Thursday, 4 May 2017

இறுதி அற்புதம்!

























அற்புதம் என்று இங்கு குறிப்பிடப்படுபவை உண்மையிலேயே அற்புதமானவை;
காற்றிலிருந்து  கத்தரிக்காய்  வரவழைப்பது,  தங்க மோதிரம்  வரவழைப்பது
போன்ற மாயமந்திர தந்திர ஜாலவித்தைகளையோ, வேறு அசாதாரண நிகழ்வு
களையோ  அற்புதங்கள் என்று  இங்கு குறிப்பிடப்படவில்லை!  ஒரு மனிதன்
அப்படியே எம்பி மேலெழுந்து விண்ணில் பறக்கலாம்; அது அசாதாரணமானது,
அல்லது  வழக்கத்துக்கு மாறானது  என்று காணமுடியும்;  ஆனால், எவ்வகை
யிலும்  அது  இறுதியானதல்ல;  அதாவது,  அது   இறுதியான  பயனையோ,
நன்மையையோ அளிக்கவல்லதல்ல! சாதாரணமானவை,அசாதாரணமானவை
என்பவற்றுக்கிடையே வித்தியாசம் இருக்கலாம்.  அவ்வாறே வழக்கமானவை,
வழக்கத்துக்கு மாறானவை என்பவையும்.ஆனால்,இவையெதுவும் இறுதியான
நிஜங்கள் அல்ல!

அற்புதம் என்பது பொருட்களிலோ,நிகழ்வுகளிலோ தங்கியிருக்கவில்லை! அது
காண்பவரின்  உணர்வின் தன்மையைப் பொறுத்ததாகும்!  அற்புதம்  குறித்துச்
சொல்லும்போது,  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  இவ்வாறு சொல்கிறார்:

   "வாழ்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன : எதுவுமே  அற்புதம் இல்லை
    என்று நீங்கள் வாழலாம்; அல்லது  ஒவ்வொன்றுமே ஒரு அற்புதம்தான்
    என்று நீங்கள் வாழலாம்."       (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)

ஆக,  அற்புதம் என்பது புறத்தே எங்கும் இல்லை; அற்புதங்கள், அதிசயங்கள்
என்றேனும் நிகழும் என்று காத்திருப்பதும் வீணே! அதாவது அற்புதமாக மாற
வேண்டியது ஒவ்வொரு மனிதனும்தான்! புத்தர் சொல்கிறார்,

   "நம்மால் ஒரு ஒற்றை மலரின் அற்புதத்தை தெளிவாகக் காண
   முடிந்தால், நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறிவிடும்." (புத்தர்)
                                           
நாம் அன்றாடம் பலவகைப்பட்ட மலர்களைப் பார்க்கத்தான் செய்கிறோம்,
அழகிய, பலவண்ணங்களில், வித்தியாசமான பல வடிவங்களில் உள்ள மலர்
களைப் பார்க்கிறோம்! ஆனால், நாமோ, நமது வாழ்க்கையோ சிறிதும் மாறிய
தாகத் தெரியவில்லை!

முக்கியமான  விஷயம்  என்னவென்றால்,  சிட்டுக்குருவிகள்,  சிறு தும்பிகள்,
பறக்கின்றன. ஆனால்,அதை ஏன் மனிதர்கள் அதிசயமாக, அற்புதமாகக்கொண்
டாடுவதில்லை!  ஏனெனில், பறப்பதென்பது அவைகளுக்கு இயல்பானது என்ப
தால் பறவைகள் பறப்பதை அற்புதமாகக் காண்பதில்லை.

ஆக, விஷயம் இதுதான், மனிதனுக்குப் பறக்கவேண்டிய அவசியம் இருப்பின்
அவனுக்கும் சிறகுகள் தோன்றியிருக்கும்! ஆனால், மனிதனிடமுள்ள விசேடப்
பண்பு சிந்தித்தல்; அதுவே அவனது இயல்பான பண்பு, மனிதனைத்தவிர வேறு
ஜீவிகள்  எதற்கும்  சிந்திக்கும் திறன்  கிடையாது!  ஆனால், அதே நேரத்தில்
மனிதன்  மட்டும்  ஏனோ   தன்   இயல்பான  தன்மையில் இருப்பதில்லை,
அதாவது பெரும்பாலான மனிதர்கள் சிந்திப்பதேயில்லை!

பொதுவாக, மனிதர்கள் அற்புதங்கள் என்று குறிப்பிடுபவை கீழானவையாகும்!
அவை முதன்மையான அற்புதங்களை இனம்காண இயலாதவர்களால், இனம்
காணத் தவறியவர்களால் சிலாகிக்கப்படும் விஷயங்களாகும்!

முதன்மையான அற்புதங்களில் முதலாவது, உலகம்,இப்பிரபஞ்சம் இருக்கிறது
என்பதுதான்!  இரண்டாவது  அற்புதம்  உயிர்-ஜீவிகள்!  மூன்றாவது  அற்புதம்
மனிதன் தான்! ஆம்,"நீங்கள் இருக்கிறீர்கள்!" என்பதை ஒரு அற்புதமாக நீங்கள்

உணரவில்லையெனில் மிகவும் முக்கியமான ஒன்றை நீங்கள் இழந்துவிட்டீர்
என்றுதான் சொல்லவேண்டும்! வேறு எதைக்கொண்டும் இன்னும்  எல்லாவற்
றையும் கொண்டும் ஈடுசெய்ய முடியாத அரிய பொக்கிஷத்தை உமது கவனக்
குறைவினால் கண்டும் காணாமலும் கடந்து சென்று விட்டீர்!

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, "இப்பிரபஞ்சம் இருக்கிறது என்பது பெரிதும் சாத்
தியமற்றது!" எனப்படுகிறது. தத்துவவாதிகள், " அற்புதங்கள் சாத்தியமற்றவை"
என்று சொல்கிறார்கள், ஏனெனில், அவை இயற்கை விதிகளுக்கு மாறானவை,
இயற்கை விதிகளை மீறியவை; மேலும், இயற்கைவிதிகள் மாறாதவை எனப்
படுவதால்  அற்புதங்கள்  சாத்தியமில்லை எனப்படுகிறது!  இயற்கை விதிகள்
மாறாதவை எனும் வாதம், 1670 களில், டச்சு நாட்டு  தத்துவஞானி பெனடிக்ட்
ஸ்பினோசா (Benedict Spinoza) அவர்களால், பிரபலப்படுத்தப் பட்டதாகச்
சொல்லப்படுகிறது.

அற்புதங்களுக்கு எதிரான ஸ்பினோசாவின் வாதம் இவ்வாறு செல்கிறது:

1. அற்புதங்கள் எனப்படுபவை இயற்கை விதிகளின் மீறுதல்கள் ஆகும்.

2. இயற்கை விதிகள் மாறாதவை (Immutable).
 
3. இயற்கை விதிகளை மீறுவது என்பது இயலாது.

4. ஆகவே, அற்புதங்கள் எனப்படுபவை சாத்தியமற்றவை.

உண்மைதான்,  அதாவது,  இயற்கை விதிகள்  மாறாதவை எனும் பட்சத்தில்,
அற்புதங்கள் சாத்தியமற்றவை தான்!  ஆனால், இயற்கைவிதிகள்  எங்கிருந்து
வந்தன? அதாவது, இயற்கை, உலகம்,பிரபஞ்சம் என்பது எங்கிருந்து எவ்வாறு
எந்த நோக்கத்திற்காகத் தோன்றியது?  இயற்கை விதிகள் என்பவை இயற்கை
அல்லது  பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு  முந்தையதா?  பிந்தையதா? அல்லது
பிரபஞ்சத்துடன் தோன்றியவையா?

நாம் வாழும் இப்பிரபஞ்சமானது, "பெரு-வெடிப்பு"(Big-Bang)எனும் நிகழ்வில்,
காலம் = பூச்சியம், வெளி = பூச்சியம், எனும் "தனி நிலைப்பாட்டுப்புள்ளி" யில்
(Singularity) தோன்றியதாக விஞ்ஞானிகள்  கூறுகிறார்கள். ஆனால், தற்
போது இப்பிரபஞ்சத்தில் செல்லுபடியாகும் 'மாறாதவை' என்று சொல்லப்படும்
பௌதீக விதிகள் எதுவும் பிரபஞ்சத்தின் பிறப்புக்கணத்தில், அந்த "தனிநிலைப்
பாட்டுப்புள்ளி" யில் செயல்படுவதில்லை என்றும்  அதே விஞ்ஞானிகள் தான்
கூறுகிறார்கள்! அதாவது, இயற்கைவிதிகள் எனப்படுபவை இயற்கை, அல்லது
பிரபஞ்சத்திற்கு முந்தையவையல்ல;  மாறாக, அவை இயற்கையுடன் சேர்ந்து
உருவானவையே.  ஆம், இயற்கையை  எந்த இயற்கை விதியும் உருவாக்கிட
வில்லை என்பதுதான் உண்மை! அப்படியானால்,இயற்கை,பிரபஞ்சம் எவ்வாறு
தோன்றியது? எந்த விதி இப்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தது?

ஆம், இயற்கை, ( உலகம், பிரபஞ்சம் என எப்படி அதை அழைத்தாலும் அது )
இயற்கையாகத் தோன்றியதல்ல! மேலும், ஒன்றுமில்லாததிலிருந்தும் உலகம்
தோன்றிடவில்லை! ஆனால்,உலகம்,இயற்கை, பிரபஞ்சம் என்பது இருக்கிறது;
எவ்வாறோ அது சாத்தியமாகியுள்ளது!  அதாவது,  இயற்கைவிதி எதுவும் இப்
பிரபஞ்சத்தை, உலகைப் படைக்கவில்லையென்றாலும், நிச்சயம் வேறு ஏதோ
வொரு 'விதி' உலகைக் கொண்டு வந்திருக்கவேண்டும்!   அந்த    உயர்-விதி
"கடவுள்" தான்  என்று  அவசரப்பட்டு  முடிவிற்கு வந்திடுவது முறையாகாது!
ஏனெனில்,  'கடவுள்'  என்பது வெறும் ஒருசொல் மட்டுமே. மாறாக, அவ்விதி
எது,  அது எத்தகைய மெய்ம்மை  என்பது கண்டுபிடிக்கப் பட்டாக வேண்டும்!
அதே வேளையில், எந்த விதி,அல்லது மெய்ம்மை இப்பிரபஞ்சத்தைப்  படைத்
திருந்தாலும்,  இப்பிரபஞ்சம் அற்புதமானது என்பதில் யாதொரு மாற்றமும் சந்
தேகமும் ஏற்படமுடியாது! மாறாக, இப்பிரபஞ்சத்திற்குக் காரணமான அவ்விதி,
அம்மெய்ம்மை நிச்சயம் அதியற்புதமானதாய்த்தான் இருக்கமுடியும்!

'மனிதன்' எனும் அற்புதத்தைப் பற்றிச்சொல்லவேண்டுமானால், ஸ்காட்லாந்து
தத்துவவாதி  தாமஸ் கார்லைல்   சொல்லியது போல,  "மனிதன்  என்பவன்
அற்புதங்களிலெல்லாம் அற்புதம் ஆவான்!" ஆம், அனைத்து அற்புதங்களுக்கும்
உயிர் தரும் அற்புதம் மனிதனே!  மனிதன் இல்லையேல்,  இப்பிரபஞ்சத்திற்கு
யாதொரு அர்த்தமும் இருக்காது! ஏனெனில்,பருப்பொருளாலான இப்பிரபஞ்சம்
தன்னைத்தானே அறியவோ,உணரவோ இயலாது! ஆகவேதான் பிரபஞ்சமானது
தன்னையறியும் பொருட்டு  தன்னிலிருந்து  விலகி நின்று  தன்னைக் காணும்
வகையில்,மனிதனாக,மனிதனுள் உணர்வாகப் பரிணமித்தது! மனிதன் வந்தான்,
பிரபஞ்சத்தின் பிரும்மாண்டத்தைக்கண்டு பிரமித்து,அதன் புதிரை விடுவிக்கும்
பொருட்டு  நூற்றாண்டுகளாக அதை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்; இன்னும்
அது, தன் ரகசியத்தை  வெளிப்படுத்திடவில்லை! மனிதன் இன்னும் எத்தனை
நூற்றாண்டுகள் பிரபஞ்சத்தைத்  துருவித்துருவி ஆராய்ந்தாலும்,அதன் புதிரை
விடுவிக்கவியலாது! காரணம் பிரபஞ்சம் தன்னையறியும் பொருட்டு மனிதனா
கப்பரிணமித்தபோது, பிரபஞ்சத்தின் புதிரானது மனிதனிடம் இடம்மாறிவிட்டது!
ஆம், பிரபஞ்சத்தின் புதிர் மனிதனின் பிரக்ஞை (உணர்வு) யினுள் தான் உறை
கின்றது! மனிதனே அனைத்துப் புதிர்களின் உறைவிடமாவான்!

ஆனால், தனக்குப் புறத்தேயுள்ள பிரபஞ்சத்தையும்,அதிலுள்ள அனைத்தையும்
ஆராய்ந்திடும்  மனிதன் தன்னையறியாத   குருட்டுப் புள்ளியாக இருக்கிறான்.
அனைத்தையும் அறியும் மனிதன் தனக்குத்தானே அந்நியனாக விளங்குகிறான்!
மனிதன் தன்னை அறியாமல், பிரபஞ்சத்தை அறிந்துகொள்ளமுடியாது! மேலும்,
அவன் தன்னிலிருந்து விலகி நின்று தன்னைக் காணாதவரை  தன்னை அவன்
அறிந்துகொள்ள  முடியாது!  தன்னிலிருந்து விலகி நிற்றல் என்பது,  தன்னைக்
கடந்து வளர்வதைக் குறிக்கிறது!

ஆம், மனிதன் தன்னை ஒரு அற்புதமாகக்  காண்பதற்குரிய விழிப்பு நிலைக்கு
வர வேண்டும்!  அநேகர்  தங்களது அற்புதத்திற்கு விழிக்காமலேயே வாழ்ந்து
மறைந்து போகின்றனர்!

மனிதன் மட்டும் தன்னைப்பற்றிய உண்மையை அறிய முற்படுவானேயானால்,
உண்மையில், முதல் அற்புதமும், இறுதி அற்புதமும் மனிதனேயாவான்! ஆம்,
"தான் இருக்கிறேன்!"  என்பதை உணர்வது முதல் அற்புதம்! தன்னை முழுமை
யாக  உணர்வு கொள்வது, (தன்னில் முழுமையாகக் கனிவது) இறுதி அற்புதம்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 01-05-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...