
உலகப் புகழ்பெற்ற கோட்பாட்டியற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபென் ஹாக்கிங்
(Stephen Hawking), 2017 மார்ச் மாதம் 24 ம் தேதி இங்கிலாந்திலுள்ள
தனது அலுவலகத்திலிருந்து நேரலைச் செய்தியாக ஹாங்க் காங்க் பார்வை
யாளர்களுக்குச் சொன்னது:
"பூமிக்கும், மனிதகுலத்திற்கும் காலம் விரைவாக முடிந்துகொண்டு
வருகிறது. சீதோஷ்ண நிலை மாற்றம், விண்கல் மோதல், மக்கள்
தொகைப்பெருக்கம் ஆகிய ஆபத்துக்களிலிருந்து தப்பிப் பிழைக்க
வேண்டுமானால், அடுத்த 100 வருடங்களுக்குள் மனிதர்கள்
வேறொரு கிரகத்தில் குடியேறியாக வேண்டும்"
***
விஞ்ஞானி ஸ்டீஃபென் ஹாக்கிங் அவர்கள், ஏற்கனவே, 2016 ல்,இவ்வாறு ஒரு
எச்சரிக்கையை விடுத்தார், அதில், "இன்னும் 1000 வருடங்களில் மனிதர்கள்
வேறொரு கிரகத்தில் குடியேறியாக வேண்டும்" என்று சொன்னார். ஆனால்,
இந்தமுறை, 100 வருடங்களுக்குள் என்று சொல்லியுள்ளார்!
ஸ்டீஃபென் ஹாக்கிங் - ன் இந்த ஆரூடம் பல புருவங்களை உயரச் செய்தது
என்று சொல்லப்படுகிறது! எனினும், ஹாக்கிங் தனது நிலையில் ஸ்திரமாக
நின்றதுடன், "இந்நிலைப்பாட்டில் தான் மட்டும் தனியே நிற்கவில்லை, தனது
சகபாடிகளும் இது குறித்து அடுத்துவரும் மாநாட்டில் பேச இருக்கிறார்கள்"
எனவும் குறிப்பிட்டுள்ளார்.
***
ஸ்டீஃபென் ஹாக்கிங் - ன் இந்த எச்சரிக்கை அடிப்படையற்றதோ, கிறுக்குத்
தனமானதோ அல்ல! மனிதர்கள் பூமிக்கிரகத்தை விட்டு உடனே வெளியேறிட
வேண்டும் என்பதற்கு ஹாக்கிங் சொல்லும் காரணங்கள் மிகச்சரியானவை!
சீதோஷ்ண நிலை மாற்றம், விண்கல் மோதல், மக்கள் தொகைப்பெருக்கம்
போன்ற காரணங்கள் மட்டுமே சரியானவை! ஆனால், இன்னும் 100 ஆண்டு
களுக்குள் பூமியை விட்டு வெளியேறி வேறொரு கிரகத்தில் குடியேறுவது
என்பதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் மிக மிகக் குறைவே, கிட்டத்தட்ட
பூஜ்ஜியமே!
அதே நேரத்தில், பூமி என்பது வெறும் ஒரு இடம் அல்ல, பூமிக்கு மாற்றாக
வேறொரு இடம் தேடிச்செல்வதற்கு! பால்-வீதி மண்டலத்தில் கோடானுகோடி
சூரியன்கள் (நட்சத்திரங்கள்) இருக்கின்றன; அவற்றைச் சுற்றிலும் கோடானு
கோடி கிரகங்களும் இருக்கின்றன. ஆனால், பூமியைப்போல வேறொரு கிரகம்
பூமியைத்தவிர வேறொன்று இல்லை! மேலும் சிலவிஷயங்கள் சாத்தியம்
என்பதாலேயே அவற்றை நாம் செய்யலாம் என்பது சரியானதாக இருக்கும்
என்று சொல்ல முடியாது!
பொதுவாக, மனிதர்களிடம் உள்ள பிரச்சினை, அல்லது மட்டுப்பாடு என்ன
வெனில், வாழ்வின் அசலான நோக்கம், குறிக்கோள், இலக்கு என்ன என்பதை
அறியும் அக்கறை சிறிதும் இல்லாததால், தாம் விரும்பியபடி என்னவேண்டு
மானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற போக்கில்
போய்க் கொண்டிருப்பது தான்! பெரும்பாலானோர் உணவு, உடை, உறையுள்,
உறவுகள் என குறுகிய வட்டத்தினுள் வளைய வந்துகொண்டிருப்பதை வாழ்க்
கையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர், சாதனைகள், சாகசங்கள்
புரிந்திட வேண்டும் என விரும்புகிறார்கள்; சிலர், துணிகரச்செயல்கள், ஆபத்
தான விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்! கின்னஸ் புத்தகத்
தில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காக மனிதர்கள் என்னவெல்லாம்
செய்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே போதும்; நிச்சயம் மானிடகுலம் தன்
வாழ்வின் உண்மையான நோக்கத்தை, குறிக்கோளைத் தொலைத்துவிட்டது
என்பதும், தன் மன-நலத்தையும் இழந்துவிட்டது என்பதும் தெரியும்!
மேலும், ஏற்கனவே சாத்தியமான விஷயங்கள் பிறகொரு காலத்தில் சாத்திய
மாகாமலும் போகும் வாய்ப்பும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது!
விஞ்ஞானி ஸ்டீஃபென் ஹாக்கிங் எச்சரித்தபடி இன்னும் 100 ஆண்டுகளுக்குள்
நாம் பூமியைவிட்டு வெளியேறி வேறு ஒரு கிரகத்தில் குடியேறிட இயலுமா
என்றால், கோட்பாட்டு ரீதியாக 'முடியும்!' என்று சொல்லலாமே தவிர, நடை
முறையில் சாத்தியம் என விஞ்ஞானக்கற்பனையில் வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒரு சிலர் மட்டுமே சொல்லக்கூடும்.
ஏனென்றால், மனிதன் கடைசியாக, பூமியை விட்டுப் பறந்து சந்திரனுக்குச்
சென்றுவந்தது 45 ஆண்டுகளுக்கு முன்பு, 1972-ல் ஆகும்! அதன் பிறகு இன்று
வரை அமெரிக்கா உள்பட எவ்வொரு நாடும் மனிதனை சந்திரனுக்கு அனுப்ப
வில்லை! ஏன் அனுப்பவில்லை என்பதற்கு பலவித காரணங்கள் சொல்லப்பட
லாம்! ஆனால், அமெரிக்காவின் அப்போலோ விண்வெளி ஆராய்ச்சித்திட்டம்
1963-ல் தொடங்கி 1972-ல் முடிவடைந்துவிட்டது.
அப்போலோ திட்டமானது மனிதர்களை சந்திரனுக்குக் கொண்டுசென்று பாது
காப்பாக பூமிக்கு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட
தாகும். அதன்படி ஆறு முறை (அப்போலோ 11,12,14,15,16,17 மூலமாக) இந்த
இலக்கானது சாதிக்கப்பட்டது! ஆனால், அப்போலோ-1 விண்கலமானது விண்
ணில் செலுத்துவதற்கு முன்னர், 27 ஜனவரி, 1967 அன்று மேற்கொள்ளப்பட்ட
ஒரு பயிற்சியின்போது விண்வெளி வீரர்கள் இருக்கும் பெட்டிக்குள் திடீரெனத்
தீப்பிடித்து மூன்று பேரும் கருகி இறந்து போயினர். 2016 வரை மொத்தம் 18
விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தின் போது இறந்துள்ளனர். மேலும்,
விண்வெளிப் பயணம் தொடர்பான பணிகளின் போது விண்வெளி வீரர்கள்
அல்லாத வேறு சில பணியாளர்களும் இறந்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களை சந்திரனுக்கு அனுப்புகின்ற அமெரிக்காவின் அப்போலோ
ஆராய்ச்சித்திட்டம் கைவிடப்பட்டதற்கு சந்திரனை அவர்கள் முழுமையாக
ஆராய்ந்து முடித்துவிட்டார்களா என்ன? இல்லை; வெறும் ஆறேழு பயணங்
களில் முடிந்துவிடக்கூடியதல்ல சந்திரனைப்பற்றிய ஆராய்ச்சிகள்! நாம் இந்த
பூமியிலேயே இருக்கிறோம், ஆனால், பூமியைப்பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும்
முடிந்தபாடில்லையே! ஒரு காரணம், விண்வெளி ஆராய்ச்சிகளுக்குப் போது
மான அளவு நிதி ஒதுக்கப்படுவதில்லை! அடுத்து, அரசியல் நிலைமைகள்,
பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன! ஆனால்,
காரணங்கள் எவையாயிருந்தாலும், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி ஆராய்
வதென்பது 1972 -லேயே நிறுத்தப்பட்டு, இதுவரை 45 ஆண்டுகள், கிட்டத்தட்ட
அரை நூற்றாண்டு ஆகின்றது! இந்நிலையில், இன்னும் 100 ஆண்டுகளுக்குள்,
பூமியை ஒத்த ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்து, அல்லது நம் சூரிய மண்டலத்
திலேயே உள்ள செவ்வாய்க்கிரகத்திற்குச் சென்று நாம் குடியேறுவது என்பது
எவ்வாறு சாத்தியமாகும்?
அப்படியே,தொழில் நுட்பம் சார்ந்த நடைமுறைச் சாத்தியங்கள் உள்ளன என்று
வைத்துக்கொண்டாலும், மனிதகுலம் முழுவதையும் கொண்டு சென்று செவ்
வாய்க்கிரகத்தில் குடியமர்த்த இயலுமா? அல்லது குறிப்பிட்ட சிலரை மட்டும்
தேர்வுசெய்து கொண்டுசெல்வதா? வெறும் மனிதர்களை மட்டும் கொண்டு
சென்றால் போதுமா? உணவு மற்றும் பிற தேவைகளுக்கான பொருட்களைக்
கொண்டு செல்ல வேண்டாமா? ஆடு, மாடுகள், கோழிகள், பிற வளர்ப்புப்
பிராணிகளையும் கொண்டு செல்லவேண்டாமா? தாவரங்களில் எவையெவற்
றையெல்லாம் எடுத்துச் செல்வது? யாவற்றையும் "நோவாவின் கப்பல்" போல
ஒரே விண்கலத்தில் ஏற்றிச்செல்வதா? அல்லது பல கலங்களில் கொண்டு
செல்வதா?
ஏலான் மஸ்க் (Elon Musk),'ஸ்பேஸ் X'(SpaceX) நிறுவனத்தின் தலை
மையதிகாரி என்ன சொல்கிறார் என்றால், "மனிதகுலத்தின் முன்னே இரண்டு
அடிப்படையான பாதைகள் உள்ளன; ஒன்று, நாம் பூமியிலேயே அனைத்துக்
காலத்திற்கும் தங்கியிருப்பது - கடைசியில் தவிர்க்கவியலாத முற்றிலுமாக
இற்றழியும் சம்பவம் நிகழும். அடுத்தது, இதற்கு மாற்றாக விண்வெளியில்
பயணிக்கும் 'பல்-கிரக இனமாக' மாறுவது." என்கிறார். உண்மையில், ஏலான்
மஸ்க் வெறுமனே கனவுகாண்பவர் அல்ல; அவரது நிறுவனம் ஏற்கனவே பல
செயற்கைக் கோள்களை வியாபார ரீதியில் விண்ணில் செலுத்தியுள்ளது.
மேலும், சர்வதேச விண்வெளி ஆய்வகத்திற்கு பொருட்களைக் கொண்டு
சேர்த்துவரும் பணியையும் செய்துவருகிறது! மேலும் அவர், 2060 க்குள் பத்து
லட்சம் மனிதர்களை செவ்வாய்க்கிரகத்தில் குடியமர்த்தியே தீருவேன் என்று
சொல்லிவருவதுடன் அது தொடர்பான ஆராய்ச்சிகளையும்,பரிசோதனைகளை
யும் அவரது நிறுவனம் மேற்கொண்டுவருகின்றது. அடுத்தவருடம் 2018-லேயே
அதற்கான பூர்வாங்க முயற்சிகளைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிரகத்தில் 10 லட்சம் மனிதர்களை குடியமர்த்தி, மனித இனத்தைக்
காப்பாற்றுவதுடன், செவ்வாய்க்கிரகத்தில் ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கு
வதே தனது இலட்சியம் என்கிறார் ஏலான் மஸ்க்.
தற்போதுள்ள தொழில் நுட்பங்களைக்கொண்டு செவ்வாய்க்கிரகத்திற்கு ஒரு
மனிதனை அனுப்ப ஆகும் செலவு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள்; இந்திய
மதிப்பில் 60,00,00,000,000 கோடி ரூபாய்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது
ஆனால், உண்மையில் மனித இனத்தைக் காப்பாற்றுவது என்றால் என்ன?
மனிதஇனம் இந்த பூமிக்கிரகத்தில் தோன்றி எவ்வளவு காலம் வாழ்ந்துள்ளது?
மனிதஇனம் கிட்டத்தட்ட 200,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகச் சொல்
லப்படுகிறது. ஆனால், நாகரிக மனிதனாக கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு
முன்புதான் உருவாகியிருக்கிறான். ஆனால், கடந்த வெறும் 500 ஆண்டுகளில்
விஞ்ஞானத்தொழில் நுட்ப முன்னேற்றத்தினால் மனித இனமானது மாபெரும்
வளர்ச்சிகண்டுள்ளது எனலாம். இந்த 500 ஆண்டுகளில்தான் மனிதன் பூமியின்
பரப்பை மாற்றியமைத்ததோடல்லாமல், வெகுவாக சுற்றுச் சூழலையும் மாசு
படுத்தி, இன்று புவிக்கோளம் சூடேறுதல் (Global Warming),தாறுமாறான
சீதோஷ்ண நிலை மாற்றங்கள், கடல் மட்டம் உயர்ந்து வருதல் போன்ற பிரச்
சினைகளை எதிர்கொண்டுவருகிறோம். அடுத்து தொடர்ந்து அதிகரித்து வரும்
மக்கள்தொகைப் பெருக்கத்தினால் இயற்கைவளம் வேகமாகச் சுரண்டியழிக்கப்
படுவதும், படிவ எரிபொருளான எண்ணை இருப்பு வேகமாகக் குறைந்து வரு
வதும் இதனால், நவீன வாழ்க்கை ஸ்தம்பித்துப்போகும் குலைவு உச்சத்தை
நோக்கி மனித குலம் சென்று கொண்ட்டுள்ளது!
அதாவது, மனித இனம் நாகரிகம் அடைந்து, விஞ்ஞான - தொழில் நுட்பத்தில்
வளர்ச்சிகண்ட மிகக்குறைந்த ஆண்டுகளில், அதாவது, வெறும் 500, அல்லது
அதிகபட்சம் 1000 ஆண்டுகளில் இப்பூமியை அழிவின் விளிம்பிற்குக் கொண்டு
வந்துள்ளோம்! இப்போது, இனியும் தொடர்ந்து நாம் இப்பூமியில் வாழ்வது
இயலாது; "பூமிக்கும், மனிதகுலத்திற்கும் காலம் விரைவாக முடிந்துகொண்டு
வருகிறது. ஆகவே, உயிர் தப்பிப் பிழைக்கவேண்டுமானால், அடுத்த 100 வரு
டங்களுக்குள் மனிதர்கள் வேறொரு கிரகத்தில் குடியேறியாக வேண்டும்." என
விஞ்ஞானி ஸ்டீஃபென் ஹாக்கிங் போன்றோர் எச்சரிக்கும் நிலையை எட்டி
யுள்ளோம். அவ்வாறு உயிர்தப்பிப் பிழைக்க வேறொரு கிரகத்தில், உதாரணத்
திற்கு, செவ்வாய்க்கிரகத்தில் குடியேறுகிறோம் என்றே வைத்துக்கொள்வோம்!
அங்கு நமது காலனிகளை அமைப்போம்;அங்குள்ள அனைத்து வளங்களையும்
சுரண்டி தின்று வாழ்வோம்; விரைவில் அந்த கிரகத்தையும் மாசுபடுத்தி வாழ
லாயக்கில்லாத இடமாக மாற்றிவிட்டு வேறொரு கிரகத்தை நாடிச்சென்று குடி
யேறுவோம்; இவ்வாறே கிரகம் கிரகமாக தாவித்தாவிச் செல்வோம்!
ஆனால், இதுவரை இப்பூமிக் கிரகத்தில் வாழ்ந்து எதைச் சாதித்தோம்? வெறு
மனே உயிர்-வாழ்ந்தோம் என்பதைத் தவிர! நம்முடைய அடிப்படைத்தேவை
களுக்காகவும், அடிப்படையற்ற, பிற ஆடம்பரத்தேவைகளுக்காகவும் பூமியின்
கனிம வளங்களையும், பிற வளங்களையும் சூறையாடி நம் நுகர்வுப்பசிகளைத்
தணித்துக்கொண்டோம்! காடுகளை அழித்தோம், பல்லுயிர்-வளங்களை அழித்
தோம்; எண்ணற்ற விலங்கினங்களை இற்றழியும்படிச் செய்தோம்! நீர், நிலம்,
காற்று என சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பூமியை உயிர்-வாழ்வதற்கு தகுதியற்ற
இடமாக மாற்றிவிட்டு இப்போது வேறு பூமியைத்தேடிக்கொண்டிருக்கிறோம்!
இவைகளைத் தவிர, நாம் வேறு எவற்றைச் சாதித்தோம்? மதத்தின் பெயரில்
எண்ணற்ற மனித உயிர்களைக் கொன்றோம், இரண்டு பெரும் போர்களில்
எண்ணற்றவர்களைக் கொன்று குவித்தோம்! இன-துவேஷம் கொண்டு லட்சக்
கணக்கான மனிதர்களையும்; அரசியல் சித்தாந்தத்தைக் காப்பாற்ற லட்சக்
கணக்கான மனிதர்களையும் கட்டாய -உழைப்பு முகாம்களில் அடைத்துச்
சித்திரவதை செய்து கொன்று குவித்தோம்! ஆனால், இப்போது நாம் மனித
குலத்தைக் காப்பாற்றுவதற்காக பூமியை விட்டு வெளியேறி வேறு கிரகத்தில்
குடியமர்த்த வேண்டும் என்று அக்கறையுடன் பேசுகிறோம்!
வேறு கிரகத்திற்குச் சென்று குடியேறி அங்கு என்ன சாதிக்கப்போகிறோம்!
இங்கு நம் சொந்த கிரகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டு வேறு கிரகம்
தேடிச் சென்று, அங்கு 1000, அல்லது 2000 ஆண்டுகளில் அதையும் கெடுத்துக்
குட்டிச் சுவராக்கிவிட்டு, மீண்டும் வேறொரு கிரகத்தைத் தேடிக்கொண்டிருப்
போம்! எவ்வாறு நாம் நம்முடைய சொந்த பூமிக்கிரகத்திற்கே அந்நியர்களாய்ப்
போனோம்? எத்தகைய நம் மனோநிலை, எத்தகைய நம் வாழ்க்கைப் பார்வை,
மற்றும் நம் உலகப் பார்வை நம் பூமியை வாழத் தகுதியற்ற இடமாக ஆக்கி
யது? உண்மையில், இப்பூமியானது நம்மை வாழவைக்கும் தகுதியை இழக்க
வில்லை! மாறாக, இப்பூமியின் மீது வாழும் தகுதியை இழந்தது மனித இன
மாகிய நாம் தான்! இன்னும் சொல்லப்போனால், இங்கு இந்த பூமிக்கிரகத்தில்
நம்மால் முறையாக வாழமுடியவில்லை என்றால், வேறு எந்தக்கிரகத்திலும்
நம்மால் முறையாக வாழமுடியாது!
முதல் உயிர்ஜீவி பூமியிலேயே தோன்றியிருந்தாலும், அல்லது அது தோன்று
வதற்குரிய அடிப்படை மூலக்கூறுகள் அண்ட வெளியில் இருந்து வந்திருந்
தாலும் (Panspermia) தகவமைந்தது என்னவோ பூமிக்கிரகத்திற்குத்தான்!
ஆகவே, உயிர்ஜீவி எதுவாயிருந்தாலும்,அது வாழ்வதற்கு பல்வகை வளங்கள்
நிறைந்த ஒரு கிரகம் வேண்டும்! யாவற்றையும்விட முக்கியமாக, உயிர்-வாழ்
வதற்கு மிகவும் அடிப்படையாக சக்தி (Energy) வேண்டும்; அதற்கு ஒரு
சூரியன் வேண்டும்! அதாவது, நாம் ஒரு பெரிய விண்கலத்தில் எவ்வொரு
கிரகத்தையும் சாராமல் விண்வெளியில் மிதந்த படியே வாழமுடியும்;ஆனால்,
சக்தி தேவைப்படுவதால் நாம் ஒரு சூரியனுக்கு அருகில் இருந்தாகவேண்டும்!
உயிரற்ற பொருட்களோ, அல்லது, உயிருள்ள ஜீவிகளோ அவை இயங்க
வேண்டுமெனில், பிரதானமாக, சக்தி வேண்டும். உருப்பெற்ற (படைக்கப்பட்ட)
அனைத்தும் சக்தியை அடிப்படையாகக் கொண்டே இருப்புபெறுகிறது, இயங்கு
கிறது எனலாம். யாவற்றுக்கும் அடிப்படை சக்தியே என்பது சரியே; ஆனால்,
சக்தியின் அடிப்படை எது என்பது இறுதியான மெய்ம்மையைச் சார்ந்தது! ஒரு
வகையில், மனிதஜீவிகள் உள்பட உயிர்-ஜீவிகளைப் பொறுத்தவரை, அவை
ஏதாவதொரு வடிவில் சக்தியை உண்டு,செரித்து, இயங்கும்,வாழும் சக்தியின்
விசேட வடிவங்கள் என்பதற்கு மேல் வேறல்ல எனலாம்! மின்கலத்தில்
(Battery) இயங்கும் ஒரு பொம்மை ஊர்திக்கும், ஒரு தவளைக்கும் உள்ள
வித்தியாசம் என்னவென்றால், ஒரு பொம்மை ஊர்தி தனது இயக்கத்திற்கான
சக்தியை, அதாவது மின்கலத்தைத் தானே தயாரித்துப் பயன்படுத்த இயலாது!
ஆனால், ஒரு தவளையோ, அல்லது எவ்வொரு ஜீவியோ தனது இயக்கத்திற்
கான சக்தியை (உணவின் வடிவத்தில்) சுற்றுப் புறத்திலிருந்து தாமே தேடிப்
பெற்று இயங்கவும், உயிர்-வாழவும் செய்யும்! அடுத்து, மனிதஜீவிகள் உள்பட
உயிர்-ஜீவிகளின் இயக்கத்திற்கான ஒரே நோக்கம், குறிக்கோள், இலக்கு,
யாவும் சக்தியை (உணவை) தேடிப்பெறுவது என்பதைத் தவிர வேறெதுவும்
இல்லை! அதாவது, உயிர்-ஜீவிகளின் ஒரே நோக்கம், இலக்கு உயிர்வாழ்வது
என்பதே! ஆனால், அவை எதற்காக , எந்த நோக்கத்தை நிறைவேற்ற உயிர்
வாழ்கின்றன என்பது எந்த ஜீவிக்கும் தெரியாது! ஆம், மனிதஜீவிக்கும் கூடத்
தெரியாது என்பதுதான் வருத்தம் தரும் உண்மையாகும்! உயிர்-வாழ்தலின்
நோக்கம், குறிக்கோள், இலக்கு என்னவென்று தெரியாவிட்டாலும் உயிர்-வாழ்
வது என்பது மட்டும் அதி முக்கியமானது என்பதாக உள்ளது!
ஆனால், எவ்வாறேனும் உயிர்-பிழைத்திருக்கவேண்டும், தம்மைக் காப்பாற்றிக்
கொள்ளவேண்டும் என்கிற தீவிர உந்துதலையும், முனைப்பையும் வைத்துப்
பார்க்கும்போது, மிக உன்னதமான, ஒப்பற்ற, மிகத் தொலைவிலமைந்த ஒரு
இலக்கை முன் வைத்துத்தான் உயிர்-ஜீவியானது உருவாகியிருக்கவேண்டும்!
உயிர்-ஜீவிகளில் மிக விசேடமாக உயர் பரிணாமம் பெற்ற, உணர்வுபெற்ற
ஜீவியான மனிதனுக்கு உயிர்-வாழ்தலைக் கடந்த மிகப் பிரத்யேகமான தொரு
பரிணாம இலக்கு உள்ளது என்பதை அவன் இந்நேரம் உணர்ந்தவனாயிருக்க
வேண்டும்!
ஏனென்றால், எந்த இலக்கை முன்வைத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன்
பூமியில் உயிர்-ஜீவி தோன்றியதோ அந்த இலக்கை அறுவடை செய்பவனாக
மனிதன் முழு வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்! ஆனால், மனித இனமோ
வெறுமனே சௌகரியமாக உயிர்-பிழைத்திருப்பதாக, வாழ்வின் அசலான
நோக்கமறியாமல், குறிக்கோளற்று, இலக்கற்று விலங்கினங்களில் தாமும்
ஒரு இனமாக வாழ்ந்து செல்கிறது! தற்போதைய உலக மக்கள்தொகையான
750 கோடி பேர்களுக்கும் ஒரு உயர்-லௌகீக தரத்திலான வாழ்க்கையை, அதா
வது, அமெரிக்கர்களுடைய வீணடிப்பு மிக்க தரத்திலான ஒரு வாழ்க்கையை
அளிக்க வேண்டுமானால், நம் பூமியைப்போல இன்னும் இரண்டு கிரகங்கள்
வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது! ஆனால், தொடர்ந்து இதே முறையில்
நாம் வாழ்ந்துகொண்டிருப்போமெனில், அதாவது அடுத்த ஒரு உலகப்போரில்
நம்மை நாமே ஒட்டு மொத்தமாக அணு ஆயுதங்களைக் கொண்டு அழித்துக்
கொள்ளாதிருந்தோமெனில், நமது பால்வீதி மண்டலத்திலுள்ள கோடானுகோடி
நட்சத்திரங்களை (சூரியங்களை) சுற்றிச் சுழலும் கோடானுகோடி கிரகங்களும்
கூட போதாது! இவ்வாறே நாம் தொடர்வோமெனில், இப்பிரபஞ்சத்திலுள்ள
கோடானுகோடி கேலக்ஸிகளும் போதாது எனலாம்!
நம்முடைய செயல்பாடுகளின் பின் விளைவுகள் பற்றிய சிந்தனையில்லாமல்,
நாம் வாழ்ந்த பொறுப்பற்ற வாழ்முறையின் விளைவாக நம் பூமிக்கிரகத்தை
வாழத் தகுதியற்ற இடமாக மாற்றிவிட்டு, இன்று நாம் வேறொரு கிரகத்தைத்
தேடிக் குடியேறுவது பற்றிப்பேசிக் கொண்டிருக்கிறோம்! ஆனால், எவ்வாறோ
பிரபஞ்சம் முழுவதும் பரவி, தொடர்ந்து நாம் பல்லாயிரம் கோடி ஆண்டுகள்
தாக்குப்பிடித்து வாழ்ந்து செல்கிறோம் என்று வைத்துக்கொண்டால், அப்போது
நாம் சந்திக்கப்போவது தான் உண்மையான பேராபத்து, அல்லது, கொடூரமான
நரகம் ஆகும்! தற்போது அவசரமாக பூமியை விட்டு வெளியேறி வேறு கிரகத்
திற்குச் சென்றாக வேண்டியதின் அவசியம் குறித்து எச்சரிக்கும் ஸ்டீஃபென்
ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகள் தான் ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் அழிவு,
அல்லது, இறுதி முடிவு குறித்தும் கணித்துள்ளனர்! ஆம், விஞ்ஞானிகளின்
புரிதலின்படி நாம் வாழும் இப்பிரபஞ்சம் சாசுவதமானதல்ல!
ஆனால், நம்முடைய பிரச்சினைக்கான உண்மையான தீர்வு எவ்வாறேனும்
உயிர் தப்பிப் பிழைப்பது அல்ல! அதாவது, புயல், பெருவெள்ளம், சுனாமி,
விண்கல் மோதல்கள், பூகம்பம், இன்னும் பலவகைப்பட்ட அன்றாட விபத்துக்
களிலிருந்தும் மனிதன் தப்பிவிடக்கூடும்! ஆனால், எவ்வொரு மனிதனும் தப்
பிக்க முடியாத ஒரு ஆபத்து மனிதனது வாழ்விலேயே பின்னப்பட்ட்டுள்ளது;
அது தான் "மரணம்"!
நாம் பயணித்துக்கொண்டிருக்கும் விமானம் பழுது பட்டுவிட்டதென்றால் நாம்
"பாராசூட்" மூலமாக வெளியே குதித்துத் தப்பலாம்! நம் பூமிக்கிரகத்தை வாழ
லாயக்கற்றதாக ஆக்கிவிட்டு வேறொரு கிரகத்தில் குடியேறிடலாம்! இவ்வாறு
ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்குத் தாவிச் செல்வதோ, அல்லது,
ஒரு கேலக்ஸியிலிருந்து இன்னொரு கேலக்ஸிக்குச் செல்வதோ இறுதியான
முழுமையான தப்பித்தல் என்பதாகாது! ஏனெனில், "நித்திய வாழ்வு" தரும்
யாதொரு கிரகமும்,கேலக்ஸியும்,இடமும் இப்பிரபஞ்சத்தில் எங்கேயுமில்லை!
மாறாக, நாம் ஒவ்வொருவரும், அழியக்கூடிய நம் உடலிலிருந்தும், இந்த
ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்திலிருந்தும் வெளியேறிட வேண்டும்! அதாவது,
உடலையும், இவ்வுலகையும் சார்ந்திருக்கும் நிரந்தரமற்ற வாழ்வினையும்
கடந்து சென்றாகவேண்டும்! அவ்வாறு தப்பிச்செல்வதற்கான ஒரு பழுதுபடாத,
அற்புதமான, ஊர்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது! அது தான் "உணர்வு"!
மா.கணேசன்/நெய்வேலி/ 22-05-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment