அக்கம்பக்கம் உள்ள வீடுகளில் எவரும்
குடியிருக்க வில்லை என்பதால்
நாம் நம் வீட்டில் வசிக்காமல்
வாழாமல் இருக்கிறோமா?
அதே போலத்தான் பரந்து விரிகின்ற
இப்பிரபஞ்சத்தில்,
நம் வீடாகிய பூமிக்கிரத்தில்
நம்மைத் தவிர வேறு கிரகங்களில்
வேறுஎந்த ஜீவியும் இல்லை!
ஒருமுறை, இயற்பியல் விஞ்ஞானி
என்றிக்கோ பெர்மி(Enrico Fermi1901-1953)தனது சக விஞ்ஞானிகள்
(EdwardTeller,Herbert York,Emil Konopinski), ஆகியோருடன்
'பறக்கும் தட்டுக்கள் பற்றிவெளியான செய்தியைப்பற்றிப்பேசிக்கொண்
டிருக்கும் போது, விஞ்ஞானி .'.பெர்மி திடீரென்று, "எங்கே எல்லோரும்?"
எனக்கேட்டார். உடனிருந்தவர்கள் அவர் வேற்றுக்கிரக வாசிகளைப்
பற்றித்தான் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்டனர். .'.பெர்மி
உடனே வேகமாக சிலகணக்குகளைப் போட்டு, "அவர்கள் (வேற்றுக்கிரக
வாசிகள்) வெகு காலத்திற்கு முன்பே இங்கு விஜயம் செய்திருக்க
வேண்டும்; அதுவும்பல முறை!" என்பதாகச் சொல்லி முடித்தார். ஆனால்,
இது நாள் வரையிலும், எந்த வேற்றுக்கிரகவாசியும் பூமிக்கு விஜயம்
செய்ததாக எந்தவித தடயமும் இல்லை! வேற்றுக்கிரகவாசிகள்
இருகின்றனரா, இருந்தால் , "எங்கே எல்லோரும்?" விஞ்ஞானி .'.பெர்மி
யின் இந்தக் கேள்வியை மையமாகக்கொண்டு விஞ்ஞான வட்டத்தில்
வழங்கி வருவது தான் " .'.பெர்மியின் புதிர்" எனப்படுவதாகும்.
நாம் பூமிக்கிரகத்தில் வசிக்கிறோம். பூமிக்கிரகம் நம் சூரியனைச் சுற்றி
வருகிற ஒன்பது கிரகங்களில் ஒன்று. நம் சூரியன் உண்மையில் ஒரு
நட்சத்திரமே. இரவில் நாம் காணும் எண்ணற்ற நட்சத்திரங்களில் ஒன்று
தான் நமது சூரியன். நம் சூரியனையும் அதைப் போல் நூறு கோடி
களுக்கும் மேலான சூரியன்களை (அதாவது நட்சத்திரங்களை) உள்ளடக்
கிய ஒரு மாபெரும் நட்சத்திர மண்டலத்திற்கு நாம் வைத்த பெயர் தான்
"பால்-வீதி மண்டலம்" (The Millky-Way Galaxy) என்பதாகும். நமது
"பால்-வீதி மண்டலம்" போல, நம் பிரபஞ்சத்தில் நூறு கோடிகளுக்கும்
அதிகமான நட்சத்திர மண்டலங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கணக்
கிட்டுள்ளனர். அதாவது, பிரபஞ்சத்தில்
100 கோடிகளுக்கும் மேலாக உள்ள நட்சத்திர மண்டலங்களில்
1 (ஒன்றே ஒன்று) தான் நம் "பால்-வீதி மண்டலம்" அதிலுள்ள
100 கோடிகளுக்கும் மேலாக உள்ள நட்சத்திரங்களில்
1 (ஒன்றே ஒன்று) தான் நம் சூரியன், நம் சூரியனைச்சுற்றும்
9 கிரகங்களில்
1 (ஒன்றே ஒன்று) தான், நம் பூமிக்கிரகம்.
இப்போது நாம் ஒரு சிறு கணக்குப் போடுவோம். அதாவது நம் சூரியனைச்
சுற்றி கிரகங்கள் இருப்பது போல, நம் பால்-வீதி மண்டலத்தில் உள்ள 100
கோடிகளுக்கும் மேலான நட்சத்திரங்களில், பலவற்றைச் சுற்றிலும்
கிரகங்கள் இருக்கலாம், அவற்றில் நம்மைப்போன்ற ஜீவிகளோ, அல்லது
அறிவில் நம்மை விஞ்சிய ஜீவிகளோ இருக்கலாம்! ஆனால், இது வரையில்,
வேற்று கிரகவாசிகள், நம் கிரகத்திற்கு விஜயம் செய்ததற்கான , அல்லது
நம்முடன் எவ்வகையிலேனும் தொடர்பு கொண்டதற்கான யாதொரு
தடயமும் இல்லை! இதிலிருந்து, வேற்று கிரகவாசிகள் எவரும் "இல்லை!"
என்ற முடிவிற்கு நாம் வந்திடமுடியுமா? முடியும்; ஆனால், அவசரப்பட்டு
நாம் எந்த முடிவிற்கும் வர வேண்டிய அவசர அவசியம் என்ன உள்ளது?
மனிதர்களைப் பொறுத்தவரையில், அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள தன் சக
மனிதர்களைப் பற்றியே அவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை எனும்
நிலையில், வேற்று கிரகவாசிகள் பற்றிய சிந்தனை ஏற்படுவது அரிதிலும்
அரிதே! அந்தப்பிரச்சினை, இன்னும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிச்
சிந்திப்பதற்குத்தான் விஞ்ஞானிகள் இருக்கின்றனரே என்பதாக பெரும்
திரளானோர் தங்களுடைய அன்றாடப்பிழைப்பில் மூழ்கிக்கிடக்கின்றனர்!
ஆனால்,விஞ்ஞானிகள் பலருக்கு வேற்றுகிரகவாசிகள்பற்றிய பிரச்சினை
முக்கியமாகப் படுகிறது. அதிலும் , கார்ல் சாகன்(Carl Sagan,1934-96)
அவர்களுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஆனால்,
வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள விரும்புபவருக்கு இப்
பிரச்சினை ஒரு சவால் போன்றதாகும். இச்சவாலைச் சந்திப்பதன் வழியே
ஒருவர் நோபல் பரிசை எதிர்பார்ப்பதில்லை; மாறாக, அதைவிட மேலான
பரிசான "உயர்- புரிதலின்" ஆனந்தத்தை பிரபஞ்சத்திடமிருந்து ஒருவர்
நேரடியாகப் பெற்றிடுவார்! அவரது "புரிதலை" பிறரிடம் அவரால்
நிரூபிக்க இயலாமல் கூட இருக்கலாம்! ஏனெனில், இப்பிரச்சினையானது
ஒவ்வொருவரும் நேரடியாக அணுகிப் புரிந்து கொள்ள வேண்டிய விசேட
வகைச் சவால் ஆகும்! மேலும், இப்பிரச்சினையைத் தீர்ப்பதன் மூலம்
வேறு எவ்வித பொருள்-வகைப்பட்ட பயனையும் பெற வியலாது!
வேற்றுகிரகவாசிகள் பற்றிய பிரச்சினையில், இரு வகை நிலைப்பாடு
களை மட்டுமே நாம் எடுக்க முடியும். அவ்விரண்டில், ஒன்று மட்டுமே
உண்மையாக இருக்க முடியும் :
ஒன்று : வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள்!
இரண்டு: வேற்றுகிரகவாசிகள் இல்லை!
இவ்விரண்டு நிலைகளில், எது உண்மையாக இருந்தாலும் அதனால், நம்
வாழ்க்கை 'தலை -கீழாகவோ', அல்லது 'தலை-நேராகவோ' ஆகி விடப்
போவதில்லை. வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள் என்றால், அதனால்,
நமக்கு ஒரு இலாபமும் இல்லை! அதே போல, வேற்றுகிரகவாசிகள்
இல்லை என்றால், அதனால் நமக்கு ஒரு நஷ்டமும் இல்லை! மனித ஜீவி
களாகிய நாம் நம் வாழ்க்கையை 'எப்போதும் போல வாழ்ந்து சென்றாக
வேண்டும்!' இல்லை, 'எப்போதும் போலவாழ்ந்து செல்ல' முடியாது. அப்படி
எப்போதும் போல வாழ்ந்து செல்லலாம் என்பதாக இருந்தால், இத்தகைய
பிரச்சினையை நாம் ஆராயவே தேவையில்லையே?
நல்லது, வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள் என்றால், அதனால்,நமக்கு
ஒரு இலாபமும் இல்லை! என்று சொன்னோம். அதே போல, வேற்று
கிரகவாசிகள் இல்லை என்றால், அதனால் நமக்கு ஒரு நஷ்டமும் இல்லை!
என்று சொன்னோம். ஆனால், இந்த இரண்டாவது கூற்றில் ஒரு சிறு
திருத்தம் செய்யப்படவேண்டும்.அது என்னவெனில், வேற்றுகிரகவாசிகள்
இல்லை என்றால், அதனால் நமக்கு ஒரு நஷ்டமும் இல்லை! என்றோம்.
உண்மை தான், அதனால் நமக்கு ஒரு நஷ்டமும் இல்லை! ஆனால்,
அதனால், ஒரு விசேடமான இலாபம் உண்டு! அது குறித்து பின்னால் உரிய
இடத்தில் காண்போம்!
'வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள்!' எனும் நிலையை, பொதுவாக
விஞ்ஞானிகளும், அதையடுத்து, எல்லாவற்றையும் - கடவுளையும், மனித-
அறிவை விஞ்சிய அறிவையுடைய ஜீவிகளையும், தங்களுக்கு வெளியே
புறத்தே எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் சாமானியர்களும் தான் முன்
வைப்பவர்களாக உள்ளனர். ஒரு வகையில், 'இல்லாத' ஒரு கடவுளுக்கு
மாற்றாக எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயமாக வேற்றுகிரக வாசிகளைக்
குறிப்பிடலாம்! இதன் தொடர்ச்சியாகத்தான் வானில் ஏதேனும் வித்தியாச
மான ஒளி அல்லது வடிவங்கள் தென்பட்டால் உடனே அவற்றை வேற்று
கிரக வாசிகளின் விண்வெளி-ஊர்தி, "பறக்கும் தட்டு" என்றெல்லாம்
கதைக்கத் தொடங்கி விடுகிறார்கள்! இன்னும், அது ஒரு 'மதமாக'வே உரு
வாகியுள்ளது! 'இனம்-காணவியலா-பறக்கும் பொருட்கள்' ( Un-identi
fied Flying Objects: UFO), 'வேற்றுகிரக வாசிகளின் விஜயம்'
என்றெல்லாம் சொல்லிக் கொண்டு விண்ணை அண்ணாந்து பார்த்துக்
கொண்டிருக்கும்( கடவுளின் வருகைக்குக் காத்திருப்பதான) ஒரு மதம்!
முதலிடத்தில், இங்கு பூமிக்கிரகத்தில் "உயிர்" தோன்றியுள்ளது, அறிவுத்திற
னுள்ள மனித-ஜீவிகளாகிய நாமும் தோன்றியுள்ளோம். ஆகவே, வேற்றுக்
கிரகங்களிலும் உயிரும், மனிதனையொத்த ஜீவிகளும், இன்னும் மனித
அறிவைவிஞ்சிய அறிவையுடைய ஜீவிகளும் இருக்கவேண்டும் என்பதான
தர்க்கமும், சிந்தனையும் குதர்க்கமானவை யாகும்!
இவ்விஷயத்தில், சாமானியர்களையும், அவர்களது எதிர்பார்ப்புகளையும்,
கனவு மற்றும் கற்பனைகளையும் மன்னித்து விடுவோம்! ஆனால்,
விஞ்ஞானிகளை அவ்வாறு விட்டுவிட முடியாது. ஏனெனில், விஞ்ஞானம்
என்ற பெயரில் அவர்கள் மனிதகுலத்தை தவறாக வழி நடத்திச் செல்லும்
அபாயம் விஞ்ஞானிகளின் வழியாகத்தான் வருகிறது! கடந்த 500 ஆண்டு
களின் விஞ்ஞான வளர்ச்சியும், கண்டுபிடிப்புகளும், அதன் மேலாதிக்கமும்
மனிதகுலத்திடம் "விஞ்ஞான-வகை மூட நம்பிக்கை" களையும் (Scienti
fic-Superstitions), மொண்ணையான அறிவையும் உருவாக்கி
விட்டுள்ளது எனலாம். "விஞ்ஞானம் என்பது எவ்வளவு விஞ்ஞானபூர்வ
மானது?" என்று விஞ்ஞானத்தை கேள்விக்குள்ளாக்கி, அதன் ஒட்டுமொத்த
அணுகு முறையை மறு பரிசீலனை செய்து மாற்றியமைக்கப்பட வேண்டிய
தருணத்தில் தற்போது நாம் உள்ளோம்!
முக்கியமாக, "பரிணாமம்" பற்றிய விஞ்ஞானப் பார்வையும், புரிதலும்
மிகவும் மேலோட்டமாக உள்ளதால், பிரபஞ்சத்தையும், அதில் நம்மையும்,
நமது வாழ்க்கையையும், இன்னும், பிறவற்றையும் சரியாகப் புரிந்து
கொள்ளவியலாத தடுமாற்றம் நிலவுகிறது. "பரிணாமம் என்றால் என்ன?"
"பரிணாமத்தில் உண்மையில் பரிணமிப்பது எது?" "பரிணாமத்தின் மிக
அசலான குறிக்கோள், இலக்கு யாது?" போன்ற மையமான கேள்விகளுக்கு
சரியான பதில்களைக் கண்டு பிடிக்காமல் 'எதைப்பற்றியும்' உருப்படியாக
நம்மால் புரிந்து கொள்ளமுடியாது!
அணுவை அகழ்ந்து ஆராயவும், அணுமின்சக்தி , அணுகுண்டு, மற்றும் பிற
போராயுதங்களைத் தயாரிக்கவும் நம்மால் முடியலாம்! இன்னும் நமக்கு
அருகாமையிலுள்ள கிரகங்களுக்கு விண்கலன்களை ஏவலாம்! ஆனால்,
விஞ்ஞானத்தின் தற்போதைய பொருள்-வகைப் பட்ட அணுகுமுறையைக்
கொண்டு எது ஒன்றைப் பற்றியும் சரியான, முழுமையான புரிதலை
ஒருபோதும் பெறவியலாது! ஏனெனில், விஞ்ஞானத்தின் அணுகுமுறை
யானது, பெரிதும் எந்திரத்தனமானதாகவும், பொருள்-மையப் பார்வையில்
அமைந்ததாகவும், மேலோட்டமான தர்க்கத்தைக் கொண்டதாகவும்,
ஒருதலைப் பட்சமானதும், பிறழ்ச்சியானதுமானதொரு புற-வயப் பார்வை
யாகவும் (Vulgar-Objective Outlook)உள்ளது. இவையே விஞ்ஞானத்
தின் தோல்விக்குக் காரணமாகும்!
குறிப்பாக, 'புற-வயமான' பிரபஞ்சத்தை ஆராய்கிற மிகவும் "மைய-நிலை"
வகிக்கும் மனித மனதை, அல்லது மனித உணர்வை (Human Conscious
ness), அக-வயமானது (Subjective), இரண்டாம்-பட்சமான விளைவு,
அல்லது நிகழ்வு (Epiphenomenon) எனக் காண்பது பெருந்தவறாகும்!
ஏனெனில், சந்தேகத்திற்கிடமின்றி பிரபஞ்சத்தை ஆராயும் மனித மனமும்
புறவயமான நிஜமே! ஆக, மனித மனதை (மனித உணர்வை) புறவயமான
தொரு காரணியாக கணக்கில் கொண்டு, நமது சமன்பாட்டில் சேர்த்துக்
கொள்ளாமல், ஒரு போதும் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளவியலாது!
வெறுமனே, காலம், வெளி, அணுத்துகள், புரோட்டான், எலக்ட்ரான்,
நியூட்ரான், ஈர்ப்பு, நிறை, வேகம், மின்காந்த விசை, பொருளின் இயக்கம்
என இவற்றை மட்டுமே சமன்பாட்டில் கொண்டு, இவற்றின் சொற்களிலே
யே (In matter's Terms Only),பிரபஞ்சத்தைப் புரிந்து கொண்டுவிட்ட
தாகவும் , இன்னும் முழுமையாகவும் புரிந்து கொண்டுவிடமுடியும் என்ப
தாகவும் எண்ணுவது மடமையின் உச்சமாகும்!
நல்லது, மீண்டும் நாம் தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம். வேற்றுகிரக
ஜீவிகளைப் பற்றிக்காண்பதற்கு முன், முதலில் பூமிக்கிரகத்தையும், அதில்
உள்ள ஜீவிகளையும், முக்கியமாக மனித ஜீவியையும் பற்றிக்காண்போம்.
ஆம், பூமிக்கிரகத்தில் உயிர் தோன்றி நெடுங்காலமாக வாழ்ந்து நிலை
பெற்றுள்ளதோடு, அறிவுக் கூர்மையும், ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய திறனும்
கொண்ட, யாவற்றுக்கும் மேலாக, "சுய-உணர்வு"டன் கூடிய மனிதஜீவியும்
இங்கு தான் உள்ளான்! இது ஒரு வெளிப்படையான உண்மையாகும்.
ஆனால், பூமியிலோ அல்லது வேறு எவ்விடத்திலோ, முதலிடத்தில் "உயிர்"
ஏன், எதற்காகத் தோன்றிடவேண்டும்? அதற்கான நோக்கம், குறிக்கோள்,
இலக்கு யாது? என்பவற்றையெல்லாம் நாம் துல்லியமாக கண்டறிய
வேண்டாமா?
"பூமியில் உயிர் தோன்றியது என்பது சந்தர்ப்பவசமானது, தற்செயலானது,
விபத்து போன்றது!" என்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது
அடிப்படையற்ற அப்பட்டமான அதர்க்க-வகைச் சிந்தனையாகும். எவ்வா
றெனில், சந்தர்ப்பவசமானதோ, தேவையின் பாற்பட்டதோ,உயிர் தோன்றி
விட்டது! இனி அது எதற்காக, எந்தநோக்கத்திற்காக தோன்றியது என்பதை
கண்டுபிடிப்பதும், அந் நோக்கத்தை நிறைவேற்றுவதும் தான் நம்முடைய
தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்! ஏனென்றால், இந்த தலையாய
நோக்கத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாம் பெறக்கூடிய இறுதிப்
புரிதலைக் கொண்டு தான் உயிரின், மற்றும் மனிதனின் தோற்றம் விபத்து
போன்றதா, அல்லது தேவையினால் எழுந்ததா என்பதைப் புரிந்து கொள்ள
இயலும்!
அடுத்து, பூமிக்கிரகத்தில் உயிர் உள்ளது, அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும்
ஜீவி உள்ளது என்பதாலேயே சூரியக் குடும்பத்தின் பிற கிரகங்களிலும்
இன்னும் தொலை தூரங்களிலுள்ள எண்ணற்ற நட்சத்திரங்களைச்
சுற்றிலும் அமைந்துள்ள ( அமைந்துள்ளதாகக் கருதப்படுகின்ற ) கிரகங்க
ளிலும் உயிர் தோன்றியிருக்க வேண்டும்; அவற்றில், நம்மைப் போன்ற ஜீவி
களும், அல்லது அறிவில் நம்மை விஞ்சிய ஜீவிகளும் இருந்தாக வேண்டும்!
எனும் பார்வை முற்றிலும் அடிப்படையற்றதாகும், ஆகவே தவறானதாகும்!
ஏனெனில், பூமிக்கிரகம் உயிர் தோன்றுவதற்கு உகந்த சூழலைகொண்ட
ஒரு தனித்தன்மையான கிரகம் மட்டுமல்ல! மேலும், 'உயிர்-தோற்றம்'
என்பதும் தனித்தன்மையானது மட்டுமல்ல; அது "ஒரு - முறை" மட்டுமே
நிகழக்கூடிய அற்புதம் எனலாம்! இது மிகவும் 'அதீதமான -பார்வை' என்று
பலர் எண்ணலாம். ஆனால், பூமியில் உயிர் தோன்றியுள்ளதால்,
பிரபஞ்சத்தின் மூலை-முடுக்குகளில் எல்லாம் உயிர் தோன்றியிருக்கும்
எனும் மேலோட்டத்தின் உச்சமான 'பொதுமைப்படுத்தும்' பார்வையை
விட முன்னது 'அதீதமான -பார்வை' என்று சொல்லிவிட முடியாது!
விஞ்ஞானிகள் பூமியின் மீதான 'உயிர்-தோற்றம்' பற்றிப்பேசும் போது அது
'தற்செயலானது', 'சந்தர்ப்பவசமானது', 'விபத்து போன்றது' என்கிறார்கள்!
அதே வேளையில், 'அதே' சந்தர்ப்பவசமான விபத்து பிற எல்லா கிரகங்க
ளிலும் நிகழ்ந்திருக்க வேண்டும்,அல்லது, நிகழ முடியும் என எதிர்பார்ப்பது
முரண்பாடானது என்பது எவ்வாறு அவர்களது 'விஞ்ஞான-மூளைகளுக்கு'
எட்டாமல் போனது? மேலும், அவர்களுடைய பார்வையில், பூமியில்
எவ்வாறோ உயிர் தோன்றிவிட்டது; அந்த 'உயிர்' (எதற்கோ?) மேன்மேலும்
பரிணமித்து, எவ்வாறோ, அறிவுள்ள (மனித)ஜீவியாக எழுந்து விஞ்ஞானம்
பேசுகிறது(! ); இனி, அதன் வேலை பிற கிரகங்களிலும், தொலைதூர வெளி
களில் என்னென்ன 'உள்ளது' , அல்லது 'இல்லை' என்பதை ஆரய்ந்தறிவது
மட்டுமே என்பது போல விஞ்ஞானிகளின் பார்வை அமைந்துள்ளது!
விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் எந்திரமாக, எல்லையற்ற ஒரு
பெரிய கால்பந்தாட்ட மைதானம் என்பதாகவே காண்பதாகத் தெரிகிறது!
அவர்களது 'விஞ்ஞானப்பார்வை' எவ்வளவு மேலோட்டமானதோ அவ்வள
விற்கு 'தட்டையானது'!
ஆனால், பிரபஞ்சம் என்பது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி
நிகழ்வுகளின், பொருட்களின் தொகுப்பு அல்ல! மாறாக, அது இடையறாத
நீண்ட-நெடும்-ஒற்றை-நிகழ்வின் தொடர்-வெளிப்பாடே ஆகும்! மேலும்,
அந்நிகழ்வு ஒப்பற்றதொரு இலக்கை, ஒரு மாபெரும் "ஒருமையை" நோக்கி
செல்கிற ஒன்றாகும்!
பிரபஞ்சத்தை, ஒரு அமைப்பாகக் காணும் போது, அது பண்பின் அடிப்படை
யில் வளர்ந்து செல்லும் "படிமுறை-அடுக்குகளைக்" கொண்ட மாபெரும்
"பரிணாமக் களமாக" உள்ளது. பிரபஞ்சத்தை, ஒரு இயக்கமாகக் காணும்
போது, அது ஒரு மாபெரும் "பரிணாம இயக்கமாக" உள்ளது!
'பெரு-வெடிப்பி'லிருந்து சக்திப் பொழிவாக வெளிப்பட்டு, அதையடுத்து
எளிய அணுத்துகள்களாகி, அணுத்துகள்கள் ஒன்றிணைந்து 'நெபுலா'
எனும்மேகத்திரளாகச் சுற்றிச் சுழன்று உடு-மண்டலங்களாகி (galaxies)
அவற்றிலிருந்து நட்சத்திரங்களாக உருப்பெற்று, நட்சத்திரங்களிலிருந்து
கிரகங்கள் பிரிந்து, குளிர்ந்து, 'உயிர்' தோன்றுவதற்கு உகந்த சூழலைக்
கொண்ட ஒரு கிரகத்தை (தெரிவு செய்தது போல), பூமியில் அமினோ
அமிலங்கள் மற்றும் புரதங்கள் உருவாகிட, அவற்றிலிருந்து முதல் ஒரு
செல் 'உயிர்' தோன்றிட; அவ்வுயிர் தொடர்ந்து பரிணமித்து ஊர்வன,
பறப்பன, பாலூட்டி என கிளை கிளையாகப் பிரிந்து, பாலூட்டி எனும் கிளை
யில் 'வானரம்' எனும் நிலையிலிருந்து உயர்ந்து, சிந்திக்கும் திறனுள்ள,
"சுய-உணர்வு"ள்ள மனித-ஜீவியாக எழுந்து - தற்போது, என்ன செய்வது?
எந்தத் திசையில் - குறிப்பாக எந்த இலக்கு நோக்கிச் செல்வது ? என்பது
புரியாமல் எதையெதையோ செய்து கொண்டு, 'விஞ்ஞானம்', 'ஆராய்ச்சி'
என்கிற பெயரில் எதையெதையோ ஆராய்ந்து கொண்டு தடுமாறிக்
கொண்டிருக்கிறது 'சட மாகத் தோன்றி உயிரும் உணர்வுமுள்ள மனிதஜீவி
யாக மாறிய பிரபஞ்சம்!
விஞ்ஞானிகள் வேற்றுக்கிரக ஜீவிகளைப் பற்றிப் பேசும் போது , "அறிவு"
பற்றிப்பேசுகிறார்களே தவிர, அறிவுக்கு அடிப்படையான மனதை, இன்னும்
துல்லியமாகச் சொன்னால், உணர்வைப் பற்றிப் பேசுவதில்லை! ஏனெனில்
விஞ்ஞானிகள், மனதையோ, மனித-உணர்வையோ பெரிதாக எண்ணுவது
இல்லை! இன்னும் சில விஞ்ஞானிகளும், தத்துவசிந்தனையாளர்களும்
'எந்த' மனம், அல்லது உணர்வின் உதவியுடன் அனைத்தையும் அறிகிறார்
களோ,தங்கள் விஞ்ஞான, தத்துவ ஆராய்ச்சிகளைமேற்கொள்கிறார்களோ
'அந்த' உணர்வையே மறுக்கவும் செய்கிறார்கள்! இது உணர்வே உணர்வை
மறுக்கும் "சுய-தோற்கடிப்பான" செயலாகும்! இவர்களுக்கு பரிணாமம்
பற்றி யாதொரு உருப்படியான புரிதலும் இல்லை! மேலும் 'சடம்', 'உயிர்'
'உணர்வு' ஆகிய அம்சங்களுக்கிடையேயான வித்தியாசமும், மேலும்
'உயிர்' மற்றும் 'உணர்வின்' பரிணாம ரீதியான முக்கியத்துவமும்,
அதனுடைய விசேடத்தன்மையும் இவர்களுக்குப் புரியவில்லை!
இவர்களுக்கு, உயிரையும்,உணர்வையும் விட, சடப்பொருளும் அதனாலான
சடப்பிரபஞ்சமும் மட்டுமே பெரிதாகத் தெரிகின்றன! இவர்கள் உயிரையும்,
உணர்வையும் பௌதீகச்சடப்பொருளிலிருந்து பெறப்பட்ட, வருவிக்கப்பட்ட
இரண்டாம்-பட்ச விளைவுகள் என்பதாக அனைத்தையும் பொருளின்
சொற்களுக்குச் சுருக்கிவிடத் துடிக்கின்றனர்!
ஆனால், சடப்பொருளைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு ஆரம்பித்த
பரிணாம நிகழ்வு முறையானது உயிர், உணர்வு ஆகிய உயர் வளர்ச்சிக்
கட்டங்களை எட்டிய பிறகு, தற்போது, மனித-உணர்விலிருந்து உணர்வின்
இறுதி நிலையான "முழு-உணர்வு", அல்லது "பேருணர்வு" நிலையை மனித
உணர்வின் உள்ளேயும் ஊடேயுமாகச் சென்று அடைய எத்தனிக்கிறது!
ஏனெனில், பிரபஞ்சத்தின் "ஒருமை" பேருணர்வில் தான் அமைந்துள்ளது!
பரிணாம நிகழ்வுமுறையானது சடப் பொருளைக் கடந்து வெகு தொலைவு
சென்று விட்டது! இனி அது ஒரு போதும் பின்னோக்கி சடப்பொருளின்
நிலைக்குத் திரும்பாது! உண்மையில், "உயிர்-தோற்றம்" என்பது வெறுமனே
பூமிக்கிரகத்தைச் சார்ந்ததோ, சேர்ந்ததோ அல்ல! மாறாக, ஒட்டு மொத்த
பிரபஞ்சத்தைச் சேர்ந்ததாகும் (Universal).விஞ்ஞானிகளின் கணக்குப்
படி பிரபஞ்சத்தின் பிறப்பைக்குறிக்கும் "பெரு-வெடிப்பு" நிகழ்ந்து கிட்டத்
தட்ட 1500 கோடி ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், பிரபஞ்சம் எனும்
பரிணாம இயக்கமானது தற்போது எவ்விடத்தில் மையம் கொண்டுள்ளது
என்பது பற்றிய யாதொரு 'தெளிவான புரிதலும்' விஞ்ஞானிகளிடம் இருப்ப
தாகத் தெரியவில்லை! மேலும், பிரபஞ்சத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி
என்பது எவ்விடத்தில், எவ்வடிவில் வெளிப்படவுள்ளது என்பது பற்றியும்
அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை! ஏனெனில், பிரபஞ்சத்தை அவர்கள்
நோக்கும் விதம் மிகவும் மேலோட்டமானது, மற்றும் தட்டையானது! ஆனால்,
நாம் அறிந்து கொள்ள விரும்பினால், பிரபஞ்சமானது ஒரு பரிணாம
இயக்கம் என்கிற வகையில், அது தற்போது உணர்வுப் பூர்வமாக உள்ள
ஒவ்வொரு தனிமனிதனின் "உணர்வுத்-தளத்தில்" தான் மையம் கொண்
டுள்ளது! மேலும், பிரபஞ்சத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சி நிலைகள் வெளிப்
படக்கூடிய இடமும் ஒவ்வொரு தனிமனிதனின் "உணர்வுத்-தளமே" ஆகும்!
ஏனெனில், பரிணாமம் என்பது இனி உணர்வுப்பரிணாமமே!
பூமியில், உயிர் தோன்றியதையும், அதன் தொடர்ச்சியாக மனித ஜீவி தோன்
றியதையும், விஞ்ஞானிகள் தற்செயல் நிகழ்வாக, ஒரு விபத்து போன்ற
விளைவாகவே காண்கிறார்கள். உண்மையில், அது தற்செயல் நிகழ்வோ,
விளைவோ அல்ல! அதே வேளையில், உயிரையும், மனித ஜீவியையும்
பூமியில் உருவாக்கியே தீர வேண்டும் என்பதான எவ்வொரு எதிர்பார்ப்பும்,
திட்டமும் பரிணாமத்திற்குக் கிடையாது!. மாறாக, பரிணாமத்தின்
உள்ளார்ந்த நோக்கத்தை அடைந்திடும் நெடிய வழிமுறையில் வெளிப்பட்ட
கருவிகளைப்போன்ற, இடை-நிலை நிஜங்களே உயிரும், மனித ஜீவியும்!
ஆனால், பூமியில் நாம் தோன்றிவிட்டோம், இங்கு நாம் இருக்கிறோம்
என்பதை தெளிவாக உணர்கிறோம்! நாம் சுய-உணர்வுள்ள ஜீவிகளாகவும்,
சிந்தித்து செயல்படக் கூடியவர்களாகவும் உள்ளோம் எனும் பட்சத்தில்
பூமியின், பிரபஞ்சத்தின் நிலைமையும் அடியோடு மாறிவிட்டது எனலாம்!
ஆம், உணர்வற்ற தன்மையில் இயங்கி வந்த பிரபஞ்சம், உணர்வுள்ள மனித
ஜீவியினால், தற்போது உணர்வு பெற்று விட்டது! இனி பிரபஞ்சத்தின்
பரிணாம இலக்கானது வெகு விரைவாக எட்டப்படும்!
"உணர்வு" என்பது பிரபஞ்சத்திலுள்ள பலவகைப்பட்ட பொருட்கள் மற்றும்
அம்சங்களில் ஒன்று அல்ல! அதுவே 1500 கோடி ஆண்டுகளின் நெடிய
பரிணாம உழைப்பின் உயரிய, மையமான விளைவு ஆகும்! அதுவே
பிரபஞ்சத்தை அர்த்தப்படுத்தும், முழுமைப்படுத்தும் ஒரே அம்சமாகும்!
ஆம், மனிதன் இல்லையேல் பிரபஞ்சத்தை, "என்ன?", "ஏது?", "ஏன்?", "எதற்கு?",
என்றெல்லாம் கேட்பதற்கும், அறிவதற்கும் வாய்ப்பில்லாமல் போயிருக்கும்!
மேலும், தற்போது பூமியில் 740 கோடி மனிதஜீவிகள் உள்ளனர். ஆனால்,
அதில் எல்லா மனிதர்களும் பிரபஞ்சத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை, அறிவ
தில்லை, ஆராய்வதில்லை! ஒட்டு மொத்த மனிதக் கூட்டத்தில் ஒரு சதவிகி
தத்திற்கும் குறைவான மனிதர்கள் மட்டுமே பிரபஞ்சத்தை அறிபவர்களாக
உள்ளனர். அதிலும், மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்கள்
மட்டுமே முறையான, சரியான அணுகுமுறையை மேற்கொள்பவர்களாக
ஆகிறார்கள்! ஏராளமானோர், "சூரியன் கிழக்கே உதித்தால் என்ன, மேற்கே
மறைந்தால் என்ன?" என்கிற போக்கில் அன்றாட நடைமுறை அலுவல்களில்
மூழ்கிக்கிடக்கின்றனர்! இதிலிருந்து தெரிவது என்னவென்றால், உணர்வுக்
கான அடிப்படையை எல்லா மனிதர்களும் கொண்டிருந்தாலும், எல்லா
மனிதர்களும் உணர்வுக்கு வருவதில்லை; உணர்வுக்கு விழிப்பதில்லை!
இதைப்போலவே, பிரபஞ்சத்தில் பூமியையொத்த கிரகங்கள் எண்ணற்றவை
யாக இருந்தாலும், அவையெல்லாவற்றிலும் உயிர் தோன்றிடுவதில்லை!
மேலும், உயிர்த்தோற்றம் என்பது 'அதற்குகந்த சூழலை' மட்டுமே சார்ந்தது
மில்லை! அதாவது, ஒரு கிரகத்தில் "உகந்த சூழல்" உள்ளது என்பதாலேயே
அதில் 'உயிர்' தோன்றிடவேண்டும் என்கிற கட்டாயமோ, விதியோ இல்லை!
இவ்விஷயத்தில், "ஒரு சீரான விதி" (The Law of Uniformity) செல்லுபடி
யாவதில்லை! மாறாக, அதற்கு பதிலாக "தனித்தன்மை விதி" (The Law of
Uniqueness)தான் ஆட்சி செலுத்துகிறது! அதாவது, பிரபஞ்சத்தில் உள்ள
எண்ணற்ற வெவ்வேறு சூரிய- மண்டலங்களைச் சுற்றிலும் உள்ள 'வேற்று'
கிரகங்களிலும் உயிர் தோன்றுவதற்கு உகந்த சூழல், அதாவது 'ஒரு சீரான'
தன்மை' (uniform conditions)அமைந்திருக்கலாம்; அதனால், அங்கெல்
லாம் உயிர் தோன்றிடவேண்டும் என்கிற கட்டாயமோ, அவசியமோ இல்லை!
'உயிர் தோன்றுவதற்கு உகந்த சூழல்' என்பது ஒரு 'கருவி' மாத்திரமே தவிர
அதுவே உயிரைத் தோற்றுவிக்கும் "காரணகர்த்தா"அல்ல!உயிர் தோன்றுவது
என்பது பரிணாம-அவசியத்தைச் சார்ந்தது! பூமிக்கிரகத்தில் உயிர் தோன்றி
யுள்ளதற்கான காரணம், "பரிணாம- அவசியம்" உள்பட அனைத்துச்
சாதகமான அம்சங்களும், சூழலும், காரணிகளும் பொருந்தியமைந்திட்ட
"தனித்தன்மை"யே (The Law of Uniqueness) ஆகும்! இதன் அர்த்தம்
இங்கு பூமியில் மட்டுமே 'உயிர்த்தோற்றம்' நிகழ்ந்துள்ளது என்பதே!
நல்லது, 'உயிர்-தோற்றத்திற்கான' தனித்தன்மை ஒருபுறமிருக்கட்டும். நாம்
இப்போது "உணர்வுத் தோற்றத்தை"ப் பற்றிப் பார்ப்போம். நமது பூமிக்கிரகத்
தில் இதுவரை கணக்கெடுக்கப்பட்டதில், 5000 கோடிகளுக்கும் அதிகமான
பல்வேறு உயிரினங்கள் உள்ளதாகத் தெரிகிறது! ஆனால், அவற்றில், ஒரே
ஒரு இனமாகிய "மனிதன்" மட்டுமே தனித்தன்மையான "சுய-உணர்வை"
யும், சிந்திக்கும் திறனையும் கொண்ட ஜீவியாக விளங்குகிறான்! அவனிடம்
மட்டுமே மொழித்திறனும் உள்ளது! 5000 கோடி உயிரினங்களில் மனிதன்
மட்டும் எவ்வாறு உணர்வுள்ளவனாக எழுந்தான் என்பது அவனது தனித்தன்
மையை எடுத்துக்காட்டுகிறது எனலாம்! பிற-உயிரினங்களைப் பொறுத்த
வரை 'மனிதன்' ஒரு 'வேற்றுக்கிரக ஜீவி'யே எனலாம்!பிற-உயிரினங்களைப்
பொறுத்தவரை 'மனித இனம்' தனித்தன்மையானது என்றால், மனித இனத்
திலேயே தனித்தன்மை வாய்ந்த தனிமனிதர்கள் உள்ளனர். ஒரு வகையில்
ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகள்; புத்தர்,விவேகானந்தர், அரவிந்தர் ஆகிய
ஞானிகளை 'வேற்று கிரக ஜீவிகளே' எனலாம்! ஏனென்றால்,740 கோடி மனித
ஜீவிகளில் இம்மாமனிதர்கள் வெகு அரிதானவர்கள்!
உண்மையில், வேற்று கிரக ஜீவிகளை சிரமப்பட்டு நாம் தேடத்தேவை
யில்லை! அப்படி ஒரு ஜீவியும் எங்கேயும் இல்லை! அப்படியே இருந்தாலும்
அதனால் நமக்கு பாதகமுமில்லை, சாதகமும் இல்லை எனலாம்! ஒருவேளை
வேற்று- கிரக ஜீவிகள் இருந்தால், அதுவும் உண்மையிலேயே அவர்கள்
அறிவில் சிறந்தவர்களாக, விஞ்ஞான-தொழில் நுட்பத்தில் வல்லவர்களாக
இருந்தால், அவர்கள் நம்மைச் சந்திக்கவோ, நம்மைத் தொடர்புகொள்ளவோ
மாட்டார்கள்! முதலிடத்தில், தொலைதூர விண்வெளிப்பயணம் (Inter-
stellar Travel) சாத்தியமில்லை! அப்படியே அவர்களுக்கு அது சுலப
மாகச் சாத்தியமானாலும் அவர்கள் அவர்களது இடத்தை விட்டு எங்கும்
பயணிக்க மாட்டார்கள்! ஏனெனில், உண்மையிலேயே அவர்கள் அறிவில்
சிறந்தவர்களாயிருந்தால், அவர்கள் பரந்து விரியும் இப்பிரபஞ்சத்தில்
ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதை விட ஒட்டு மொத்த
பிரபஞ்சத்தை விட்டு வெளியேறுவதையே தங்கள் தலையாய இலக்காகக்
கொள்வார்கள்!
வேறு ஒரு வகையிலும், நாம் வேற்று கிரக ஜீவிகளை தேடத்தேவையில்லை!
அதாவது "அறிவு" தான் நம்முடைய அளவுகோலாக இருக்கும் பட்சத்தில்
அறிவின் அனைத்து நிலைகளும் இங்கு பூமியிலேயே உள்ளன! ஓரறிவு முதல்
ஐந்தறிவு வரை எட்டிய பலவகைப்பட்ட விலங்கு ஜீவிகளும்; ஆறறிவின் நுனி
யைத்தொட்ட சாமானிய மனித ஜீவிகளும்; ஏழாம் அறிவின் எல்லை வரை
சென்ற ஐன்ஸ்டீன்களும்; எட்டாம், ஒன்பதாம் அறிவைத் தாண்டி, பத்தாம்
அறிவைப் பஞ்சணையாகக் கொண்டு "அறிதுயிலில்" ஆழ்ந்த புத்தர்களும்,
சித்தர்களும், ஞானிகளும் இங்கு பூமியிலேயே உள்ளனர்! அறிவு, பேரறிவு,
இன்னும், உயர் பேரறிவு, இறுதி முழு ஞானம் தான் நம்முடைய இலட்சியமாக
இலக்காக இருக்குமானால், அதற்கு, நாம் வேற்று-கிரகஜீவிகளைத் தேடிச்
செல்லவேண்டாமே! மாறாக, நாம் ஒவ்வொருவரும் நம் உணர்வுக்கு விழித்து,
உணர்வை உணர்வுகொண்டு, மேன்மேலும் உணர்வில் ஆழ்தல் போதுமே!
இன்னும் சொல்லப் போனால், 'உயிர்த்தோற்றம்' என்பது பிரபஞ்சத்தில்
எங்கோ ஒரு மூலையில், ஒரு ஓரத்தில் நிகழும் தனிப்பட்டதொரு வட்டார
-நிகழ்வு(Local Phenomenon)அல்ல! மாறாக, அது ஒட்டு மொத்த பிரபஞ்சத்
தினுடைய ஆர்வத்தின் மையமான நிகழ்வே (Universal Phenomenon)
எனலாம்! அதாவது, பூமிக்கிரகம் மற்றும் சூரிய-மண்டலமும் அவற்றின் இட-
அமைவில், பிரபஞ்சத்தின் 'மையத்தில்' இல்லாமலிருக்கலாம்! ஆம், ஒரு
மரத்தின் பூக்கள், மற்றும் பிஞ்சுகள், அம்மரத்தின் மையப்பகுதியில் தான்
தோன்றிட வேண்டும் என்கிற 'கட்டாயம்' ஏதுமில்லை! மேலும், ஒரு மரத்தின்
பூக்களும், பிஞ்சுகளும் அம்மரத்தின் மையத்தில் அல்லாமல் ஓரத்தில் தோன்
றிவிட்டால் அவை தமது முக்கியத்துவத்தை இழந்துவிடுவதுமில்லை!
அடுத்து, உணர்வுள்ள மனிதஜீவிகள் தோன்றிட வேண்டுமெனில், முதலிடத்
தில், உயிருள்ள ஜீவிகள் தோன்றிட வேண்டும்! உயிர்ப் பரிணாமம் தோன்றி
டாவிட்டால், 'பிரபஞ்சம்' வெறுமனே பௌதீகச் சடப் பிரபஞ்சமாகவே தனது
எந்திரத்தனமான இயக்கத்தில் இருந்து கொண்டிருக்கும்! உணர்வில்லை
யெனில், அதற்கு அடிப்படையாக ' உயிர்-தோற்றம்' இல்லையெனில்,
இம்'மாபெரும்' பிரபஞ்சத்தை உணர்வதற்கும், அறிவதற்கும் ஒரு நாதியும்
இருக்காது! ஆகவே, "உணர்வின்" மையத்துவத்தையும்,முக்கியத்துவத்தை
யும் மறுப்பது, அல்லது குறைத்து மதிப்பிடுவது என்பது முட்டாள்தனமானது!
இவ்விடத்தில், பூமியில் "உயிர்" தோன்றியது 'தற்செயலானது', 'விபத்து போன்
றது' என்றெல்லாம் சொல்லிக்கொண்டு சடப்பிரபஞ்சத்தை தலைக்கு மேல்
தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடிக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளும்,
பொருள்-முதல்-வாதிகளும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! அதாவது,
முதலிடத்தில் 'சடப்பொருள்' ஏன் பரிணமிக்கிறது? ஏன்,எதற்காக, சடப்பொரு
ளானது 'உயிர்' பெற்று (முதலில் ஒரு 'அமீபா'வாக)எழ வேண்டும்? பிறகு அந்த
உயிரியல் பரிணாமத்தின் தொடர்ச்சியாக உணர்வுள்ள ஜீவியாக 'மனிதன்'
ஏன் எழ வேண்டும்? என்பன போன்ற கேள்விகளையெல்லாம் கேட்டு அவற்
றிற்கான பதில்களைக் கண்டறிந்தாக வேண்டும்! ஆம், சடப்பொருள் பரிண
மிப்பது என்பது கட்டாயமானது - அது சடப்பொருளின் உள்ளார்ந்த விதி
யாகும்! ஏனெனில், 'சடப்பொருள்' என்பது எவ்வகையிலும் தன்னில் தானே
தோன்றிய மெய்ம்மையோ, அல்லது அசலானதோ, அல்லது இறுதியானதோ
அல்ல! மாறாக, அது 'சடமல்லாத' வேறொரு "மூல-மெய்ம்மை" யின் நிலை
மாற்றத்தினால் வெளிப்பட்ட மெய்ம்மையாகும்! ஆக, பரிணாமம் என்பது
'சடப்பொருளானது' தான் எந்த "மூல-மெய்ம்மை" யின் நிலை-மாற்றத்தின்
விளைவோ, அந்த "மூல-மெய்ம்மை" யின் நிலையை, அதாவது 'சடப்பொருள்'
தனது அசலான நிலையை 'திரும்ப' அடைவதற்கான ஒருவழிமுறையே தவிர
வேறில்லை!
அதேவேளையில், 'மனித- உணர்வு' என்பது உணர்வின் இறுதி நிலையோ,
அல்லது முழுமையோ அல்ல! என்றாலும், மனித-உணர்வின் வழியாக
மட்டுமே உணர்வின் முழுமையைச் சென்றடைய இயலும்! உண்மையில்,
'மனித-உணர்வு' என்பது மனிதனுடைய உணர்வு அல்ல; அது பிரபஞ்சத்தின்
உணர்வே ஆகும்! இன்னும் சொல்லப்போனால், பிரபஞ்சம் தான் தற்போது
உணர்வாக மாறியுள்ளது! தொடக்கத்தில், பிரபஞ்சமானது உயிரற்ற, உணர்வு
மற்ற வெறும் பௌதீகச் 'சடப்' பொருளாக இருந்தது. பிறகு ஒரு கட்டத்தில்
அது உயிராக மாறியது. தற்போது, அது மனிதனாக, மனிதனுள் உணர்வாக
எழுந்துள்ளது! இப்போது, மனிதன் (ஒவ்வொரு மனிதனும்) தான் பிரபஞ்சம்!
மனித-உணர்வின் அடுத்தக்கட்டம் "முழு-உணர்வாக" மலர்வது தான்!அதுவே
பிரபஞ்சத்தின் முழுமையும்! ஆம், "முழு-உணர்வு" தான் பிரபஞ்சத்தின்
"மூலம்" ஆகும்! ஆம், "முழு-உணர்வு" தான் ஒரு "பெரு-வெடிப்பு" வழியாக
பௌதீகப் பிரபஞ்சமாக மாறியது!
முடிவுரையாக, நாம் இங்கு சில முக்கிய அம்சங்களைத் தொட்டுச் செல்வோம்.
ஆம், வேற்றுக்கிரக ஜீவிகளைத் தேட வேண்டாம்; இன்னும் அவர்கள் இருக்கக்
கூடும், அல்லது இருக்கிறார்கள், என்றெல்லாம் கற்பனைகளில் வாழவேண்
டாம்! ஏனெனில், அப்படி எவரும், எதுவும் இல்லை! ஆகவே, நாம் இங்கே பூமிக்
கிரகத்தில் தன்னந்தனியர்களாகத்தான் உள்ளோம்! இது தான் நம்மைப்
பற்றிய உண்மை நிலை! மேலும், மனிதர்கள் தங்களைச் சுற்றிலும் பலவகைப்
பட்ட உறவுகளைக் கொண்டிருந்தாலும், ஒரு பெரும் சமூகத்தின் மத்தியில்
இருந்தாலும், உளவியல் பூர்வமாகவும், உணர்வுப் பூர்வமாகவும், உயர்-
பரிணாம விதிகளின் படியாகவும், ஒவ்வொரு மனிதனும் தாம் அடைந்திட
வேண்டிய இறுதி இலக்கான முழுமைக்காகவும்; இப்பூமியில் மட்டுமல்லாமல்
ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு மனிதனும் தனியனே, தன்னந்
தனியனே! ஒரு பேச்சுக்காக, வேற்றுக்கிரகஜீவிகள் இருக்கிறார்கள் என்று
வைத்துக்கொண்டாலும், அவர்களால் நமக்கு ஒரு இலாபமும் இல்லை!ஏனென்
றால், அவர்களிடமிருந்து, அல்லது அவர்களைப்பார்த்து நாம் கற்றுக் கொள்ள
ஒன்றும் இல்லை! நம்மை விட அவர்கள் அறிவில், உணர்வில் குறைந்தவர்
களாக, தவளைகளைப்போல் இருந்தால் எதைக் கற்றுக்கொள்வது? அல்லது
அவர்கள் நம்மைவிட அறிவில், உணர்வில் நிறைந்தவர்களாக, புத்தர்களைப்
போல இருந்தால் எதைக் கற்றுக்கொள்வோம்? ஆனால், வேற்றுக்கிரகஜீவிகள்
இல்லை என்ற நிலையில் நமக்கு ஒரு நஷ்டமும் இல்லை; மாறாக, ஒருஇலாபம்
உள்ளது! ஆம், "பிரபஞ்சமளாவிய-முக்கியத்துவம்"(Universal-Importance)
தான் அது! "தன்னை உணர்ந்தவர்க்கு" இது முழுமையாகப் பொருந்தும்!
மா.கணேசன்/ 8.04.2016