
ஒரு குட்டி கற்பனைக் கதை!
(the Ultimate Transformer)
-Final Part-
மகன்- உருமாறி (son-transformer):
அப்பா எனக்கு பயமாயிருக்கு !
தந்தை-உருமாறி (father-transformer):
மகனே, இதில் பயப்பட என்ன இருக்கு?
நீ ஒரு உருமாறி, உனது பிறப்பே அப்படித்தான்!
மாறிக் கொண்டேயிருப்பது (பரிணமித்துக்
கொண்டேயிருப்பது) தான் உனது இயல்பு!
பயப்படத்தேவையில்லை!
மகன்-உருமாறி :
அப்பா, நான் அதற்காகப்பயப்படவில்லை!
அனைத்து மாற்றங்களையும் தீர்த்து முடித்து
விட்டேன், இனி மாற்றமடைய ஏதுமில்லை
என்பது தான் என் பயம்!
தந்தை-உருமாறி :
அருமை! இப்போதுதான் உண்மையிலேயே
நீ என் மகன். நீ ஒரு முழுமையான உருமாறி,
என்னைப்போலவே! Yoy are an Ultimate
Transformer like me!
(கடைசியாக, தந்தை-உருமாறி இவ்வாறு கூறியதாக ஒட்டுக்
கேட்ட ஒரு சிலர் சொன்னார்கள் :
"நானும் என் மகனும் ஒன்றாயிருக்கிறோம்!"
(I and my son are One!)
---*---
கடவுள் ஒரு உருமாறி, அவர் ஒரு மந்திரவாதியல்ல!
இக் கண்டுபிடிப்பு அதி முக்கியமானது, இவ்வுண்மையை நாம்
சரியாகப் புரிந்து கொள்ளவில்லையெனில், நம்மால் பிரபஞ்சத்தையும்
அதில் நம்மையும், நமது வாழ்க்கையையும் அதன் அர்த்தம், மற்றும்
இலக்கையும் புரிந்து கொள்ள இயலாது. இது மிகவும் அடிப்படையான
உண்மையாகும். இதைத்தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் விஞ்ஞானம்,
தத்துவம், ஆன்மீகம், மற்றும் சமயங்கள் எதிர் கொண்டுவரும் பெரும்
கேள்விகளையும், பிரச்சினைகளையும் ஒருபோதும் தீர்க்க இயலாது!
இதுதான் அந்த உண்மை: ஆம், கடவுள் ஒரு உருமாறி; அவர் ஒரு
மந்திரவாதியல்ல ! தொடக்கத்திலேயே தெளிவாகப் புரிந்து கொள்ள
வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், 'கடவுள்' என்பது
மூல மெய்ம்மையைக் குறிக்கும் ஒரு சொல் அல்லது குறியீடு என்பதே.
கிட்டத்தட்ட கணிதத்தில் நமக்குத் தெரியாத ஒரு காரணியை, 'x'
(எக்ஸ்) என்று வைத்துக்கொள்வதைப் போன்றதே. ஆம்,
மூல-மெய்ம்மையை நேரடியாக உணர்ந்தறியாத வரை 'கடவுள்'
எனும் சொல் உள்ளீடற்ற ஒன்றே!
கடவுள் எனும் மூல-மெய்ம்மை பற்றிய நமது இந்த ஆய்வில் முதலில்
நாம் காரண-காரிய அறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் புரிந்து
கொள்ள முனைகிறோம். அடுத்து, அதே நேரத்தில் மிகவும் நேரடியாக
உணர்வுப் பூர்வமாகவும் (இதை நாம் ஆன்மீக-அனுபூதி அணுகுமுறை
எனலாம்) முனைகிறோம். முதல் அணுகுமுறை, நெருப்பைத் தொடாமல்
தொலைவிலிருந்து அதன் தன்மையை அறியும் முறையாகும்.
இரண்டாவது, நெருப்பைத் தொட்டு சுட்டுக்கொண்டு நேரடியாக
அறிகிற அனுபவப் பூர்வமான அறிதல் முறையாகும்.
நாம் இப்போது நேரடியாக விஷயத்திற்கு வருவோம். ஆம், கடவுளின்
பிரதான பிரச்சினை என்னவென்றால், அவரால் எதையும் படைக்க
முடியாது என்பது தான்! ஆனால், அவரால் எதுவாகவும் மாறிட முடியும்!
அதே வேளையில் அவரால் ஒரு சிறு கொசுவைக்கூட படைக்க முடியாது!
இந்த நிலைமையில், எவ்வாறு அவர் ஒரு மலையை அல்லது இவ்வளவு
பிரம்மாண்டமான விரிவடையும் பிரபஞ்சத்தைப் படைத்திருக்க முடியும்?
முடியாது! ஆனால், அவர் விரும்பினால் அவரால் ஒரு கொசுவாக மாற
முடியும். அதே வேளையில், அவர் ஒரு கொசுவாக மாறிவிட்ட பிறகு
அக் கொசுவின் நிலையிலிருந்து மீண்டும் தனது அசலான நிலைக்குத்
திரும்புவது கடினம் ! ஆகவே தான் அவர் மிக அடிப்படையான
அடிப்படை அணுத்துகள்களாக ஒரு "பெரு-வெடிப்பு" மூலமாக தன்னை
மாற்றிக்கொண்டார் ! . . . .
இவ்வாறில்லாமல், நம்முடைய பழைய பார்வையின்படி கடவுள் உலகைப்
படைத்தார் என்பதாகக் கொண்டால், அச்செயல் 'படைத்தவன்-'படைப்பு'
எனும் இருமையை ஏற்படுத்தியிருக்கும்! அதோடு, 'படைப்பு' இருக்கும்
பட்சத்தில் 'படைத்தவனும்' இங்கு இப்பிரபஞ்சத்தில் எங்காவது இருந்தாக
வேண்டும் அல்லவா? ஆனால், அப்படி ஒருவரும், ஒரு கடவுளும் கண்ணுக்கு
எட்டிய ஒளி-ஆண்டுகள் தொலைவு வரையிலும் தென்படவேயில்லை!!
இப்போது, நாம் விதிகளுக்கு வருவோம். இதுதான் அடிப்படை விதி : ஆம்,
வித்து இல்லாமல் விருட்சம் இல்லை! கடவுள் அல்லது மூல-மெய்ம்மை
எனும் வித்து மாபெரும் தியாகத்தை மேற்கொண்டு மறைந்து மாபெரும்
விருட்சமாக, விரிவடையும் பிரபஞ்சமாக எழுந்துள்ளது! இப்போது நாம்
அந்த விருட்சத்தின் ஒரு விசேடமான கிளையின், ஒரு விசேடமானதொரு
சிம்பின், ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்து கொண்டு
அந்த விருட்சத்தின் மூலத்தைப்பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறோம்!
இப்போது நமது பிரச்சினை இதுதான் : மூலம் என்பது விருட்சத்தின்
எப்பகுதியில் உள்ளது? அதை எங்கே சென்று கண்டு பிடிப்பது -
விருட்சத்தின் அடிவேரிலா அல்லது மேலே அவ்விருட்சத்தின் முடியிலா?
யாரோ சொல்லிச்சென்று விட்டார்கள் என்பதற்காக, காலம்காலமாக
நாமும் கிளிப்பிள்ளைகளைப்போல அதே கருத்தையே, கோட்பாட்டையே
திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டி தத்துவம் பேசிவருகிறோம். அது என்ன
கருத்து என்றால், "இருப்பின் அடித்தளம்" (The Ground of Being)
என்பதும், அதையே சற்று மாற்றி "அடியோட்டமான ஒருமை"
(The Under-lying Unity)என்பதுமே யாகும்.
"இருப்பின் அடித்தளம்" அல்லது, "அடியோட்டமான ஒருமை" என்பதாக
விருட்சத்தின் அடிப்பாகத்தில், அதன் ஆணி வேரில் ஏதுமுள்ளதா? ஐயா,
வேரும் விருட்சமும் வேறு வேறு அல்ல! வித்தாகிய 'மூலம்' மறைந்ததால்
தான் விருட்சம் தோன்றியது. ஆக, விருட்சத்தின் மூலம் விருட்சத்தின்
எப்பகுதியிலுமிருக்க முடியாது! மாறாக, விருட்சத்தின் முழுமையைக்
குறிக்கும் கனியினுள்ளே தோன்றிடும் வித்தில் தான் விருட்சத்தின்
'மூலம்' வெளிப்பட இயலும் ! சொல்லப்போனால், விருட்சத்தின் மூலம்
என்பது விருட்சத்திற்கு வெளியேதான் வெளிப்படுகிறது! விருட்சம் தான்
கனியை விளைவிக்கிறது என்ற போதிலும் ஒரு வகையில், கனி என்பது
விருட்சத்தின் முடிவைக் குறிப்பதாயுள்ளது எனக் காணலாம் ! ஆம்,
வித்தின் வழியாக விருட்சமானது தன்னைத்தானே கடந்து சென்று
விடுகிறது! ஒரு விருட்சத்தின் காயானது முற்றிக் கனியாகும் வரை
மட்டுமே அது விருட்சத்தின் பகுதியாக விளங்குகிறது! காய் முற்றிக்
கனியான பிறகு கனியானது விருட்சத்திலிருந்து விடுபட்டு விடுகிறது!
விருட்சத்தின் "ஒருமை" அதன் வேரிலோ, அடிமரத்திலோ, கிளைகளிலோ
இலைகளிலோ, பூக்களிலோ, பிஞ்சுகள் அல்லது காய்களிலோ
இருப்பதில்லை. மாறாக, விருட்சத்தின் "ஒருமை" அதன் கனிகளில்தான்
அடங்கியுள்ளது!
பிரபஞ்சம் என்பதும் ஒருவகை விருட்சமே, அதன் பிஞ்சுகளும், காய்களும்
தான் நாம்! நாம் ஒவ்வொருவரும் உணர்வில் முற்றி "முழு-உணர்வு" எனும்
கனி நிலையை எட்டும் போது பிரபஞ்சத்தின் ஒருமை எட்டப்படுகிறது.
ஆம், பிரபஞ்சத்தின் ஒருமை அடியோட்டமாக (under-lying) அதன்
அடிப்பாகத்தில் இல்லை. மாறாக, அதன் முடிப்பாகத்தில் (over-lying),
அதாவது உச்சியில் மட்டுமே வெளிப்படுவதாயுள்ளது.
ஒரு விருட்சம் பல பாகங்களை-- அடிமரம், கிளைகள், இலைகள், பூக்கள்,
பிஞ்சுகள், காய்கள் ஆகியவற்றைக் கொண்டதாக பன்மை நிலையில்
உள்ளது. ஆனால், அதன் கனியானது(வித்து) பகுதிகளோ, பாகங்களோ
எதுவும் இல்லாமல் ஒருமை நிலையில் முழுமையைக் குறிப்பதாகத்
திகழ்கிறது! அதே நேரத்தில், ஒரு வித்தானது ஒரு முழு விருட்சத்திற்கு
ஈடாக, அதாவது முழு விருட்சத்தையும் தன்னுள் கொண்டுள்ளதாக
உள்ளது!
ஒரு விருட்சம் எண்ணற்ற காய்களை உருவாக்குகிறது. அதன் ஒவ்வொரு
காயும் முற்றிக் கனியாகும் போது அவ்வழியே அவ்விருட்சமானது
முடிவிற்கு வருகிறது (முழுமையடைந்து விடுகிறது). அதைப்போலவே
ஒவ்வொரு புத்தனுடனும் ஒரு பிரபஞ்சம் முடிவிற்கு வருகிறது !
ஒரு விருட்சமானது தனது ஒவ்வொரு கனியின் வழியாகவும் தனது
முழுமையைத்தேடி தன்னைக் கடந்துசெல்வதாயுள்ளது. ஒரே விருட்சம்
பல கனிகளின் வழியே தன்னைக் கடந்து செல்வதை நாம் "பல்முனை-
கடப்பு நிலை" (Multiple Transcendence) என்றழைக்கலாம்.
ஆம், ஒருமை, முழுமை, உண்மை, மெய்ம்மை, அன்பு, கடவுள் ஆகிய
இறுதியான அம்சங்கள் எதுவும் நம் பிரபஞ்சத்தின் பகுதியாக
இருப்பதில்லை! ஒரு வகையில், இவை பிரபஞ்சத்தினுள்ளே
உட்-பொதிவாக, உள்ளுறையாற்றலாக அடங்கியுள்ளது எனக்
கொள்ளலாம் ! ஆனால், அவை "வெளிப்படு- மெய்ம்மைகள்"
(Emergent-Realities) ஆகும். அதாவது, அவை வெளிப்படும்
பட்சத்தில் மட்டுமே மெய்ம்மைகளாக, நிஜங்களாக ஆகின்றன.
அதேவேளையில், அவ்வாறு வெளிப்படும் போது அவை பிரபஞ்சத்தின்
பகுதியாகவோ, பாகமாகவோ இருப்பதில்லை!
ஆதிக்கும் ஆதியில் ஒரு மெய்ம்மை இருந்திருக்க வேண்டும். அதை
'கடவுள்' என்றோ, அனைத்தையும் விஞ்சிய 'சக்தி' என்றோ
குறிப்பிடுவதால், வணங்குவதால், வழிபடுவதால் மன -அளவில்
ஆறுதல் அடையலாமே தவிர எவ்வகை இறுதிப் பயனும் விளையாது!
மாறாக, அந்த மெய்ம்மை எத்தகையது என்பதை ஒவ்வொருவரும்
நேரே உணர்ந்து அடைந்திட வேண்டும். ஏனெனில், இது விஞ்ஞான
உண்மைகளைப் போன்றதல்ல. எவரோ ஒருவர் கண்டு சொல்வார்,
அதைக் கேட்டுக் கொண்டு வாளாவிருப்பதற்கு! ஒருவன் தனது பசிக்கு
இன்னொருவனை உண்ணச் செய்யமுடியாது. அவனவன் பசிக்கு
அவனவன் தான் உண்ண வேண்டும். அதைப்போலத்தான் அர்த்தம்
அறிதலும், உண்மை உணர்தலும் ! ஒவ்வொருவரும் நேரடியாக தன்னில்
தானே அறிந்தாக, உணர்ந்தாக வேண்டும்.
ஆக, ஆதிக்கும் ஆதியில் ஒரு மெய்ம்மை இருந்தது. அது தான்
மூல-மெய்ம்மை. அந்த மெய்ம்மை உருமாறியதன் விளைவாக முதலில்
இப் பௌதீகப் பிரபஞ்சம் எழுந்தது. அடுத்து அப்பௌதீகப்
பிரபஞ்சத்திலிருந்து, 'உயிர்' எனும் அம்சம் எழுந்தது. அதற்கடுத்து,
உயிர்க்கோளத்திலிருந்து மனிதனும், அவனுள் 'உணர்வு' எனும் அம்சமும்
வெளிப்பட்டது. இப்போது, பிரபஞ்சத்தை நாம் மிகச் சரியாகப் புரிந்து
கொள்ளவேண்டுமெனில், 'பிரபஞ்சம்' என்பது அதன் சாரத்தில்
எத்தகைய பண்பாக விளங்குகிறது என்பதைத் துல்லியமாக அறிந்தாக
வேண்டும். நம் பிரபஞ்சம் தற்போது வெறும் பௌதீகப் பிரபஞ்சமாக
மட்டும் இருக்கவில்லை. மாறாக, தனித்துவமான மூன்று வெவ்வேறு
பண்புகளின் சேர்க்கையாக உள்ளது. அவை "சடம்", "உயிர்", "உணர்வு"
ஆகியவையே. இப்போது நாம் பிரபஞ்சத்தை இம்மூன்று அம்சங்களின்,
மற்றும் அவற்றின் சொற்களின் வழியாகத்தான் புரிந்து கொண்டாக
வேண்டும்.
பிரபஞ்சத்தை வெறும் பௌதீகப் பிரபஞ்சம் என்பதாக அதனுடைய
சடப்-பண்பிற்குக் குறைத்துச் சுருக்கிவிடல் ஆகாது! இதைப்போலவே,
அவசரப்பட்டு பிரபஞ்சத்தை 'உயிர்' மற்றும் 'உணர்வு' எனும்
பண்புகளுக்கு உயர்த்திவிடவும் கூடாது! ஏனெனில், பிரபஞ்சத்தின்
பரிணாம வளர்ச்சிப்போக்கில் , தொடக்கத்தில் வெளிப்பட்ட சடத்
தன்மையைக் கடந்து உயிரும், உயிர்த்தன்மையைக் கடந்து
மனித-உணர்வும் வெளிப்பட்டிருந்தாலும் 'மனித-உணர்வு' தான்
பரிணாமத்தில் இறுதியானது என்று முடிவு கட்டி விட முடியாதல்லவா!
ஏற்கனவே பிரபஞ்சத்தின் சாரமான பண்புகளைப்பற்றி அறிந்து
கொள்ளவேண்டியதன் அவசியத்தைப் பின்பற்றிச் சென்றோம்.
இப்போது பிரபஞ்சம் என்பது எத்தகைய 'இயக்கம்' என்பதையும்
அதன் குறிக்கோள், இலக்கு, முழுமை எத்தகையது என்பதையும்
புரிந்துகொள்வது அவசியம் ஆகும்.
முதலிடத்தில், பிரபஞ்சத்தையும், அதில் நமது இட-அமைவையும்
நமது வாழ்க்கையையும் புரிந்து கொள்வதற்கு அடிப்படையாகவும்,
உறுதுணையாகவும் இருப்பது "உணர்வு" தான் என்கிற உண்மையை
நாம் நினைவில் கொள்ள வேண்டும். மனித உணர்வு என்பது
எவ்வகையிலும் இறுதியானது, முடிவானது அல்ல என்ற போதிலும்
மனித- உணர்வின் முக்கியத்துவம் சிறிதும் குறைவதில்லை !
முக்கியமாக, மனிதனிடம் 'உணர்வு' இல்லையெனில், மனிதனும்
ஒரு தவளை அல்லது எலியைப்போலவே வாழ்ந்து செல்வான்.
பிரபஞ்சத்தையும், இன்னும் எதைப்பற்றியும் அறிந்து
கொள்ளும் , புரிந்து கொள்ளும் தேவையும் எழாதிருந்திருக்கும் !
இக்கட்டுரையும் எழுதப்படாதிருந்திருக்கும் !
பிரபஞ்சத்தின் நெடிய 1500 கோடிஆண்டுகளின் பரிணாம வரலாற்றின்
உச்சபட்ச வளர்ச்சி நிலையாக வெளிப்பட்ட அம்சம் "மனித-உணர்வு"
தான். அது மட்டுமல்ல, மனித-உணர்வைக் கடந்த உணர்வின்
இறுதியான வளர்ச்சி நிலையும் நம் மனித-உணர்வில் ஏற்படவேண்டிய
மாற்றத்தையே சார்ந்துள்ளது. அத்தகைய இறுதியான உச்ச நிலை
உணர்வும்கூட ஏற்கனவே புத்தர், இயேசு,பரமஹம்சர், ரமணர் ஆகிய
தனிமனிதர்களால் சாதிக்கப்பட்டுவிட்டன, அடையப்பட்டுவிட்டன!
அவர்கள் ஏற்கனவே உணர்வில் முற்றிக் கனியாகி, தம்முள்
முழுமையாகி பிரபஞ்ச-விருட்சத்தையும் முழுமைப்படுத்தி அதைவிட்டு
வெளியேறி விட்டவர்கள்!
இன்னும் நம் பங்கும், பணியும் தான் அப்படியே உள்ளது. ஆம், உணர்வுப்
பிஞ்சுகளாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் முற்றிக் கனியாவது
முழு-உணர்வாக ஆவது ஒன்றே நமது ஆன்மீகப்பணியும், நம் வாழ்வின்
நிறைவும், இலக்கும் ஆகும்.
நம்மில் பலருக்கு இக்கட்டுரையின் உள்ளடக்கங்கள் வழக்கத்திற்கு
மாறான கருத்துக்களை முன் வைப்பதாகத் தோன்றலாம். குறிப்பாக
இக்கட்டுரை "உணர்வை" (Consciousness) பிரதானப்படுத்துகிறது.
பிரபஞ்சப் பரிணாமத்தின் முழுமையாக "முழு-உணர்வு" அல்லது
"பேருணர்வு" என்பதை 'கடவுள்' அல்லது "இறுதி மெய்ம்மை" எனக்
குறிப்பிடுகிறது. மேலும், பரிணாமத்தில் எது இறுதியாக
வெளிப்படுகிறதோ அதுதான் ,அந்த "முழு-உணர்வு" தான்
மூல-மெய்ம்மையாக "பெரு-வெடிப்பு" க்கு முன் இருந்த ஒன்று
என்கிறது ! அந்த ஒருமையும் முழுமையுமான மூல-மெய்ம்மை தான்
வெடித்து பிரபஞ்சமாக எழுந்தது என்கிறது ! அடுத்து, ஒட்டு மொத்த
பிரபஞ்சப்பரிணாமத்தின் தர்க்கரீதியான முடிவில் மீண்டும் அந்த
"முழு-உணர்வு" எனும் மூல-மெய்ம்மை தன்னைக் கண்டடைகிறது
என்கிறது!
ஆம், பிரபஞ்சப் பரிணாம வளர்ச்சிப் போக்கின் ஒரு கட்டத்தில்
முழு-உணர்வின் சாயலைக் கொண்ட "சுய-உணர்வு"டன் மனிதன்
வெளிப்படுகிறான். இவை எதுவும் கற்பனையான விஷயங்கள்
அல்ல! ஏனெனில், கற்பனைகளை அடியொட்டிச் சென்று நிஜத்தை
தரிசிக்க இயலாது! மாறாக, உள்ளதிலிருந்துதான் "உண்மை"
உய்த்துணரப்படவேண்டும் !
உள்ளது பிரபஞ்சம் தான். பிரபஞ்சம் என்பது சடம், உயிர், உணர்வு
ஆகியவற்றின் சேர்க்கை தான். உள்ளது என்பது நிலைத்த இருப்பு
அல்ல. அது மாறிக்கொண்டும், வளர்ந்து கொண்டும்; ஒரு குறிப்பான
இலக்கு நோக்கிச்செல்லும் ஒரு இயக்கமாகும். இந்த வளர்ச்சி, அல்லது
பரிணாமத்தில் பரிணமிப்பது எதுவென்றால் அது "உணர்வு" என்கிற
அம்சம் தான். ஆக, சடம், உயிர், மனித-உணர்வு எனும் தொடரில்
அடுத்ததாகவும், இறுதியாகவும் வெளிப்பட வேண்டிய நிஜம்
"பேருணர்வு" அல்லது "முழு-உணர்வு" என்பது தான்!
ஆனால், "முழு-உணர்வு" என்பது 'கடவுள்' என்பதைப் போன்றதொரு
'மந்திரச்சொல்'லோ , அல்லது தர்க்க ரீதியாக அடையப்பட்ட ஒரு முடிவோ
அல்ல. உண்மையில், "முழு-உணர்வு" தான் கடவுள்! ஆனால், இக்கடவுளை
வணங்கவோ, வழிபடவோ, எவ்வழியிலும் நம் வசப்படுத்திடவோ முடியாது.
மேலும், "கடவுள் இருக்கிறார்!" என்று நம்புவதைப்போல முழு-உணர்வை
நம்புவதால் ஒரு பயனும் விளையாது! மாறாக, 'தான் ஒரு உணர்வு தான்'
என்கிற உண்மையை நேரே உணரும் ஒவ்வொரு மனிதனும்
முழு-உணர்வை எட்ட முடியும். அப்போது கடவுள் எனப்படும்
'தந்தை-உருமாறி' மனிதன் எனப்படும் 'மகன்-உருமாறி' யிடம் இவ்வாறு
சொல்லக்கூடும் : "நானும் என் மகனும் ஒன்றாயிருக்கிறோம் !"
மா.கணேசன் / 28.03.2016
No comments:
Post a Comment