Saturday, 4 March 2017

சொற்களின் அசலான அர்த்தத்தை அகழ்ந்தெடுத்தல்!





மானுட  வாழ்க்கையானது   தவிர்க்கவியலாத  வகையில்,   சொற்களுடனும்,
மொழியுடனும்  பின்னிப் பிணைக்கப்பட்டு   சிக்கித்  தவித்துக் கொண்டிருக்
கிறது!    இச்சிக்கலிலிருந்து   வாழ்க்கையை  மீட்டெடுப்பது   யார்,  எவ்வாறு?
என்பதே  நம்முன்  உள்ள,   நம்மில்   பலரும்   இதுகாறும் உணராத மாபெரும்
பிரச்சினையாகும்!

இக்கட்டுரையில்   எழுப்பப்படும்  பிரச்சினை  மற்றும்  அதன்  தீர்வு  குறித்து,
பொதுவானதொரு  கருத்தொற்றுமை  எட்டப்படவேண்டும்  என்ற எந்த எதிர்
பார்ப்பையும்,    விருப்பத்தையும்  நான்  கொண்டிருக்கவில்லை!  ஏனெனில்,
அதற்கான சாத்தியப்பாடு மிக மிக மிகக் குறைவே!

நாம்  நம்மைச் சுற்றியுள்ள  உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும், அனைத்
திற்கும் பெயர் சூட்டியுள்ளோம் அதாவது ஒவ்வொன்றுக்கும்  ஒரு சொல்லை
ஒட்டுச்சீட்டுபோல ஒட்டியுள்ளோம்! இது தவிர்க்கவியலாத ஒன்றுதான்,அதே
நேரத்தில், எது தவிர்க்கப்படவேண்டியது என்பதை பிறகு பார்ப்போம்!

எவ்வொரு  வளர்ச்சியடைந்த  மொழிக்கும்  ஒரு  அகராதி  உண்டு!   ஆனால்,
பிரச்சினை என்னவென்றால், நாம் அகராதியை மட்டும் வைத்துக்கொண்டு
வாழ்ந்திட முடியாது!   அதே நேரத்தில், அகராதியில்லாமலும் வாழ முடியாது!

ஆம்,  அகராதியின்  அவசியத்தை  மறுக்க முடியாது. அகராதியானது சொற்
களுக்கு    குறிப்பான,    ஆனால்,  மிகக்   குறுகிய  வரையறையில்  அமைந்த
அடிப்படையான  அர்த்தத்தை  மட்டுமே  தாங்கியுள்ளது.    உதாரணத்திற்கு,
'வாழ்க்கை'    என்ற   சொல்லை  எடுத்துக் கொள்வோம்.   "வாழ்க்கை " என்ற
சொல்லுக்கு  (பால்ஸ் -தமிழ் மின்)  அகராதி   (அகரவரிசைச்  சொற்பொருள்
நூல்)  தரும் பொருள் 'உயிர்வாழ்தல்' என்பது மட்டுமே.

அகில உலகிலும்,மனிதர்கள், 'வாழ்க்கை' என்ற பெயரில்,உயிர்வாழ்தலைத்
தான்   நடத்திக்  கொண்டுவருகின்றனர்!  ஆனால்,   'உயிர்வாழ்தல்'   என்பது
'வாழ்க்கை'  என்ற  சொல்லுக்குரிய ஒரு அடிப்படை அர்த்தம் மட்டுமே தவிர,
அதுவே    இறுதியானதும்,     முழுமையானதுமான    அர்த்தம்  அல்ல!       ஆம்,
உண்மையான   மானுட வாழ்க்கை   என்பது   உயிர்-வாழ்தலையும் கடந்தது
ஆகும்!    அது    வெறுமனே    உயிர்-வாழ்தலைக் குறிப்பதில்லை!    இவ்வாறு
சொல்லும் போது  'வாழ்க்கை'  என்ற சொல்லுக்கு என்னுடைய  அகராதியின்
படி நான் ஒருவகை அர்த்தத்தை வழங்குகிறேனா?

உண்மையில்,   ஒவ்வொரு   உண்மையான    ஆன்மீக ஞானியும்,    ஒரு  புதிய
அகராதியாகத்தான் விளங்குகிறார் என்றுதான் சொல்லவேண்டும்!அதாவது
அசலான மானுட வாழ்க்கை என்பது வெறும் உயிர்-வாழ்தலைக் கடந்ததாக
இல்லையெனில், இயேசு இவ்வாறு கூறிச்சென்றிருக்கமாட்டார் :

     "ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம்,
      என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.
      இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்.....
      முதலாவது  தேவனுடைய ராஜ்யத்தையும், அவரது நீதியையும்
      தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்
      கொடுக்கப்படும்."     - (மத்தேயு 6 : 31-33)

அதாவது,   பிரச்சினை  இது தான்;    வாழ்க்கையின்   அசலான  அர்த்தத்தை
அறியாத, அறிய முயற்சிக்காத மனிதர்கள் அவரவர்க்கு எட்டிய அளவிலான
அர்த்தத்தை வாழ்க்கைக்கு வழங்கிக்கொண்டு  வாழ்ந்து செல்கின்றனர்!

அவரவர்  புரிதலுக்கு  ஏற்ப,   சொற்களுக்கு  நாம் தோராயமான, குத்துமதிப்
பான     அர்த்தத்தை   இட்டுப்  பேசிக் கொண்டும்,   உரையாடிக் கொண்டும்,
ஒருவரை  ஒருவர்  குழப்பிக் கொண்டும்,  ஒருவருடன்  ஒருவர்  முரண்பட்டுக்
கொண்டும்,  விவாதம் புரிந்துகொண்டும்,  சச்சரவு செய்துகொண்டும்,  வாழ்
வதாகச் சொல்லிக் கொண்டும் இருக்கிறோம்!

அகராதியைப்  பொறுத்தவரை,  சில  சொற்களுக்கு, உதாரணத்திற்கு, மரம்,
செடி,   கொடி,   பூமி,  வானம்,  சூரியன்,  சந்திரன்,  வீடு   போன்றவைகளுக்கு
குறிப்பான, முடிவான அர்த்தத்தை கொண்டிருக்கலாம். ஆனால், பிரபஞ்சம்,
வாழ்க்கை,  மனம்,  மனிதன்,  உணர்வு, கடவுள், மெய்ம்மை  போன்ற சொற்க
ளுக்கு, துல்லியமான, இறுதியான அர்த்தத்தை அகராதியில் காணமுடியாது!
இது  அகராதியின் தவறல்ல!  மாறாக,  மனிதனின் தவறே ஆகும். ஏனெனில்,
அகராதியை உருவாக்குபவனே மனிதன் தானே!

கிட்டத்தட்ட,    நமது   புலன்களுக்கும்,    நுட்பமிகு  கருவிகளுக்கும் புலப்பட்ட
அனைத்து  உலகப் பொருட்களுக்கும்,  நிகழ்வுகளுக்கும்,  விஷயங்களுக்கும்
நாம் பெயரிட்டுள்ளோம். அதாவது,  'மரம்'  எனும் சொல்  ஒரு குறிப்பிட்ட  வடி
வத்தைக்கொண்ட தாவரத்தைக் குறிக்கும் ஒரு "குறிப்பான்" ஆகும். ஆனால்,
அவ்வனைத்து  குறிப்பான்கள், அதாவது  சொற்களுக்குமான முழுமையான,
முடிவான அர்த்தத்தை நாம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை!

ஆனால்,  நாம்  அர்த்தம்   கண்டுபிடிக்கத்  தவறியது  வெறும்  சொற்களுக்கு
மட்டுமல்ல!  ஏனெனில்,  'வாழ்க்கை'  என்பது  வெறும் சொல் அல்ல! அது ஒரு
நிகழ்வுமுறையும்,  வழிமுறையும்  ஆகும்.  அது  வெறும்  தானியங்கி  நிகழ்வு
முறையல்ல; ஒரு வழிமுறை ஆகும்; அதாவது, வழிமுறை என்பதன் அர்த்தம்,
ஒரு  குறிப்பிட்ட  இலக்கை  எட்டுவதற்கான  வழியாகும்!   மிகவும்  ஆழமான
தொருவகையில்,அனைத்துக்கும் அர்த்தம் கண்டுபிடிக்கும் (அர்த்தம் கற்பிப்
பது அல்ல) செயல்முறையே  வாழ்க்கையும், இறுதி அர்த்தத்தைக் கண்டடை
வதே வாழ்க்கையின் இலக்கும் ஆகும்!

ஆக,  அர்த்தம்  கண்டுபிடிக்கத் தவறிய  இந்நிலையைக் கொண்டு நம்மைக்
காணும்போது  ஒரு  இனம்  என்கிற வகையில்  நாம் எவ்வளவு பின்தங்கியுள்
ளோம், அதாவது, இன்னும் ஆதிவாசி நிலையிலேயே உள்ளோம் என்பதைப்
புரிந்து  கொள்ளலாம்!   உயிர்-பிழைத்தலின்   நடைமுறைத்    தேவைகளின்
நிமித்தம் நாம் விஞ்ஞானத் தொழில் நுட்பத்தில் முன்னேறியுள்ளோம் என்ற
போதிலும் அகரீதியாக நாம் இன்னும் கற்காலத்திலேயே தான் உள்ளோம்!

மனித இனத்தின் மொழித்திறன் பற்றிப்பேசுகையில், மனித  இனத்திற்கும்,
விலங்கினத்திற்கும்  உள்ள  பெரியதொரு  வித்தியாசமாகக்கூறப்படுகிறது!
ஆனால்,   நம்முடைய  மொழிபேசும்  திறன்   நம்மை  அதிக  மனிதத்தன்மை
யுடையவர்களாக ஒன்றும் மாற்றிவிடவில்லை!"வாழ்க்கை" பற்றிய புரிதலில்
நாம்   கரப்பான்பூச்சிகளைவிட   அதிகமாக    முன்னேறி விடவில்லை!   ஒரே
வித்தியாசம், விலங்குகள் பேசுவதில்லை! நாம் பேசும் விலங்குகளாக  இருக்
கிறோம், அவ்வளவுதான்!

மொழியின்  உதவியின்றி  நம்மால்,  தகவல்,  மற்றும்   கருத்துப் பரிமாற்றம்
செய்யவியலாது;    மொழியின்றி  நவீன  வாழ்க்கை   சாத்தியமாயிருக்காது
என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், மொழி- வழிக் கருத்துப்பரிமாற்
றம்  மனித குலத்தை  ஒன்றிணைக்கவில்லை;  மாறாக, பல்வேறுபட்ட கருத்
துக்களும்,  சித்தாந்தங்களும்,  மதக்கொள்கைகளும், இனவாதக்கோட்பாடு
களும்  மனிதகுலத்தைத்  துண்டாடியதோடு,  இரத்தக் களறிகளை உருவாக்
கியதுதான் மிச்சம்!

உண்மையான  பிரச்சினை மொழியிலோ, அல்லது சொற்களிலோ இல்லை!
தனிமனிதனின்  உணர்விலும்,  புரிந்துகொள்ளும்  திறனிலும் தான் அடங்கி
யுள்ளது!மொழி என்பது ஒரு கருவி மட்டுமே!மோசமான,மந்தபுத்தி கொண்ட
'கலக மானிடப்பூச்சி'களிடம் சிக்கிய ஒரு கருவி!

மனிதசமூகம் தமது தேவைக்கு  ஏற்பவே எவ்வொரு கருவியையும், சாதனத்
தையும்   உருவாக்கிக் கொள்கிறது!   மொழி  என்பது  அர்த்தத்தை  வேண்டி
நிற்கும்  சொற்களைக்  கொண்டதொரு கருவியாகும்! மொழி என்பது அதன்
ஆதித்  தொடக்க  நிலையில்  அன்றாட  அடிப்படை உயிர்-வாழ்தலின் கருவி
யாகவே  உருவானது;    'உயிர்'  வாழ்தலைக்  கடந்த,  'உயர்'   வாழ்தலுக்கான
வாகனமாக  அது வளர்த்தெடுக்கப்படவில்லை!  ஏனெனில்,  வாழ்வின் அர்த்
தத்தை  அறிய   வேண்டியதன்  உன்னதத் தேவையை   உணரும்   அளவிற்கு
இன்னும் மனிதர்கள்  தங்கள் உணர்வில் வளரவில்லை!

எல்லா  மொழிகளும்,   அர்த்தத்தைச்  சுட்டுவதற்கான  கருவிகளே,   ஆகவே,
அர்த்தத்தை  எந்த மொழியும் சொந்தம் கொண்டாடிட முடியாது!  ஏனெனில்,
அர்த்தம் மொழியைக் கடந்தது!மொழி என்பது சொற்கள் எனும் அறைகளில்
அர்த்தத்தை  பத்திரமாக  தம்முள் வைத்துக் காக்கும்  ஒரு பெட்டகம்  அல்ல!
அர்த்தம்,  உண்மை  ஆகியவை  பரிமாறிக் கொள்ளக் கூடியவையல்ல!  ஆக,
எவ்வொரு   மொழிக்கும்   'பரிமாற்ற - வரம்பு' உள்ளது!   அன்றாட  அறிவைக்
கடந்த,   உயர்-ஞானத்தை  எவ்வொரு மொழியின் சொற்களைக்கொண்டும்
பரிமாற்றம் செய்திடவியலாது!

ஒரு மொழியில் எழுதப்படிக்கக் கற்றுக்கொண்ட எவரும்  எவ்வொரு நூலை
யும்  அல்லது  பிரதியையும்  வாசிக்க முடியும்;  ஆனால்,  வாசிக்கத்  தெரிந்த
எல்லோராலும் ஒரு நூல், அல்லது பிரதி சுட்டும்  அர்த்தத்தை முழுமையாகப்  புரிந்துகொள்ளவியலாது!  அதற்கு  உயர்-உணர்வின்  உதவி  அவசியமாகும்!
அதாவது  எவ்வாறு  'மரம்'  என்கிற சொல் ஒரு குறிப்பிட்ட பொருளைச் சுட்டு
கிறதோ, அவ்வாறே, எவ்வொரு  நூல் அல்லது பிரதியும் அர்த்தத்தை சுட்டுகி
றதே தவிர,  அர்த்தத்தை  அவை  தம்முள்  கொண்டிருப்பதில்லை! சுட்டுவது
மட்டும்  தான் மொழியின்,  சொற்களின் பணியாகும்!  அர்த்தத்தை உள்ளீடு
செய்து  புரிந்து  கொள்வது  ஒவ்வொரு  மனிதனின் கடமையாகும்!  அர்த்தம்
"உயர்-உணர்வை" முன்-தேவையாகக் கோருகிறது!

மொழியை  அன்றாடத்தளத்தில் கையாளுவதற்கு அன்றாட உணர்வு போது
மானது!மேலும்,அன்றாட விஷயங்களைப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கு,
மிகச் சிக்கலான,  கடினமான சொற்களும்  தேவைப்படுவதில்லை!  "நேற்று
நீங்கள் ஏன் வரவில்லை?"  எனும்   வாக்கியத்தின்  அர்த்தம் நேரிடையானது.
இவ்வாக்கியத்திலுள்ள  சொற்களின்  அர்த்தம்   மேற்புறத்திலேயே  அமைந்
துள்ளது.  இவ்வாக்கியத்தைப் புரிந்து கொள்ளவும், அதற்குப் பதிலளிக்கவும்
பெரிதாகச் சிந்திக்கத் தேவையில்லை!  ஆனால்,   "ஏன் இங்கே ஏதுமில்லாது
இருப்பதற்குப்பதிலாக ஏதோவொன்று இருக்கிறது?" எனும் இந்த வாக்கியம்
நேர்முறையானதல்ல! இதைப்புரிந்து கொள்ளவும், இதற்குப் பதிலளிக்கவும்
ஆழமாகச் சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது!

இரு மனிதர்களுக்கிடையே முரண்பாடும், சச்சரவும் ஏற்படுவதற்குக் காரண
மாக அமைவது மொழியோ,அல்லது சொற்களோ அல்ல.மாறாக,ஒரே மொழி
யின்   சொற்களைப்  பயன்படுத்தும்  இருவர்  ஒரே  சொல்லுக்கு  வெவ்வேறு
அர்த்தங்களைக்  கற்பித்துக் கொண்டு  தத்தம் கருத்துக்களை வெளிப்படுத்
துவதே ஆகும்!   சொற்கள்   என்பவை  வெறும்  கூடுகளே, அவற்றினுள் அர்த்
தத்தை  உள்ளீடு  செய்து  பரிமாறுவது மனிதர்களின் கடமையாகும்! இருவர்
ஒரே   மொழியைப்  பேசினாலும்,   இருவரது   புரிதல் தளமும்   வெவ்வேறாக
இருக்குமானால், முரண்பாடுதான் எழுமேதவிர கருத்தொற்றுமை ஏற்படாது!
புரிதல்தளம் வேறுபடுவதற்குக் காரணம் உணர்வுத்தளம் வேறுபடுவதே!

உணர்வுத்தளம்   வேறுபடுவதற்குக்   காரணம்,   வேறுபட்ட   உணர்வு  நிலை
வளர்ச்சியே யாகும்.  தனிமனிதர்கள்  ஒரே மாதிரியாக உணரவில் வளர்வது
இல்லை!  ஏனென்றால்,  எல்லோரும்  ஒரே  மாதிரியாக  இருப்புக்கும்,  வாழ்க்
கைக்கும்  பதிலளிப்பதில்லை!  ஒரே  மாதிரியாகத்  தன்னையும், வாழ்க்கை
யையும்  உணர்வு கொள்வதில்லை!   எவ்வொரு   மொழியும்  மனிதர்களைப்
பிரிப்பதும் இல்லை, இணைப்பதும்  இல்லை! மாறாக, மனிதர்களின் சுயநல
நோக்கங்களும், அரை-உண்மைகளும், பாரபட்சமான பார்வைகளும், மேலா
திக்க   மனோபாவமும் தான்   மனிதர்களைப் பிரிக்கிறது!  ஒருவரை   தனது
மொழியே சிறந்தது, மேலானது என்று சொல்லச் செய்வதும், ஒரு குறிப்பிட்ட
மொழியை   பிற மொழி பேசும்  மக்களிடம்   திணிக்கச்  செய்வதும்  மொழி
யல்ல!     தமிழ் மொழி   இனிமையானது தான்;    ஆனால்,   எந்த மொழிதான்
இனிமையற்றது? எந்த மொழியில் தான் காதல் கவிதைகள் இல்லை?  அவர
வர்க்கு அவரவர் மொழி இனிமையானதே, அற்புதமானதே!

எல்லோரும்  ஒரு  மொழியின்  சொற்களைக்  கொண்டு  பேசவும், உரையாட
வும்  முடியும் என்பது ஒருவித போலியான சமத்துவத்தையும், சுதந்திரத்தை
யும்  வழங்குவதாக உள்ளது!  வாழ்வின் அர்த்தம் குறித்த அக்கறையும்,  தேட
லும்,  இல்லாத ஒரு சமூகத்தில் சமத்துவம்,  சுதந்திரம், போன்றவை சாத்திய
மில்லை! மனிதர்களை மனிதர்களிடமிருந்து பிரிக்கும் சக்திகள் வர்க்கபேத
மின்றி ஒவ்வொரு மனிதனின் இயல்பிலேயும் பின்னப்பட்டுள்ளன! தன்னை,
தனது    உள்ளார்ந்த  மெய்ம்மையையும்,   வாழ்வின்  அசலான   குறிக்கோள்,
மற்றும் இலக்கினையும் அறியாத மனிதன் தனக்கும்,மனிதகுலம் மொத்தத்
திற்கும் தீமையாகத்தான் அமைவான்!

அர்த்தம் அறியப்படாத சொற்களைக்கொண்டு நிகழ்த்தப்படும் சொல்லாடு
தலால்  எவ்வித பயனும்  இல்லை!   மனிதர்கள்  எல்லாவிடங்களிலும்,  சொற்
களை அவற்றின் மேலோட்டமான பொருளைக்கொண்டும், பெரிதும்  ஊகிக்
கப்பட்ட   அர்த்தங்களைக்  கொண்டும்   சொல்லாடிக்  கொண்டும்,     வாதம்
புரிந்துகொண்டும்,  விதண்டாவாதம் பேசிக் கொண்டும் காற்றை ஒலி-மாசு படுத்திக்கொண்டிருக்கிறார்கள்!

ஆக, நம்முடைய பேச்சு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால், சொற்க
ளுக்கான  ஆழமான  அர்த்தத்தை  அறியாமல்  பேசுவதை  நாம் தவிர்த்தாக
வேண்டும்!   இதன்  அர்த்தம்  நாம்  ஊமையாகிட  வேண்டும்   என்பதில்லை!
மாறாக, எவற்றை நாம் துல்லியமாகவும், தெளிவாகவும் அறிந்துள்ளோமோ,
புரிந்து கொண்டுள்ளோமோ அவற்றை மட்டுமே பேசவும், பகிர்ந்து கொள்ள
வும் வேண்டும்! இன்னும் நாம் அறியாதவற்றை அறிந்துகொள்ளவும், புரிந்து
கொள்ளவும்    தீவிர  ஆர்வத்துடன்   முயன்று  சாதித்திட   வேண்டும்!  சொற்
களின்  ஆழமான   அர்த்தத்தைப்  புரிந்து  கொள்ளுதல்  என்பதன்  அர்த்தம்,
சொற்கள் சுட்டுகிற அம்சத்தை, விஷயத்தை முழுமையாகப்  புரிந்து கொள்
ளுதல் என்பதே!

உதாரணத்திற்கு,     "பிரபஞ்சம்"    எனும்   சொல்லை   எடுத்துக்கொள்வோம்.
பிரபஞ்சம் எனும் சொல்  பூமி, சூரியன், சூரியக்குடும்பம், நட்சத்திரக்கூட்டம்,
காலம்,  வெளி,  பருப்பொருள்  ஆகியவற்றை  உள்ளடக்கிய   ஒரு  மாபெரும்
அமைப்பைக் குறிக்கிறது.  அதாவது, ஒட்டுமொத்த உலகத்தைக்குறிக்கிறது
என்பதில்  சந்தேகமில்லை!   ஆனால்,   இந்த  விபரங்கள்  பிரபஞ்சத்தை  மிக
மேலோட்டமாக  மட்டுமே  விளக்குகிறது.  இன்னும் பிரபஞ்சத்தின் உள்ளடக்
கங்களான பூமி(கிரகம்), சூரியன்,நட்சத்திரம் என ஒவ்வொன்றைப்பற்றியும்
அதிக   விபரங்களைச்  சேர்த்தாலும்,  அவ்விபரங்கள்  'பிரபஞ்சம்'  என்பதன்
அர்த்தம் ஆகாது!அதாவது, 'பிரபஞ்சம் என்றால் என்ன?' என்பதற்கான பதில்
ஆகாது!   அதாவது,  மனிதனுக்கும்,  பிரபஞ்சத்திற்குமான  தொடர்பு  என்ன?
முதலிடத்தில் பிரபஞ்சம் ஏன்,எந்த நோக்கத்திற்காக இருக்கிறது?பிரபஞ்சம்
எவ்வாறு தோன்றியது? அதன் முடிவு எத்தகையது, அல்லது அது முடிவேயில்
லாமல்  இயங்கிக் கொண்டிருக்குமா? அப்படியானால்,  பிரபஞ்சத்தின் குறிக்
கோள்   தான்  என்ன?    இத்தகைய   பிரபஞ்சத்தில்   இடம்பெறும்  மனிதஜீவி
களின்  குறிக்கோள் தான்  என்ன?  என இக்கேள்விகளுக்கு மட்டுமல்லாமல்,
இவ்விசாரத்தில் தொடர்ந்து  எழக்கூடிய பிற  உப-கேள்விகளையும் சேர்த்து
அனைத்திற்குமான  பதில்களையும்  கண்டுபிடித்தால் தான்  பிரபஞ்சத்தின்
அர்த்தம்    என்ன  என்பதை  அறிந்து கொள்ளமுடியும்!   பிரபஞ்சத்தின்  அர்த்
தத்தை   அறிவதன்  நோக்கம்   என்ன வென்றால்,   அப்போதுதான் மனிதன்
தன்னையும்,  தனது   அர்த்தத்தையும்,   வாழ்க்கையையும்   புரிந்து கொள்ள
முடியும்!

மொழியை  உண்மையில்  வளர்ப்பது,  காப்பது யார்? ஒரு நாட்டின் அரசரோ,
அரசியல் வாதிகளோ,  செல்வந்தர்களோ  அல்ல!   இன்னும்,   இலக்கியவாதி
களும், எழுத்தாளர்களும் அல்ல! மாறாக,சீரிய சிந்தனையாளர்களும்,ஞானி
களும்  ஆன்மீகக் கவிஞர்களும் தான்! அதாவது, அர்த்தத்தை தம்முள் ஆழ்ந்
தகழ்ந்து  சென்று   கண்டடைபவர்கள் தான்   மொழியை  வளர்ப்பவர்களும்,
காப்பவர்களும்   ஆவர்!    மொழி  என்பது    மனிதனுக்கு  வெளியே   தனியே
எங்கும் இல்லை! மொழி என்பது மனிதனிலிருந்து,அவனது உணர்விலிருந்து
வேறானதல்ல!   மாறாக,  மொழி  என்பது  மனித  உணர்வின்  ஒரு கருவியே!
உணர்வுதான்   மொழியைத்  தோற்றுவித்தது;  மொழி  உணர்வைத் தோற்று
வித்தது என்று காண்பது தலைகீழ்ப் புரிதல் ஆகும்!

ஆக, அர்த்தம் அறியாமல் உச்சரிக்கக்கூடாத முக்கியமான சில சொற்களை
நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? அவையாவன:
          நான்
              அன்பு
                  உணர்வு
                        விழிப்பு
                      உண்மை
            பிரபஞ்சம்
          மனிதன்
      கடவுள்
          வாழ்க்கை.
       <>
மா.கணேசன்/ நெய்வேலி/ 01.03.2017  
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...