
இருப்பானது உணர்வு கொள்ளப்படும் போது மட்டுமே
வாழ்க்கையாகிறது!
இக்கட்டுரை, இருப்பு (Existence) பற்றியும், உணர்வு (Consciousness)
பற்றியும் இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்புறவு, மற்றும் இடை-வினைகளை
யும்,அவற்றினால் விளையும் வாழ்க்கையையும் பற்றியது.
முதலில், இருப்பு என்றால் என்ன என்று பார்ப்போம். ஆம்,இருப்பவை யாவும்
இருப்பு தான். இப்பிரபஞ்சம் மொத்தத்தையும் இருப்பு எனலாம். ஆனால்,அதில்
இருப்பவை அனைத்தும் ஒருபடித்தானவையல்ல! ஆகவே, இருப்பவைகளை
பண்பினடிப்படையில் வகையினங்களாகப் பிரித்து நாம் புரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு பார்த்தோமெனில், இப்பிரபஞ்சத்தில், மூன்று வகைப்பட்ட இருப்பு
நிலைகள் இருக்கின்றன. அவை, சட-இருப்பு, உயிர்-இருப்பு, உணர்வு -இருப்பு
ஆகியன. உயிரற்ற சடப்பொருட்கள் யாவும் சட-இருப்பு வகையைச்சேர்ந்தவை.
உயிருள்ளவைகளும், புலன்கள் வழியாகப் புறத்தை உணரக்கூடிய விலங்கு
ஜீவிகள் யாவும் உயிர்-இருப்புவகையைச் சேர்ந்தவை. உயிருள்ளஜீவி என்கிற
வகையில் மனிதஜீவிகளும் உயிர்-இருப்பைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும்.
அவர்களை வெறும் உயிர்-ஜீவிகள் என்பதாகக்கொள்ள வியலாது! ஏனெனில்,
மிகவும் விசேடமான "சுய-உணர்வு" எனும் அம்சம் பெற்ற மனிதஜீவிகள்தான்
உணர்வு-இருப்பின் பிரதான பிரதிநிதிகள் ஆவர்; அதாவது அவர்கள் உணர்வு-
ஜீவிகள் ஆவர்!
பரிணாம ரீதியாகக் காணும்போது, இருப்பு நிலைகள் ஒன்றையடுத்து இன்
னொன்று என ஒன்றிலிருந்து இன்னொன்றாகத் தோன்றி ஒருவகை படிமுறை
அமைப்பில் அமைந்திருப்பதை அறியமுடியும்! முதலில் வெளிப்பட்டது சடப்
பொருள் அல்லது பருப்பொருள் (Matter) எனப்படுவதுதான்; அதாவது, சட-
இருப்பு தான்.
இப்போது, சட-இருப்பின் தன்மை, இயல்பு எத்தகையது எனக்காண்போம். ஒரு
கூழாங்கல் இருக்கிறது; அது உயிரும் அற்றது, உணர்வும் அற்றது. இன்னும்,
அதற்குச் சொந்த இயக்கம் என்பதும் கிடையாது! அதற்கு உள்ளார்ந்த தேவை
களும் இல்லை! அடுத்து, மிக முக்கியமாக, ஒரு கூழாங்கல்லானது அதற்குப்
புறத்தேயுள்ள உலகையோ, பொருட்களையோ எதையும் உணராது, அறியாது.
அவ்வாறு அறிவதற்குரிய புலன்கள் எதுவும் அதற்குக்கிடையாது! அடுத்து,அது
தன்னையும், தனது சொந்த இருப்பையும் உணராது, அறியாது! இவ்வாறு ஒரு
கூழாங்கல்லால் தன்னையும் உணரவியலாது, அறியவியலாது, தனக்குப்புறத்
தேயுள்ளவற்றையும் உணரவியலாது, அறியவியலாது என்பதால் அதற்கு
இருப்பு இருக்கிறதே தவிர, "வாழ்க்கை" என்பது இல்லை! ஏனெனில், இருப்பு
தன்னைத்தானே உணர்வு கொள்ளும் போது மட்டுமே வாழ்க்கை பெறுகிறது;
அதாவது வாழ்கிறது!
அடுத்து, உயிர்-இருப்பின் தன்மை, இயல்பு எத்தகையது எனக்காண்போம்.
ஒரு தவளை இருக்கிறது; அதற்கு உயிர் இருக்கிறது, ஆகவே, அதற்கு உணவு,
இணை போன்ற தேவைகளும் இருக்கின்றன. அவற்றைத்தேடிப்பெறுவதற்காக
அதற்குச் சொந்த இயக்கமும் இருக்கிறது! அடுத்து, மிக முக்கியமாக, ஒரு
தவளைக்குப் புலன்கள் (கண், காது போன்றவை) இருப்பதால், அதனால் அதற்
குப் புறத்தேயுள்ள பொருட்களையும் நிகழ்வுகளையும் உணரவும், அறியவும்
முடியும்! ஆனால், ஒரு தவளையால், தன்னை, தனது இருப்பை, "தாம் இருக்
கிறோம்!" என்பதை உணர வழியில்லை; அதற்குரிய "சுய-உணர்வு" எனும்
அம்சம் அதனிடம் இல்லை! ஆகவே, தவளைக்குப் பெரிதாக "வாழ்க்கை" என்ப
தில்லை! ஏனெனில், தவளையால், தனது இருப்பை உணர்ந்து அங்கீகரிக்க
இயலாது! அதே நேரத்தில், ஒரு கூழாங்கல்லை விட தவளையின் இருப்பு
உயர்வானதாகும்!
அடுத்து, உணர்வு-இருப்பின் தன்மை, இயல்பு எத்தகையது எனக்காண்போம்.
ஒரு மனிதன் இருக்கிறான்; அவனுக்கு உயிர் இருக்கிறது, ஆகவே, அவனுக்கு
உணவு, இணை போன்ற தேவைகளும், இன்னும் பலவகைத் தேவைகளும்
இருக்கின்றன. அவற்றைத் தேடிப்பெறுவதற்காக அவனுக்குச் சொந்த இயக்க
மும் இருக்கிறது! அடுத்து, மிக முக்கியமாக, மனிதனுக்கு ஐம்புலன்களும்
இருப்பதால், அவனால் புறத்தேயுள்ள பொருட்களையும் நிகழ்வுகளையும்
உணரவும், அறியவும்; அவற்றைத் தனக்குச் சாதகமாக மாற்றியமைத்துக்
கொள்ளவும் முடியும்! யாவற்றுக்கும் மேலாக, மனிதனுக்குச் "சுய-உணர்வு"
எனும் விசேட அம்சம் இருப்பதால், அவனால் தன்னை, தனது இருப்பை,
"தான் இருக்கிறேன்!" என்பதை உணரவும் முடியும்! ஆம், தன்னை உணரவும்,
தனது சுதந்திர-சித்தம் கொண்டு செயல்படவும், முடிவெடுக்கவும்; தனது வாழ்
வின் திசையை மாற்றியமைக்கவும் முடியும்! அவனால், தனது இருப்பை
உணர்ந்து அங்கீகரிக்கவும், இருப்பின் நோக்கத்தையறிந்து செயல்படுத்தவும்
முடியுமென்பதால், மனிதனுக்கு மட்டுமே "வாழ்க்கை" என்பது இருக்கிறது!
அவன் மட்டும் உணர்வுப்பூர்வமாக அறியத்தலைப்படுவானெனில்!
ஒட்டுமொத்த பிரபஞ்ச இருப்பில், மனிதன் தனிச்சிறப்பான இடத்தில், இருப்பு-
நிலையில் இருந்தாலும், அவனுக்கான பிரச்சினையும் பெரிது ஆகும்! மனித
ஜீவி என்பவன் 'ஒன்றில்-இரண்டு' ஜீவியாக, அதாவது, உயிர்-ஜீவியாகவும்,
உணர்வுஜீவியாகவும் இருப்பதால், அவன் இரட்டை-வாழ்க்கை வாழ வேண்டிய
இக்கட்டான நிலையில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருக்கிறான் என்று தான்
சொல்லவேண்டும்! ஆனால், பொதுவாகப் பெரும்பாலான மனிதஜீவிகள் செய்
திடும் பெரும் தவறு என்னவெனில், இரண்டில், அதாவது உயிர்-வாழ்க்கை,
உணர்வு-வாழ்க்கை எனும் இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு,
அதாவது உயிர்-வாழ்க்கையைத் தெரிவுசெய்து வாழ்வதுதான்! ஆனால், இந்தத்
தவறு தன்னையறியாமல் நிகழ்ந்துவிடும் ஒன்று என்றாலும், அதற்கான முழு
பழியும்,அத்தவற்றைக் களையும் கடமையும்,பொறுப்பும் மனிதனையே சாரும்!
தன்னையறியாமல் நிகழ்ந்துவிட்ட தவறு என்பது அவ்வளவு சாதாரணமான
தல்ல; ஏனெனில் அதற்கான விலை மிகப்பெரிதாகும்! ஆம், 'வாழ்க்கை-இழப்பு'
என்பதுதான் அதற்கான விலையாகும்! தன்னையறியாததினால் நிகழ்ந்துவிட்ட
இத்தவற்றை தன்னையறிவதன் மூலம் மட்டுமே சரிசெய்திடமுடியும்! அதற்கு
ஒருவன் மீண்டும் பிறந்திட வேண்டும்! வேறுசொற்களில் சொன்னால், அவன்
கிட்டத்தட்ட தனது கீழ்ச்சுயத்திற்கும்,அதன் பிராணித்தனமான வாழ்க்கைக்கும்
இறந்தாக வேண்டும்!
ஆனால், இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யாமல், எவ்வாறு உயிர்-வாழ்க்கை
யையும், உணர்வு-வாழ்க்கையையும் சேர்த்தே வாழ்வது என்ற கேள்வி ஒரு
வருக்குள் எழலாம்! மனிதஜீவி என்பவன் உணர்வு-வாழ்க்கைக்காகத் தோன்றி
யவனாவான்; துல்லியமாகச் சொன்னால், உணர்வுதான் மனிதன்! ஆகவே,
அவன் பிரதானமாக உணர்வு-வாழ்க்கையைத் தான் வாழ்ந்தாக வேண்டும்!
அதாவது, உணர்வு-வாழ்க்கையை வாழ்வதற்குச் சேவை புரியும் வகையிலான
ஒரு சிறந்த கருவியாக, ஊடகமாக உயிர்-வாழ்க்கையை மாற்றியமைத்துக்
கொள்ளவேண்டும்! உண்மையில், வாழ்வதற்கு உயிர்-வாழ்க்கை, உணர்வு-
வாழ்க்கை என இரண்டு வாழ்க்கை இல்லை! ஏனெனில், "ஒருவன் இரண்டு
எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது!"
உயிர்-வாழ்க்கை என்பது உடலை மையமாகக்கொண்டது; உடலின் அன்றாடத்
தேவைகளைச் சுற்றிச் சுழல்வது. உணர்வு-வாழ்க்கை என்பது உணர்வை
மையமாகக்கொண்டது; உணர்வின் ஒரே தேவையும், இறுதித் தேவையுமான
மெய்ம்மையை அடைவதை இலக்காகக்கொண்டது! நதி தன் ஒரே இலக்கான
சமுத்திரத்தை அடைவது என்பதை ஒரு கணமும் மறப்பதோ, துறப்பதோ
இல்லை! அவ்வாறு மறந்துவிடும் பட்சத்தில், நதியானது நதியாக இருக்காது;
மேலும் தனது வழியில் எதிர்ப்படும் தடைகளைக்கண்டு தயங்கி நிற்குமானால்
ஆங்காங்கே சிறுசிறு குட்டையாகத் தேங்கிவிடக்கூடும்! அவ்வாறே, மனிதனா
னவன் தன் வாழ்வின் ஒப்பற்ற ஒரே இலக்கான மெய்ம்மையை அடைவது
என்பதை ஒரு கணமும் மறப்பானெனில், அவன் ஒரு மனிதனாக இல்லாமல்
ஒரு ஜந்துவாகச் சுருங்கிப்போவான்!
ஆனால், பிரச்சினையும், மட்டுப்பாடும் உயிர்-வாழ்க்கையில் அடங்கியிருக்க
வில்லை! மாறாக, மனிதனிடமே உள்ளது; அவன் எத்தகைய வாழ்க்கையுடன்
தன்னைப் பிணைத்துக்கொள்கிறான் என்பதிலேயே உள்ளது! உயிர்-வாழ்க்கை
என்பது உணர்வு-வாழ்க்கையைத் தாங்கும் ஒரு அடிப்படையாகும், ஆகவே,
அது எவ்வகையிலும் உணர்வு-வாழ்க்கைக்கு எதிரானதாக இருப்பதில்லை!
ஆனால்,மனிதர்கள் உயிர்-வாழ்க்கையை அர்த்தமற்றவகையில் அலங்கரித்தும்,
ஆடம்பரத்தைப் புகுத்தியும்,விரிவுபடுத்துவதன்மூலம், அது, "லௌகீகம்" என்ற
பிறழ்ச்சியான வடிவத்திற்கு மாற்றப்படுகிறது! இத்தகைய செயற்கையான
உயிர்-வாழ்க்கை எவ்வகையிலும் அர்த்தமுள்ளதாகவும்,நிறைவு தருவதாகவும்
அமையாத நிலையில், ஏராளமானோர் ஆன்மீகத்தை நாடுகின்றனர்! அதாவது,
அர்த்தமற்ற லௌகீகத்திற்கு அர்த்தம்சேர்க்கும் விதமாக ஆன்மீகத்தில் ஈடுபடு
கின்றனர்! இதன் விளைவு, ஒருவகை ஆன்மீகம், போலி-ஆன்மீகம் வெகுவாக
வளர்ந்திருக்கிறது என்பது தான் வருத்தத்திற்குரியது!
உணர்வு-வாழ்க்கைக்கு இன்னொரு பெயர் "ஆன்மீகம்" என்று சொல்லலாம்!
ஆனால், அது லௌகீகம் சலித்துப்போகும் போது, அல்லது ஒருவன் வாழும்
அர்த்தமற்ற வாழ்வின் வெறுமையால் விரட்டியடிக்கப்படும்போது, பகுதி-நேர
ஈடுபாடாக, தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் அதே அர்த்த
மற்ற வாழ்க்கைக்கு திரும்பச் செல்வதற்காக மேற்கொள்ளக்கூடியது அல்ல!
முழுமையான அர்ப்பணிப்பும், முழு-நேர ஈடுபாடும் இல்லாமல் ஆன்மீகம்
எனப்படும் உணர்வு-வாழ்க்கை சாத்தியமேயில்லை!
மேலும், உயிர்-வாழ்க்கை என்பது அதனளவில் முழுமையானதோ, முடிவான
ஒன்றோ அல்ல! மாறாக, உணர்வு-வாழ்க்கையை எட்டுவதற்காக உருவான
முன்-நிபந்தனை போன்றதொரு ஏற்பாடாகும்! மேலும், உணர்வு-வாழ்க்கையே
உயிர்-வாழ்க்கையின் உண்மையான விழைவும், நோக்கமும் ஆகும்!
சடமாகத் தோன்றிய பிரபஞ்ச இருப்பானது, ஒருகட்டத்தில் உயிர்-ஜீவிகளின்
வழியாக உயிராக எழுவதும், அதையடுத்து மனிதஜீவிகளின் வழியாக உணர்
வாக எழுவதும், முடிவில் மனித உணர்வு தன்னைத் தானே முழுமையாக
உணர்வுகொள்வதை வாழ்க்கையென வாழ்ந்து, உணர்வுகொள்வதன் உச்சியில்
"முழு-உணர்வு" எனும் முழு-இருப்பில் தன் முழுமையைத்தழுவிக்கொள்கிறது!
ஒரு உயிர்-ஜீவி என்பது, சடப்பண்பை தன்னுள் ஒருங்கிணைத்துக்கொண்ட,
சடப்பண்பைக்கடந்த உயர்-நிலையாகும்! அதேபோல, மனித-ஜீவி என்பவன்,
சடப்பண்பையும், உயிர்ப்பண்பையும், இன்னும் உணர்வையும் தன்னுள் ஒருங்
கிணைத்துக்கொண்ட ஒரு உயர்-நிலை மெய்ம்மையாகும்! இதுவரை நாம் சட-
இருப்பு, உயிர்-இருப்பு, மற்றும் உணர்வு-இருப்பு குறித்து மட்டும் தான் பார்த்து
வந்தோம். ஆனால், மனிதஜீவியை பிரதான பிரதிநிதியாகக் கொண்ட உணர்வு-
இருப்பு என்பது இருப்பு, அல்லது உணர்வு நிலைகளின் இறுதி நிலை அல்ல!
மாறாக, நான்காவதும், இறுதியானதுமான ஒரு இருப்பு நிலையும் இருக்கிறது!
"முழு-உணர்வு" என்பது அதன் பெயர்! அதுவே முழுமையான இருப்பு ஆகும்!
அது அனைத்து வகை இருப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்ட நிலை மட்டுமல்ல;
அனைத்தையும் கடந்த நிலையுமாகும்!
இருப்புக்கும், உணர்வுக்கும் உள்ள தொடர்பு என்ன? இருப்பு தான் உணர்வாகப்
பரிணமிக்கிறது! உணர்வு, ஒரு பேருணர்வு தான் இருப்பாகச் சுரிணமித்தது
(சுருங்கியது)! பேருணர்வானது இருப்பாகச் (சடப்பொருள்) சுருங்கி (சுரிணாமம்),
பிறகு உயிராகி, மனிதனாகி, மனிதனுள் சிற்றுணர்வாக உதயமாகி மீண்டும்
பேருணர்வாக எழும் வழிமுறை தான் பரிணாமம் என்பதாகும்! இது தான்,
அனைத்தையும் விளக்கும் மீபௌதீகத் தத்துவம் (Metaphysics) ஆகும்!
இருப்புக்கும், உணர்வுக்கும் உள்ள தொடர்பு குறித்துப் பேசுவதற்குக் காரணம்,
பண்பினடிப்படையில் இருப்பும், உணர்வும் வெவ்வேறாயினும், இரண்டுக்கும்
நெருங்கிய தொடர்பு உள்ளது! கம்பளிப்புழுவுக்கும், வண்ணத்துப்பூச்சிக்கும்
உள்ள தொடர்புபோல! அதாவது, கம்பளிப்புழுவும், வண்ணத்துப்பூச்சியும் தனித்
தனி ஜீவிகள் தான் என்றாலும், இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது;
எவ்வாறெனில், கம்பளிப்புழுதான் வண்ணத்துப்பூச்சியாக மாறியுள்ளது!
இருப்பு தன்னைத்தானே உணர்வு கொள்ளும் பொருட்டு உருமாற்றம் பெற்ற
நிலையே உணர்வு என்பதாகும்! ஏனெனில், தன்னைத் தானே உணர்வுகொள்ள
இயலாத இருப்பு, இருந்தும் இல்லாதது போன்றது தான்! ஆகவே உலகம்,
அல்லது பிரபஞ்சம்தான் உணர்வுள்ள மனிதஜீவியாகப் பரிணமித்துள்ளது!
மனிதன் ஒரு குறும்-பிரபஞ்சம் (Microcosm)எனக்குறிப்பிடப்படுவது எவ்வித
காரணமும் அடிப்படையும் இல்லாமல் சொல்லப்பட்டதல்ல!
இப்பிரபஞ்சமானது முதல் உயிர்ஜீவி தோன்றிடுவதற்கு முன்னர் பல நூறு
கோடியாண்டுகள் வெறும் சட-இருப்பாக, எந்திரத்தனமான இயக்கத்தில் ஆழ்ந்
திருந்தது! அக்காலக்கட்டங்களில் பிரபஞ்சத்தை அகலவிரிந்த கண்களுடன்
ஆச்சரியத்துடன் நோக்கவும், அது பற்றி அறியவும், ஆராயவும் யாதொரு நாதி
யும் இல்லை! பிறகு முதல் உயிர்ஜீவி தோன்றியதுடன் பிரபஞ்சமானது உயிர்
இருப்பு பெற்றது! ஆனால், எண்ணற்ற உயிர்-ஜீவிகள் பூமியில் தோன்றியிருந்த
போதும் எவ்வொரு விலங்குஜீவியும் பிரபஞ்சத்தை ஏறெடுத்துப் பார்க்கவும்
இல்லை! பிறகு உணர்வுள்ள மனிதஜீவி தோன்றியதும் முதன்முறையாக, இப்
பிரபஞ்சமானது மனிதனால் மட்டுமே வியந்து பார்க்கப்பட்டு அர்த்தம் பெற்றது!
ஆனால் விஞ்ஞானிகளும், பொருள்முதல்வாதிகளும், இயற்கைவாதிகளும்
இப்பிரபஞ்சம் மனிதனுக்குப் புறத்தே தனியே சுயேச்சையாக உள்ளது எனவும்;
அது மனிதனையோ, இன்னும் ஒரு கடவுளையோ சார்ந்திருக்கவில்லை என்
பதாகவும்; மனிதன் தோன்றுவதற்குரிய வகையிலேயே இப்பிரபஞ்சத்தின்
தொடக்கநிலை மதிப்புகள் (ஈர்ப்புவிசை, மின்காந்தவிசை போன்றவை) அமைந்
திருந்தன என்கிறவாதம் இறையியல் சார்புகொண்ட அதீதமான மனித-மையப்
பார்வை எனச்சாடி வருகின்றனர்! உண்மைதான், இது அதீதமானதொரு மனித-
மையப் பார்வையே ஆகும்! இன்னும் சொல்லப்போனால், இது மட்டுமே மிகச்
சரியான பார்வையும் ஆகும்! மேலும், இப்பிரபஞ்சம் பிரும்மாண்டமான அள
விற்குப்பெரிதாக இருக்கலாம்; அதில் நாம் எங்கோ ஒரு மூலையில் தோன்றி
யிருக்கலாம்; மேலும், இடவெளியில் நாம் பிரபஞ்சத்தின் மையத்தில் இல்லா
மலிருக்கலாம்! ஏன், மிகப்பெரிய ஆலமரத்தில் மிகச்சிறிய கனிகள் தோன்றிட
வில்லையா? அக்கனிகள் மரத்தின் மையத்தில்தான் காய்க்கவேண்டுமா; ஓரங்
களில், கிளை நுனிகளில் காய்த்தால் ஆகாதா?
மா.கணேசன்/ நெய்வேலி/ 13-05-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment