Monday, 29 May 2017

நிஸர்கதத்தா மஹாராஜ்-ன் ஆன்மீக மொழிகள்






•  உங்களுடைய புற வாழ்க்கை முக்கியத்துவமற்றது.
•  நீங்கள் ஒரு இரவுப் பணிக் காவலாளியாக இருந்துகொண்டு மகிழ்ச்சியாக
    வாழ முடியும்.
•  உள்முகமானவையே முக்கியம்.
•  உங்களுடைய அக அமைதியையும், சந்தோஷத்தையும் நீங்கள்
    சம்பாதித்தாக வேண்டும்.
•  அது பணம் சம்பாதிப்பதையும் விட அதிகக் கடினமானது.
•  நீங்கள் நீங்களாக இருப்பதற்கு எந்த பல்கலைக்கழகமும் கற்றுத்தராது.
•  பயிற்சி மட்டுமே அதைக் கற்பதற்கான ஒரே வழி.
•  இந்தக் கணமே நீங்கள் நீங்களாக இருக்கத் தொடங்குங்கள்.
•  எவையெல்லாம் நீங்கள் அல்லவோ அவற்றை தூக்கி எறிந்துவிட்டு
    மேன்மேலும் ஆழமாகச்செல்லுங்கள்.
•  நீங்கள் உண்மையில் வெறும் ஒரு மனிதஜீவியும் கூட அல்ல.
•  நீங்கள் ஒரு அறிநிலைப் புள்ளி தான், காலம், மற்றும் வெளியின்
    நீட்சியும் அவ்விரண்டையும் கடந்ததும் ஆகும். (அனைத்துக்கும்}
    மூலகாரணமானது, ஆனால், தான் எதன் விளைவுமல்லாதது!
                       <<<•>>>

மேலே கொடுக்கப்பட்டிருப்பவை  ஞானி நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின்
ஆன்மீக மொழிகளாகும். இனி தொடர்பவை அவற்றுக்கான நேர் விளக்கங்கள்
என்று சொல்வதைவிட,  என்னுடைய அனுபவத்திற்கும், புரிதலுக்கும் எட்டிய
வரையிலான விவரிப்புகள் என்று சொல்லலாம்; அதாவது ஆன்மீக மொழிகள்
அவருடையவை; அவை மீதான விவரிப்புகளும்,அவ்விவரிப்புகளில் பிழைகள்
காணப்பட்டால் அவையும் என்னுடையவை!

ஞானி  நிஸர்கதத்தா மஹாராஜ்  அவர்களைப் பற்றியும்,  அவரது வாழ்க்கை
பற்றியுமான  குறிப்புகள் எதையும் இங்கு நான்  கொடுக்கவில்லை. அவற்றை
ஒருவர்  வேறு நூல்களிலிருந்தோ,  அல்லது இணையத்திலிருந்தோ தெரிந்து
கொள்ளலாம். முக்கியமாக, அவருடைய தத்துவம் அவரை வெளிப்படுத்துவது
போல் வேறு எதுவும் அவரை அவ்வளவு முழுமையாக வெளிப்படுத்திடாது!

குறிப்பாக,  மேலே கொடுக்கப்பட்டுள்ள   அவருடைய  ஆன்மீக மொழிகளில்
கடைசி இரண்டில்  அவர் சொல்லியுள்ளபடி,  அவரும் கூட  ஒரு மனிதஜீவி
அல்ல!  மாறாக,  அவருமே  வெறும் ஒரு அறிநிலைப்புள்ளி (a point of
awareness)தான்!   இது குறித்து  நாம்  இக்கட்டுரையின் இறுதியில் சற்று
விரிவாகப் பார்ப்போம்.

முதலில், நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின் முதல் ஆன்மீக மொழி என்ன
சொல்கிறது என்பதைப் பார்ப்போம்:

  •  உங்களுடைய புற வாழ்க்கை முக்கியத்துவமற்றது.
     (Your outer life is unimportant.)

ஆம்,  மனிதர்களுடைய  புற வாழ்க்கை முக்கியத்துவமற்றது. 'புற வாழ்க்கை'
என்பது எதைக்குறிக்கிறது? புறத்தைச்சார்ந்த விவகாரங்கள், ஈடுபாடுகள், அலு
வல்கள், காரியங்கள் ஆகியவற்றால் ஆனது தான் 'புற வாழ்க்கை' என்பதாகும்.
மனித வாழ்க்கை புறத்தை, புறவுலகையும் சார்ந்ததே என்பதில் ஐயமில்லை!

காற்று,  தண்ணீர்,  உணவு ஆகிய அடிப்படை அம்சங்களும், மற்றும், சக-ஜீவி
உறவுகளும்  புறத்தே தான் உள்ளன என்பதால், இவற்றுக்காக நாம் புறத்தைச்
சார்ந்திருக்கிறோம்  என்றால்  அதில்  பிரச்சினை இல்லை!  ஆனால், மொத்த
வாழ்க்கையும் புறத்தேயிருப்பதாகக் காண்பதும், புற விஷயங்களில்,விவகாரங்
களில்,  அலுவல்களில், ஈடுபாடுகளில் முற்றிலுமாக மூழ்கிக்கிடப்பது என்பதே
வாழ்க்கையென வாழ்ந்திடுவதும் தான் பிரச்சினைக்குரியதாகும்.அப்பிரச்சினை
யின்  ஆழத்தை எவருமே பெரிதாக உணர்வதில்லை. ஆனால், அதன் பாதிப்பு
களை   எல்லோரும் அனுபவித்துகொண்டுதான் இருக்கிறோம்!  அவை என்ன
பாதிப்புகள்  என்றால்,  விரக்தி,  வெறுமை,  தீராக்கவலை, சந்தோஷமின்மை,
அமைதியின்மை, அர்த்தமின்மை ஆகியவை!

"உங்களுடைய புறவாழ்க்கை முக்கியத்துவமற்றது." என்று சொல்லப்படுவதன்
அர்த்தம்  அது தேவையற்றது என்பதோ, அல்லது, அது முற்றாக விலக்கப்பட
வேண்டியது  என்பதோ அல்ல!   மாறாக,  அது  தேவையானது தானே தவிர
முக்கியமானதல்ல!  அப்படியானால்,  அதாவது,  'புறவாழ்க்கை முக்கியத்துவ
மற்றது' என்றால்,  வேறு  எத்தகைய வாழ்க்கை முக்கியமானது என ஒருவர்
அவ்வளவு  வெகுளித்தனமாகக் கேட்கலாம்!  ஆனால், வெகுளித்தனம் என்பது
அறியாமை,அஞ்ஞானம் ஆகியவற்றைக்குறிக்கும் இன்னொரு சொல் மட்டுமே!
மாறாக, மனிதர்கள் அனைவரும் அறிந்தது 'புறவாழ்க்கை' என்பது மட்டுமே!

ஆனால்,  வாழ்க்கையானது  புறவாழ்க்கை,  அகவாழ்க்கை என  இரண்டாகப்
பிரிந்து கிடப்பதில்லை; மேலும், அவ்விரண்டில் ஒன்றைமட்டும் தேர்வுசெய்து
வாழ்வது என்பதும் மனித வாழ்க்கைக்குப் பொருந்தாது! மாறாக, புறவாழ்க்கை
என்பது  மனிதனின் மிக அசலான வாழ்க்கைக்குச் செல்லும் ஒரு பாதை, அல்
லது அடிப்படை மட்டுமேயாகும்!  புறவாழ்க்கை  என்பது  தவிர்க்கவியலாதது;
அதே நேரத்தில் அதுவே முழு வாழ்க்கையும் ஆகிடாது! ஆனால், உணர்வற்ற
விலங்கு ஜீவிகளைப் பொறுத்தவரை, அவற்றுக்கு "அகம்" என்பது கிடையாது
என்பதால், அவற்றிற்கு  புறவாழ்க்கை தான் மொத்த வாழ்க்கையும்; அதாவது,
வெறுமனே  உயிர்-பிழைத்திருப்பது தான் வாழ்க்கையும், வாழ்வின் இலக்கும்
ஆகும்! ஆனால், மனிதஜீவிகளைப்பொறுத்தவரை, அவர்கள் உணர்வுள்ள ஜீவி
களாய் இருப்பதால், அவர்கள் உணர்வுக்குரிய வாழ்க்கையை,  அதாவது, அக
வாழ்க்கையை பிரதானமாக வாழ்ந்தாகவேண்டும்!

நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின் அடுத்த ஆன்மீக மொழி :

•  நீங்கள் ஒரு இரவுப் பணி - காவலாளியாக இருந்துகொண்டு மகிழ்ச்சியாக
    வாழ முடியும்.
   (You can become a night watchman and live happily.)

அதாவது, மனிதஜீவிகள் அனைவரும் மெய்ம்மையைவிட சந்தோஷத்தையும்,
மகிச்சியையும் தான்  பிரதானமாகத்  தேடுகின்றனர்.  ஆனால், உண்மையான
சந்தோஷம்,  மகிழ்ச்சி  எதில் அடங்கியுள்ளது  என்பது தெரியாமல் அலைந்து
திரிந்து அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர்!  ஆனால், உண்மையான மகிழ்ச்சி,
சந்தோஷம்  என்பது  புறத்தேயுள்ள  பொருட்களையோ,  விஷயங்களையோ,
அல்லது  அவற்றைப் பெற்றுத்தருவதாகக் கருதப்படும் அதிகமான பணத்தைச்
சம்பளமாக  அள்ளித்தரும்  தொழில்களையோ,  பகட்டான உத்தியோக நிலை
களையோ, பட்டம் பதவிகளையோ சார்ந்திருப்பதில்லை என்கிற உண்மையை
எடுத்துச் சொல்கிறது இந்த ஆன்மீக மொழி.

மனிதர்கள் செய்யும் தொழில்கள், உத்தியோகங்கள் அவர்களை பரந்த சமூகத்
துடனும்,  உலகுடனும்,  உலக நடைமுறைகளுடனும்  தொடர்புபடுத்துபவை
ஆகும்!  இத்தொடர்புகள் மனிதனை புறவாழ்க்கையிலேயே அமிழ்ந்து போகும்
படிச்  செய்திடக்கூடும் என்பதாலேயே,  "ஒருவன் இரவு நேரக் காவலாளியாக
இருந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும்."  என நிஸர்கதத்தா மஹாராஜ்
கூறுகிறார்.

பரவலாக,  நாமனைவரும்  நம் குழந்தைகளை அதிகச் சம்பளம் பெற்றுத்தரக்
கூடிய உத்தியோகத்துறைகளை குறிவைத்துத்தான் படிக்கவைக்கிறோம்! அதா
வது,  அதிகமான பணம்  அதிகமான சௌகரியங்களையும், சமூகத்தில் உயர்
மதிப்பையும், அதிக மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும்,  மன நிறைவையும்
பெற்றுத்தரும்  என்பதான மாயையில்,  தவறான நம்பிக்கையில் நாம் சிக்கிக்
கொண்டிருக்கிறோம்!   ஒரு தோட்டக்காரனாகவோ,  குழாய் பொருத்துபவனா
கவோ,  வேறு  'சாதாரண',  அல்லது  'மதிப்பில்லாத' என்று கருதப்படும் ஒரு
தொழிலைச் செய்வர்களாக நம் குழந்தைகள் ஆவதை நாம் விரும்புவதில்லை!
ஆகவேதான், 'உயர்-படிப்பு', 'பெரும்-படிப்பு' படித்தாகவேண்டும் என்று  நாம் நம்
குழந்தைகளை  சிறு வயதிலிருந்தே, "நன்றாகப் படி",  "அதிக மதிப்பெண்களை
எடு" எனத் துன்புறுத்தத் தொடங்கிவிடுகிறோம்!

ஆனால்,நாம் புகட்டும் இத்தகைய கல்வி உண்மையில் வாழ்க்கைக்கானதல்ல;
பகட்டுத்தனமான  பிழைப்புக்கானதே  ஆகும்!  மனித இனம்   வழி பிறழ்ன்று
சென்று கொண்டுள்ளது!  இத்தகைய போக்கை நாம்  நாகரிகம், வளர்ச்சி, முன்
னேற்றம் என்கிறோம்! மனிதர்களுக்கு இன்னும் வாழ்க்கைக்கும், பிழைப்புக்கும்
வித்தியாசம் தெரியவில்லை!

இன்றளவில்,  அதிகம் படித்தவர்களும், அறிவுஜீவிகளும் தான்  நிஸர்கதத்தா,
ஜெ.கிருஷ்ணமூர்த்தி  ஆகியோரின்  தத்துவங்களைப் படிக்கிறார்கள். ஆனால்,
"நீங்கள் ஒரு இரவுநேரக் காவலாளியாக இருந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ
முடியும்." எனும் நிஸர்கதத்தாவின் கூற்றை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்
வார்களா, அல்லது, அதை அப்படியே கவனியாதது போல் கடந்து சென்றுவிடு
வார்களா?

நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின் அடுத்த ஆன்மீக மொழி :

•  உள்முகமானவையே முக்கியம்.
   (It is what is inward that matters.)

ஆம்,  உள்முகமானது, அதாவது, அகவாழ்க்கை மட்டுமே முக்கியமானதாகும்.
அடிப்படை வாழ்க்கை, அல்லது, புறவாழ்க்கை என்பது உயிர்-பிழைத்திருத்தல்
என்பதைப்பற்றியது மட்டுமே.  ஆம், உயிர்-வாழ்தல் என்பதை நாம் எவ்வளவு
அலங்காரமாகவும்,  ஆடம்பரமிக்கதாகவும்  மேற்கொண்டாலும்  அது வெறும்
உயிர்-பிழைத்தல் மட்டுமேதவிர அது அசலான, அர்த்தமுள்ள மனிதவாழ்க்கை
யாக ஆகாது! இந்த வாழ்க்கையை ஏன் ஆன்மீகவாதிகள் எல்லோரும் உள்முக
மானது, அல்லது "அக-வாழ்க்கை" என்று குறிப்பிடுகிறார்கள்? ஏனெனில், ஒட்டு
மொத்த பிரபஞ்ச இயக்கமும் வெளிப்புறமாகத்தொடங்கி மேன்மேலும் உள்முக
மாகக்குவிந்து முன்னேறிச்செல்லும் வழிமுறையில் அமைந்த ஒன்றாக இருப்
பதே அதற்குக்காரணமாகும்.

அடிப்படை வாழ்க்கை, அல்லது, புறவாழ்க்கை என்பது உயிர்-பிழைத்திருத்தல்
என்பதைப்பற்றியது மட்டுமே என்றோம். ஒரு அணில் அல்லது குருவியானது
அதற்குரிய உணவைத் தேடி உண்கிறது,  தனது இணையுடன்  சேர்ந்து இனப்
பெருக்கம் செய்கிறது.  தொடர்ந்து உண்பதும்,  இனப்பெருக்கம் செய்வதுமாக
ஒரு அணிலானது வாழ்கிறது. ஆனால், அது எவ்வொரு தருணத்திலும், "தாம்
ஏன் இருக்கிறோம், தமது வாழ்க்கையின் அர்த்தம் என்ன?"  என்பது பற்றியும்,
இன்னும் தன்னைப் பற்றியும்,  "தாம் எத்தகைய ஜீவி?" என்பது குறித்தும் அறி
வதோ,  சிந்திப்பதோ கிடையாது!  ஏனெனில்,  அவ்வாறு சிந்தித்தறிவதற்கான
யாதொரு  மையத்தையும்,  உணர்வையும்  தன்னகத்தே அது கொண்டிருக்க
வில்லை!  ஆம்,  "தான்" எனும் உணர்வு தான் "அகம்" எனப்படுவதாகும்! ஒரு
அணில்  இருக்கிறது! இங்கும் அங்கும் மரத்தின்மீது ஓடி தனக்கான உணவை
தானியங்கித் தனமாகத்  தேடிப் பெறுகிறது.   தனக்குப் பசிக்கிறது,   ஆகவே
உணவைத் தேடிப்பெறவேண்டுமென்று தன் தேவையை தனக்குத்தானே பிரதி
நிதித்துவம் செய்வதற்கு  அதனிடம் யாதொரு மையமும் இல்லை, அதாவது,
உருவாகவில்லை! அதாவது, ஒரு அணில் அல்லது எவ்வொரு விலங்குஜீவி
யும் தனக்குப் பசிக்கிறது என்பதை முதலில் உணர்ந்து, பிறகு உணவைத்தேடு
வதில்லை;  மாறாக,  மிகவும் நேரடியாக தானும் பசியும் ஒன்றாகவே இருப்ப
தால் அவற்றின் இயல்பான இயக்கம் என்பதே உணவுத்தேடல் தான்!

ஒரு தவளைக்கும்  ஒரு மனிதனுக்கும்  உள்ள வித்தியாசம், தன்னைப் பிரதி
நிதித்துவம் செய்யும் மையம் இல்லாதது தவளை!  தன்னைப்பிரதிநிதித்துவம்
செய்யும்  மையம் கொண்ட  தவளை மனிதன்,  அவ்வளவே! பெரும்பாலான
மனிதர்கள் தவளைகளைப் போலவே, தமது இருப்பை உணர்வதில்லை. தாம்
ஏன் இருக்கிறோம், தமது வாழ்க்கையின் அர்த்தம் என்ன?"  என்பது பற்றியும்,
இன்னும் தன்னைப் பற்றியும்,  "தாம் எத்தகைய ஜீவி?" என்பது குறித்தும் அறி
வதும்,  சிந்திப்பதும் கிடையாது!

இதற்கு மாறாக,   தன்னை, தனது இருப்பை ஆழமாக உணர்வதற்கும், அறிவ
தற்கும்;  வாழ்வின் அசலான குறிக்கோள்,  இலக்கு, மற்றும்  அர்த்தம்  என்ன
என்பதை ஆழமாகச் சிந்தித்து அறிவதற்கும் (நிறைவேற்றுவதற்கும்) பெயர்தான்
"அக-வாழ்க்கை" என்பதாகும்! ஆழமான சிந்தனை, அல்லது விசாரம் தான் அக
வாழ்க்கைக்கான அடையாளம் ஆகும்! நம்மில் பலருக்கு வெறுமனே சிந்திப்பது
என்பது  எவ்வாறு வாழ்க்கை, அல்லது வாழ்தல் எனும் செயல்பாடாக ஆகும்?
என்ற ஐயம் எழலாம்! ஆனால், உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத்
தேவைகளை  அடைவதற்காக  கல்வி கற்பது,  பிறகு  வேலை தேடிப்பெற்று
ஓய்வுபெறும்  காலம்வரை  ஓயாது  உழைப்பது  என்பது  மட்டும்  எவ்வாறு
வாழ்க்கையாக அல்லது வாழ்தல் எனும் செயல்பாடாக ஆக முடியும்?

நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின் அடுத்த ஆன்மீக மொழி :

•  உங்களுடைய அக அமைதியையும், சந்தோஷத்தையும் நீங்கள்
    சம்பாதித்தாக வேண்டும்.
•  அது பணம் சம்பாதிப்பதையும் விட அதிகக் கடினமானது.

ஆம், பணம் சம்பாதிப்பது என்றால் என்ன என்று நம் எல்லோருக்கும் தெரியும்
அது எவ்வளவு கடினம் என்பதும் தெரியும்.  ஏனெனில்,  பணம் தான் பிரதான
மதிப்புமிக்க  ஒற்றை  அம்சமாக  உலகம் முழுவதும்  கொண்டாடப்படுகிறது!
மேலும், எல்லாவற்றையும் நாம் பணத்தைக்கொண்டே அளக்கிறோம்,மதிப்பிடு
கிறோம்!  மனிதர்களையும், அவர்களுடைய வாழ்க்கையையும் பணத்தின் அள
வைக்கொண்டே மதிப்பிடுகிறோம்!  ஆக, பணம் சம்பாதிப்பதன் அவசியத்தைச்
சொல்லித்தந்த நம் சமூகமும் நமது பெற்றோர்களும் நமக்கு அக அமைதியை
யும், சந்தோஷத்தையும் சம்பாதிப்பதற்குச் சொல்லித் தரவில்லை!

உண்மையில்,  அக அமைதி,  சந்தோஷம் என்பவை நம்முள்ளேயே உள்ளன!
அவற்றை இழக்காமல் தக்கவைத்துக் கொள்வது என்பது அவற்றைச் சம்பாதிப்
பதற்குச் சமமாகும்!  ஆனால், சந்தோஷம், அமைதி, திருப்தி, நிறைவு ஆகியன
பல்வேறு பொருட்களில்  அடங்கியிருப்பதாக எண்ணி  அவற்றை அடைந்தாக
வேண்டும் என்று ஆசையில் தவிப்பவன், தன்னிடமுள்ள உள்ளார்ந்த அமைதி
யையும், சந்தோஷத்தையும் இழந்து, இன்னும் அதிகத் தவிப்புக்குள்ளாகிறான்!

வாழ்க்கையில் இது இருந்தால் சந்தோஷமடைவேன்,அல்லது, அது இருந்தால்
சந்தோஷமடைவேன்  என்பவன்   சந்தோஷத்தை  அறியாதவன்!  ஏனெனில்,
சந்தோஷம்  இதில்  அடங்கியிருக்கிறது,  அல்லது அதில் அடங்கியிருக்கிறது
என்பது  அவனது எண்ணத்தின் முடிவும் முதலீடும் தானே தவிர அப்பொருட்
களுக்கும் சந்தோஷத்திற்கும் எவ்வொரு சம்பந்தமும் கிடையாது! இச் சிறுபிள்
ளைத்தனமான எண்ணம் இறுதிவரை மாறாதிருப்பதுதான் பெரும் துரதிருஷ்ட
மாகும்!

தனது சந்தோஷத்தை  பண்டமாற்று செய்யாதவன்,  குடிசையிலும் சந்தோஷ
மாயிருக்கிறான்!  அடுக்கு மாளிகை கட்டினாலும் அதிலும் சந்தோஷமாயிருக்
கிறான்!  சந்தோஷத்திற்காக உருவாக்கப்படும் பொருட்கள்  மனிதனை சந்தோ
ஷப்படுத்துவதில்லை, நிறைவு செய்வதில்லை! சந்தோஷமான மனிதன் தனது
சந்தோஷத்திலிருந்து அனைத்தையும் செய்கிறான், உருவாக்குகிறான்! அவனது
சந்தோஷம் எச்சூழ்நிலைமையிலும் குறைவதில்லை!

நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின் அடுத்த ஆன்மீக மொழி :

•  நீங்கள் நீங்களாக இருப்பதற்கு எந்த பல்கலைக்கழகமும் கற்றுத்தராது.
•  பயிற்சி மட்டுமே அதைக் கற்பதற்கான ஒரே வழி.
•  இந்தக் கணமே நீங்கள் நீங்களாக இருக்கத் தொடங்குங்கள்.
•  எவையெல்லாம் நீங்கள் அல்லவோ அவற்றை தூக்கி எறிந்துவிட்டு
    மேன்மேலும் ஆழமாகச்செல்லுங்கள்.

உண்மையில், நீங்கள் நீங்களாக இருப்பதற்கு எந்த பல்கலைக்கழகமும் கற்றுத்
தராது. மாறாக,  நீங்கள் நீங்களாக இல்லாதிருப்பது எவ்வாறு என்பதை அவை
கற்றுத் தரும்!  அதாவது, பல்கலைக்கழகங்கள் யாவும் மனிதர்களை ஒருபுறம்
பொறியாளர்களாக, மருத்துவர்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக மாற்றிடும்
பணியைச் செய்கின்றன! இன்னொருபுறம் எதற்கும் பயன்படாத பட்டதாரிகளை
உருவாக்குகின்றன! ஆனால், எந்த பல்கலைக்கழகமும் மனிதர்கள் பூரணமான
மனிதர்களாக இருப்பது, வாழ்வது எவ்வாறு என்பதைக் கற்றுத் தருவதில்லை!

உண்மையான மனிதர்களும்,  முழுமையான மனிதர்களும்,  விஞ்ஞானிகளும்,
மெய்ஞானிகளும் இதுவரையில் பல்கலைக்கழகங்களுக்கு வெளியேதான் உரு
வாகியிருக்கிறார்கள்!   புத்தர்களை  நாம் பல்கலைக்கழகங்களிடமிருந்து எதிர்
பார்ப்பது அறிவீனம்! மாறாக, மேட்டுக்குடி  (Elite) எனப்படும் படித்த எத்தர்
களை உருவாக்கும் இடம்தான் பல்கலைக்கழகங்கள்! 'கல்வி,  பொருளாதாரம்,
பணிநிலை,  போன்றவற்றில்  மேல்நிலையை  அடைந்து தனித்துக் காணப்படு
பவர்கள்' தான் 'மேட்டுக்குடிகள்' என்போர் என்றால், அவர்கள் படித்த-எத்தர்கள்
அல்லாமல் வேறு என்ன?

நீங்கள் உங்களை 'எவராக' அல்லது 'என்னவாக' கருதிக்கொண்டிருக்கிறீர்களோ
அதுவல்ல "உண்மையான" நீங்கள்! அது,வெறும் எண்ணங்களால் எழுப்பப்பட்ட
"புனைவு"!   நீங்கள்  எதனுடனாவது  உங்களை அடையாளப்படுத்திக் காணும்
வரையில்  (அது உங்கள் உடலாயினும், அல்லது மனதாயினும் சரி) உண்மை
யான உங்களை நீங்கள் ஒருபோதும் சந்திக்கவே இயலாது!

நீங்கள் விரும்பும் வண்ணம் உங்களை வடிவமைத்துக்கொள்ள முடியும்  என்
றால்,  அதனாலேயே  அது அசலான நீங்கள் அல்ல! எவ்வொரு அடையாளத்
தையும்  நீங்கள்  பற்றிடாத போது,  ஏதாவதொரு  அச்சில் இட்டு  உங்களை
வார்த்திடாத போது,  ஏதோவொன்றாக  ஆகிட  ஆசைப்படாத,  முயற்சிக்காத
போது இருப்பீர்கள்,  "நீங்கள் நீங்களாக"!  அனைத்திற்கும் ஈடாக, ஒருமையும்
முழுமையுமான உணர்வாக!

ஆக, "எந்த பல்கலைக்கழகமும் நீங்கள் நீங்களாக இருப்பதற்குக் கற்றுத்தராது;
பயிற்சி மட்டுமே அதைக் கற்பதற்கான ஒரே வழி."  என்று நிஸர்கதத்தா கூறி
யுள்ளார்.   அப்படியானால்,  எத்தகைய பயிற்சி  அதைக்  கற்றுத்தரும்? ஆம்,
ஸ்ரீ.ரமணமகரிஷி சொன்ன "நான் யார்?" என்ற ஆத்ம விசாரம் தான் அதற்கான
பயிற்சி யாகும்.  இதையே வேறு சொற்களில், "ஆழமான சிந்தனைப் பயிற்சி"
என்றும் சொல்லலாம்.  பொதுவாக நாம் எல்லோருமே சிந்திக்கத்தான் செய்கி
றோம்! ஆனால்,  மிகவும் மேலோட்டமாகச் சிந்திக்கிறோம். அவை, வாழ்வின்
மேற்புற  விஷயங்களையும், தேவைகளையும், பொருட்களையும் பற்றியதாக
மட்டுமேயுள்ளன.  "ஆழமான சிந்தனைப்பயிற்சி" என்பது வாழ்வின் உட்பொரு
ளான  அர்த்தம் பற்றியும்,  வாழ்வின் குறிக்கோள், மற்றும்  இலக்கு பற்றியும்
சிந்திப்பதாகும்.

அடுத்து,  "இந்தக் கணமே நீங்கள் நீங்களாக இருக்கத் தொடங்குங்கள்." என்று
நிஸர்கதத்தா மஹாராஜ் கூறுகிறார்.  ஆம், நாளை நீங்கள் உங்களுடைய அச
லான  சுயமாக இருக்கத் தொடங்குவதில் அர்த்தமில்லை! நீங்கள் சமூகத்தில்
ஒரு  பெரிய புள்ளியாக இருக்கலாம்,  ஒரு நிறுவனத்தின் உயர்-அதிகாரியாக,
அதிகச் சம்பளம் பெறுபவராக இருக்கலாம்;  ஆனால், நீங்கள் நீங்களாக, உங்க
ளுடைய  உண்மையான சுயத்தைக் கண்டடைந்தவராக இல்லையெனில், ஏற்
கனவே நீங்கள் ஒரு பெரும்தோல்வி தான்! நீங்கள் உங்கள் புறவாழ்க்கையில்
ஒரு சாதாரண தோட்டக்காரனாக, அல்லது,  இரவுக் காவலாளியாக, அல்லது
ஒரு குழாய்-பொருத்துபவனாக இருக்கலாம்;  ஆனால், உங்கள் அகவாழ்க்கை
யில், நீங்கள் நீங்களாக இருப்பது மட்டுமே உங்களுக்கும், உங்களது வாழ்விற்
கும் அர்த்தம் சேர்ப்பதாயிருக்கும்! அர்த்தம் மட்டுமே மனிதனை நிறைவு செய்
யும்!

மேலும், "எவையெல்லாம் நீங்கள் அல்லவோ அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு
மேன்மேலும் ஆழமாகச்செல்லுங்கள்."  என்கிற நிஸர்கதத்தாவின் உபதேசமும்
முக்கியமானதாகும்! அதாவது, சமூகத்தில் நீங்கள் ஒரு பெரிய மனிதர், மதிப்பு
மிக்கவர் என்கிற பிம்பத்தை நீங்கள் பெரிதாகக் கருதும் வரையில், உங்களால்
உள்முகமாகத் திரும்பிப் பார்க்கவும்கூட முடியாது; அதில் உங்களுக்குள் மேன்
மேலும்  ஆழமாகச் செல்வது  என்கிற பேச்சுக்கே இடமில்லை! "உண்மையில்
நீங்கள் யார்?" என்கிற உண்மையைக் கண்டுபிடிப்பது மட்டுமே உங்கள் வாழ்க்
கையின் ஒரே ஒப்பற்ற குறிக்கோளும், இலக்கும், அர்த்தமும் ஆகும்!

அதேநேரத்தில், 'எவையெல்லாம் நீங்கள் அல்லவோ அவற்றைத்தூக்கி எறிந்து
விடுவது  என்பது தீரமிக்க தொரு செயல் ஆகும். ஏனெனில், அவ்வாறு தூக்கி
எறிந்திடும் பட்சத்தில்,  ஒருவர் உடனடியாக "ஒன்றுமில்லாத வெறுமை" யாக
மட்டுமே தன்னை உணரமுடியும்!  அதுவரை பொய்யும் போலியுமான பிம்பங்
களையே  "தான்"  என்று வரித்துக்கொண்டிருந்த ஒருவர் அவற்றையெல்லாம்
களைந்திட்ட  உடனேயே அவர் தன் உண்மையான சுயத்தைத் தழுவிக்கொள்
வதென்பது சாத்தியமில்லை! மாறாக, அவர் தனது அக-வெறுமையை அமைதி
யாக  எதிர்கொண்டாக  வேண்டும்;  அதிலிருந்து  தப்பிக்க முயற்சிக்காமலும்,
புதிதாக வேறு பிம்பங்கள் எதையும் இட்டு நிரப்பாமலும்,  அதாவது, தற்போது
தான் ஒரு ஆன்மீகவாதி என்றோ,  அல்லது,  ஞானமடைந்துவிட்டவராகவோ
பிரமை கொள்ளாமலும், ஆழமான சுய-விசாரத்தில் ஈடுபட்டு நிலைத்திருத்தல்
வேண்டும்!   ஏனெனில்,  மனிதன்  தனது சுயத்தின் ஆழத்தில் வெறுமையோ,
சூன்யமோ அல்ல! மாறாக, "பூரணன்" ஆவான்!

நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின் ஆன்மீக மொழிகளின் இத் தொகுப்பில்
முடிவாக இடம்பெறும் உபதேச மொழிகள்:

•  நீங்கள் உண்மையில் வெறும் ஒரு மனிதஜீவியும் கூட அல்ல.
•  நீங்கள் ஒரு அறிநிலைப்புள்ளி தான், காலம், மற்றும் வெளியின்
    நீட்சியும் அவ்விரண்டையும் கடந்ததும் ஆகும். (அனைத்துக்கும்}
    மூலகாரணமானது, ஆனால், தான் எதன் விளைவுமல்லாதது!
   (You are not even a human being.
   You just are a point of awareness, co-extensive
   with time and space and beyond both,
   the ultimate cause, itself uncaused.)

"நீங்கள்  வெறும் ஒரு மனிதஜீவியும் அல்ல.  நீங்கள் ஒரு அறிநிலைப்புள்ளி."
(A point of awareness)  என்பதன் அர்த்தம்,  மனிதன்  என்பவன்  ஒரு
"அவதானிக்கும் உணர்வு" (An Observing Consciousness)என்பதேயாகும்.
உடல்  எனும்  கூட்டினுள் வசிக்கும் ஒரு விசித்திரமான பறவை (மெய்ம்மை)
ஆவான்!  ஆம், உணர்வுச் சிறகுகள் முழுமையாக வளர்ந்ததும் எந்நேரத்திலும்
உடலாகிய   கூட்டையும்,   இப்பிரபஞ்சத்தையும்  விட்டுப் பறந்து  செல்லும்
தருணத்தை எதிர்பார்த்துகொண்டிருப்பவனாவான்! அவன் சடத்தன்மை,உயிர்த்
தன்மை இரண்டையும் கடந்த ஒரு மெய்ம்மை நிலையாவான்! அவன் காலம்,
மற்றும்  வெளியின்  நீட்சி போன்ற வளர்ச்சியாக வெளிப்பட்டவன் என்றாலும்
அவ்விரண்டையும் கடந்த நிஜம் ஆவான்!

இதன் அர்த்தம்,  உணர்வாகிய மனிதன் இப்பிரபஞ்சத்தைச் சேர்ந்தவனில்லை
என்பதுதான்! அதாவது, மனிதன் பிற (விலங்கு) ஜீவிகளைப்போல,'என்னத்தை
உண்ணலாம், குடிக்கலாம், உடுத்தலாம்'  என்கிற ரீதியில்  வெறுமனே உயிர்
வாழ்ந்து, மாண்டு போவதற்காகத் தோன்றியவனல்ல! ஆனால், மனிதன், ஒவ்
வொரு மனிதனும்  தன்னைப்பற்றிய  உண்மையை நேரடியாகத் தன்னுள்ளே
உணர்ந்தறிந்தாக வேண்டும்!  அதற்கு ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே
தோண்டி, தன்னுள் ஆழமாகச்சென்று,  தன்னைப்பற்றிய உண்மையைக் கண்ட
டைந்தாக வேண்டும்! மனிதனைப் பற்றிய உண்மை என்பது உணர்ந்தறியப்பட
வேண்டிய ஒன்றாகும்; அது கேட்டும், படித்தும் அறியப்பட முடியாதது!

தன்னைக்  கண்டடைந்தவர்களை  மக்கள்  ஞானிகள்,  மகான்கள்,  புத்தர்கள்,
சித்தர்கள்  என்றெல்லாம் அழைக்கிறார்கள். ஆனால், இவை யாவும்  போற்று
தலுக்கான வெறும் அடைமொழிகளே! ஏனெனில், தன்னைக்கண்டடைந்தவனே
மனிதன்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 25-05-2017
----------------------------------------------------------------------------
  

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...