Friday, 28 July 2017

ஒருவழிக்கதவு!




அந்த கதவு இன்னும் அங்கேயே தான் உள்ளது!
அதன் வழியே சென்றவர்கள் மிகச்சிலரே!
அக்கதவின் வழியாகச்செல்பவர் மரணமிலாப்
பெருவாழ்வு பெறுவர், அகலாத ஆனந்தம் அடைவர்!
நிரந்தர நிறைவு எய்துவர், பூரணத்துவம் பெறுவர்!
ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் அக்கதவைத்
திறந்து அந்தப்பக்கம் செல்வது மட்டுமே!
அக்கதவின் வழியாகச் செல்வதற்கு நிபந்தனை
ஏதுமில்லை- ஒருமுறை அக்கதவின் வழியாகச்
சென்றுவிட்டால், மீண்டும் இந்தப்பக்கம் வரமுடியாது
என்பதைத்தவிர! அக்கதவின் வழியாக அந்தப்பக்கம்
செல்லலாம், ஆனால் இந்தப்பக்கம் வரமுடியாது!

அந்தக் கதவு இன்னும் அங்கேயே தான் உள்ளது!
அக்கதவிற்கு இந்தப்பக்கம் செல்லுபடியாகும் விதிகள்
அந்தப்பக்கம் செல்லுபடியாகாது! அந்தப் பக்கத்தின்
விதிகள் முற்றிலும் வேறானவை!
மரணம் இந்தப்பக்கத்தின் விதியென்றால்,
நித்தியவாழ்வு அந்தப்பக்கத்தின் விதியாகும்!
நிச்சயமற்ற தன்மை இந்தப்பக்கத்தின் விதியென்றால்,
சர்வ நிச்சயம் அந்தப்பக்கத்தின் விதியாகும்!
அழிவு இந்தப்பக்கத்தின் விதியென்றால்,
ஆக்கம் அந்தப்பக்கத்தின் விதியாகும்!

ஆனாலும் எவரும் அக்கதவின் வழியாக அந்தப்பக்கம்
செல்ல விரும்புவதில்லை! மீண்டும் இந்தப்பக்கம்
வரமுடியாது என்பது அவர்களுக்கு மரணத்தை
நினைவுபடுத்துவதாயுள்ளது!
மேலும், இன்பமோ, துன்பமோ, இந்தப்பக்கத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கும் ஒருவருக்கு வேறு எந்தப்பக்கமும்
பெரிதாகத்தெரிவதில்லை! மனிதர்கள், சொர்க்கத்தின்
கவர்ச்சிக்கும் ஆட்படுவதில்லை!
நரகத்தின் வலியைப் பற்றியும் அச்சம் கொள்வதில்லை!
இப்போதைக்கு இந்தப்பக்கத்து வாழ்க்கை மட்டுமே
அவர்களுக்கு முக்கியம்!
"செத்தபிறகு சொர்க்கம் சென்றால் என்ன, நரகம் சேர்ந்தால்
என்ன?" என்பதே அவர்களது கொள்கை!
எனவேதான் மனிதர்கள் அறம், தருமம் எதையும்
கடைபிடிப்பதில்லை!

அந்தக் கதவு இன்னும் அங்கேயே தான் உள்ளது!
அக்கதவின் வழியாகச் செல்லத்துணியும் ஒருவனுக்காக
அக்கதவு காத்திருக்கிறது எண்ணற்ற யுகங்களாக!
அக்கதவின் பெயர் "திவ்விய மாற்றம்"!
மனிதர்கள் உற்சாகமற்றவர்களாக, உத்வேகமற்றவர்களாக
சோகை பீடித்தவர்களாக வாழ்வதன் காரணம்
அதிகப்படியான உற்சாகமும், உத்வேகமும் அவர்களை
அக்கதவின் வழியாகச் செல்லும் துணிவைத் தந்திடலாம்!
பேரார்வமும், பெருமுயற்சியும் ஆபத்தானவை!
இப்பூமி, முட்டாள்கள் மற்றும் சோம்பேறிகளின் சொர்க்கமாய்
இருப்பதன் காரணம் இதுதான்!

அந்தக் கதவு இன்னும் அங்கேயே தான் உள்ளது!
ஆர்வக்கோளாறுகொண்ட பலர் அக்கதவின் சிறப்புக்களையும்
அருமைபெருமைகளையும் பற்றிய கதைகளையும்,
விபரங்களையும் தயக்கத்துடன் குருமார்களிடம் சென்று
கேட்டுத்தெரிந்து கொண்டு பத்திரமாக தங்கள் வீடுகளுக்கு
திரும்பச் சென்றுவிடுகின்றனர்!

அந்தக் கதவு இன்னும் அங்கேயே தான் உள்ளது!
அமைதியான மனம் ஆபத்தான புதைமணல்!
ஆகவேதான் மனிதர்களின் மனம் சதா அலைபாய்ந்து
கொண்டேயுள்ளது!
ஆழமாகச் சிந்திப்பதும் ஆபத்தானது!
அது ஒருவனை அடியாழமற்ற அதலபாதாளத்திற்கு
கொண்டு சேர்த்துவிடக்கூடும்!
ஆகவேதான் மனிதர்கள் தேவைகளைத்தாண்டி
வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை!
அர்த்தம் பற்றிய தேடல் ஆபத்தானது!
தற்போது வாழ்கின்ற வாழ்க்கை அர்த்தமற்றுப்
போய்விடலாம்!

அந்தக் கதவு இன்னும் அங்கேயே தான் உள்ளது!
இங்கே இந்தப்பக்கம் மனிதர்கள் வழக்கம் போல
வாழாமல் வாழ்ந்து செல்கின்றனர்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 28-07-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...