Sunday, 24 April 2016

கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்கள்?



          எச்சரிக்கை :-
          வாழ்க்கையின்  முடிவு 'மரணம்' என்பது தவறு!
          வாழ்க்கையின்  முடிவு  முழுமையான நித்திய
          வாழ்க்கையே! ஆனால், மனிதன் "இறவா நிலை"
          எய்துவதும்;அல்லது, இறந்து போவதும் முறையே அவன்
          எவ்வளவு முழுமையாகத் தன்னை அறிகிறான் அல்லது
          அறியத் தவறிடுகிறான் என்பதைப் பொறுத்ததே!

                 ****

வாழ்க்கை அழிவற்றது, நித்தியமானது!
மரணம் தெரிவிற்குட்பட்டது!!

      <>

இப்பதிவு உங்களை இறக்கச் சொல்கிறது!
ஆம், எக்காரணத்திற்காகவும் நீங்கள்
இறந்து விடக் கூடாது என்பதற்காக ஒரு முறை
மட்டும் உங்களை இறக்கச் சொல்கிறது!

கம்பளிப்புழு தனது 'புழு' நிலைக்கு இறக்காமல்
அழகிய வண்ணத்துப்பூச்சியாக பிறக்கவியலாது!

மனிதன் தனது 'அரை-உணர்வாகிய' அகந்தைக்கு
இறக்காமல்  'முழு-உணர்வாகிய' அழிவில்லா
ஆன்மாவை பிரசவிக்கவியலாது!

ஆம், உயிரையும், உடலையும் இழக்காமல் உணர்வுடன்
ஒருவர் தமது அகந்தைக்கு இறத்தல் வேண்டும்!
அகந்தைக்கு இறத்தல் வலி நிறைந்தது தான்-பிரசவ
வலியைப் போல!

ஒருவர் தனது அகந்தைக்கு இறக்காவிடில், அவர்
முடிவில்  உண்மையிலேயே இறந்து போகிறார்!

ஆகவேதான், இப்பதிவு, 'இறப்பு' பற்றி எடுத்துச்
சொல்கிறது! நீங்கள் ஏற்கனவே இறந்து விட்டீரா,
அல்லது    உணர்வு பெருகி வழிய வாழ்ந்து
கொண்டிருக்கிறீரா   என உங்களை நீங்களே
பரிசோதித்துக்  கொள்ளும்படிச்  சொல்கிறது!

ஏனென்றால், 'வாழ்க்கை' என்றால் என்னவென்று
அறியாமலே வாழ்வது மரணத்திற்கு ஒப்பானது!
அதில்,
"மரணம்" என்றால் என்னவென்று அறியாமல்
மரணிப்பது இறந்து போனவன் இரண்டாவது முறை
இறப்பது போன்றது!

        <>

தன்னையறியாதவன் இறப்பதில்லை!
ஏனெனில், அவன் ஏற்கனவே இறந்து விட்டவன்!

        <>

மரணம் என்பது வாழ்க்கையின் எதிர்ப்பதம் அல்ல!
மாறாக, அது பிறப்பின் எதிர்ப்பதம் மட்டுமே!

        <>

வாழ்க்கைக்கு எதிர்ப்பதம் ஏதுமில்லை!
பிறப்பு, இறப்பு மற்றும் எல்லா எதிரிணைகளும்
இருமைகளும், நிகழ்வுகளும் யாவும்
வாழ்க்கையினுள் தான் இடம் பெறுகின்றன!

        <>

தயவுசெய்து 'வாழ்க்கையை'ச் சுருக்கி விடாதீர்!
அதுதான் உங்கள் மரணத்திற்கான முதல் சுழி!

        <>

வாழ்க்கை என்பது எல்லாவற்றையும்
பிரபஞ்சம் முழுவதையும் உள்ளடக்கியதும்
எல்லாவற்றையும் கடந்ததுமான
பேரியக்கமாகும்!

        <>

பிறப்பு நம்மை காலத்தின் உலகினுள்
இருப்பு எனும் "உணர்வு-ஆட்டத்திற்கு"
அறிமுகப்படுத்துகிறது!
உணர்வு-ஆட்டத்தை நாம் முறையாக
முழுமையாக ஆடி முடித்தாலும்
முடிக்காவிட்டாலும்,இறப்பு
ஆட்டத்தை முடிவிற்குக் கொண்டு
வந்து விடுகிறது!

        <>

ஆட்ட-நேரம் முடிந்ததும் அரங்கம் கலைக்
கப்பட்டு விடுகிறது!
ஆம், இறப்பு நம்மை காலத்தின் உலகிலிருந்து
விடுவிப்பதில்லை - அதிலேயே
கரைத்து விடுகிறது!

        <>

பிறப்பு : இருப்பின் நுழைவாயில்.
இறப்பு : இன்மையின் நுழைவாயில்.

        <>

இல்லாமலிருந்தோம்!
பிறப்பு எனும் கதவின் வழியாக
இருப்பு பெற்றோம்
இறப்பு எனும் கதவின் வழியாக
மீண்டும் இல்லாமல் போகிறோம்!
அதற்கு ஏன் இவ்வளவு ஒப்பாரி?

       <>

உண்மையிலேயே  "நாம்" யார்? என்பதை
உணராவிடில் நாம் இறப்பது உறுதி!

       <>

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில்
அடைபட்ட இருப்பு அல்ல வாழ்க்கை!
இருப்பை எவ்வாறு உணர்வு கொண்டு
முழுமைப்படுத்துகிறோம் என்பதே  வாழ்க்கை!

       <>

வாழ்க்கை என்பது உயிரோடிருப்பது அல்ல!
உணர்வோடிருப்பதே!
இது ஒரு தொடக்கம் மட்டுமே!

       <>

செடிகொடிகள், புழு பூச்சிகள், பறவைகள்
பெருவிலங்குகள் இவை எதுவும்
"தாம் இருக்கிறோம்!" என்பதை உணர்வதில்லை!
ஆகவே அவற்றிற்கு இல்லை "மரண-பயம்"!

       <>

"தாம் இருக்கிறோம்!" என்பதை உணரும்
மனித ஜீவிகளோ தினம் தினம் செத்து செத்து
பிழைக்கின்றோம் -  "மரண-பயத்தில்"!

       <>

மனிதா,
உனது
இருப்பு : பெருங்குழப்பம்.
இறப்பு : பேரச்சம்.

       <>

உயிரோடிருப்பது உணர்வோடிருப்பதற்காகவே!
உணர்வோடிருப்பது முழு-உணர்வை
அடைவதற்காகவே!

       <>

முழு-உணர்வு = முழுமையான இருப்பு

       <>

இருப்பின் நிலைகள்:-
உணர்ச்சியற்ற  இருப்பு :  சடம்
உணர்ச்சியுள்ள இருப்பு : உயிர்
(சுய) உணர்வுள்ள  இருப்பு : மனம்
முழு-உணர்வு=முழு-இருப்பு : ஆன்மா

       <>

குறுகிய காலமோ அல்லது நீண்ட  காலமோ
உயிரோடிருப்பது பற்றியதல்ல வாழ்க்கை!
உணர்வு- நிலையில் எவ்வளவு உயர்கிறோம்
என்பதைப் பற்றியது!

       <>

உயிரோடிருப்பது அற்புதம்!
உணர்வோடிருப்பது அதியற்புதம்!!
முழு-உணர்வையடைவது
(அனைத்து அற்புதங்களுக்கும்
அப்பாற்பட்ட) உன்னதம்!!!

       <>

மனிதன் உயிரோடிருப்பது  :  இயற்கையின் ஏற்பாடு!
உயிரோடிருந்தும் உணர்வோடில்லையனில்
அது  :  இயற்கையின் குறைபாடு!
சுய-உணர்வடைந்தும்  முழு-உணர்வையடையாவிடில்
அது  :  மனிதனின் சுய-மட்டுப்பாடு!

       <>

மரணம் குறித்தல்ல நாம் அஞ்சி நடுங்க
வேண்டியது!
மாறாக, தன் முழுமையைத் தேடாமல்
தனது 'அரை-உணர்வில்' தேங்கித்
தற்கொலை செய்து கொள்ளும் அகந்தை
குறித்துத்தான்!

       <>

மரணத்தை எண்ணி அஞ்சுவதும்
மரணிப்பதும் மனிதனின் அகந்தையே!

       <>

ஆன்மா என்பது நீங்கள்  ஏற்கனவே பெற்றிருக்கும்
ஒன்றல்ல!
அதை நீங்கள் புதிதாக பெற்றெடுத்தாக
வேண்டும்!
ஆன்மாவை பிரசவிக்கும் ஊடகமே நீங்கள்!

       <>

உலகின்
உயிரின்
உணர்வின்
உய்விப்பு
முழு - உணர்வில்!

       <>

ஆன்மா என்பது உங்களுக்குள்ளேயும் இல்லை!
வெளியேயும் இல்லை!
ஆனால், உங்கள் அகத்தின் வழியாகத்தான்
அதை  நீங்கள்
கண்டடைந்தாக வேண்டும்!
அவ்வாறு கண்டடைந்திடும் போது
அதை  உங்களது ஆன்மா
என அழைத்துக் கொள்ளலாம்!

       <>

"நான்"
என்பது எனது உடலல்ல,
எனது உணர்ச்சிகளும் அல்ல,
எனது சிந்திக்கும் மனமுமல்ல,
எவையெல்லாம் என்னுடையவையோ
அவையெதுவும் அல்ல
"நான்"

       <>

மனிதா, உண்மையான "நீ" ஒரு போதும்
மரிப்பதில்லை!
"நீ"மட்டும் உண்மையிலேயே "யார்?"
என்பதை அறிந்திருப்பின்!
ஆ! எது உன்னில் இறக்க அஞ்சுகிறதோ
அது இறந்தே ஆக வேண்டும்!
உன்னில் சில பகுதிகள் இறப்பது
நிச்சயம்!
ஆகவே மீதமுள்ள காலத்தை
வீணாக்காமல்  "நீ யார்?" என்பதை
அறியும் விசாரத்தில் செலவிடு!

       <>

நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்
நீங்கள் ஒரு 'முக்கியஸ்தர்', 'பெரிய நபர்'
என்றெல்லாம்!
ஆனால், மரணம் சொல்லிக்
கொண்டேயிருக்கிறது :
நீங்கள் 'ஒன்றுமில்லை', வெறும்
"பூச்சியம்" என்று!
மரணம் தனது கூற்றை
உண்மையாகவே செயல்பூர்வமாக
நிரூபித்து விடுகிறது-விரைவாகவோ
அல்லது தாமதமாகவோ!

       <>

மரணத்தைவிட
'மரணம்' பற்றிய
பயமே நம்மைக்
கொல்கிறது.

       <>

உண்மையில்,  99.9%  மனிதர்களின் மரணம்
அகால  மரணமே!

       <>

இரண்டு வயது முதல்
இறக்கும்  வயது வரை
மனிதன்
தனது உணர்வின்
'குழந்தைப் பருவமான
அகந்தையிலேயே
கழித்து
உடலின் மரணத்துடன்
இணந்து
அகால மரணம்
அடைகிறான்!

       <>

மனிதா,
உனது உடல் முதுமை அடைவதற்குள்
நீ  உனது உணர்வின் முழுமையை
எட்டிவிடு!
இல்லாவிடில் உனது உடல் மரிக்கும் போது
நீயும் அதனுடன்சேர்ந்து
உடன்-கட்டை ஏறுவதை
தவிர்க்க வியலாது!

       <>

அகந்தை, அது
பல வடிவங்களில் தோன்றும்!
அது ஆணவம் கொண்டு
ஆரவாரமும் செய்யும்;
சாந்தமே வடிவாக
சாதாரணமாகவும் திரியும்!
. . . . . .
மொத்தத்தில்,
விழிப்படையாத மனமே
அகந்தை!

       <>

மரணத்தை  மறுப்பது அகந்தையின்
சிறு பிள்ளைத்தனம்!
மரணத்தை  ஏற்றுக் கொள்வது அகந்தையின்
கோழைத்தனம்!
மரணத்தை  நேரே சந்திப்பது அகந்தையின்
உரு-மாற்றம்!

       <>

அகந்தை என்பது அகற்றப்பட வேண்டிய
தீமையோ அசிங்கமோ அல்ல!
அது உணர்வு-நிலை வாழ்வின்
இன்றியமையா தொடக்க நிலைக்
கட்டுமானம்!
அது விழிப்படையா மனதின்
கலைக்கப்படவேண்டிய தொரு
புனைவு!
அது புரிதலைக் கொண்டு
கடக்கப்பட வேண்டிய அபாயகரமான
சுய-மட்டுப்பாடு!
அகந்தையிலேயே வாழ்வதென்பது
அரைக்கிணறு தாண்டும்
ஆபத்து!

       <>

"மரணம்"
எனும் சொல்
மட்டுமே போதும்- நம்மை
பீதியில் உறையச் செய்ய!
இவ்வாறு உறையும் போது
மட்டுமே நாம் நமது
முட்டாள்-தனமான
ஈடுபாடுகளையும்
செயல்பாடுகளையும்
நிறுத்துகிறோம்!

       <>

மரண-பயம் நல்லது!
அது ஒருவனுள் ஒரு முறையேனும்
ஏற்படவில்லையெனில் அவன்
ஒரு வேளை ஏற்கனவே
இறந்திருக்கக் கூடும்!
அல்லது  அவன்
ஒரு உணர்வற்ற விலங்கு போல
உலவிக் கொண்டிருக்கிறான்!

       <>

மரண-பயம் நல்லது!
அது மட்டுமே நம்மை
நமது அகம் நோக்கித்
திருப்புகிறது;சுயத்தை
உணர்வு கொள்ளச்
செய்கிறது!
மற்ற விஷயங்கள் யாவும்
நம்மை புறம் நோக்கிச்
செலுத்துவதாகவும்,
சுய-மறதியை
உருவாக்குவதாகவும்
உள்ளவை!

       <>

திடீர் மரணம்
அகால மரணம்
இயற்கை மரணம்
நோயால்   மரணம்
இள-வயது  மரணம்
விபத்தினால் மரணம்
தற்கொலை    மரணம்
கொலையால்   மரணம்
. . . . . . . . . .
எல்லாவகை  மரணமும்
'உணர்வற்ற - நிலையின் '
மீதான காதலின் விளைவுகளே!

       <>

உணர்வின் நிலைகள் :-
புறம் நிலைத்த உணர்வு    : விலங்கு
எண்ணங்களில் சிக்கிய உணர்வு   : சராசரி மனிதன்
புறம்,   அகம்   இரண்டும்     கடந்த      உணர்வு  :   ஞானி

       <>

பிறரது மரணம் உமக்கு ஒரு சம்பவம்!
உமது  மரணம் பிறருக்கு ஒரு சம்பவம்?
என்ன மலினம்!

       <>

பெரும்பாலான மனிதர்கள் கருதுவது போல
மரணம் என்பது ஒரு ஓய்வகமோ அல்லது
விடுவிப்போ அல்ல!
அது
ஒரு
மாபெரும்
"மறு- சுழற்சி"  எந்திரம்!

      <>

நன்றி, மரணமே!
நீ மட்டும் இல்லையேல்
புவி மீது அகந்தையின் ஆட்சியை
அகற்றவே இயலாது!

      <>

மறு-பிறப்பு தெரிவிற்குட்பட்டது!
இப்பிறவியை முறையாகப் பயன் படுத்திக்
கொண்டால் மறு-பிறப்பு அவசியமற்றது!

      <>

இருப்பு
இன்மை
இரண்டில்
எது மேலானது?

      <>

இருப்பினால் ஒரு பயனும் இல்லை!
இன்மையால் எந்த நஷ்டமும் இல்லை!!
மொத்தத்தில் இழப்பதற்கு எதுவுமில்லை!!!

      <>

இருப்பை தெரிவு செய்து
இன்மையை வெறுப்பது
அச்சம் கொண்ட அகந்தையின்
அரை-உணர்வுச் செய்கையே!
ஏனெனில், முழு-உணர்வில்
எதுவும்  விடுபட வியலாது!

      <>

முழு-உணர்வை அடைவதொன்றே
முக்கியம்.
மற்றவை யாவும் மரணம்.

      <>

மிகவும் வினோதமாக 'மரணம்' என்பது
மரணத்தை மீறிய ஒன்றின் குறியீடாகத் திகழ்கிறது!

      <>

பிளவு தான் மரணம்!
தனியே பிரித்துப்
பார்ப்பதும்
பிரிந்து நிற்பதும்
சார்ந்திருப்பதும்
தேக்கமும்
நிலை கொள்ளாத
இயக்கமும்
நிறைவடையாமையும்
முழுமைக்குறைவும்
தான் மரணம்!

     <>

இருப்பையும்
இன்மையையும்
அறிவது உணர்வே!
உணர்வில்லையேல்
இருப்பும் இல்லை
இன்மையும் இல்லை
இருப்பிற்கும்
இன்மைக்கும்
இடையில் சிக்கிய
உணர்வும்
இருப்பு
இன்மை
இரண்டையும் கடந்த
உணர்வும்
ஒன்றல்ல!

      <>

இன்மையை முழுமையாக உணர்வதே மரணம்
இன்மையை முழுமையாக உணராமல்
இருப்பு முழுமை பெறுவதில்லை!

      <>

முழு-உணர்வு என்பது
எதைப்பற்றியுமான
உணர்வுமல்ல!
அது முழுமையான
தன்னுணர்வே!

      <>

சே! யாரது?
இன்மையிலிருந்து எழுப்பி
இருப்பிற்குள்
என்னைத் தள்ளியது!
 
      <>

முழு-உணர்வு,  காலாதீதம்,  நித்தியம்
என்பவை எங்கோ தொலைவில்
பிரபஞ்சத்திற்கு அப்பால் இல்லை!
அதைத் தேடி எங்கும் அலைய வேண்டாம்!
எதுவும் செய்ய வேண்டாம்!
அது இங்கே இப்போதில் உள்ளது!
 
      <>

முழு-உணர்வு -  அதற்கு மாற்று ஏதுமில்லை!
எப்படியேனும் ஒவ்வொருவரும் அதை
அடைந்திடுவது அவசியம்!
"எப்படி?"  அடைவது என்று கேட்காதீர்
அப்படிக் கேட்கும் போது உங்கள் உணர்வு
பிளவு பட்டு விடுகிறது!

      <>

புறமும்
அகமும்
அற்றுப் போகும்
முழு-கவனம்
அதுவே
முழு-உணர்வு.

      <>

மனிதா! காலமற்ற நித்தியத்தை
கைப்பற்ற எவ்வளவு காலம்
வேண்டும் உனக்கு?

      <>

இதோ, மரணத்தை வெல்ல சுலபமானதொரு
வழி : அன்பு

      <>

தன்னை முழுமையாக இழப்பவனே
தன்னை முழுமையாக பெறுபவன்!

      <>

இருப்பில் இன்மையையும்
இன்மையில் இருப்பையும்
காண்பது முழுமை!

      <>

மரணத்திற்கப்பால் என்ன உள்ளது?
என்பதை  நீங்கள்
கடைசியாக இறந்த பிறகு
தெரிந்து கொள்ள முடியாது
இருக்கும் போதே இறந்து
தெரிந்து கொள்ள வேண்டும்!

      <>

நித்தியம் என்பது உணர்வு-மயமான மெய்ம்மை!
அதுவே    முழு-உணர்வு.
அது எவ்வொரு உலகின் கைதியுமல்ல!
ஆகவே, அதற்கும் சொர்க்கம், மறுவுலகம்
என்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை!
அதை, இங்கே, இப்போது, அடையமுடியவில்லை
எனில், அதை வேறு எங்கும்,எப்போதும்
நீங்கள் அடையவியலாது!

     <>

ஒரு துளி நித்தியத்துவத்திற்கு
இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும்
ஈடாகாது!

     <>

அன்பு : அதை அறிய வேண்டுமெனில்
ஒரு முறையேனும் நீங்கள் இறக்க வேண்டும்!
ஏனெனில், அது காலத்தின் உலகில் இல்லை
எளிதாக அதை நீங்கள் எடுத்துக் கொள்ள!

     <>

காலமற்ற   இப்போதில்   வாழ்வதென்பது
மரணத்திற்கு இறப்பதும்
மரணத்தைக் கடந்து வாழ்வதும் ஆகும்!

     <>

மரணத்தை  தவிர்ப்பதற்கான ஒரே உபாயம் :
அதனுடன் வாழ்வதே!

     <>

இறுதியானது என்பது கடைசியில் வருவதல்ல!
முழுமையானது மட்டுமே இறுதியானது!
எது தொடர்கிறதோ அது முழுமையற்றது!
எது முழுமையானதோ அது தொடர்ச்சியற்றது!
அதுவே இறுதியானது, ஆகவே காலமற்றது!
ஆகவே அது எப்போதுமுள்ளது, இப்போதுமுள்ளது!
எது காலமற்றதோ அது நித்தியமானது!
எது காலத்தில் தொடர்கிறதோ அது தற்காலிகமானது!
ஏனெனில் 'காலம்' தான் மரணம்!!

      <>

பொருந்தாததை
மட்டுப்பாடானதை
வளரத் தவறியதை
முயற்சியற்றதை
மேலோட்டமானதை
தேக்கமுற்றதை
உணர்வற்றதை
தன்னில் தானே
முழுமையற்றதை
மரணம் அழிக்கின்றது!

     <>

நன்றாகப் பார்!
நீ
உயிருமல்ல, உடலுமல்ல!
உணர்வு தான் என்பதை
உணர்ந்து கொள்!
உணர்வில்லாத உயிரும் உடலும்
வெறும் விலங்கு தான்!
நீ உணர்வு தான் என்பதை
உணராத வரை நீயும்
ஒரு விலங்கு தான்!
நீ உணர்வு தான் என்பதை
உணர்ந்த பிறகு இறப்பில் உதிரும்
உமது உயிரும் உடலும்
உனை விடுவிக்கும் விலங்கு தான்!

       <>

இன்னும் நன்றாகப் பார்!
நீ உயிருமல்ல உடலுமல்ல!
உணர்வுமல்ல!
ஆம், உணர்வாகிய உனக்குள்
ஒரு உள்ளுணர்வை உன்னால்
உணர முடிந்தால் அதுவே
இறுதியான முழு-உணர்வு!
அதன் முன் நீ வெறும்
அரை-உணர்வே!
ஆகவே உணர்வை
உணர்வு கொண்டு
முழு-உணர்வில் கலந்திடு!    
உனக்கில்லை மரணம்!

     <>

வேற்றுலகம், மறுவுலகம், விண்ணுலகம்
பொன்னுலகம், புத்துலகம், படைப்புலகம்
சொர்க்கம், நரகம் என்றெதுவும் இல்லை!
அவ்வாறிருப்பின் அவற்றையெல்லாம்
மறுப்பது தான் உயரிய ஞானம்!
ஏனெனில், எல்லா உலகங்களும்
இவ்வுலகம் போலவே உனது உணர்வைச்
சார்ந்திருப்பவையே!
உணர்பவன் இல்லையேல் உலகம் இல்லை!
உணர்பவன்  சேர வேண்டிய உலகம்
முழு-உணர்வே!

     <>

இந்த கணத்தில்  முழுமையாக இருங்கள்!
இருப்பை முழுமையாக உணருங்கள்
அதில், காலம் அசைவற்று நின்று விடும்
அற்புதத்தை அனுபவியுங்கள்!
அதற்குப்பிறகு நூறு வருடங்கள்
வாழ்ந்து காண்பதற்கு ஒன்றுமில்லை
என்பதைப் புரிந்து கொள்வீர்!

     <>

இந்த உலகம்,அதில் உமது உயிர்,உடல், உணர்வு
இருப்பு யாவும் சிறைகளே!
அதில் நீங்கள் மரண-தண்டனைக்காகக்
காத்திருக்கும் ஆயுட்கைதிகள்!
விழித்துக் கொண்டால், தப்பினீர்!
எப்படியெனில்,  "விழிப்பு" என்பது
வேறு உலகைச் சேர்ந்தது!

     <>

ஆட்ட நேரமும், ஆட்டமும் ஒன்றல்ல!
ஆம், வாழ்-காலமும், வாழ்க்கையும் ஒன்றல்ல!
எவ்வாறு ஆடுகிறோம்  ( வாழ்கிறோம்)
என்பதே முக்கியம் !
ஆட்ட நேரம் முடியப்போவதைப் பற்றி
கவலைப்படாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்தி
ஆடுங்கள்- ஆட்டத்தை முழுமையாக ஆடும் போது
அடையும் உச்சமே இலக்கு!
அது, ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் நிகழலாம்!
ஆட்டத்தை முறையாக, முழுமையாக ஆடி
உச்சம் அடைந்த பிறகு புரிந்து கொள்வீர்!
ஆட்டம், ஆட்ட நேரம், ஆடு களம், இன்னும்
ஆடுபவரும் துச்சமே என்பதை!

     <>

மரணம் சார்பானது
நீங்கள் உணர்வுடனும்
சற்று தயக்கத்துடனும்
அணுகினால் அது உங்களை
மாற்றமுறச் செய்திடும்!
நீங்கள் உணர்வின்றி
உதாசீனமாய் இருந்தால்
அது உங்களை உயிரோடு
விழுங்கி விடும்!

     <>

மரணத்தை  எண்ணி அஞ்சுகிறீர்
என்பதை மறுக்கத் தேவையில்லை!
ஆம், அறியப்படாத ஒரு ஆற்றலின்
தாக்கம் இனம் புரியாத அச்சத்தை
ஏற்படுத்தவே செய்யும்!
அச்சத்தினூடே அமைதியாக
எண்ணமற்று இருங்கள்!
கொடிய கரு-நாகம் ஒன்று
உங்கள் மார்பின்  மீது ஊர்ந்து
கீழிறங்கிச் செல்லும் வரை
சலனமற்று இருங்கள்
தப்பிடலாம்!

    <>

முதன் முறையாக இறப்பது
சற்று கடினமே!
ஆனால், இரண்டாவது, மூன்றாவது
. . . . . . . .. .
என அடுத்தடுத்த முறை  இறப்பது
சுலபம்!

    <>

தயவு செய்து
ஒரே ஒரு முறை
இறந்து
பாருங்கள்!

     <>

மா.கணேசன்/ 24.04.2016

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...