Sunday, 10 April 2016

மறு கரையிலிருந்து.....



     மறுகரை மீதான ஏக்கத்தை
     உங்களிடம் தொற்றவைப்பதே
     எனது ஆன்மீகப்பணி.
          *
      ஏனெனில், உங்களுடைய வாழ்வின்
      அர்த்தம், , அமைதி, ஆனந்தம்
      நிறைவு, முக்தி, மோட்சம், முழுமை
      யாவும் மறு கரையில் உள்ளன!
          *                                                                

                       
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . .மறுகரையின்                                                            
ஒரு     முக்கிய செய்தி    என்னவெனில்,   "மறுகரை" என்று ஒன்று
உள்ளது என்பது தான்.   இது       உணர்த்துவது         என்னவெனில்,
மனித ஜீவிகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மறுகரையை
அடைந்திட வேண்டும் என்பது தான். ஏனெனில், மறுகரை    தான்
உங்களுடைய அசலான வீடு,   பாதுகாப்பான    இறுதிப்  புகலிடம்
அனைத்து மாற்றங்களையும் கடந்த முழுமை, மற்றும்  அழிவற்ற
நிரந்தரம்.

மறுகரை  என்பது  வெறும்  நம்பிக்கையன்று.    இக்கரை  என்பது
இருப்பதால்    அக்கரை    அல்லது      மறுகரை   இருக்கவேண்டும்
என்கிற    தர்க்கரீதியான  முடிவின்   அறிவிப்பு  அல்ல   அது.    நதி
இருப்பதால் சமுத்திரம் இருக்கிறது எனும்தர்க்கம் தலைகீழானது.
மாறாக ,     சமுத்திரத்தினால் தான்   நதி   இருக்கிறது!      நதியின்
மூலமும்,    முடிவும்   சமுத்திரமே.  ஆம்,     மறுகரையினால்   தான்
இக்கரை உள்ளது.

மறுகரை   என்பது   சொர்க்கமோ,   வேறொரு   அதிசய உலகமோ,
பொன்னுலகமோ  அல்ல.     மாறாக,    அனைத்து      உலகங்களின்
மூலமும் முடிவும் அதுவே.

மறுகரை உங்கள் கண்களுக்குப்புலப்படுவதில்லை;அதை நீங்கள்
காண்பதில்லை   என்பதால்   அப்படி  எதுவும்   இல்லை   என்பதாக
நீங்கள் முடிவு செய்து விட முடியாது. அதே வேளையில்,   இக்கரை-
யின்   இருப்பானது   மிகத்   தெளிவாகவும்,   வெளிப்படையாகவும்
தெரிவதால் அது முற்றானது, முழுமையானது, முடிவானது மற்றும்
நிரந்தரமானது என்பதாகக் கொள்ளமுடியாது.

ஆம், இக்கரையின் இருப்பை நாம் நிரூபிக்கத் தேவையில்லை.அது
போலவே அதன் தேவையை நாம் அதிகம்  வலியுறுத்தவும்  தேவை
யில்லை.    இக்கரை   இருக்கிறது;   அதில்   நாமும்      இருக்கிறோம்.
ஆனால் , என்றென்றைக்கும் நாம் இங்கு  இக்கரையில் இருப்போம்
என்பதற்கு   உத்தரவாதம் ஏதும்   இருக்குமானால்    மறுகரை பற்றி
நாம் யோசிக்கவும் தேவையில்லை! அப்படியொரு மறுகரைக்கான
அவசியமே  இராது.

இக்கரையானது மிகவும் திடமானதாகவும் மாற்றங்கள் பல நிகழ்ந்
தாலும்  ஒருவகை  நிரந்தரத் தன்மையில் நீடிப்பதாகவும் தோற்றம்
தருகின்றது என்பதென்னவோ உண்மைதான்.  ஆனால்,  விரைவில்
மரணம் வந்து உங்களை அழித்துவிடுகின்றது -  உங்கள்  வாழ்வை
அர்த்தமற்றதாக ஆக்கிவிடுகின்றது என்பதுஎதை உணர்த்துகிறது?

ஆம்,  நீங்கள்   இக்கரையிலேயே  தோன்றிய போதிலும், இங்கேயே
வாழ்ந்திட்ட போதிலும்   நீங்கள்    உண்மையில்         மறுகரையைச்
சேர்ந்தவர்கள்,முடிவில் மறுகரையைச்சேரவேண்டும் என்பதையே
அது உணர்த்துகிறது!

மறுகரையைச் சேர   வேண்டுமெனில்,     முதலிடத்தில்     இக்கரை
இருக்கவேண்டும்!    அதில்   நாமும்     இருக்க வேண்டும் !          ஆம்,
மறுகரைக்குச் செல்ல வேண்டும்    என்பதற்காகத்தான்    இக்கரை
உள்ளது!

இக்கரை என்பது எவ்வகையிலும் இறுதியான கரையல்ல. இது ஒரு
தற்காலிக உலகம்.  மறுகரைக்குச்    செல்வதற்காக    ஏற்பட்ட   ஒரு
அரை-வழிப்பாலம்,அல்லது ஒரு 'ஏவு-தளம்' போன்றதாகும். ஆகவே
இக்கரையிலேயே  நீங்கள்  என்றென்றைக்குமாகத் தங்கி வாழ்ந்து
கொண்டிருக்க  முடியாது !     மாற்றமும்,   மரணமும்   இக்கரையின்
தவிர்க்கவியலாத விதிகளாகும்.

இக்கரை   என்பது  ஒரு  அடிப்படையாகும். அது வேறொன்றை (மறு
கரையை)   அடைவதற்கான    ஒரு  தற்காலிக   ஏற்பாடு;        அதுவே
முடிவான    முடிவல்ல!     மறு கரையின்    அவசியத்தையும்    அதன்
முக்கியத்துவத்தையும்     சுட்டுவதற்காகவே     இக்கரை      உள்ளது.
இக்கரை    என்பது      மறுக்கவியலாத   நிஜமாகும்-அது ஒரு மாயை
அல்ல!

ஆனால்,   அது மிகவும் மட்டுப்பாடானதொரு நிஜமாகும். மனிதஜீவி
களாகிய    நம்மை      அதனால்  'ஒரு குறிப்பிட்ட '  காலத்திற்கு மேல்
உயிருடன்  வைத்திருக்க முடியாது! ஆகவேதான், நாம் இக்கரையை
மட்டுமே   சார்ந்து   வாழ்ந்திட முடியாது;  இக்கரையில் நமது வாழ்வு
முடிவதற்குள்   மறுகரையை  நாம்  அடைவது   அவசரமான அவசிய
மாகும்.    ஏனெனில்,  முழுமையான,   நிரந்தரமான,   நித்திய வாழ்வு
என்பது மறுகரையைச் சேர்ந்தது!

இக்கரையின் இயற்கை அழகானது. ஆனால், இக்கரையின் அழகை
கண்டு,  உணர்ந்து,  ஆனந்திப்பது எது, அல்லது யார்?   இக்கரையால்,
இக்கரையின்    அழகைக்  காண   முடியாது!      ஏனெனில்,      அதற்கு
"உணர்வு"  கிடையாது .  உணர்வுள்ள  மனித ஜீவியால்  தான் புறத்தே
யுள்ள   அழகை    உணர்வு    கொண்டு   ஆனந்திக்க முடியும்.        ஆக,
அழகைக் கண்டு     ஆனந்திக்கும் " மனித-உணர்வு "    அழகிலிருந்து
வேறானதாய் இருக்கமுடியுமா?

அழகு புறத்தேயுள்ளதா? அல்லது காண்பவனின் அகத்தேயுள்ளதா?
இக்கரை    அழகானதே,  அதிலுள்ள யாவும் அழகானவையே! அழகு
எங்கும்,எதிலும் உள்ளது. எல்லாம் அழகின் வெவ்வேறு வடிவங்களே,
நிலைகளே! ஆனால், மறுகரையே "அனைத்து-அழகின்" உறைவிடம்
மற்றும் ஊற்றுக்கண் ஆகும்.

புறத்தேயுள்ள     அழகு    அகத்தின்    அடியாழத்தில்      மறுகரையில்
உறையும்         "அனைத்து-அழகை"       நினைவூட்டும்        மங்கலான
பிரதிபலிப்பு       மாத்திரமே!      சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கும்
சந்திரனைப்போன்றது இக்கரை. ஆம், அழகு என்பது மறுகரையைச்
சேர்ந்தது!

புறத்தேயுள்ள   (இக்கரையின்)  அழகே    ஆனந்தமளிப்பதாய் உள்ள
போது அகத்தின் அடியாழத்தில், மறுகரையில் உறையும் "அனைத்து
அழகின்" ஊற்றை என்னசொல்வது? அதுவே ஆனந்தத்தின் ஊற்றும்
ஆகும்.  ஆம்,  " ஆனந்தம் " என்பதும்  மறுகரையைச் சேர்ந்ததே!

இக்கரையில்,     தேவையான   எல்லாம்   உள்ளது.  எல்லாம் இருந்தும்
எதுவும்    நிறைவின்  உணர்வை   நம்முள்   தோன்றச்செய்வதில்லை!
ஏனேனில், "நிறைவு" என்பதும் மறுகரையைச் சேர்ந்தது!

நீங்கள்  உங்களுடைய   "உயிர்-இருப்பு"  க்கான அடிப்படைத் தேவை
களுக்காக இக்கரையைச் சார்ந்திருத்தல் என்பது தவிர்க்கவியலாது.
ஆனால், உங்கள்  "உயிர்-இருப்பை" கடந்த, "உணர்வு-இருப்பு" க்கான
அதாவது உங்களுடைய இறுதித்தேவைகளான "அர்த்தம்", "உண்மை"
மற்றும்   "முழுமை"   ஆகியவற்றுக்கு    நீங்கள்   மறுகரையைத் தான்
நாடிட வேண்டும்!

நீங்கள்,     ஒரு   புழுவைப்போல   அல்லது,      ஒரு தவளையைப்போல,
வாழ்வின் அர்த்தமறியாமல்  வாழ்ந்து மடிந்து போவதில் உங்களுக்கு
வருத்தம்  ஏதுமில்லையெனில், நீங்கள் மறுகரையைப் பற்றி சிறிதும்
யோசிக்க வேண்டிய தேவையில்லை!

ஆனால்,   ஒரு   மனிதஜீவியாக,    உங்கள்    வாழ்வை     அர்த்தத்துடன்,
நிறைவுடன்,     ஆனந்தத்துடன்     முழுமையாக    வாழ   விரும்பினால்,
உடனடியாக      இக்கரையிலிருந்து      வெளியேறுவதற்கு    உங்களை
ஆயத்தம் செய்து கொள்ளுங்கள்!

               <> <> <> <> <> <>


மறுகரையை அடைவதற்காக நீங்கள் செய்யக்கூடியது என்று எதுவும்
இல்லை!      உங்களுடைய  அறிவுச்சேகரம்,   உங்களுடைய எல்லாவித
அனுபவம்;   நீங்கள்   சம்பாதித்த   பணம்,  புகழ்,  நற்பெயர்,   செல்வம்;
உங்களுடைய   வாய்மை,    தூய்மை,    நற்பண்புகள்,    நம்பிக்கைகள்,
பிரார்த்தனைகள்,   கடவுள்கள்;   நீங்கள் பிறருக்குச் செய்த உதவிகள்,
புண்ணியங்கள்,   தானதர்மங்கள், . . . . . எதுவும், மறுகரையை அடைய
உதவிடாது!   ஏனெனில், மறுகரைக்கு  உங்களுடன் எதையும் எடுத்துச்
செல்ல முடியாது!   ஏன்,  உங்களையும்கூட    நீங்கள்  கொண்டு செல்ல
முடியாது!

மறுகரைக்கு    உங்களையும் கூட    நீங்கள் கொண்டு செல்லமுடியாது
எனில்     பிறகு மறுகரையை அடைவது "யார்?"   இதையே வேறு சொற்
களில்   சொன்னால்,   உண்மையில்   நீங்கள்   என்பது   "யார்?" அல்லது
"எது?" என்பதைக் கண்டடைவதே மறுகரையைஅடைதல் என்பதாகும்!

ஆம்,  நீங்கள் உங்களை  'எவராக' அல்லது 'என்னவாக' கருதிக்கொண்
டிருக்கிறீர்களோ    அதுவல்ல  "உண்மையான"    நீங்கள் - அது, வெறும்
எண்ணங்களால்  எழுப்பப்பட்ட "புனைவு"!   (இக்கரையிலுள்ள) எதனுட
னாவது    உங்களை     அடையாளப்படுத்திக் காணும்  வரையில்  (அது
உங்கள்    உடலாயினும்,   அல்லது    மனதாயினும்  சரி ) உண்மையான
உங்களை நீங்கள் ஒருபோதும் சந்திக்கவே இயலாது!

நீங்கள்    விரும்பும்     வண்ணம்     உங்களை    வடிவமைத்துக்கொள்ள
முடியும்  என்றால்,  அதனாலேயே அது அசலான நீங்கள் அல்ல!

எவ்வொரு அடையாளத்தையும் நீங்கள் பற்றிடாத போது, ஏதாவதொரு
அச்சில் இட்டு உங்களை வார்த்திடாத போது,  ஏதோவொன்றாக ஆகிட
ஆசைப்படாத  முயற்சிக்காத போது இருப்பீர்கள்,  "நீங்கள் நீங்களாக"!
அனைத்திற்கும்     ஈடாக,     ஒருமையும்-முழுமையுமான   உணர்வாக -
மறுகரையில் !

மறுகரை  என்பது  உங்களது   சாரத்திலிருந்து   வேறானதல்ல! அதுவே
உங்களது உண்மையான "சுயம்" மறுகரை என்பது உங்களது "ஆன்மா"
வே தான்!  ஆம்,  "மனிதன்"  என்பவன்  தன்னில் தானே முடிவானவன்!

                <> <> <> <> <> <>
     

மறுகரையை     அடைவதற்கு, உங்களிடம் மாபெரும் "ஏக்கம்" இருக்க
வேண்டும்!     மறுகரை மீதான ஏக்கம் எப்போது உங்களிடம் ஏற்படும்?
இக்கரையில் உள்ள  பொருட்கள், உறவுகள், உடமைகள், விஷயங்கள்,
மீது     உங்களுக்கு   ஈர்ப்பும்,   பிடிப்பும்  உள்ளவரை   மறுகரை மீதான
ஏக்கம்   ஒருபோதும்  உங்களிடம்  துளிர்க்காது!

மறுகரைக்கு இணையாக,மாதிரியாக,மாற்றாக அதை நினைவூட்டும்
வகையில் எவ்வொரு அம்சமும் இக்கரையில் இல்லை!    இக்கரையில்
உள்ள        அனைத்திற்கும்     உங்கள்      முதுகைக்          காட்டும்போது,
அவைகளை    ஒட்டுமொத்தமாகப்     புறக்கணித்திடும்   போது,     மறு
கரை மீதான ஏக்கம் உங்களிடம் உருவாகும்!

இக்கரையிலுள்ளவை, இவையிவை,   இன்ன   இன்னவை   தான்   என,
அவற்றின்   பொருத்தப்பாடுகளையும்,   மட்டுப்பாடுகளையும் புரிந்து
கொள்ளும் போது,  அவற்றின்  மீது   உங்களுக்கு  ஒருவித ஆரோக்கிய
மான   "அதிருப்தி"   ஏற்படும்.    ஆனால்,    அந்த    "தெய்வீக-அதிருப்தி"
வெறுமனே ஏற்பட்டுவிடுவதில்லை!

உங்களிடம்,  "புரிதல்"   இல்லாதபோது,  "தேடலார்வம்"  இல்லாதபோது
நீங்கள்    தொடர்ந்து     மேலோட்டமான  விஷயங்களிலும், விவகாரங்
களிலும் தான் மூழ்கித் திளைப்பீர்கள்!

"தேடல்"  என்பது,   புதியதைத்   தேடுவதையோ, இல்லாதவொன்றைத்
தேடுவதையோ  குறிப்பதல்ல !   மாறாக,    தேடல்   என்பது     உண்மை
யானதை,    உயர்ந்ததை,     முடிவானதை,   இறுதியானதை,    முழுமை
யானதை   உணர்ந்தறிவதற்கான  "இறுதி-உணர்வை" அடைதலையே
குறிக்கிறது!

உங்களிடம்,   முழுமையாக  வாழ்க்கைக்கு உங்களை அர்ப்பணிக்கும்
"அன்பு"  எனும்  "பேரார்வம்" இருக்கும்போது, "தேடல்" இருக்கும். தேடல்
இருக்கும்போது தான் மட்டுப்பாடுகளைக்கடந்து செல்லும் தேவையை
நீங்கள்   உணர்வீர்கள்!    அப்போதுதான்,   மறுகரை     பற்றிய     ஏக்கம்
உங்களிடம் தோன்றும்!

உங்களிடம்   மேலான தேடல்    இருக்கும் பட்சத்தில்,  நீங்கள் யாதொரு
அற்பமான,     மேலோட்டமான   விஷயங்களிலும்,   விவகாரங்களிலும்;
யாதொரு மட்டுப்பாட்டிலும் சிக்கிக் கொள்ளமாட்டீர்கள்!

ஆனால், உங்களிடம் "அன்பு " எனும்   "பேரார்வம்"  இல்லை.  பேரார்வம்
என்பது   பெரிய,   சிறந்த,   அரிய, உயர்ந்த,  உண்மையான, இறுதியான
விஷயங்களின் மீதான ஆர்வமாகும்!  அன்பு  இல்லாததால் உங்களிடம்
பேரார்வம்   இல்லை;     பேரார்வம்   உங்களிடம்  இல்லாததால்,    தேடல்
இல்லை;  உங்களிடம்  தேடல்  இல்லாததால் , நீங்கள் இக்கரையிலேயே
உழன்று கொண்டுள்ளீர்!

நீங்கள்   ஒரு  'இயற்கையான- ஜீவியாக' த் தொடரும் வரையில், நீங்கள்
இக்கரையைச் சேர்ந்தவர்களாகவே  இங்கேயே சிறைப்பட்டிருப்பீர்கள்!
உங்கள்    உருவாக்கத்தின்    அடிப்படையில் ,     உங்களது  அடிப்படைச்
சுயமான உடலானது இக்கரையைச்சேர்ந்தது. ஏனெனில், உங்கள் உடல்
இக்கரையின்  பொருட்களால்  கட்டமைக்கப்பட்டதாகும்.   ஆகவேதான்,
உங்கள்    உடலானது      "மாற்றம்"   மற்றும்   "மரணம்"   ஆகியவற்றுக்கு
உட்பட்டதாக விளங்குகிறது!

உங்கள் மனதைப்பொறுத்தவரையில், அது, இக்கரையைச் சேர்ந்ததாக
வும் இல்லாமல், மறுகரையைச் சேர்ந்ததாகவும்  இல்லாமல், 'இரண்டும்-
கெட்டான்'    நிலையில்,    இரண்டுக்கும் இடையே 'நடுநிலை'யில் உள்ள
தெனினும்,   உங்களது    மனமானது    பெரிதும்    உடலுடனும்,  இக்கரை
யுடனும்,   இக்கரையிலுள்ள    பொருட்கள்   மற்றும்   விஷயங்களுடனும்
தன்னை      அடையாளப்படுத்திக் கொள்வதால்,  அது,      இக்கரையைச்
சேர்ந்ததாகவே ஆகிவிடுகிறது!

ஆம்,  மனம்   எதனுடன்  தன்னை  அடையாளப்படுத்திக் கொள்கிறதோ
பிணைத்துக்   கொள்கிறதோ   அதனுடனேயே  இணைந்து கொள்கிறது,
இணைந்து செல்கிறது!

இவ்வாறு,    உங்களுடைய      யாவும்     இக்கரையைச்    சார்ந்ததாகவும்,
சேர்ந்ததாகவும்,   இருக்கையில்,   இக்கரையைச்  சேர்ந்திராத ஏதேனும்,
ஏதேனும்,   ஒரு  அம்சமாவது   உங்களிடம்  இருக்கிறதா?    "இருக்கிறது!"
என்று   உங்களால்     சொல்லமுடியாது!   அவ்வாறு   இருந்தால்    நீங்கள்
இவ்வாறு     இருக்கமாட்டீர்!       ஆனால்,      முற்றிலும்       இக்கரையைச்
சேர்ந்திராத    ஒரு   அம்சம்       உங்களிடம்   (ஒவ்வொரு மனிதனிடமும்)
தோன்ற முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.  அது  யாதெனில்
"மறுகரை"  பற்றி உங்களுக்குள் எழக்கூடிய "ஆழமான ஏக்கம்" தான்!

மறுகரை   மீதான  ஏக்கம் என்பது இக்கரையை முற்றிலுமாக மறுத்தல்
அல்லது  புறக்கணித்தல்  என்பதே !  இக்கரையை  'மறுத்தல்'  என்பதன்
எளிய   வடிவமாக,       "மறத்தல்"      என்பதைச்        சொல்லலாம்!     ஆம்,
இக்கரையை முற்றிலுமாக "மறந்திருத்தல்"  என்பதை "தியானம்" எனக்
கொள்ளலாம்!   இவ்வகையில் அல்லாமல்  வேறு  வகையில் " தியானம்"
என்பதை  நாம் அணுகுதல் முறையானதன்று!

ஒரு  காதலன்  தன்  காதலி  மீது கொள்ளும்  தீவிர ஏக்கத்தினால், தனது
உணவையும்,  உறக்கத்தையும்,  பெற்றோர்,   உற்றார்,   உறவினரையும்
தனது பணி  முதலான  அன்றாடச்செயல்பாடுகளையும்;  காலம், நேரம்,
இடம்    யாவற்றையும்;     இன்னும்   முக்கியமாக    தன்னையும்      தனது
உயிரையும்கூட         பொருட்படுத்தாமல்         அனைத்தையும்      துறந்து
விடுகிறான். புறக்கணித்துவிடுகிறான்.

'துறத்தல்',    'புறக்கணித்தல்'    என்பது      எந்தவொரு    விஷயத்தையும்
முற்றிலுமாக விலக்கி விடுதல்,   அடியோடு  துடைத்து  எறிந்து   விடுதல்
என்பதல்ல!  மாறாக,  ஒரு   விஷயத்தைத்    'துறத்தல்'     என்பது  அதற்கு
இதுவரை   அளித்து வந்த 'முதலிடத்தை',  முக்கியத்துவத்தை விலக்கிக்
கொண்டு,  அதற்கு    'இரண்டாம்-பட்சம்'  அல்லது  'மூன்றாம்-பட்சமான'
இடத்தை  அளித்தல்  என்பதேயாகும்! ஏனெனில்,  "உணவு" போன்ற மிக
அடிப்படையான   தேவையை    நாம்   முற்றிலுமாகத் துறக்க   முடியாது!
அப்படியே   உணவைத்  துறக்க  முடிந்தாலும்    வாழ்க்கையின் ஒப்பற்ற
இலக்கு  அதுவல்ல!   துறக்கப்படவேண்டியது 'உணவே பிரதானம்' என்ற
பிறழ்வைத்தான். 'உணவின்றி  உயிர்-வாழ  முடியாது' என்பது  உண்மை
தான். ஆனால்,  "இலக்கு அறியாமல் வாழ்வது அர்த்தமற்றது; அது மனித
தரத்திற்கு குறைவானது!" என்பது  "பேருண்மை" யாகும்!

இக்கரையை   ' அழித்துவிடுவதன்'  வழியே நாம் மறுகரையை அடைந்து
விட முடியாது!   இக்கரையைக்  கடந்து செல்வதன் வழியே மட்டுமே நாம்
மறுகரையை அடைய முடியும்!

ஒரு    விஷயத்தைக்      "கடந்து-செல்லுதல்"     என்பது     அவ்விஷயத்தை
முழுமையாகப்   "புரிந்துகொள்ளுதல்" என்பதே!  புரிதல் இல்லாமல் எந்த
விஷயத்திலிருந்தும்  விடுபடவோ,  அதைக் கடந்து செல்லவோ முடியாது!

ஆகவே, இக்கரையை  "மாயை"  என்று மறுக்கவும் தேவையில்லை. அதே
வேளையில்,  அதன்  இடம்,  பாத்திரம்,  மற்றும்  அவசியம்  ஆகியவற்றை
அதிகப்படியாக   பெரிதுபடுத்திக்கூறவும்    தேவையில்லை!         மாறாக,
இக்கரையின்   பொருத்தப்பாடுகளையும்,   மற்றும்   அதன்   மட்டுப்பாடு
களையும்   புரிந்து கொண்டு   கடந்து  செல்வது  மட்டுமே முக்கியமாகும்!

இக்கரையை   நாம்   கடந்து செல்ல     வேண்டியதன்     "அவசர-அவசியம்"
மற்றும்      "பிரதான காரணம்"    யாதெனில்,       இக்கரையானது   மிகவும்
தற்காலிகமானதொரு உலகம் ஆகும்.   தனிமனிதஜீவிகளின்   ஆயுளுடன்
ஒப்பிடுகையில்,    இப்பிரபஞ்சம்   நீண்ட- காலம்    நீடித்திருப்பதாயுள்ளது.
ஆனால், தனிமனித ஜீவிகளின் ஆயுள் மிகவும் குறுகியதே!

ஆம்,   எந்த நேரத்திலும்  உங்களது  வாழ்வு  முடிந்து போகலாம்!     ஆகவே,
காலத்தை    வீணாக்காமல்      இக்கரையையும்,  அதன்       மட்டுப்பாடான
வாழ்க்கையையும்   விட்டு அகன்று    பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான
இறுதிக்கரையை அடைவது  அவசர-அவசியமாகும்!

                <> <> <> <> <> <>

ஆனால்,  மனிதஜீவிகளாகிய  நீங்களோ, என்றென்றைக்குமாக நிலைத்து
நீடித்து      வாழப்போகிறவர்களைப்போல,             இக்கரையின்      தன்மை
அறியாமலும்,  மற்றும் 'மரணம்' என்பது  உங்களது ஒவ்வொரு செல்லிலும்
பொறிக்கப்பட்டுள்ளது;   சீக்கிரமாகவோ,  அல்லது  சற்று  தாமதமாகவோ
நீங்கள்   "மண்ணோடு மண்ணாவது"   உறுதி  என்பதை அறிந்தபோதிலும்
உடலுடனும்,  'உடலின்-வாழ்க்கை'யுடனும் உங்களை நீங்கள் அடையாளப்
படுத்திக் கொண்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.

ஒரு  'உயிருள்ள-ஜீவி' என்கிற வகையில்,  சந்தேகமின்றி  நீங்கள்  இக்கரை
யைச் சேர்ந்தவர்களே!    ஆனால்,  உங்களுடைய  இருப்பு   வெறும்    "உயிர்-
இருப்புடன்"  முடிந்துவிடுவதோ, முழுமையடைந்துவிடுவதோ இல்லை!

"மனித-இருப்பு"      அல்லது    "மனித-வாழ்க்கை"     என்பது,        வெறுமனே
'உயிரோடிருத்தல்' மற்றும் உயிரோடிருத்தலுக்காக பல்வேறு செயல்களை
செய்தல்  என்பதாக இருக்க முடியாது. ஏனெனில், நீங்கள் எவ்வளவு காலம்
உயிரோடிருக்கப்போகிறீர்கள்?   'விபத்து',   'நோய்',  'மூப்பு'   இந்த  ஏதாவது
ஒன்றினால் மரணம் நேரும் வரை உயிரோடிருப்பீர்கள்!

        ஆம், மரணம் நேரும் வரை- தினம்
        மூன்று வேளை உண்பீர்!
        மரணம் நேரும் வரை- தினமும்
        உறவு கொள்வீர்!
        மரணம் நேரும் வரை-
        சிரிப்பீர்  அல்லது அழுவீர்!
        ஆம்,  தினம் தினம் -வாழ்வீர்
        வாழ்வீர் வாழ்வீர்-மரணம் நேரும்
        மட்டும்!

நிச்சயமாக,       உயிரோடிருத்தல்    என்பது    அதனளவில்    முழுமையான
இருப்பாக,   வாழ்க்கையாக   ஆகிடாது!   ஒரு   அறுபது,     அல்லது, எழுபது
அல்லது   அதிகபட்சம்  ஒரு நூறு ஆண்டுகள்  வாழ்ந்து திடீரென ஒரு நாள்
மரணத்தில்  மறைந்து  போவதில்  என்ன   "அர்த்தம்"   இருக்க முடியும்?

மிகக் குறுகிய    ஆயுளைக்  கொண்ட   இந்த   'வாழ்க்கை'  ஏன்,  எதற்காக;
அப்படி  என்ன  'பெரிய'   குறிக்கோள்,  அல்லது   இலக்கு இக்குறுகிய கால
வாழ்க்கையின் வழியாக அடையப்படுகிறது?

'உயிரோடிருத்தல்' தான்     'வாழ்க்கை'   என்றால்,      பிறகு   'மரணம்'   ஏன்
சம்பவிக்கிறது,   வாழ்க்கையைப்   பறித்துச் சென்று     விடுகிறது?  ஒன்று:
இந்த  'வாழ்க்கை'  அபத்தமானதாயிருக்க  வேண்டும்!   அல்லது: 'மரணம்'
என்பது அபத்தமானதாயிருக்க  வேண்டும்!

ஆனால்,   நிச்சயமாக  வாழ்க்கை  அபத்தமானதாயிருக்க வாய்ப்பில்லை
மாறாக,  வாழ்க்கை என்பது  வெறுமனே 'உயிரோடிருத்தல்' என்பதைவிட
பெரிதாய் , வேறேதோவொன்றாய் இருக்க  வேண்டும்!  அதுவும்,  உயிரோ
டிருக்கும்  (காலத்தின்)   போதே    அது       சாதிக்கப்படவும்        வேண்டும்!
ஏனெனில்,  வாழ்க்கையின் அர்த்தத்தை, இலக்கை மரணத்தின் போதோ
அல்லது மரணத்திற்குப் பிறகோ அடையமுடியாது!    இவ்வாறில்லாவிடில்
வாழ்க்கைக்கு யாதொரு அர்த்தமும் இருக்க முடியாது!

உண்மையில்,  மனிதஜீவியின்  வாழ்க்கை  "உயிர்-இருப்பு"டன் தொடங்கு
கிறது.  ஆனால்,   உயிர்-இருப்புடன் முடிந்து விடுவதோ,  அல்லது முழுமை
யடைந்து  விடுவதோ  இல்லை!    மாறாக,   "உயிர்-இருப்பு"    முடிவதற்குள்
மனிதஜீவியானவன்    "உணர்வு-இருப்பு" க்குள்    பிரவேசித்து  உணர்வின்
உச்சத்தை  அடைந்திட  வேண்டும்.    உணர்வின்   உச்ச-நிலையைத் தான்
இங்கு  "மறுகரை" என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.

"மறுகரை"  என்பது  ஒவ்வொரு மனிதஜீவியும் அடைந்திட வேண்டிய, தன்
உணர்வின்  உச்சி  அல்லது  சிகரம்  ஆகும். அதுவே, இருப்பின், வாழ்க்கை
யின் முழுமையாகும்.

வாழ்க்கை  என்பது  நிச்சயமாக  "உயிர்-இருப்பு" (உயிரோடிருத்தல்) மட்டு
மல்ல.       மாறாக,   "உணர்வு-இருப்பே"        (உணர்வோடிருத்தல் என்பதே)
உண்மையான  வாழ்க்கை யாகும் !

ஏனெனில்,   உணர்வில்லாத  இருப்பு  இருப்பே அல்ல .இங்கே இப்பூமியில்
ஒரு  புழு,  பூச்சி கூட  தோன்றிடாத  காலத்தில்  இம்மாபெரும்   பிரபஞ்சம்
உயிர்ப்பற்ற சடமாய், சடத்துவ-இருப்பாய் இயங்கி வந்தது.

பிறகு,       உயிர்   தோன்றியதும்  "புறம்"  (புறவுலகம்)   பற்றிய      'உணர்வு'
மெலிதாய்  தொடங்கிற்று!  ஆனால்,  அப் 'புலன்-வழி-உணர்வு'  எவ்வகை
யிலும்   இருப்பை  (அகத்தேயும் சரி, புறத்தேயும் சரி)  உணரும் ஆழமான
உணர்வாக   வெளிப்படவில்லை!   அனைத்து    விலங்கு ஜீவிகளும்  தமது
உயிர்த் தேவைகளுக்காக   புறத்தை (உலகை)  நாடின.      அவை      தமது
உணவுத்தேடலைக் கடந்து "உலக-மெய்ம்மை" பற்றியோ, இன்னும் தமது
சொந்த   "சுயத்தின்-மெய்ம்மை"  பற்றியோ   உணர்வு  கொள்ளவில்லை!
ஏனெனில்,   விலங்கு-ஜீவிகள்   அனைத்திற்கும்    "சுய-உணர்வு"   என்பது
கிடையாது. அவைகளுக்கு, "தாம் இருக்கிறோம்!" என்பதே தெரியாது!

ஆம், உணர்வின் பரிணாமத்தில்  "சுய-உணர்வு" என்பது மிகவும் முக்கிய
மான, திருப்பு-முனையான ஒரு கட்டமாகும்.

ஏனெனில்,     உணர்வு   என்பது  வெறுமனே -  அதாவது,ஏதோவொரு ஜீவி
தன்னை  உணர்வு  கொள்ளாமல் -   தனக்குப்  புறத்தேயுள்ள  உலகையும்,
அதிலுள்ளவற்றையும்  மட்டுமே உணர்வு கொள்ளுதல் என்பது  பொருத்த
மானதல்ல.   இது  மிகவும் முக்கியமானது :   உணர்வு  என்பது  எப்போதும்
'எதையோ' பற்றியதோ, நோக்கியதோ அல்ல.    மாறாக, உணர்வு  என்பது
பிரதானமாக  உணர்வைப் பற்றியதே,  தன்னை  நோக்கியதே.   இவ்வாறு
இல்லாவிடில்,   பரிணாம  வழிமுறையில்,    ஒரு  கட்டத்தில்,   உணர்வுள்ள
மனித-ஜீவி என்பவன் தோன்றியிருக்கமுடியாது!

ஆம்,   உணர்வு  கொள்வதற்கு  முதலிடத்தில்    யாராவதொருவர், அல்லது
ஒரு  'உணர்வுள்ள'  ஜீவி வேண்டும்.  அதோடு,  அந்த ஒருவர்,அல்லது அந்த
ஜீவி முதலில் தன்னை உணர்வு கொள்வதாக, "சுய-உணர்வு" உடையதாக
இருப்பது அடிப்படை அவசியமாகும்!

ஆனால்,   'சுய-உணர்வுடைய'   மனிதனோ, 'சுய-உணர்வற்ற'  விலங்கைப்
போல,   தனது  சுய-உணர்வை,  பல்வேறு மேலோட்டமான    தேவைகளின்
பொருட்டு,  புறவுலகை  நோக்குவதிலும்,  ஆராய்வதிலும்,    கண்காணிப்ப
திலும்  முடக்கி  தனது சுய-உணர்வை வெறும்  'புற-உணர்வாக' ச் சுருக்கி
விட்டான். இதன் விளைவாக,புற-உலகம் முன்னிலைப்படுத்தப்பட்டு, அதி
முக்கியமான  தாகிவிட்டது!     உணர்வாகிய  மனிதன்  தனது முக்கியத்து
வத்தை  முற்றிலுமாக  உணரத் தவறிவிட்டான்!

மனிதனுக்கு  "தாம் இருக்கிறோம்!"  என்பது  (மட்டும்)  தெரியும்!    அதற்கு
மேல் "தாம் ஏன், எதற்காக இருக்கிறோம்?",  "எதை நோக்கிச்செல்கிறோம்,
அல்லது  செல்ல  வேண்டும்?",       "வாழ்க்கையின்   அசலான  குறிக்கோள்,
இலக்கு யாது?"  அல்லது,    "வாழ்க்கை என்றால் என்ன?" என்பவை எதுவும்
தெரியாது!  இதற்குக் காரணம், மனிதன் இன்னும்தனது "சுய-உணர்வுக்கு"
விழிக்க வில்லை!

மேலும்,மனிதனின் சுய-உணர்வு முழுமையான  தன்-உணர்வு அல்ல.அது
உணர்வின்  ஒரு  சிறு தொடக்கமே!   மேலும்,  அது பெரிதும் தானியங்கித்
தனமானது.     ஆகவேதான்,   மனிதன்   தனது  சுய-உணர்வையும்,   தனது
இருப்பையும் வெகு சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறான்.

மனிதனின்    சுய-உணர்வானது    முழுமையான    "தன்-உணர்வின்" முன்
வாசல்   போன்றதாகும்.   அது  உணர்வின்   ஒரு  சிறு  தொடக்க  நிலையே
"தாம் இருக்கிறோம்!"என்கிற சுய-உணர்வுடன் தான்மனிதனின் அசலான
இருப்பு- அதாவது, "உணர்வு-இருப்பு" தொடங்குகிறது.

"உணர்வு"  தான் இருப்பின், வாழ்க்கையின் அளவீடு ஆகும். ஒட்டு மொத்த
பரிணாம   நிகழ்வு  முறையானது    "சடம்",   "உயிர்",     "உணர்வு"       ஆகிய
நிலைகளை         அல்லது       கட்டங்களை    வளர்ந்து    கடந்து    இறுதியில்
"முழு-உணர்வு" எனும் நிலையில் முழுமை எய்துகிறது.

"இருப்பு",   "வாழ்க்கை"   என்பது  உணர்வை அடிப்படையாகக் கொண்டது.
"உணர்வு"  இல்லாமல்   இருப்பு  அர்த்தம் பெறாது.  உணர்வில்லாத வெறும்
'உயிர்-இருப்பு'   அர்த்தமற்றது.   அது 'விலங்குத்தனமானது'.     இதே போல
"தாம் இருக்கிறோம்!"    என்பதை   மேலோட்டமாக,   மெலிதாக  உணர்வது
அல்லது  உணர்ந்திருப்பது  என்பது      "அரை-மனிதத்தனமானது".

இதற்கு மாறாக,    தாம்   ஒரு      "உணர்வு"   என்பதை   உணர்ந்து, அதாவது
உணர்வாய் உணர்ந்து, ஆழ்ந்து,பெருகி முழு-உணர்வாய் மலர்வது ஒன்றே
"முழு-மனிதத்தனமானது"!

       ஆம், இருப்பு (வாழ்க்கை) என்பது உயிரோடிருப்பது
       பற்றியதல்ல - ஏனெனில்
      'உயிர்-இருப்பு' மிகவும் தற்காலிகமானது, மற்றும்
       மரணத்திற்கு  உட்பட்டது!
       உயிரோடிருப்பது  உணர்வோடிருப்பதற்காகவே!
       உணர்வோடிருப்பது  என்பதும்  ஒரு தொடக்கமே!
       உணர்வோடிருப்பது   முழு-உணர்வை அடையவே!
       ஏனெனில் முழு-உணர்வு மட்டுமே நிரந்தரமானது,
       நித்தியமானது, மரணமற்றது!
       ஆம்,  முழு-உணர்வுக்குக்  குறைவான
       எதுவும் மரணமே!

நிரந்தரமற்றவை   யாவும்     இக்கரையைச்   சேர்ந்தவையே.      ஏனெனில்,
இக்கரை  என்பது  காலத்தின்  உலகமாகும்!   கால-வெளி  உலகில்   உள்ள
யாவும்   'வளர்ச்சி',   'மாற்றம்',    'சிதைவு',   'மரணம்'  மற்றும்  'மறு-சுழற்சி'  
ஆகிய    விதிகளுக்கு  உட்பட்டவையாகும்!

மேலும்,  காலத்தின் உலகில் உள்ள ஒரு பொருள் எவ்வளவு உயர்ந்த, உச்ச
பட்ச வளர்ச்சி நிலையை  எட்ட முடிந்தாலும்  அது  ஒருபோதும்,   'முழுமை-
நிலையை'  மட்டும்   எட்ட முடியாது!    ஏனெனில்,   "முழுமை" , " நிரந்தரம்"
என்பவை   காலத்தின்-உலகை   மீறிய   தன்மைகளாகும்!      ஆகவேதான்
அவை,       காலமற்ற,           காலத்தைக் கடந்த,           காலாதீத  உலகமான
"மறுகரையை"ச் சேர்ந்தவையாக விளங்குகின்றன!   ஆம், "முழு-உணர்வு"
என்பது மறுகரையைச் சேர்ந்தது!

உணர்வே   இருப்பின்   அளவுகோல்!    இருப்பு  உணர்வைச்  சார்ந்துள்ளது.
தற்போது     நீங்கள் உங்கள்    இருப்பை  அரை-குறையாகவேனும்  உணர்
கிறீர் என்றால்,   அது  உங்களுடைய  அரை-குறையான   தொடக்க-நிலை
உணர்வைக்  கொண்டு தானே தவிர,   உங்களிடம்  உணர்வு இல்லையேல்
நீங்களும் தவளைகளைப்போலவே தான் இருப்பீர்!   நீங்கள்   "இருக்கிறீர்!"
என்பதைக்கூட அறிய மாட்டீர்!

"இருப்பு"  உண்மையில் இருப்பாக இருக்க வேண்டுமெனில், அது உணர்வு
உள்ளதாக இருக்க வேண்டும்.  'அரை-குறை' உணர்வு 'அரை-குறை' யான
இருப்பைக் குறிக்கிறதென்றால்,  'முழு-உணர்வு' முழுமையான இருப்பை
முழுமையான வாழ்க்கையைக் குறிக்கிறது!

ஆகவே,      மனித ஜீவியானவன்    தனது   ( முழுமையான)     இருப்புக்காக
இக்கரையைச்  சேர்ந்த 'நிரந்தரமற்ற'   உடலையும்,  உயிரையும்    சார்ந்து
இருக்கலாகாது!

ஒரு   உணர்வுள்ள   ஜீவி     என்கிற  வகையில்,           மனிதன்     ஏற்கனவே
மறுகரைக்கு   உரியவனாவான்!      ஏனெனில்,   உணர்வு      மறுகரையைச்
சேர்ந்தது.

       ஆம், 'நதி' மலையில் தான் தோன்றுகிறது
       என்ற போதிலும் அது
       மலைக்குரியதல்ல - உண்மையில்
       நதியை மலை உற்பத்தி செய்திடவில்லை!
       மாறாக, நதி உற்பத்தியாவதற்கு
       உகந்த இடமாக மலை உள்ளது
       அவ்வளவு தான்!
       மற்றபடி நதி சமுத்திரத்தைச் சேர்ந்தது!

நதியைப்போலவே,     மனித -உணர்வானது    உயிருள்ள    மனித-உடலில்
குறிப்பாக,  மனித-மூளையில் தோன்றிய போதிலும்,  அது இக்கரையைச்
சேர்ந்த  உடலையோ,  உயிரையோ,   இன்னும்  உலகையோ சேர்ந்ததல்ல!
மாறாக,  உணர்வு என்பது "முழு-உணர்வு" எனும் மறுகரையைச்சேர்ந்தது!

நதியானது  பாய்ந்தோடிடக் கூடியது,  அதைத்  தேங்கிடச் செய்தால்,  அது
இக்கரையையே       பிரதிபலிப்ப  தாயிருக்கும்  -     அது    சமுத்திரத்தைச்
சென்றடையாது!  ஆனால்,  அது   வெள்ளப்பெருக்கெடுத்திடும் பட்சத்தில்
பாய்ந்தோடிடக்கூடிய முடுக்கத்தையும் வேகத்தையும் பெற்றிடும்- பிறகு
நதியானது விரைவாக சமுத்திரத்தைச் சென்றடைந்திடும்!

அது போல, உங்களது தொடக்க-நிலை உணர்வில் நீங்கள் தேங்கி  விடும்
பட்சத்தில்,  உங்கள் உணர்வானது  இக்கரைக்கு உரியதாக, இக்கரையை
மட்டுமே  பிரதிபலிப்பதாக;   இக்கரைக்குரிய  உடலுடனும்,    அதனுடைய
பிராணித்தனமான இச்சைகள், பசிகள், மற்றும் மேலோட்டமான  தேவை
களுடனும்   தன்னை  அடையாளப்படுத்திக்கொண்டுவிடும் அபாயத்தில்
சிக்குண்டு விடும்!  அதன் பிறகு,  உங்கள்  உணர்வை  இக்கரையிலிருந்து
பிரித்தெடுப்பது அவ்வளவு சுலபமல்ல!

மாற்றம், மற்றும் மரணத்தின் விதிகளுக்கு உட்பட்ட இக்கரையில் நீங்கள்
சிக்கிக்கொண்டீர்   என்பதை  உணர்வதற்குள்   உங்கள் உடலும், மனமும்
தளர்ந்து போய்விடும்!    கிட்டத்தட்ட மரணம் உங்களை நெருங்கும் போது
தான்  நீங்கள்  இக்கரையில்  வெகுவாக  சிக்கிக்கொண்டுவிட்டீர் என்பது
தெரிய வரும்!   தெளிவாகச்  சிந்திக்கக் கூட  இயலாமல்  'மரணப்பீதியில்'
உறைந்து    போய்விடும்    அத்தருணத்தில்,     உங்களால்   எதுவும்   செய்ய
முடியாது! மரணமும் உங்கள் உணர்வை முழுமைப்படுத்தாது!
............
மா.கணேசன் / 19.02.2010





No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...