மனிதா, நீ தனியன்! அனைத்து உறவுகளுக்கும்,
பொருட்களுக்கும் மத்தியிலும், இப்பூமியிலும்,
ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்திலும் சரி,
நீ தன்னந் தனியனே !
மனிதன் பிறக்கும் போதும் தனியேதான் பிறக்கிறான்; இறக்கும்
போதும் தனியே தான் இறக்கிறான். ஆனால், பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையே அவன் வாழ்கின்ற காலத்தில் மட்டும் ஏன்
'தான் ஒரு தனியன்!' என்கிற உண்மையை மறந்து போகிறான்?
ஏன் உறவுச்சிக்கல்களில் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாகி
றான்?
இல்லாமலிருந்த மனிதன் 'பிறப்பு' எனும் கதவின் வழியாக
'இருப்பு' பெறுகிறான்! பிறகு 'இறப்பு' எனும் கதவின் வழியாகச்
சென்று மீண்டும் இல்லாமல் போகிறான்! தன் பிறப்பிற்கு முன்
இல்லாத மனிதன் தன் இறப்பிற்குப் பின் இல்லாமல் போவது
குறித்து ஏன் பயப்பட வேண்டும்? வருந்திட வேண்டும்?
தாய்-தந்தை எனும் கதவின் வழியாக இவ்வுலகிற்குள் நுழையும்
மனிதன், தான் எதற்காக, எந்த நோக்கத்திற்காக, எந்த இலக்கை
குறிக்கோளை அடைவதற்காக இருப்பு பெற்றான் என்பதை
ஆராயாமல்," பெற்றோர்" எனும் கதவைக்கட்டிக்கொண்டு தனது
பாலகப் பருவம் வரை அகலுவதேயில்லை! மனிதனைக் கட்டிப்
போடுகின்ற முதல் உறவு இதுவே, இக்கதவே! அப்படியே அவன்
அகன்றாலும் அடுத்தடுத்த உறவுகளில் அகப்படுவதற்காகவே
செல்கிறான்! பலர் கடைசிவரையிலும் அகலுவதே இல்லை!
அவர்கள் "தொப்புள்-கொடி" நீக்கப்படாதவர்கள்!
மனிதன் வாலிபப் பருவம் எய்தியதும், ஒரு பெண்ணைப்
பார்க்கிறான், காதலில் விழுகிறான், பிறகு கல்யாணம்பண்ணிக்
கொள்கிறான். அத்துடன், தான் இந்த உலகிற்குள்
பிரவேசிப்பதற்கு கருவியாக அமைந்த பெற்றோர் எனும் கதவை
முற்றிலுமாக மறந்தே போகிறான் ! ஏனெனில், அவன் தன்
பங்கிற்கு ஒரு 'கதவாக' மாறிவிடுகிறான்! அதாவது அவன்
குழந்தை-குட்டிகளைப் பெற்றுக்கொண்டு குடும்ப- உறவு
களுக்குள் சிறைப்பட்டுவிடுகிறான்! இனி அவன் ஒருபோதும்
தான் எதற்காக, எந்த குறிக்கோளுக்காக, இப்பூமிக் கிரகத்திற்கு
கொண்டு வரப்பட்டான் என்பது குறித்தோ, தன் வாழ்வின்
அசலான அர்த்தம் மற்றும் இலக்கு குறித்தோ ஆராயப்போவது
இல்லை !
மனிதனது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே ஏற்படுகின்ற,
தாய்-தந்தை, குடும்ப, சொந்த-பந்த உறவுகள், மற்றும் மனிதன்
ஏற்படுத்திக்கொள்கின்ற நண்பர்கள், எதிரிகள், கொடுக்கல்-
வாங்கல் பரிவர்த்தனை உறவுகள் என எல்லாஉறவுகளும் மனித
வாழ்வின் அசலான நோக்கத்தை, குறிக்கோளைச்
சிதறடிப்பவையே, திசை தவறச் செய்பவையே! இந்த மனித
உறவுகளுடன், பலவகைப்பொருட்களுடனும் சொத்து-சுகங்கள்
மற்றும் உடமைகளுடனும் மனிதன் ஏற்படுத்திக்கொள்ளும்
உறவுகளும் அவனைச் சிறைப்படுத்துபவையே! இன்னும், எல்லா
விதமான அரை-உண்மைகள், கொள்கைகள், கோட்பாடுகள்,
இயங்கள், பிணைப்புகள், மற்றும் அனைத்துவிதமான
அடையாளங்களுடனான உறவுகளும் மனிதனை முடமாக்கு
பவையே, சிறைப்படுத்துபவையே !
மனிதன் தன்னைப் பற்றிப் படரும் உறவுகளின் தன்மைகளை,
அவற்றின் பங்கு, பணி, பாத்திரம் ஆகியவற்றைப் புரிந்து
கொள்ளாமல் பிணைக்கப்படும் நிலையில் அவனும் பலவகை
உறவுகளில் - ஒவ்வொரு உறவுக்கும் ஏற்ப வெவ்வேறு உறவு
முறையை, பாத்திரத்தை தழுவிக்கொள்கிறான், அல்லது
அடையாளப்படுத்தப்படுகிறான். ஒரு மனிதனுக்கு அவனது
பெற்றோர் தான் முதல் உறவு ; அப்பெற்றோருக்கு அவன் "மகன்"
என அடையாளப்படுத்தப்படுகிறான். அம்மனிதனுக்கு உடன்
பிறந்தவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அவன் சகோ
தரன் ஆகிறான். அம்மனிதன் ஒரு பெண்ணை திருமணம்புரிந்து
கொள்ளும் போது "கணவன்" என்றாகிறான். பிள்ளைகளைப்
பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவன் ஒரு "தந்தை" ஆகிறான்.
சமூகத்திற்கு, தேசத்திற்கு அவன் ஒரு "பிரஜை " ஆகிறான். பிற
மனிதர்களுக்கு அவன் "சக மனிதன்" ஆகிறான். ஆக உறவு
களின் வட்டத்திற்குள் எவ்வொரு மனிதனும் ஒரு "மனிதனாக"
தலையெடுக்கவோ, வளரவோ, வாழவோ, முக்கியமாக தனது
சாரமான "மனிதத்தை" நோக்கிப் பயணிக்கவோ இடமோ,
வாய்ப்போ, அவகாசமோ கிடையாது.
ஏனென்றால், ஒவ்வொரு உறவிற்கும் குறிப்பிட்ட கடமைகளும்,
பொறுப்புகளும் உள்ளதால் அவற்றையெல்லாம் அவன்
கவனித்தாக வேண்டும், சுமந்தாக வேண்டும், பூர்த்திசெய்தாக
வேண்டும் எனும் நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் ஒரு மனிதனால்
தன்னுடைய உள்ளார்ந்த சாரமான சுயத்தை வெளிக்கொண்டு
வருவதற்கான கடமையையும், பொறுப்பையும் பற்றிச் சிந்திப்
பதற்குக்கூட அவகாசம் இருப்பதில்லை எனும் நிலையில்
அவற்றை நிறைவுசெய்தல் என்பது சிறிதும் சாத்தியமற்றதாகும்.
ஒரு மனிதன் வீடு-நிறைந்த உறவுகளுக்கு மத்தியில்இருந்தாலும்,
சமூகத்தில் பெருந்திரளான மக்கள் கூட்டத்திற்கிடையே புழங்கி
வந்தாலும் அவனுடைய அசலான உறவு நிலை என்பது அதாவது
அவன்ஒரு "தனியன்" என்பது சிறிதும் மாறுவதில்லை!
மனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும் மட்டுமல்ல அவன்
வாழும் காலத்திலும் தனியனாகத்தான் வாழ்கிறான், அனுபவம்
கொள்கிறான். உங்களுக்குப் பக்கத்தில் இருப்பவன் 'இனிப்பு'
சாப்பிடுகிறான் என்றால் அதன் அனுபவம் அவனுக்கு மட்டும்
தான் கிடைக்கும். உங்கள் காலில் 'முள்' தைத்தால் உங்களுக்கு
மட்டும் தான் அதன் வலி; அடுத்தவனுக்கு வலிக்காது.
நாம் நெருங்கிய உறவுகளுடனும் , சக-மனிதர்களுடனும் பழகு
வதன், நெருங்கி உறவாடுவதன் மூலமாக வாழ்க்கையை
உண்மையாகவும், முழுமையாகவும் வாழ்ந்து விடுவதில்லை!
நாம் சேர்ந்து உண்ணலாம், கூடிப் பேசலாம், ஆடலாம், பாடலாம்
ஆனால், இவ்வழிகளிலெல்லாம் நாம் வாழ்க்கை எனும்
புதிருக்கு நெருக்கமாகி விடுவதில்லை ! ஏனெனில், அசலான
வாழ்க்கை என்பது எல்லாக்காலங்களிலும் "தனிமனித" பூர்வ
மானதாகும். அதாவது, தனிமனிதர்களால் மட்டுமே அசலான
வாழ்க்கையுடன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொள்ளவும்;
வாழ்க்கையை ஆழமாக அறிந்து கொள்ளவும் முழுமையாக
வாழவும் இயலும்.
சமூக-பூர்வமான வாழ்க்கை என்பது மிகவும் மேலோட்டமானது.
ஏனெனில், அது "பொதுப்படையானது". ஒரு சமூகத்தின் எல்லா
அங்கத்தினர்களும் பகிர்ந்து கொள்ளக்கூடிய 'பொதுவான'
அம்சங்களால் மட்டும் ஆனது ! ஆகவே, அது சராசரியானது,
சாமானியமானது. ' சமூகம் ' என்பது ஒரு தனிமனிதனைப்
போன்றதொரு நிஜமான, இரத்தத்தாலும், சதையாலும் ஆன;
யாவற்றுக்கும் மேலாக, உணர்வுள்ள ஜீவி யல்ல! அது இன்னும்
தான் ஒரு உணர்வுதான் என்கிற உணர்வுக்கு வராத, இன்னும்
தான் ஒரு "தனியன்" எனும் தன்னிலை உணராத 'தனி மனிதர்'
களின் கூட்டமாகும் ! மேலும், அது அனைவருக்கும் பொதுவாக
உள்ள அம்சங்களை மட்டும் பிரித்தெடுத்து ஒரு 'மனித
மாதிரியை' யும், மற்றும் ஒரு 'வாழ்க்கை-மாதிரியை' யும்
அங்கீகரித்து இடமளிக்கும் ஒரு வித்தியாசமான, கலவையான
ஜந்து ஆகும்! அது " தனித்தன்மை" அறியாதது. ஏனெனில்,
தனித்தன்மை என்பது ஒரு சமூகத்தைப் பொறுத்தவரையில்
அந்நியமானது, வழக்கத்துக்கு மாறானது ; ஆகவே அது
'விதி-மீறலு'க்குச் சமமானது ! எவ்வொரு சமூகமும் மனிதர்
களிடமுள்ள பொதுத்தன்மைகளை மட்டுமே அனுமதித்து
ஏற்றுக்கொள்ளும்; தனித்தன்மைகளை அது கணக்கில்
கொள்ளாது. ஆகவே, எவ்வொரு சமூகத்திலும் அசலான தனி
மனிதர்கள் தோன்றவும், வளரவும் முடியாது!
சமூகமானது "புத்தர்" போன்ற ஒரு தனிமனிதரை தனது
பிரஜையாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்வது என்பது எளிதான
விஷயம் அல்ல! ஏனெனில், சமூகத்திற்கு புத்தரிடம் யாதொரு
வேலையும் இல்லை! புத்தரால் அதற்கு ஒரு பயனும் இல்லை !
அப்படியே அது புத்தரை ஏற்றுக்கொண்டாலும், அவரை ஒரு
'மனிதராக' ஏற்றுக்கொள்ளாது ! மாறாக, ஒரு 'மகான்' எனவும்
'கடவுள்' எனவும் முத்திரை குத்தி அவரை ஓரம் கட்டி விடும்!
மேலும், புத்தர் போன்ற ஒரு தனிமனிதர் சமூகத்தில் எவ்வொரு
இடத்திற்கும், உறவுக்கும் பொருந்துபவரல்ல ! ஏனெனில், புத்தர்,
இயேசு போன்ற தனிமனிதர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்ற
வாழ்க்கையும், அதன் இலக்கும் சமூகம் அறிந்த சாதாரண,
சராசரியான வாழ்க்கை, மற்றும் இலக்கிலிருந்தும் முற்றிலும்
வேறானவையாகும்.
சமூகத்தைப் பொறுத்தவரை 'வாழ்க்கை' என்றால் அது 'உயிர்
பிழைத்திருத்தல்' எனும் அடிப்படை வாழ்க்கையும், அதைப்
பூர்த்தி செய்துகொள்வதற்குரிய விவகாரங்கள் மட்டுமே யாகும்.
உண்மையில், "உயிர்-வாழ்தல்" எனும் அடிப்படை வாழ்க்கை
என்பது விலக்குதலுக்குரியதோ, தேவையற்றதோ அல்ல. மாறாக,
அது தவிர்க்கவியலாத அடிப்படையாகும். அதே நேரத்தில்,
பிரச்சினை எப்போது எழுகிறது என்றால், இந்த அடிப்படை
வாழ்க்கையே மொத்த வாழ்க்கையும், எல்லாமும் என்பதாக
அதிலேயே நாம் மூழ்கி விடும் போது அது மனிதத் தரத்திலிருந்து
கீழிறங்கி விடுவதோடு, முற்றிலும் அர்த்தமற்றதாகி விடுகிறது.
ஆக, அசலான மனித-வாழ்க்கையை மனிதர்கள் வாழவேண்டு
மானால், சமூகத்தின் மட்டுப்படுத்தும் தாக்கங்களிலிருந்தும்,
அதன் பகட்டான வெற்று-மதிப்புகள், மற்றும் விழுமியங்கள்
அனைத்திலிருந்தும், தனிமனிதர்கள் தங்களை விடுவித்துக்
கொள்வது அவசர அவசியம் ஆகும். மேலும், மனிதனை மட்டுப்
படுத்துகின்ற, பிணைக்கின்ற அனைத்து சமூகஉறவுகள் மற்றும்
அனைத்துவித குடும்ப, சொந்தபந்த, நண்பர்கள் உறவுகளில்
இருந்தும் மனிதர்கள் தங்களைவிடுவித்துக்கொள்வது அவசியம்.
இதன் அர்த்தம், உறவுகளே வேண்டாம் என்பதல்ல. மாறாக,
அசலான வாழ்க்கைக்கும், அதன் ஒப்பற்ற இலக்கிற்கும் சேவை
புரியும் வகையில் உறவுகள் யாவும் முறைப்படுத்தப்பட்டு
நிர்வகிக்கப்பட வேண்டும். இவ்வழியாக மட்டுமே ஒவ்வொரு
வரின்- ஆகவே ஆண், பெண் என பால்பாகுபாடின்றி அனைவரின்
உள்ளார்ந்த , சாரமான, மையமான சுயத்தின் நலம் சாதிக்கப்படும்.
அனைவரின் விடுதலையும் சாத்தியமாகும். தற்போதுள்ள உறவு
முறைகள் யாவும் மனிதர்களின் மேலோட்டமான சுயங்களின்
நலன்களுக்காக அவர்களின் சாரமான, அசலான சுயங்கள் பலி
யிடப்படுவதாய் அமைந்துள்ளவையாகும்.
உதாரணத்திற்கு, தற்போதுள்ள தன்மைகளில், மிக நெருக்கமான
'கணவன்-மனைவி' எனும் உறவை எடுத்துக்கொண்டால், அதில்
கணவனும் சரி, மனைவியும் சரி, இருவருமே பரஸ்பரம் ஒருவர்
இன்னொருவரால் மட்டுப்படுத்தப்படுகிறார்கள், முடமாக்கப்படு
கிறார்கள். இருவருமே 'குடும்பம்' எனும் சிறையின் ஆயுள்-கைதி
களாக அல்லல்படுகிறார்கள். உண்மையான "விடுதலை" என்பது
என்னவென்று தெரியாமல் பரஸ்பரம் ஒருவரிடமிருந்து ஒருவர்
விடுதலை பெற வேண்டி விவாகரத்து கோருகிறார்கள்! கணவன்-
மனைவி உறவு மட்டுமல்ல, பெற்றோர்-பிள்ளைகள் உறவும்,
அனைத்து உறவுகளும் மனிதர்களை மட்டுப்படுத்துவதாகவும்,
முடமாக்குவதாகவும், சிறைப்படுத்துவதாகவுமே உள்ளன. இதற்குக்
காரணம், அனைத்து உறவுகளும் மனிதர்களின் மேலோட்டமான
சுயங்களுக்கிடையிலான பரிவர்த்தனைகளாக அமைந்திருப்பதும்,
உண்மையான வாழ்க்கை பற்றிய நாட்டமின்மையும் தான்! இவை
அனைத்திற்கும் அடிப்படையான காரணம் நாம் "தனியர்கள்" எனும்
உண்மையை இன்னும் நாம் உணராததே யாகும் !
உண்மையில், நாம் ஒவ்வொருவரும் அசலான ஆழமான வாழ்க்கை
யைச் சந்திக்கவும், வாழவும் அஞ்சுகிறோம். ஏனெனில், நாம்
தனித்திருக்க அஞ்சுகிறோம். "தனிமை" என்பது ஒருவரை அவருள்
ஆழ்ந்திட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டுவதால், தனிமை
குறித்து பீதியடைகிறோம். ஏனெனில், ஒருவர் தன்னுள் ஆழ்ந்து
செல்ல வேண்டுமானால், அவர் தனியேதான் செல்ல முடியும். மேற்
புறத்து விஷயங்களையும், பொருட்களையும், உடமைகளையும்,
உறவுகளையும், பிணைப்புகளையும் தன்னுடன் கொண்டு செல்ல
முடியாது! மேலும், அவ்வாறு உள்ளாழும் ஒருவரது மேற்புறச்சுயமும்
உணர்வும் ஆழத்திற்கேற்ப மாற்றமடையக் கூடும்; அதாவது, ஒருவர்
தனது வழக்கமான சுயத்தை, அடையாளத்தை இழக்க நேரிடும்
என்பதால் கலக்கமும், பீதியும் அவரைத் தொற்றிக்கொள்கிறது!
தன் அடியாழம் வரை சென்று மீண்டு வரும் ஒருவர் முற்றிலும் ஒரு
புதிய சுயமாக, புதிய உணர்வாக, புதிய மனிதனாக, அதாவது
முழு-மனிதனாக, ஒரு புத்தனாக வெளிப்படுகிறான்! அசலான
ஆழமான "வாழ்க்கை" என்பதும், ஆழமான " சுயம்" என்பதும்,
ஆழமான "உணர்வு" என்பதும் ஒன்றுதான்!
ஆக, தனது மேலோட்டமான முகப்புச் சுயத்தை இழக்க
விரும்பாதவன், தனது முகப்புச் சுயத்தைக் கடந்து மேன்மேலும்
ஆழமாக வளர விரும்பாதவன் வாழ்க்கையின் மேற்புறத்திலேயே
அதன் மேற்புற உறவுகளிலேயே தங்கித்தேங்கி விடுறான். ஒரு புறம்,
மனிதர்கள் தாங்கள் "தனியர்கள்" எனும் உண்மையைத் தவிர்க்கும்
முகமாக பலவிதமான உறவுகளையும், பிணைப்புகளையும் ஏற்படுத்
திக்கொள்கிறார்கள். இவ்வாறு உறவுகளின் மத்தியில் இருப்பது பாது
காப்பானது என அவர்கள் நம்புகிறார்கள். இன்னொரு புறம், உறவுகள்
உறவுகள் அனைத்தும் மனிதர்களை அவர்களுக்குள் ஆழமாகச்
செல்ல விடாமல் பார்த்துக்கொள்கின்றன!
எவ்வொரு உறவும் மனிதனின், அவனது சுயத்தின் முன்னோக்கிய
வளர்ச்சிக்கு வழிவிடும் "கதவு"களாக, " திறப்பு"களாக அமைய
வேண்டுமேதவிர, மனிதனைச் சிறைப்படுத்துவதாக, அவனது
வளர்ச்சியைத் தடுப்பதாக அமைதல் கூடாது. அப்படியானால், எல்லா
உறவுகளும், மனித வாழ்வின் முன்னோக்கிய, வளர்ச்சிபூர்வமான
இயக்கத்திற்கு உதவுகிற வகையிலான கதவுகளாக, வாயில்களாக
அமையவேண்டுமானால், முடிவில் மனிதன் அடையக்கூடிய இறுதி
இடம் தான் எது? அல்லது எந்த உறவு மனிதன் சென்று சேரவேண்டிய
அடைவிடமாக, இறுதிக்கரையாக அமையக்கூடியது? சந்தேகத்திற்கு
இடமில்லாமல்,"மெய்ம்மை"யுடனான உறவுமட்டுமே மனிதனை கரை
சேர்க்கும், நிறைவு செய்யும், முழுமைப்படுத்தி விடுதலை செய்யும்!
மெய்ம்மையைத்தவிர வேறு எந்த உறவும் மனிதனை முழுமைப்படுத்
தாது. மேலும், இவ்வுலகம் ஒரு பாதுகாப்பானஓய்வகமோ, நிரந்தரமான
புகலிடமோ அல்ல! இது ஒரு தற்காலிக கல்விக்கூடவிடுதி போன்றது;
இது ஒரு விசேடமான பாடத்தைக் கற்பதற்கான கற்றல் மையமாகும்.
நிரந்தரமான வேறொரு உலகிற்குச் செல்வதற்கான ஆயத்தக் களம்
ஆகும். இவ்வுலகம் நிரந்தரமானதல்ல என்பதைப் போலவே
இவ்வுலகைச்சேர்ந்த உறவுகளும் நிரந்தரமானவையல்ல.
மனிதன் தனது பெற்றோருக்குச் சொந்தமானவனோ, தன் மனைவி
மக்களுக்குச்சொந்தமானவனோ அல்ல! இன்னும் அவனும் அவனுக்குச்
சொந்தமானவன் அல்ல ! மாறாக, அவனையும், அனைத்தையும், ஒட்டு
மொத்த இப்பிரபஞ்சத்தையும் எது கொண்டு வந்ததோ அந்த
மெய்ம்மைக்கு மட்டுமே சொந்தமானவன்!
நாம் எல்லோருமே பிறருடன் நல்லுறவில் அமைய வேண்டுமென
விரும்புகிறவர்களாக இருக்கிறோம். இதிலுள்ள மாபெரும் முரண்பாடு
என்னவெனில், நம்மில் ஒருவரும் தன்னுடனான உறவைப்பற்றிச்
சிறிதும் கருதுவதேயில்லை! ஏதோ, மனிதன் என்பவன் பலவகைப்பட்ட
உறவுமுறைகளுக்குப் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு
துண்டு என்பதைப் போலவும், அவ்வாறு உறவுகளில் அமையும்
பட்சத்தில் அவன் மந்திர ஜாலம் போல அதிகம் ' உயிர்ப்பு' பெற்று
விடுவது போலவும், முழுமையடைந்து விடுவது போலவும், யாவும்
படு அபத்தமாக உள்ளது!
ஒரு மனிதன் தன்னை அறியாத நிலையில், அவன் தன்னுடன் உறவில்
அமைவதில்லை! இந்நிலையில், எவ்வாறு ஒருவன்(ஒரு பூச்சியம்) பிற
மனிதர்களுடன்(பிற பூச்சியங்களுடன்) உறவில் அமைய முடியும்?
ஒருவன் தனது பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், தன்னுடைய
பெற்றோருக்கு மகனாகவும் இருப்பதன் வழியே வாழ்க்கையின்
எத்தகைய இறுதியான இலக்கு சாதிக்கப்படுகிறது,அடையப்படுகிறது?
எந்த உறவும் மனிதனை எங்கும் கொண்டு சேர்ப்பதில்லை! அனைத்து
உறவுகளும், மனித ஜீவிகளும் மரணத்தில் முடிந்து அர்த்தமிழந்து
போகிற "உயிர்-வாழ்தல்" எனும் மேலோட்டமான விவகாரத்திற்குச்
'சேவை' புரியும் கருவிகளாக மட்டுமே விளங்குகின்றன.
மனிதர்கள் பல்வேறு உறவுமுறைகளை, பாத்திரங்களை வகிப்பதன்
வழியாக தங்களின் மற்றும் வாழ்க்கையின் அர்த்தத்தைப்பெற்றுவிடு
வதில்லை! ஆதலால்தான், உறவுகள் யாவும் மேலோட்டமானவையாக,
பிரச்சினைகள் நிரம்பியவையாக உள்ளன. மேலும், உறவுகள் யாவும்
மனிதர்களை புறஅளவில் மட்டுமே இணைக்கின்றன,பிணைக்கின்றன,
பயன்படுத்திக்கொள்கின்றனவே தவிர (தனி)மனிதர்களின் "உள்ளீடு"
பற்றி சிறிதும் அக்கறை கொள்வதில்லை! உறவுகள் எனும்
'வலைப்-பின்னலின்' ஒரு பகுதியாக விளங்கும் மனிதன் உள்ளீடற்ற
வனாகவே உள்ளான். அவன் தன்னோடு யாதொரு ஆழமான
தொடர்பையும், உறவையும் கொண்டிருப்பதில்லை என்பது மிகவும்
பரிதாபகரமானது.
"வாழ்வின் ஊற்று" என்பது புறத்தேயுள்ள உலகிலோ, பரந்த
பிரபஞ்சத்தில் எங்கோ தொலைவிலோ, எங்கேயும் இருக்கவில்லை!
மாறாக, ஆணோ,பெண்ணோ அது ஒவ்வொரு தனிமனிதஜீவியின்
உணர்வின் அடியாழத்தில் மட்டுமே கண்டடையக்கூடியதாகும்!
புறவுலகம் உயிர்-வாழ்தலுக்கு அடிப்படையான காற்று, நீர், உணவு
ஆகியவற்றை மட்டுமே அளிக்கும். பிரபஞ்சம் என்பதன் பெரும்பகுதி
(99%)உயிரற்ற வெறும் சடப்பொருளே, ஒரு சதவீதத்திற்கும் குறைவான
சிறு பகுதி மட்டுமே உயிருள்ள ஜீவிகள், அதில் ஒரு சதவீதத்திற்கும்
குறைவான மிகச் சிறிய பகுதி மட்டுமே உணர்வின் சிறு பொறியைக்
கொண்ட மனிதஜீவிகள்! ஆம், வாழ்க்கைக்கான ஒரு அடிப்படையை
மாத்திரமே பிரபஞ்சத்தினால் அளிக்கமுடியும்! அதற்கு மேல்,
வாழ்க்கையை ஒவ்வொரு மனிதஜீவியும் தான் உணர்வுப்பூர்வமாக
கட்டியெழுப்பிட வேண்டும்.
வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக கட்டியெழுப்புவது என்றால் என்ன?
உண்டு, உறங்கி, இனம்பெருக்கி, சௌகரியமாக உயிர்-பிழைத்தலும்;
அதற்காகப் பணம் சம்பாதித்தலும் அல்ல மனித-வாழ்க்கை. ஒரு எலி
செய்வதையே நேர்த்தியாகச் செய்வதல்ல மனித-வாழ்க்கை!
மனிதனைப் பொறுத்தவரை "உணர்வு" தான் வாழ்க்கை. உணர்வு
இல்லாமல் மனிதனால் வாழ்க்கையை உணர முடியாது. மேலும்,
வாழ்க்கையை முழுமையாக உணர வேண்டுமானால், அதற்கு
"முழு-உணர்வு " என்பது வேண்டும். ஏனென்றால், "முழு-உணர்வு" தான்
முழுமையான இருப்பும், வாழ்க்கையும் ஆகும். மனிதன் உணர்வைப்
பெற்றிருப்பது உண்பதற்கும், குடிப்பதற்கும், உடுப்பதற்கும் அல்ல!
பசிக்கும், தாகத்திற்கும், பாலுணர்விற்கும் பதிலளிப்பது வாழ்க்கைக்கு
பதிலளிப்பது என்பதாகாது ! "இருப்பு" அல்லது வாழ்க்கைக்கு எதைக்
கொண்டு மனிதன் பதிலளிப்பான்? எதைக்கொண்டு பதிலளிக்க
வேண்டும்? ஆம், "உணர்வைத்தான்" ஒவ்வொரு மனிதனும் பதிலாக
அளித்திட வேண்டும்! உணர்வு, மேலும் உணர்வு, மேலும் மேலும்
உணர்வு . . . . . . . . . .
உணர்வுள்ள மனிதன் இவ்வுலகையோ இதிலுள்ள பொருட்களையோ;
தன்னைச் சுற்றியுள்ள உறவுகளையோ சேர்ந்தவனல்ல! ஒரு வகையில்,
மனிதன் இவற்றையெல்லாம் சார்ந்திருக்கிறான் என்பது தவிர அவன்
இவற்றைச் சேர்ந்தவனல்ல. மனிதன் உணர்வை மட்டுமே சேர்ந்தவன்.
ஏனெனில், உணர்வு தான் மனிதன்! மனிதன், 'உணர்வுள்ளவன்' எனும்
நிலையிலிருந்து 'உணர்வாகவே' , முடிவில் உணர்வின் முழுமையாகவே
ஆகிட வேண்டும்!
உணர்வின் மைய-நிலையும், முக்கியத்துவமும் மனிதனை அவனுடைய
"அகம்" நோக்கித் திரும்புவதை, தன்னுள் ஆழ்வதை, பிரதானப்படுத்து
கிறது. இதன் தொடர்ச்சியாக 'தனிமையும்', 'தனித்திருத்தலும்'
முக்கியத்துவம் பெறுகின்றன. தனிமை, தனித்திருத்தல் என்பவை
மிகவும் ஆழமான அர்த்தத்தையும், உணர்த்துதல்களையும் கொண்ட
வையாகும். தனித்திருப்பது என்பது யாதொரு உறவும், துணையும், சக
வாசமும் இல்லாமல் தனியே இருப்பது என்பதல்ல. ஒருவன் உறவுகளின்
மத்தியில் இருந்தாலும், பெருங்கூட்டத்தின் மத்தியில் இருந்தாலும்,
தனியே காட்டில் இருந்தாலும், அவன் தன்னில் வேர்கொண்டவனாக
தனித்திருத்தல் அவசியமாகும். சுருக்கமாக, தனித்திருப்பது என்றால்,
தன்னுடன், அதாவது, உணர்வுடன் இருப்பது, உணர்வாய் இருப்பது
என்பதே யாகும்.
மீண்டும் நாம் உறவுகளுக்கு வருவோம். உறவுகளை மதிக்கும் ஒருவர்
பிறரையும் தனித்திருக்க உதவுபவராக, பிறரது சுதந்திரத்தை மதித்து
பேணுபவராக இருப்பார். அதே நேரத்தில் , ' உறவுகளை மதித்தல்'
என்றால் என்ன? உறவுகளை மதிப்பதற்கு முன் ஒவ்வொருவரும்
வாழ்க்கையை மதிப்பவராக, நேசிப்பவராக இருப்பது முக்கியம்.
அப்போதுதான் உறவுகளை மதிப்பது, நேசிப்பது, கொண்டாடுவது என்ப
தெல்லாம் உண்மையிலேயே அர்த்தம் பெறும்!ஏனென்றால், உறவுகளுக்
காக உறவுகள் என்பதாக இருக்க முடியாது. ஆகவேதான், எந்த உறவும்
நம்மை முடக்குவதாகவோ, சிறைப்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது;
நாமும் எந்த உறவையும் சொல்லி பிறரை முடக்குவதோ, அல்லது,
சிறைப்படுத்துவதோ கூடாது என்று வலியுறுத்திச் சொல்லப்படுகிறது.
அடுத்து, உறவுக்கான முதல் அடி(ப்படை)யை ஒருவன் தன்னுடன் தான்
கொள்ளும்ஆழமான தொடர்பிலிருந்து தொடங்கிடவேண்டும்.ஏனெனில்,
மையம் என்று ஒன்று இல்லாமல் வட்டம் என்பது இருக்கமுடியாது.
"துறவு" என்கிற ஆழமான கோட்பாடு பிற தேசங்களை விட இங்கு
இந்தியாவில் தான் பிரதானப்படுத்தப்பட்டது எனலாம். அதேவேளையில்,
அக்கோட்பாடு வேறெங்கேயும்விட மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்
பட்டதும் இங்கு தான்! "துறவு" என்பது ஒரு மேலான உயரிய, இறுதியான
"மெய்ம்மை" யுடனான உறவைக்குறிப்பதாகும். ஆம், துறவு என்பது நாம்
சாதாரணமாக கருதுவது போல உறவுகளை உதறிச்செல்வதைப் பற்றிய
தல்ல! மாறாக, மனிதனை முழுமைப்படுத்துகிற இறுதியான உறவைப்
பற்றுவதற்காக பிற (இடை நிலை) உறவுகளைக் கடந்து செல்வதன்
அவசியத்தைப்பற்றியதாகும்.
மனிதன் "தனியனாக" இருக்கிறான் என்பது தான் அவனுடைய அசலான
நிலை ஆகும்.இன்னும்,அவன் பிற உறவுகளனைத்தையும் கடந்து செல்வது
எனும் அவசியத்தையும் விட பெரிய மகா-அவசியம், முக்கியமாக அவன்
முழுமையடைய வேண்டுமென்றால், ஒரு கட்டத்தில், அவன் தன்னையும்
கடந்து சென்றாக வேண்டும்!
"மனிதன் தன்னில் தானே முடிவானவன்" எனும் கூற்று உண்மையே அதன்
ஆழமான அர்த்தத்தில்! ஆனால், மனிதர்களின் தற்போதைய உணர்வு
வளர்ச்சியில் அவர்களுக்கு இக்கூற்று பொருந்தாது! மனிதன் இன்னும்
தனது உள்ளுறையாற்றலை உணர்ந்தவனாகவும் இல்லை; இன்னும் அவன்
ஒரு "உணர்வின்- ஜீவியாக" எழவும் இல்லை! மாறாக, பெரிதும் அவன் தன்
"உடலின்-ஜீவியாக"வே உழன்று கொண்டிருக்கிறான்! மனிதன் இன்னும்
தன் உணர்வின் கதவைக் கண்டுபிடித்தானில்லை! மனிதன் தன்னில்
முடிவானவனாக ஆவதற்கு தன் உணர்வின் கதவைக் கண்டுபிடித்து
அதன் வழியாகச் சென்று இருப்பின், வாழ்க்கையின் "மூலத்தானத்தை"
அடைந்தாக வேண்டும்!
உண்மையில், அசலான வாழ்க்கை என்பது தனித்திருக்கும் அந்த
"மெய்ம்மை"யை நோக்கிய தனிமைப் பயணமே ஆகும்! ஏனெனில், அன்பு
தனித்திருக்கிறது - முழுமையாகத் தன்னைத்தியாகம் செய்யத்துணியும்
ஒரு தனியனுக்காக! உண்மை தனித்திருக்கிறது -பேரார்வம் கொண்டுத்
தகிக்கும் ஒரு தனியனுக்காக! கடவுள் தனித்திருக்கிறார் - சாயலை
அசலாக்கி தன்னை வந்தடைந்திடும் ஒரு தனியனுக்காக!
மா.கணேசன் / 1.04.2016
No comments:
Post a Comment