Monday, 29 May 2017

நிஸர்கதத்தா மஹாராஜ்-ன் ஆன்மீக மொழிகள்






•  உங்களுடைய புற வாழ்க்கை முக்கியத்துவமற்றது.
•  நீங்கள் ஒரு இரவுப் பணிக் காவலாளியாக இருந்துகொண்டு மகிழ்ச்சியாக
    வாழ முடியும்.
•  உள்முகமானவையே முக்கியம்.
•  உங்களுடைய அக அமைதியையும், சந்தோஷத்தையும் நீங்கள்
    சம்பாதித்தாக வேண்டும்.
•  அது பணம் சம்பாதிப்பதையும் விட அதிகக் கடினமானது.
•  நீங்கள் நீங்களாக இருப்பதற்கு எந்த பல்கலைக்கழகமும் கற்றுத்தராது.
•  பயிற்சி மட்டுமே அதைக் கற்பதற்கான ஒரே வழி.
•  இந்தக் கணமே நீங்கள் நீங்களாக இருக்கத் தொடங்குங்கள்.
•  எவையெல்லாம் நீங்கள் அல்லவோ அவற்றை தூக்கி எறிந்துவிட்டு
    மேன்மேலும் ஆழமாகச்செல்லுங்கள்.
•  நீங்கள் உண்மையில் வெறும் ஒரு மனிதஜீவியும் கூட அல்ல.
•  நீங்கள் ஒரு அறிநிலைப் புள்ளி தான், காலம், மற்றும் வெளியின்
    நீட்சியும் அவ்விரண்டையும் கடந்ததும் ஆகும். (அனைத்துக்கும்}
    மூலகாரணமானது, ஆனால், தான் எதன் விளைவுமல்லாதது!
                       <<<•>>>

மேலே கொடுக்கப்பட்டிருப்பவை  ஞானி நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின்
ஆன்மீக மொழிகளாகும். இனி தொடர்பவை அவற்றுக்கான நேர் விளக்கங்கள்
என்று சொல்வதைவிட,  என்னுடைய அனுபவத்திற்கும், புரிதலுக்கும் எட்டிய
வரையிலான விவரிப்புகள் என்று சொல்லலாம்; அதாவது ஆன்மீக மொழிகள்
அவருடையவை; அவை மீதான விவரிப்புகளும்,அவ்விவரிப்புகளில் பிழைகள்
காணப்பட்டால் அவையும் என்னுடையவை!

ஞானி  நிஸர்கதத்தா மஹாராஜ்  அவர்களைப் பற்றியும்,  அவரது வாழ்க்கை
பற்றியுமான  குறிப்புகள் எதையும் இங்கு நான்  கொடுக்கவில்லை. அவற்றை
ஒருவர்  வேறு நூல்களிலிருந்தோ,  அல்லது இணையத்திலிருந்தோ தெரிந்து
கொள்ளலாம். முக்கியமாக, அவருடைய தத்துவம் அவரை வெளிப்படுத்துவது
போல் வேறு எதுவும் அவரை அவ்வளவு முழுமையாக வெளிப்படுத்திடாது!

குறிப்பாக,  மேலே கொடுக்கப்பட்டுள்ள   அவருடைய  ஆன்மீக மொழிகளில்
கடைசி இரண்டில்  அவர் சொல்லியுள்ளபடி,  அவரும் கூட  ஒரு மனிதஜீவி
அல்ல!  மாறாக,  அவருமே  வெறும் ஒரு அறிநிலைப்புள்ளி (a point of
awareness)தான்!   இது குறித்து  நாம்  இக்கட்டுரையின் இறுதியில் சற்று
விரிவாகப் பார்ப்போம்.

முதலில், நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின் முதல் ஆன்மீக மொழி என்ன
சொல்கிறது என்பதைப் பார்ப்போம்:

  •  உங்களுடைய புற வாழ்க்கை முக்கியத்துவமற்றது.
     (Your outer life is unimportant.)

ஆம்,  மனிதர்களுடைய  புற வாழ்க்கை முக்கியத்துவமற்றது. 'புற வாழ்க்கை'
என்பது எதைக்குறிக்கிறது? புறத்தைச்சார்ந்த விவகாரங்கள், ஈடுபாடுகள், அலு
வல்கள், காரியங்கள் ஆகியவற்றால் ஆனது தான் 'புற வாழ்க்கை' என்பதாகும்.
மனித வாழ்க்கை புறத்தை, புறவுலகையும் சார்ந்ததே என்பதில் ஐயமில்லை!

காற்று,  தண்ணீர்,  உணவு ஆகிய அடிப்படை அம்சங்களும், மற்றும், சக-ஜீவி
உறவுகளும்  புறத்தே தான் உள்ளன என்பதால், இவற்றுக்காக நாம் புறத்தைச்
சார்ந்திருக்கிறோம்  என்றால்  அதில்  பிரச்சினை இல்லை!  ஆனால், மொத்த
வாழ்க்கையும் புறத்தேயிருப்பதாகக் காண்பதும், புற விஷயங்களில்,விவகாரங்
களில்,  அலுவல்களில், ஈடுபாடுகளில் முற்றிலுமாக மூழ்கிக்கிடப்பது என்பதே
வாழ்க்கையென வாழ்ந்திடுவதும் தான் பிரச்சினைக்குரியதாகும்.அப்பிரச்சினை
யின்  ஆழத்தை எவருமே பெரிதாக உணர்வதில்லை. ஆனால், அதன் பாதிப்பு
களை   எல்லோரும் அனுபவித்துகொண்டுதான் இருக்கிறோம்!  அவை என்ன
பாதிப்புகள்  என்றால்,  விரக்தி,  வெறுமை,  தீராக்கவலை, சந்தோஷமின்மை,
அமைதியின்மை, அர்த்தமின்மை ஆகியவை!

"உங்களுடைய புறவாழ்க்கை முக்கியத்துவமற்றது." என்று சொல்லப்படுவதன்
அர்த்தம்  அது தேவையற்றது என்பதோ, அல்லது, அது முற்றாக விலக்கப்பட
வேண்டியது  என்பதோ அல்ல!   மாறாக,  அது  தேவையானது தானே தவிர
முக்கியமானதல்ல!  அப்படியானால்,  அதாவது,  'புறவாழ்க்கை முக்கியத்துவ
மற்றது' என்றால்,  வேறு  எத்தகைய வாழ்க்கை முக்கியமானது என ஒருவர்
அவ்வளவு  வெகுளித்தனமாகக் கேட்கலாம்!  ஆனால், வெகுளித்தனம் என்பது
அறியாமை,அஞ்ஞானம் ஆகியவற்றைக்குறிக்கும் இன்னொரு சொல் மட்டுமே!
மாறாக, மனிதர்கள் அனைவரும் அறிந்தது 'புறவாழ்க்கை' என்பது மட்டுமே!

ஆனால்,  வாழ்க்கையானது  புறவாழ்க்கை,  அகவாழ்க்கை என  இரண்டாகப்
பிரிந்து கிடப்பதில்லை; மேலும், அவ்விரண்டில் ஒன்றைமட்டும் தேர்வுசெய்து
வாழ்வது என்பதும் மனித வாழ்க்கைக்குப் பொருந்தாது! மாறாக, புறவாழ்க்கை
என்பது  மனிதனின் மிக அசலான வாழ்க்கைக்குச் செல்லும் ஒரு பாதை, அல்
லது அடிப்படை மட்டுமேயாகும்!  புறவாழ்க்கை  என்பது  தவிர்க்கவியலாதது;
அதே நேரத்தில் அதுவே முழு வாழ்க்கையும் ஆகிடாது! ஆனால், உணர்வற்ற
விலங்கு ஜீவிகளைப் பொறுத்தவரை, அவற்றுக்கு "அகம்" என்பது கிடையாது
என்பதால், அவற்றிற்கு  புறவாழ்க்கை தான் மொத்த வாழ்க்கையும்; அதாவது,
வெறுமனே  உயிர்-பிழைத்திருப்பது தான் வாழ்க்கையும், வாழ்வின் இலக்கும்
ஆகும்! ஆனால், மனிதஜீவிகளைப்பொறுத்தவரை, அவர்கள் உணர்வுள்ள ஜீவி
களாய் இருப்பதால், அவர்கள் உணர்வுக்குரிய வாழ்க்கையை,  அதாவது, அக
வாழ்க்கையை பிரதானமாக வாழ்ந்தாகவேண்டும்!

நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின் அடுத்த ஆன்மீக மொழி :

•  நீங்கள் ஒரு இரவுப் பணி - காவலாளியாக இருந்துகொண்டு மகிழ்ச்சியாக
    வாழ முடியும்.
   (You can become a night watchman and live happily.)

அதாவது, மனிதஜீவிகள் அனைவரும் மெய்ம்மையைவிட சந்தோஷத்தையும்,
மகிச்சியையும் தான்  பிரதானமாகத்  தேடுகின்றனர்.  ஆனால், உண்மையான
சந்தோஷம்,  மகிழ்ச்சி  எதில் அடங்கியுள்ளது  என்பது தெரியாமல் அலைந்து
திரிந்து அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர்!  ஆனால், உண்மையான மகிழ்ச்சி,
சந்தோஷம்  என்பது  புறத்தேயுள்ள  பொருட்களையோ,  விஷயங்களையோ,
அல்லது  அவற்றைப் பெற்றுத்தருவதாகக் கருதப்படும் அதிகமான பணத்தைச்
சம்பளமாக  அள்ளித்தரும்  தொழில்களையோ,  பகட்டான உத்தியோக நிலை
களையோ, பட்டம் பதவிகளையோ சார்ந்திருப்பதில்லை என்கிற உண்மையை
எடுத்துச் சொல்கிறது இந்த ஆன்மீக மொழி.

மனிதர்கள் செய்யும் தொழில்கள், உத்தியோகங்கள் அவர்களை பரந்த சமூகத்
துடனும்,  உலகுடனும்,  உலக நடைமுறைகளுடனும்  தொடர்புபடுத்துபவை
ஆகும்!  இத்தொடர்புகள் மனிதனை புறவாழ்க்கையிலேயே அமிழ்ந்து போகும்
படிச்  செய்திடக்கூடும் என்பதாலேயே,  "ஒருவன் இரவு நேரக் காவலாளியாக
இருந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும்."  என நிஸர்கதத்தா மஹாராஜ்
கூறுகிறார்.

பரவலாக,  நாமனைவரும்  நம் குழந்தைகளை அதிகச் சம்பளம் பெற்றுத்தரக்
கூடிய உத்தியோகத்துறைகளை குறிவைத்துத்தான் படிக்கவைக்கிறோம்! அதா
வது,  அதிகமான பணம்  அதிகமான சௌகரியங்களையும், சமூகத்தில் உயர்
மதிப்பையும், அதிக மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும்,  மன நிறைவையும்
பெற்றுத்தரும்  என்பதான மாயையில்,  தவறான நம்பிக்கையில் நாம் சிக்கிக்
கொண்டிருக்கிறோம்!   ஒரு தோட்டக்காரனாகவோ,  குழாய் பொருத்துபவனா
கவோ,  வேறு  'சாதாரண',  அல்லது  'மதிப்பில்லாத' என்று கருதப்படும் ஒரு
தொழிலைச் செய்வர்களாக நம் குழந்தைகள் ஆவதை நாம் விரும்புவதில்லை!
ஆகவேதான், 'உயர்-படிப்பு', 'பெரும்-படிப்பு' படித்தாகவேண்டும் என்று  நாம் நம்
குழந்தைகளை  சிறு வயதிலிருந்தே, "நன்றாகப் படி",  "அதிக மதிப்பெண்களை
எடு" எனத் துன்புறுத்தத் தொடங்கிவிடுகிறோம்!

ஆனால்,நாம் புகட்டும் இத்தகைய கல்வி உண்மையில் வாழ்க்கைக்கானதல்ல;
பகட்டுத்தனமான  பிழைப்புக்கானதே  ஆகும்!  மனித இனம்   வழி பிறழ்ன்று
சென்று கொண்டுள்ளது!  இத்தகைய போக்கை நாம்  நாகரிகம், வளர்ச்சி, முன்
னேற்றம் என்கிறோம்! மனிதர்களுக்கு இன்னும் வாழ்க்கைக்கும், பிழைப்புக்கும்
வித்தியாசம் தெரியவில்லை!

இன்றளவில்,  அதிகம் படித்தவர்களும், அறிவுஜீவிகளும் தான்  நிஸர்கதத்தா,
ஜெ.கிருஷ்ணமூர்த்தி  ஆகியோரின்  தத்துவங்களைப் படிக்கிறார்கள். ஆனால்,
"நீங்கள் ஒரு இரவுநேரக் காவலாளியாக இருந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ
முடியும்." எனும் நிஸர்கதத்தாவின் கூற்றை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்
வார்களா, அல்லது, அதை அப்படியே கவனியாதது போல் கடந்து சென்றுவிடு
வார்களா?

நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின் அடுத்த ஆன்மீக மொழி :

•  உள்முகமானவையே முக்கியம்.
   (It is what is inward that matters.)

ஆம்,  உள்முகமானது, அதாவது, அகவாழ்க்கை மட்டுமே முக்கியமானதாகும்.
அடிப்படை வாழ்க்கை, அல்லது, புறவாழ்க்கை என்பது உயிர்-பிழைத்திருத்தல்
என்பதைப்பற்றியது மட்டுமே.  ஆம், உயிர்-வாழ்தல் என்பதை நாம் எவ்வளவு
அலங்காரமாகவும்,  ஆடம்பரமிக்கதாகவும்  மேற்கொண்டாலும்  அது வெறும்
உயிர்-பிழைத்தல் மட்டுமேதவிர அது அசலான, அர்த்தமுள்ள மனிதவாழ்க்கை
யாக ஆகாது! இந்த வாழ்க்கையை ஏன் ஆன்மீகவாதிகள் எல்லோரும் உள்முக
மானது, அல்லது "அக-வாழ்க்கை" என்று குறிப்பிடுகிறார்கள்? ஏனெனில், ஒட்டு
மொத்த பிரபஞ்ச இயக்கமும் வெளிப்புறமாகத்தொடங்கி மேன்மேலும் உள்முக
மாகக்குவிந்து முன்னேறிச்செல்லும் வழிமுறையில் அமைந்த ஒன்றாக இருப்
பதே அதற்குக்காரணமாகும்.

அடிப்படை வாழ்க்கை, அல்லது, புறவாழ்க்கை என்பது உயிர்-பிழைத்திருத்தல்
என்பதைப்பற்றியது மட்டுமே என்றோம். ஒரு அணில் அல்லது குருவியானது
அதற்குரிய உணவைத் தேடி உண்கிறது,  தனது இணையுடன்  சேர்ந்து இனப்
பெருக்கம் செய்கிறது.  தொடர்ந்து உண்பதும்,  இனப்பெருக்கம் செய்வதுமாக
ஒரு அணிலானது வாழ்கிறது. ஆனால், அது எவ்வொரு தருணத்திலும், "தாம்
ஏன் இருக்கிறோம், தமது வாழ்க்கையின் அர்த்தம் என்ன?"  என்பது பற்றியும்,
இன்னும் தன்னைப் பற்றியும்,  "தாம் எத்தகைய ஜீவி?" என்பது குறித்தும் அறி
வதோ,  சிந்திப்பதோ கிடையாது!  ஏனெனில்,  அவ்வாறு சிந்தித்தறிவதற்கான
யாதொரு  மையத்தையும்,  உணர்வையும்  தன்னகத்தே அது கொண்டிருக்க
வில்லை!  ஆம்,  "தான்" எனும் உணர்வு தான் "அகம்" எனப்படுவதாகும்! ஒரு
அணில்  இருக்கிறது! இங்கும் அங்கும் மரத்தின்மீது ஓடி தனக்கான உணவை
தானியங்கித் தனமாகத்  தேடிப் பெறுகிறது.   தனக்குப் பசிக்கிறது,   ஆகவே
உணவைத் தேடிப்பெறவேண்டுமென்று தன் தேவையை தனக்குத்தானே பிரதி
நிதித்துவம் செய்வதற்கு  அதனிடம் யாதொரு மையமும் இல்லை, அதாவது,
உருவாகவில்லை! அதாவது, ஒரு அணில் அல்லது எவ்வொரு விலங்குஜீவி
யும் தனக்குப் பசிக்கிறது என்பதை முதலில் உணர்ந்து, பிறகு உணவைத்தேடு
வதில்லை;  மாறாக,  மிகவும் நேரடியாக தானும் பசியும் ஒன்றாகவே இருப்ப
தால் அவற்றின் இயல்பான இயக்கம் என்பதே உணவுத்தேடல் தான்!

ஒரு தவளைக்கும்  ஒரு மனிதனுக்கும்  உள்ள வித்தியாசம், தன்னைப் பிரதி
நிதித்துவம் செய்யும் மையம் இல்லாதது தவளை!  தன்னைப்பிரதிநிதித்துவம்
செய்யும்  மையம் கொண்ட  தவளை மனிதன்,  அவ்வளவே! பெரும்பாலான
மனிதர்கள் தவளைகளைப் போலவே, தமது இருப்பை உணர்வதில்லை. தாம்
ஏன் இருக்கிறோம், தமது வாழ்க்கையின் அர்த்தம் என்ன?"  என்பது பற்றியும்,
இன்னும் தன்னைப் பற்றியும்,  "தாம் எத்தகைய ஜீவி?" என்பது குறித்தும் அறி
வதும்,  சிந்திப்பதும் கிடையாது!

இதற்கு மாறாக,   தன்னை, தனது இருப்பை ஆழமாக உணர்வதற்கும், அறிவ
தற்கும்;  வாழ்வின் அசலான குறிக்கோள்,  இலக்கு, மற்றும்  அர்த்தம்  என்ன
என்பதை ஆழமாகச் சிந்தித்து அறிவதற்கும் (நிறைவேற்றுவதற்கும்) பெயர்தான்
"அக-வாழ்க்கை" என்பதாகும்! ஆழமான சிந்தனை, அல்லது விசாரம் தான் அக
வாழ்க்கைக்கான அடையாளம் ஆகும்! நம்மில் பலருக்கு வெறுமனே சிந்திப்பது
என்பது  எவ்வாறு வாழ்க்கை, அல்லது வாழ்தல் எனும் செயல்பாடாக ஆகும்?
என்ற ஐயம் எழலாம்! ஆனால், உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத்
தேவைகளை  அடைவதற்காக  கல்வி கற்பது,  பிறகு  வேலை தேடிப்பெற்று
ஓய்வுபெறும்  காலம்வரை  ஓயாது  உழைப்பது  என்பது  மட்டும்  எவ்வாறு
வாழ்க்கையாக அல்லது வாழ்தல் எனும் செயல்பாடாக ஆக முடியும்?

நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின் அடுத்த ஆன்மீக மொழி :

•  உங்களுடைய அக அமைதியையும், சந்தோஷத்தையும் நீங்கள்
    சம்பாதித்தாக வேண்டும்.
•  அது பணம் சம்பாதிப்பதையும் விட அதிகக் கடினமானது.

ஆம், பணம் சம்பாதிப்பது என்றால் என்ன என்று நம் எல்லோருக்கும் தெரியும்
அது எவ்வளவு கடினம் என்பதும் தெரியும்.  ஏனெனில்,  பணம் தான் பிரதான
மதிப்புமிக்க  ஒற்றை  அம்சமாக  உலகம் முழுவதும்  கொண்டாடப்படுகிறது!
மேலும், எல்லாவற்றையும் நாம் பணத்தைக்கொண்டே அளக்கிறோம்,மதிப்பிடு
கிறோம்!  மனிதர்களையும், அவர்களுடைய வாழ்க்கையையும் பணத்தின் அள
வைக்கொண்டே மதிப்பிடுகிறோம்!  ஆக, பணம் சம்பாதிப்பதன் அவசியத்தைச்
சொல்லித்தந்த நம் சமூகமும் நமது பெற்றோர்களும் நமக்கு அக அமைதியை
யும், சந்தோஷத்தையும் சம்பாதிப்பதற்குச் சொல்லித் தரவில்லை!

உண்மையில்,  அக அமைதி,  சந்தோஷம் என்பவை நம்முள்ளேயே உள்ளன!
அவற்றை இழக்காமல் தக்கவைத்துக் கொள்வது என்பது அவற்றைச் சம்பாதிப்
பதற்குச் சமமாகும்!  ஆனால், சந்தோஷம், அமைதி, திருப்தி, நிறைவு ஆகியன
பல்வேறு பொருட்களில்  அடங்கியிருப்பதாக எண்ணி  அவற்றை அடைந்தாக
வேண்டும் என்று ஆசையில் தவிப்பவன், தன்னிடமுள்ள உள்ளார்ந்த அமைதி
யையும், சந்தோஷத்தையும் இழந்து, இன்னும் அதிகத் தவிப்புக்குள்ளாகிறான்!

வாழ்க்கையில் இது இருந்தால் சந்தோஷமடைவேன்,அல்லது, அது இருந்தால்
சந்தோஷமடைவேன்  என்பவன்   சந்தோஷத்தை  அறியாதவன்!  ஏனெனில்,
சந்தோஷம்  இதில்  அடங்கியிருக்கிறது,  அல்லது அதில் அடங்கியிருக்கிறது
என்பது  அவனது எண்ணத்தின் முடிவும் முதலீடும் தானே தவிர அப்பொருட்
களுக்கும் சந்தோஷத்திற்கும் எவ்வொரு சம்பந்தமும் கிடையாது! இச் சிறுபிள்
ளைத்தனமான எண்ணம் இறுதிவரை மாறாதிருப்பதுதான் பெரும் துரதிருஷ்ட
மாகும்!

தனது சந்தோஷத்தை  பண்டமாற்று செய்யாதவன்,  குடிசையிலும் சந்தோஷ
மாயிருக்கிறான்!  அடுக்கு மாளிகை கட்டினாலும் அதிலும் சந்தோஷமாயிருக்
கிறான்!  சந்தோஷத்திற்காக உருவாக்கப்படும் பொருட்கள்  மனிதனை சந்தோ
ஷப்படுத்துவதில்லை, நிறைவு செய்வதில்லை! சந்தோஷமான மனிதன் தனது
சந்தோஷத்திலிருந்து அனைத்தையும் செய்கிறான், உருவாக்குகிறான்! அவனது
சந்தோஷம் எச்சூழ்நிலைமையிலும் குறைவதில்லை!

நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின் அடுத்த ஆன்மீக மொழி :

•  நீங்கள் நீங்களாக இருப்பதற்கு எந்த பல்கலைக்கழகமும் கற்றுத்தராது.
•  பயிற்சி மட்டுமே அதைக் கற்பதற்கான ஒரே வழி.
•  இந்தக் கணமே நீங்கள் நீங்களாக இருக்கத் தொடங்குங்கள்.
•  எவையெல்லாம் நீங்கள் அல்லவோ அவற்றை தூக்கி எறிந்துவிட்டு
    மேன்மேலும் ஆழமாகச்செல்லுங்கள்.

உண்மையில், நீங்கள் நீங்களாக இருப்பதற்கு எந்த பல்கலைக்கழகமும் கற்றுத்
தராது. மாறாக,  நீங்கள் நீங்களாக இல்லாதிருப்பது எவ்வாறு என்பதை அவை
கற்றுத் தரும்!  அதாவது, பல்கலைக்கழகங்கள் யாவும் மனிதர்களை ஒருபுறம்
பொறியாளர்களாக, மருத்துவர்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக மாற்றிடும்
பணியைச் செய்கின்றன! இன்னொருபுறம் எதற்கும் பயன்படாத பட்டதாரிகளை
உருவாக்குகின்றன! ஆனால், எந்த பல்கலைக்கழகமும் மனிதர்கள் பூரணமான
மனிதர்களாக இருப்பது, வாழ்வது எவ்வாறு என்பதைக் கற்றுத் தருவதில்லை!

உண்மையான மனிதர்களும்,  முழுமையான மனிதர்களும்,  விஞ்ஞானிகளும்,
மெய்ஞானிகளும் இதுவரையில் பல்கலைக்கழகங்களுக்கு வெளியேதான் உரு
வாகியிருக்கிறார்கள்!   புத்தர்களை  நாம் பல்கலைக்கழகங்களிடமிருந்து எதிர்
பார்ப்பது அறிவீனம்! மாறாக, மேட்டுக்குடி  (Elite) எனப்படும் படித்த எத்தர்
களை உருவாக்கும் இடம்தான் பல்கலைக்கழகங்கள்! 'கல்வி,  பொருளாதாரம்,
பணிநிலை,  போன்றவற்றில்  மேல்நிலையை  அடைந்து தனித்துக் காணப்படு
பவர்கள்' தான் 'மேட்டுக்குடிகள்' என்போர் என்றால், அவர்கள் படித்த-எத்தர்கள்
அல்லாமல் வேறு என்ன?

நீங்கள் உங்களை 'எவராக' அல்லது 'என்னவாக' கருதிக்கொண்டிருக்கிறீர்களோ
அதுவல்ல "உண்மையான" நீங்கள்! அது,வெறும் எண்ணங்களால் எழுப்பப்பட்ட
"புனைவு"!   நீங்கள்  எதனுடனாவது  உங்களை அடையாளப்படுத்திக் காணும்
வரையில்  (அது உங்கள் உடலாயினும், அல்லது மனதாயினும் சரி) உண்மை
யான உங்களை நீங்கள் ஒருபோதும் சந்திக்கவே இயலாது!

நீங்கள் விரும்பும் வண்ணம் உங்களை வடிவமைத்துக்கொள்ள முடியும்  என்
றால்,  அதனாலேயே  அது அசலான நீங்கள் அல்ல! எவ்வொரு அடையாளத்
தையும்  நீங்கள்  பற்றிடாத போது,  ஏதாவதொரு  அச்சில் இட்டு  உங்களை
வார்த்திடாத போது,  ஏதோவொன்றாக  ஆகிட  ஆசைப்படாத,  முயற்சிக்காத
போது இருப்பீர்கள்,  "நீங்கள் நீங்களாக"!  அனைத்திற்கும் ஈடாக, ஒருமையும்
முழுமையுமான உணர்வாக!

ஆக, "எந்த பல்கலைக்கழகமும் நீங்கள் நீங்களாக இருப்பதற்குக் கற்றுத்தராது;
பயிற்சி மட்டுமே அதைக் கற்பதற்கான ஒரே வழி."  என்று நிஸர்கதத்தா கூறி
யுள்ளார்.   அப்படியானால்,  எத்தகைய பயிற்சி  அதைக்  கற்றுத்தரும்? ஆம்,
ஸ்ரீ.ரமணமகரிஷி சொன்ன "நான் யார்?" என்ற ஆத்ம விசாரம் தான் அதற்கான
பயிற்சி யாகும்.  இதையே வேறு சொற்களில், "ஆழமான சிந்தனைப் பயிற்சி"
என்றும் சொல்லலாம்.  பொதுவாக நாம் எல்லோருமே சிந்திக்கத்தான் செய்கி
றோம்! ஆனால்,  மிகவும் மேலோட்டமாகச் சிந்திக்கிறோம். அவை, வாழ்வின்
மேற்புற  விஷயங்களையும், தேவைகளையும், பொருட்களையும் பற்றியதாக
மட்டுமேயுள்ளன.  "ஆழமான சிந்தனைப்பயிற்சி" என்பது வாழ்வின் உட்பொரு
ளான  அர்த்தம் பற்றியும்,  வாழ்வின் குறிக்கோள், மற்றும்  இலக்கு பற்றியும்
சிந்திப்பதாகும்.

அடுத்து,  "இந்தக் கணமே நீங்கள் நீங்களாக இருக்கத் தொடங்குங்கள்." என்று
நிஸர்கதத்தா மஹாராஜ் கூறுகிறார்.  ஆம், நாளை நீங்கள் உங்களுடைய அச
லான  சுயமாக இருக்கத் தொடங்குவதில் அர்த்தமில்லை! நீங்கள் சமூகத்தில்
ஒரு  பெரிய புள்ளியாக இருக்கலாம்,  ஒரு நிறுவனத்தின் உயர்-அதிகாரியாக,
அதிகச் சம்பளம் பெறுபவராக இருக்கலாம்;  ஆனால், நீங்கள் நீங்களாக, உங்க
ளுடைய  உண்மையான சுயத்தைக் கண்டடைந்தவராக இல்லையெனில், ஏற்
கனவே நீங்கள் ஒரு பெரும்தோல்வி தான்! நீங்கள் உங்கள் புறவாழ்க்கையில்
ஒரு சாதாரண தோட்டக்காரனாக, அல்லது,  இரவுக் காவலாளியாக, அல்லது
ஒரு குழாய்-பொருத்துபவனாக இருக்கலாம்;  ஆனால், உங்கள் அகவாழ்க்கை
யில், நீங்கள் நீங்களாக இருப்பது மட்டுமே உங்களுக்கும், உங்களது வாழ்விற்
கும் அர்த்தம் சேர்ப்பதாயிருக்கும்! அர்த்தம் மட்டுமே மனிதனை நிறைவு செய்
யும்!

மேலும், "எவையெல்லாம் நீங்கள் அல்லவோ அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு
மேன்மேலும் ஆழமாகச்செல்லுங்கள்."  என்கிற நிஸர்கதத்தாவின் உபதேசமும்
முக்கியமானதாகும்! அதாவது, சமூகத்தில் நீங்கள் ஒரு பெரிய மனிதர், மதிப்பு
மிக்கவர் என்கிற பிம்பத்தை நீங்கள் பெரிதாகக் கருதும் வரையில், உங்களால்
உள்முகமாகத் திரும்பிப் பார்க்கவும்கூட முடியாது; அதில் உங்களுக்குள் மேன்
மேலும்  ஆழமாகச் செல்வது  என்கிற பேச்சுக்கே இடமில்லை! "உண்மையில்
நீங்கள் யார்?" என்கிற உண்மையைக் கண்டுபிடிப்பது மட்டுமே உங்கள் வாழ்க்
கையின் ஒரே ஒப்பற்ற குறிக்கோளும், இலக்கும், அர்த்தமும் ஆகும்!

அதேநேரத்தில், 'எவையெல்லாம் நீங்கள் அல்லவோ அவற்றைத்தூக்கி எறிந்து
விடுவது  என்பது தீரமிக்க தொரு செயல் ஆகும். ஏனெனில், அவ்வாறு தூக்கி
எறிந்திடும் பட்சத்தில்,  ஒருவர் உடனடியாக "ஒன்றுமில்லாத வெறுமை" யாக
மட்டுமே தன்னை உணரமுடியும்!  அதுவரை பொய்யும் போலியுமான பிம்பங்
களையே  "தான்"  என்று வரித்துக்கொண்டிருந்த ஒருவர் அவற்றையெல்லாம்
களைந்திட்ட  உடனேயே அவர் தன் உண்மையான சுயத்தைத் தழுவிக்கொள்
வதென்பது சாத்தியமில்லை! மாறாக, அவர் தனது அக-வெறுமையை அமைதி
யாக  எதிர்கொண்டாக  வேண்டும்;  அதிலிருந்து  தப்பிக்க முயற்சிக்காமலும்,
புதிதாக வேறு பிம்பங்கள் எதையும் இட்டு நிரப்பாமலும்,  அதாவது, தற்போது
தான் ஒரு ஆன்மீகவாதி என்றோ,  அல்லது,  ஞானமடைந்துவிட்டவராகவோ
பிரமை கொள்ளாமலும், ஆழமான சுய-விசாரத்தில் ஈடுபட்டு நிலைத்திருத்தல்
வேண்டும்!   ஏனெனில்,  மனிதன்  தனது சுயத்தின் ஆழத்தில் வெறுமையோ,
சூன்யமோ அல்ல! மாறாக, "பூரணன்" ஆவான்!

நிஸர்கதத்தா மஹாராஜ் அவர்களின் ஆன்மீக மொழிகளின் இத் தொகுப்பில்
முடிவாக இடம்பெறும் உபதேச மொழிகள்:

•  நீங்கள் உண்மையில் வெறும் ஒரு மனிதஜீவியும் கூட அல்ல.
•  நீங்கள் ஒரு அறிநிலைப்புள்ளி தான், காலம், மற்றும் வெளியின்
    நீட்சியும் அவ்விரண்டையும் கடந்ததும் ஆகும். (அனைத்துக்கும்}
    மூலகாரணமானது, ஆனால், தான் எதன் விளைவுமல்லாதது!
   (You are not even a human being.
   You just are a point of awareness, co-extensive
   with time and space and beyond both,
   the ultimate cause, itself uncaused.)

"நீங்கள்  வெறும் ஒரு மனிதஜீவியும் அல்ல.  நீங்கள் ஒரு அறிநிலைப்புள்ளி."
(A point of awareness)  என்பதன் அர்த்தம்,  மனிதன்  என்பவன்  ஒரு
"அவதானிக்கும் உணர்வு" (An Observing Consciousness)என்பதேயாகும்.
உடல்  எனும்  கூட்டினுள் வசிக்கும் ஒரு விசித்திரமான பறவை (மெய்ம்மை)
ஆவான்!  ஆம், உணர்வுச் சிறகுகள் முழுமையாக வளர்ந்ததும் எந்நேரத்திலும்
உடலாகிய   கூட்டையும்,   இப்பிரபஞ்சத்தையும்  விட்டுப் பறந்து  செல்லும்
தருணத்தை எதிர்பார்த்துகொண்டிருப்பவனாவான்! அவன் சடத்தன்மை,உயிர்த்
தன்மை இரண்டையும் கடந்த ஒரு மெய்ம்மை நிலையாவான்! அவன் காலம்,
மற்றும்  வெளியின்  நீட்சி போன்ற வளர்ச்சியாக வெளிப்பட்டவன் என்றாலும்
அவ்விரண்டையும் கடந்த நிஜம் ஆவான்!

இதன் அர்த்தம்,  உணர்வாகிய மனிதன் இப்பிரபஞ்சத்தைச் சேர்ந்தவனில்லை
என்பதுதான்! அதாவது, மனிதன் பிற (விலங்கு) ஜீவிகளைப்போல,'என்னத்தை
உண்ணலாம், குடிக்கலாம், உடுத்தலாம்'  என்கிற ரீதியில்  வெறுமனே உயிர்
வாழ்ந்து, மாண்டு போவதற்காகத் தோன்றியவனல்ல! ஆனால், மனிதன், ஒவ்
வொரு மனிதனும்  தன்னைப்பற்றிய  உண்மையை நேரடியாகத் தன்னுள்ளே
உணர்ந்தறிந்தாக வேண்டும்!  அதற்கு ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே
தோண்டி, தன்னுள் ஆழமாகச்சென்று,  தன்னைப்பற்றிய உண்மையைக் கண்ட
டைந்தாக வேண்டும்! மனிதனைப் பற்றிய உண்மை என்பது உணர்ந்தறியப்பட
வேண்டிய ஒன்றாகும்; அது கேட்டும், படித்தும் அறியப்பட முடியாதது!

தன்னைக்  கண்டடைந்தவர்களை  மக்கள்  ஞானிகள்,  மகான்கள்,  புத்தர்கள்,
சித்தர்கள்  என்றெல்லாம் அழைக்கிறார்கள். ஆனால், இவை யாவும்  போற்று
தலுக்கான வெறும் அடைமொழிகளே! ஏனெனில், தன்னைக்கண்டடைந்தவனே
மனிதன்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 25-05-2017
----------------------------------------------------------------------------
  

Friday, 26 May 2017

மனிதர்கள் பூமியை விட்டு வெளியேறிடும் வேளை வந்துவிட்டதா?





உலகப் புகழ்பெற்ற கோட்பாட்டியற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபென் ஹாக்கிங்
(Stephen Hawking), 2017 மார்ச் மாதம் 24 ம் தேதி இங்கிலாந்திலுள்ள
தனது அலுவலகத்திலிருந்து நேரலைச் செய்தியாக ஹாங்க் காங்க் பார்வை
யாளர்களுக்குச் சொன்னது:
 
    "பூமிக்கும், மனிதகுலத்திற்கும் காலம் விரைவாக முடிந்துகொண்டு
    வருகிறது.  சீதோஷ்ண நிலை மாற்றம், விண்கல் மோதல், மக்கள்
    தொகைப்பெருக்கம் ஆகிய ஆபத்துக்களிலிருந்து தப்பிப் பிழைக்க
    வேண்டுமானால், அடுத்த 100 வருடங்களுக்குள் மனிதர்கள்
    வேறொரு கிரகத்தில் குடியேறியாக வேண்டும்"

                   ***
விஞ்ஞானி ஸ்டீஃபென் ஹாக்கிங் அவர்கள், ஏற்கனவே, 2016 ல்,இவ்வாறு ஒரு
எச்சரிக்கையை விடுத்தார்,  அதில்,  "இன்னும் 1000 வருடங்களில் மனிதர்கள்
வேறொரு  கிரகத்தில்  குடியேறியாக வேண்டும்"  என்று சொன்னார். ஆனால்,
இந்தமுறை, 100 வருடங்களுக்குள் என்று சொல்லியுள்ளார்!

ஸ்டீஃபென் ஹாக்கிங் - ன்  இந்த ஆரூடம் பல புருவங்களை உயரச் செய்தது
என்று சொல்லப்படுகிறது!  எனினும்,  ஹாக்கிங் தனது நிலையில் ஸ்திரமாக
நின்றதுடன்,  "இந்நிலைப்பாட்டில் தான் மட்டும் தனியே நிற்கவில்லை, தனது
சகபாடிகளும்  இது  குறித்து  அடுத்துவரும் மாநாட்டில் பேச இருக்கிறார்கள்"
எனவும் குறிப்பிட்டுள்ளார்.
                    ***

ஸ்டீஃபென் ஹாக்கிங் - ன்  இந்த எச்சரிக்கை  அடிப்படையற்றதோ, கிறுக்குத்
தனமானதோ அல்ல! மனிதர்கள் பூமிக்கிரகத்தை விட்டு உடனே வெளியேறிட
வேண்டும்  என்பதற்கு  ஹாக்கிங்  சொல்லும் காரணங்கள் மிகச்சரியானவை!
சீதோஷ்ண நிலை மாற்றம்,  விண்கல் மோதல்,   மக்கள் தொகைப்பெருக்கம்
போன்ற  காரணங்கள் மட்டுமே சரியானவை!  ஆனால், இன்னும் 100 ஆண்டு
களுக்குள்  பூமியை விட்டு  வெளியேறி  வேறொரு கிரகத்தில் குடியேறுவது
என்பதற்கான  நடைமுறைச் சாத்தியங்கள் மிக மிகக் குறைவே,  கிட்டத்தட்ட
பூஜ்ஜியமே!

அதே நேரத்தில்,  பூமி என்பது  வெறும் ஒரு இடம் அல்ல,  பூமிக்கு மாற்றாக
வேறொரு இடம் தேடிச்செல்வதற்கு! பால்-வீதி மண்டலத்தில் கோடானுகோடி
சூரியன்கள்  (நட்சத்திரங்கள்)  இருக்கின்றன; அவற்றைச் சுற்றிலும் கோடானு
கோடி கிரகங்களும் இருக்கின்றன. ஆனால், பூமியைப்போல வேறொரு கிரகம்
பூமியைத்தவிர  வேறொன்று  இல்லை!  மேலும்  சிலவிஷயங்கள் சாத்தியம்
என்பதாலேயே  அவற்றை  நாம் செய்யலாம் என்பது  சரியானதாக இருக்கும்
என்று சொல்ல முடியாது!

பொதுவாக,  மனிதர்களிடம்  உள்ள பிரச்சினை,  அல்லது  மட்டுப்பாடு என்ன
வெனில், வாழ்வின் அசலான நோக்கம், குறிக்கோள், இலக்கு என்ன என்பதை
அறியும் அக்கறை சிறிதும் இல்லாததால்,  தாம் விரும்பியபடி என்னவேண்டு
மானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற போக்கில்
போய்க் கொண்டிருப்பது தான்!  பெரும்பாலானோர் உணவு, உடை, உறையுள்,
உறவுகள் என குறுகிய வட்டத்தினுள் வளைய வந்துகொண்டிருப்பதை வாழ்க்
கையாக  வாழ்ந்து  கொண்டிருக்கிறார்கள்.   சிலர்,  சாதனைகள்,  சாகசங்கள்
புரிந்திட வேண்டும் என விரும்புகிறார்கள்;  சிலர்,  துணிகரச்செயல்கள், ஆபத்
தான  விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்! கின்னஸ் புத்தகத்
தில்   தன் பெயர்  வரவேண்டும்  என்பதற்காக  மனிதர்கள்  என்னவெல்லாம்
செய்கிறார்கள்  என்பதைப் பார்த்தாலே போதும்;  நிச்சயம்  மானிடகுலம் தன்
வாழ்வின்  உண்மையான  நோக்கத்தை, குறிக்கோளைத் தொலைத்துவிட்டது
என்பதும், தன் மன-நலத்தையும் இழந்துவிட்டது என்பதும் தெரியும்!

மேலும், ஏற்கனவே சாத்தியமான விஷயங்கள் பிறகொரு காலத்தில் சாத்திய
மாகாமலும் போகும் வாய்ப்பும் உள்ளது  என்பதை  நாம்  மறந்துவிடலாகாது!
விஞ்ஞானி ஸ்டீஃபென் ஹாக்கிங் எச்சரித்தபடி இன்னும் 100 ஆண்டுகளுக்குள்
நாம்  பூமியைவிட்டு வெளியேறி வேறு ஒரு கிரகத்தில் குடியேறிட இயலுமா
என்றால், கோட்பாட்டு ரீதியாக  'முடியும்!' என்று சொல்லலாமே தவிர, நடை
முறையில் சாத்தியம் என விஞ்ஞானக்கற்பனையில் வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒரு சிலர் மட்டுமே சொல்லக்கூடும்.

ஏனென்றால்,  மனிதன்  கடைசியாக,  பூமியை விட்டுப் பறந்து சந்திரனுக்குச்
சென்றுவந்தது  45 ஆண்டுகளுக்கு முன்பு, 1972-ல் ஆகும்! அதன் பிறகு இன்று
வரை அமெரிக்கா உள்பட எவ்வொரு நாடும் மனிதனை சந்திரனுக்கு அனுப்ப
வில்லை! ஏன் அனுப்பவில்லை என்பதற்கு பலவித காரணங்கள் சொல்லப்பட
லாம்!  ஆனால், அமெரிக்காவின் அப்போலோ விண்வெளி ஆராய்ச்சித்திட்டம்
1963-ல் தொடங்கி 1972-ல் முடிவடைந்துவிட்டது.

அப்போலோ  திட்டமானது மனிதர்களை  சந்திரனுக்குக் கொண்டுசென்று பாது
காப்பாக பூமிக்கு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட
தாகும்.  அதன்படி ஆறு முறை  (அப்போலோ 11,12,14,15,16,17 மூலமாக)  இந்த
இலக்கானது  சாதிக்கப்பட்டது!  ஆனால், அப்போலோ-1 விண்கலமானது விண்
ணில்  செலுத்துவதற்கு முன்னர், 27 ஜனவரி, 1967 அன்று மேற்கொள்ளப்பட்ட
ஒரு பயிற்சியின்போது விண்வெளி வீரர்கள் இருக்கும் பெட்டிக்குள் திடீரெனத்
தீப்பிடித்து  மூன்று பேரும்  கருகி இறந்து போயினர். 2016 வரை மொத்தம் 18
விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தின் போது இறந்துள்ளனர். மேலும்,
விண்வெளிப் பயணம்  தொடர்பான  பணிகளின் போது  விண்வெளி வீரர்கள்
அல்லாத வேறு சில பணியாளர்களும் இறந்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களை சந்திரனுக்கு அனுப்புகின்ற அமெரிக்காவின் அப்போலோ
ஆராய்ச்சித்திட்டம்   கைவிடப்பட்டதற்கு  சந்திரனை  அவர்கள் முழுமையாக
ஆராய்ந்து முடித்துவிட்டார்களா என்ன?  இல்லை;  வெறும் ஆறேழு பயணங்
களில்  முடிந்துவிடக்கூடியதல்ல சந்திரனைப்பற்றிய ஆராய்ச்சிகள்! நாம் இந்த
பூமியிலேயே இருக்கிறோம், ஆனால், பூமியைப்பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும்
முடிந்தபாடில்லையே!  ஒரு காரணம்,  விண்வெளி ஆராய்ச்சிகளுக்குப் போது
மான  அளவு நிதி  ஒதுக்கப்படுவதில்லை!  அடுத்து,  அரசியல் நிலைமைகள்,
பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன!  ஆனால்,
காரணங்கள் எவையாயிருந்தாலும், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி ஆராய்
வதென்பது 1972 -லேயே நிறுத்தப்பட்டு,  இதுவரை 45 ஆண்டுகள், கிட்டத்தட்ட
அரை நூற்றாண்டு ஆகின்றது! இந்நிலையில், இன்னும் 100 ஆண்டுகளுக்குள்,
பூமியை ஒத்த ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்து, அல்லது நம் சூரிய மண்டலத்
திலேயே  உள்ள செவ்வாய்க்கிரகத்திற்குச் சென்று நாம் குடியேறுவது என்பது
எவ்வாறு சாத்தியமாகும்?

அப்படியே,தொழில் நுட்பம் சார்ந்த நடைமுறைச் சாத்தியங்கள் உள்ளன என்று
வைத்துக்கொண்டாலும்,  மனிதகுலம் முழுவதையும் கொண்டு சென்று செவ்
வாய்க்கிரகத்தில் குடியமர்த்த இயலுமா? அல்லது குறிப்பிட்ட சிலரை மட்டும்
தேர்வுசெய்து  கொண்டுசெல்வதா?  வெறும் மனிதர்களை  மட்டும் கொண்டு
சென்றால் போதுமா?  உணவு மற்றும் பிற தேவைகளுக்கான பொருட்களைக்
கொண்டு  செல்ல வேண்டாமா?  ஆடு,  மாடுகள்,  கோழிகள்,  பிற வளர்ப்புப்
பிராணிகளையும் கொண்டு செல்லவேண்டாமா?  தாவரங்களில் எவையெவற்
றையெல்லாம் எடுத்துச் செல்வது? யாவற்றையும் "நோவாவின் கப்பல்" போல
ஒரே விண்கலத்தில் ஏற்றிச்செல்வதா?  அல்லது  பல  கலங்களில்  கொண்டு
செல்வதா?

ஏலான் மஸ்க் (Elon Musk),'ஸ்பேஸ் X'(SpaceX) நிறுவனத்தின் தலை
மையதிகாரி என்ன சொல்கிறார் என்றால், "மனிதகுலத்தின் முன்னே இரண்டு
அடிப்படையான  பாதைகள் உள்ளன;  ஒன்று, நாம் பூமியிலேயே அனைத்துக்
காலத்திற்கும் தங்கியிருப்பது - கடைசியில்  தவிர்க்கவியலாத  முற்றிலுமாக
இற்றழியும் சம்பவம் நிகழும்.  அடுத்தது,  இதற்கு  மாற்றாக விண்வெளியில்
பயணிக்கும் 'பல்-கிரக இனமாக' மாறுவது." என்கிறார்.  உண்மையில்,  ஏலான்
மஸ்க் வெறுமனே கனவுகாண்பவர் அல்ல; அவரது நிறுவனம் ஏற்கனவே பல
செயற்கைக் கோள்களை   வியாபார ரீதியில்  விண்ணில்  செலுத்தியுள்ளது.
மேலும்,  சர்வதேச விண்வெளி   ஆய்வகத்திற்கு   பொருட்களைக் கொண்டு
சேர்த்துவரும் பணியையும் செய்துவருகிறது! மேலும் அவர், 2060 க்குள் பத்து
லட்சம்  மனிதர்களை செவ்வாய்க்கிரகத்தில் குடியமர்த்தியே தீருவேன் என்று
சொல்லிவருவதுடன் அது தொடர்பான ஆராய்ச்சிகளையும்,பரிசோதனைகளை
யும் அவரது நிறுவனம் மேற்கொண்டுவருகின்றது. அடுத்தவருடம் 2018-லேயே
அதற்கான  பூர்வாங்க  முயற்சிகளைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிரகத்தில் 10 லட்சம் மனிதர்களை குடியமர்த்தி, மனித இனத்தைக்
காப்பாற்றுவதுடன்,  செவ்வாய்க்கிரகத்தில் ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கு
வதே தனது இலட்சியம் என்கிறார் ஏலான் மஸ்க்.

தற்போதுள்ள  தொழில் நுட்பங்களைக்கொண்டு  செவ்வாய்க்கிரகத்திற்கு ஒரு
மனிதனை அனுப்ப ஆகும் செலவு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள்; இந்திய
மதிப்பில் 60,00,00,000,000 கோடி ரூபாய்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது

ஆனால், உண்மையில் மனித இனத்தைக் காப்பாற்றுவது என்றால் என்ன?

மனிதஇனம் இந்த பூமிக்கிரகத்தில் தோன்றி எவ்வளவு காலம் வாழ்ந்துள்ளது?
மனிதஇனம் கிட்டத்தட்ட 200,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகச் சொல்
லப்படுகிறது.  ஆனால், நாகரிக மனிதனாக கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு
முன்புதான் உருவாகியிருக்கிறான். ஆனால், கடந்த வெறும் 500 ஆண்டுகளில்
விஞ்ஞானத்தொழில் நுட்ப முன்னேற்றத்தினால் மனித இனமானது மாபெரும்
வளர்ச்சிகண்டுள்ளது எனலாம். இந்த 500 ஆண்டுகளில்தான் மனிதன் பூமியின்
பரப்பை  மாற்றியமைத்ததோடல்லாமல், வெகுவாக சுற்றுச் சூழலையும் மாசு
படுத்தி, இன்று புவிக்கோளம் சூடேறுதல் (Global Warming),தாறுமாறான
சீதோஷ்ண நிலை மாற்றங்கள், கடல் மட்டம் உயர்ந்து வருதல் போன்ற பிரச்
சினைகளை  எதிர்கொண்டுவருகிறோம். அடுத்து தொடர்ந்து அதிகரித்து வரும்
மக்கள்தொகைப் பெருக்கத்தினால் இயற்கைவளம் வேகமாகச் சுரண்டியழிக்கப்
படுவதும்,  படிவ எரிபொருளான எண்ணை இருப்பு வேகமாகக் குறைந்து வரு
வதும்  இதனால்,  நவீன வாழ்க்கை ஸ்தம்பித்துப்போகும் குலைவு உச்சத்தை
நோக்கி மனித குலம் சென்று கொண்ட்டுள்ளது!

அதாவது, மனித இனம் நாகரிகம் அடைந்து, விஞ்ஞான - தொழில் நுட்பத்தில்
வளர்ச்சிகண்ட மிகக்குறைந்த ஆண்டுகளில்,  அதாவது, வெறும் 500, அல்லது
அதிகபட்சம் 1000 ஆண்டுகளில் இப்பூமியை அழிவின் விளிம்பிற்குக் கொண்டு
வந்துள்ளோம்!  இப்போது,  இனியும்  தொடர்ந்து  நாம் இப்பூமியில் வாழ்வது
இயலாது;  "பூமிக்கும், மனிதகுலத்திற்கும் காலம் விரைவாக முடிந்துகொண்டு
வருகிறது.  ஆகவே, உயிர் தப்பிப் பிழைக்கவேண்டுமானால், அடுத்த 100 வரு
டங்களுக்குள் மனிதர்கள் வேறொரு கிரகத்தில் குடியேறியாக வேண்டும்." என
விஞ்ஞானி  ஸ்டீஃபென் ஹாக்கிங்  போன்றோர்  எச்சரிக்கும் நிலையை எட்டி
யுள்ளோம்.  அவ்வாறு உயிர்தப்பிப் பிழைக்க வேறொரு கிரகத்தில், உதாரணத்
திற்கு, செவ்வாய்க்கிரகத்தில் குடியேறுகிறோம் என்றே வைத்துக்கொள்வோம்!
அங்கு நமது காலனிகளை அமைப்போம்;அங்குள்ள அனைத்து வளங்களையும்
சுரண்டி தின்று வாழ்வோம்; விரைவில் அந்த கிரகத்தையும் மாசுபடுத்தி வாழ
லாயக்கில்லாத இடமாக மாற்றிவிட்டு வேறொரு கிரகத்தை நாடிச்சென்று குடி
யேறுவோம்; இவ்வாறே கிரகம் கிரகமாக தாவித்தாவிச் செல்வோம்!

ஆனால்,  இதுவரை இப்பூமிக் கிரகத்தில் வாழ்ந்து எதைச் சாதித்தோம்? வெறு
மனே  உயிர்-வாழ்ந்தோம் என்பதைத் தவிர!  நம்முடைய அடிப்படைத்தேவை
களுக்காகவும், அடிப்படையற்ற,  பிற ஆடம்பரத்தேவைகளுக்காகவும் பூமியின்
கனிம வளங்களையும், பிற வளங்களையும் சூறையாடி நம் நுகர்வுப்பசிகளைத்
தணித்துக்கொண்டோம்!  காடுகளை அழித்தோம், பல்லுயிர்-வளங்களை அழித்
தோம்;  எண்ணற்ற விலங்கினங்களை இற்றழியும்படிச் செய்தோம்!  நீர், நிலம்,
காற்று என சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பூமியை உயிர்-வாழ்வதற்கு தகுதியற்ற
இடமாக மாற்றிவிட்டு இப்போது வேறு பூமியைத்தேடிக்கொண்டிருக்கிறோம்!

இவைகளைத் தவிர,  நாம் வேறு எவற்றைச் சாதித்தோம்? மதத்தின் பெயரில்
எண்ணற்ற  மனித உயிர்களைக் கொன்றோம்,  இரண்டு   பெரும் போர்களில்
எண்ணற்றவர்களைக் கொன்று குவித்தோம்!  இன-துவேஷம் கொண்டு லட்சக்
கணக்கான  மனிதர்களையும்;  அரசியல்  சித்தாந்தத்தைக்  காப்பாற்ற  லட்சக்
கணக்கான  மனிதர்களையும்   கட்டாய -உழைப்பு  முகாம்களில்  அடைத்துச்
சித்திரவதை செய்து  கொன்று குவித்தோம்!  ஆனால்,  இப்போது நாம் மனித
குலத்தைக் காப்பாற்றுவதற்காக பூமியை விட்டு வெளியேறி வேறு கிரகத்தில்
குடியமர்த்த வேண்டும் என்று அக்கறையுடன் பேசுகிறோம்!

வேறு கிரகத்திற்குச் சென்று  குடியேறி  அங்கு  என்ன  சாதிக்கப்போகிறோம்!
இங்கு நம் சொந்த கிரகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டு வேறு கிரகம்
தேடிச் சென்று,  அங்கு 1000, அல்லது 2000 ஆண்டுகளில் அதையும் கெடுத்துக்
குட்டிச்  சுவராக்கிவிட்டு,  மீண்டும் வேறொரு கிரகத்தைத் தேடிக்கொண்டிருப்
போம்!  எவ்வாறு நாம் நம்முடைய சொந்த பூமிக்கிரகத்திற்கே அந்நியர்களாய்ப்
போனோம்? எத்தகைய நம் மனோநிலை, எத்தகைய நம் வாழ்க்கைப் பார்வை,
மற்றும்  நம் உலகப் பார்வை நம் பூமியை வாழத் தகுதியற்ற இடமாக ஆக்கி
யது?  உண்மையில், இப்பூமியானது நம்மை வாழவைக்கும் தகுதியை இழக்க
வில்லை!  மாறாக,  இப்பூமியின் மீது வாழும் தகுதியை இழந்தது மனித இன
மாகிய நாம் தான்!  இன்னும் சொல்லப்போனால், இங்கு இந்த பூமிக்கிரகத்தில்
நம்மால் முறையாக வாழமுடியவில்லை என்றால்,  வேறு எந்தக்கிரகத்திலும்
நம்மால் முறையாக வாழமுடியாது!

முதல் உயிர்ஜீவி பூமியிலேயே தோன்றியிருந்தாலும், அல்லது அது தோன்று
வதற்குரிய அடிப்படை மூலக்கூறுகள் அண்ட வெளியில் இருந்து வந்திருந்
தாலும் (Panspermia) தகவமைந்தது என்னவோ பூமிக்கிரகத்திற்குத்தான்!
ஆகவே, உயிர்ஜீவி எதுவாயிருந்தாலும்,அது வாழ்வதற்கு பல்வகை வளங்கள்
நிறைந்த ஒரு கிரகம் வேண்டும்! யாவற்றையும்விட முக்கியமாக, உயிர்-வாழ்
வதற்கு மிகவும் அடிப்படையாக சக்தி (Energy) வேண்டும்; அதற்கு ஒரு
சூரியன் வேண்டும்! அதாவது, நாம் ஒரு பெரிய விண்கலத்தில் எவ்வொரு
கிரகத்தையும் சாராமல் விண்வெளியில் மிதந்த படியே வாழமுடியும்;ஆனால்,
சக்தி தேவைப்படுவதால் நாம் ஒரு சூரியனுக்கு அருகில் இருந்தாகவேண்டும்!

உயிரற்ற  பொருட்களோ,  அல்லது,  உயிருள்ள ஜீவிகளோ  அவை  இயங்க
வேண்டுமெனில், பிரதானமாக, சக்தி வேண்டும்.  உருப்பெற்ற (படைக்கப்பட்ட)
அனைத்தும் சக்தியை அடிப்படையாகக் கொண்டே இருப்புபெறுகிறது, இயங்கு
கிறது  எனலாம்.  யாவற்றுக்கும் அடிப்படை சக்தியே என்பது சரியே; ஆனால்,
சக்தியின் அடிப்படை எது என்பது இறுதியான மெய்ம்மையைச் சார்ந்தது! ஒரு
வகையில்,  மனிதஜீவிகள் உள்பட  உயிர்-ஜீவிகளைப் பொறுத்தவரை, அவை
ஏதாவதொரு வடிவில் சக்தியை உண்டு,செரித்து, இயங்கும்,வாழும் சக்தியின்
விசேட  வடிவங்கள்   என்பதற்கு மேல்  வேறல்ல  எனலாம்!  மின்கலத்தில்
(Battery) இயங்கும் ஒரு பொம்மை ஊர்திக்கும், ஒரு தவளைக்கும் உள்ள
வித்தியாசம் என்னவென்றால், ஒரு பொம்மை ஊர்தி  தனது இயக்கத்திற்கான
சக்தியை, அதாவது மின்கலத்தைத் தானே தயாரித்துப் பயன்படுத்த இயலாது!
ஆனால், ஒரு தவளையோ, அல்லது எவ்வொரு ஜீவியோ தனது இயக்கத்திற்
கான சக்தியை  (உணவின் வடிவத்தில்)  சுற்றுப் புறத்திலிருந்து தாமே தேடிப்
பெற்று இயங்கவும்,  உயிர்-வாழவும் செய்யும்! அடுத்து, மனிதஜீவிகள் உள்பட
உயிர்-ஜீவிகளின்   இயக்கத்திற்கான  ஒரே  நோக்கம்,  குறிக்கோள்,  இலக்கு,
யாவும்  சக்தியை (உணவை) தேடிப்பெறுவது  என்பதைத் தவிர வேறெதுவும்
இல்லை!  அதாவது, உயிர்-ஜீவிகளின் ஒரே நோக்கம், இலக்கு உயிர்வாழ்வது
என்பதே!  ஆனால்,  அவை எதற்காக , எந்த நோக்கத்தை நிறைவேற்ற உயிர்
வாழ்கின்றன  என்பது எந்த ஜீவிக்கும் தெரியாது! ஆம், மனிதஜீவிக்கும் கூடத்
தெரியாது  என்பதுதான்  வருத்தம் தரும் உண்மையாகும்!  உயிர்-வாழ்தலின்
நோக்கம், குறிக்கோள், இலக்கு என்னவென்று தெரியாவிட்டாலும் உயிர்-வாழ்
வது என்பது மட்டும் அதி முக்கியமானது என்பதாக உள்ளது!

ஆனால், எவ்வாறேனும் உயிர்-பிழைத்திருக்கவேண்டும், தம்மைக் காப்பாற்றிக்
கொள்ளவேண்டும்  என்கிற  தீவிர உந்துதலையும், முனைப்பையும் வைத்துப்
பார்க்கும்போது,  மிக உன்னதமான,  ஒப்பற்ற, மிகத் தொலைவிலமைந்த ஒரு
இலக்கை  முன் வைத்துத்தான் உயிர்-ஜீவியானது உருவாகியிருக்கவேண்டும்!
உயிர்-ஜீவிகளில்  மிக விசேடமாக  உயர் பரிணாமம்  பெற்ற,  உணர்வுபெற்ற
ஜீவியான  மனிதனுக்கு உயிர்-வாழ்தலைக் கடந்த மிகப் பிரத்யேகமான தொரு
பரிணாம இலக்கு  உள்ளது  என்பதை அவன் இந்நேரம் உணர்ந்தவனாயிருக்க
வேண்டும்!

ஏனென்றால்,  எந்த இலக்கை  முன்வைத்து  400 கோடி ஆண்டுகளுக்கு முன்
பூமியில்  உயிர்-ஜீவி தோன்றியதோ அந்த இலக்கை அறுவடை செய்பவனாக
மனிதன்  முழு வளர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்!  ஆனால்,  மனித இனமோ
வெறுமனே   சௌகரியமாக  உயிர்-பிழைத்திருப்பதாக,  வாழ்வின்  அசலான
நோக்கமறியாமல்,  குறிக்கோளற்று,  இலக்கற்று  விலங்கினங்களில்  தாமும்
ஒரு இனமாக  வாழ்ந்து செல்கிறது!  தற்போதைய உலக மக்கள்தொகையான
750 கோடி பேர்களுக்கும் ஒரு உயர்-லௌகீக தரத்திலான வாழ்க்கையை, அதா
வது,  அமெரிக்கர்களுடைய  வீணடிப்பு மிக்க தரத்திலான ஒரு வாழ்க்கையை
அளிக்க வேண்டுமானால்,  நம் பூமியைப்போல  இன்னும் இரண்டு கிரகங்கள்
வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது!  ஆனால், தொடர்ந்து இதே முறையில்
நாம்  வாழ்ந்துகொண்டிருப்போமெனில், அதாவது அடுத்த ஒரு உலகப்போரில்
நம்மை  நாமே  ஒட்டு மொத்தமாக அணு ஆயுதங்களைக் கொண்டு அழித்துக்

கொள்ளாதிருந்தோமெனில், நமது பால்வீதி மண்டலத்திலுள்ள கோடானுகோடி
நட்சத்திரங்களை (சூரியங்களை) சுற்றிச் சுழலும் கோடானுகோடி கிரகங்களும்
கூட  போதாது!  இவ்வாறே  நாம் தொடர்வோமெனில், இப்பிரபஞ்சத்திலுள்ள
கோடானுகோடி கேலக்ஸிகளும் போதாது எனலாம்!

நம்முடைய செயல்பாடுகளின் பின் விளைவுகள் பற்றிய சிந்தனையில்லாமல்,
நாம்  வாழ்ந்த பொறுப்பற்ற வாழ்முறையின் விளைவாக நம்  பூமிக்கிரகத்தை
வாழத் தகுதியற்ற  இடமாக மாற்றிவிட்டு, இன்று நாம் வேறொரு கிரகத்தைத்
தேடிக்  குடியேறுவது பற்றிப்பேசிக் கொண்டிருக்கிறோம்! ஆனால், எவ்வாறோ
பிரபஞ்சம் முழுவதும் பரவி, தொடர்ந்து நாம்  பல்லாயிரம் கோடி ஆண்டுகள்
தாக்குப்பிடித்து வாழ்ந்து செல்கிறோம் என்று வைத்துக்கொண்டால், அப்போது
நாம்  சந்திக்கப்போவது தான் உண்மையான பேராபத்து, அல்லது, கொடூரமான
நரகம் ஆகும்! தற்போது அவசரமாக பூமியை விட்டு வெளியேறி வேறு கிரகத்
திற்குச்  சென்றாக  வேண்டியதின் அவசியம்  குறித்து எச்சரிக்கும் ஸ்டீஃபென்
ஹாக்கிங்  போன்ற விஞ்ஞானிகள் தான் ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் அழிவு,
அல்லது,  இறுதி முடிவு  குறித்தும் கணித்துள்ளனர்!  ஆம், விஞ்ஞானிகளின்
புரிதலின்படி நாம் வாழும் இப்பிரபஞ்சம் சாசுவதமானதல்ல!

ஆனால்,  நம்முடைய  பிரச்சினைக்கான உண்மையான தீர்வு எவ்வாறேனும்
உயிர் தப்பிப் பிழைப்பது அல்ல!  அதாவது,  புயல்,  பெருவெள்ளம்,  சுனாமி,
விண்கல் மோதல்கள்,  பூகம்பம், இன்னும் பலவகைப்பட்ட அன்றாட விபத்துக்
களிலிருந்தும் மனிதன் தப்பிவிடக்கூடும்!  ஆனால், எவ்வொரு மனிதனும் தப்
பிக்க  முடியாத ஒரு ஆபத்து மனிதனது வாழ்விலேயே பின்னப்பட்ட்டுள்ளது;
அது தான் "மரணம்"!

நாம் பயணித்துக்கொண்டிருக்கும் விமானம் பழுது பட்டுவிட்டதென்றால் நாம்
"பாராசூட்"  மூலமாக வெளியே குதித்துத் தப்பலாம்! நம் பூமிக்கிரகத்தை வாழ
லாயக்கற்றதாக ஆக்கிவிட்டு வேறொரு கிரகத்தில் குடியேறிடலாம்! இவ்வாறு
ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்குத் தாவிச் செல்வதோ,  அல்லது,
ஒரு கேலக்ஸியிலிருந்து  இன்னொரு கேலக்ஸிக்குச் செல்வதோ இறுதியான
முழுமையான  தப்பித்தல்  என்பதாகாது!   ஏனெனில், "நித்திய வாழ்வு" தரும்
யாதொரு கிரகமும்,கேலக்ஸியும்,இடமும் இப்பிரபஞ்சத்தில் எங்கேயுமில்லை!
மாறாக,   நாம்  ஒவ்வொருவரும், அழியக்கூடிய  நம் உடலிலிருந்தும், இந்த
ஒட்டுமொத்தப்   பிரபஞ்சத்திலிருந்தும்   வெளியேறிட வேண்டும்!  அதாவது,
உடலையும்,  இவ்வுலகையும்  சார்ந்திருக்கும்   நிரந்தரமற்ற வாழ்வினையும்
கடந்து சென்றாகவேண்டும்! அவ்வாறு தப்பிச்செல்வதற்கான ஒரு பழுதுபடாத,
அற்புதமான, ஊர்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது! அது தான் "உணர்வு"!

மா.கணேசன்/நெய்வேலி/ 22-05-2017
----------------------------------------------------------------------------

Wednesday, 24 May 2017

நதியைப்போல வாழுங்கள்!





நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது என்பது தான் முக்கியம்; அது செல்லும் வழி
நெடுகிலும், அது எவையெவற்றையெல்லாம் சந்திக்கிறது, எத்தகைய தடை
களை  எதிர்கொள்கிறது  என்பது போன்ற  விஷயங்கள், அனுபவங்கள், அறி
வுச்சேகரங்கள், எவையும் முக்கியமல்ல! ஏனெனில், அவை  எதுவும்  இறுதி
யானவையல்ல!  மாறாக, அவை யாவும், இறுதி அர்த்தத்தை நோக்கிய  நதி
யின்  பயணவழிச் சாட்சியங்கள்,  வேடிக்கைக்காட்சிகள், அவ்வளவே!   நதி
தன் ஒப்பற்ற இலக்கை நோக்கிச்செல்கிறது என்பது மட்டும்தான் நதிக்கான
உந்துசக்தி, உற்சாகத் தூண்டுதல், இளைப்பாறுதல் யாவுமாகும்! நதியானது
முன்னோக்கிச்  செல்லச்  செல்ல, தான்  கடந்து  வந்த  பாதையில் ஏற்பட்ட
அனுபவங்களை மறந்துவிடுகிறது! முடிவில் தன் இலக்கை அடையும்போது
தன்னையும்  அது முற்றிலுமாக மறந்து சுமை நீங்கியதாகி விடுகிறது!
              - நான் யார்?/ மா.கணேசன்/21.02.2017

நதி தன் ஒரே இலக்கான
சமுத்திரத்தை  அடைவது  என்பதை  ஒரு கணமும்  மறப்பதோ, துறப்பதோ
இல்லை! அவ்வாறு மறந்துவிடும் பட்சத்தில், நதியானது நதியாக இல்லாமல்;
மேலும் தனது வழியில் எதிர்ப்படும் தடைகளைக்கண்டு தயங்கி நிற்குமானால்
ஆங்காங்கே சிறுசிறு குட்டையாகத் தேங்கிவிடக்கூடும்! அவ்வாறே, மனிதனா
னவன்  தன் வாழ்வின்  ஒப்பற்ற ஒரே இலக்கான  மெய்ம்மையை அடைவது
என்பதை  ஒரு கணமும் மறப்பானெனில் அவன் ஒரு மனிதனாக இல்லாமல்
ஒரு ஜந்துவாகச் சுருங்கிப்போவான்!
              - ஒரு கல், ஒரு தவளை, ஒரு மனிதன்!/மா.கணேசன்/13.05.2017


வாழ்க்கை என்பது ஒரு நதியின் இயக்கத்தை ஒத்தது ஆகும்; சமுத்திரத்தை  
சென்றடைவதே  நதியின் ஒரே  குறிக்கோளும்  இலக்கும் ஆகும்!

அதேவேளையில்,ஒரு நதியானது தனது இலக்கை அடையவேண்டுமெனில்,
அதன்   இயக்கம்   தொடக்கத்திலிருந்தே  சமுத்திரத்தை    நோக்கியதாக
அமைந்திருப்பது  அவசியமாகும்! அதாவது,  நதியானது  காடு  மேடு  என்று
சுற்றித் திரிந்துவிட்டு,   திடீரென,   சமுத்திரத்தை  நோக்கிப்பாய்ந்து செல்ல
முடியாது!  மேலும், நதியிடம் யாதொரு வரைபடமும் இல்லை  என்றபோதி
லும், அது, புவி ஈர்ப்பை  தனது  வழிகாட்டியாகக் கொண்டு பாய்ந்து சென்று
முடிவில் சமுத்திரத்தை அடைந்துவிடுகிறது! அது போலவே, மனிதன் தனது
வாழ்க்கையின்  இலக்கை, முழுமையை  அடைவதற்கு வரைபடம்  எதுவும்
தேவையில்லை!   நதிக்கு புவி-ஈர்ப்பு போல,   மனிதனுக்கு "உணர்வு-ஈர்ப்பு"
தான்  வழிகாட்டியாகும்!    நதியானது  மேட்டிலிருந்து  பள்ளத்திற்குப்பாயும்;
(மனித) உணர்வு  பள்ளத்திலிருந்து மேட்டிற்கு உயரும்!   இந்த அம்சம் தான்
பெரும்பாலான  மனிதர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது!  அதாவது மேட்டி
லிருந்து   பள்ளத்திற்கு   இறங்குவது எளிது; பள்ளத்திலிலிருந்து  மேட்டிற்கு
உயருவது மிக்கக் கடினம்!

எவ்வாறு,   நதியின் இயக்கமானது  தொடக்கத்திலிருந்தே தனது இலக்கான
சமுத்திரத்தை    நோக்கியதாக  அமைந்துள்ளதோ,  அவ்வாறே  மனிதனின்
வாழ்வியக்கமும்  தனது வாழ்வின் இலக்கான அர்த்தம், உண்மை, முழுமை
ஆகியவற்றை நோக்கியதாக அமைவது அவசியம்! நதியானது அது தொடங்
கிய  இடத்திலிருந்து தன் அடைவிடம் சேரும்வரை ஓய்வில்லாமல் பாய்ந்து
சென்று கொண்டேயிருக்கிறது; அது தன் பாதைநெடுகிலும் தான் சந்திக்கும்
எதனுடனும்  தங்கிவிடுவதுமில்லை, பிணைத்துக் கொள்வதுமில்லை, அடை
யாளப்  படுத்திக்கொள்வதுமில்லை!  நதியானது  எத்தகைய  நிலப்பரப்பின்
மீது பாய்ந்து சென்றாலும், அதன் உய்வும், முழுமையும் சமுத்திரத்தை அடை
வதிலேயே உள்ளது!  நதிக்கும் அது பாய்ந்து செல்லும்  நிலப்பரப்புகளுக்கும்
இடையேயான உறவு என்பது மிகத் தற்காலிகமானது!  நதியின்  ஒரே உறவு
சமுத்திரம் மட்டுமே! தன்  இலக்கை அடையும் குறிக்கோளிலிருந்து வழுவா
மல், சிந்தாமல் சிதறாமல் செல்லும்பொருட்டு நதி தனது கரைகளை, கட்டுப்
பாடுகளைத் தானே உருவாக்கிக்கொள்கிறது!

ஆம்,  நதியைப்போலவே மனிதனுக்கும் கரைகள்,  சுய-கட்டுப்பாடுகள் அவ
சியமாகும்! அவற்றைவிட,  இலக்கு குறித்த ஒற்றை மனம்கொண்ட தன்மை
(Single-Mindedness)மிகமிக அவசியமாகும்! இலக்கு குறித்த தீவிரமான
உணர்வு இல்லாமல் வெறும் கட்டுப்பாடுகளால் ஒரு பயனுமில்லை! மேலும்,
மனிதனுக்கு உண்மை குறித்த இடையறாத (ஓய்வில்லாத) விசாரமும் அவசி
யமாகும்! நதியைப்போலவே, மனிதனுக்கும் இவ்வுலகில் எதனுடனும் உறவு
என்பது இருக்கமுடியாது! எல்லா உறவுகளும் தற்காலிகமானவையே!  ஏனெ
னில்,  உண்மை மட்டுமே  மனிதனின்  ஒரே நிரந்தர உறவாகும்!  ஏனெனில்,
உண்மைதான்  மனிதனது சாரம் அல்லது ஆன்மா ஆகும்!  உண்மை என்பது
பூடகமானதொரு   கருத்தோ,  கோட்பாடோ, புரியாத   நுட்பச்  சொற்களைக்
கொண்டமைந்த தத்துவ விளக்கமோ அல்ல!  மாறாக, உண்மை என்பது ஒவ்
வொரு  மனிதனும் அடையக்கூடிய  உச்ச நிலை உணர்வாகும்! அனைத்தும்
- இப்பிரபஞ்சம் முழுவதும் -   ஒரு  ஒற்றைப் புள்ளியில்      குவிக்கப்பட்டு
அடையப்படும்  ஒருமையும் முழுமையுமான  உணர்வுமயமான  மெய்ம்மை
தான் உண்மையாகும்!  இது  வித்திலிருந்து  தோன்றிய மாபெரும் விருட்சம்
மீண்டும் வித்தினுள் அடங்குவதை ஒத்ததாகும்!
             - வாழ்-கால வரையறை விதி! /மா.கணேசன் /  20.12.2016


சமுத்திரம் செல்ல வழிகேட்கும்
நதியும் உண்டோ?

சமுத்திரம் சென்றடைய நதிக்கு
வழி சொல்பவன் மூடன்!

தனது நோக்கத்தை இழந்த நதி
நதியல்ல, தேங்கிய குட்டை!

சேற்றுக்குட்டைக்கு சமுத்திரம்
சேரும் எண்ணம் தோன்றுமா?

வெள்ளப்பெருக்கெடுக்காத நதி
ஒருபோதும் சமுத்திரம் சேராது!

தன்னிலிருந்தே உத்வேகம்,விவேகம்
வேகம் மூன்றையும் நதி பெறுகிறது!

தன்னுள் வெள்ளம் கொண்ட நதிக்கு
தடைகள் ஒரு பொருட்டல்ல!

நதிமூலம் ஆராய்வதில்லை நதி!
தன் இலக்கு மறப்பதில்லை
தவறுவதுமில்லை!
      *
தான் தோன்றிய கணத்திலிருந்து
இடைவழியில் என்ன நேர்ந்தாலும்
நேராவிட்டாலும் தங்காமல், தேங்காமல்
தடைகளைக்கண்டு தயங்காமல், மயங்காமல்
தன் போக்கில் போய்க்கொண்டேயிருக்கும்
நதியின் எண்ணம், குறிக்கோள், இலட்சியம்,
இலக்கு யாவும் சமுத்திரச் சங்கமம் மட்டுமே!
       *
நதி செல்லும் வழி நெடுகிலும் அதற்கு
பற்பல அனுபவங்கள்!
எதிலும் சிக்கித் தேங்கிடாத நதியே
சமுத்திரம் அடையும்!
வற்றாத சமுத்திரமே நதியின் முற்றான
பாதுகாப்பும் இறுதிப் புகலிடமும்!
இடைவழியிடங்களோ இன்னும்
நெடும் பயணமோ அல்ல முக்கியம்!
வெள்ளப் பெருக்கெடுத்திடும் வேகமே
வெற்றியின் ரகசியம் !
சமுத்திரச் சங்கமமே நதியினை
முழுமைப்படுத்திடும் , நிரந்திர
நிறைவு தந்திடும் இணையிலா
இறுதி அனுபவம்!
      *
           - பாதையற்ற பயணம் /மா.கணேசன் / 02.06.2016

நதியின் இலக்கு, முடிவு, முழுமை, அர்த்தம், நிறைவு . . . .யாவும் அது
சமுத்திரத்துடன்  சங்கமிப்பதில் மட்டுமே அடங்கியுள்ளது. நதிக்கும்,
சமுத்திரத்திற்கும் உள்ள அதே ஒற்றுமையும், தொடர்பும், பொருத்தப்
பாடும், வித்தியாசமும் தான் மனிதப்பாசத்திற்கும், ஆழமான அன்பிற்கும்
ஆனதுமாகும்

மனித உணர்வு என்பது ஒரு நதியைப் போன்றது.  நதியானது
இடைவழிகளில்  எதனாலும் தடுக்கப்படவில்லை, தேக்கப்படவில்லை
என்றால் அது விரைவாக சமுத்திரத்தைச் சென்றடைவது உறுதி.
உணர்வும் அவ்வாறே இடைவழிகளில் யாதொரு பொருளைக்கொண்டும்,
உறவைக்கொண்டும், கற்பனை அல்லது கோட்பாட்டைக் கொண்டும்
கட்டப்படவில்லை; எதனுடனும் பிணைக்கப்படவில்லை எனில் மனித
உணர்வானது  "முழு-உணர்வு" எனும் பேருணர்வு நிலையைச் சென்றடைந்து
தனது முழுமையைத் தழுவிக்கொள்ளும் !

                  - அன்பு:மகத்தானதொரு இன்மை!/மா.கணேசன் /22.03.2016.


       'நதி' மலையில் தான் தோன்றுகிறது
       என்ற போதிலும் அது
       மலைக்குரியதல்ல - உண்மையில்
       நதியை மலை உற்பத்தி செய்திடவில்லை!
       மாறாக, நதி உற்பத்தியாவதற்கு
       உகந்த இடமாக மலை உள்ளது
       அவ்வளவு தான்!
       மற்றபடி நதி சமுத்திரத்தைச் சேர்ந்தது!

நதியைப்போலவே,   மனித -உணர்வானது    உயிருள்ள    மனித-உடலில்
குறிப்பாக,  மனித-மூளையில் தோன்றிய போதிலும்,  அது இக்கரையைச்
சேர்ந்த  உடலையோ,  உயிரையோ,   இன்னும்  உலகையோ சேர்ந்ததல்ல!
மாறாக,  உணர்வு என்பது "முழு-உணர்வு" எனும் மறுகரையைச்சேர்ந்தது!  

நதியானது  பாய்ந்தோடிடக் கூடியது,  அதைத்  தேங்கிடச் செய்தால்,  அது
இக்கரையையே     பிரதிபலிப்ப  தாயிருக்கும்  -     அது    சமுத்திரத்தைச்
சென்றடையாது!  ஆனால்,  அது   வெள்ளப்பெருக்கெடுத்திடும் பட்சத்தில்
பாய்ந்தோடிடக்கூடிய முடுக்கத்தையும் வேகத்தையும் பெற்றிடும் - பிறகு
நதியானது விரைவாக சமுத்திரத்தைச் சென்றடைந்திடும்!

அது போல, உங்களது தொடக்க-நிலை உணர்வில் நீங்கள் தேங்கி  விடும்
பட்சத்தில்,  உங்கள் உணர்வானது  இக்கரைக்கு உரியதாக, இக்கரையை
மட்டுமே  பிரதிபலிப்பதாக;   இக்கரைக்குரிய  உடலுடனும்,    அதனுடைய
பிராணித்தனமான இச்சைகள், பசிகள், மற்றும் மேலோட்டமான  தேவை
களுடனும்   தன்னை  அடையாளப்படுத்திக்கொண்டுவிடும் அபாயத்தில்
சிக்குண்டு விடும்!  அதன் பிறகு,  உங்கள்  உணர்வை  இக்கரையிலிருந்து
பிரித்தெடுப்பது அவ்வளவு சுலபமல்ல!
               - மறு கரையிலிருந்து..... /மா.கணேசன் / 19.02.2010

ஒரு  ஆறு  என்பது  ஓடிக்கொண்டேயிருக்கிறது  என்பதால்,  ஒரு முறை
நாம்  குளித்த  அதே  தண்ணீரில்,  இரண்டாவது முறை  நாம் குளிக்க
முடியாது  என்பது புரிந்து கொள்ளக்கூடியதே; ஆனால், அப்புரிதல் எவ்வகை
யிலும்  இறுதியானதல்ல!  ஏனெனில், எந்தவொரு ஆறும் முடிவேயில்லாமல்

ஓடிக்கொண்டேயிருப்பதில்லை; மாறாக,எல்லா ஆறுகளும் முடிவில் கடலில்
சென்று கலக்கவே செய்கின்றன! ஆக, ஆற்றுக்கு இலக்கு உள்ளதைப்போல,
மனித  வாழ்க்கைக்கும்   இலக்கு   உள்ளது.  மனிதன்  வெறுமனே வாழ்ந்து
கொண்டேயிருப்பதில்லை;  அதில் அர்த்தமும் இல்லை!  இன்னும் அவன்
எப்போதும் ஆற்றில் குளித்துக்கொண்டேயிருக்கவும் முடியாது!

இவ்வாறே,பிரபஞ்சம் என்பதும் ஒரு ஆறுதான்!அது வெறுமனே ஒரு எந்திரம்
போல இயங்கிக் கொண்டேயிருக்கும்  ஒன்றல்ல! அது ஒரு ஒப்பற்ற இலக்கு
நோக்கிச் செல்லும் ஒரு பரிணாம இயக்கமாகும்!

         - மாற்றமனைத்தும் முடிவுறும்! / மா.கணேசன்/ 16.02.2017



நதி மலையில் உற்பத்தியாகிறதே
 தவிர
மலை நதியை உற்பத்தி செய்வதில்லை!

நதி உற்பத்தியாவதற்கு ஏற்ற இடமாக மலை
இருக்கிறது - அவ்வளவு தான்!

நதி என்பது மலை, பள்ளத்தாக்கு, காடு, சமவெளி,
நாடு, நகரம்.... யாவற்றிலிருந்தும் வேறானது!

நதி பாய்ந்துசெல்லும் மலை மற்றும் பிற
அனைத்து இடப்பரப்புக்களையும் தற்காலிகமாகச்
சார்ந்துள்ளதே தவிர எவற்றையும் அது சேர்ந்ததல்ல!

நதி சமுத்திரத்தை மட்டுமே சேர்ந்தது!

நதி மட்டுமே சமுத்திரத்தைச் சென்று சேரவேண்டுமே
தவிர - அது மலை, காடு, நாடு, நகரம் அனைத்தையும்
கொண்டு சேர்க்கத்தேவையில்லை!
           *
நதியைப்போலவே,

மனித உணர்வும் உடலில் (மூளையில்)
உற்பத்தியாகிறதே
 தவிர, உணர்வை உடலோ
(மூளையோ) உற்பத்தி செய்வதில்லை!

உணர்வு உற்பத்தியாவதற்கு உடலும், மூளையும்
ஏற்ற இடமாக இருக்கிறது - அவ்வளவு தான்!

மனித உடல், மூளை அல்லது மனம்
என்பது வேறு; உணர்வு என்பது இவற்றிலிருந்து
முற்றிலும் வேறான தன்மையுடையது!

உணர்வானது உலகம், உடல், புலன்கள், மனம், எண்ணம்
ஆகியவற்றைத் தற்காலிகமாகச் சார்ந்திருக்கிறதே
தவிர உணர்வு இவற்றைச் சேர்ந்ததல்ல!

மனித உணர்வு மகா-உணர்வுச் சமுத்திரமாகிய கடவுளைச்
சேர்ந்தது, சென்று சேர வேண்டும்!

மனித உணர்வு மட்டுமே முழு-உணர்வாகிய கடவுள் எனும்
இறுதி மெய்ம்மையை அடைய முடியும், அடைந்தாக
வேண்டுமே தவிர, உடலுக்கு முக்தி தேவையில்லை!
           *
"வாழ்க்கையை கணத்திற்கு கணம்
விழிப்புணர்வோடு வாழ வேண்டும்!"
என சிலர் சொல்கிறார்கள்.
இது சலிப்புட்டும் வேண்டாத வேலை!
கணத்திற்கு கணம் வேண்டாம்!
எப்போதாவது ஒரே ஒரு கணம் மட்டும்
முழுமையாக விழிப்புணர்வோடு
வாழ்ந்திடுங்கள் போதும் - ஏனெனில்
ஆற்றில் வெள்ளம் எப்போதும்
ஏற்படுவதில்லை!
           *
வெள்ளப்பெருக்கு கொள்ளாத நதி
ஒருபோதும் சமுத்திரத்தைச்
சென்றடைவதில்லை!

உணர்வுப்பெருக்கு கொள்ளாத மனிதன்
ஒருபோதும் உண்மையை அறிவதில்லை!

            *
        - தலைக்குமேல் வெள்ளம் /மா.கணேசன்/ 23.12.2008

மா.கணேசன்/நெய்வேலி/23.02.2017
----------------------------------------------------------------------------

Sunday, 21 May 2017

வாழ்வின் அர்த்தம் ஒன்றா? பலவா?






   

     வாழ்க்கைக்கு 'ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளன' என்று
     சொல்வதும், 'அர்த்தமேயில்லை' என்று சொல்வதும் ஒன்றுதான்!
                                                                 <•>

வாழ்வின் அர்த்தம் ஒன்றா? பலவா?  உலகில்  எத்தனை  கோடி  மனிதர்கள்
இருக்கிறார்களோ, அத்தனை கோடி அர்த்தங்கள் உள்ளன எனலாம்!  இதுதான்
எதார்த்தம்! ஒரு மேசையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் பயன்
படுத்தக்கூடும் என்பதுபோலவே "வாழ்க்கை" என்பதும் ஒவ்வொரு மாதிரியாக
அவரவர் விரும்பியபடி தாறுமாறாக வாழப்படுகிறது!

பொதுவாக, வாழ்க்கை என்பது உயிர்-வாழ்தல் என்பதையே குறிக்கிறது. ஏழை
எளியவர்கள் முதல் லட்சாதிபதி, கோடீஸ்வரர்கள் வரை எல்லா மனிதர்களும்
உயிர்-வாழ்வதைத் தான் வாழ்க்கை என வாழ்ந்து செல்கிறார்கள்!  உயிர்-வாழ்
தலில் ஏழ்மையான உயிர்-வாழ்தல், பணக்காரத்தனமான உயிர்-வாழ்தல் என்ற
தர-அளவுகள் எதுவுமில்லை! மாறாக, இத்தகைய தர-அளவுகள் யாவும் வாழ்க்
கையின் அர்த்தம் அறியாத சமூகத்தின், மனிதத்திரளின் கண்டுபிடிப்புகளாகும்!
உயிர்-வாழ்தல்  என்பது  உயிர்-வாழ்தல்  மட்டுமே;  அதில்  தர-அளவுகளைப்
புகுத்தவியலாது! ஆனால், இந்த அமானிட சமூகத்தில், மனிதத்தன்மைபெறாத
சமூகத்தில்,  எல்லா பிறழ்ச்சிகளும், செயற்கை, மற்றும் போலித்  தனங்களும்
சாத்தியமாகலாம்!  ஒருவன்  எவ்வளவு  சௌகரியமாகவும், ஆடம்பரமாகவும்
உயிர்-வாழ்ந்தாலும் அது ஒரு இம்மியளவும் அவனுடைய உயிர்-வாழ்தலுக்கு
அர்த்தம் சேர்ப்பதில்லை! இதற்குமாறாக, இன்னொருவன் சோற்றுக்கே கஷ்டப்
படுபவனாக வாழ்கிறான் எனில்,  அவனது  உயிர்-வாழ்தலும் அர்த்தம் பெறுவ
தில்லை;  சொல்லப்போனால்,  அவனுக்கு இன்னும் உயிர்-வாழ்தலே சாத்திய
மாகவில்லை!

உயிர்-வாழ்தலை நாம் மதிப்பிடமுடியுமெனில்,ஒரே ஒரு அம்சத்தைக்கொண்டு
மட்டுமே செய்யமுடியும்!  "அர்த்தம்"  என்பதே அந்த அம்சம்! ஆம், உயிர்-வாழ்
தலில்,  'அர்த்தபெறாதது', 'அர்த்தம் பெற்றது' என இருவகைகள் மட்டுமே சாத்
தியம்! ஆனால்,  இந்த வித்தியாசம்  சமூகத்தினால் உருவாக்கப்படுவதில்லை!
அதாவது,  உயிர்-வாழ்தல்  என்பது உயிர்-வாழ்தலைக்கடந்த வேறொரு நோக்
கத்தை நிறைவேற்றுவதற்கான அடிப்படையாக அமைந்த ஒரு கருவி போன்ற
தாகும்!  ஒருவன் மிகச் சௌகரியமாக உயிர்வாழலாம்; அவன் ஏன், எதற்காக,
எந்த நோக்கத்திற்காக,எந்த இலக்கை அடைவதற்காக உயிர்-வாழ்கிறான் என்று
அவனிடம் கேட்டால்,  அவனால்  எதையும்  சொல்லமுடியாது!  உலகிலுள்ள
99.9 %  பேர்களது  நிலையும்  இதுதான்!   உயிர்-வாழ்தலே  உயிர்-வாழ்தலின்
நோக்கமோ,  இலக்கோ  அல்ல என்பது அவர்களுக்குத் தெரியாது! அறியாமை
யில் உழல்பவர்கள், அஞ்ஞானிகள் பாக்கியவான்கள்!

சிலர், (அவர்களை என்ன பெயரிட்டு அழைப்பதென்று தெரியவில்லை!) வாழ்க்
கைக்கு ஒரே "ஒரு" அர்த்தம் மட்டுமே உள்ளது என்பதை மறுப்பவர்களாகவும்,
மாறாக,  வாழ்க்கைக்கு பலவித அர்த்தங்கள் உள்ளன என்பதாகவும் 'தத்துவம்'
பேசி வருகிறார்கள்! வாழ்க்கைக்கு ஒரே "ஒரு" அர்த்தம் மட்டுமே உள்ளது என்
பது  உண்மையானால்,  இவ்வளவு காலத்தில்,  பரவலாக உலகம் முழுவதும்
அந்த  ஒற்றை  அர்த்தத்தை  அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருப்பரே,  அதாவது,
இந்நேரம்  அது குறித்து கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்குமே!  ஆனால், அப்படி
எதுவும் நிகழவில்லையே! என்று வாதம் புரிகின்றனர்.

"அவ்வாறு,  வாழ்க்கைக்கு  ஒரே "ஒரு" அர்த்தம் மட்டுமே  உள்ளது என்றால்,
அதன்  மூலம் (source) எது? அம்மூலம் மனிதர்களிடமே இருப்பது என்பது
வெறுமனே  சாத்தியமில்லை என்பதுமட்டுமல்ல,  எல்லா மனிதர்களுக்குமாக
அத்தகைய   அர்த்தத்தை  எந்த  மனிதனும்  கண்டுபிடித்ததற்கான  அல்லது
உருவாக்கியதற்கான  தடயம் எதுவும் இல்லை!"  ஏற்கனவே எவராவது அந்த
அர்த்தத்தைக்  கண்டுபிடித்திருந்தால்,  அதை பிற மனிதர்கள் கவனித்திருக்கக்
கூடும்,  அதைப்பதிவு செய்திருக்கக்கூடும், எல்லோர் காதுகளுக்கும் அது எட்டி
யிருக்கும்.அவ்வாறு எவராவது கண்டுபிடித்திருப்பதாக உரிமைகோரியிருந்தால்
அக்கோரிக்கையை ஏற்காத பிறர்  மறுத்திருக்கக்கூடும்;  ஆனால்,  அதற்கான
தடயமும் இல்லை!" என்பதாக இந்த பன்மைவாதிகள் தருக்கம் செய்கிறார்கள்!

இவர்கள் சொல்வது போல  வாழ்க்கைக்குப் பல அர்த்தங்கள் இருக்குமானால்,
அது வாழ்க்கையாக இருக்காது! எல்லா மனிதர்களும் வாழ்க்கையின் அர்த்தத்
தைக்  கண்டடையாதவர்களாக இருக்கலாம்,  தொடர்ந்து அர்த்தத்தைக் கண்ட
டையும்   முயற்சியையே  வாழ்க்கையாக  மேற்கொள்ளலாம்,  தவறில்லை!
ஆனால்,  வாழ்க்கைக்குப்  பல அர்த்தங்கள் இருக்கிறது எனும் பன்மைவாதப்
பாழும் கிணற்றில் வீழாது தம்மைப்பாதுகாத்துக்கொள்வது மிகவும் முக்கியம்!

முதலிடத்தில்,  வாழ்க்கைக்கு  அர்த்தம் உள்ளது என்பதை நாம் அனைவரும்
கருத்தில் கொள்வது அவசியம்! அடுத்தது, அந்த அர்த்தத்தை நாம் ஒவ்வொரு
வரும்  தனித்தனியே  கண்டுபிடிப்பது  அவசியம்!  ஏனெனில், ஒருவன் தனது
பசிக்குத் தானேதான் உணவு உட்கொள்ளவேண்டும்! அடுத்து, அர்த்தத்திற்கான
மூலம் (source) நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது! உணர்வு தான் அர்த்தத்
திற்கான  மூலம் ஆகும்!  ஆம்,  ஒவ்வொரு  தனிமனிதனின்  உணர்வும்தான்
அர்த்தத்தின்  ஊற்றாக  மாற வேண்டும்!  வாழ்க்கை தனது அர்த்தத்தை மேற்
புறத்திலேயே அணிந்து கொண்டிருப்பதில்லை! ஆகவே,ஒவ்வொரு மனிதனும்
தன்னுள்  ஆழ்ந்து  அர்த்தத்தை  உணர்ந்தறிந்தாக வேண்டும்! உணர்வில்லை
யேல், மனிதனுக்கு வாழ்க்கையும் இல்லை, அர்த்தமும் இல்லை!

முதலிடத்தில்,  நாம் இங்கிருக்கிறோம் என்பது நம்முடைய சொந்தத் தெரிவி
னால்  அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்!
ஆகவே,  வாழ்வின் அர்த்தம்,  குறிக்கோள், இலக்கு குறித்த விஷயங்களிலும்
நம்முடைய   தெரிவுக்கு  எவ்வித இடமுமில்லை!  இதன் அர்த்தம் எல்லாம்
ஏற்கனவே   தீர்மானிக்கப்பட்டுவிட்டன  என்பதோ, அல்லது, நமக்கு யாதொரு
சுதந்திரமும் இல்லை என்பதோ,  அல்லது, நாம் வாழ்க்கை எனும் வழிமுறை
யின்  அடிமைகள் என்பதோ அல்ல!  மாறாக,   நாம்  திடீரென கண்விழித்துப்
பார்க்கையில், நாம் இங்கு, இப்பூமியின் மீது இருக்கிறோம்! இருப்பு,வாழ்க்கை
எனும் இயக்கம்  எங்கு, எப்போது,  எவ்வாறு  தொடங்கியது என்பது நமக்குத்
தெரியாது!  அது எங்கு, எதை நோக்கிச் செல்கிறது,  அதன் அசலான நோக்கம்,
இலக்கு  என்ன  என்பதும் நமக்குத்தெரியாது!  நமக்குத் தெரிவதெல்லாம், நம்
உள்ளிருந்து   நம்மைச் செலுத்துகிற பசி, தாகம், பாலுணர்வு, பாதுகாப்புணர்வு
போன்ற  சில அடிப்படையான இயல்பூக்கிகள் மட்டுமே!  இவை, உயிர்-வாழ்த
லைப்பற்றியதாக  மட்டுமே உள்ளதே தவிர,  வாழ்க்கையைப்பற்றி, வாழ்க்கை
யின்  அசலான குறிக்கோள், இலக்கு பற்றி எவ்வித குறிப்பையும் வழங்குவது
இல்லை!

இதன்  அர்த்தம்  வாழ்க்கைக்கு குறிப்பான,  பிரத்யேக அர்த்தம் எதுவுமில்லை
என்பதோ, ஆகவே,நாம் நம் விருப்பப்படி அர்த்தத்தைக் கற்பித்துக்கொள்ளலாம்
என்பதோ அல்ல! மாறாக, வாழ்க்கை இயக்கத்தின் நீள - அகலத்தைக்கொண்டு,
அதாவது,  பிரபஞ்சப் பரிணாம-இயக்கம்  இதுவரை   கடந்து வந்த  வளர்ச்சிக்
கட்டங்களையும்,   உள்ளார்ந்த  பரிணாமத் திட்டத்தையும்    உய்த்துணர்ந்து
வாழ்வின்   குறிக்கோளை,  இலக்கை,  அர்த்தத்தை,  நாம்  உய்த்துணர்ந்தாக
வேண்டும்!

அடுத்து,  மிக முக்கியமாக,  வாழ்வின் அர்த்தம் என்பதும் உண்மை என்பதும்
ஒன்றே தான்!  உண்மையிலும்  பல உண்மைகள் என்று எதுவும் கிடையாது!
வாழ்வின் அசலான, மிகப்பிரத்யேகமான அந்த ஒற்றை அர்த்தத்தை எத்தனை
யோ  தனிமனிதர்கள்  ஏற்கனவே  கண்டடைந்து உலகிற்கு அறிவித்துள்ளனர்;
அவர்களில்  நாமறிந்த  வகையில்  முதலாமவர் புத்தர் ஆவார்.  புத்தருக்கும்
முன்னர்,  உபநிடத ரிஷிகள், ஞானிகள் போன்ற பெயர் தெரியாத வேறு சிலர்,
இருந்திருக்கலாம்!   அடுத்து, சாக்ரட்டீஸ், இயேசு, லாவோத்சு போன்றோரும்,
பிற்காலங்களில்,  திருவள்ளுவர், திருமூலர்; பிறகு கபீர்தாசர்; நம் காலத்திற்கு
சற்று  முன்னர்  வள்ளலாரும்;  நம் காலத்தில் ரமணர், அரவிந்தர், கிருஷ்ண
மூர்த்தி போன்ற பலரும்  வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தறிந்து அறிவித்
துள்ளனர்!

ஆனால்,  புத்தர் ஆகட்டும், சாக்ரட்டீஸ், அல்லது இயேசு ஆகட்டும்; அவர்கள்
அர்த்தமுள்ள  வாழ்க்கையை வாழ்வதற்கான வழியை  மட்டும்தான் சொல்ல
முடியுமே தவிர,  அர்த்தத்தை  கண்டடைவது  ஒவ்வொரு மனிதனின் உணர்
வார்ந்த முயற்சியையும்,  முனைப்பையும் சார்ந்ததாகும்!  ஏனெனில், அர்த்தம்
என்பது  தொழிற்சாலையில் தயாரித்து எல்லோருக்கும் வினியோகம் செய்யப்
படக்கூடிய ஒரு பொருள் அல்ல! நமக்கான உணவை எவர்வேண்டுமானாலும்
சமைத்துத்தரலாம்;  ஆனால்,  நமக்கான உண்மையை, அர்த்தத்தை நாம் ஒவ்
வொருவரும்தான் சமைத்துக்கொள்ளவேண்டும்!

ஆனால், ஏன், பரவலாக, பெருமளவில் மனிதர்கள் வாழ்வின் அர்த்தம் பற்றிய
தேவையை  உணர்வதுகூட இல்லை? ஆம், போதிய உணர்வு இல்லாமையே
இதற்குக் காரணமாகும்!  அர்த்தத்தின்  தேவையை  உணரக்கூடிய அளவிற்கு
மனிதர்கள்  உணர்வு   பெறவில்லை, அதாவது,  உணர்வில்  வளரவில்லை!
சாதாரணமாக,  ஒருவனுக்கு  உணவின்  தேவையை  பசி-உணர்வு  ஏற்பட்டு
உணர்த்துவது போல  அர்த்தத்தின்  தேவையை உணர்த்துவதற்கு மனிதனுள்
யாதொரு மையமும் இல்லை!

ஏனெனில், அர்த்தத்திற்குரிய பசி ஒருவனுடைய உணர்வில் உதிக்கவேண்டும்!
அதாவது, அர்த்தத்தின் தேவையை மிகத்தீவிரமாக உணரும் மனித-உணர்வில்
ஏற்படும்  ஒருவகையான  - மீண்டும்  பழைய நிலைக்குத்  திரும்பவியலாத -
உயர் உணர்வியல் மாற்றம், அல்லது, மலர்ச்சி தான் அர்த்தம் என்பதாகும்!

ஆக, அர்த்தத்தை தேடும்படித் தூண்டுவதற்கான 'மையம்' ஏதுமில்லாத நிலை
யில் ஒருவன் அர்த்தத்தைத் தேடும்பட்சத்தில், உடனே,அவனுள் புதிதாக ஒரு
'மையம்' உருவாகி விடுகிறது!  அம்மையம் தான் அர்த்தத்தின்  ஊற்று; அதை
நாம் "ஆன்மா" என்றும் அழைக்கலாம்! ஆம், அர்த்தத்திற்கான பசி உங்களிடம்
தோன்றிடும் பட்சத்தில் நீங்கள் 'மையம்' உள்ள மனிதனாக,அதாவது "ஆன்மா"
உள்ள மனிதனாக ஆகிறீர்கள்! அப்போதுதான் நீங்கள் உண்மையில் மனிதனாக
ஆகிறீர்கள்!

உண்மையில், வாழ்க்கைக்கு ஒரே 'ஒரு' அர்த்தம் மட்டுமேயுள்ளது! ஒன்றுக்கு
மேல் அர்த்தங்கள்  இருப்பதாகக் கருதுவது  அபத்தமானது!  புத்தர் வாழ்வின்
அர்த்தமாக  தன்னுள்  எதைக் கண்டடைந்தாரோ,  அதே  அர்த்தத்தைத் தான்
அவருக்கு முன்பிருந்தவர்களும்,கண்டடைந்திருப்பர்! அதே அர்த்தத்தைத் தான்
புத்தருக்குப் பின்  வந்த நாமும், யாவரும் கண்டடைந்தாக வேண்டும்! பாமரர்
கள், சாதாரணர்கள், பண்டிதர்கள் என பரவலாக எல்லா மனிதர்களும் அர்த்தத்
தைக்  கண்டடையவில்லை  என்பதால், புத்தர் கண்டடைந்த அர்த்தம் அர்த்த
மற்றதாகிவிடாது! எல்லா கண்டுபிடிப்புகளும், கலைப்படைப்புக்களும், உயரிய
சாதனைகளும்,  தத்துவங்களும்,  சமயங்களும்  தனிமனிதர்களால்  மட்டுமே
நிகழ்த்தப்பட்டுள்ளன! வாழ்வின் அர்த்தத்தை புத்தர், இயேசு போன்ற ஒரு சில
தனிமனிதர்கள் மட்டுமே கண்டடைந்தனர் என்பதால்,  அவர்களை "விதிவிலக்
கானவர்கள்" என்று விலக்கிவிடலாகாது! மாறாக,அவர்களே நாம் அனைவரும்
பின் பற்றிடவேண்டிய "விதி" (LAW) போன்றவர்கள்!

பன்மைவாதிகளின் ஒரு அபாயகரமான கூற்று என்னவெனில், வாழ்க்கையின்
அர்த்தத்தைத் தேடுவது  என்பது  "ஆபத்தான விசாரம்"  என்று கூறுவதுதான்!
அதாவது,  "மனிதர்கள்,  வாழ்க்கைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என
அனுமானித்துக்கொள்ளும் பட்சத்தில்,  அத்தகைய அர்த்தத்தை மனிதனல்லாத
வேறு  ஏதோவொரு சக்தி நிர்ணயித்துள்ளதாக அவர்கள் நம்புகிறார்கள்;  அத்த
கைய  அனுமானத்தைச் செய்வதும்,  அல்லது,  மேற்குறிப்பிட்ட நம்பிக்கையி
லிருந்து செயல்படுவதும் ஆபத்தானது" என்கிறார்கள்! ஏனெனில்,

. அது நிரூபிக்கப்படாததை அனுமானித்துக்கொள்கிறது.
. அது விசாரத்தை மூடிவிடுகிறது.
. அது அர்த்தத்தை மனித சமூகத்திடமிருந்து இடம் மாற்றி வேறு எங்கோ
  கொண்டு சேர்த்துவிடுகிறது.
. அது மனிதர்களின் சொந்த வாழ்க்கைக்கான அர்த்தத்தை அவர்களே தீர்மானிப்
  பதை மறுக்கிறது.

முதலிடத்தில்,  வாழ்க்கைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்பதற்கும்,
மனிதனல்லாத வேறு ஏதோவொரு சக்தி அர்த்தத்தை நிர்ணயித்துள்ளது என்று
கொள்வதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை! ஆனால், அதேநேரத்தில், வாழ்
வின்  அர்த்தம் என்பது நதியின் இலக்கு சமுத்திரமே  என்பது போல முன்-தீர்
மானிக்கப்பட்ட  ஒன்றேயாகும்!  இதற்கும்  மனிதனல்லாத  வேறு எவ்வொரு
சக்திக்கும்  எவ்வொரு தொடர்பும் கிடையாது!  மேலும்,  ஒரு சிருஷ்டிகர்த்தா
தான்  இப்பிரபஞ்சத்தையும்,  அதில்  மனிதனையும்  படைத்து,  மனிதனுக்கு
வாழ்க்கையும் கொடுத்தார் என்றாலும்,  அத்தகைய  சிருஷ்டிகர்த்தா, கடவுள்,
மூலமெய்ம்மை,   வாழ்வின் அர்த்தம்,   உண்மை,  இலக்கு  ஆகிய  யாவும்
மனிதனின் உட்பொதிவில் உள்ளடங்கிய அம்சங்களே,மெய்ம்மைகளே! யாவும்
மனிதனின்  வழியாக,  அவனது  உணர்வில்  ஏற்படவேண்டிய உயர்-மாற்றங்
களின் வழியாக மட்டுமே வெளிப்படவியலும்!

அடுத்து, வாழ்க்கைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்பது  ஒரு அனு
மானம்  அல்ல!  வாழ்வின்  அர்த்தம்  என்ன  என்பதை அறிவதில் அடைந்த
தோல்வியின்   வெளிப்பாடு தான்  'வாழ்க்கைக்குப் பல அர்த்தங்கள் உள்ளன'
எனும்  பன்மைவாதிகளின்  அனுமானம் ஆகும்! உண்மையில், வாழ்க்கைக்கு
'ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளன' என்று சொல்வதும், வாழ்க்கைக்கு
'அர்த்தமேயில்லை' என்று சொல்வதும் ஒன்றுதான்!

அடுத்து,  வாழ்க்கைக்கு  ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்பது எவ்வகை
யிலும்  வாழ்க்கை  குறித்த  விசாரத்தை, சிந்தனையை, தேடலை, ஆழமான
ஆய்வை  மூடிவிடுவதுமில்லை; ஒப்பற்ற  அந்த அர்த்தத்தைக் கண்டடையும்
வரை முடித்துவிடுவதுமில்லை! அதற்கு இக்கட்டுரையே சான்று ஆகும்!

அடுத்து,  வாழ்க்கைக்கு  ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்பது எவ்வகை
யிலும்  அர்த்தத்தின் மூலத்தை மனிதனிடமிருந்து இடம் மாற்றி வேறெங்கோ
கொண்டு சேர்த்துவிடுவதுமில்லை!  அதாவது மனித சமூகத்திடமிருந்து இடம்
மாற்றி தனிமனிதர்களிடம் கொண்டு சேர்ப்பதைத்தவிர!  ஏனெனில், வாழ்வின்
அர்த்தத்தை  தனிமனிதர்கள்  ஒவ்வொருவரும் தனித்தனியே மட்டுமே கண்ட
டைய வியலுமே தவிர, ஒருபோதும் மனித சமூகத்தினாலோ, கும்பலினாலோ
கூட்டாகக்  கண்டடைய வியலாது!  வாழ்க்கை  என்பது தனிமனிதனின், ஒவ்
வொரு  தனிமனிதனின் வழியாக  மட்டுமே  வாழப்பட  முடியும்!  கும்பலாக,
கூட்டாக  உயிர்-வாழ்தல்  என்பது  மட்டுமே  நடத்தப்பட வியலும்,  அதிலும்
கௌரவமான   வகையிலானதொரு  உயிர்-வாழ்தலைக் கூட  சமூகத்தினால்
எல்லோருக்கும்  கிட்டும்   வகையில்   எவ்வொரு  சமூக  அமைப்பினாலும்,
அரசியல் அமைப்பினாலும் நிறைவேற்ற முடியவில்லை!

இறுதியாக,   வாழ்க்கை  என்பது  மனிதர்களுடைய  சொந்த  விவகாரமல்ல;
அதனுடைய  அர்த்தத்தை அவர்களே தீர்மானிப்பதற்கு! நதிக்கு சமுத்திரத்தை
அடைவதைக் காட்டிலும்   வேறு  இலக்கு  எதுவும்  இருக்கமுடியாது!  ஒரு
மரத்தில் காய்த்துள்ள பிஞ்சுகள் முற்றிக் காய்களாகி முடிவில், நன்கு கனிந்து
கனிகளாக ஆவதைக்காட்டிலும் வேறு இலக்கும் அர்த்தமும் இருக்கமுடியாது!
இந்த ஒட்டு மொத்த ஆட்டமும் (Show) அநாமதேயமானது (Impersonal),
அதாவது,  எவருக்கும்  சொந்தமானதல்ல! ஆகவேதான், அதைப் "புதிர்" என்று
சொல்லவேண்டியிருக்கிறது!  அதை  'இயற்கையானது'  என்று  சொல்லவும்
இடமில்லை! ஏனெனில்,இயற்கையே தன் அசலான இயற்கையை (இயல்பை)த்
தேடிச்செல்லும்  பரிணாம  இயக்கமாக  இருப்பதால்,  ஆட்டத்தின் முடிவில்,
அதாவது ஆட்டம் முழுமை பெறும்போது தான் அதன் 'புதிர்' விடுவிக்கப்படும்!

சில மறைஞானப் பள்ளிகள், ஒட்டுமொத்தப் படைப்பையும் கடவுளின் "லீலை",
விளையாட்டு  எனக்குறிப்பிடுகின்றன!  அதாவது,  கடவுளானவர்,  மனிதஜீவி
களையும் உள்ளடக்கி ஒளிந்து கண்டுபிடித்து (Hide-and-Seek)விளையாடும்
ஒருவகைப்  "புதிராட்டம்" என்று காண இடமுள்ளது!   ஆனால், அனைத்திற்கு
மான  மூலம்  கடவுளாயினும்,  அல்லது  பிரம்மம் எனப்படும் மெய்ம்மையா
னாலும்,  ஆட்டம் முழுமை பெறும்போதுதான் தெரியும்; மனிதன் கடவுளைக்
கண்டுபிடிக்கிறானா, மனிதனும், கடவுளும் ஒன்றாகிறார்களா என்பது!

ஆனால்,  'வாழ்க்கை ஒரு விளையாட்டு!' என்பது, கிரிக்கெட் போன்ற விளை
யாட்டோ,  அல்லது  சிறுவர்கள்  விளையாடும் விளையாட்டுக்களோ அல்ல!
விளையாட்டுக்கள் தவறானவை அல்ல; ஏனெனில், எவ்வொரு விளையாட்டு,
அல்லது செயலிலும் நாம் மனம்ஒன்றி ஈடுபடுவது நமக்கு மகிச்சியை அளிக்க
லாம்;  ஆனால்,  அது  அர்த்தத்தைத் தராது!  ஏனெனில்,   மெய்ம்மையோடு
இணையாத எவ்வொரு செயலும், ஈடுபாடும், வாழ்க்கையும் அர்த்தம் பெறாது!

சிலர், "ஒரு இசையை இசைக்கும் பொழுதோ, நடனம் ஆடும் பொழுதோ, ஒரு
விளையாட்டை விளையாடும் பொழுதோ, அச்செய்கைதான் வாழ்க்கைக்கான
அர்த்தத்தை கொடுக்கிறதே தவிர வாழ்க்கைக்கென்று ஒரு தனிப்பட்ட அர்த்தம்
இருப்பதாக  நினைத்து தேடிக்கொண்டிருப்பது அறிவீனம்!" என்கிறார்கள். இவர்
களுடைய  இக்கூற்று முற்றிலும் அர்த்தமற்றது. நாம் வாழ்வின் அர்த்தத்தைப்
பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்;  இவர்களோ, பொழுதை எவ்வாறு இனிமை
யாகவும்,  மகிழ்ச்சியாகவும்,  தாம்  விரும்பியவாறும்  கழிக்கலாம் என்பதைப்
பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!

ஆம்,  மனித வாழ்க்கைக்கு  மிகப் பிரத்யேகமான,  தனிச்சிறப்பான  "அர்த்தம்'
ஒன்று உள்ளது! அது குறித்து பிரத்யேக ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இல்லாமல்
அர்த்தத்தை  அடைய முடியாது!   ஒருவகையில்,  வாழ்க்கையின்  அர்த்தம்
பற்றிய தேடல் ஆபத்தானது தான்! ஏனெனில், வாழ்க்கையின் அர்த்தம் என்ன
என்று  ஒருவன்  தீவிரமாகத் தேடுவானெனில்,  அவன்  தற்போது  வாழ்ந்து
கொண்டிருக்கும் மிக மேலோட்டமான, பிராணித்தனமான, அர்த்தமற்ற வாழ்க்
கையை இழந்து விடுவது உறுதி!


மா.கணேசன்/ நெய்வேலி/19-05-2017
----------------------------------------------------------------------------

Thursday, 18 May 2017

"இதற்கா இத்தனை ஓட்டம்?"





இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதி  திரு. வேங்கடம் அவர்களால் எழுதப்
 பட்டு விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "இதற்கா இத்தனை ஓட்டம்"
  எனும் நூலின் பின்னட்டைச் செய்தி (Blurb) யாகும். இச்செய்தியைத்
   தொடர்ந்து அதிலுள்ள முக்கிய கருத்துக்களை இக்கட்டுரை அலசுகிறது.


                       •>>>•<<<•
   ---------------------------------------------
பிறப்பிலிருந்து கடைசி வரை நாம் எதை நோக்கியோ, எதற்காகவோ ஓடிக்
கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆரம்பக்கோடு எது, ஓடவேண்டிய திசை
என்ன என்பதைத் தெளிவாக தெரிந்து வைத்துக்கொண்டுதான் ஓட ஆரம்பித்
தோமா நாம்?

ஒருவேளை நாம் தற்போது ஓடிக்கொண்டிருப்பது,ஆட்டக்களத்தைத் தாண்டிய
கால்பந்து மைதானமாகவோ, ஆட்ட அரங்குக்கு வெளியிலோ என்று கூட
இருக்கலாம். அடிப்படையிலேயே கூட சந்தேகம் இருக்கிறது. முதலில், நாம்
படைக்கப்பட்டதே எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கத்தானா?
யார் கண்டது?

நம்முடைய அன்றாட வாழ்க்கை, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக்
கொள்ளும் போராட்டமாகவே இருந்து கழிந்துவிடுகிறது.ஆனால்,ஒரு சிருஷ்டி
கர்த்தா நாம் நம்முடைய மிகச் சாதாரண அன்றாட வேலைகளை செய்து
கொண்டிருப்பதற்காக மட்டுமே நமக்கு உயிர் கொடுத்திருப்பானா என்று
யோசிக்கவைக்கிறது. அல்லது, சிருஷ்டித்தவன் 'தன்னைப் புகழ் பாட ஒரு
கூட்டம் வேண்டும்!' என்று எண்ணி மனிதர்களை படைத்தானோ என்றும்
எண்ணத்தோன்றுகிறது.

ஆனால், ஒரு மிகப்பெரிய சிருஷ்டிகர்த்தா இத்தகைய சாமானியமான, தன்
புகழ் பாடும் ஒரு அற்பச்செயலுக்காக ஒரு சிருஷ்டியை செய்திருப்பார்
என்பதை நம்மால் நம்பமுடியவில்லை! நாம் வாழும் வாழ்க்கைக்கு உண்மை
யில் அர்த்தம் அல்லது குறிக்கோள் என்று ஏதாவது இருக்கிறதா?

   நாம் ஏன் படைக்கப்பட்டிருக்கிறோம்?

   நீங்கள் பிறந்ததற்கு என்ன காரணம்?

   நான் பிறந்ததற்கு என்ன அவசியம்?

   உலக ஞானிகள் இதைப்பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள்?
     
         - வேங்கடம்/ இதற்கா இத்தனை ஓட்டம்/விஜயா பதிப்பகம்
  --------------------------------------------------
                        •>>>•<<<•

நல்லது, இக்கட்டுரை ஒட்டு மொத்த புத்தகத்தைப்பற்றிய முழு அளவிலான
மதிப்புரையோ, அல்லது, விமர்சனமோ அல்ல. மாறாக, பின்னட்டைச் செய்தி
யிலுள்ள முக்கிய கருத்துக்களையும், மேலும் அதற்குத்தொடர்பான நூலின்
உள்ளே காணப்படும் ஒரு சில கருத்துக்களையும் பற்றிய அலசல் மட்டுமே.

முதலில், திரு.வேங்கடம் அவர்களுடைய "இதற்கா இத்தனை ஓட்டம்" எனும்
நூலின் தலைப்பு பற்றிச் சொல்லியாக வேண்டும். இத்தலைப்பு இந்நூலின்
மையக்கருத்தை மிகக் கச்சிதமாக எடுத்துச்சொல்லுகிறது. இந்நூலின் மையக்
கருத்து மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும், பின்னட்டையில்
எழுப்பப்படும் கேள்விகள் மனித வாழ்க்கையை மிக ஆழமாகக் காணவும்,
புரிந்துகொள்ளவும் வேண்டிய அவசியத்தைச் சுட்டுகின்றன.

நூலாசிரியர் தனது 'என்னுரை' எனும் பகுதியில் சொல்லியுள்ளபடி, இந்நூல்
ஒரு 'வித்தியாசமான' சுயமுன்னேற்ற நூல்தான். மேலும்,நூலாசிரியர் எழுதிய
படி, 'இதில் விவாதிக்கப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் மனம் சார்ந்தவை,
அக உலகு சம்பந்தப்பட்டவை,ஆழமானவை,அழகானவை' என்பதிலும் சந்தேக
மில்லை!

நூலாசிரியர் தனது உரையில் சொல்லியுள்ள,

     "சுய நலம் கருதிய வெற்றியாளனாக ஆவதில் ஒரு விசேஷமும்
      இல்லை, பலரும் அதைச் செய்திருக்கிறார்கள்."

எனும் இக்கருத்து சுட்டும் உண்மை அதி முக்கியமானதாகும். மேலும்,

     "ஆனால், வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, திருப்தியாக
     முடித்துக் கொண்டவர்கள் மிக மிகச் சொற்பம்."

எனும் இக்கருத்து,அதாவது, 'வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர்கள் மிக
மிகச் சொற்பமே'  என்பது  உண்மையிலும்  உண்மையாகும்! ஆனால், ஏனோ
ஆசிரியர், 'வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து திருப்தி கண்டவர்கள்' என்று
சொல்லாமல்,   'திருப்தியாக முடித்துக்கொண்டவர்கள்'  என்று  குறிப்பிடுவது
சற்று  நெருடலாக இருக்கிறது.   'திருப்தியாக முடித்துக்கொள்வது'  என்றால்
என்ன என்று அவர்  விளக்கியிருந்தால்  நன்றாக  இருந்திருக்கும்!  அதாவது,
வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தாலும்,  அல்லது அரைகுறையாக வாழ்ந்
தாலும்;   திருப்தியடைந்தாலும்,   அடையாவிட்டாலும்  எவரும்  வாழ்ந்தது
போதும் என்று முடித்துக் கொள்வதாகவோ, முடித்துக்கொள்ள முடியும் என்ப
தாகவோ  தெரியவில்லை!   ஏனெனில்,  முழுமையான  வாழ்க்கை  என்பது
அதனளவிலேயே முடிவானதாகும்! அதாவது, வாழ்க்கை உண்மையில்,முடிவ
துமில்லை, முடிவேயில்லாமல் தொடரவேண்டும் என்ற கட்டாயமும் அற்றது!
ஆம், முழுமையான வாழ்க்கை  என்பது ஒரு அசாதாரணமான இயக்கமாகும்!
அது, இயக்கத்தில் இருப்பதாகவேத்தெரியாத சலனமற்ற பேரியக்கமாகும்!

   "பிறப்பிலிருந்து கடைசி வரை நாம் எதை நோக்கியோ, எதற்காகவோ
   ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால்,ஆரம்பக்கோடு எது,ஓடவேண்டிய
   திசை என்ன என்பதைத் தெளிவாக தெரிந்து வைத்துக்கொண்டுதான் ஓட
   ஆரம்பித்தோமா நாம்?"

எனும் ஆசிரியரது இக்கேள்விக்கு பதில் 'இல்லை' என்பதே! மனிதர்கள் பிறந்த
திலிருந்து கடைசிவரை எதை நோக்கியோ,எதற்காகவோ ஓடிக்கொண்டேதான்
இருக்கிறார்கள்!  மனிதர்கள்  அறிந்தோ, அறியாமலோ சந்தோஷத்தைத் தான்
தேடுகிறார்கள்;  ஆனால்,  தவறான திசையில் தேடுகிறார்கள்;  அகத்தே தேட
வேண்டியதை புறத்தே தேடுகிறார்கள்! பணமும்,பொருட்களும்,சொத்துக்களும்
சந்தோஷத்தைப்  பெற்றுத்தரும் என்ற தவறான எண்ணத்தில்,  நேர்மையான
வழியிலோ,  அல்லது  நேர்மையற்ற வழிகளிலோ அவற்றைத் தேடித் தேடிச்
சேர்க்கிறார்கள்!

அடுத்து,

    "நாம் படைக்கப்பட்டதே எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்
    கத்தானா? யார் கண்டது?"

என்று பின்னட்டையில் கேள்வியெழுப்பி வியக்கிறார் ஆசிரியர். உண்மையில்,
நாம்  படைக்கப்பட்டது  எதையாவது  துரத்திக்கொண்டு  ஓடிக்கொண்டிருக்க
அல்ல!  ஆனால், 'யார் கண்டது?' என்று ஆசிரியர் சொல்லி வியப்பது பொறுப்
பற்றதொரு  குறிப்பாகவே தெரிகிறது;  அதில் சலிப்பும், களைப்பும் தெரிகிறது!
ஏனெனில்,  இக்கேள்விக்கான  பதிலை  நாம் ஒவ்வொருவரும்தான் கண்டாக
வேண்டும்,  அதாவது, கண்டுபிடித்தாக வேண்டும்! ஒருவேளை, வாசகர்களின்
சிந்தனையைத்   தூண்டுவதற்கான  ஒரு  உத்தியாக  'யார் கண்டது?'  என்று
ஆசிரியர் குறிப்பிட்டிருக்கலாம்!

"நாம்  படைக்கப்பட்டதே  எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கத்
தானா?" எனும் ஆசிரியரின் கேள்விக்கான பதில் அக்கேள்வியிலேயே உள்ளது!
அதாவது அக்கேள்வியை சற்று மாற்றிக் கேட்பதன் மூலம் அதற்கான சரியான
பதிலைப்பெறலாம். ஆம், "நாம் படைக்கப்பட்டது எதற்காக?" என்பதுதான் அந்த
சரியான கேள்வி!  சந்தேகமில்லாமல்,  "நாம் படைக்கப்பட்டது எதற்காக?" என்
பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்! நிச்சயமாக
வேறு  எதற்காகவும்  இல்லை!  ஏனெனில், வாழ்க்கை ஒரு புதிர்! அதை நாம்
ஆரம்பத்திலேயே உணரவில்லையெனில்,  இறுதிவரை உணராமலேயே போய்
விடுவோம்!

அடுத்து,

   "நம்முடைய அன்றாட வாழ்க்கை, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக்
   கொள்ளும் போராட்டமாகவே இருந்து கழிந்துவிடுகிறது."

என்கிற ஆண்டாண்டுகாலமாகத் தொடர்கிற, நாம் அனைவருமே ஈடுபட்டுள்ள
நிதரிசனமான  நடைமுறையை  ஆசிரியர்  குறிப்பிடுகிறார்.   உண்மையைச்
சொன்னால், இது நாமே நமக்கு உருவாக்கிக்கொண்ட பிரச்சினையாகும்! அதா
வது, வாழ்க்கையை என்னவென்று அறிந்து புரிந்து வாழ்கின்ற அணுகுமுறை
நம்மிடம் இருந்தால், அன்றாடவாழ்க்கை என்பது அரைத்த மாவையே அரைக்
கும்  அடிமைத்தொழிலாக  இருக்காது! அடிப்படைத்தேவைகள் உண்மையில்,
அடிப்படைத் தேவைகள் தான்,  அத்தியாவசியமான  தேவைகள் தானே தவிர
அவையே முழுமையான, இறுதியான தேவைகள் அல்ல! பிரச்சினைகள் இங்
கிருந்துதான் ஆரம்பிக்கின்றன!  அடிப்படைத்தேவைகளே  அனைத்துத்தேவை
களும் என்பதாகக் கொண்டு வாழ்வதுதான் பிரச்சினையின் மூலவேர் ஆகும்!

ஆனால்,அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் விவகாரமென்பது
எவ்வாறு போராட்டமாக ஆகியது? வாழ்வின் அசலான மதிப்புகளை (Values)
நாம்  உணர்ந்தறியாததினால்,  அடிப்படைத்தேவைகள் சுட்டும் பொருட்களும்,
அவற்றின் அளவும், எண்ணிக்கையும், தரமும் உயர்ந்த மதிப்புக்களாகக் கொள்
ளப்பட்டு கொண்டாடப்படும் பிறழ்ச்சி ஏற்பட்டது! அம்மதிப்புக்களை அடையும்
முனைப்பு சமூகத்தை பெரும் போட்டிக்களமாக மாற்றிவிட்டது! மேலும், முக்
கியமாக,  உயிர்-வாழ்தல் என்பது அதனளவிலேயே அர்த்தமளிக்கும் ஒன்றோ,
நிறைவு தரும்  ஒன்றோ அல்ல  என்பதால்,  உயிர்-வாழ்தலை  அலங்கரித்து
ஆடம்பரமாக  மேற்கொள்ளத் தலைப்பட்டதன் விளைவாக; அடிப்படை வாழ்க்
கைத்தேவைகளையும், பிற பயன்பாட்டுத்தேவைகளையும் விட பரிவர்த்தனை
மதிப்பான  பணம்  அனைத்துக்குமான மாற்றாக, பதிலீடாக, இறுதி மதிப்பாகக்
கொள்ளப்படும் நடைமுறை வாழ்க்கையைப் போராட்டமாக மாற்றிவிட்டது!

அடுத்து,

   "ஒரு சிருஷ்டிகர்த்தா நாம் நம்முடைய மிகச் சாதாரண அன்றாட வேலை
   களை செய்துகொண்டிருப்பதற்காக மட்டுமே நமக்கு உயிர் கொடுத்திருப்
   பானா என்று யோசிக்கவைக்கிறது. அல்லது, சிருஷ்டித்தவன் 'தன்னைப்
   புகழ் பாட ஒரு கூட்டம் வேண்டும்!' என்று எண்ணி மனிதர்களை படைத்
   தானோ என்றும் எண்ணத்தோன்றுகிறது."

எனக் குறிப்பிடும் ஆசிரியரின் கருத்து  சிந்தனைக்குரியது என்பதில் சந்தேகம்
இல்லை! நிச்சயம், பேரறிவான சிருஷ்டிகர்த்தா,  நம்முடைய மிகச் சாதாரண
அன்றாட வேலைகளை   செய்துகொண்டிருப்பதற்காக மட்டுமே நமக்கு உயிர்
கொடுத்திருக்க மாட்டார்!  அவ்வாறிருப்பின், நமக்கு சுய-உணர்வும், சிந்திக்கும்
திறனும் கொடுத்திருக்க வேண்டியதில்லையே!  புழு பூச்சிகளிலிருந்து, எல்லா
விலங்குஜீவிகளும்  தம்முடைய  மிகச்  சாதாரண  அன்றாட வேலைகளைத்
தானே    பல கோடியாண்டுகளாகச்  செய்துகொண்டிருக்கின்றன!  ஏற்கனவே
குறிப்பிட்டபடி,  வாழ்க்கை என்பது ஒரு அற்புதப்புதிர் ஆகும்! அதை அன்றாட
நடைமுறை விவகாரமாகச் சுருக்கியது மனிதஜீவிகளாகிய நாம்தான்!

வெறுமனே சிலகாலம் உயிர்-பிழைத்திருந்துவிட்டு பிறகொரு நாள் மாண்டு
போவதற்காகப் படைக்கப்பட்டவனல்ல மனிதன்!

அடுத்து,

   "சிருஷ்டித்தவன் 'தன்னைப் புகழ் பாட ஒரு கூட்டம் வேண்டும்!' என்று
   எண்ணி மனிதர்களை படைத்தானோ என்றும் எண்ணத்தோன்றுகிறது."

ஆசிரியரின் இந்த என்ணம் 'கடவுள்' எனப்படும் இறுதி மெய்ம்மைக்கும் மனித
னுக்கும் ஏற்படவேண்டிய தொடர்பின் முக்கியத்துவம் குறித்த பிரச்சினையை
முன்வைப்பதாயுள்ளது!  தொடர்ந்து இப்பிரச்சினையை அலசுவதற்கு முன்னர்,
இதற்குத்தொடர்புடைய ஆசிரியரின் இன்னொரு கருத்தையும் சேர்த்துக் காண்
போம்.

   "ஆனால், ஒரு மிகப்பெரிய சிருஷ்டிகர்த்தா இத்தகைய சாமானியமான,தன்
   புகழ் பாடும் ஒரு அற்பச்செயலுக்காக ஒரு சிருஷ்டியை செய்திருப்பார்
   என்பதை நம்மால் நம்பமுடியவில்லை! நாம் வாழும் வாழ்க்கைக்கு
   உண்மையில் அர்த்தம் அல்லது குறிக்கோள் என்று ஏதாவது இருக்கிறதா?"

முதலிடத்தில்,  இறையின் புகழ் பாடுவது  என்பது ஒரு அற்பச்செயல் அல்ல;
மாறாக,  அது ஒரு அற்புதச்செயல் ஆகும்!  இரண்டாவதாக, அதை நாம் நம்ப
வேண்டாம், புரிந்துகொண்டால் போதும்! அதாவது,வாழ்வில் மிக முக்கியமாக
நாம்  மகிழ்ச்சியையும்,  அமைதியையும்,  நிறைவையும் தான்  தேடுகிறோம்!
நம்மிடம் எவ்வளவு பணமும்,பொருளும் இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி,
அமைதி, நிறைவு ஆகியவற்றை அவை பெற்றுத்தராது! ஏனெனில்,சந்தோஷம்,
அமைதி, நிறைவு, அர்த்தம் ஆகியவை உலகிலுள்ள எவ்வொரு பொருளையும்
சார்ந்திருப்பவையல்ல!   பணம்,  பொன்,  பொருள், செல்வம், சொத்து, ஆகிய
எதுவும் இறுதியானதல்ல!  மாறாக,  எது முழுமையானதோ, இறுதியானதோ,
நித்தியமானதோ அத்தகைய மெய்ம்மை மட்டுமே மனிதனை நிறைவுசெய்யும்!

அத்தகைய மெய்ம்மையைத்தான் 'கடவுள், 'இறை', 'சிருஷ்டிகர்த்தா' என்றெல்
லாம் பாமரத்தனமாக நாம் குறிப்பிடுகிறோம்,கும்பிடுகிறோம்,கூத்தாடுகிறோம்!
எல்லாம் வல்ல,  எல்லாம் அறிந்த,  எங்கும் நிறைந்த  ஒரு  சிருஷ்டிகர்த்தா
இருக்கிறாரா,  இல்லையா என்கிற சர்ச்சைகளுக்கு அப்பால்,  ஒரு மாபெரும்
பிரபஞ்சம் இங்கே இருக்கிறது;  அதில் நாமும் இருக்கிறோம்! பிரபஞ்சம் ஏன்,
எதற்காக,  எந்த நோக்கத்திற்காக இருக்கிறது? அதில் நாம் ஏன் இருக்கிறோம்,
அதாவது,  உண்மையில் 'நாம்' யார், எத்தகைய மெய்ம்மை? நமது வாழ்வின்
குறிக்கோள், இலக்கு, அர்த்தம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதொன்றே நமது
ஒரே சீரிய தொழிலும், பிரதான வாழ்க்கைச் செயல்பாடும் ஆகும்!

இப்பிரபஞ்சம் 'கடவுளால் படைக்கப்பட்டது' என்பதும், 'இல்லை, தானே தோன்
றியது'  என்பதுமான அனுமானங்கள், ஊகங்கள், புராணிகங்கள், கோட்பாடுகள்,
வாதங்கள் ஒருபுறமிருக்க, பிரபஞ்சத்தின் உண்மையை அறிவதற்கு மனிதஜீவி
களாகிய நமக்கு இருக்கும் ஒரே கருவி, ஆயுதம், உணர்வு (Consciousness)
மட்டுமேயாகும்! மேலும், சிருஷ்டியின் ரகசியத்தை மட்டுமல்லாமல், சிருஷ்டி
கர்த்தாவின்  (கடவுளின்)  ரகசியத்தையும்  அறியக்கூடிய  ஒரே ஜீவி மனிதன்
மட்டுமே! இன்னும் மனிதனின் ரகசியத்தை (உண்மையை) யும் வெளிப்படுத்தக்
கூடிய  அதிசய மெய்ம்மை மனித-உணர்வே ஆகும்! அதாவது, சிருஷ்டிகர்த்தா
வின்  ரகசியத்தை  அறியக்கூடிய  மனிதனின் விசேடத்துவம்  என்னவெனில்,
அவனும் அந்த இறை-மெய்ம்மையில் பங்குபெறுபவனாகிறான் என்பதேயாகும்!

பாமரத்தனமான  கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ; நிச்சயம் இப்பிரபஞ்சம்
தோன்றுவதற்குக்  காரணமான ஒரு அம்சம், பண்பு, அல்லது, மூலமெய்ம்மை
ஒன்று  இருந்தாகவேண்டும்!  அம்மூலமெய்ம்மையை  மனிதனால் உணரவும்
அறியவும்  இயலும்  எனும் பட்சத்தில்,  நிச்சயம்  அந்த மூலமெய்ம்மைக்கும்,
மனிதனுக்கும்  ஒரு ஒற்றுமை,  அல்லது,  ஒத்த-தன்மை இருந்தாகவேண்டும்!
ஆம்,எதுவொன்றையும் அறிவதற்கான ஒரே கருவியாக மனிதன் பெற்றிருப்பது
உணர்வே என்றால்,  அதே உணர்வைக்கொண்டுதான் கடவுளையும் அறிந்தாக
வேண்டும்!  அதாவது,  மனித உணர்வின்  பிடிக்குள் அகப்படுபவராக  கடவுள்
இருப்பாரெனில், நிச்சயம் அவர் உணர்வுமயமானதொரு மெய்ம்மையாகத்தான்
இருந்தாக வேண்டும்! ஆம், உணர்வு தான் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள
அந்த ஒத்த-தன்மை!  ஆனால், இருவரும் உணர்வின் இருவேறு முனைகளில்
உள்ளனர்!  மனிதன்  உணர்வின் தொடக்க நிலையிலும்,  கடவுள் உணர்வின்
முழுமையாகவும் உள்ளனர்!  இவ்வுண்மையைத்தான்,  "கடவுள் மனிதனைத்
தன் சாயலில் படைத்தார்" என்பதாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது!

'கடவுள்'  என்று சொன்னாலும்,  அல்லது  மூல-சக்தி, ஆற்றல் என்று எப்படிச்
சொன்னாலும்;  அனைத்திற்கும்  காரணமான மகத்துவமானதொரு மெய்ம்மை,
உண்மை இருந்தாகவேண்டும்!

கடவுளை வழிபடவும்,  அவரது புகழ் பாடவும்தான் அவர் மனிதனைப் படைத்
தாரோ  இல்லையோ,  நிச்சயம்  "இப்பூமியில் பல்கிப்பெருகி, பூமியை நிரப்பி,

அதைக்கீழ்ப்படுத்துவதற்காக..." அல்ல! இதைச்செய்வதற்கு,  'பாக்டீரியா' எனப்
படும்  நுண்ணுயிரிகள் உள்ளன! அதே வேளையில், யாதொரு உருப்படியான,
உன்னதமான குறிக்கோளும், இலக்கும் இன்றி, பூமியின் வளங்களைச் சுரண்டி
தின்று, சுற்றுச்சூழலை வெகுவாக மாசுபடுத்தி இப்பூமியை அழித்துவிடும் அள
விற்கு மனித இனமானது ஏற்கனவே விஷக்கிருமிகளைப்போல பல்கிப்பெருகி
யுள்ளது!

மனிதன் கடவுளை வழிபடுகிறானோ, அவரது புகழ்பாடுகிறானோ இல்லையோ;
சிற்றுணர்வு கொண்ட அவன் தன்னை வழிபடுபவனாகவும், தன் புகழ் பாடுபவ
னாகவும்  அகந்தையில் ஆழ்ந்திருக்கிறான்!  உலகெங்கும்  மக்கள் திரளானது
அரசியல் தலைவர்களையும்,  சினிமா நட்சத்திரங்களையும்,  அல்லது விளை
யாட்டு வீரர்களையும்,  அல்லது,  வேறு பிரபலங்களையும் வழிபடும் போக்கு
நிலவுகிறது!   சிற்றுணர்வாளனான   மனிதன்   தன்னை  வழிபடுவதை விட
பேருணர்வான கடவுளை வழிபடவும், புகழ் பாடவும் செய்வது மேலானதாகும்!

ஆனால்,  கடவுளை வழிபடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல! அதாவது,
கற்களையும்,  சிலைகளையும்,  வேறு பொருட்களையும் மக்கள் மிக எளிதாக
அணுகவும்,  வழிபடவும் முடியும்! அதாவது,  ஒரு துரும்பைக் கூட ஒருவன்
கடவுள்  எனப் பாவித்து  அதை  வழிபட முடியும்!  ஆனால்,  உண்மையான
கடவுளை  அணுகுவதற்கு,  ஒருவன் உண்மையானவனாக இருக்கவேண்டும்!
உண்மையாக இருப்பது  என்றால்,  மனிதனாவன் மனிதனுக்குரிய இயல்பில்,
அதாவது, உணர்வாய்,உணர்வுக்கு வந்தவனாய் இருத்தல்வேண்டும்! அப்போது
தான், அவனால் பேருணர்வாகிய கடவுளை அணுகவும், அடையவும் இயலும்!

ஆகவேதான்,  "தேவன்  ஆவியாயிருக்கிறார்,  அவரைத் தொழுதுகொள்ளுகிற
வர்கள்  ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்"
என்று  இயேசு அறிவுறுத்துகிறார்!  இன்னொரு இடத்தில்,  "தேவன் மரித்தோ
ருக்குத் தேவனாயிராமல் ஜீவனுள்ளோருக்குத்  தேவனாயிருக்கிறார்" எனவும்
அவர் சொல்லியுள்ளார்! உணர்வு இருந்தும் உணர்வாயிராமல் இருக்கும் அகம்
செத்தவர்களை,   உணர்வற்றவர்களைத்தான்  இயேசு  மரித்தோர்  என்கிறார்;
இவர்களுக்கு மாறாக,  உணர்வுள்ளவர்களையே  அவர்  ஜீவனுள்ளோர் என்று
குறிப்பிடுகிறார்!

ஆசிரியர் வேங்கடம் தனது நூலில் காட்டியுள்ள சூஃபி ஞானி, ஹாதித் குட்ஸி
யின் மேற்கோளானது  'எதற்காகப் படைக்கப்பட்டான்?'  என்பதற்கான பதிலை
மிக அழகாகச்சொல்கிறது! "நான் மறைத்துவைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷம்!
என்னை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.ஆகவே நான் உங்களைப்படைத்து
இருக்கிறேன்!" என்று கடவுளே சொல்வது போன்று குட்ஸி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "கடவுளுடைய சந்தோஷத்திற்காகவே இந்த பிரபஞ்சம் இயங்குகிறது!"
எனும் சூஃபிக்களின் புரிதலும் மிகப்பொருத்தமாகவே உள்ளது! "கடவுளுடைய
சந்தோஷம்  என்பது  அவர் படைத்த படைப்புக்களைச் சார்ந்தது அல்ல! அவர்
படைப்புகள்  அனைவரும்  கடவுள்  சந்தோஷம்  அடையும் விதமாக  எப்படி
விளையாடி பரிசைப்வெறுகிறார்கள் என்பதுதான் வாழ்க்கை!" என்று சூஃபிக்கள்
சொல்கிறார்கள்.

உண்மையில், இப்பூமியின் மேற்பரப்பிலுள்ள விஷயங்களுக்கும்,பொருட்களுக்
குமான மதிப்பு என்பது இருக்கவே செய்கிறது! எனினும், பூமிக்கடியில் மறைந்
துள்ள நிலக்கரி, எண்ணை, உலோகங்களுக்கு இன்னும் அதிக மதிப்பு உள்ளது;
அதிலும், அனைத்து உலோகங்களிலும் அதிக மதிப்புடையதாக தங்கம் விளங்
குகிறது! இன்னும், வைரம் போன்ற விலை மதிப்புள்ள கற்களும் பூமிக்கடியில்
தான் மறைந்துள்ளன! அழகிய முத்துக்கள் கடலின் ஆழத்தில் மறைந்துள்ளன!
உண்மையில்,  இப்பொருட்கள் யாவும்  மனிதனால் மதிப்பேற்றப்பட்டு விலை
குறிக்கப்பட்ட இயற்கையான பொருட்கள் ஆகும்!

பொருட்களைப் பொக்கிஷங்களாகக் கருதும் மனிதர்கள் இருக்கிறார்கள்;  அவர்
களுக்கு மத்தியில்,இந்த இயற்கை,இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சம் எங்கிருந்து,
எவ்வாறு  தோன்றியது என்பதற்கான விடையை; அதாவது, படைப்பில் உள்ள
டங்கியிருக்கும் மிகச் சிக்கலான அறிவைக் கண்டு வியக்கும்  சிந்தனையாளர்
கள்,  தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் அவரவர் வழியில் (அணுகு முறையில்)
இறுதியான அறிவை,   அல்லது,  அந்த மூல-அறிவை அறிவதற்காக, வெளிக்
கொணருவதற்காகத்  தங்களைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்!  அதாவது,
சாதாரண சராசரி மனிதர்கள் பொருட்களைப்  பொக்கிஷமாகக் கருதுகிறார்கள்,
சிந்திக்கும்  மனிதர்களாகிய, தத்துவவாதிகள்,  விஞ்ஞானிகள் அனைத்தையும்
விளக்கும்  பேரறிவைப்  பொக்கிஷமாகக்  கருதுகிறார்கள்!  இவர்களில்  பலர்
உண்மையில்  "மறைத்து வைக்கப்பட்டுள்ள பொக்கிஷமான"  கடவுளைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!

முடிவாக, ஆசிரியர் வேங்கடம் அவர்கள் தன் நூலின் பின்னட்டையில் குறிப்
பிட்டிருந்த ஒரு கேள்விக்கான பதில் குறித்துப்பார்ப்போம்.

   "நாம் வாழும் வாழ்க்கைக்கு உண்மையில் அர்த்தம் அல்லது குறிக்கோள்
   என்று ஏதாவது இருக்கிறதா?"

இதற்கு பதில் 'இருக்கிறது!' என்பதுதான். இக்கட்டுரை முழுவதும் அதற்கான
சாட்சியமே ஆகும்! நல்லது, பல வருடங்களுக்குப்பிறகு, சிந்தனைக்கும், கேள்
விகளுக்கும் முக்கியத்துவம் தரும் "இதற்கா இத்தனை ஓட்டம்" நூலைத்
தந்தமைக்கு ஆசிரியர் திரு. வேங்கடம் அவர்களுக்கு நன்றி!

மா.கணேசன்/நெய்வேலி/11-05-2017
----------------------------------------------------------------------------

Tuesday, 16 May 2017

ஒரு கல், ஒரு தவளை, ஒரு மனிதன்!





       இருப்பானது உணர்வு கொள்ளப்படும் போது மட்டுமே
       வாழ்க்கையாகிறது!

இக்கட்டுரை,  இருப்பு (Existence) பற்றியும், உணர்வு (Consciousness)
பற்றியும் இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்புறவு, மற்றும் இடை-வினைகளை
யும்,அவற்றினால் விளையும் வாழ்க்கையையும் பற்றியது.

முதலில், இருப்பு என்றால் என்ன என்று பார்ப்போம். ஆம்,இருப்பவை யாவும்
இருப்பு தான். இப்பிரபஞ்சம் மொத்தத்தையும் இருப்பு எனலாம். ஆனால்,அதில்
இருப்பவை  அனைத்தும் ஒருபடித்தானவையல்ல! ஆகவே, இருப்பவைகளை
பண்பினடிப்படையில்  வகையினங்களாகப் பிரித்து  நாம் புரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு பார்த்தோமெனில்,  இப்பிரபஞ்சத்தில்,  மூன்று வகைப்பட்ட இருப்பு
நிலைகள் இருக்கின்றன.   அவை, சட-இருப்பு, உயிர்-இருப்பு, உணர்வு -இருப்பு
ஆகியன. உயிரற்ற சடப்பொருட்கள் யாவும் சட-இருப்பு வகையைச்சேர்ந்தவை.
உயிருள்ளவைகளும், புலன்கள்  வழியாகப் புறத்தை  உணரக்கூடிய விலங்கு
ஜீவிகள் யாவும் உயிர்-இருப்புவகையைச் சேர்ந்தவை. உயிருள்ளஜீவி என்கிற
வகையில் மனிதஜீவிகளும் உயிர்-இருப்பைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும்.
அவர்களை  வெறும் உயிர்-ஜீவிகள் என்பதாகக்கொள்ள வியலாது! ஏனெனில்,
மிகவும்  விசேடமான "சுய-உணர்வு" எனும் அம்சம் பெற்ற மனிதஜீவிகள்தான்
உணர்வு-இருப்பின்  பிரதான பிரதிநிதிகள் ஆவர்;  அதாவது அவர்கள் உணர்வு-
ஜீவிகள் ஆவர்!

பரிணாம ரீதியாகக்  காணும்போது,  இருப்பு  நிலைகள் ஒன்றையடுத்து  இன்
னொன்று என ஒன்றிலிருந்து இன்னொன்றாகத் தோன்றி ஒருவகை படிமுறை
அமைப்பில்  அமைந்திருப்பதை  அறியமுடியும்! முதலில் வெளிப்பட்டது சடப்
பொருள் அல்லது பருப்பொருள் (Matter) எனப்படுவதுதான்;  அதாவது, சட-
இருப்பு தான்.

இப்போது, சட-இருப்பின் தன்மை, இயல்பு எத்தகையது எனக்காண்போம். ஒரு
கூழாங்கல் இருக்கிறது;  அது உயிரும் அற்றது, உணர்வும் அற்றது. இன்னும்,
அதற்குச் சொந்த இயக்கம் என்பதும் கிடையாது!  அதற்கு உள்ளார்ந்த தேவை
களும் இல்லை! அடுத்து, மிக முக்கியமாக, ஒரு கூழாங்கல்லானது அதற்குப்
புறத்தேயுள்ள  உலகையோ, பொருட்களையோ எதையும் உணராது, அறியாது.
அவ்வாறு அறிவதற்குரிய புலன்கள் எதுவும் அதற்குக்கிடையாது! அடுத்து,அது
தன்னையும், தனது சொந்த இருப்பையும் உணராது, அறியாது! இவ்வாறு ஒரு
கூழாங்கல்லால்  தன்னையும் உணரவியலாது, அறியவியலாது, தனக்குப்புறத்
தேயுள்ளவற்றையும்   உணரவியலாது,  அறியவியலாது  என்பதால்  அதற்கு
இருப்பு  இருக்கிறதே தவிர, "வாழ்க்கை" என்பது இல்லை! ஏனெனில், இருப்பு
தன்னைத்தானே  உணர்வு கொள்ளும் போது மட்டுமே வாழ்க்கை பெறுகிறது;
அதாவது வாழ்கிறது!

அடுத்து,  உயிர்-இருப்பின்  தன்மை,  இயல்பு  எத்தகையது  எனக்காண்போம்.
ஒரு தவளை இருக்கிறது; அதற்கு உயிர் இருக்கிறது, ஆகவே, அதற்கு உணவு,
இணை போன்ற தேவைகளும் இருக்கின்றன. அவற்றைத்தேடிப்பெறுவதற்காக
அதற்குச்  சொந்த இயக்கமும்  இருக்கிறது!  அடுத்து,  மிக முக்கியமாக, ஒரு
தவளைக்குப் புலன்கள் (கண், காது போன்றவை) இருப்பதால், அதனால் அதற்
குப்  புறத்தேயுள்ள  பொருட்களையும் நிகழ்வுகளையும் உணரவும், அறியவும்
முடியும்! ஆனால், ஒரு தவளையால், தன்னை, தனது இருப்பை, "தாம் இருக்
கிறோம்!"  என்பதை  உணர வழியில்லை;  அதற்குரிய  "சுய-உணர்வு"  எனும்
அம்சம் அதனிடம் இல்லை! ஆகவே, தவளைக்குப் பெரிதாக "வாழ்க்கை" என்ப
தில்லை!  ஏனெனில், தவளையால், தனது  இருப்பை  உணர்ந்து அங்கீகரிக்க
இயலாது!  அதே நேரத்தில்,  ஒரு  கூழாங்கல்லை விட தவளையின் இருப்பு
உயர்வானதாகும்!

அடுத்து, உணர்வு-இருப்பின் தன்மை, இயல்பு  எத்தகையது  எனக்காண்போம்.
ஒரு மனிதன் இருக்கிறான்; அவனுக்கு உயிர் இருக்கிறது, ஆகவே, அவனுக்கு
உணவு,  இணை போன்ற தேவைகளும்,  இன்னும்  பலவகைத் தேவைகளும்
இருக்கின்றன.  அவற்றைத்  தேடிப்பெறுவதற்காக அவனுக்குச் சொந்த இயக்க
மும்  இருக்கிறது!  அடுத்து,  மிக முக்கியமாக,  மனிதனுக்கு ஐம்புலன்களும்
இருப்பதால்,   அவனால்  புறத்தேயுள்ள  பொருட்களையும்  நிகழ்வுகளையும்
உணரவும்,  அறியவும்;  அவற்றைத்  தனக்குச்  சாதகமாக  மாற்றியமைத்துக்
கொள்ளவும் முடியும்!  யாவற்றுக்கும்  மேலாக,  மனிதனுக்குச் "சுய-உணர்வு"
எனும்  விசேட அம்சம்  இருப்பதால்,  அவனால்  தன்னை,  தனது இருப்பை,
"தான் இருக்கிறேன்!"  என்பதை உணரவும் முடியும்! ஆம், தன்னை உணரவும்,
தனது சுதந்திர-சித்தம் கொண்டு செயல்படவும், முடிவெடுக்கவும்; தனது வாழ்
வின்  திசையை  மாற்றியமைக்கவும் முடியும்!  அவனால்,  தனது இருப்பை
உணர்ந்து  அங்கீகரிக்கவும், இருப்பின்  நோக்கத்தையறிந்து செயல்படுத்தவும்
முடியுமென்பதால்,  மனிதனுக்கு மட்டுமே  "வாழ்க்கை"  என்பது இருக்கிறது!
அவன் மட்டும் உணர்வுப்பூர்வமாக அறியத்தலைப்படுவானெனில்!

ஒட்டுமொத்த  பிரபஞ்ச இருப்பில், மனிதன் தனிச்சிறப்பான இடத்தில், இருப்பு-
நிலையில் இருந்தாலும்,  அவனுக்கான  பிரச்சினையும் பெரிது ஆகும்! மனித
ஜீவி  என்பவன்  'ஒன்றில்-இரண்டு' ஜீவியாக,  அதாவது,  உயிர்-ஜீவியாகவும்,
உணர்வுஜீவியாகவும் இருப்பதால், அவன் இரட்டை-வாழ்க்கை வாழ வேண்டிய
இக்கட்டான  நிலையில்  சிக்கித்  தடுமாறிக் கொண்டிருக்கிறான்  என்று தான்
சொல்லவேண்டும்!  ஆனால், பொதுவாகப் பெரும்பாலான மனிதஜீவிகள் செய்
திடும் பெரும் தவறு  என்னவெனில்,  இரண்டில்,  அதாவது  உயிர்-வாழ்க்கை,
உணர்வு-வாழ்க்கை  எனும் இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு,
அதாவது உயிர்-வாழ்க்கையைத் தெரிவுசெய்து வாழ்வதுதான்! ஆனால், இந்தத்
தவறு தன்னையறியாமல் நிகழ்ந்துவிடும் ஒன்று என்றாலும், அதற்கான முழு
பழியும்,அத்தவற்றைக் களையும் கடமையும்,பொறுப்பும் மனிதனையே சாரும்!

தன்னையறியாமல்   நிகழ்ந்துவிட்ட தவறு  என்பது அவ்வளவு சாதாரணமான
தல்ல; ஏனெனில் அதற்கான விலை மிகப்பெரிதாகும்! ஆம், 'வாழ்க்கை-இழப்பு'
என்பதுதான் அதற்கான விலையாகும்! தன்னையறியாததினால் நிகழ்ந்துவிட்ட
இத்தவற்றை தன்னையறிவதன் மூலம் மட்டுமே சரிசெய்திடமுடியும்! அதற்கு
ஒருவன் மீண்டும் பிறந்திட வேண்டும்! வேறுசொற்களில் சொன்னால், அவன்
கிட்டத்தட்ட தனது கீழ்ச்சுயத்திற்கும்,அதன் பிராணித்தனமான வாழ்க்கைக்கும்
இறந்தாக வேண்டும்!

ஆனால்,  இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யாமல், எவ்வாறு உயிர்-வாழ்க்கை
யையும்,  உணர்வு-வாழ்க்கையையும் சேர்த்தே வாழ்வது  என்ற கேள்வி ஒரு
வருக்குள் எழலாம்! மனிதஜீவி என்பவன் உணர்வு-வாழ்க்கைக்காகத் தோன்றி
யவனாவான்;  துல்லியமாகச்  சொன்னால்,  உணர்வுதான் மனிதன்!  ஆகவே,
அவன்  பிரதானமாக  உணர்வு-வாழ்க்கையைத் தான்  வாழ்ந்தாக  வேண்டும்!
அதாவது, உணர்வு-வாழ்க்கையை வாழ்வதற்குச் சேவை புரியும் வகையிலான
ஒரு  சிறந்த கருவியாக,  ஊடகமாக  உயிர்-வாழ்க்கையை  மாற்றியமைத்துக்
கொள்ளவேண்டும்!  உண்மையில்,  வாழ்வதற்கு  உயிர்-வாழ்க்கை,  உணர்வு-
வாழ்க்கை என இரண்டு வாழ்க்கை இல்லை!  ஏனெனில், "ஒருவன்  இரண்டு
எஜமான்களுக்கு  ஊழியம் செய்ய முடியாது!"

உயிர்-வாழ்க்கை என்பது உடலை மையமாகக்கொண்டது; உடலின் அன்றாடத்
தேவைகளைச்  சுற்றிச்  சுழல்வது.  உணர்வு-வாழ்க்கை  என்பது  உணர்வை
மையமாகக்கொண்டது;  உணர்வின் ஒரே தேவையும், இறுதித் தேவையுமான
மெய்ம்மையை அடைவதை இலக்காகக்கொண்டது! நதி தன் ஒரே இலக்கான
சமுத்திரத்தை  அடைவது  என்பதை  ஒரு கணமும்  மறப்பதோ, துறப்பதோ
இல்லை! அவ்வாறு மறந்துவிடும் பட்சத்தில், நதியானது நதியாக  இருக்காது;
மேலும் தனது வழியில் எதிர்ப்படும் தடைகளைக்கண்டு தயங்கி நிற்குமானால்
ஆங்காங்கே சிறுசிறு குட்டையாகத் தேங்கிவிடக்கூடும்! அவ்வாறே, மனிதனா
னவன்  தன் வாழ்வின் ஒப்பற்ற ஒரே இலக்கான  மெய்ம்மையை அடைவது
என்பதை ஒரு கணமும் மறப்பானெனில், அவன் ஒரு மனிதனாக இல்லாமல்
ஒரு ஜந்துவாகச் சுருங்கிப்போவான்!

ஆனால்,  பிரச்சினையும்,  மட்டுப்பாடும் உயிர்-வாழ்க்கையில் அடங்கியிருக்க
வில்லை! மாறாக, மனிதனிடமே உள்ளது; அவன் எத்தகைய வாழ்க்கையுடன்
தன்னைப் பிணைத்துக்கொள்கிறான் என்பதிலேயே உள்ளது!  உயிர்-வாழ்க்கை
என்பது  உணர்வு-வாழ்க்கையைத் தாங்கும்  ஒரு அடிப்படையாகும்,  ஆகவே,
அது  எவ்வகையிலும்  உணர்வு-வாழ்க்கைக்கு  எதிரானதாக  இருப்பதில்லை!
ஆனால்,மனிதர்கள் உயிர்-வாழ்க்கையை அர்த்தமற்றவகையில் அலங்கரித்தும்,
ஆடம்பரத்தைப் புகுத்தியும்,விரிவுபடுத்துவதன்மூலம், அது, "லௌகீகம்" என்ற
பிறழ்ச்சியான  வடிவத்திற்கு  மாற்றப்படுகிறது!  இத்தகைய  செயற்கையான
உயிர்-வாழ்க்கை எவ்வகையிலும் அர்த்தமுள்ளதாகவும்,நிறைவு தருவதாகவும்
அமையாத  நிலையில், ஏராளமானோர் ஆன்மீகத்தை நாடுகின்றனர்! அதாவது,
அர்த்தமற்ற லௌகீகத்திற்கு அர்த்தம்சேர்க்கும் விதமாக ஆன்மீகத்தில் ஈடுபடு
கின்றனர்! இதன் விளைவு, ஒருவகை ஆன்மீகம், போலி-ஆன்மீகம் வெகுவாக
வளர்ந்திருக்கிறது என்பது தான் வருத்தத்திற்குரியது!

உணர்வு-வாழ்க்கைக்கு  இன்னொரு பெயர்  "ஆன்மீகம்"  என்று சொல்லலாம்!
ஆனால்,  அது லௌகீகம் சலித்துப்போகும் போது, அல்லது ஒருவன் வாழும்
அர்த்தமற்ற  வாழ்வின் வெறுமையால் விரட்டியடிக்கப்படும்போது, பகுதி-நேர
ஈடுபாடாக, தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் அதே அர்த்த
மற்ற  வாழ்க்கைக்கு  திரும்பச் செல்வதற்காக மேற்கொள்ளக்கூடியது அல்ல!
முழுமையான  அர்ப்பணிப்பும்,  முழு-நேர ஈடுபாடும்  இல்லாமல்  ஆன்மீகம்
எனப்படும் உணர்வு-வாழ்க்கை சாத்தியமேயில்லை!

மேலும், உயிர்-வாழ்க்கை என்பது அதனளவில் முழுமையானதோ, முடிவான
ஒன்றோ அல்ல!  மாறாக,  உணர்வு-வாழ்க்கையை  எட்டுவதற்காக உருவான
முன்-நிபந்தனை போன்றதொரு ஏற்பாடாகும்!  மேலும், உணர்வு-வாழ்க்கையே
உயிர்-வாழ்க்கையின் உண்மையான விழைவும், நோக்கமும் ஆகும்!

சடமாகத் தோன்றிய பிரபஞ்ச இருப்பானது, ஒருகட்டத்தில்  உயிர்-ஜீவிகளின்
வழியாக உயிராக எழுவதும், அதையடுத்து மனிதஜீவிகளின் வழியாக உணர்
வாக எழுவதும்,  முடிவில்  மனித உணர்வு தன்னைத் தானே  முழுமையாக
உணர்வுகொள்வதை வாழ்க்கையென வாழ்ந்து, உணர்வுகொள்வதன் உச்சியில்
"முழு-உணர்வு" எனும் முழு-இருப்பில் தன் முழுமையைத்தழுவிக்கொள்கிறது!

ஒரு உயிர்-ஜீவி என்பது,  சடப்பண்பை  தன்னுள்  ஒருங்கிணைத்துக்கொண்ட,
சடப்பண்பைக்கடந்த   உயர்-நிலையாகும்!  அதேபோல, மனித-ஜீவி என்பவன்,
சடப்பண்பையும், உயிர்ப்பண்பையும், இன்னும் உணர்வையும் தன்னுள் ஒருங்
கிணைத்துக்கொண்ட ஒரு உயர்-நிலை மெய்ம்மையாகும்! இதுவரை நாம் சட-
இருப்பு, உயிர்-இருப்பு, மற்றும் உணர்வு-இருப்பு குறித்து மட்டும் தான் பார்த்து
வந்தோம். ஆனால், மனிதஜீவியை பிரதான பிரதிநிதியாகக் கொண்ட உணர்வு-
இருப்பு என்பது  இருப்பு, அல்லது உணர்வு நிலைகளின் இறுதி நிலை அல்ல!
மாறாக, நான்காவதும், இறுதியானதுமான ஒரு இருப்பு நிலையும் இருக்கிறது!
"முழு-உணர்வு"  என்பது அதன் பெயர்! அதுவே முழுமையான இருப்பு ஆகும்!
அது அனைத்து வகை இருப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்ட நிலை மட்டுமல்ல;
அனைத்தையும் கடந்த நிலையுமாகும்!

இருப்புக்கும், உணர்வுக்கும் உள்ள தொடர்பு என்ன? இருப்பு தான் உணர்வாகப்
பரிணமிக்கிறது!  உணர்வு,  ஒரு பேருணர்வு தான்  இருப்பாகச் சுரிணமித்தது
(சுருங்கியது)! பேருணர்வானது இருப்பாகச் (சடப்பொருள்) சுருங்கி (சுரிணாமம்),
பிறகு உயிராகி,  மனிதனாகி,  மனிதனுள் சிற்றுணர்வாக  உதயமாகி மீண்டும்
பேருணர்வாக எழும்  வழிமுறை தான்  பரிணாமம்  என்பதாகும்!  இது தான்,
அனைத்தையும்  விளக்கும்   மீபௌதீகத் தத்துவம் (Metaphysics) ஆகும்!

இருப்புக்கும்,  உணர்வுக்கும் உள்ள தொடர்பு குறித்துப் பேசுவதற்குக் காரணம்,
பண்பினடிப்படையில்  இருப்பும், உணர்வும் வெவ்வேறாயினும், இரண்டுக்கும்
நெருங்கிய  தொடர்பு உள்ளது!   கம்பளிப்புழுவுக்கும்,  வண்ணத்துப்பூச்சிக்கும்
உள்ள தொடர்புபோல! அதாவது, கம்பளிப்புழுவும், வண்ணத்துப்பூச்சியும் தனித்
தனி  ஜீவிகள் தான் என்றாலும்,  இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது;
எவ்வாறெனில், கம்பளிப்புழுதான் வண்ணத்துப்பூச்சியாக மாறியுள்ளது!

இருப்பு  தன்னைத்தானே  உணர்வு கொள்ளும் பொருட்டு உருமாற்றம் பெற்ற
நிலையே உணர்வு என்பதாகும்! ஏனெனில், தன்னைத் தானே உணர்வுகொள்ள
இயலாத  இருப்பு,   இருந்தும்  இல்லாதது போன்றது தான்! ஆகவே உலகம்,
அல்லது   பிரபஞ்சம்தான்  உணர்வுள்ள  மனிதஜீவியாகப்  பரிணமித்துள்ளது!
மனிதன் ஒரு குறும்-பிரபஞ்சம் (Microcosm)எனக்குறிப்பிடப்படுவது எவ்வித
காரணமும் அடிப்படையும் இல்லாமல் சொல்லப்பட்டதல்ல!

இப்பிரபஞ்சமானது  முதல் உயிர்ஜீவி தோன்றிடுவதற்கு  முன்னர்  பல நூறு
கோடியாண்டுகள் வெறும் சட-இருப்பாக,  எந்திரத்தனமான இயக்கத்தில் ஆழ்ந்
திருந்தது!  அக்காலக்கட்டங்களில்  பிரபஞ்சத்தை  அகலவிரிந்த  கண்களுடன்
ஆச்சரியத்துடன் நோக்கவும், அது பற்றி அறியவும், ஆராயவும் யாதொரு நாதி
யும் இல்லை! பிறகு முதல் உயிர்ஜீவி தோன்றியதுடன் பிரபஞ்சமானது உயிர்
இருப்பு பெற்றது! ஆனால், எண்ணற்ற உயிர்-ஜீவிகள் பூமியில் தோன்றியிருந்த
போதும்  எவ்வொரு விலங்குஜீவியும்  பிரபஞ்சத்தை  ஏறெடுத்துப் பார்க்கவும்
இல்லை! பிறகு உணர்வுள்ள மனிதஜீவி தோன்றியதும் முதன்முறையாக, இப்
பிரபஞ்சமானது மனிதனால் மட்டுமே வியந்து பார்க்கப்பட்டு அர்த்தம் பெற்றது!

ஆனால்  விஞ்ஞானிகளும்,  பொருள்முதல்வாதிகளும்,  இயற்கைவாதிகளும்
இப்பிரபஞ்சம் மனிதனுக்குப் புறத்தே தனியே சுயேச்சையாக உள்ளது எனவும்;
அது  மனிதனையோ, இன்னும் ஒரு கடவுளையோ சார்ந்திருக்கவில்லை என்
பதாகவும்;  மனிதன்  தோன்றுவதற்குரிய  வகையிலேயே  இப்பிரபஞ்சத்தின்
தொடக்கநிலை மதிப்புகள் (ஈர்ப்புவிசை, மின்காந்தவிசை போன்றவை) அமைந்
திருந்தன என்கிறவாதம் இறையியல் சார்புகொண்ட அதீதமான மனித-மையப்
பார்வை எனச்சாடி வருகின்றனர்! உண்மைதான், இது அதீதமானதொரு மனித-
மையப் பார்வையே ஆகும்! இன்னும் சொல்லப்போனால், இது மட்டுமே மிகச்
சரியான  பார்வையும் ஆகும்!  மேலும், இப்பிரபஞ்சம் பிரும்மாண்டமான அள
விற்குப்பெரிதாக இருக்கலாம்; அதில் நாம் எங்கோ ஒரு மூலையில் தோன்றி
யிருக்கலாம்; மேலும், இடவெளியில் நாம் பிரபஞ்சத்தின் மையத்தில் இல்லா
மலிருக்கலாம்!  ஏன், மிகப்பெரிய ஆலமரத்தில் மிகச்சிறிய கனிகள் தோன்றிட
வில்லையா? அக்கனிகள் மரத்தின் மையத்தில்தான் காய்க்கவேண்டுமா; ஓரங்
களில், கிளை நுனிகளில் காய்த்தால் ஆகாதா?

மா.கணேசன்/ நெய்வேலி/ 13-05-2017
----------------------------------------------------------------------------

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...