
"(மிக ஆழமானதொரு பார்வையில்), நாம் ஏதோ மண், கல்,
மற்றும் நீரால் ஆன உலகில் (மட்டும்) வாழ்ந்துகொண்டிருக்க
வில்லை! மாறாக, நாம் ஒரு மாபெரும் புதிருக்குள் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்!"
- (மா.கணேசன்/ "2012 : யுகமாற்றத்தின் வாசல்" பக். 62)
<•>
பிளேட்டோவின் சிந்தனைகளை மையமாகக்கொண்டு 'பிளேட்டோவின்
சிந்தனைப்பள்ளி' எனவும், அரிஸ்ட்டாட்டிலை மையமாகக்கொண்டு 'அரிஸ்
டாட்டில் சிந்தனைப் பள்ளி' என்றெல்லாம் வழங்கப்படுகிறது. ஆனால்,
எதார்த்தம் எப்படியிருக்க வேண்டுமெனில், ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க
வேண்டும்; சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு சிந்தனைப் பள்ளியாகத்
திகழவேண்டும்! இதன் அர்த்தம் ஒவ்வொரு மனிதனும் ஒரு சிந்தனைப்
பள்ளியைத் தொடங்கிட வேண்டும் என்பதல்ல! மாறாக, ஒவ்வொரு மனித
னும் முதலில் தனக்குத்தானே சிந்திக்கத் தொடங்கிட வேண்டும் என்பதே!
விசாரமார்க்கம், "தன்னை அறிதல்" என்பதை பிரதான வாழ்க்கைச் செயல்
பாடாக முன்-வைக்கிறது. தன்னை அறிதல் என்பதே பிறரையும், இப்பிரபஞ்
சத்தையும், இறுதி மெய்ம்மை அல்லது 'கடவுள்' என்பதையும் அறிவதற்கான
ஒரே வழியாகும்!
ஒருவன் தன்னை அறிவதற்கான திறவுகோலாக இருப்பது "வாழ்க்கை என்
றால் என்ன?" என்பதை, அதாவது,மனித வாழ்வின் உண்மையான நோக்கம்,
குறிக்கோள், இலக்கு, அர்த்தம், உண்மை ஆகியவற்றை அறிந்துகொள்வதே
யாகும்! ஒருவன் தனது வாழ்வின் குறிக்கோளை அறிந்து அதற்கேற்ப,அதனு
டன் பொருந்தி வாழ்வது மட்டுமே உண்மையான மகிழ்ச்சியையும், நிறை
வையும் அளிக்கும்!
புதிர்ப்பள்ளி என்றால் என்ன? புதிர்ப்பள்ளிக்கும், சிந்தனைப் பள்ளிக்கும்
உள்ள வித்தியாசம் என்ன? சிந்தனைப் பள்ளி என்பது சிந்தனையற்ற
சமூகத் திரளிலிருந்து மாறுபட்டு தன்னைப் பற்றியும், உலகைப் பற்றியும்,
வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கிய தனிமனிதர்கள் சிந்த
னையின் அவசியத்தையும், தங்களது சிந்தனைகளையும், கருத்துகளையும்
சக-மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பள்ளி தான் சிந்தனைப்பள்ளி என்
பதாகும். புதிர்ப்பள்ளி என்பது வழக்கமான சிந்தனைப் பள்ளிகளைப்போல
வாழ்க்கையின் மேற்புறத்தையும், பௌதீக உலகத்தையும், அதில் மனித
னின் இடத்தையும் பற்றிச் சிந்திப்பதுடன் திருப்தியடைந்து விடாமல் ஆழ
மாகச் சென்று அனைத்தின் சாரத்தை நேரடியாக உணர்ந்தறியும், புரிந்து
கொள்ளும் சிந்தனை முறையைக் கொண்ட, சிந்தனைப் பள்ளியே புதிர்ப்
பள்ளி என்பதாகும்!
வழக்கமான சிந்தனைகள், மற்றும், சிந்தனைப் பள்ளிகள் மனிதனையும்,
உலகையும், கொடுக்கப்பட்ட நிஜங்களாகக் கண்டு; அதாவது, உலகம் இருக்
கிறது, அதில் மனிதன் இருக்கிறான்; ஆக உலகம் என்றால் என்ன? மனிதன்
என்றால் என்ன? என்று அறிந்து கொண்டால் போதும் எனும் ரீதியில் தம்மை மட்டுப்படுத்திக்கொள்ளும் பள்ளிகள் ஆகும்!
ஆனால், புதிர்ப்பள்ளி என்பது, உலகையும், மனிதனையும் வெறும் கொடுக்
கப்பட்ட நிஜங்களாகக் கொள்ளாமல், அவற்றைப் புதிர்களாகக் காண்பதும்,
மேலும், உலகம், மனிதன், வாழ்க்கை, மெய்ம்மை ஆகிய புதிர்களை ஆழ்ந்து
ஆராய்ந்து அவற்றைக் கொச்சைப்படுத்தாமல் விடுவிக்கும், புரிந்து கொள்
ளும் அரிய முயற்சியில், மேலோட்டமான விஞ்ஞானப் புரிதலையும், வெறும்
தர்க்கரீதியிலான தத்துவச்சிந்தனை முறைகளையும் கடந்த அனுபூதிவகை
அணுகுமுறையில் அமைந்த அறிதல்முறையைக்கொண்டதொரு புதிர்ச் சிந்
தனை முறையைக்கொண்டதே புதிர்ப்பள்ளி என்பதாகும்!
புதிர்ப்பள்ளியின் பிரதான நோக்கம், எவ்வளவு சிறப்பாக வாழ்க்கையை
வாழ முடியும் என்பதுடன் நில்லாமல்; வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்வதும், வாழ்வதும், அம்முழுமையின் வழியாக மரணத்தைக் கடந்த
முக்தி, மோட்சம், வீடுபேறு என்றெல்லாம் குறிப்பிடப்படும் நிலையை அடை
வதுமே ஆகும்! சுருக்கமாக, சாதாரணச் சொற்களில் சொன்னால், முழுமை
யாக வாழ்க்கையை வாழ்வதும், முழுமையாக இறப்பதும் தான் புதிர்ப்
பள்ளியின் சீரிய நோக்கம் ஆகும்!
புதிர்ப்பள்ளிகள் 3500 ஆண்டுகளுக்கு முன்பே புராதன காலங்களிலேயே
தொடங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலங்களில் பிரும்மாண்ட
மான கோவில்கள் எழுப்பப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர்; அதே
கோவில்களில் மூடிய கதவுகளுக்குப் பின்னால், 'காணும் கண்களையுடைய
வர்களுக்கும்', 'கேட்கும் காதுகளையுடையவர்களுக்கும்' பிரத்யேக வகுப்பு
கள் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆம், அப்போதெல்லாம் புதிர்ப்
பள்ளிகள், பல காரணங்களுக்காக, இரகசியமாகச் செயல்பட்டதாகச் சொல்
லப்படுகிறது. இன்றைய நவீனகாலத்தில்,சில புதிர்ப்பள்ளிகள் உலகெங்கும்
பல கிளைகளுடன் பகிரங்கமாகச் செயல்படுவதாக விளம்பரம் செய்யப்படு
கிறது! பகிரங்கமாகவோ, அல்லது, இரகசியமாகவோ செயல்பட்டாலும் அப்
பள்ளிகளில் பயில்வோரின் எண்ணிக்கை எப்போதும்போல மிகக்குறைவே
எனலாம்! ஏனெனில், உண்மை மீது பசி, தாகம் கொண்ட மானிடர்கள் எல்
லாக் காலங்களிலும் குறைவாகவே உருவாகின்றனர்!
சமீப காலம் வரை, புதிர்ப் பள்ளிகளின் போதனைகள் பாதுகாப்புக் கருதி
இரகசியமாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது தான் பரவலாக
அவை வெளியே அறிமுகப்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அதே
நேரத்தில், அவை சகட்டுமேனிக்கு எல்லோருக்கும் அளிக்கப்படுவதில்லை.
மாறாக, உயர் ஞானம் மீது தீவிர ஆர்வம் கொள்பவர்களையும், தங்களை
முழுமையாக அதற்கு அர்ப்பணம் செய்பவர்களையும் இனம் கண்டு தேர்வு
செய்யப்பட்டவர்கள் மட்டுமே புதிர்ப்பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுவர்!
ஆனால், புதிர்ப்பள்ளியின் போதனைகளையும், பாடங்களையும் பொறுத்த
வரை அவற்றை எல்லோருக்கும் அளித்தாலும், எல்லோரும் அதைப்புரிந்து
கொள்ளப் போவதில்லை!
ஆகவேதான், இயேசுவின் சீடர்கள் இயேசுவிடம்,
"ஏன் அவர்களோடே (திரளான ஜனங்களிடம்) உவமைகளாகப்
பேசுகிறீர்?"
என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம்,
"பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு
அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை."
என்றார்.
ஆம், ஜனத்திரளிடம் அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக உவமை
களினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். தமது சீடர்களோடு
தனித்திருக்கும் போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச் சொன்
னார். ஆன்மீக ஞானி பால் பிரண்டன் அவர்களின் ஒரு கணிப்புப்படி இயேசு
தமது இளவயதிலேயே எகிப்து நாட்டிலுள்ள அலெக்ஸான்ட்ரியா- வில் ஒரு
புதிர்ப்பள்ளியில் சேர்ந்து பயின்றதாக, தனது Inner Reality(1939,1952)
எனும் நூலில், (பக்கம் 232-ல்) குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இயேசு ஒரு இடத்தில்,
"வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத
இரகசியமும் இல்லை. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை
நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள்
வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்" -(மத்தேயு, 10:26,27)
என்று கூறியுள்ளதிலிருந்து, புதிர்ப்பள்ளிகள் புதிரானவையோ, அல்லது
உயர் ஞானத்தை இரகசியமாகப் பூட்டிவைத்துப் பாதுகாக்கும் மடங்களோ
அல்ல என்பது தெளிவாகிறது! ஆனால், அதே நேரத்தில், வேறொரு இடத்தில்,
இயேசு,
" பரிசுத்தமானதை நாய்களுக்குக்கொடாதேயுங்கள்; உங்கள்
முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால்
தங்கள் கால்களால் அவைகளை மிதித்து திரும்பிக்கொண்டு
உங்களைப் பீறிப்போடும்" -(மத்தேயு, 7: 6)
என்று சொல்லி தமது சீடர்களை எச்சரிக்கிறார்! அதாவது, உயர் ஞானம்
வெகு சுலபமாக, யாதொரு பிரயத்தனமும் இன்றி கிடைக்கும் பட்சத்தில்,
அது வெகு சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதாலும், மேலும்,
பலர், உயர் ஞானத்தை தங்களது தரத்திற்கு கீழிறக்கிக் கொச்சைப்படுத்தி
விடக்கூடும் என்பதாலும், இயேசு அவ்வாறு தமது சீடர்களை எச்சரித்தார்!
ஆம், புதிர்ப்பள்ளிகளின் பிரதான பிரச்சினை கொச்சைப் படுத்துபவர்கள்
தான்! அதாவது, கொச்சைப்படுத்துபவர்களை தம் பள்ளிகளில் இடம்பெறா
மல் தம் பள்ளிகளைப் பாதுகாப்பதும்; எவ்வாறேனும் இடம் பெற்றுவிடுகிற
பாசாங்குக்கார சீடர்களை, போலிகளைப் பக்குவமாகக் களையெடுப்பதும்
தான் அப்பிரச்சினை!
புதிர்ப் பள்ளிகளின் போதனைகள் வாழ்க்கையின் மிக ஆழமான அறிவை,
ஞானத்தைக் கண்டடைந்து அவற்றைப் பொக்கிஷமெனப் பாதுகாத்துவரும்
மையங்கள் ஆகும். ஆனால், இப்பள்ளிகள் நமது நவீன கால பல்கலைக்கழ
கங்களைப்போல பல ஆசிரியர்களையும், பல துறைகளையும் கொண்ட
அமைப்புகள் அல்ல; மாறாக, அவை எப்போதும் தமது மையத்தில் புத்தர்,
இயேசு, ரமணர் போன்ற ஒரு ஒற்றை ஞானாசிரியரைக் கொண்டவையாக
மட்டுமே திகழ்ந்து வந்துள்ளன! இந்த ஞானாசிரியர்களுடைய போதனை
களின் முக்கியத்துவத்தை உணர்ந்த சீடர்கள் அவர்களுடைய போதனை
களை அர்ப்பணிப்புடன் காலம்காலமாக பாதுகாத்து வந்ததன் விளைவாக
அப்போதனைகள் இன்று நம்மிடமும் வந்து சேர்ந்துள்ளன!
இந்த ஞானாசிரியர்கள் சிலரது போதனைகள் நிறுவனமாக ஆக்கப்பட்டும்,
பலவகைகளிலும் திரிபுகளுக் குள்ளாக்கப்பட்டும், அல்லது நீர்த்துப்போகச்
செய்யப்பட்டும் கொச்சைப்படுத்தப்பட்டுவிட்டன! ஒருவகையில்,இன்றைய
காலத்தில் அதிகமானோர் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிந்தா
லும், இன்னும் மனிதர்கள் முழுஅளவில் ஆன்மீகத்திற்குத் தயாராகவில்லை
என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது! ஆக, புதிர்ப்பள்ளிகளின் கதவு
களை அகலமாகத் திறந்து வைப்பது என்பது அவ்வளவு சரியான ஒன்றாக
இருக்கவியலாது!
மேலும், ஆன்மீகம் என்ற பெயரில், சில சந்தர்ப்பவாதிகள் பிருமாண்டமான
ஆசிரமக் கட்டடங்களையும், சிலைகளையும் எழுப்பி; யோகா, தியானம்
போன்ற பயிற்சிமுறைகளையும், வேறு சில நவீன உத்திகளையும் சேர்த்து
பொட்டலமிட்டு வியாபாரமாக்கி லட்சக்கணக்கானவர்களைத் திரட்டித்
தவறாக வழி நடத்திச்செல்லுகிறார்கள்! இத்தகைய கும்பல் - ஆன்மீக இயக்
கங்கள் எவ்வகைப்பள்ளி முறையிலும் சேராது!
இப்போது, 'புதிர்ப்பள்ளி' என்பதில் உள்ள "புதிர்" எதைக் குறிக்கிறது என்
பதைக் காண்போம். "புதிர்" என்றால் 'மர்மம்', புரிந்து கொள்ளமுடியாதது
என்று பொருளல்ல - அது புரிந்து கொள்பவருடைய தீவிரத்தையும், பேரார்
வத்தையும் பொறுத்தது! மாறாக, எதுவொன்று எத்தனையெத்தனை யுகங்
களாக முயன்றாலும், எவ்வழியிலும் சுருக்கவோ, குறுக்கவோ, கொச்சைப்
படுத்தவோ இடமளிக்காததோ அதுவே "புதிர்" என்பதாகும்!*
புதிரான ஒன்றைப்பகுத்து,அதன் பகுதிகளுக்கும்,உட்கூறுகளுக்கும் சுருக்கி
அக்கூறுகளின் இயல்பு அல்லது பண்புகளின் சொற்களில் புரிந்துகொள்வது
தலைகீழான அணுகுமுறையாகும். ஏனெனில், ஒரு பொருளானது பல பகுதி
களாலும்,உட்கூறுகளாலும் கட்டமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால்,அவ்வாறு
கட்டமைக்கப்பட்டது ஒரு புதிய பொருளாகும். அப்பொருளை, மீண்டும் அத
னுடைய பகுதிகளின் பண்புகளைக்கொண்டு, கீழ் மட்டத்திலிருந்து அறிந்து
கொள்வது முறையாகாது! அதற்கு அப்பொருள் கட்டமைக்கப்படாமலும்,
உருவாகாமலும் இருந்திருக்கலாமே!*
இதற்கு மாறாக, ஒரு பொருள் எதைச் சுட்டுவதாக, எந்த இலக்கை, குறிக்
கோளை, நோக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது என அதை மேல் மட்டத்தி
லிருந்து, அதனுடைய இறுதி நிலையிலிருந்து புரிந்து கொள்வதே சரியானது!
ஆக, எது ஒன்று கீழ்மட்டத்திலிருந்து புரிந்துகொள்ளமுடியாததோ, மேல்மட்
டத்திலிருந்து புரிந்துகொள்ளப்பட்டவேண்டியதோ அதுவே புதிராகும்!*
மேலும்,எது ஒன்று முற்றாக விளக்கித் தீர்த்துவிட இடமளிக்காததோ அதுவே
புதிராகும்! மேலும், புதிரைப்பற்றிய விளக்கம் யாவும் அதை மேலும் புதிராக
ஆக்குகிறது; அதுவே புதிரின் நிகரில்லா அழகு!*
மேலும், புதிரானது அதன் உயரத்திற்கு நம்மையும் உயருமாறு கோருகிறது!
புதிரைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, அப்புதிருக்குச் சமமாக அப்புதிராக ஆகு
தலே! ஆகவே, ஒரு புதிரை எவ்வாறு நாம் அணுகுகிறோம் என்பதே அதிமுக்
கியம்!*
முதலில், இந்த உலகிலுள்ள எவை எவற்றை நாம் புதிர் எனக் குறிப்பிடு
கிறோம் என்பதைத் தெளிவாக அறிவது அவசியமாகும்! ஆனால், உண்மை
என்னவெனில், இந்த உலகமே ஒரு மாபெரும் புதிர்தான்! அதிலுள்ள யாவும்
புதிரின் பாகங்களே! ஆனால், நம்மில் பெரும்பாலானோர், நாம் ஒரு
மாபெரும் புதிரின் நடுவே வாழ்கின்ற புதிர்களே என்பதை அறியாமல்,
நம்மையும், எல்லாவற்றையும் (தரம்)குறைத்தே, மேம்போக்காகவே புரிந்து
கொள்கிறோம், கையாள்கிறோம்!இதற்குக்காரணம், நாம் புதிரைப் புதிராக
உணர்வதற்குரிய அளவுக்கு இன்னும் உணர்வு பெறவில்லை!*
புதிர்ப்பள்ளிகளின் பணி, உலகம், மனிதன், மெய்ம்மை( கடவுள்) எனும் முப்
பெரும் புதிர்களை விடுவிக்கும் முயற்சியில் பெறப்படும் உயர் ஞானத்தை
சிந்திக்காத மனிதர்களிடம் வழங்குவதல்ல! மாறாக, அவர்களை சிந்திக்கத்
தூண்டுவதும், ஒவ்வொருவரும் நேரடியாக வாழ்க்கையின் கேள்விகளுக்குப்
பதில்களைக் கண்டுபிடிப்பதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும்
போதிப்பதுடன்; சீரிய முறையில் விசாரத்தில் ஈடுபடுகிற சீடர்கள், அல்லது
மாணவர்களுக்கு உதவிடுவதும்தான் இப்பள்ளியின் சீரிய பணியாகும்!
"விசார மார்க்கம்" எனும் இந்த புதிர்ப் பள்ளியைப்பொறுத்தவரையில், அது
பிரதானப்படுத்தும் ஐந்து முக்கிய சிந்தனைச் சவால்கள், அல்லது வாழ்க்
கைச் சவால்கள் எவையெனில் :
• வாழ்க்கைப் புதிரைப் புரிந்து கொள்ளுதல்
(வாழ்க்கையின் அசலான குறிக்கோள் என்ன?)
• மனிதன் எனும் புதிரை அவிழ்த்தல்
( நான் யார்?)
• பிரபஞ்சப்புதிரை விடுவித்தல்
(மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ளதொடர்பு என்ன?)
• கடவுள் புதிருக்கு விடை காணுதல்
(இறுதி மெய்ம்மை எத்தகையது?)
• மரணத்தின் புதிரைப் புரிந்து கொள்ளுதல்
(மரணத்தைக் கடக்கும் வழி என்ன?)
இவையே ஆகும். உண்மையில், இச்சவால்கள் தனித்தனியானவையல்ல;
மாறாக, இவை ஐந்தும் ஒரே சவாலின் ஐந்து முகங்களேயாகும்! ஆகவே,
இவற்றை ஒருங்கே ஒரே சமயத்தில் ஒருவர் தன்னுள் சந்திக்கவும், சிந்திக்க
வும் வேண்டும்! ஏனெனில், மனிதனின் அகமே, உணர்வே அனைத்துப்புதிர்
களின் உறைவிடமும், முடிச்சும் ஆகும்! ஆகவேதான், ஆரம்பக்கால புதிர்ப்
பள்ளிகள் "உன்னை நீ அறிவாயாக!" என்று உபதேசித்துச் சென்றன!
பொதுவான ஆன்மீகப்பள்ளிகள், ஆன்மீகத்தில் ஒருவர் வளர வேண்டுமா
னால், தனது அகந்தை மனத்தை அழித்து விடவேண்டும் என்று வலியுறுத்து
வதுண்டு! ஆனால், 'விசாரமார்க்கம்' எனும் இப்புதிர்ப்பள்ளி அகந்தை மனத்
தைப்புரிந்து கொண்டு அதைக் கடந்து செல்லுமாறு போதிக்கிறது! ஏனெ
னில்,அகந்தை மனத்தை அழிக்க முடியாது மட்டுமல்ல; அதுதான் அனைத்து
வளர்ச்சிகளுக்குமான அடிப்படை ஆகும்! ஆனால்,ஆன்மீகசாதகர்கள் தமது
அகந்தை மனத்தைக் கடந்து வளர்ந்து செல்வதற்குப் பதிலாக அதையே
"மையம்" எனக் கொண்டாடுவதை ஆன்மீகமாகக் கொண்டுவிடுகின்றனர்!
உண்மையில், அகந்தை மனம் என்பதுதான் ஒருவனது தொடக்க நிலை
மையம் ஆகும்!ஆனால், ஒருவன் அதிலேயே தங்கி நிலைத்திருக்க வியலாது!
ஏனெனில், எல்லாத் தொடக்க நிலைகளும் தற்காலிக நிலைகளே! எப்போது
ஒரு மனிதன், "உண்மையில் 'தான்' யார்?" என்பதை அறியவிரும்புகிறானோ,
அப்போதே 'அகந்தை' எனும் மையம் வளரத்தொடங்கிவிடுகிறது,உருமாறத்
தொடங்கிவிடுகிறது! வெகு பலர் "நான் யார்!" என்பதை ஒரு கேள்வி வடிவ
மாகக் கொண்டு அதை ஒரு மந்திரமாக உச்சரித்துப்பார்த்து சலித்துபோய்
ஆன்மீகத்தையே கைவிட்டுவிடுகின்றனர்! ஆனால், "நான் யார்!" என்பது
வெறும் கேள்வியோ,அல்லது அறிவு-ஜீவியப் பிரச்சினையோ அல்ல!அது ஒரு
மாபெரும் "விழைவு" ஆகும்! ஆம், இருப்பை உணர்வுகொண்டதன் ஆனந்தக்
களிப்பின் விளைவாக எழும் "தேடல்" ஆகும்!
பொதுவாக மனிதர்கள் ஆன்மீகம், உயர்-ஞானம், விழிப்பு, விடுதலை என்ப
வைகளைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளக்கூடிய உடமைகளாகக் கருதிக்
கொண்டு, தமது அகந்தையை பத்திரமாகத் தக்க வைத்துக்கொண்டு ஆன்
மீகத்தில் ஈடுபடுகிறார்கள்! அதாவது, 'அகந்தையின் உருமாற்றமே ஆன்மீக
வளர்ச்சி' என்பதை அறியாமல், ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்கள்!
ஒரு நேரம் அவர்கள் ஆன்மீகத்தை விரும்பியிருக்கலாம்; அந்த விருப்பம்
அவர்களுக்குத் தெரியாமலேயே வினைபுரிந்து அகந்தையின் உருமாற்றத்
தைத் தொடங்கச் செய்யும் கணத்தில், அகந்தையின் அடித்தளம் நழுவுவது
போலத் தெரிந்ததும், உடனே அவர்கள் அவசர அவசரமாக ஆன்மீகத்தைக்
கைவிட்டு உலகியல் கரையில் ஏறி ஆசுவாசமடைகிறார்கள்! அதாவது ஒரு
போதும், அகந்தையின் மேற்பார்வையில் ஆன்மீக வளர்ச்சியைக் கொண்டு
செல்லஇயலாது எனும் உண்மையை அவர்கள் இறுதிவரை உணர்வதில்லை!
தான் ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாறுவதை ஒருபோதும் ஒரு கம்பளிப்புழு
வால் மேற்பார்வை செய்யமுடியாது;அவ்வாறு செய்யமுயன்றால் அது இறுதி
வரை அது ஒரு கம்பளிப்புழுவாகத்தான் நீடிக்கும்!
அடுத்து, வழக்கமான ஆன்மீகப்பள்ளிகளில் ஒருவன் தனது அகந்தையைத்
தூய்மைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது! அதாவது, ஒரு
புறம் அகந்தை அழிக்கப்பட வேண்டும் என்று போதிக்கப்படுகிறது; இன்
னொரு புறம் அகந்தையைத் தூய்மைப்படுத்தவேண்டும் என்றும் சொல்லப்
படுகிறது! ஆனால், அகந்தையைத் தூய்மைப்படுத்துவது என்றால் என்ன,
அது எவ்வாறு செய்யப்பட வேண்டும்? உண்மையில், அகந்தை என்பது
அகந்தைதான், அது அழுக்காக இருந்தாலும், தூய்மையாக இருந்தாலும்!
அகந்தையை அழிப்பது, மற்றும் அதைத் தூய்மைப்படுத்துவது எனும் இந்த
இரண்டுக்கும் மாற்றாக, இப்புதிர்ப்பள்ளி முன்வைக்கும் உபாயம் என்ன
வென்றால், அகந்தையை "மாற்றமுறச்செய்வது" என்பதேயாகும்! அகந்தை
உணர்வாகத்தொடங்கும் ஒருவன்,தனது உண்மையை, "உண்மையில் 'தான்'
யார்?" என்பதை அறிய அடங்கா ஆவல்கொள்ளும்பட்சத்தில் மாற்றமுறுதல்
தொடங்கிவிடுகிறது! அதாவது மாற்றமுறுதல் என்பதுதான் அகந்தையின்
அழிப்பும்,தூய்மைப்படுத்துதலும் ஒருங்கே நிகழும் அற்புத இரசவாதமாகும்!
அகந்தை கொள்ளும் தீவிர "மெய்ம்மை நாட்டம்",அல்லது "உண்மை நாட்டம்"
மட்டுமே அகந்தையைத் தூய்மைப்படுத்தும் அமிலம் ஆகும்! எவ்வாறெனில்,
மெய்ம்மை நாட்டம்கொள்ளும் ஒருவன் ஏற்கனவே தன்னை(அகந்தையை)க்
கடந்து செல்லத் தயாராகி விட்டவனாகிறான்! ஏனெனில், "மெய்ம்மை நாட்
டம்" என்பது அதைத்தான் குறிக்கிறது!
ஆனால், பொதுவாக மனிதர்கள் 'மெய்ம்மை நாட்டம்' கொண்டதால் ஆன்மீ
கத்தில் ஈடுபடுவதில்லை! மாறாக, அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக
வும், நோக்கங்களுக்காகவும் தான் ஆன்மீகத்தில் ஈடுபடுகிறார்கள்! மேலும்,
ஆன்மீகமும் தற்காலத்தில் ஒரு புதுமைப்போக்காக மேலோட்டமான வகை
யில் தழுவிக்கொள்ளப்படுவதாய் கொச்சைப் படுத்தப்பட்டுள்ளது!
விசாரமார்க்கம் எனும் புதிர்ப்பள்ளி எவ்வொரு மதத்தையும், அரசியல் சித்
தாந்தத்தையும் பிரதி நிதித்துவம் செய்வதில்லை! மாறாக, அது முழுக்க
முழுக்க வாழ்க்கையின் அரசியலையே முன்வைக்கிறது, பேசுகிறது, செயல்
படுத்துகிறது! குழப்பக் காடான இவ்வுலகில் இப்பள்ளி ஆரவாரமில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது; இங்கு, ஆர்வமுள்ள எவரும் தமக்கான வாழ்க்
கைப்பாடங்களை இலவசமாகவும், சுதந்திரமாகவும் கற்றுக்கொள்ளலாம்!
உண்மையான ஆன்மீகத்தேடல் உள்ள தனிமனிதர்களும், தங்களது சுயத்
தைவிட வாழ்க்கையைத் தீவிரமாக நேசிக்கும் தனிமனிதர்களும் இந்த
விசார மார்க்கத்தில் இணைந்து கற்கலாம். இங்கு நிர்வாணம், முக்தி,
மோட்சம், ஞானம் போன்ற எதுவும் வழங்கப்படும் என்ற எவ்வித வாக்குறுதி
யும் கொடுக்கப்படுவதில்லை! முடிந்த வரை இங்கு வருபவர்களை நிராயுத
பாணியாக மட்டும் ஆக்கப்படும்! அவர்கள் பற்றிக்கொள்ள எவ்வகைப்பட்ட
நம்பிக்கை எதுவும் இல்லாமல் யாவும் பிடுங்கப்படும்! அவர்கள் ஆறுதலை
யும், ஆசுவாசத்தையும் தேடி இங்கு வந்தால் தவறான இடத்திற்கு வந்துவிட்
டார்கள் எனும் நிஜம் அவர்கள் முகத்தில் அறையும்! அவர்கள் சுவாரசியம்
தேடியும், கேளிக்கை நோக்கத்திற்காகவும் இங்கு வந்தால், நிச்சயம் அவர்
களுடைய கொஞ்ச நஞ்ச மன அமைதியையும், மகிழ்ச்சியையும் இழந்து
விடுவது உறுதி! அதாவது, எவ்வெவ்வழிகளிலெல்லாம் அவர்களை உலுக்கி,
அற்பமான அவர்களது திருப்தியுணர்வைக் குலைத்து, அவர்களது மட்டுப்
பாடுகளைச்சுட்டிக்காட்டி,அவர்களைச்சீண்டி,விழிப்பு நிலைக்குக் கொண்டு
வரமுடியும் என்கிற எல்லா உத்திகளும் அவர்கள் மீது பரீட்சார்த்தமாக மேற்
கொள்ளப்படும்!
ஏற்கனவே குறிப்பிட்டபடி, "புதிர்" என்றால் 'மர்மம்', 'புரிந்து கொள்ளமுடி
யாதது' என்று பொருளல்ல! மேலும், புதிர்ப்பள்ளிகள் வேண்டுமென்றே
உலகம், மனிதன், மெய்ம்மை (கடவுள்), வாழ்க்கை என எல்லாவற்றையும்
புரியாத புதிர்களாக ஆக்குவதுமில்லை! ஏனென்றால், புதிரான ஒன்றை
மேலும் புதிராக ஆக்குவது சாத்தியமற்றது - நீர் நிரம்பிய குடத்தில் மேலும்
மேலும் நீரை ஊற்றி நிரப்பவியலாது!
உலகம், மனிதன் என யாவும் "மூலமெய்ம்மை" எனும் மகாபுதிரின் வெளிப்
பாடுகளே! மூலமெய்ம்மையானது தன்னை மறைத்துக்கொண்டதன் விளை
வாக எழுந்ததுதான் இப்பிரபஞ்சம் எனும் புதிர்! இவ்வெளிப்பாட்டின் நிகழ்வு
முறையில், பிரபஞ்சத்தின் விசேடமானதொரு பகுதியாக வெளிப்பட்டவனே
மனிதன் எனும் புதிர்!தன்னை உணரும் மனிதனுடைய உணர்வின் உச்சயில்
தன்னை மீள்-கண்டுபிடிப்பு செய்வதே மூலமெய்ம்மையின் புதிராட்டத்தின்
திட்டம் ஆகும்!மேலே தொடக்கத்திலேயே குறிப்பிடப்பட்ட மேற்கோளின்படி,
"(மிக ஆழமானதொரு பார்வையில்), நாம் ஏதோ மண், கல்,
மற்றும் நீரால் ஆன உலகில் (மட்டும்) வாழ்ந்துகொண்டிருக்க
வில்லை! மாறாக, நாம் ஒரு மாபெரும் புதிருக்குள் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்!"
ஆம், பிரபஞ்சம் என்பது வெறும் 'இயக்கத்தில் உள்ள பருப்பொருளோ', ஒரு
'மகா-எந்திரமோ' அல்ல! அல்லது, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பௌதீக
வியல் விஞ்ஞானி ஸ்டீவென் வெய்ன்பெர்க்(Steven Weinberg)அவர்களது
"எவ்வளவு அதிகமாக நாம் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்கிறோமோ
அவ்வளவுக்கு அது அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது."
எனும் கூற்றுக்கிணங்க,பிரபஞ்சம் என்பது அர்த்தமற்றதும் அல்ல! இவ்விதப்
பார்வைகள் யாவும் கொச்சையானவையாகும்! ஏனெனில், முதலிடத்தில்,
பிரபஞ்சம் கல்லாலும், மண்ணாலும் (அணுத்துகள்களாலும்) ஆனதென்று
வரைமுறை கற்பித்துவிட்டு, பிறகு அதனிடமிருந்து அர்த்தத்தை எதிர்பார்ப்
பது அர்த்தமற்ற செயல் என்பதை இவ்விஞ்ஞானிகள் எப்போது புரிந்து
கொள்ளப்போகிறார்களோ! ஆனால், உண்மை என்னவேன்றால், ஸ்டீவென்
வெய்ன்பெர்க்-ன் கூற்றுக்கு மாறாக, பிரபஞ்சத்தை நாம் எவ்வளவுக்கெவ்
வளவு அதிகமாகப் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அதன்
அர்த்தம் ஆழப்பட்டுக்கொண்டே போகிறது! ஏனெனில், பிரபஞ்சம் என்பது
ஒரு அற்புதப்புதிர் ஆகும்! அது, கல்லாலும், மண்ணாலும் (அணுத்துகள்களா
லும்)ஆனதென்பது அதைப்பற்றிய மிக மேலோட்டமானதொரு உண்மையே
தவிர, அதுவே முழு உண்மையும் அல்ல!
இத்தகையதே "வாழ்க்கை" எனும் புதிரும்! அது, உணவு, உடை, உறையுள்,
உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 'உயிர்-வாழ்தல்' எனும் மிகக்குறுகிய
நடைமுறை விவகாரம் அல்ல! மாறாக, 'உயிர்-வாழ்தல்' என்பது வாழ்க்கை
எனும் புதிரின் ஒரு ஓரப்பகுதி மட்டுமே!
இவ்வாறானதே "மனிதன்" எனும் புதிரும்! அவன் இன்னுமொரு விலங்கினம்
அல்ல! ஆம், மனிதன் என்பவன் ஒரு கேள்விக்கான பதிலாகவோ, ஒரு சிக்க
லுக்கான விளக்கமாகவோ பிறந்தவனல்ல! அவன் புதிரால் பிறப்ப்பிக்கப்
பட்டதொரு புதிராவான்!முள்ளை முள்ளால் எடுப்பதுபோல,புதிரைப்புதிரால்
விடுவிக்கும் புதிர்!
* இக்குறியிட்ட பத்திகள் இக்கட்டுரையாசிரியரின் மூன்றாவது நூலான
"கடவுள்புதிர்" (2014) நூலின், "புதிர் குறித்த முன்னோட்டம்" எனும்
முன்னுரை- அத்தியாயத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
மா.கணேசன்/ நெய்வேலி/ 28.02.2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment