
எனது உணர்வுகள் தான் உங்களுடைய உணர்வுகள்
எனது விருப்பங்கள் தான் உங்களுடைய விருப்பங்கள்
எனது சோகங்கள் தான் உங்களுடைய சோகங்கள்
எனது சந்தோஷங்கள் தான் உங்களுடைய சந்தோஷங்கள்
எனது சந்தேகங்கள் தான் உங்களுடைய சந்தேகங்கள்
எனது சௌகரியங்கள் தான் உங்களுடைய சௌகரியங்கள்
எனது அசௌகரியங்கள் தான் உங்களுடைய அசௌகரியங்கள்
எனது பசி தான் உங்களுடைய பசி
எனது தாகம் தான் உங்களுடைய தாகம்
எனது காமம் தான் உங்களுடைய காமம் .....
என்பதாக எப்போதும் உங்களால் உணர முடியுமா? உணர்ந்து என்னுடன்
பயணிக்க முடியுமா? நிச்சயமாக, உங்களால் இவ்வாறு என்னைப்பிடித்து
தொங்கிக்கொண்டு, என்னைச் சார்ந்து கொண்டு, உங்களை பூச்சியமாக
ஆக்கிக்கொண்டு செயல் படவும், எனக்காக நீங்கள் வாழவும் முடியுமா?
ஆ! ஒருபோதும் முடியாது என்பீர். ஆனால், நீங்கள் அப்படித்தான் வாழ்ந்து
வருகிறீர் - என்னுடன் அல்ல; வேறு ஒரு மட்டுப்பாடான நபருடன்! அந்த
நபர் உங்களை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார் என்பது
தெரியாமலேயே நீங்கள் அவருடன் இணந்து செல்கிறீர்! சதா காலமும்
நீங்கள் அவருக்குச் சேவை செய்து வருகிறீர்! ஊழியம் புரிந்து வருகிறீர்!
# நிச்சயமாக என்னுடன் அவ்வாறு உங்களால் பயணிக்க முடியாது.
ஏனெனில், என்னிடம் நெருக்கம் கொள்ளமுடியாதபடிக்கு
உங்களிடம் நிறைய மனத்தடைகள் உள்ளன!
# ஆனால், வேறொருவருடன் அவ்வாறுதான் நீங்கள் நெடுங்காலமாக
பயணித்து வருகிறீர்!
# எனது கேள்வி என்னவெனில், ஏன் நீங்கள் அவ்வாறு உங்களுக்காக
அல்லாமல் வேறொருவருக்குச் சேவை செய்து வருகிறீர்? வேறொரு
வருக்காக வாழ்கிறீர்?
ஆம், நீங்கள் சேவை செய்து வரும் அந்த 'நபர்', "நீங்கள்" என தவறாக
அடையாளப் படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் "உடல்" தான்! "இதில்
என்ன தவறு - இது தானே இயற்கை?" என்று நீங்கள் கேட்கலாம்!
ஒரு வகையில், அது உங்கள் தவறு (மட்டும்) அல்ல! மாறாக, அது நீங்கள்
சேர்ந்து வாழும் ஒட்டு மொத்த சமூகத்தின் தவறாகும்! ஆம், ஒரு தவறை
எல்லோருமாகச் சேர்ந்து செய்யும் போது அது சரியானதாகத் தெரிகிறது!
ஒரு தவறு உணர்த்தப்பட்டும், அது தவறு எனத் தெரிந்த பிறகும் முதலில்
எல்லோரும் திருந்தட்டும் என தொடர்ந்து தவறான திசையிலேயே நாம்
செல்கிறோம்; தவறான வாழ்க்கையையே வாழ்கிறோம்! ஆனால், ஒரு
தொற்று நோய் நாடு, நகரம், உள்ளூர் முழுவதும் பரவிடும் போது மட்டும்
உடனே நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே மருத்துவரிடம் ஓடுகிறோம்!
நாம் அனைவரும் நோய்களையும், உடலுக்குத் தீங்கானவைகளையும்,
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எல்லாவற்றைக் குறித்தும் அஞ்சு
கிறோம்! அவற்றிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் அனைத்து
நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம்! 'விஷம்' எனத் தெரிந்த
எதையும் நாம் தொடக்கூட மாட்டோம்! நம்மில் சிலர் விஷம் அருந்தியோ,
அல்லது வேறு வழிகளிலோ தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்;
அவர்களைக் குறித்து நாம் குமைந்து போகிறோம்!
ஆனால், நமக்குப் புரிவதில்லை; தற்கொலைக்கு ஒப்பானதே நாம் வாழும்
வாழ்க்கையும் என்பது! உடனடியாகவும், நேரடியாகவும் உயிரைக் கொல்
லுகிற விஷங்களையும், வழிமுறைகளையும் குறித்து நம்மை எச்சரிக்கும்
சமுதாயம், அது தன்னகத்தே கொண்டிருக்கும் 'விஷம்' போன்ற பல
விஷயங்களையும், மதிப்புகளையும், விழுமியங்களையும், நடைமுறை
களையும், இலட்சியங்களையும், .....குறித்து அது நம்மை எச்சரிப்பதில்லை!
ஆம், தவறான ஒரு கருத்து, தவறான ஒரு உதாரணம், தவறான பார்வை
தவறான சிந்தனை, தவறான நம்பிக்கை, தவறான நடைமுறை, தவறான
மதிப்பீடு, தவறான இலட்சியம், தவறான நோக்கம், தவறான அடையாளம்
தவறான வாழ்க்கை இவையும் 'நோய்', அல்லது 'விஷம்' போன்றவையே!
நம்மில் சிலர் தற்கொலை செய்து கொள்வதற்கும் காரணம் சமுதாயமே!
'காரணம்' மிகவும் மறைமுகமாகச் செயல்படுவதால் அது நமக்குத் தெரி
வதில்லை! அவர்கள் உடனடியாகக் கொல்லும் விஷத்தை , அல்லது, வேறு
வழிமுறையைக் கொண்டு தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள்! நாமோ
மெதுவாகக் கொல்லும் 'விஷ-வாழ் முறை' யைப் பின்பற்றிச் சென்று
இயற்கையாக மாய்ந்து போகிறோம் என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்
கிறோம், இல்லை, இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்
கிறோம்! ஆம், "மரணம் இயற்கையானது" எனும் கோட்பாடு முற்றிலும்
தற்கொலைத் தனமானது எனும் உண்மையை நாம் அறிவதேயில்லை!
"மரணம் இயற்கையானது!" என்று சொல்வதன் பொருள் என்ன? அல்லது
எதுவொன்றும் 'இயற்கையானது' என்று சொல்லும் போது நாம் என்ன
அர்த்தத்தில் சொல்கிறோம்? முதலிடத்தில், இயற்கை என்பது ஆரம்பம்
இல்லாததோ, ஆகவே முடிவில்லாததோ, அல்லது நிரந்தரமானதோ,தானே
தோன்றியதோ அல்லது இறுதியானதோ அல்ல! இயற்கையுலகம் மாறிக்
கொண்டும், வளர்ந்து கொண்டும் செல்கிற ஒரு இயக்கம் ஆகும். அதில்
ஆக்கம், மாற்றம், வளர்ச்சி, சிதைவு, அழிவு, மரணம், முடிவு, மறுசுழற்சி
என்பவை யாவும் இடம் பெறுகின்றன. இவ்வாறு மாறிக் கொண்டே
யிருக்கும் இயற்கையுலகில், மனிதனுக்கு என்ன வேலை?
மனிதன் இயற்கையானவனா? இல்லை! *"மனிதன் தனது இயற்கையான
நிலையில் தொடரும்வரை அவன் மனிதன் அல்ல -இன்னுமொரு விலங்கு!
இயற்கையிலிருந்து தோன்றியவனே மனிதன்; எனினும், அவன்
இயற்கையை மீறிச்செல்லும் இயற்கையை, பேரியற்கையை சேர்ந்தவன்!
ஏனெனில், இயற்கை "சுய-உணர்வு" பெற்றிடும் போது அது தொடர்ந்து
(பழைய) இயற்கையாக இருப்பதில்லை!"*
இயற்கையின் "இயற்கை" என்று சொல்லும்படிக்கு மாறாத-தன்மை ஏதும்
உள்ளதா? அப்படி ஏதும் இல்லை! அதற்காக, "மாறிக் கொண்டேயிருப்பது
தான் இயற்கை" என்று சொல்வது சோம்பேறித்தனமானது! ஏனென்றால்,
இயற்கை வெறுமனே மாறிக்கொண்டேயிருப்பதில்லை! மாறாக, அது ஒரு
ஒப்பற்ற இலக்கு நோக்கிச் செல்கிறது. ஆம், இயற்கையானது அதனுடைய
அசலான முகத்தை, அதாவது அதனுடைய அசலான "இயற்கை"யைத்
தேடிச்செல்கிறது! அனைத்து மாற்றங்களையும் தீர்த்து முடித்துவிடும்
இறுதி விளைவை, அதன் முழுமையைத் தேடிச்செல்கிறது! இயற்கையின்
இந்த தேடல் வழிமுறைக்குப் பெயர் தான் "பரிணாமம்" என்பதாகும்.
இயற்கையானது மனிதனைக் கொண்டு (ஒவ்வொரு மனிதனையும்
கொண்டு) ஒவ்வொரு மனிதனின் வழியாகவும் தனது இலக்கைத்
தேடுகிறது!
ஒவ்வொரு மனிதனின் வழியாகவும் இயற்கையுலகம் (பிரபஞ்சம்) தேடும்
இலக்கு எத்தகையது? அனைத்துவித மாற்றங்களையும், அழிவுகளையும்,
முக்கியமாக மரணத்தையும் கடந்த "முழுமை" யே அது! ஆம்,
பிரபஞ்சத்தின் 'ஆரம்பம்' என்பது ஒரு படைப்புப்பூர்வ நிகழ்வு என்றால்
பிரபஞ்சத்தின் 'முடிவு' என்பதும் ஒரு படைப்புப்பூர்வ நிகழ்வாகத்தான்
அமைய முடியும்!
இப்போது, மீண்டும் நாம் பிரச்சினைக்கு வருவோம். 'மரணம் இயற்கை
யானது' என்பதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால், மனிதனில்
மரிப்பது, மரணிப்பது எது?ஆம்,மனிதனில் மரிப்பது அவனது உடல் தானே
தவிர மனிதன் அல்ல! மிகத் துல்லியமாக மனிதன் வேறு; அவனது உடல்
என்பது வேறு! இது நம்பிக்கை சார்ந்த விஷயம் அல்ல. இதைப் புரிந்து
கொள்வது அவ்வளவு கடினமானதல்ல என்றாலும், ஆயிரமாயிரம் ஆண்டு
களாக மனிதன் தவறாக தன் உடலுடன் தன்னை அடையாளப்படுத்திக்
கொண்டு வாழ்ந்து வந்திட்ட நடைமுறையால் இதைப் புரிந்து கொள்வது
என்பது அவ்வளவு எளிதல்ல தான்! அதே நேரத்தில், எளிதானதை, சுலப
மானதைச் செய்வதற்காகப் பிறந்தவனல்ல மனிதன்!
ஒருவன் தான் எதற்காகப் பிறந்துள்ளான் என்பதைப் புரிந்து கொள்வதில்
தான் அவனது 'உண்மையான வாழ்க்கை' அடங்கியுள்ளது. வெறுமனே
உயிர் வாழ்வதல்ல மனித வாழ்க்கை! அதைச் செய்வதற்கு எலிகளும்,
தவளைகளும் உள்ளனவே! மனிதனைப்பற்றிய ஒரு மையமான உண்மை
என்னவென்றால், அவன் ஒரு விலங்கு அல்ல; ஆனால், துரதிருஷ்டவசமாக
அவன் ஒரு விலங்கினுள்ளிருந்தவாறு வாழும்படிக்கு உருவாக்கப்
பட்டுள்ளான்! ஆம், அவனது "உடல்" தான் அந்த விலங்கு! அதேவேளையில்,
மனிதனின் உடலானது மனிதனுக்கு ஏற்றவகையில், விசேடமாக வடிவ
மைக்கப்பட்டதாகும். அதாவது "உணர்வு" எனும் தீபத்தை ஏற்றுவதற்குரிய
விளக்காக வடிவமைக்கப்பட்டதே மனித உடல்!ஆனால், மனிதனோ தனது
உடலுக்கேற்ற வகையில் தன்னை மாற்றிக்கொண்டு விட்டான்!
ஏற்கனவே குறிப்பிட்டபடி மனிதன் வேறு, அவனது உடல் வேறு! அப்படி
யானால், அதாவது மனிதன் என்பவன் அவனது உடல் அல்ல என்றால், பின்
எது மனிதன்? "உணர்வு" தான் மனிதன். உங்கள் உடலில், எந்த இடத்தில்
நீங்கள் உதிக்கிறீர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆம், மனித
உடலின் நரம்பு-மண்டலத்தின் உச்சபட்ச வளர்ச்சி நிலையான "மூளை"
யில் நிகழ்ந்திடும் மின்-வேதியியல் வினைகளின் விளைவாக உதிக்கின்ற
"உணர்வு" தான் நீங்கள்! முதலில் நீங்கள் குழந்தையாகப் பிறக்கும் போது
நீங்கள் ஒரு உடல்-ஜீவியாக, உயிருள்ள ஒரு உடலாகத்தான் பிறக்கிறீர்கள்;
பிறகு, மூன்று அல்லது நான்கு வயதில் உங்கள் மூளை நன்கு செயல்படத்
தொடங்கிடும்போது தான் நீங்கள் "நான்" என்று சொல்லத் தொடங்குகிறீர்!
ஆனால், நீங்கள் அப் பிராயத்தில், "நான்" என்று சொல்லும் போது நீங்கள்
உண்மையில் குறிப்பிடுவது உங்கள் உடலைத்தானா என்று கேட்டால்,
நிச்சயமாக அப்படித்தான் என்று சொல்லமுடியாது! ஆனால், ஒரு குழந்தை
வளர, வளர உடலை மையமாகக் கொள்ளும் அடையாளத்தை தனது
சுற்றுப்புறத்திலிருந்தும்,பிறமனிதர்களிடமிருந்தும் வரித்துக்கொள்கிறது!
அப்படியே ஒரு குழந்தை தன் உடலைத்தான் "நான்" என்று சொல்வதாகக்
கொண்டாலும், அதைத் திருத்துவதற்கு குடும்பத்திலும் சரி, சமுதாயத்
திலும் சரி, ஒருவரும் இல்லை! ஏனெனில், ஒருவருக்கும் தமது உண்மை
யான அடையாளம் எதுவென்று தெரியாது! ஐந்து வயதில் தொடங்கும் ஒரு
தவறு, ஐம்பது வயதிலும், அதைக் கடந்தும், தொடர்ந்து கொண்டே செல்
கிறது! உணர்வுப் பூர்வமாக, ஒவ்வொருவரும், நேரடியாக, உணர்ந்தறிய
வேண்டிய உண்மையை எந்த வயதிலும் எடுத்துச்சொல்லிப் புரிய வைத்து
விடமுடியாது! என்றாலும்,புரியவைக்கும் முயற்சிதொடரத்தான்வேண்டும்!
<> <> <> <> <> <>
கூர்ந்து நோக்குங்கள், ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்காலம் பூராவும்
நீங்கள் என்ன செய்கிறீர் என்பதை நோக்குங்கள் தினமும், 'தாம் எதற்காக
வாழ்கிறோம்?' என்பதே தெரியாத ஒரு ஜந்துவை நீங்கள் குளிப்பாட்டி
தூய்மைப்படுத்துகிறீர்,அதற்கு வேளாவேளைக்கு உணவளிக்கிறீர். அதை
விதம் விதமாக உடுத்தி அழகு பார்க்கிறீர்! அதன் தலைமுடி நரைத்து
விட்டால் அதை மைப் பூசி கறுமையாக்கி உங்கள் இளமையை மீட்டுவிட்ட
தாக அகமகிழ்கிறீர்! உடலுக்கு ஏற்படும் ஒவ்வொரு உபாதையையும்,
நோயையும் உடனடியாகப் போக்கிவிட்டு அமர்கிறீர்! ஆனால், 'உடலே
நோய்' , 'மனமே பெரும்பிணி' என்பதை நீங்கள் உணர்வதேயில்லை!
இவ்வாறு, உடலுக்கு உணவளிப்பதும், அதை தினம் குளிப்பாட்டுவதும்
உடுத்திக்காண்பதையும், இவற்றையெல்லாம் குறைவின்றி பூர்த்திசெய்வ
தற்காக 'பணம்' சம்பாதிப்பதும், அதிகப்பணம் சம்பாதிப்பதற்காக பெரும்
படிப்பு படிப்பதும், பெரும் பணி தேடியமர்வதும், ..... இவை தான் மனித
வாழ்க்கையா?
இங்கு, உடலை ஒரு 'விலங்கு' , 'ஜந்து' என்றெல்லாம் சொல்லி, அதைக்
கொச்சைப் படுத்திவிட்டோமா? இல்லை, இன்னும் நாம் உடலின் கீழியல்பு
களையும், நச்சரிப்பான அதன் இச்சைகளையும்; இன்னும், மனதின்
பிறழ்வுகளையும், கோணல்களையும் பற்றிப் பேசவேயில்லை!
உண்மையில், 'உடல்' அல்ல பிரச்சினைக்குரியது! அது ஒரு பரிணாமக்
கருவி - அதற்கு சில அடிப்படையான பசிகளும், உயிர் பிழைத்திருக்கவும்,
இற்றழிந்து போய்விடாமல் இருக்கவும் வேண்டும் என்கிற ஒரே உந்துதல்
மட்டுமே அதைச்செலுத்துகிறது! ஆனால், மனித 'மனம்' தான் அனைத்துப்
பிரச்சினைகளுக்கும் அடிப்படையாகும். அதன் அடையாள- மாறாட்டம்
தான் காரணம். அதற்கு மனதின், மனிதனின் விழிப்பற்ற தன்மை தான்
மூல காரணம்.
ஆனால், மனதை, மனிதனை விழிக்கச் செய்வது எப்படி? எது, அல்லது எந்த
விஷயம், மனதை உலுக்கி, மனிதனை விழிக்கச் செய்யும்? அப்படி
எவ்வொரு விஷயமும் இருப்பதாகத் தெரியவில்லை! இன்னும்,கடவுளாலும்
மனிதனை விழிக்கச் செய்ய இயலாது! ஏனெனில், கடவுளும் மனிதனுடைய
விழிப்பையே சார்ந்திருப்பதால், மனிதன் எப்போது விழிப்பான் என்று
காத்திருப்பதால் அவர் முற்றிலும் உதவியற்ற நிலையில் மனிதனுள்
சிறைப்பட்டிருக்கிறார்!
துன்பம், துயரம், சொல்லொனாச் சோகம், பேரிழப்பு, நஷ்டம், தோல்வி,
ஏழ்மை, வறுமை, வெறுமை, அர்த்தமின்மை, விரக்தி, தனிமை, சலிப்பு,
எதுவும் மனிதனை விழிக்கச் செய்யவில்லை! எது மனிதனை விழிக்கச்
செய்யும்? இன்பமும் மனிதனை விழிக்கச் செய்யவில்லை; துன்பமும்
மனிதனை விழிக்கச் செய்யாது என்றால், பிறகு எது மனிதனை விழிக்கச்
செய்யும்? " மரண பயம்?"
<> <> <>
* காண்க: "மனிதனின் சொல்"( பக்:44,45) மா.கணேசன்/ 2013
மா.கணேசன்/ 6.03.2009; 11.04.2016
No comments:
Post a Comment