Thursday, 14 April 2016

விபரீத ஞானம்




ஒரு குரங்கிடம் மனித-நிலையை
விளக்கிச் சொல்லிப் புரிய வைப்பது
இயலாத காரியம்!
ஒரு மனிதனிடம் புத்த-நிலையை
விளக்கிச் சொல்லிப் புரிய வைப்பது
என்பதும் இயலாது!

      <>

குரங்கிலிருந்து மனிதன் வந்தான்
என்று டார்வின் கோட்பாடு கூறுகிறதே
ஆனால், இன்னும் குரங்குகளும்
இருக்கின்றனவே?
அட, மனிதனிலிருந்து புத்தன் வந்த
பிறகும் , இன்னும் மனிதர்கள்
இருக்கத்தானே செய்கிறார்கள்!!

      <>

குரங்கு நிலை கடந்து மனிதனானவன்
மனித நிலை கடந்து கடவுளாகும் காலம்
வீணே கடந்து போய்க் கொண்டிருக்கிறது!

      <>

முதலில், உணர்வுக்கு வாருங்கள்!
பிறகு, எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்!
எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள்!

      <>

'வாழ்க்கை' என்றால் என்னவென்று
புரிந்து கொண்ட பிறகு, மேற்கொண்டு
புரிந்து கொள்வதற்கும்,வாழ்வதற்கும்
ஏதுமிராது!

      <>

'வாழ்க்கை' என்பது அறவியல் சார்ந்த
பிரச்சினை அல்ல!
அது மனிதன் விழிப்படைவதற்கான
சவால் ஆகும்!

      <>

தொடர்ந்து மனிதர்கள் மனிதர்களை
பிறப்பிக்கும் விலங்குகளாகவே
விளங்குகிறார்கள்!
கோடியில், ஓரிருவர் மட்டுமே
கடவுளைப் பிறப்பிக்கும்
மனிதர்களாக உயர்கிறார்கள்!

      <>

'நீங்கள் இருக்கிறீர்' என்பது
உங்களுக்குத் தெரியும்- ஆனால்
"அதிலென்ன அதிசயம்!" என்கிறீர்
அதனால்தான் சொல்கிறேன்
'நீங்கள் இருக்கிறீர்!' என்பதை
நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை
என்கிறேன் - கண்டுபிடித்திருந்தால்
இப்படி அலட்சியமாகப் பேச மாட்டீர்!

      <>

வெறுமனே உயிரோடிருக்காதீர் - அதற்கு
அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள்
உணர்வோடிருங்கள்- அதற்கு
அடுத்த கட்டத்திற்குச் செல்வதை
அப்புறம் பார்க்கலாம்!

     <>

நீங்கள்  உயிரோடிருக்கிறீர்!
வளமுடனோ அல்லது
வறுமையிலோ இருக்கிறீர்!
நோயற்றோ அல்லது
நோயுற்றோ இருக்கிறீர்!
உங்களில் சிலர் சொகுசாக
ஆடம்பரமாக இருக்கிறீர்!
நீங்கள் நல்லவராகவோ
அல்லது கெட்டவராகவோ
இருக்கிறீர்!
ஆனால்  நீங்கள் எவருமே
வாழவில்லை!!

     <>

நீங்கள் போகும் பாதையில்
பேராபத்து காத்திருக்கிறது
என்பது தெரிந்தும், இன்னும்
நீங்கள் உணர்வுக்கு வராதது
பேராச்சரியம் தான் ! ! ! ! !

     <>

"உணர்வோடிருப்பது என்றால் என்ன?"
என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்
எந்தப் பதிலும் வரவில்லை, ஒரு சிந்தனையும்
எழவில்லையா ?! அதுதான்,  அதுதான்
உணர்வு - அதனுடன் இருங்கள்!

     <>

உறைக்கு ஊற்றும் நேரம் கடந்து போனால்
பால்  கெட்டுப்  போகும்!
உறை ஊற்றி, பால் தயிராகி, தண்ணீர் விட்டு
மோராகி, மத்திட்டுக் கடைந்த பின்பு அது
மீண்டும் பாலாகுமோ?
விசார-வழியில் சிறிது சென்றவன்
சிறிது சிந்தித்தவன் மீண்டும் பழைய நிலை
திரும்ப இயலுமா? சொல்லுங்கள்!

     <>

மீன், மீன், மீனேய்!
மீன் வேணுமா?
கூடையை கீழிறக்க
உதவுங்கள்!
அப்போது தான்
என்னென்ன மீன்கள்
என் கூடையில் உள்ளன
என்பது உங்களுக்குத்
தெரியும்!
அந்தந்த மீனுக்கான
விலையைக் கொடுத்து
வாங்கிச் செல்லுங்கள்!

     <>

நானும், மாடு மேய்ப்பவன் தான்!
கண்டதையும் மேய்கிற இந்த மாடுகளை
மேய்ப்பது வர வர கடினமாகவுள்ளது!
அது என்னவோ, நல்ல புற்களை
கண்டாலே அவைகளுக்குப்
பிடிப்பதில்லை - அடிமாட்டுக்காரன்
காத்திருக்கிறான் என்பது
அவைகளுக்குத் தெரியவில்லையோ
என்னவோ ?
ஆனால், தடி கொண்டு விளாசும் போது
அவை கெஞ்சுகின்றன, அழுகின்றன!
நான் கொஞ்சம் அகன்றாலும் போதும்
மீண்டும் கண்டதையும் மேயத்தொடங்கி
விடுகின்றன, கண்றாவிக!

     <>

என் கூடையில் நல்ல நல்ல அரியவகை
மீன்கள்    உள்ளன!
கூடையை இறக்கிக் காண்பிக்கிறேன்
பார்க்கிறார்கள் ! ! ! ! !
ஆனால் நல்ல விலை கொடுத்து
வாங்கிச் செல்ல எவரும்
துணிவதில்லை!
ஆசைப்பட்டால் போதுமா?
பேராசைக்காரனுக !

     <>

சளைக்காமல் பழைய வைக்கோலையே
அசை போட்டுக்கொண்டிருக்கும்
இந்த மாடுகளுக்கு ஒரு சூடு
போதாது போல !
ம்ம்ம்ம்ம்!

     <>

முயற்சிக்காதே, பயிற்சிக்காதே, இரு!
இரு, இருந்தால், முழுமையாக இரு!
ஆசைப்படாதே, அது முழுமைக்குறைவு!
அமைதியைத் தேடாதே, அமைதியாக இரு!
தேடி உள்ளதையும் இழந்து விடாதே!
சிந்தனையற்ற அமைதி அறியாமை!
அமைதியற்ற சிந்தனை அறிவுக்குறைவு!
சோற்று-ஜீவியாய் சோம்பியிராதே!
அறிவைத் தின்று வாழும் அறிவு-ஜீவியாயிரு!
இன்னும் உயர்பேரறிவை நாடு!
சேர்த்தவையுடன் பெருமிதம் கொள்ளாதே!
சாவதற்குள் வீடு சென்று சேர்ந்திடு!

     <>

எருமை புல்லை மேய்ந்துகொண்டிருக்கிறது
அதன் வால் முதுகில் அமரும் ஈக்களை
ஓட்டிக்கொண்டிருக்கிறது!
நீ என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறாய்
அவ்வப்போது உன் தலையைச் சொரிகிறாய்!
அப்படிச் சொரிவது நீயல்ல, அந்த எருமை தான்!
அனிச்சையாக செயல்புரிபவனல்ல மனிதன்!
அப்படியானால் நீ மனிதனாக இருப்பது
எக் கணம் என்பதைக் கண்டுபிடி!

      <>

'வாழ்க்கையை கணத்திற்கு கணம்
விழிப்புணர்வுடன் வாழ வேண்டும்!'
என சிலர் சொல்கிறார்கள்-பலர்
அதை வழி மொழிகிறார்கள்!
இது சலிப்பூட்டும் வேலையற்ற வேலை!
கணத்திற்கு கணம் வேண்டாம்
ஒரே ஒரு கணம் மட்டும் முழுமையாக
விழிப்பாய் வாழ்ந்திடுங்கள் போதும்!
ஆற்றில் வெள்ளம் எப்போதும்
ஏற்படுவதில்லை!

      <>

வெள்ளப்பெருக்கெடுக்காத ஆறு
ஒரு போதும் சமுத்திரத்தைச்
சென்றடைவதில்லை!

      <>

எதையும் விழிப்புணர்வுடன் செய்ய வேண்டும்!
விழிப்புணர்வுடன் உண்ண வேண்டும்!!
விழிப்புணர்வுடன் நடக்க வேண்டும்!!!
விழிப்புணர்வுடன் அலுவல் புரிய வேண்டும்!!!!
விழிப்புணர்வுடன் உறங்க வேண்டும்(?)
இதைக் கேட்டுக்கேட்டு காது புளித்து விட்டது!
எது ஐயா, முக்கியம்?   விழிப்புணர்வா?
அல்லது   எதையேனும்   செய்வதா?
நீங்கள்   விழிப்புணர்வாக   இருந்தால்
அதற்கு மேல் செய்வதற்கு என்ன இருக்கிறது?

     <>

விழிப்பைத் தவிர பிறவனைத்தும்
விபத்துக்களே!

      <>

(ஒரு) மலரைப் பார்த்தேன் மலர்ந்தேன்!

      <>

தவிர்க்க முடியாதவைகளை
தவிர்த்திடுங்கள்!
தேவையானவைகளை
தேவையற்றதாக்கி விடுங்கள்!
நிர்பந்தமானவைகளை
நிராகரித்திடுங்கள்!
அவசரமானவைகளை
அலட்சியப்படுத்திடுங்கள்!
மாபெரும் மாற்றம் உங்களுக்குள்
நிகழ்ந்திடும்!
இவை எதுவும் உங்களால்
முடியாதெனில், வெறுமனே
புத்தனைப் பற்றி பேசாதீர்கள்
போற்றாதீர்கள்!

      <>

நாம் ஏதோ கல் மண் மற்றும் நீரால்
ஆன உலகில் (மட்டும்) வாழ்ந்து
கொண்டிருக்கவில்லை!
நாம் ஒரு மாபெரும் புதிருக்குள்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
ஞானி அனைத்தையும் புதிரின்
சொற்களுக்கு மாற்றிக் காண்கிறான்!
புதிரை வாழ்கிறான், புதிராகவே
ஆகி விடுகிறான்!
வாழ்தல் என்பது உண்மையில்
புரிதலே - புரிதல் என்பது
அனைத்தையும் மீண்டும் உணர்வில்
கரைத்து விடுவதே!
உணர்விலிருந்து உருவானவை
மீண்டும் உணர்விற்கே
திரும்புகின்றன!

      <>

பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வது
முதல் அவசியம் - இல்லாவிட்டால்
தேவையில்லாமல் அது நம் கவனத்தை
ஈர்த்து சிதறடித்துக்கொண்டேயிருக்கும்!

      <>

அர்த்தம் அறியாமல்
உச்சரிக்கக்கூடாத சொற்கள் :
          நான்
          அன்பு
          உணர்வு
          விழிப்பு
          உண்மை
          பிரபஞ்சம்
          கடவுள்
          வாழ்க்கை.

      <>

வசிப்பதற்கு
வீடு வாசல் தோட்டம் துரவு
எல்லாம் வேண்டும்.
வாழ்வதற்கு எதுவும் வேண்டாம்!

      <>

தயவு செய்து என்னிடம் வந்து
புத்தனையோ, தம்மத்தையோ
பற்றி பேசாதீர்!
புத்தனை நீங்கள் உச்சரிக்கும் விதம்
குமட்டலை ஏற்படுத்துகிறது!

      <>

தம்மத்தைப் பற்றி பேசாதீர்!
உணர்வே தம்மத்தின் அடிப்படை
விழிக்காமல் விழிப்பைப் பற்றி பேசாதீர்!
உணர்வு ஒரு பேசு-பொருள் அல்ல !

      <>

"எப்படி?" என்று கேட்பவன்
தன் அடிப்படையை -
நோக்கம், ஊக்கம், ஆர்வம்,
தன் வாழ்க்கை அனைத்தையும்
தொலைத்துவிட்ட ஒரு
நடைப்பிணம்.

      <>

பிரபஞ்சத்தையும் அனைத்தையும்
ஆராய்கிறதாம் - தன்னையறியாத
ஒரு குருட்டுப் புள்ளி!

      <>

உண்மையை இப் பிரபஞ்சத்தில்
தேடாதீர்-பிரபஞ்சமே
உங்கள் வழியாக அதைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறது!
நீங்கள் இப்ப்பிரபஞ்சத்தின்
முக்கியத்துவமற்ற  ஏதோ ஒரு
சிறு பகுதி அல்ல!
நீங்களே அதன் கண்கள்
நீங்களும் பிரபஞ்சமும் வேறுவேறல்ல!
பிரபஞ்சம் உங்கள் முதுகு
என்பதை உணர்ந்தால் போதும்!
அதற்கு மேல் அதைப்பற்றி
அதிகம் அறிந்து கொள்ள ஏதுமில்லை!
முதலும் இறுதியாகவும்
நீங்கள் அறிய வேண்டியது
அறிபவனாகிய  நீங்கள் "யார்?"
என்பதைத் தான்!

     <>

மா.கணேசன்/ 14.04.2016



No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...