Wednesday, 27 April 2016

வாருங்கள், வாழ்க்கையைப் பற்றிப் பேசுவோம்!


                (ஒரு உரையாடல்)
                               
    க (கணேசன்) : வாருங்கள், வாழ்க்கையைப் பற்றிப் பேசுவோம்!

    சு (சுரேஷ், மற்றும் சில நண்பர்களுடன்) : வந்து விட்டோம்,
சொல்லுங்கள்!

   க : நல்லது, முதலில் உட்காருங்கள்! சரி, ஆனால், யாருடைய
வாழ்க்கையைப் பற்றிப் பேசுவது  -   எலியின் வாழ்க்கையைப்
பற்றியா,    அல்லது   மனிதனின்  வாழ்க்கையைப் பற்றியா?

   முத் (முத்தையன்) : . . . . .(அமைதியாக அமர்ந்திருக்கிறார்) . . . . . ?!?

   முரு (முருகன்) : வரப்போகும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி
பெறும் என்று நினைக்கிறீர்கள்?

  க : ஏதாவதொரு கட்சி நிச்சயம்  வெற்றி பெறும்; ஆனால், மக்கள்
எப்போதும் போலவே தோற்றுப்போவார்கள்!

   முரு : என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? புதிய கூட்டணிக் கட்சி
பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

   க : தனிக்கட்சி, கூட்டணிக்கட்சி . . .இவை எல்லாமே கட்சி கட்டும்
அரசியல் சார்ந்தது தானே? விஷயம் என்னவென்றால், 'மக்கள்' ,
இன்னும் அசலானதொரு அரசியலுக்குத் தயாராகிடவில்லை!

   சு : அப்படியானால்,  'கட்சி- அரசியல்'  என்பது அரசியலாகாதா?

   க : ஆகாது! அர்த்தமுள்ள அரசியலைப் பற்றியும், 'வாழ்க்கையில்'
அரசியல்        எவ்விடத்தில்        பொருந்துகிறது   என்பது பற்றியும்,
ஏற்கனவே   என்னுடைய  vicharamarg வலைப்பதிவுத் தளத்தில்
வெளியான,    "அர்த்தமற்ற அரசியல்"    எனும்    எனது     நெடிய
கட்டுரையை  நீங்கள் வாசிக்கவில்லையா?

    நண்பர்கள் மூவரும் :  . . . ????? !!!!!!????@#$%^<>??

   க : வாசித்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும்! அதாவது,
"எது   அல்லது   யார்   நம்மை   ஆள   வேண்டும்?"    என்கிற  மிக
அடிப்படையான கேள்வியைக் கேட்காமல், அதற்கான  பதிலைக்
கண்டுபிடிக்காமல், அசலான அரசியலை நாம் ஒரு போதும் புரிந்து
கொள்ளமுடியாது!

  சு : 'வாழ்க்கையைப் பற்றிப் பேசுவோம்!' என்றீர்களே?

  க : இப்போதும் வாழ்க்கையைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருக்
கிறோம்;   துல்லியமாகச் சொன்னால்,   அசலான வாழ்க்கைக்குத்
தடைகளாக    நிற்கிற  விஷயங்களையெல்லாம்   இனம் கண்டு
களைந்து கொண்டிருக்கிறோம்! அதாவது, அசலான  வாழ்க்கைக்
கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்!

  முரு : அப்படியென்றால், இதுவரை நாம் வாழ்ந்து கொண்டிருப்பது
'மனித-வாழ்க்கை' இல்லையா?

  க : அதற்காகத்தான், தொடக்கத்திலேயே நான் கேட்டேன்; எலியின்
வாழ்க்கையைப் பற்றிப் பேசுவோமா, அல்லது மனித-வாழ்க்கை
யைப்  பற்றிப் பேசுவோமா? என்றேன்!

  முத் : நீங்கள் கேட்டது சரிதான், அதே நேரத்தில், இந்தத் தேர்தலில்
ஒரு நல்ல கட்சி வெற்றி பெற்றால், நம் மாநிலத்தில் ஒரு நல்லாட்சி
ஏற்படுமில்லையா?

  க : நல்ல கட்சி?  நல்லாட்சி? ஏற்படும்,  ஏற்படும், நல்லாவே
ஏற்படட்டும்!  அது சரி,   'நல்லாட்சி' என்றால் எப்படியிருக்கும்?  
விலைவாசிகள்  யாவும் கட்டுக்குள் இருக்கும்; வரிச்சுமைகள்
இருக்காது; விவசாய வளர்ச்சிக்கு முதலிடம் கொடுக்கப்படும்;
புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு   வேலையில்லாத்
திண்டாட்டம்  ஒழிக்கப்படும்;  சமூகத்தில்   எவ்வித ஏற்றத்தாழ்வு
மில்லாத நிலை  நிறுவப்படும். . .இப்படியே போனால்,     மக்கள்
எல்லோரும்  சுபிட்சமாக வாழ்வர்!  அவ்வளவு தானே?

   முரு : (கோபத்துடன்) வேறு எதை நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்?

    க : நான் எதிர்பார்ப்பது இருக்கட்டும். இவை யாவும் 'அடிப்படைகள்'
அல்லவா? மனிதர்கள் உயிர்-வாழ்வதற்குரிய அடிப்படைகளை, கட்டு
மானங்களை, ஆதார அம்சங்களை அடைவது தான் 'வாழ்க்கை'யின்
'பெரிய'  இலட்சியங்களா,   இறுதி-இலக்குகளா?    இவைகளை நாம்
போகிற   போக்கில்    அமைத்துக்   கொண்டிருக்க     வேண்டாமா?
இவைகளை,   இந்த,      உயிர்-வாழ்தலுக்கான     அடிப்படைகளை,
என்றைக்கு   நாம்    அமைத்து  முடிப்பது?  அப்புறம் என்றைக்கு நாம்
அசலான  மனித வாழ்க்கையை    வாழத்   தொடங்குவது?
   எல்லோருக்கும் நல்ல குடி-தண்ணீர்,   எல்லோருக்கும் மின்சாரம்,
எல்லோருக்கும்   சமையல்-எரிவாயு, எல்லோருக்கும் கல்வி,
எல்லோருக்கும் வேலை-வாய்ப்பு, எல்லோருக்கும் வீடு, இவை நம்
வாழ்க்கையின் அடிப்படைகளா?  அல்லது  போராடிக்  காத்திருந்து
பல ஆட்சி-மாற்றங்களைச் சந்தித்து அடையப்பட வேண்டிய உன்னத
இலட்சியங்களா? சொல்லுங்கள்!
   உண்மையில், நாம் வாழ்ந்துகொண்டிருப்பது 'மேன்மைப்படுத்தப்பட்ட
ஒரு எலி-வாழ்க்கை'யே, a Glorified rat-life, தவிர வேறில்லை!

  முரு : நீங்கள் ஏதோ ஒரு அதீதப் பார்வையிலிருந்து பேசுவதாகத்
தெரிகிறது! நீங்கள் மனிதகுலத்தின் அறிவையும், நாகரிகம்,
கலாச்சாரம்,  பண்பாடு, விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பக் -
கண்டுபிடிப்புகள், சாதனைகள் ஆகியவற்றை குறைத்து
மதிப்பிடுவதாகத் தெரிகிறது!

  க : இல்லை! இவற்றையெல்லாம் நீங்கள் 'உயர்த்தி' மதிப்பிடுவதால்
நான்   'தாழ்த்தி'   மதிப்பிடுவதாகத் தெரியலாம்! நீங்கள் குறிப்பிடும்
அறிவு,   நாகரிகம்,    விஞ்ஞான-தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள்,
வளர்ச்சி, முன்னேற்றம், சாதனைகள் யாவும் அவற்றிற்குரிய தளத்தில்
குறிப்பிடத்தக்க விஷயங்களாக இருக்கலாம், ஆனால், அவை எல்லா
வற்றையும்     ஒட்டு   மொத்தமாக   மனிதகுலம்   எதில்   "முதலீடு"
செய்துள்ளது என்பதை எவ்வாறு காணத் தவறினீர் ; மனிதகுலம்
தனது ஒட்டு மொத்த அறிவு, ஆற்றல், உழைப்பு அனைத்தையும்
"உண்டு-உறங்கி-இனம் பெருக்கிச் செல்லும் 'எலி-வாழ்க்கை'யில்
தானே முதலீடு  செய்துள்ளது; முடக்கியுள்ளது? அதனால் தான்
சொன்னேன்,    நாம்   வாழ்ந்துகொண்டிருப்பது  'மேன்மைப்படுத்
தப்பட்ட ஒரு எலி-வாழ்க்கை'யே என்று!

   முத் :  நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே! ஆனால், நாம் எவ்வாறு
இந்த எலித்தனமான வாழ்க்கையைக் கடந்து அசலான மனித
வாழ்க்கையுள் பிரவேசிப்பது? அப்படியானால், நாம் 'ஆன்மீகத்தில்'
ஈடுபட வேண்டுமா?

   க :  ஆம்,   ஒரு வகையில்,   நாம்   ஆன்மீகத்தில்    ஈடுபடத்தான்
வேண்டும். ஆனால், இங்கு, இப்போது நாம் நான்கு பேர் என்ன
செய்து கொண்டிருக்கிறோம்? ஆம், நாம் இப்போது ஆன்மீகத்தில்
தான் ஈடுபட்டிருக்கிறோம்! நாம் வாழ்க்கையைப் பற்றி சும்மா
பேசிக் கொண்டிருக்கவில்லை! வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்
"விசாரத்தில்" ஈடுபட்டிருக்கிறோம்! என்ன முத்தையன், புரிகிறதா?

   முரு :  ஆனால், வாழ்க்கையைப் பற்றி பேசுவது எவ்வகையில்
'வாழ்தல்' என்பதாகும்? அல்லது ஆன்மீகம் ஆகும்? சொல்லுங்கள்!

   க :  சொல்கிறேன், முதலில்  உங்கள் கேள்வி மிகவும் நியாயமானது.
சரி,  அதே நேரத்தில்,  'வாழ்தல்' என்றால் என்னவென்று நினைக்கிறீர்?
இங்கு நீங்கள் என்னுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கவில்லை
என்றால், இந்நேரம் நீங்கள் வீட்டிலோ, கடைத் தெருவிலோ, அல்லது
வேறு எங்கேயோ வேறு அலுவல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். சுருக்க
மாகச் சொன்னால், அன்றாடச் சுற்றில், உயிர்- வாழ்தலின் களத்தில்
உழன்று கொண்டிருப்பீர்கள், இல்லையா, முருகன்?
   அடுத்து, இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் குதர்க்கமாகக்
கூட உங்களுக்குத் தோன்றலாம்; அதாவது, வாழ்க்கையைப் புரிந்து
கொள்ளுதல் தான் வாழ்தல், வாழ்க்கை, எல்லாமும்! இதை விடுத்து
வேறு  எவ்வழியிலும் வாழ்தல் என்பது சாத்தியமாகாது!
வாழ்க்கையின் அர்த்தத்தை அறியும் தேடல், அல்லது விசாரம்
மட்டுமே ஒரே அர்த்தமுள்ள செயல்பாடும், வாழ்தலும் ஆகும்! சிலர்,
 'ஆன்மீகம்' என்ற பெயரில், பல்வேறு பயிற்சிகளைச் செய்து கொண்
டிருக்கிறார்கள்; அதை அவர்கள் பெரிதாக எதையோ செய்வதாக
எண்ணிக் கொண்டு தங்களை ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்று
தான்  சொல்லவேண்டும். ஆனால், அவர்கள் தங்கள் பயிற்சிகளை
முடித்த கையோடு உடனே சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிடு
கிறார்கள்! சாதாரண,சாமானிய மக்களோ, உண்பதும், உடுப்பதும்,
குடிப்பதும்;   அரட்டை, கேளிக்கை, பொழுது போக்கு போன்றவற்றை
யும் தான்  வாழ்தல், வாழ்க்கை என்பதாக வாழ்ந்து செல்கிறார்கள்!
   அடுத்து, பணக்காரர்கள், செல்வந்தர்கள் என்ன செய்கிறார்கள்?
ஆம், அவர்கள் வாழ்ந்து வரும்,பகட்டு நிறைந்த, செல்வச்செழிப்பு
மிக்க வாழ்க்கை என்பது, உண்மையில், பெரிது படுத்தப்பட்ட
சாதாரணம்; மற்றும் அபத்தமான வகையில் அலங்கரிக்கப்பட்ட
அன்றாடம் அல்லது வீண் ஆடம்பரமே தவிர வேறென்ன?
   விஷயம், இது தான், அதாவது நாம் இங்கு இவ்வாறு அமர்ந்து பேசி
விட்டு மீண்டும் 'பழைய' வாழ்க்கைக்குத் திரும்புவதில்லை;
திரும்பக் கூடாது, இல்லையா?

   சு :  அப்படியானால், பேசி முடித்துவிட்டு, நாங்கள் எங்கள் வீடு
களுக்கு திரும்பச் செல்ல வேண்டாமா? (எல்லோரும் சிரிக்கிறார்கள்!)

   க :  இல்லை, நாம் எல்லாவற்றையும் பேசி முடித்துவிட வில்லை!
ஆகவே  நாம் மீண்டும் இங்கே கூடுவோம்! மீண்டும் நம் வீடுகளுக்கு
திரும்பச்  செல்லுவோம்!  மீண்டும் இங்கே கூடுவோம்! அதாவது
மீண்டும் நாம்  நம் வீடுகளுக்கு திரும்புவதும், அன்றாடத்தில் ஈடுபடு
வதும், எதற்காக என்றால், நம்முடைய "வாழ்க்கை-விசாரத்தை"
முறையாகக் கொண்டு சென்று,  முழுமைப்படுத்துவதற்கு உதவுகிற
ஒரு "அடிப்படை"யாக அதைப் பயன் படுத்திக் கொள்வதற்காகத்
தானே தவிர, வீடுகளுக்குச் செல்வது,  அங்கே 'வாழ்வதற்காக' அல்ல!
வீடு, அன்றாடம், சமூகம், தேசம், உலகம் இவை உயிர்-வாழ்தலைக்
குறிக்கும் இடங்களாகும்.   ஆனால்,   நாம்  கூடும் இந்த  இடம்
'உண்மையான- வாழ்தலுக்கான'    "விசார-வெளி"  ஆகும்!

           . . . . . . .(யாரும் பேசவில்லை!) ..  .. . . . . . . . . .

   முரு :   'வாழ்க்கையைப் பற்றி பேசுவோம்!' என்று சொன்னீர்கள்,
ஆனால், வாழ்க்கையைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லை;
மாறாக,  பொதுவாக,     'மனிதர்கள்   தங்கள்    வாழ்க்கையை
வாழவில்லை!'   என  விமர்சனம் செய்கிறீர்கள்!

  க :  முதலிடத்தில், 'அன்றாடத்தை' ஓரம் கட்டி விட்டு இங்கு வந்து
அமர்ந்துள்ளோமே, இது தான், வாழ்க்கையின் தொடக்கம்! அசலான
வாழ்க்கை எங்கு தொடங்குகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும்  தான் தொடங்குகிறது!
"நீங்கள் இருக்கிறீர்கள்" என்ற உணர்வு தான் அந்த தொடக்கம்! நான்
இங்கு குறிப்பிடுவது உணர்வு-பூர்வமான வாழ்க்கையை, மனித
வாழ்க்கையை ! இதன் அர்த்தம், செடிகொடிகள் வாழவில்லை;
எலிகளும், தவளைகளும் வாழவில்லை; அவை வாழ்வது
வாழ்க்கையே அல்ல! என்றாகாது. உயிருள்ள அனைத்து ஜீவிகளும்
வாழவே செய்கின்றன; ஆனால், அவை அவற்றிற்கான
வாழ்க்கையை வாழ்கின்றன! மனித ஜீவிகளாகிய நாம் நமக்கான
வாழ்க்கையை வாழ வேண்டும்!

  சு :  'நாம் இருக்கிறோம்!'   என்பதை  நானும், ஏன்,  நாம் அனைவருமே
உணரத்தானே செய்கிறோம்?

    க :  நல்லது!  'நாம் இருக்கிறோம்!'   என்பதை நாம் அனைவருமே
உணரத்தான் செய்கிறோம்!  ஆனால், நாம் ஒவ்வொருவரும் "எதை",
'நாம்'  என அடையாளப்படுத்திக்  கொள்கிறோம்  என்பதில் தான்
சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது! பொதுவாக, 'நாம் உயிரோடு இருக்கி
றோம்!'  என்பதைத் தான் நாம் ஒவ்வொருவரும் உணர்கிறோமே
தவிர,  'நாம் இருக்கிறோம்!' இதையே  தன்னிலையில் சொன்னால்,
'நான் இருக்கிறேன்!'  என்பதாக   நாம்    ஒவ்வொருவரும்
உணர்வதில்லை!

   முரு :  'நான் உயிரோடு இருக்கிறேன்!'    என்பதற்கும்    'நான்
இருக்கிறேன்!'   என்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம் உள்ளது?

   க :  வித்தியாசம் உள்ளது; மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்!
'உயிரோடு இருக்கிறேன்!' என்பது  ஒரு உயிரியல் நிஜம்; எலியும்
தவளையும் கூடத்தான் உயிரோடு இருக்கின்றன!   ஆனால்,  'நான்
இருக்கிறேன்!'  என்று ஒருவர் உணர்வது என்பது  உயிரியல் நிஜத்தைக்
கடந்த உணர்வு-பூர்வமான நிஜமாகும்! ஆனால், அதில் நீங்கள்
எல்லோரும் பங்கு பெறுவதில்லை! இது தான் உங்கள் பிரச்சினையும்
மட்டுப்பாடும்!
   அடுத்து,  'உயிரோடு இருக்கிறேன்!' என்று உணர்வதில் உருவாகிற
பிரச்சினை என்னவென்றால், 'உயிரோடு இருப்பது' என்பது அதில் அதி
முக்கியத்துவம் பெற்றதாகி, 'உணர்வு' அல்லது, உணர்வோடிருத்தல்'
என்பது பின்னுக்குத்தள்ளப்பட்டுவிடுகிறது!  அதாவது,  'உயிரோடு
இருப்பதை'   உணரும்  நாம்   உடனே    (தொடர்ந்து)  உயிரோடு
இருப்பதற்கு ஊழியம் செய்வதை நம் வாழ்க்கையாகக் கொண்டு
விடுகிறோம்!  இவ்விடத்தில் தான் மனித ஜீவிகள் தடம் புரண்டு
எலியின் வாழ்க்கையைத் தழுவிக்கொள்கின்றனர்!
    உயிரோடு இருப்பதற்கு ஊழியம் செய்வதில் உள்ள மட்டுப்பாடு
என்னவென்றால், அது முடிவில், நம்மை மரணத்தில் கொண்டு
போய் சேர்த்துவிடும்! மனிதனின் அதிக பட்ச ஆயுட்காலம்
வெறும் நூறு ஆண்டுகள் மட்டுமே; அதற்கு மேல், இயற்கை
யுலகம்  'உயிரோடிருத்தலுக்கு' உதவிடாது!

  முத் :  சிலர்,  120 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் வாழ்ந்திருக்
கின்றனரே!?
 
   க :  அது பொது விதி அல்ல! அது விதி விலக்கான, அரிதான நிகழ்வு
ஆகும்! நீங்கள் நன்றாகப் பாருங்கள், ஒரு மனிதன் 60, அல்லது 70,
வயது அடைந்ததும் அவனது  உடலும், மனமும் தளர்ந்து போய்
விடுவதாயுள்ளது! உடலும், மனமும் தளர்ந்து போய், ஞாபகசக்தி
குன்றி, சிந்தனைத் தெளிவின்றி 200 ஆண்டுகளோ அல்லது 1000
ஆண்டுகளோ உயிர் வாழ்வதனால் என்ன பயன்? கடல்-ஆமை
யானது சர்வ சாதாரணமாக,  300, அல்லது 350 ஆண்டுகள் வரை
உயிர் வாழ்கின்றன; ஆனால், அது கடலுக்கடியில் வாழ்ந்து
கொண்டு என்ன சாதிக்கிறது? 350 ஆண்டுகளோ அல்லது 500
ஆண்டுகளோ வாழ்ந்தாலும் முடிவில் அவையும் மாண்டு
போகத் தானே செய்கின்றன?

   சு :  அப்படியானால், நாம் எப்படி வாழ்வது? எதை நம்பி, அல்லது
எதைச் சார்ந்து வாழ்வது?

   க :  உணர்வை நம்பித் தான், உணர்வைச் சார்ந்து தான், உணர்வை
உணர்வு கொண்டு , மேன்மேலும் உணர்வில் வளர்ந்து தான் வாழ
வேண்டும்! இது தான் ஒரே வழி! ஏற்கனவே பார்த்தோம், "நான்
இருக்கிறேன்!" என்பது உணர்வுப்பூர்வ நிஜம் என்று!

   முரு :  உணர்வை உணர்வு கொள்ளுதல் என்றால் என்ன? இதை
நீங்கள் அவ்வப்போது சொல்கிறீர்கள்; ஆனால், அதை அதிகம்
விளக்கிச் சொல்வதில்லை!

   க :  அது குறித்து அதிகம் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது?
அதாவது, உணர்வைக்கொண்டு தான் நீங்கள் உங்களுக்கு வெளியே
உள்ளவற்றையும், இன்னும், உங்களுக்கு உள்ளே உள்ளவற்றையும்
உணர்கிறீர்கள்,அறிகிறீர்கள்!  உண்மையில், உணர்வு தான் நீங்கள்.
     இப்போதும்,   எப்போதும்,   நீங்கள்   செய்ய வேண்டியது என்ன
வென்றால், புறத்தே   எந்தப் பொருளையும், நிகழ்வையும், எதையும்
பார்க்காமலும்,   (அதற்காக    நீங்கள்  உங்கள்  கண்களை  மூடிக்
கொள்ளத் தேவையில்லை!)  அகத்தே,  மனதில், எந்த  எண்ணத்
தையும் பின்பற்றிச் செல்லாமலும்  இருக்கும் பட்சத்தில்,  நீங்கள்
வெறும் 'உணர்வாய்' இருப்பீர்கள்!   இதுதான்  உண்மையில்,
' நீங்கள் நீங்களாக  இருப்பது'  என்பது!    நீங்கள் விரும்பும்
வகையில் இருப்பது என்பது அல்ல!  நீங்கள் விரும்பும் வகையில்
இருப்பது என்பது உண்மையில், 'உங்களுக்கு மாறாக இருப்பது'
என்பதாகும்! இன்னும், வாழ்க்கைக்கு மாறாகவும், எதிராகவும்
இருப்பது என்றாகும்! சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் உணர்வு
தான் என்பதை உணர்வது தான் ' உணர்வை உணர்வு கொள்ளுதல்'
என்பது! வேறு சொற்களில் சொன்னால், பிற எல்லாவற்றையும்
ஒதுக்கி விட்டு, "நான் இருக்கிறேன்!" என்ற உணர்வுடன், 'நான்',
'இருக்கிறேன்' என்ற சொற்களும் இல்லாமல் இருப்பது தான்
"உணர்வாய் இருப்பது" என்பது!  இந் நிலையில்  நீங்கள்  நீடித்து
நிலைக்கும் பட்சத்தில் நீங்கள் உணர்வின் வேறொரு பரிமாணத்
திற்குள் பிரவேசித்திருப்பீர்கள்!

  முரு :  ஆனால், எண்ணங்களின் குறுக்கீடில்லாமல், அதாவது
எண்ணமற்று இருப்பது எவ்வாறு?

   க :  நான் இப்போது சொன்னவற்றை கவனித்துக் கேட்டிருந்தால்
இந்தக் கேள்விக்கு அவசியமே இல்லாமல் போயிருக்கும்! முதலில்
எண்ணம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள், இல்லா
விட்டால், எண்ணமற்ற நிலைக்கு நீங்கள் ஒரு போதும் போகவே
முடியாது! எண்ணம் அல்லது எண்ணங்கள் என்பது உங்களுக்கு
வெளியேயுள்ள பொருட்களையும், நிகழ்வுகளையும், விஷயங்
களையும் குறிக்கின்ற 'ஒட்டுச்சீட்டுகள்', 'குறியீடுகள்' தான் அவை!
அவையில்லாமல் உங்களால்  சிந்திக்க முடியாது! அதே நேரத்தில்,
அவை இருந்தால், உங்களால்  சிந்திக்காமல், எண்ணாமல் இருக்க
முடியாது! இது தான் உங்களது பிரச்சினை!   ஒரு எண்ணம் என்பது
ஏதோவொரு பொருளை,  நிகழ்வை, விஷயத்தைக் குறிப்பதாயும்,
நினைவூட்டுவதாயும் தான் உங்களுள் எழுகிறது! உடனே நீங்கள்
அது குறித்து எண்ணத் தொடங்கி விடுகிறீர்கள்; அப்போது உங்கள்
உணர்வு அப்பொருளை, விஷயத்தை, நிகழ்வைப் பற்றியதாக
மாறி விடுகிறது! அதாவது,  உணர்வாகிய நீங்கள் நீங்களாக
இல்லாமல் போய்விடுகிறீர்கள்! அதாவது உணர்வு உணர்வாக
இல்லாமல், தற்காலிகமாக, அந்தப் பொருளாக, அல்லது, அந்தப்
பொருளைப் பற்றிய எண்ணமாகச் 'சுருங்கி'  விடுகிறது! இப்போது
பிரச்சினை எண்ணத்தை விரட்டுவதோ, காலி செய்வதோ அல்ல!
மாறாக, அந்த 'எண்ணம்' குறிக்கின்ற, சுட்டுகின்ற பொருளை,
அல்லது நிகழ்வை, அல்லது விஷயத்தை ஏன் நாம்
'ஒரு பொருட்டாக' எடுத்துக்கொள்கிறோம் என்பது தான்!
     ஆக,நாள் முழுவதும்  நாம் எண்ணற்ற பலவித எண்ணங்களால்,
அதாவது  எண்ணற்ற பலவித பொருட்களால், விஷயங்களால்,
நிகழ்வுகளால் ஈர்க்கப்படுகிறோம், துரத்தப்படுகிறோம், அலைக்
கழிக்கப்படுகிறோம்! அதாவது நமது ஒட்டுமொத்த வாழ்க்கையும்
புற விஷயங்களை, பொருட்களை, நிகழ்வுகளைப் பற்றியதாகவே
அவைகளைச் சுற்றிச் சுழல்வதாகவே உள்ளது!
    விஷயம் என்னவென்றால், நம் வாழ்க்கையில், புற விஷயங்
களுக்கும், பொருட்களுக்கும்,  நிகழ்வுகளுக்கும் இடமுள்ளது.
எவ்வாறென்றால், நமக்குத் தேவைகள் உள்ளன! ஆனால், நமக்குத்
தெரிவதில்லை; 'தேவைகள் மட்டுமே வாழ்க்கையல்ல' என்பது!
ஆகவே, நாம் எடாகொடமாகச் சிக்கிக் கொண்டுவிடுகிறோம்!
ஆகவே, தேவைக்குமேல்,தேவைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்
டிருப்பது, தேவைகளைத் தேடிக்கொண்டிருப்பது என்பதிலிருந்து
விடுபடாமல், எண்ணங்களிலிருந்து விடுபட முடியாது!
   வாழ்க்கையின் மேற்புறத்தேவைகளுக்குரிய பொருட்களை
நாம் தேடித்தான் ஆகவேண்டும், அதே நேரத்தில்,  வாழ்க்கையின்
"உட்பொருளை"அதாவது "அர்த்தத்தை" யும் நாம் தேடித்தான்
ஆகவேண்டும். இல்லாவிடில், நாம் உயிர்-வாழ்வது நோக்கமற்று,
குறிக்கோளற்று, இலக்கற்று, மொத்தத்தில், அர்த்தமற்றுப்
போய்விடும்!

   சு :  சரி, நேரமாகிவிட்டது, நாம் வீட்டிற்குச் செல்லலாம் என்று
நினைக்கிறேன்!

  க :  நல்லது, நாளை நாம் தொடர்ந்து பேசுவோம், இப்போது
கிளம்புவோம்!

 **  **  **  **  **  ***
மா.கணேசன்/ 26.04.2016



No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...