Sunday, 14 May 2017

எதைப் பற்றிச் சிந்திப்பது?





"எதைப்பற்றிச் சிந்திப்பது?" என்ற கேள்வி ஒரேநேரத்தில் அதி முக்கியமானதும்,
படு அபத்தமானதுமாகும். இக்கேள்வியை ஒருவன் தன்னிடமே கேட்டுக்கொள்
ளும்போது அது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது!  இதே கேள்வியை ஒருவன்
பிறரிடத்தில் கேட்கும் போது அபத்தமாகிவிடுகிறது!

எனினும்,  இக்கேள்வியை நாம்  சிந்தனைப் பயிற்சிக்குரிய ஒன்றாக எடுத்துக்
கொண்டு  அதற்கான  பதிலைக் காண்போம்.  எதைப் பற்றிச் சிந்திப்பது என்று
என்னைக் கேட்டால்,  நான்  என்னைப் பற்றிச் சிந்திப்பேன் என்று சொல்வேன்;
ஆனால், உண்மையில் நான்  எல்லாவற்றைப் பற்றியும் தான்  சிந்திக்கிறேன்!
ஏனெனில், எல்லாமும் என்னை (மனிதனை)ப் பற்றியதாகவே உள்ளன; ஏதோ
ஒருவகையில் எல்லாமும் என்னை (மனிதனை)யே சுட்டுகின்றன! ஏனெனில்,
மனிதன் உண்மையில் பிரபஞ்சமளாவியவன்!

உண்மையில்,  எவ்வொரு  மனிதனும்  தன்னைப் பற்றித்தான்  சிந்திக்கிறான்.
ஆனாலும்,  எல்லா  மனிதர்களின்  சிந்தனையும்  முழுமை  பெறுவதில்லை!
காரணம்,  அவர்கள் எல்லோரும்  தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்!
ஒருவன் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பதில் உள்ள மட்டுப்பாடு, குறைபாடு
என்னவென்றால்,  அவன் தன்னை  மிகவும் குறுக்கிக் கொள்கிறான், அல்லது,
சுருக்கிக் கொள்கிறான்.  ஒருவன் தன்னைப் பற்றியும், அதாவது  தனது நலன்,
தனது குடும்பத்தாரின், நெருங்கிய உறவுகளின் நலன்களைப் பற்றியும் மட்டும்
சிந்திப்பது என்பது உண்மையில் தன்னைப் பற்றிச் சிந்திப்பது என்பதாகாது!

தான், தனது நலன் என்பதென்ன?  'தான்' என்பது தனது 'உடல்' என்பதாகவும்,
தனது நலன் என்பது உடலின் 'அடிப்படைத்தேவைகள்' என்பதாகவும் இருக்கும்
பட்சத்தில், அது  உண்மையான, அல்லது, ஆழமான 'தன்னை'ப் பற்றியதல்ல!
மாறாக, மிகவும் மேலோட்டமான 'தன்னை'ப் பற்றியதாகும்!

எதைப் பற்றிச் சிந்திப்பது என்று  என்னைக் கேட்டால்,  நான் என்னைப்பற்றிச்
சிந்திப்பேன் என்று சொன்னேன். ஆனால், என்னைப்பற்றிச் சிந்திப்பது என்றால்
என்ன? எந்தமனிதனும் எடுத்தவுடனேயே நேரடியாக, அதாவது நேர்முகமாகத்
தன்னைப்பற்றிச்  சிந்திக்கத் தொடங்கிவிடுவதில்லை! உண்மையில் தன்னைப்
பற்றிச் சிந்திப்பது என்பது உண்மையில்  "தான் யார்?",  ஒட்டு மொத்த இந்தப்
பிரபஞ்சத்தில், "தான் எத்தகைய மெய்ம்மை?", பிரபஞ்ச இருப்புக்கும் எனக்கும்
(மனிதனுக்கும்) உள்ள  தொடர்பு எத்தகையது?  என்றெல்லாம் சிந்திப்பதாகும்!
ஆம்,  ஒருவன்  தன்னைப்பற்றி  சிந்திப்பதில் ஆழம் என்பது இவ்வளவு தான்,
என்றில்லாமல், சிந்திக்கச் சிந்திக்கக் கூடிக்கொண்டே செல்கிறது!

ஆக,  ஒருவன்  எதைப்பற்றிச் சிந்திப்பது என்ற கேள்வியை, பல்வேறு முனை
களிலிருந்து, அதாவது, 'தன்னைப்பற்றி' என்பதன் ஒரு மாறிய வடிவமான தன்
வாழ்க்கையைப் பற்றிச் சிந்திப்பதில் தொடங்கிடலாம்!  அல்லது, இப்பிரபஞ்சம்
ஏன்,   எதற்காக,  எந்த நோக்கத்திற்காகத் தோன்றியது?  அதற்கும்  தனக்கும்
(மனிதனுக்கும்) என்ன தொடர்பு?  என்பவை குறித்தும் சிந்திக்கலாம்! ஒருவன்
எதைப் பற்றிச் சிந்தித்தாலும்,   அது  மறைமுகமாகத்  தன்னை (மனிதனை)ப்
பற்றியதே  எனலாம்!  அதாவது,  ஒருவன்  உலகம்,  பிரபஞ்சம்,  வாழ்க்கை,
மெய்ம்மை என  எதைப்பற்றிச் சிந்தித்தாலும் இவை எல்லாவற்றிற்கும் அடிப்
படையாக, மையமாக இருப்பது மனிதனே அவனது உணர்வே ஆகும்!

நம்மில் சிலர்,  உலகம் மனிதனுக்கு முந்தையது, ஆகவே உலகமே பிரதானம்
என்பர்.  இக்கூற்றில் தவறேதுமில்லை! ஆனால்,உலகின் தன்மை, இயல்பு எத்
தகையது என்பதைக் கொண்டு மனிதனின் தன்மை, இயல்பு எத்தகையது என
அறிந்து  கொள்ளவியலாது!  மேலும், மனிதன் தன்னைப் பற்றிப் புரிந்துகொள்
ளாமல், உலகம், அல்லது பிரபஞ்சம் பற்றியும் புரிந்துகொள்ளமுடியாது! ஏனெ
னில், உலகம்,மனிதன், யாவும் ஒரே நிஜத்தின் வெவ்வேறு முகங்களேயாகும்!
உலகம் மனிதனுக்கு முந்தையது என்று சொல்வது, கம்பளிப்புழு வண்ணத்துப்
பூச்சிக்கு முந்தையது என்று சொல்வது போன்றதாகும்!  ஆம், மனிதனை எதிர்
நோக்கி உருவான அடித்தளம்தான் உலகம்! மனிதன் இல்லையேல் பிரபஞ்சத்
திற்கு யாதொரு அர்த்தமும் கிடையாது! நிச்சயம் இது ஒரு அதீதமான மனித-
மையப் பார்வைதான்! ஏனெனில்,  இங்கு நாம் அக்கறையுடன் பேசிக்கொண்டு
இருப்பது  மனிதனின்  வாழ்க்கையைப் பற்றித்தான்! அதாவது, மனிதஜீவியாக
விசேட வடிவமெடுத்த பிரஞ்சத்தின் வாழ்க்கை!

இப்போது நாம், வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைக்கு வருவோம்!  ஆம், எந்த
ஒரு மனிதனும்  தனது  வாழ்க்கையைப் பற்றித்தான்  சிந்திக்கிறான்.  அதில்,
பொதுவாக  உயிர்வாழ்தலுக்குரிய தேவைகளை எவ்வாறு அடையப்பெறுவது
என்பது குறித்து  மட்டுமே எல்லோரும் சிந்திக்கிறார்கள்! அதாவது, "உண்மை
யில் தான் யார்?" எனும் மையமான கேள்வியைக்கேட்காமலேயே மனிதர்கள்
தங்களைப்பற்றிச்  சிந்திக்கிறார்கள்!  அவ்வாறே, "வாழ்க்கை என்றால் என்ன?"
எனும்  மையமான  கேள்வியைக்  கேட்காமலேயே  வாழ்க்கையைப்  பற்றிச்
சிந்திக்கிறார்கள்  என்பதே  மனிதர்களுடைய  சிந்தனையிலுள்ள குறைபாடும்,
மட்டுப்பாடும் ஆகும்!

அடுத்து,  'எதைப்பற்றிச் சிந்திப்பது?'  என்ற பிரச்சினை ஒருபுறமிருக்க, அதற்கு
முன், 'சிந்தித்தல்' என்றால் என்ன என்பது குறித்தும் சிந்திப்பது அவசியமாகும்!
'சிந்தித்தல்'  என்றால்  என்ன?  நாம்  எது ஒன்றைப் பற்றியும் புரிந்துகொள்ள
வேண்டுமானால்,  அது  குறித்துக் கேள்விகளைத் தன்னுள் எழுப்பி, அவற்றுக்
கான பதில்களைக் கண்டுபிடிப்பது என்பதே 'சிந்தித்தல்' என்பதாகும்!

கேள்விகளின்  மகத்துவமும்,  அவை  நிகழ்த்தும்  அற்புதங்களும் அலாதியா
னவை!  கேள்விகள்,  அவை  அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்கள் ஆகும்!
அவை எங்கிருந்து எவ்வாறு தோன்றுகின்றன?  கேள்விகளுக்கான அடிப்படை
எது? தூய,ஆர்வம்-ததும்பும் உணர்வு/மனம் தான் கேள்விகளுக்கான அடிப்படை
யாகும். தூய ஆர்வம் என்றால் என்ன? விருப்பு-வெறுப்புக்களால் கறை படாத
ஆர்வமே தூய-ஆர்வம் எனப்படுவது! விருப்பு-வெறுப்புகள் ஒருவரது சிந்தனை
யைக் கட்டுப்படுத்திடுபவையாகும். ஏனெனில், விருப்பு-வெறுப்புகள் அன்றாட
உலகைச் சேர்ந்தவை; ஆனால், "உண்மை" என்பது இவ்வுலகைக்கடந்ததாகும்!

ஆர்வம்-ததும்பும் உணர்வு/மனம் என்பது எத்தகையது? ஆம், அறிந்த விஷயங்
களுடனும், அனுபவங்களுடனும் திருப்தியடைந்து தேங்கிப்போகாத,எப்போதும்
புத்துணர்வுடன் திகழும் மனமே ஆர்வம்-ததும்பும் மனமாகும்!

அடுத்து,  எது ஒன்றைப் பற்றியும்  புரிந்து கொள்ளவேண்டும் எனும் தேவை,
அல்லது விழைவு ஏன், எவ்வாறு, எங்கிருந்து எழுகிறது என்பதுதான் அனைத்
துச் சிந்தனைக்கும்,  இன்னும்  யாவற்றுக்குமான  அடிப்படையும் ஆதாரமும்!
ஆம்,  எதையும்  ஆழமாகவும்,  முழுமையாகவும்  புரிந்துகொள்ள வேண்டும்
எனும்  ஆர்வம்  இல்லையேல், மனிதர்களின்  சிந்தனை என்பது மேற்புறத்து
விஷயங்களைப்  பற்றியதாக  மட்டுமே  இருக்கும்!  வாழ்க்கையைப்  புரிந்து
கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் வாழ்க்கையை ஒருவர் அவ்வளவு ஆழமாக
நேசிக்கும் பட்சத்தில் மட்டுமே ஏற்படவியலும்!

வாழ்க்கையை    நேசிக்கும்   ஒருவனுக்கு,   "வாழ்க்கை"  எனும்  சொல்லே
அவ்வளவு இனிமை நிறைந்ததாக இருக்கும்! ஆனால்,எவ்வாறு வாழ்க்கையை
நேசிப்பது என்று ஒருவர் இன்னொருவருக்குக் கற்றுத்தர இயலாது; அவ்வாறே,
சிந்திப்பது எவ்வாறு எனவும் கற்றுத்தர இயலாது!

அதேநேரத்தில்,  மனிதர்களிடத்தில் அன்பு, நேசம் இல்லாமலில்லை! ஆனால்,
அவ்வளவும்  சுய-அன்பாகவும், சுய-நேசமாகவும் மட்டுமேயுள்ளது! இதிலுள்ள
மட்டுப்பாடு  என்னவெனில்,  தனது மையத்தில்  "தான்  உண்மையில் யார்",
"எத்தகைய மெய்ம்மை?"  என்பதை  ஒருவன் அறியாத நிலையில்,  அவனது
அன்பும்,  நேசமும்  மலராமல்  சுருங்கிப்போகிறது! ஒருவன் தனது இருப்பை,
"தான் இருக்கிறேன்!" என்பதை உணர்வது அற்புதமானதோர் அனுபவமாகும்!

"எதைப்  பற்றிச் சிந்திப்பது?"  என்று   கேட்கும்  ஒருவன்,  தனது  இருப்பின்
அர்த்தத்தை, நோக்கத்தை, காரணத்தை, இலக்கை, ஆகவே வாழ்க்கையையும்
சேர்த்தே இழந்துவிட்டவனாவான்!  ஆம்,  வாழ்க்கையின்  அர்த்தத்தை, குறிக்
கோளை,  இலக்கை அறியாதவரை  அது வாழ்க்கையல்ல!  தனது  இருப்பை
உணரும் ஒருவன்,  தாம் ஏன் இருக்கிறோம், தன் வாழ்க்கையின் குறிக்கோள்,
இலக்கு,  அர்த்தம்  என்ன  என்பதையெல்லாம்  தன்னுள் ஆழ்ந்து அறியாமல்
இருக்கமுடியாது! தனது இருப்பிற்கான நோக்கத்தை, காரணத்தை, அர்த்தத்தை
அறியாமல் இருக்கமுடியுமானால்,அது எலிகளுக்கும்,தவளைகளுக்கும் மட்டும்
தான்  சாத்தியமாகும்!   ஏனெனில்,   எலிகள்,  தவளைகள்  மட்டுமல்லாமல்,
அனைத்து  விலங்குஜீவிகளுக்கும்  இருப்பு இருக்கிறதே தவிர, அவைகளுக்கு
வாழ்க்கை என்பதில்லை! அவை யாவும் வெறுமனே உயிரோடு இருக்கின்றன;
அவ்வளவு தான்!

அதாவது,விலங்குஜீவிகள் கூழாங்கற்களையும்,பாறைகளையும் போல வெறும்
சடமாய் இல்லாமல், வேறொரு பாங்கில் (Mode),அதாவது உயிரோடு இருக்
கின்றன,  அவ்வளவு தான்! அதே பாங்கில் மனிதஜீவிகளும் இருக்கமுடியாது;
அவர்கள் வேறொரு பாங்கு, அல்லது வேறொருவகை  இருப்புக்காக, உணர்வு-
இருப்புக்காகத்  தோன்றிய  விசேட ஜீவிகளாவர்!  ஆம், இருப்பானது உணர்வு
கொள்ளப்படும் போது  மட்டுமே  வாழ்க்கையாகிறது!  ஒரு கூழாங்கல் இருக்
கிறது; ஆனால், அது வாழ்வதில்லை! ஒரு தவளை வெறுமனே உயிர்-பிழைத்
திருக்கிறது;  அது தனது இருப்பை உணர்வதில்லை, எதையும் அறிவதில்லை!
ஆகவே,  தவளையும் உண்மையில் வாழ்வதில்லை! எண்ணற்ற மனிதர்களும்
தவளைகளைப் போலவே வெறுமனே உயிர்-பிழைத்திருக்கிறார்கள்!

"சுய-உணர்வு" எனும் அம்சம் இல்லாததால்,  தவளைகளுக்கு எவ்வித கேள்வி
களும் எழுவதில்லை! "சுய-உணர்வு" இருந்தும் நம்மில் பலருக்குக் கேள்விகள்
எழுவதில்லை என்பது ஆச்சரியமான விஷயமே!

எல்லா மனிதர்களும், பிறக்கும் போது, கள்ளம் கபடமற்றவர்களாகவும், உள்ள
மைந்த ஆச்சரிய-உணர்வுடனும், பெரிதாக ஞாபகங்களின் சுமைகள்  இல்லாம
லும்,  ஆர்வத்தின் ஊற்றாகவும் தான்  பிறக்கிறார்கள்!  எல்லா  மனிதர்களும்,
குழந்தைகளாக இருக்கும் போது ஞானிகளாக - அதாவது, தூய கவனம்,  தூய
வியப்பு, தூய ஐயம்  கொண்டவர்களாக இருக்கிறார்கள்;   அதாவது,  கேள்வி-
நிறைந்தவர்களாக,   பார்க்கும்  ஒவ்வொன்றையும்,  அனைத்தையும் அறிந்து
கொள்ளும் தீரா ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்! ஆனால், வளர்ந்து
மனிதனாக ஆகும்போது  கேள்வியற்று,  ஆர்வம் வற்றி,  உணர்வும், அறிவும்
மழுங்கிப்போனவர்களாக ஆகிவிடுகிறோம்!

நம்மில்  பலருக்கு,  கொஞ்சம் விஷயங்களைக் கேட்டும், படித்தும் அறிந்ததும்
அனைத்தையும்  அறிந்தாகிவிட்டது  போன்றதொரு பிரமை, அல்லது  போலி-
உணர்வு தோன்றி  அவர்களைத் தூங்கச் செய்துவிடுகிறது! கேட்டும், படித்தும்
அறிந்தவை கடன்வாங்கிய அறிவாகும்;  அவை எவ்வாறு ஒருவனது அறிவும்,
அனுபவமும்  ஆகும்?   கேள்விகள்  ஒருவனுடையதாக  இருக்கும்பட்சத்தில்
பதில்களும், அறிவும் அவனுடையதாகவே அமையும்!  கேள்வியற்றவனுக்குப்
பதில்கள் கிடைத்தாலும் அவற்றால் ஒரு பயனுமில்லை - தனக்கு இவ்வளவு
விஷயங்கள் தெரியும் எனக்காட்டிகொள்வதைத்தவிர! கேள்வி உள்ளவனுக்கே
பதில்கள் உரித்தானவை!

ஆனால், நம்மில் ஒரு சிலரைத்தவிர மற்ற அனைவருக்கும் ஏன் கேள்விகளே
உதிப்பதில்லை? எல்லோருக்கும் கேள்விகள் உதிக்கவே செய்கின்றன;ஆனால்,
அவை  மேலோட்டமான விஷயங்களைப் பற்றியவையாக மட்டுமே உள்ளன!
ஏனெனில், மனிதர்கள்  மேலோட்டமானவர்கள்!  அவர்கள் வாழும் வாழ்க்கை
மேலோட்டமானது!  அவர்கள் விரும்பி, நாடித்தேடுகிற விஷயங்கள், மதிப்பீடு
கள் யாவும் மேற்புறத்தைச் சேர்ந்தவை!

                  முக்கிய கருத்தாம்சங்கள்
             ---------------------
ஒருவகையில், எதைப்பற்றிச்சிந்திப்பது என்பதைச் சொல்வது எளிது; ஆனால்,
எவ்வாறு சிந்திப்பது என்பதை விளக்கிச் சொல்வது கடினம்!
 
• எவ்வொரு மனிதனும் சிந்திக்கிறான்; ஆனால், தன்னைப்பற்றி மட்டும் தான்
            சிந்திக்கிறான்.

• எவ்வொரு மனிதனும் தனது  வாழ்க்கையைப் பற்றியும், தனது நலன்,
            தனது குடும்பத்தாரின், நெருங்கிய உறவுகளின் நலன்களைப்
            பற்றியும் மட்டும் தான்  சிந்திக்கிறான்.

• எவ்வொரு மனிதனிடமும் அன்பும், நேசமும் உள்ளது! ஆனால், அது
           சுய-அன்பாகவும், சுய-நேசமாகவும் சுருங்கிக் கிடக்கிறது!

• எல்லா மனிதர்களுக்கும் சுய-உணர்வு உள்ளது; ஆனால், அவ்வுணர்வு
           எதையும் ஆழமாகக் காண்பதும், அறிவதும், புரிந்துகொள்வதும்
           இல்லை. மாறாக, அது வாழ்வின் மேற்புறத்துத்தேவைகளை
           மட்டுமே தேடியலைகிறது!
           
• சிந்திப்பதற்கு பிரபஞ்சம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. என்றாலும்,
           முக்கியமானதை, முழுமையானதை, மையமானதை,
           இறுதியானதை, மெய்ம்மையைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்!
           சிந்திப்பவனை முழுமைப்படுத்துகிற, நிறைவுசெய்கிற,
           மரணத்தைக் கடக்க உதவுகிற, நித்தியவாழ்வு தருகிற அம்சம்
           எதுவோ அதுபற்றிச் சிந்திக்கவேண்டும்!
           ஆம், அனைத்தின் சாரமான உண்மையைப்பற்றிச் சிந்திக்க
           வேண்டும்!

மா.கணேசன்•நெய்வேலி•11-05-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...