ல என்பதால் நாம் ஏன் புலம்பவும், புகார் கூறவும் வேண்டும்? அதே
வேளையில், விலங்கு ஜீவிகளிடமிருந்து நாம் சில தந்திரோபாயங்களைக்
கற்றுக் கொள்வதில் நமக்கென்ன தடைகள் இருக்கமுடியும்? அதாவது
கொடிய விலங்குகளும், பெருவிலங்குகளும் நிறைந்த கானகச் சூழலில்
எவ்வாறு சிறு விலங்குகளும், சாதுவான பிராணிகளும் தகவமைந்து வெற்றி
கரமாக உயிர் பிழைத்து வருகின்றன என்பதைக் கற்றுக்கொள்வது இந்த
இருபத்தொன்றாவது நூற்றாண்டில் அவசியமாகிறது! ஏனெனில்,அதற்கான
சூழல் தற்போது உருவாகியுள்ளது! ஆகவே, நாம் இனி ஒரு சூழ்ச்சி செய்
வோம்!
அதாவது, சோகத்திலும் சோகமானது, முட்டாள்தனமான சக-மனிதர்களால்
அப்பாவிகளான சக-மனிதர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும்,
அநீதிகளும், அநியாயங்களும் தான்! இவற்றை விட அநியாயமானது எது
என்றால், "இத்தகைய போட்டிகள், போராட்டங்கள், அநீதிகள் . . இன்னபிற
யாவும், வலியது வாழும் எனும் இயற்கைத் தேர்வை அடிப்படையாகக்
கொண்ட பரிணாம விதியின் வெளிப்பாடுகளே!" எனும் டார்வினிய
பரிணாமவாதக் கூற்றே யாகும்!
காட்டுச் சூழலில், பெரு விலங்குகள், சிறு விலங்குகள் என எல்லாமும்
எவ்வித சமூக ஒப்பந்தமும், உடன்படிக்கையும்; யாதொரு பொதுவான நெறி
முறையும், சட்டமும், நீதியும், சமத்துவ விதியும் இல்லாமலேயே தான்
கோடிக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன! ஆனால், விலங்
கினங்கள் ஒவ்வொன்றும் தமக்கேயுரிய தகவமைதலின் படி - தந்திர உத்தி
களையும், சூழலுக் கேற்றவாறு தம் நிறத்தை அல்லது வடிவத்தை மாற்றிக்
கொள்வது, தற்காப்புக்காக கொம்புகள், முட்கள், விஷம் ஆகியவற்றை
சமயோசிதமாகப் பயன்படுத்தி உயிர்பிழைத்துவருகின்றன!
ஆனால், நாட்டுச்சூழலில், சமூக ஒப்பந்தம், உடன்படிக்கை, நெறிமுறைகள்,
சட்டங்கள், விதிமுறைகள், காவல்துறை, நீதி மன்றம், மக்களாட்சி, தேர்தல்
எல்லாம் இருந்தும் இன்னும் காட்டின் விதிகளே நாட்டிலும் தொடர்கின்றன!
காட்டில் வாழும் கொடிய விலங்குகளைப் போலவே ஆதிக்க சக்திகள்,
அதிகாரம் படைத்தவர்கள், பணக்காரர்கள், உயர்சாதியினர் ஆட்சி செய்து
வருகின்றனர்! ஒருவகையில், மனிதனை விலங்கினங்களில் ஒன்றாக
வகைப்படுத்தும் டார்வினியப் பார்வை சரியென்றே படுகிறது! ஏனெனில்,
மனிதத் தன்மையற்ற இனத்தை விலங்கினமாகத்தானே கருதமுடியும்!
ஆக, இத்தகைய சமூகக்காட்டில் நாம் பிழைக்க வேண்டுமானால், நாம்
சமயோசிதம், சூழ்ச்சி, தந்திரம், ஆகிய எல்லாவற்றையும் பிரயோகிப்பது
மீண்டும் அவசியமாகலாம்!
நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்காக நாம் விஷமுடையவர்களாக
மாறுவது ஒன்றே வழி! நம்மை எவரும் சுரண்ட அனுமதிக்காத வகையில்
நாம் எல்லாவகைத் தடைகளையும், கேடயங்களையும் உருவாக்கிக்கொள்
வதும் அவசியமாகலாம்!
உலகின் பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். உலக மக்கள்
தொகையில், பெரும் செல்வம் படைத்த 20 சதவிகிதத்தினர் 75 சதவிகித
உலக வருமானத்தைப் பெறுகிறார்கள், அதேசமயம் 40 சதவிகிதத்தினர்
வெறும் 5 சதவிகித வருமானத்தை பெறுகிறார்கள். (ஐ.நா சபையின் மனித
வளர்ச்சி அறிக்கை 2007/2008). உலகின் பெரும்பகுதி மக்கள் உலகின்
மிகவும் ஏழ்மையான நாடுகளின் மிக ஏழ்மையான பகுதிகளில், உதாரணத்
திற்கு சீனாவின் கிராமப்புறங்களிலும், இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின்
கிராமம் மற்றும் நகர்ப்புறங்களிலும் வாழ்கிறார்கள் (Milanovic, 2002).
மனிதர்கள் ஏழைகள், பணக்கார்கள் என செயற்கையாகவும், மிகவும் வஞ்ச
கமான வகையிலும் இரு வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், அறிவு
என்பது எவ்வொரு வர்க்கத்திற்கும் உரிய தனிச்சொத்து அல்ல என்பதாலும்,
முக்கியமாக உழைப்பு என்பது, அது உடல் உழைப்பாயினும், மூளை உழைப்
பாயினும், அது ஏழை வர்க்கத்திற்குரிய சாபமாக ஒதுக்கப்பட்டிருப்பதான
நிலைமையை வரமாக மாற்றுவது தற்போது ஏழை வர்க்கத்திற்கான
தவிர்க்கக்கூடாத சவால் ஆகும்! "அறிவு என்பது ஆற்றல்!" என்பதை நாம்
தற்போது நினைவில் கொள்வதும், அதையே நமக்குச் சாதகமாகப் பயன்
படுத்திக் கொள்வதும் அவசியமாகும்!
ஏழை மக்கள் வசம் இரண்டு வகை மூலதனம் உள்ளது; ஒன்று அறிவு, அதை
நாம் மேன்மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும். இரண்டாவது, உழைப்பு,
அது நம்மிடம் அபரிமிதமாக உள்ளது! இப்போது நாம் செய்யவேண்டியது,
அறிவையும், உழைப்பையும் நாமே நேரடியாக முதலீடு செய்து அதன் பலன்
களை நாமே நேரடியாக அறுவடை செய்து பயன்கொள்வது தான்!
ஏற்கனவே, அறிவு, உழைப்பு இரண்டையும் நம்மிடம் வைத்துக்கொண்டு
முதலீட்டாளர்களான அரசையும், பெரு நிறுவனங்களையும், தொழிலதிபர்
களையும் நம்பி மோசம் போனோம்! இனி நாம் நம்மையே நம்புவோமாக!
கடமைகளை நிறைவேற்றிவிட்டு உரிமைகளுக்காகப் போராடிக் கொண்
டிருப்பதை இனியும் வாழ்க்கையாகக் கொள்ள வியலாது! வாழும் உரிமை,
குறிப்பாக உயிர் வாழும் உரிமையைக் கேட்டு எவரும் எவரிடமும் கையேந்
திக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை! புல்லாயினும், பூண்டாயினும் அவை
எங்கு முளைத்தனவோ அவ்விடத்திலேயே இருந்து வாழ்வதற்கான முழு
உரிமையும் அவற்றுக்கு உண்டு; அவ்வுரிமையை எவரிடமும் வேண்டிப்
பெறத்தேவையில்லை! ஆம், வாழும் உரிமையை வழங்கும் அதிகாரம் பெற்
றவர்கள் என்போரும் இங்கு எவருமில்லை! அதேபோல், நாம் புரியவேண்டிய
கடமைகளைப் பணிப்பவர்கள் என்போரும் இங்கு எவருமில்லை!
ஆம், "நம் கடன் பணி செய்துகிடப்பதே!" என்பதும்; "கடமை, கண்ணியம், கட்
டுப்பாடு எனும் இந்த முக்குணமும் உழைக்கும் வர்க்கத்துக்கே!" என்பதும்
மக்களை ஏய்ப்பதற்கான தந்திர கோஷங்கள் ஆகும்! மனிதர்கள் உழைப்
பதற்காகப் பிறந்தவர்களல்ல;அவர்கள் வாழப்பிறந்தவர்கள்! வாழ்வதற்காக
உழைப்பது இனிமையானது! ஆனால், உழைப்பதற்காக வாழ்வது என்பது
அடிமைச் சுமையாகும்! வாழ்க்கை என்பது கட்டாய உழைப்பு முகாம் அல்ல!
வறுமை, வளமை என்பவை வாழ்க்கையின் தரத்தைக் குறிக்கும் அளவீடு
கள் அல்ல! ஏனெனில், வறுமை என்பது உயிர்-வாழ்தலையே கேள்விக்குறி
யாக மாற்றிவிடும் அவலத்தின் சின்னம் ஆகும்! வளமை அல்லது செல்வ
நிலை என்பது மனிதவாழ்விற்கு தவறானதும் தலைகீழானதுமான நோக்கத்
தையும், இலக்கையும் கற்பித்திடும் பிறழ்ச்சி ஆகும்!
செல்வந்தர்கள் வாழும் வாழ்க்கை மனித வாழ்க்கையே அல்ல! அது ஒரு
"பகட்டுத்தனமான பன்றி" வாழ்க்கையே ஆகும்! இது காழ்ப்புணர்ச்சியின்
கையாலாகாத விமர்சனம் அல்ல! மாறாக, தன் தேவைகளுக்கு மேல் பணம்
சம்பாதிப்பவன், சொத்து சேர்ப்பவன் பேராசை பிடித்த மிருகம் ஆவான்!
ஏனெனில், அவனுக்கு தேவைகளின் அளவும் தெரியவில்லை; அவற்றின்
பயன்பாட்டு வரம்புகளும் தெரியவில்லை! அதாவது தேவைகள் எதுவும்
மனித வாழ்க்கையை நிறைவு செய்வதுமில்லை, வாழ்வின் அர்த்தத்தையும் வெளிப்படுத்துவதில்லை! பசி, உணவின் தேவையைச் சுட்டுகிறது; உணவு
பசியைப் போக்குகிறது, அல்லது மேலதிகமாக அது ருசியை திருப்திசெய்ய
லாம், அவ்வளவு தான்! அதற்குமேல் உணவு வாழ்வின் அர்த்தத்தை அளிப்
பதில்லை!இவ்வாறே எல்லாவிதத்தேவைகளும் அவற்றிற்குரிய பயன்பாட்டு
எல்லைகளுடன் முடிந்து போகின்றன! எந்த ஒரு தேவையும் மனிதனை முழு
மைப்படுத்துவதோ நிறைவு செய்வதோ இல்லை!
தன் தேவைகளுக்குமேல் பன்மடங்கு பணம் சம்பாதிப்பவன்,சொத்து சேர்ப்
பவன் பேராசைபிடித்த மிருகம் மட்டுமல்ல; அவன் பரந்து பட்ட மக்களுக்கு
எதிராக குற்றம் இழைப்பவனுமாகிறான்! உலக மக்கள்தொகையில்,வெறும்
20 சதவிகிதத்தினர் 75 சதவிகித உலக வருமானத்தைப் பெறுகிறார்கள்
என்பது வெறும் புள்ளிவிபரம் மட்டுமல்ல; மாறாக, வரம்புக்கு உட்பட்ட உலக
வளங்களை பிறருக்கு கிடைக்கச் செய்யாமலும், வருங்கால மானிடச் சந்த
திக்கு விட்டு வைக்காமலும் சுரண்டிக் கொள்ளையடிக்கும் அருவருக்கத்
தக்க படு பாதகச்செயலாகும்!
விலங்குகள் பிற விலங்குகளிடம் சென்று பிச்சையெடுப்பதில்லை, கெஞ்சு
வதில்லை! விலங்குகள் அதிகாரப்போட்டியில் ஈடுபடுவதில்லை! ஏனெனில்,
வாழ்க்கைக்கும் அதிகாரத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது
அவைகளுக்கு எவ்வாறோ தெரிந்திருக்கிறது! விலங்குகள் தற்கொலை
செய்து கொள்வதில்லை! விலங்குகள் பொறாமைப்படுவதில்லை, பேராசை
கொள்வதில்லை! சமத்துவம் வேண்டிப் போராடுவதில்லை! மாறாக, அவை
தங்களுக்குரிய தனித்தனி உயிரியல் மாடங்களில், அதாவது இட-அமைவு
களில் இருந்துகொண்டு வாழ்கின்றன! விலங்குகள் பிற விலங்குகளுடன்
தம்மை ஒப்பிட்டுக் குறைப்பட்டுக் கொள்வதில்லை! விலங்குகள் பொய்
சொல்வதும் போலியாக நடந்துகொள்வதும் இல்லை! தம்மைத் தற்காத்துக்
கொள்வதற்குரிய தந்திரங்களையும், உபாயங்களையும் தவிர அவை வேறு
தகாத நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்வதில்லை! ஆனால், புலிகள்
மான்களை வேட்டையாடி உண்கின்றன என்பது "வனசிரம தருமம்" ஆகும்!
அதில் நாம் பின்பற்றத் தக்கக் குறிப்பு எதுவும் இல்லை!
மனித சமூகத்தில், அதிகார ஏணியில் உயர் படிகளை எட்டியவர்கள் தம்
நிலைகளைத் தக்கவைத்துக் கொள்வதன் வழியாக மட்டுமே தாம் வாழ
முடியும் என்பதாக எண்ணுகிறார்கள்! ஆகவே அவர்கள் எல்லாவழிகளிலும்
பிறரை அடக்கி ஒடுக்கிக் கட்டுப்படுத்தி வைப்பது என்பது தங்களுடைய
தலையாய தர்மம் என்று எண்ணிச் செயல்படுகிறார்கள்! கீழே உள்ளவர்கள்,
அதிகாரமற்றவர்கள், மேலேயுள்ளவர்களது தவறான வாழ்க்கைப் பார்வை
யைத் தழுவித் தாங்களும் அதிகார ஏணியில் ஏறினால் தான் சிறக்க வாழ
முடியும் என்றெண்ணி முயற்சிக்கையில் மீண்டும் மீண்டும் ஒடுக்கப்பட்டு
நசுக்கப்படுகிறார்கள்! அதிகாரத்தை அவசியமான தொரு அம்சம் எனக்
காணும் எவரும், அவர் ஏணியின் கீழ்ப்படியில் இருந்தாலும் அவருக்கும்
அதிகார ஏணியின் உச்சியிலிருக்கும் ஒருவருக்கும் மனநிலையில் வித்தி
யாசம் ஏதுமில்லை இடையிலுள்ள படிகளைத்தவிர! அதாவது எல்லாவகைப்
படிமுறை அமைப்புகளும் பயனற்றவையே; அவை மனிதகுலத்தைப் பிளவு
படுத்துபவையே! அவை வாழ்க்கைக்குப் புறம்பானவையே!
விலங்குகளின் சமூகத்தில், எல்லா விலங்குகளும் பின் பற்றக்கூடிய வகை
யிலான, அதாவது, நகல் செய்யக்கூடியதான கற்பிக்கப்பட்ட பொதுவான
மதிப்பீடுகள், கோட்பாடுகள், பாணிகள், போக்குகள், வாழ்முறைகள் எதுவு
மில்லை! விலங்கினங்கள் யாவும் தத்தம் சொந்த நெறிமைகளையே கடை
பிடித்து வாழ்கின்றன!எவ்வொரு அம்சத்தையும் ஒரே வார்ப்பிலிட்டதுபோல
நகல் செய்வது தான் மானிடர்களின் மாபெரும் மட்டுப்பாடும், பிரச்சினை
யும் ஆகும்! அதாவது, மனிதர்களின் வாழ்க்கையை அளப்பதற்கென கடை
பிடிப்பதற்கு யாதொரு குறிப்பான, அல்லது பொதுவான "தர-அளவு" என்று
ஏதுமில்லை!
வாழ்க்கையில் மானிடர் ஒவ்வொருவரும் அடையப்படவேண்டிய வளர்ச்சி,
முன்னேற்றம்,வெற்றி என்பவை பரஸ்பரம் ஒருவருக்கு எதிராக ஒருவர் கட்டி
யெழுப்பக் கூடியவையல்ல! மாறாக, மானிடர் ஒவ்வொருவரும் தன்னுள்ளே
நிர்மாணிக்கப்பட வேண்டிய அம்சங்களாகும்! உண்மையான வளர்ச்சி,
முன்னேற்றம்,வெற்றி என்பவை ஒருவன் தன்மீது அணிந்து கொள்ளக்கூடிய
புறப்பொருட்கள், மதிப்புகள் ஆகியவற்றாலான அணிகலன்கள் அல்ல!
அவை அக ரீதியானவை; அவை அறிவுத்தெளிவு, அகமலர்ச்சி, அகந்தை
கடந்த அகண்ட உணர்வு ஆகியவையே ஆகும்!
கௌரவமான உயிர்வாழ்தலுக்கான தற்சார்புகொண்ட தொழில்நுட்பத்தை
நாம் உருவாக்கியாக வேண்டும்! "நாம் உருவாக்கியாக வேண்டும்" என்று
சொல்வதால், மீண்டும் கும்பலாக, கூட்டுறவாகச் சேர்ந்து செய்யப்பட வேண்
டும் என்ற அர்த்தத்தில் அல்ல; முடிந்தவரை தனி நபராக, அவரவரும் தனித்
தனியே உருவாக்கிக்கொள்ள வேண்டும்!அதாவது,கறையான்களைப்போல
எல்லோரும் சேர்ந்து கூட்டுழைப்பின் மூலமாக புற்று கட்டி வாழ்வதாக
அல்லாமல்; சிலந்தியைப் போல தனித்தனியே தம்தம் கூட்டினை உருவாக்
கிக்கொண்டு வாழ்ந்திட வேண்டும்! ஏனெனில், "கூடி வாழ்ந்தால் கோடி
நன்மை!" என்பது இன்னும் பலன் தரவில்லை! கூடி உழைக்கிறோம், உற்
பத்தி செய்கிறோம்; ஆனால், உழைப்பின் பலன்கள் உழைக்கும் மக்கள்
அனைவருக்கும் கிடைப்பதில்லை! ஆகவே தான், தற்சார்பு ரீதியிலான
தொழில்நுட்பத்தின் அவசியம் பற்றி இங்கு பேசுகிறோம்!
நாம் கூடி உழைக்கிறோம், செயல்புரிகிறோம், ஆனால், கூடி வாழவில்லை!
கூட்டுழைப்பின் பலன்கள் எல்லோருக்கும் கிடைத்தால்தானே வாழமுடியும்!
அதாவது, கூட்டுறவு, கூட்டுழைப்பு என்பவை ஏய்ப்புக்கும், சுரண்டலுக்கும்
போர்வையாகப் பயன்படும் பசப்பல் கோட்பாடுகளேயாகும்! ஆகவேதான்,
கூட்டுறவுக்குப் பதிலாக "தற்சார்பு" பற்றியும்; சமத்துவத்திற்குப்பதிலாக
"தனித்தன்மை" யை வளர்த்துக் கொள்வது பற்றியும் இங்கு வலியுறுத்திப்
பேசுகிறோம்!
சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் போன்ற கோட்பாடுகள் பிரெஞ்சுப்
புரட்சிக்காலத்தில் இருந்து பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகின்றன!
ஆனால்,பெரிதாக எதுவும் இதுவரை சாதிக்கப்படவில்லை! ஏனெனில்,கோட்
பாடுகள், சட்டவிதிகள் என்பவை வேறு; நடைமுறை எதார்த்தம் என்பது
வேறு! 'சமத்துவம்' என்பது மிகவும் சிக்கலான கோட்பாடு ஆகும்; இதுவரை
அதற்கு தெளிவானதொரு விளக்கம் இல்லை! "எல்லா மனிதர்களும் எல்லா
நிலைகளிலும் சமமானவர்கள்" என்பது உண்மைக்கு மாறானது. எல்லா
மனிதர்களையும் ஒரே மட்டத்திற்கு கத்தரிப்பது அல்லது நீட்டுவது என்பது
செயற்கையானது மட்டுமல்ல; அது பெரிதும் தீங்கானது!
எல்லோருக்கும் பொதுவாக உள்ள அம்சம் என்பது வேறு; எல்லோரும் சமம்
என்பது வேறு. ஏனெனில், எல்லோருக்கும் பொதுவாக உள்ள அம்சம் எல்லோ
ரையும் சமப்படுத்திவிடாது!
சில நல்லெண்ணம் கொண்ட சிந்தனையாளர்கள் கூறுவதென்ன என்றால்,
"எவர் வேண்டுமானாலும் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை அடைய
ஆவல் கொள்ளலாம், ஆனால், அவற்றை அவர் பிற மனிதர்களின் உதவி
யின்றி, அதாவது சகோதரத்துவம் இன்றி சாதிக்க இயலாது!" என்கின்றனர்!
இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், சமத்துவம், சுதந்திரம் போலவே,
"சகோதரத்துவம்" என்பதும் அழகிய இலட்சியபூர்வமான கோட்பாடேயாகும்!
ஆனால், அதை அடைவது என்பது சற்றும் சாத்தியமற்றதாகும்! மனிதர்
களின் உளவியல் அறியாதவர்கள் வேண்டுமானால், இவற்றின் சாத்தியம்
குறித்து நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் பேசி ஆறுதல் அடையலாம்!
மனிதனைப்பற்றிய ஒரு விசேடமான உண்மை என்னவெனில், தொடர்ந்து
அவன் உணர்வில் வளர்ந்து தன்னைத்தானே கடந்துசெல்லும் பரிணாம
விதியைக் கொண்டவனும்; அவ்வழிமுறையின் முடிவில் ஒப்பற்றதொரு
இலக்கை அடையவேண்டியவனுமான ஒரு ஜீவியாவான்; அதாவது, அவன்
ஒரு எலி அல்லது தவளையைப்போல பிறக்கும் போதே பூரணமானவனாகப்
பிறப்பதில்லை! ஓரு எலியானது எலியாகவே பிறக்கிறது, கடைசிவரை ஒரு
எலியாகவே வாழ்ந்து மடிந்து போகிறது! ஆனால், மனிதன் மட்டும் மனித
னாக ஆகப் பிறக்கிறான்! அதாவது மனிதனாக ஆவதற்குரிய உட்பொதிவு
டன் பிறக்கிறான்! மனிதன் தன்னைப் பற்றிய உணர்வுக்கு வரவில்லை
யெனில், அவனும் ஒரு எலியைப் போலவே உடலளவில் மட்டுமே வளர்ந்து
ஒரு முதுமையடைந்த உடலாக தளர்ந்து நோயுற்று மாண்டுபோவான்!
மனித வாழ்க்கையும், அதன் இலக்கும் புறத்தே உலகில், சமூகக்களத்தில்
அரங்கேற்றப் படக்கூடியதோ, நிர்மாணிக்கப் படக்கூடியதோ அல்ல! அவன்
பூமியின் மீது யாதொரு சொந்த சாம்ராஜ்யத்தையும் நிறுவுவதற்காக இங்கு
வரவில்லை! அவனது ராஜ்யம் அகத்தேயுள்ளது! விலங்கு ஜீவிகளுக்கு அகம்
என்பது கிடையாது; அவற்றின் வாழ்க்கை புறத்தே தொடங்கி புறத்தேயே
முடிந்து விடுகிறது! மனிதனது வாழ்க்கை புறத்தே தொடங்கி அகத்தே
முழுமையடைகிறது!
உடலாகிய மனித ஜீவியினுள் உதயமாகியுள்ள உணர்வே உண்மையான
மனித ஜீவியாவான்! மனிதன் தொடர்ந்து பரிணமிக்கும் உணர்வு எனும்
அம்சத்தைக் கொண்டுள்ளதால் அவன் அவனது உண்மையான உயரத்தை
அடைவதன் வழியே அவன் முழுமையடையவேண்டும்; இதைத்தான் இங்கு
நாம் மனிதன் தனக்குத்தானே சமமாதல் என்று குறிப்பிடுகிறோம்!
தனக்குத்தானே சமமாக இல்லாததனால் தான் மனிதன் பிறருடன் தன்னை
ஒப்பிட்டுப்பார்க்கவும் பிறர் மீதுபொறாமை கொள்ளவும் ,பொய்சொல்லவும்,
பிறர் பொருளை களவாடவும்,பிறரை ஏமாற்றவும்,வஞ்சிக்கவும்,கொல்லவும்
செய்கிறான்.
மனிதன் துன்புறுவதும், விரக்தியில் வெந்து மாய்வதும் எதனால்? தனக்குத்
தானே சமமாக விளங்கும் நேர்வழியைத் தெரிந்தெடுக்காமல் எது எதற்கோ
சமமாக ஆக வேண்டுமென பொய்யும் போலியுமான செயற்கையான மதிப்
புக்களை,இலட்சிய நிலைகளை அடையத்துடிப்பதும், அடையாவிடில் தோல்
வியில் தவிப்பதும் தானே!
மா.கணேசன்/நெய்வேலி/ 15.03.2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment