
வாழ்க்கைக்கு 'ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளன' என்று
சொல்வதும், 'அர்த்தமேயில்லை' என்று சொல்வதும் ஒன்றுதான்!
<•>
வாழ்வின் அர்த்தம் ஒன்றா? பலவா? உலகில் எத்தனை கோடி மனிதர்கள்
இருக்கிறார்களோ, அத்தனை கோடி அர்த்தங்கள் உள்ளன எனலாம்! இதுதான்
எதார்த்தம்! ஒரு மேசையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் பயன்
படுத்தக்கூடும் என்பதுபோலவே "வாழ்க்கை" என்பதும் ஒவ்வொரு மாதிரியாக
அவரவர் விரும்பியபடி தாறுமாறாக வாழப்படுகிறது!
பொதுவாக, வாழ்க்கை என்பது உயிர்-வாழ்தல் என்பதையே குறிக்கிறது. ஏழை
எளியவர்கள் முதல் லட்சாதிபதி, கோடீஸ்வரர்கள் வரை எல்லா மனிதர்களும்
உயிர்-வாழ்வதைத் தான் வாழ்க்கை என வாழ்ந்து செல்கிறார்கள்! உயிர்-வாழ்
தலில் ஏழ்மையான உயிர்-வாழ்தல், பணக்காரத்தனமான உயிர்-வாழ்தல் என்ற
தர-அளவுகள் எதுவுமில்லை! மாறாக, இத்தகைய தர-அளவுகள் யாவும் வாழ்க்
கையின் அர்த்தம் அறியாத சமூகத்தின், மனிதத்திரளின் கண்டுபிடிப்புகளாகும்!
உயிர்-வாழ்தல் என்பது உயிர்-வாழ்தல் மட்டுமே; அதில் தர-அளவுகளைப்
புகுத்தவியலாது! ஆனால், இந்த அமானிட சமூகத்தில், மனிதத்தன்மைபெறாத
சமூகத்தில், எல்லா பிறழ்ச்சிகளும், செயற்கை, மற்றும் போலித் தனங்களும்
சாத்தியமாகலாம்! ஒருவன் எவ்வளவு சௌகரியமாகவும், ஆடம்பரமாகவும்
உயிர்-வாழ்ந்தாலும் அது ஒரு இம்மியளவும் அவனுடைய உயிர்-வாழ்தலுக்கு
அர்த்தம் சேர்ப்பதில்லை! இதற்குமாறாக, இன்னொருவன் சோற்றுக்கே கஷ்டப்
படுபவனாக வாழ்கிறான் எனில், அவனது உயிர்-வாழ்தலும் அர்த்தம் பெறுவ
தில்லை; சொல்லப்போனால், அவனுக்கு இன்னும் உயிர்-வாழ்தலே சாத்திய
மாகவில்லை!
உயிர்-வாழ்தலை நாம் மதிப்பிடமுடியுமெனில்,ஒரே ஒரு அம்சத்தைக்கொண்டு
மட்டுமே செய்யமுடியும்! "அர்த்தம்" என்பதே அந்த அம்சம்! ஆம், உயிர்-வாழ்
தலில், 'அர்த்தபெறாதது', 'அர்த்தம் பெற்றது' என இருவகைகள் மட்டுமே சாத்
தியம்! ஆனால், இந்த வித்தியாசம் சமூகத்தினால் உருவாக்கப்படுவதில்லை!
அதாவது, உயிர்-வாழ்தல் என்பது உயிர்-வாழ்தலைக்கடந்த வேறொரு நோக்
கத்தை நிறைவேற்றுவதற்கான அடிப்படையாக அமைந்த ஒரு கருவி போன்ற
தாகும்! ஒருவன் மிகச் சௌகரியமாக உயிர்வாழலாம்; அவன் ஏன், எதற்காக,
எந்த நோக்கத்திற்காக,எந்த இலக்கை அடைவதற்காக உயிர்-வாழ்கிறான் என்று
அவனிடம் கேட்டால், அவனால் எதையும் சொல்லமுடியாது! உலகிலுள்ள
99.9 % பேர்களது நிலையும் இதுதான்! உயிர்-வாழ்தலே உயிர்-வாழ்தலின்
நோக்கமோ, இலக்கோ அல்ல என்பது அவர்களுக்குத் தெரியாது! அறியாமை
யில் உழல்பவர்கள், அஞ்ஞானிகள் பாக்கியவான்கள்!
சிலர், (அவர்களை என்ன பெயரிட்டு அழைப்பதென்று தெரியவில்லை!) வாழ்க்
கைக்கு ஒரே "ஒரு" அர்த்தம் மட்டுமே உள்ளது என்பதை மறுப்பவர்களாகவும்,
மாறாக, வாழ்க்கைக்கு பலவித அர்த்தங்கள் உள்ளன என்பதாகவும் 'தத்துவம்'
பேசி வருகிறார்கள்! வாழ்க்கைக்கு ஒரே "ஒரு" அர்த்தம் மட்டுமே உள்ளது என்
பது உண்மையானால், இவ்வளவு காலத்தில், பரவலாக உலகம் முழுவதும்
அந்த ஒற்றை அர்த்தத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருப்பரே, அதாவது,
இந்நேரம் அது குறித்து கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்குமே! ஆனால், அப்படி
எதுவும் நிகழவில்லையே! என்று வாதம் புரிகின்றனர்.
"அவ்வாறு, வாழ்க்கைக்கு ஒரே "ஒரு" அர்த்தம் மட்டுமே உள்ளது என்றால்,
அதன் மூலம் (source) எது? அம்மூலம் மனிதர்களிடமே இருப்பது என்பது
வெறுமனே சாத்தியமில்லை என்பதுமட்டுமல்ல, எல்லா மனிதர்களுக்குமாக
அத்தகைய அர்த்தத்தை எந்த மனிதனும் கண்டுபிடித்ததற்கான அல்லது
உருவாக்கியதற்கான தடயம் எதுவும் இல்லை!" ஏற்கனவே எவராவது அந்த
அர்த்தத்தைக் கண்டுபிடித்திருந்தால், அதை பிற மனிதர்கள் கவனித்திருக்கக்
கூடும், அதைப்பதிவு செய்திருக்கக்கூடும், எல்லோர் காதுகளுக்கும் அது எட்டி
யிருக்கும்.அவ்வாறு எவராவது கண்டுபிடித்திருப்பதாக உரிமைகோரியிருந்தால்
அக்கோரிக்கையை ஏற்காத பிறர் மறுத்திருக்கக்கூடும்; ஆனால், அதற்கான
தடயமும் இல்லை!" என்பதாக இந்த பன்மைவாதிகள் தருக்கம் செய்கிறார்கள்!
இவர்கள் சொல்வது போல வாழ்க்கைக்குப் பல அர்த்தங்கள் இருக்குமானால்,
அது வாழ்க்கையாக இருக்காது! எல்லா மனிதர்களும் வாழ்க்கையின் அர்த்தத்
தைக் கண்டடையாதவர்களாக இருக்கலாம், தொடர்ந்து அர்த்தத்தைக் கண்ட
டையும் முயற்சியையே வாழ்க்கையாக மேற்கொள்ளலாம், தவறில்லை!
ஆனால், வாழ்க்கைக்குப் பல அர்த்தங்கள் இருக்கிறது எனும் பன்மைவாதப்
பாழும் கிணற்றில் வீழாது தம்மைப்பாதுகாத்துக்கொள்வது மிகவும் முக்கியம்!
முதலிடத்தில், வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளது என்பதை நாம் அனைவரும்
கருத்தில் கொள்வது அவசியம்! அடுத்தது, அந்த அர்த்தத்தை நாம் ஒவ்வொரு
வரும் தனித்தனியே கண்டுபிடிப்பது அவசியம்! ஏனெனில், ஒருவன் தனது
பசிக்குத் தானேதான் உணவு உட்கொள்ளவேண்டும்! அடுத்து, அர்த்தத்திற்கான
மூலம் (source) நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது! உணர்வு தான் அர்த்தத்
திற்கான மூலம் ஆகும்! ஆம், ஒவ்வொரு தனிமனிதனின் உணர்வும்தான்
அர்த்தத்தின் ஊற்றாக மாற வேண்டும்! வாழ்க்கை தனது அர்த்தத்தை மேற்
புறத்திலேயே அணிந்து கொண்டிருப்பதில்லை! ஆகவே,ஒவ்வொரு மனிதனும்
தன்னுள் ஆழ்ந்து அர்த்தத்தை உணர்ந்தறிந்தாக வேண்டும்! உணர்வில்லை
யேல், மனிதனுக்கு வாழ்க்கையும் இல்லை, அர்த்தமும் இல்லை!
முதலிடத்தில், நாம் இங்கிருக்கிறோம் என்பது நம்முடைய சொந்தத் தெரிவி
னால் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்!
ஆகவே, வாழ்வின் அர்த்தம், குறிக்கோள், இலக்கு குறித்த விஷயங்களிலும்
நம்முடைய தெரிவுக்கு எவ்வித இடமுமில்லை! இதன் அர்த்தம் எல்லாம்
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன என்பதோ, அல்லது, நமக்கு யாதொரு
சுதந்திரமும் இல்லை என்பதோ, அல்லது, நாம் வாழ்க்கை எனும் வழிமுறை
யின் அடிமைகள் என்பதோ அல்ல! மாறாக, நாம் திடீரென கண்விழித்துப்
பார்க்கையில், நாம் இங்கு, இப்பூமியின் மீது இருக்கிறோம்! இருப்பு,வாழ்க்கை
எனும் இயக்கம் எங்கு, எப்போது, எவ்வாறு தொடங்கியது என்பது நமக்குத்
தெரியாது! அது எங்கு, எதை நோக்கிச் செல்கிறது, அதன் அசலான நோக்கம்,
இலக்கு என்ன என்பதும் நமக்குத்தெரியாது! நமக்குத் தெரிவதெல்லாம், நம்
உள்ளிருந்து நம்மைச் செலுத்துகிற பசி, தாகம், பாலுணர்வு, பாதுகாப்புணர்வு
போன்ற சில அடிப்படையான இயல்பூக்கிகள் மட்டுமே! இவை, உயிர்-வாழ்த
லைப்பற்றியதாக மட்டுமே உள்ளதே தவிர, வாழ்க்கையைப்பற்றி, வாழ்க்கை
யின் அசலான குறிக்கோள், இலக்கு பற்றி எவ்வித குறிப்பையும் வழங்குவது
இல்லை!
இதன் அர்த்தம் வாழ்க்கைக்கு குறிப்பான, பிரத்யேக அர்த்தம் எதுவுமில்லை
என்பதோ, ஆகவே,நாம் நம் விருப்பப்படி அர்த்தத்தைக் கற்பித்துக்கொள்ளலாம்
என்பதோ அல்ல! மாறாக, வாழ்க்கை இயக்கத்தின் நீள - அகலத்தைக்கொண்டு,
அதாவது, பிரபஞ்சப் பரிணாம-இயக்கம் இதுவரை கடந்து வந்த வளர்ச்சிக்
கட்டங்களையும், உள்ளார்ந்த பரிணாமத் திட்டத்தையும் உய்த்துணர்ந்து
வாழ்வின் குறிக்கோளை, இலக்கை, அர்த்தத்தை, நாம் உய்த்துணர்ந்தாக
வேண்டும்!
அடுத்து, மிக முக்கியமாக, வாழ்வின் அர்த்தம் என்பதும் உண்மை என்பதும்
ஒன்றே தான்! உண்மையிலும் பல உண்மைகள் என்று எதுவும் கிடையாது!
வாழ்வின் அசலான, மிகப்பிரத்யேகமான அந்த ஒற்றை அர்த்தத்தை எத்தனை
யோ தனிமனிதர்கள் ஏற்கனவே கண்டடைந்து உலகிற்கு அறிவித்துள்ளனர்;
அவர்களில் நாமறிந்த வகையில் முதலாமவர் புத்தர் ஆவார். புத்தருக்கும்
முன்னர், உபநிடத ரிஷிகள், ஞானிகள் போன்ற பெயர் தெரியாத வேறு சிலர்,
இருந்திருக்கலாம்! அடுத்து, சாக்ரட்டீஸ், இயேசு, லாவோத்சு போன்றோரும்,
பிற்காலங்களில், திருவள்ளுவர், திருமூலர்; பிறகு கபீர்தாசர்; நம் காலத்திற்கு
சற்று முன்னர் வள்ளலாரும்; நம் காலத்தில் ரமணர், அரவிந்தர், கிருஷ்ண
மூர்த்தி போன்ற பலரும் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தறிந்து அறிவித்
துள்ளனர்!
ஆனால், புத்தர் ஆகட்டும், சாக்ரட்டீஸ், அல்லது இயேசு ஆகட்டும்; அவர்கள்
அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியை மட்டும்தான் சொல்ல
முடியுமே தவிர, அர்த்தத்தை கண்டடைவது ஒவ்வொரு மனிதனின் உணர்
வார்ந்த முயற்சியையும், முனைப்பையும் சார்ந்ததாகும்! ஏனெனில், அர்த்தம்
என்பது தொழிற்சாலையில் தயாரித்து எல்லோருக்கும் வினியோகம் செய்யப்
படக்கூடிய ஒரு பொருள் அல்ல! நமக்கான உணவை எவர்வேண்டுமானாலும்
சமைத்துத்தரலாம்; ஆனால், நமக்கான உண்மையை, அர்த்தத்தை நாம் ஒவ்
வொருவரும்தான் சமைத்துக்கொள்ளவேண்டும்!
ஆனால், ஏன், பரவலாக, பெருமளவில் மனிதர்கள் வாழ்வின் அர்த்தம் பற்றிய
தேவையை உணர்வதுகூட இல்லை? ஆம், போதிய உணர்வு இல்லாமையே
இதற்குக் காரணமாகும்! அர்த்தத்தின் தேவையை உணரக்கூடிய அளவிற்கு
மனிதர்கள் உணர்வு பெறவில்லை, அதாவது, உணர்வில் வளரவில்லை!
சாதாரணமாக, ஒருவனுக்கு உணவின் தேவையை பசி-உணர்வு ஏற்பட்டு
உணர்த்துவது போல அர்த்தத்தின் தேவையை உணர்த்துவதற்கு மனிதனுள்
யாதொரு மையமும் இல்லை!
ஏனெனில், அர்த்தத்திற்குரிய பசி ஒருவனுடைய உணர்வில் உதிக்கவேண்டும்!
அதாவது, அர்த்தத்தின் தேவையை மிகத்தீவிரமாக உணரும் மனித-உணர்வில்
ஏற்படும் ஒருவகையான - மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவியலாத -
உயர் உணர்வியல் மாற்றம், அல்லது, மலர்ச்சி தான் அர்த்தம் என்பதாகும்!
ஆக, அர்த்தத்தை தேடும்படித் தூண்டுவதற்கான 'மையம்' ஏதுமில்லாத நிலை
யில் ஒருவன் அர்த்தத்தைத் தேடும்பட்சத்தில், உடனே,அவனுள் புதிதாக ஒரு
'மையம்' உருவாகி விடுகிறது! அம்மையம் தான் அர்த்தத்தின் ஊற்று; அதை
நாம் "ஆன்மா" என்றும் அழைக்கலாம்! ஆம், அர்த்தத்திற்கான பசி உங்களிடம்
தோன்றிடும் பட்சத்தில் நீங்கள் 'மையம்' உள்ள மனிதனாக,அதாவது "ஆன்மா"
உள்ள மனிதனாக ஆகிறீர்கள்! அப்போதுதான் நீங்கள் உண்மையில் மனிதனாக
ஆகிறீர்கள்!
உண்மையில், வாழ்க்கைக்கு ஒரே 'ஒரு' அர்த்தம் மட்டுமேயுள்ளது! ஒன்றுக்கு
மேல் அர்த்தங்கள் இருப்பதாகக் கருதுவது அபத்தமானது! புத்தர் வாழ்வின்
அர்த்தமாக தன்னுள் எதைக் கண்டடைந்தாரோ, அதே அர்த்தத்தைத் தான்
அவருக்கு முன்பிருந்தவர்களும்,கண்டடைந்திருப்பர்! அதே அர்த்தத்தைத் தான்
புத்தருக்குப் பின் வந்த நாமும், யாவரும் கண்டடைந்தாக வேண்டும்! பாமரர்
கள், சாதாரணர்கள், பண்டிதர்கள் என பரவலாக எல்லா மனிதர்களும் அர்த்தத்
தைக் கண்டடையவில்லை என்பதால், புத்தர் கண்டடைந்த அர்த்தம் அர்த்த
மற்றதாகிவிடாது! எல்லா கண்டுபிடிப்புகளும், கலைப்படைப்புக்களும், உயரிய
சாதனைகளும், தத்துவங்களும், சமயங்களும் தனிமனிதர்களால் மட்டுமே
நிகழ்த்தப்பட்டுள்ளன! வாழ்வின் அர்த்தத்தை புத்தர், இயேசு போன்ற ஒரு சில
தனிமனிதர்கள் மட்டுமே கண்டடைந்தனர் என்பதால், அவர்களை "விதிவிலக்
கானவர்கள்" என்று விலக்கிவிடலாகாது! மாறாக,அவர்களே நாம் அனைவரும்
பின் பற்றிடவேண்டிய "விதி" (LAW) போன்றவர்கள்!
பன்மைவாதிகளின் ஒரு அபாயகரமான கூற்று என்னவெனில், வாழ்க்கையின்
அர்த்தத்தைத் தேடுவது என்பது "ஆபத்தான விசாரம்" என்று கூறுவதுதான்!
அதாவது, "மனிதர்கள், வாழ்க்கைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என
அனுமானித்துக்கொள்ளும் பட்சத்தில், அத்தகைய அர்த்தத்தை மனிதனல்லாத
வேறு ஏதோவொரு சக்தி நிர்ணயித்துள்ளதாக அவர்கள் நம்புகிறார்கள்; அத்த
கைய அனுமானத்தைச் செய்வதும், அல்லது, மேற்குறிப்பிட்ட நம்பிக்கையி
லிருந்து செயல்படுவதும் ஆபத்தானது" என்கிறார்கள்! ஏனெனில்,
. அது நிரூபிக்கப்படாததை அனுமானித்துக்கொள்கிறது.
. அது விசாரத்தை மூடிவிடுகிறது.
. அது அர்த்தத்தை மனித சமூகத்திடமிருந்து இடம் மாற்றி வேறு எங்கோ
கொண்டு சேர்த்துவிடுகிறது.
. அது மனிதர்களின் சொந்த வாழ்க்கைக்கான அர்த்தத்தை அவர்களே தீர்மானிப்
பதை மறுக்கிறது.
முதலிடத்தில், வாழ்க்கைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்பதற்கும்,
மனிதனல்லாத வேறு ஏதோவொரு சக்தி அர்த்தத்தை நிர்ணயித்துள்ளது என்று
கொள்வதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை! ஆனால், அதேநேரத்தில், வாழ்
வின் அர்த்தம் என்பது நதியின் இலக்கு சமுத்திரமே என்பது போல முன்-தீர்
மானிக்கப்பட்ட ஒன்றேயாகும்! இதற்கும் மனிதனல்லாத வேறு எவ்வொரு
சக்திக்கும் எவ்வொரு தொடர்பும் கிடையாது! மேலும், ஒரு சிருஷ்டிகர்த்தா
தான் இப்பிரபஞ்சத்தையும், அதில் மனிதனையும் படைத்து, மனிதனுக்கு
வாழ்க்கையும் கொடுத்தார் என்றாலும், அத்தகைய சிருஷ்டிகர்த்தா, கடவுள்,
மூலமெய்ம்மை, வாழ்வின் அர்த்தம், உண்மை, இலக்கு ஆகிய யாவும்
மனிதனின் உட்பொதிவில் உள்ளடங்கிய அம்சங்களே,மெய்ம்மைகளே! யாவும்
மனிதனின் வழியாக, அவனது உணர்வில் ஏற்படவேண்டிய உயர்-மாற்றங்
களின் வழியாக மட்டுமே வெளிப்படவியலும்!
அடுத்து, வாழ்க்கைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்பது ஒரு அனு
மானம் அல்ல! வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை அறிவதில் அடைந்த
தோல்வியின் வெளிப்பாடு தான் 'வாழ்க்கைக்குப் பல அர்த்தங்கள் உள்ளன'
எனும் பன்மைவாதிகளின் அனுமானம் ஆகும்! உண்மையில், வாழ்க்கைக்கு
'ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளன' என்று சொல்வதும், வாழ்க்கைக்கு
'அர்த்தமேயில்லை' என்று சொல்வதும் ஒன்றுதான்!
அடுத்து, வாழ்க்கைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்பது எவ்வகை
யிலும் வாழ்க்கை குறித்த விசாரத்தை, சிந்தனையை, தேடலை, ஆழமான
ஆய்வை மூடிவிடுவதுமில்லை; ஒப்பற்ற அந்த அர்த்தத்தைக் கண்டடையும்
வரை முடித்துவிடுவதுமில்லை! அதற்கு இக்கட்டுரையே சான்று ஆகும்!
அடுத்து, வாழ்க்கைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்பது எவ்வகை
யிலும் அர்த்தத்தின் மூலத்தை மனிதனிடமிருந்து இடம் மாற்றி வேறெங்கோ
கொண்டு சேர்த்துவிடுவதுமில்லை! அதாவது மனித சமூகத்திடமிருந்து இடம்
மாற்றி தனிமனிதர்களிடம் கொண்டு சேர்ப்பதைத்தவிர! ஏனெனில், வாழ்வின்
அர்த்தத்தை தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே மட்டுமே கண்ட
டைய வியலுமே தவிர, ஒருபோதும் மனித சமூகத்தினாலோ, கும்பலினாலோ
கூட்டாகக் கண்டடைய வியலாது! வாழ்க்கை என்பது தனிமனிதனின், ஒவ்
வொரு தனிமனிதனின் வழியாக மட்டுமே வாழப்பட முடியும்! கும்பலாக,
கூட்டாக உயிர்-வாழ்தல் என்பது மட்டுமே நடத்தப்பட வியலும், அதிலும்
கௌரவமான வகையிலானதொரு உயிர்-வாழ்தலைக் கூட சமூகத்தினால்
எல்லோருக்கும் கிட்டும் வகையில் எவ்வொரு சமூக அமைப்பினாலும்,
அரசியல் அமைப்பினாலும் நிறைவேற்ற முடியவில்லை!
இறுதியாக, வாழ்க்கை என்பது மனிதர்களுடைய சொந்த விவகாரமல்ல;
அதனுடைய அர்த்தத்தை அவர்களே தீர்மானிப்பதற்கு! நதிக்கு சமுத்திரத்தை
அடைவதைக் காட்டிலும் வேறு இலக்கு எதுவும் இருக்கமுடியாது! ஒரு
மரத்தில் காய்த்துள்ள பிஞ்சுகள் முற்றிக் காய்களாகி முடிவில், நன்கு கனிந்து
கனிகளாக ஆவதைக்காட்டிலும் வேறு இலக்கும் அர்த்தமும் இருக்கமுடியாது!
இந்த ஒட்டு மொத்த ஆட்டமும் (Show) அநாமதேயமானது (Impersonal),
அதாவது, எவருக்கும் சொந்தமானதல்ல! ஆகவேதான், அதைப் "புதிர்" என்று
சொல்லவேண்டியிருக்கிறது! அதை 'இயற்கையானது' என்று சொல்லவும்
இடமில்லை! ஏனெனில்,இயற்கையே தன் அசலான இயற்கையை (இயல்பை)த்
தேடிச்செல்லும் பரிணாம இயக்கமாக இருப்பதால், ஆட்டத்தின் முடிவில்,
அதாவது ஆட்டம் முழுமை பெறும்போது தான் அதன் 'புதிர்' விடுவிக்கப்படும்!
சில மறைஞானப் பள்ளிகள், ஒட்டுமொத்தப் படைப்பையும் கடவுளின் "லீலை",
விளையாட்டு எனக்குறிப்பிடுகின்றன! அதாவது, கடவுளானவர், மனிதஜீவி
களையும் உள்ளடக்கி ஒளிந்து கண்டுபிடித்து (Hide-and-Seek)விளையாடும்
ஒருவகைப் "புதிராட்டம்" என்று காண இடமுள்ளது! ஆனால், அனைத்திற்கு
மான மூலம் கடவுளாயினும், அல்லது பிரம்மம் எனப்படும் மெய்ம்மையா
னாலும், ஆட்டம் முழுமை பெறும்போதுதான் தெரியும்; மனிதன் கடவுளைக்
கண்டுபிடிக்கிறானா, மனிதனும், கடவுளும் ஒன்றாகிறார்களா என்பது!
ஆனால், 'வாழ்க்கை ஒரு விளையாட்டு!' என்பது, கிரிக்கெட் போன்ற விளை
யாட்டோ, அல்லது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களோ அல்ல!
விளையாட்டுக்கள் தவறானவை அல்ல; ஏனெனில், எவ்வொரு விளையாட்டு,
அல்லது செயலிலும் நாம் மனம்ஒன்றி ஈடுபடுவது நமக்கு மகிச்சியை அளிக்க
லாம்; ஆனால், அது அர்த்தத்தைத் தராது! ஏனெனில், மெய்ம்மையோடு
இணையாத எவ்வொரு செயலும், ஈடுபாடும், வாழ்க்கையும் அர்த்தம் பெறாது!
சிலர், "ஒரு இசையை இசைக்கும் பொழுதோ, நடனம் ஆடும் பொழுதோ, ஒரு
விளையாட்டை விளையாடும் பொழுதோ, அச்செய்கைதான் வாழ்க்கைக்கான
அர்த்தத்தை கொடுக்கிறதே தவிர வாழ்க்கைக்கென்று ஒரு தனிப்பட்ட அர்த்தம்
இருப்பதாக நினைத்து தேடிக்கொண்டிருப்பது அறிவீனம்!" என்கிறார்கள். இவர்
களுடைய இக்கூற்று முற்றிலும் அர்த்தமற்றது. நாம் வாழ்வின் அர்த்தத்தைப்
பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்; இவர்களோ, பொழுதை எவ்வாறு இனிமை
யாகவும், மகிழ்ச்சியாகவும், தாம் விரும்பியவாறும் கழிக்கலாம் என்பதைப்
பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!
ஆம், மனித வாழ்க்கைக்கு மிகப் பிரத்யேகமான, தனிச்சிறப்பான "அர்த்தம்'
ஒன்று உள்ளது! அது குறித்து பிரத்யேக ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இல்லாமல்
அர்த்தத்தை அடைய முடியாது! ஒருவகையில், வாழ்க்கையின் அர்த்தம்
பற்றிய தேடல் ஆபத்தானது தான்! ஏனெனில், வாழ்க்கையின் அர்த்தம் என்ன
என்று ஒருவன் தீவிரமாகத் தேடுவானெனில், அவன் தற்போது வாழ்ந்து
கொண்டிருக்கும் மிக மேலோட்டமான, பிராணித்தனமான, அர்த்தமற்ற வாழ்க்
கையை இழந்து விடுவது உறுதி!
மா.கணேசன்/ நெய்வேலி/19-05-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment