
முதலில், "ஆன்மீகம்" என இக்கட்டுரையில் நாம் எதைக் குறிப்பிடுகிறோம்
என்பதைத் தெளிவு படுத்திக் கொள்வது அவசியமாகும்! ஆன்மீகம் என்பது
"ஆன்மா" எனும் வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்டதாகும்!ஆன்மா
என்பது ஆவி (Spirit), அல்லது "உணர்வு"(Consciousness)என்பதையே
குறிக்கிறது! அதாவது, ஆன்மீகம் என்பது ஆன்மாவைச் சார்ந்திருப்பது,
ஆன்மாவைச் சேர்வது, ஆன்மாவாய் மாறுவது என்பதே யாகும்! நுட்ப ரீதி
யாகச் சொன்னால், ஆன்மீகம் என்பது உணர்வுப் பூர்வமாகத் திகழ்வது,
உணர்வில் வளர்வது, முழு-உணர்வாய் மலர்வது என்பதே எனலாம்!
நம்மில் பலருக்கு, உணர்வுக்கும், மனிதனுக்கும் என்ன சம்பந்தம் என்ற
சந்தேகம் எழலாம்! ஆனால், உண்மை என்னவெனில், உணர்வுக்கும், மனித
னுக்குமான சம்பந்தம் என்பது சம்பந்தப் படுத்தப்படுவதால் ஏற்படுவதல்ல!
மாறாக, அந்த சம்பந்தம் மிகமிக நேரடியானது, மிகமிக நெருக்கமானது!
அதாவது, உணர்வு தான் மனிதன்! மனிதன் என்றாலே உணர்வானவன்
என்பது தான் அவனைப் பற்றிய சாரமான உண்மையாகும்! உணர்வில்லாத
மனிதன் ஒரு விலங்காகத்தான் இருக்கமுடியும்!
உண்மையிலேயே ஆன்மீக வளர்ச்சிக்கு எதிராகத் தடைகள் உள்ளனவா?
அப்படியெனில், எத்தனை தடைகள் உள்ளன? குடும்பம், மனைவி, மக்கள்,
உறவுகள்; பொருளாதார நிலை; குலம், கோத்திரம்,சாதி, இனம், நிறம், மதம்;
படிப்பு, வயது, உத்தியோக நிலை, இன்னபிற . . . . . எதுவும் ஆன்மீகத்திற்குத்
தடையாக நிற்கின்றதா என்றால், எதுவும் இல்லை என்பது தான் சரியான
பதிலாகும்! அதே நேரத்தில், உண்மையிலேயே ஆன்மீகத்திற்கு எதிராக ஒரு
தடை உள்ளது என்றால், அது ஒவ்வொரு தனி நபரும் தானே தவிர வேறு எது
வும் இல்லை! ஆம், ஒவ்வொரு மனிதனும் தானே தனக்குத் தடையாக விளங்
குகிறான் என்பதே அது!
இப்போது நாம் எவ்வாறு ஒரு மனிதன் தனது (ஆன்மீக)வளர்ச்சிக்குத் தானே
தடையாக விளங்குகிறான் என்பதைக் காண்போம்! ஆம், ஒவ்வொரு மனித
னும் தனது சொந்த இயல்புகளினாலேயே தனக்குச் சாதகமாகவோ அல்லது
பாதகமாகவோ அமைகிறான்!
• உணர்வற்ற தன்மை
-------------------
பெரும்பாலானோரது விஷயத்தில், உணர்வற்ற தன்மை என்பது தான் ஒரே
பிரதான தடையாகும்! உணர்வற்ற தன்மை என்கிற குடையின் கீழ் தான்
கீழே கொடுக்கப்பட்டுள்ள பிற தன்மைகள் யாவும் குடியிருக்கின்றன! அதா
வது, உணர்வற்ற தன்மை என்பதை மொழி பெயர்த்தால் பிறவனைத்து
மட்டுப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வரும்! அவையாவன:
* கீழியல்புகள்
* சோம்பல்
* அறிந்த வாழ்க்கையின் மீதான பிடிப்பு
* சுய-மையங்கொண்ட தன்மை (Self-Centeredness)
* சுய-திருப்தி (Complacency)
* சுய-முக்கியத்துவம் (Self-Importance)
* எதிர்ப்பு (Resistance)
உண்மையில், இவற்றுடன் இப்பட்டியல் முடிந்து விடுவதில்லை; மாறாக,
எண்ணற்ற பல காரணிகள் உணர்வற்ற தன்மையை நிலை நிறுத்துவதில்
இணைந்துள்ளன எனலாம். மேலும், அவை அனைத்தும் ஒன்றோடொன்று
தொடர்பில் அமைந்து ஒன்றுக்கொன்று ஆதார பலமாக செயல்படுகின்றன!
• கீழியல்புகள்
-----------------
மனிதன் விழிப்படையாதது
அவனது தோல்வி மட்டுமல்ல -அது
அவனுள் இன்னும் விழித்திருக்கும்
விலங்கின் வெற்றியுமாகும் !
( -மா.கணேசன்/விசார விளக்கு/25.12.2013)
கீழியல்புகள் என்பவை விலங்கு மூதாதையர்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட
குணாதிசயங்கள் ஆகும்! அவை விலங்கு ஜீவிகளுக்குரிய மட்டுப்பாடுகளில்
தோய்ந்தவையாகும்! பல கோடியாண்டுகளாக, வெறும் உடல் ஜீவிகளாகவே
வாழ்ந்து வந்த விலங்கு ஜீவிகளிலிருந்து தான் மனித ஜீவி தோன்றுகிறான்.
சிக்கல் என்னவெனில், திடீரென ஒரு விலங்கிற்கு மனம் அல்லது உணர்வு
முளைக்குமானால், அவ்விலங்கிற்கு அதைக் கொண்டு என்ன செய்வது
என்பது புரியாது! அத்தகைய ஒரு விசேடச்சிக்கலில் மாட்டிக்கொண்ட அந்த
விலங்கு வேறு எதுவுமல்ல; அது "மனிதன்" தான்! அதே வேளையில், புதிதாக
முளைத்த அவ்வம்சத்தின் பயன்பாடு என்னவென்று தெரியாத நிலையில்,
அவ்விலங்கு தனது பழைய வாழ்-முறைகளின்படியே வாழ்ந்து செல்லும்!
முடிந்தால் புதிதாக முளைத்த மனம், அல்லது உணர்வு எனும் அம்சத்தையும்
தன் பழைய வாழ்க்கைக்குப் பயன்படும்படியாக அது கையாளக்கூடும்! இவ்
வகையில் தான் மனித இனம் தமக்கு முளைத்த அந்த ஒப்பற்ற அம்சமான
மனதை, அதாவது உணர்வைப் பயன்படுத்தி வருகிறது! இன்றளவும், விதி
விலக்கான ஒரு சில தனிமனிதர்களைத்தவிர, மனிதர்கள், தாம் உடல்-ஜீவி
யல்ல, மன-ஜீவியே என்கிற உணர்வுக்கு வந்தபாடில்லை!
• சோம்பல்
------------
'சோம்பல்' என்பது ஒரு ஒற்றைச் சொல்லே என்றாலும் அது பல காரணி
களால் கட்டமைக்கப்பட்ட பண்பாகும்! நகல் செய்தல், ஒட்டுண்ணித்தனம்,
போலித்தனம், சுய-திருப்தி, பேராசை, மந்தம் போன்றவையே அக்காரணி
களாகும். 'நகல் செய்தல்' என்பது சுயமாக ஒன்றைச் செய்வதை, உருவாக்கு
வதை விட சுலபமானது என்பதால், முயற்சி, உழைப்பு, பிரயத்தனம் எதுவும்
இன்றி ஒருவன் எல்லாவற்றையும் நகல் செய்திடும் சுலபமான வழியைப்
பின்பற்றி சோம்பேறியாகச் சுகம் அனுபவிப்பதாகும்! இவ்வழியே அவன்
ஒரு நகலெடுக்கப்பட்ட வாழ்க்கையையே வாழ்கிறான் என்பதை உணர்வது
இல்லை! 'ஒட்டுண்ணித்தனம்' என்பது பிறரைச் சார்ந்து, பிறரது உழைப்பில்,
உதவியில் வாழ்வது ஆகும்! 'பேராசை' என்பது இவ்விடத்தில், வெறுமனே
ஆசைப்படுவதே அனைத்தையும் பெறுவதற்கான தகுதிச்சீட்டு எனக்கருதும்
மனப்போக்கு ஆகும்!
மந்தம், அல்லது மந்த புத்தி என்பது மெத்தனப்போக்கையும், சுணக்கத்தை
யும் அல்லது சுறுசுறுப்பின்மையையும் குறிக்கிறது! அதாவது, மனித வாழ்
வின் நோக்கம் பற்றிய எவ்வொரு துளியளவு உணர்வும் இல்லாத நிலையில்,
மனிதனுக்குப் பெரிதாக எதைப் பற்றியுமான எவ்வொரு தேடலும், பிரத்தி
யேக சிந்தனையும், செயல் நாட்டமும், முயற்சியும், ஈடுபாடும் தோன்ற
வாய்ப்பில்லாத நிலையே 'மந்தம்' எனப்படுவதாகும்! மேலும், முக்கியமாக,
மனிதர்கள் தங்களது 'உடல்-மைய வாழ்க்கை' யிலேயே திருப்தியடைந்து
விடுவதால், உயிர்-பிழைத்திருத்தலைக் கடந்த "உயர்-வாழ்க்கை" பற்றிய
சிந்தனையும், தேடலும், எதுவும் அவர்களுக்குத் தேவைப்படுவதில்லை
என்பதும் அவர்களுடைய மந்தத்தனத்திற்கும், சோம்பலுக்கும் காரணமாக
அமைகிறது எனலாம்!
• அறிந்த வாழ்க்கையின் மீதான பிடிப்பு
------------------------------------
'அறிந்த வாழ்க்கையின் மீதான பிடிப்பு' எவ்வாறு எழுகிறது என்றால், உணர்
வற்ற தன்மையின் பிரதான பிரச்சினை அடையாளச் சிக்கலே ஆகும்!
அதாவது, மனித மனம் தன்னைப்பற்றிய உணர்வுக்கு வருவதற்கு முன் அது
உடலுடன் தன்னை அடையாளப் படுத்திக்கொள்கிறது. இந்த உடல்-மைய
அடையாளத்தினால் அது உடலின் வாழ்க்கையையே தன் வாழ்க்கையாக
வரித்துக்கொள்கிறது! அதாவது, உடலின் தேவைகளே மனதின் தேவை
களும், உடலின் சௌகரியமே தன்னுடைய சௌகரியம்,உடலின் நோய்களே
தனது நோய்கள், உடலின் மரணம் தன் மரணமே என்பதாக மனம் கருதிக்
கொண்டு விடுகிறது! இந்த தவறான அடையாளத்திலிருந்து (Mis-Identi
fication)மனிதமனம் தன்னை விடுவித்துக்கொள்வது என்பது அவ்வளவு
எளிதாக நிகழ்வதில்லை! எவ்வளவுதான் ஆன்மீக போதனைகளைக் கரைத்
துக் குடித்தாலும்,எவ்வளவுதான் ஆன்மீகப்பயிற்சிகளை மேற்கொண்டாலும்
மனித மனம், அதாவது மனிதன் தன்னை நோக்கி விழிக்காமல் மனிதன்
உண்மையிலேயே மனிதனாக ஆவது இயலாது!
• சுய-மையங்கொண்ட தன்மை (Self-Centeredness)
-----------------------------------------------
சுய நலம், தன்-முனைப்பு, சுய-திருப்தி (Complacency)வெற்று சுய-முக்கி
யத்துவம், எதிர்-வினையாற்றல் ஆகியவை சுய-மையங்கொண்ட தன்மை
யின் உள்ளடக்கங்கள் ஆகும்.
• சுய நலம் :
'சுய நலம்' என்பது பிரதானமாக உணர்வின்மையையே குறிக்கிறது. ஏனெ
னில், எவரும் தமக்குத் தெரிந்தே சுய-நலமாக இருப்பதில்லை! மாறாக,
தன்னை அறியாத சுயத்தின் ஒரே நலம் சுய-நலம் மட்டுமே யாகும்!
• தன்-முனைப்பு :
தன்-முனைப்பின் மட்டுப்பாடு என்னவெனில், உருப்படியான படைப்புப்
பூர்வமான எவ்வித முனைப்புக்கும் செயல் நாட்டத்திற்கும் இடம் தராத
தன்மையே ஆகும்! அதாவது, எவ்வித உருப்படியான, தீவிர முனைப்பும்
இல்லாத தன்மைக்குப் பெயர்தான் "தன்-முனைப்பு" ஆகும்!
• சுய-திருப்தி (Complacency)
--------------------------------
தன் வயிறு நிரம்பியதும், உலகையே வென்றுவிட்டது போன்ற ஒரு திருப்தி
யுணர்வில் ஆழ்ந்துவிடல்! தான், தனது இச்சைகள், துய்ப்புகள் தான் உலகின்
எல்லை என்பதான உணர்வற்ற தன்மை! அதாவது நன்கு உண்டதும் பெறக்
கூடிய திருப்தியுணர்வை வேறு பல விஷயங்களைச் சாதித்துவிட்டாற்போல
எண்ணிக் கொள்கிற, ஒன்றுக்கு இன்னோன்றை ஈடாக, மாற்றாகக் கொள்
ளும் தன்மை! மேலும், கொஞ்சத்தில் அதிக நிறைவை அடையும் தன்மை!
அதாவது, 1+1= 2 என்பதை அறிந்து கொண்டதும் கணிதத்தின் எல்லையைத்
தொட்டுவிட்டது போன்றதொரு மலைப்பில் ஆழ்ந்துபோகும் தன்மை! சுய -
திருப்தியின் ஆணிவேரானது, தான் பூரணமானவன், முழுமையானவன் என்
கிற பிரமையிலே தான் உள்ளது!
• சுய-முக்கியத்துவம் (Self-Importance)
------------------------------------------
தன்னையறியாத சுயத்திற்கு என்ன முக்கியத்துவம் இருக்கவியலும்? ஆனா
லும், தனக்கு ஏதோ முக்கியத்துவம் இருப்பதாக, போலியாகப் பாவிப்பது
தான் 'சுய-முக்கியத்துவம்' என்பதாகும்; ஆகவேதான் அதை நாம் 'வெற்று'
சுய-முக்கியத்துவம் என்று குறிப்பிடுகிறோம்! பல மனிதர்கள் தங்களுடைய
பெயருடன் சில அடைமொழிகளை, பட்டங்களைச் சேர்த்துக் கொண்டு,
அதாவது, தங்களை கவிஞன், அரசியல்வாதி, சமூக சேவகன் என்றெல்லாம்
இனம் காட்டிக்கொண்டு வலம்வருகின்றனர்! இன்னும் பலர் வீடு, தோட்டம்,
துரவு, பொன், பொருள், வாகனம், சொத்துக்கள் என எவ்வாறோ தாங்கள்
சேர்த்துக்கொண்ட உடமைகளைக் கொண்டு தங்களுக்கு முக்கியத்துவம்
உண்டாகிவிட்டதான பிரமையில் ஆழ்ந்து விடுகின்றனர்!
• எதிர்ப்பு (Resistance)
------------------------
'எதிர்ப்பு' என்பது இவ்விடத்தில், பொதுவாக யாதொரு புதுமை, வளர்ச்சி,
முன்னேற்றம், மாற்றம் ஆகியவற்றுக்கு இடம் தராமையைக் குறிக்கிறது!
அதாவது, நெடுங்காலமாக பழக்கப்பட்ட நிலைக்கு மாறான எதையும்
வரவேற்க மறுக்கும் நனவிலி ரீதியானத் தடையைக்குறிக்கிறது! மனிதனுள்
இருக்கும் ஏதோவொன்று, அது அவனது அடிப்படை விலங்குச்சுயமாகவும்
இருக்கலாம், அல்லது அதனுடன் அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவனது
மனமாகவும் இருக்கலாம்! ஆக,'எதிர்ப்பு' என்பதை வளர்ச்சிக்கு உடன்படாத
"மனத்தடை" என்றும் கூறலாம்!
# உணர்வற்றதன்மைக்கு மாற்று
---------------------------
உணர்வற்ற தன்மைக்கான மாற்று உணர்வுக்கு வருதலே, உணர்வு கொள்ளு
தலே ஆகும்! ஆனால்,உணர்வுக்கு எவ்வாறு வருவது என்பதை எவரும் எவரிட
மிருந்தும் கற்றுக்கொள்ளவோ, எவரும் எவருக்கும் கற்றுத்தரவோ இயலாது!
ஏனெனில், உணர்வுக்கு வருதல்(Becoming Conscious)என்பது ஒவ்வொரு
மனிதனின் இருப்பின் அடிப்படையிலேயே அடங்கியுள்ள விதி(Law)அல்லது
நிபந்தனையாகும்! அதாவது, ஒருவருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது என்றால்
அதை அவர் பிரித்துப் பார்ப்பது, படிப்பது என்பது எவ்வாறு அதனுள் அடங்கி
யிருக்கும் நிபந்தனையாக (Imperative) உள்ளதோ அவ்வாறே, மனிதன்
உணர்வுக்கு வருவது என்பதும் அவனுள் முன்னீடு செய்யப்பட்டுள்ள நிபந்த
னையாக உள்ளது எனலாம்!
ஒரு மனிதன் தன்னை, தனது இருப்பை, இருப்பின் அனைத்து உணர்த்து
கோள்களையும் ( Implications) சேர்த்து உணர்வதற்கு, அதாவது, தனக்
குத்தானே ஒளியாகத் திகழ்வதற்கு, அம்மனிதனுக்கு வெளியிலிருந்து எத்
தகைய தூண்டுதல்,உந்துதல்,ஊக்கம், அல்லது உதவி வேண்டுவதாயுள்ளது?
ஒரு மனிதன் உணர்வுக்கு வருதல்(Becoming Conscious)என்பதெவ்வளவு
அவசியமானது, முக்கியமானது, வாழ்க்கைக்கு அர்த்தமளிப்பது, வாழ்வை
நிறைவு செய்வது, என்பதை உணர்வுக்கு வந்த மனிதன் மட்டுமே அறியக்
கூடும் என்பது சற்று சோகமானதே! ஏனெனில், அவனால் இருட்டிலுள்ள
மனிதர்களுக்குப் பெரிதாக உதவமுடிவதில்லை!
ஒரு மனிதன் ஒளியின் பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதை அவ்வளவு
எளிமையாக உணர்ந்து செயல்படுத்தத் தவறிடுவானெனில், அவனுக்கும்
ஒளிக்கும் இடையேயான மெல்லிய திரையானது கடந்து செல்ல முடியாத
தடித்த இரும்புச்சுவராக மாறிவிட்டாற் போலத் தோன்றக்கூடும்! மேலும்,
காலம் கடத்தக் கடத்த ஒருவன் இருட்டிலேயே வாழப் பழகிவிடும் அவலம்
நேர்ந்துவிடும்! ஒவ்வொரு கணமும் விழிப்பிற்கான கணமே! ஆனால், விழிப்
பதற்கு தாமதிப்பவன், அல்லது, கால அவகாசம் எடுத்துக்கொள்ள தனக்குத்
தானே அனுமதி வழங்கிக்கொள்பவன், தனக்குத்தானே தீங்கு தேடிக்கொள்
பவனாகிறான்!
மனிதஜீவியின் நிலைமை விலங்கு ஜீவிகளுடையதிலிருந்து பெரிதும் வித்தி
யாசமானதாகும். அதாவது, மனித ஜீவியானவன் விலங்கு ஜீவிகளைப்போல
முற்றிலும் உணர்வற்றவனாக, இருட்டிலேயே உழன்று கொண்டிருக்கும்படி
தோற்றுவிக்கப்படவில்லை! மாறாக, பரிணாம வழிமுறையானது அவனை
"உணர்வு" எனும் ஒளி-மாளிகையின் தாழ்வாரத்தில் கொண்டுசேர்த்துள்ளது!
அவன் செய்யவேண்டியது அம்மாளிகையின் உள்ளே பிரவேசித்து ஒளியில்
குளித்து ஆனந்திப்பதும், முடிவில் ஒளியின் இதயத்துள் ஐக்கியமாவதும்
மட்டுமேயாகும்! ஆனால், மனிதனோ ஒளி-மாளிகையின் தாழ்வாரப்பகுதி
யிலேயே தங்கி,உள்ளிருந்து கசியும் மங்கலான அரை-ஒளியில் விலங்கினத்
திடமிருந்து பெற்ற (கீழ்)இயல்புகளைக்கொண்டாடி வாழ்ந்து செல்கிறான்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 17.01.2017
----------------------------------------------------------------------------