
மரத்தின் வேர்கள் நிலத்திலே
மனிதனின் வேர்கள் அகத்திலே!
மனிதன் ஒரு வித்தியாசமான ஜீவியாவான்; அவனது வேர்கள் அவனுள்ளே
தான் உள்ளன! அவன் தனது வேர்களைத் தேடி எங்கும் அலைய வேண்டாம்!
பிற ஜீவிகள் யாவும் நேரடியாகப் பிறக்கின்றன! ஆனால், மனிதன் மட்டும்
அவன் பிறந்த பிறகு தான் பிறக்கிறான்! அதாவது இரு முறை பிறக்கிறான்!
ஆம், மனிதன் எப்போது உணர்வுக்கு வருகிறானோ அப்போதுதான் அவன்
உண்மையில் பிறக்கிறான்!
முதலாவதாகப் பிறக்கும்போது மனிதன் ஒரு உடல்-சுயமாக மட்டுமே பிறக்
கிறான்; அதன் பிறகே மனிதன் ஒரு மனச்சுயமாகப் பிறக்கிறான். ஆனால்,
பெரும்பாலானோரது விஷயத்தில், இந்த இரண்டாவது பிறப்பானது ஓரு
விசேடப்பிறப்பாக உணரப்படாமல், உடல்-சுயத்தின் நீட்சியாக மட்டுமே
கொள்ளப்படுகிறது என்பது தான் பெரிதும் துரதிருஷ்டவசமானதாகும்!
அதாவது, பெரும்பாலானோர் இறுதிவரை ஒரு உடல்-சுயமாகவே (அதாவது,
ஒரு உடல்-ஜீவியாகவே) வாழ்ந்து மடிந்துபோய்விடுகின்றனர்!
அதாவது,பெரும்பாலானோர் ஒரு மன-ஜீவியாக எழுவதேயில்லை!அதாவது,
இறுதிவரை உணர்வுக்கு வருவதேயில்லை! இன்னும், ஒரு மன-ஜீவியாக எழு
வதும்கூட இறுதியானதல்ல! இவ்வம்சம் குறித்து பிறகு அதற்குரிய இடத்தில்
காண்போம்.
மனிதன் ஒரு மன-ஜீவியாக எழாததால் விளைபவை தான் அனைத்துப்
பிரச்சினைகளும்! அவைகளுக்கான ஒரே தீர்வு, ஒவ்வொருவரும் மன-ஜீவி
யாக விழித்தெழுவதுதான்! மனிதன் தன் மனத்திற்கு விழிக்காதவரை,
அவன் மனிதனல்ல! ஒருவன் தன் மனத்திற்கு விழிப்பது என்றால் என்ன?
பொதுவாக, நாம் 'மனித-மனம்' என்று குறிப்பிடும்போது, மனித-உடலின்
ஒரு பகுதி, அல்லது அங்கமாகவே மனத்தைக் கருதுகிறோம்! ஆனால், இது
ஒரு தலைகீழ்ப் பார்வையாகும்! பரிணாம வளர்ச்சிக் கிரமத்தைப்பொறுத்த
வரையில் முதலில் வால் தான் வெளிப்படுவதாயுள்ளது, பிறகுதான் தலை
வெளிப்படுகிறது! ஒருவன் தன் மனத்திற்கு விழிப்பது என்றால், அவன் தன்
னைப்பற்றிய உணர்வுக்கு வருவதும், 'தான்' உண்மையில் எத்தகைய நிஜம்
என தன் அடையாளம் குறித்து அறிவதும் தான்! ஏனெனில், மனம் என்பது
துல்லியமாக உடலிலிருந்து வேறானதாகும்! ஏனெனில், மனம், அதாவது
உணர்வு தான் மனிதன்!
ஆக, மனிதன் தன் மனத்திற்கு விழிக்கவில்லையென்றால், அனைத்துவித
அடையாளச் சிக்கல்களும் எழுந்து அவனை மூழ்கடித்து முடமாக்கிடும்!
முதலில், மனமானது தன்னை உடலுடன் அடையாளப்படுத்திக் கொண்டு
விடும்! அதாவது, அது தன்னை உடலாகவே எண்ணிக்கொள்ளும்! அதன்
பிறகு அதை அதனுடைய அசலான அடையாளத்தை அறியச்செய்யும்படிச்
செய்வது மிக்கக் கடினமாகிடும்! பிறகு அது தோன்றிய கூடான உடல் ஆண்
உடலாயிருந்தால், தன்னை ஒரு ஆணாகவும்; பெண் உடலாயிருந்தால்
தன்னை ஒரு பெண்ணாகவும் பாவித்துக்கொள்ளும்! ஆனால், மனத்திற்கு
பால் என்பது கிடையாது! மனம் நிறமற்றது என்பதால், அது எதனுடன்
தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறதோ அதனுடைய நிறத்தை எடுத்
துக்கொள்ளும்!
இன்னும், மனத்திற்கு யாதொரு பாரம்பரியமும், மரபும், வரலாறும் இல்லை;
அது எவ்வொரு பரம்பரையின் தொடர்ச்சியோ, அல்லது, விளைவோ அல்ல!
அதற்கு குலம், கோத்திரம், சாதி, மதம், கலாச்சாரம், எதுவும் கிடையாது!
இவை அனைத்தும் அது அமைந்திருக்கும் சூழலிலிருந்து, அது சுவீகரித்துக்
கொள்கிறது;அல்லது அதற்குள் திணிக்கப்படுவதாகிறது!இவையனைத்தும்
மனத்தைக் கட்டுப்படுத்தும் காரணிகளாகும்! இவற்றிலிருந்து அது தன்னை
விடுவித்துக் கொள்வதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல! இவற்றி
னால் மனிதஜீவிகளின் வாழ்க்கைக்கு யாதொரு அர்த்தமும் கிட்டப்போவது
இல்லை! மாறாக, இக்காரணிகள் மனித சமூகத்தைப் பிளவுபடுத்தி அவர்
களது வாழ்வைக் குலைக்க மட்டுமே உதவிடும்!
கலாச்சாரம் என்பதென்ன? ஒரு நாட்டின் அல்லது இனத்தின் சமூக நியதி
கள், பழக்க வழக்கங்கள், நெறிமுறைகள், மற்றும் வாழ் முறைகள் தானே!
ஆனால், ஒரு இனத்திற்கு அல்லது நாட்டிற்குப் பொருந்துகிற கலாச்சாரம்,
இன்னொரு நாட்டிற்கு அல்லது இனத்திற்குப் பொருந்தாது போகிறது என்
றால்; அதாவது பரஸ்பரம் ஒரு நாட்டின் கலாச்சாரம் இன்னொரு நாட்டிற்குப்
பொருந்தாது என்றால், எவ்வொரு கலாச்சாரத்திற்கும் உள்ளார்ந்த மதிப்பும்,
அர்த்தமும் இல்லை என்றாகிறதல்லவா? அப்படியானால், கலாச்சாரம் என்
பது அவரவர்க்கு சௌகரியமாக விளங்குகிற நியதிகள்,பழக்கவழக்கங்கள்,
நடைமுறைகள், சடங்குகள் மட்டுமே என்பதால், அதைப் பெரிதுபடுத்திப்
பேசுவதில் யாதொரு அர்த்தமும் இருக்கவியலாது! அதாவது, கலாச்சாரம்,
பிராந்தியம், நாடு, தேசம், இனம்,மொழி, சாதி,மதம், தொழில், உத்தியோகம்
மற்றும் இன்னபிற அடையாளங்கள் எதுவும் மனித ஜீவிகளின் வேர்களாக
அமைய முடியாது! ஏனெனில், இவ்வடையாளங்கள் எதுவும் உண்மையான,
சாரமான மனிதஜீவியை வெளிப்படுத்துவதோ, தொடுவதோ இல்லை!
ஒரு மனிதஜீவியாக இருப்பது,உணர்வது,வாழ்வது என்றால் என்ன என்பதை
அறியாமல் எவரும் ஒரு மனிதஜீவியாக உருவாக இயலாது! ஆம், மனிதஜீவி
யின் ஆணி வேர் அல்லது மூலம் கடந்த காலத்திலும் இல்லை; இன்னும்
எதிர்காலத்திலும் இல்லை! மாறாக, அவன் தன்னை முழுமையாக உணர்வு
கொள்ளும் இக்கணத்தில் தான் உள்ளது! ஆம், மனிதன் தன்னில் தொடங்கி
தன்னிலேயே முடிவடைகிறான், அதாவது முழுமையடைகிறான்! இதற்கான
ஒரு களமாக அமைந்ததுதான் இப்பிரபஞ்சம்!
மனிதன் தன்னை உணர்வுகொள்ளத்தொடங்கும்வரைதான் புறவுலகம், புற
விஷயங்கள் யாவும் அவனது கவனத்தையும், உணர்வையும் ஈர்ப்பதாகவும், முடக்கிப்போடுவதாகவும், முக்கியத்துவம் கொண்டதாகவும் தெரிகின்றன!
ஆரம்பக்கட்டத்தில், புறத்தே வர்ணமயமான ஒரு உலகம் உள்ளது என்பது,
மனத்தை, உணர்வை வியக்கச் செய்து ஆக்கிரமிக்கிறது! பிறகு ஒரு கட்டத்
தில், இத்தகைய உலகின் நடுவே, "தான்" இருக்கிறேன்! என்பது முதன்மை
பெறத் தொடங்குகிறது! மனிதனைச் சுற்றி ஒரு மாபெரும் பிரபஞ்சமே
இருந்தாலும், அது தனது இருப்பையோ அல்லது மனிதனையோ அல்லது
பிறவற்றின் இருப்பையோ உணர்வது இல்லை! ஆனால், மனிதன் தன்னைப்
பற்றிய உணர்வுக்கு சற்று தாமதமாக வந்தாலும் ( எண்ணற்ற பலர் மிக
மேலோட்டமாக தங்களது இருப்பை உணர்வதற்கு மேல் தங்களை உணர்வ
தில்லை என்ற போதிலும்) தமக்குப் புறத்தேயுள்ள உலகையும் அதிலுள்ள
பொருட்களையும் பொதுவாக மனிதஜீவிகள் உணராமல் அறியாமல் போவ
தில்லை! ஆம், பிரபஞ்சத்தை அறிகிற, உணர்வு கொள்ளுகிற மனிதன் தான்
பிரபஞ்சத்திற்கு அர்த்தம் தருபவனாகவும், பிரபஞ்சத்தின் அர்த்தமாகவும்
விளங்குகிறான்!
ஆனால், பிரபஞ்சத்தை அறிவதன், உணர்வதன் வழியே பிரபஞ்சத்திற்கு
அர்த்தம் தருபவனாகவும், பிரபஞ்சத்தின் அர்த்தமாகவும் விளங்கும் மனி
தனை அறிவதும் உணர்வதும், அவனுக்கு அர்த்தம் தருவதும் எது அல்லது
யார்? வேறு யார்? ஒவ்வொரு மனிதனும்தான் தன்னைத்தானே உணர்ந்திட
வும் அறிந்திடவும் வேண்டும்! ஆனால், தன்னை உணர்ந்திடும் மனிதன்
தன்னை என்னவாக உணர்கிறான் என்றால், தான் ஒரு "உணர்வு" எனும்
உண்மையைத்தான் உணர்கிறான்! மனிதன் தோன்றும்போதே உணர்வாக,
ஒளியாகத்தான் தோன்றுகிறான்; ஆனால், அவன் தான் ஒரு "உணர்வே",
அதாவது "ஒளியே" என்பதை உணராமலே போகிறான்! தனக்குத் தானே
ஒளியாகத் திகழ்பவனே மனிதன்!
ஆனால், பெரும்பாலான மனிதர்கள் ஏன் ஆழமாகத் தங்களை உணர்வது
இல்லை!தன்னை உணர்ந்தாகவேண்டும் என்பது மனிதனின் இருப்பிலேயே
உள்ளடங்கியுள்ள ஒரு இன்றியமையாத தேவையைச் சுட்டும் விதியாகும்!
ஆனால், பொதுவாக மனிதர்கள் அத்தேவையை அவ்வளவாக உணர்வதே
யில்லை! அதற்குக்காரணம் அவர்கள் தமது மேற்புறச்சுயமான உடலுடன்
தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டதால், உடலின் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்வதைத் தாண்டி வேறு எவ்வொரு தேவையையும்,
கடமையையும், அது எவ்வளவு உன்னதமானதாயினும், அவர்களால் அதை
நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது! ஆம், மனிதர்கள் தங்களது ஆழமான,
உண்மையான சுயத்தைப் பொறுத்தவரை அந்நியர்களாகவே உள்ளனர்!
அதாவது, அவர்கள் தங்களைப் பற்றிய மிகவும் மேலோட்டமான தன்மை
(உண்மை)யுடனான பரிச்சயத்திலும், தங்களுக்குத்தாங்களே தெரிவுசெய்து
கொண்ட பலவித அடையாளங்களிலும் பரம திருப்தி காண்பவர்களாகத்
தங்களது மேலோட்டத்தின் ஆழத்திலேயே தேக்கமடைந்து விடுகின்றனர்!
மனிதர்கள், தங்களைப்பற்றிய அசலான உண்மையை, அதாவது உண்மை
யான அடையாளத்தைக் கண்டுபிடிப்பது பற்றிய உணர்வற்று, சமூகத்தி
னால் மதிக்கப்படக்கூடிய ஒட்டுச் சீட்டுகளையும், மேன்மையேற்றப்பட்ட
அடையாளங்களையும் தான் தேடிச்செல்கிறார்கள்! பலர் தங்கள் மீது
திணிக்கப்பட்ட அடையாளங்களைச் சுமந்து கொண்டு துன்புறுகின்றனர்!
தனது வேர்களை புறத்தே தேடுபவன் அவற்றைக் கண்டுபிடிப்பதில்லை;
அவ்வாறு கண்டுபிடித்துவிட்டதாகக் கொண்டாடப்படுபவை அவனது
உண்மையான வேர்கள் அல்ல!
மா.கணேசன்/ நெய்வேலி/ 12.03.2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment