
தம்மை மீறி இன்னொரு கடவுள், அல்லது பேரகந்தை இருப்பதை
பொதுவாக மனிதர்களின் அகந்தை விரும்புவதில்லை!
<•>
குறிப்பு : இக்கட்டுரை நாத்திகம், ஆத்திகம் பற்றிப்பேசினாலும், பிரதானமாக,
இது மனிதஜீவிகள் வாழ்ந்துவருகின்ற அடியோட்டமான வாழ்வின் தன்மை,
தரம் மற்றும் வாழ்க்கைப் பார்வை பற்றியதேயாகும்!
<<•>>
மனித இனம் ஆத்திகர்கள், நாத்திகர்கள் என இரு அணியாகப் பிரிந்து கிடப்ப
தாகத் தெரிவது ஒரு தோற்றப்பிழையே தவிர அது நிஜமல்ல! உண்மையில்
இது முழுக்க முழுக்க நாத்திக உலகமே; எல்லோரும் நாத்திகர்களே! எனினும்
நம்பிக்கை, கொள்கை, மற்றும் கோட்பாடு என பெயரளவில் ஆத்திகர்கள்,
நாத்திகர்கள் என்போர் உள்ளனர் எனலாம்; எவ்வாறு, கட்சி-சார்ந்த அரசியலில்,
பல கட்சிகள்,அணிகள் உள்ளனவோ அவ்வாறு! அதாவது,கட்சி-சார்ந்த அரசியல்
என்பது எவ்வளவு மேலோட்டமானதோ, அர்த்தமற்றதோ அவ்வளவு அர்த்தமற்
றதே மதம் எனும் விஷயமும்! ஆத்திகம் என்றவுடன் அதற்கு ஒரு மதச்சாயம்
அல்லது மதச்சார்பு உள்ளதைப் போலவே நாத்திகத்திற்கும் ஒரு மதச்சாயம்
அல்லது மதச்சார்பு உள்ளது! நாத்திகத்தைப் பொறுத்தவரை "மதச்சார்பற்றது"
என்பதுதான் அந்த மதச்சாயம்! ஆம் நாத்திகம் என்பதும் ஒரு மதமே; அதாவது,
கடவுளுக்கு பதிலாக இயற்கையை,அல்லது பகுத்தறிவை நம்புகிற ஒரு மதம்!
இவ்வாறே, விஞ்ஞானம், பொருள்முதல்வாதம், பொதுவுடமைவாதம் (கம்யூனி
சம்), டார்வினிய பரிணாமவாதம் என்பவையும் மதங்களே! அதாவது, கடவுள்
இல்லாமலும், மதங்கள் இல்லாமலும் மனித இனம் எவ்வொரு காலத்திலும்
இருந்ததில்லை!
நாத்திகம் என்பது, ஆதி அல்லது இயற்கை மதங்களைப்போல இயற்கையான
தல்ல! மாறாக, 'கடவுள்' மற்றும் மத- நம்பிக்கைகளுக்கு எதிராகத் தோன்றிய
எதிர்-வினையே எனலாம். நாத்திகம் என்பது வலிந்து மேற்கொள்ளப்படும் ஒரு
நிலைப்பாடு ஆகும்! நாத்திகத்தில் இருவகைகள் உள்ளன எனலாம்! ஒன்று,
பகுத்தறிவுப்பூர்வமாக தெரிவுசெய்யப்பட்ட ஒரு நிலைப்பாடு. இன்னொன்று
அறிவிக்கப்படாத ஒரு நிலைப்பாடு,அல்லது விவரமில்லாத ஒரு மனோநிலை.
பெரும்பாலானவர்கள் இந்த இரண்டாம் வகை நாத்திகர்களேயாவர்; அதில்,
ஆத்திகர்கள் என்போரும் அடங்குவர்!
அதாவது, சமயபூர்வமானவர்கள் (Religious People) எனக்கருதிக்கொள்ப
வர்கள், கடவுள் நம்பிக்கையாளர், ஆத்திகர் எனப்படுபவர்களும், உண்மையை,
அதாவது உண்மையான கடவுளைத் தேடுவது இல்லை! மாறாக, வெறும்
ஆறுதலையும், சுலப - அருளையும் (Easy Grace) தான் தேடுகிறார்கள்!
அவர்கள் கடவுளுக்காகத் தம்மை இழக்கத் தயாராயில்லை! ஆத்திகர்கள்
என்பவர்களும் ஒருவகை நாத்திகர்களே! ஆம், கடவுள் எனும் மெய்ம்மையை
நேரே தம் உணர்வின் உச்சத்திற்கு உயர்ந்து அனுபவம்கொள்ளாத, தரிசிக்காத
எவரும் நாத்திகரே!
"கடவுள் இருக்கிறார்!" என நம்புபவர்கள் ஆத்திகர்கள்; "கடவுள் இல்லை!" என
வாதம் புரிபவர்கள் நாத்திகர்கள் எனப்படுகிறார்கள்! ஆத்திகர்கள் மனித
அறிவையும், இயற்கை ஆற்றலையும் மீறியதொரு ஆற்றல் இருப்பதாக நம்பு
கிறார்கள்; அந்த ஆற்றலை அவர்கள் "கடவுள்" என்றழைக்கிறார்கள். நாத்திகர்
கள் தம் பகுத்தறிவை மட்டுமே தீவிரமாக நம்புகிறார்கள்; இருப்பது இயற்கை
மட்டுமே என்கிறார்கள்; அந்த இயற்கை ஆற்றலை மீறிய ஆற்றல் எதுவும்
இல்லை; ஆகவே, "கடவுள் என்பது இல்லை!" என வாதிடுகிறார்கள்! ஆத்திக
வாதம், நாத்திகவாதம், இவ்விரண்டுவாதங்களின் வேர்களை ஆராய்ந்து காண்
கையில், இவையிரண்டும் யாதொரு அனுபவபூர்வமான அறிவையும் அடிப்
படையாகக்கொண்டவையல்ல என்பது தெரியவரும்!
அதாவது நாத்திகவாதத்தின் கூற்றுகள் உண்மையாக இருக்கவேண்டுமானால்,
மனித அறிவு,அதாவது பகுத்தறிவு என்பது இறுதியானதாக இருக்கவேண்டும்,
மேலும்,பகுத்தறிவைக்கடந்து வேறு அறிவுநிலைகள் எதுவும் இருக்கக்கூடாது;
அப்போதுதான், நாத்திகவாதத்தை பிழையற்ற தத்துவம் எனக்கொள்ளமுடியும்!
ஆனால், மனித அறிவு, அதாவது பகுத்தறிவு என்பது இறுதியானதல்ல! மனித
ஜீவிகளில் ஏராளமானவர்கள் இன்னும் பகுத்தறிவு நிலையைக் கூட எட்டிட
வில்லை! அதை எட்டியவர்களிடம் அத்தளத்தினை முழுமையாகப் பிரயோகித்
ததற்கான தடயம் ஏதும் தெரியவில்லை! அவ்வாறு பிரயோகித்திருந்தால்,
அவர்கள் பகுத்தறிவு எனும் தளத்தைக் கடந்து, அதையடுத்த உயர்-அறிவுத்
தளத்தை எட்டியிருப்பார்கள்! ஆக, நாத்திகவாதம் என்பது பூரணமானதோ,
அல்லது, பிழையற்ற தத்துவமோ அல்ல என்பது தெளிவு!
அடுத்து, ஆத்திகவாதிகள் நம்புகிற மனித அறிவைக் கடந்த அறிவு, மற்றும்
இயற்கை ஆற்றலை மீறிய ஆற்றல் என்று சொல்லப்படும் 'கடவுள்' பற்றிய
நேரடி அனுபவம், மற்றும், நிரூபணத்திற்கான தடயத்தை ஆத்திகர்களிடம்
தேடினால்,அப்படி எதுவும் அவர்களிடம் காணக் கிடைக்கவில்லை! ஆம்,மனித
அறிவை மிஞ்சிய பேரறிவு இருக்கலாம்! ஆனால், அதை மனிதர்களால்
தொடர்புகொள்ள இயலவில்லையெனில், அதனால் மனிதர்களுக்கு என்ன
பயன் விளையமுடியும்? அதாவது, அறிவை அறிவால் மட்டுமே அணுகவும்,
அடையவும் முடியும்! அதாவது, 'கடவுள்' எனும் பேரறிவை நம்பிக்கையின்
மூலமாக அணுகவோ, பணியவைக்கவோ முடியாது!
தற்போது உலகில் நாத்திகம் தீவிரமாகி வருகிறது என்பதான ஒரு கருத்து
ஆத்திக வட்டத்தில் நிலவிவருகிறது எனப்படுகிறது. பல சிந்தனையாளர்கள்
நாத்திகம் தீவிரமாக வளர்ந்து வருவதற்குக் காரணமாக பல அம்சங்களைக்
குறிப்பிடுகின்றனர். நாத்திகத்தின் வளர்ச்சிக்கு ஒரு பாதி காரணம் மதவாதம்,
குறிப்பாக, கிறித்துவமே என அல்வின் பிளாண்டிங்கா (ALVIN PLANTINGA)
குறிப்பிடுகிறார். புராட்டஸ்ட்டண்ட் பிரிவு கிறித்தவர்களுக்கும், கத்தோலிக்கப்
பிரிவு கிறித்தவர்களுக்கும் இடையேயான பரஸ்பரச் சண்டைகளும், கொலை
களும் கிறித்துவத்திற்கு எதிரான மனநிலையை உருவாக்கியது;அதுவே பொது
வான பிற மதங்களுக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் மாற்றான நிலைபாட்டிற்கு
அதாவது நாத்திகத்திற்கு இட்டுச்சென்றது என்கிறார். பிளாண்டிங்கா- வின் இக்
கூற்று, ஐரோப்பாவிற்கு மட்டுமே பொருந்தும்; ஏனெனில், நாத்திகம் என்பது
உலகளாவியதொரு போக்கு ஆகும்.
பிளாண்டிங்கா-வின் இன்னொருகூற்று, நாத்திகம் என்பது ஒருவகை குருட்டுத்
தனம், அதாவது உலகிலுள்ள மிக முக்கியமான ஒன்றைக் காணத்தவறியதன்
விளைவு என்கிறார். இக்கூற்று ஒருவகையில் பொருத்தமானதே எனலாம்.
தத்துவப் பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்வின்பர்ன் (Richard Swinburne)அவர்கள்
கூற்றுப்படி,நாத்திகர்கள் எவ்வாறு உருவாகிறார்களென்பது, 'அவர்கள் எத்தகை
யவர், அவர்கள் வாழும் காலம், எத்தகைய தாக்கங்களுக்கு இலக்கானவர் என்
பதைப் பொறுத்தது' என்கிறார். குறிப்பாக, அறிவுஜீவியச் சூழலின் தாக்கத்தைப்
பற்றி ஸ்வின்பர்ன் குறிப்பிடுகிறார். அதேநேரத்தில், மனிதர்கள் தங்களது சூழ
லின் தாக்கத்தைக் கடந்து எது உண்மை என்று அறியமுடியும் எனவும், சில
மனிதர்களுக்கு அதிர்ஷ்டவசமாக கடவுளுடைய இருப்பு(presence of God)
குறித்த அனுபவம் கிட்டுவதாகவும் பலருக்கு அது கிட்டுவதில்லை' எனவும்
ஸ்வின்பர்ன் குறிப்பிடுகிறார். ஆனால், இக்கடைசிக்கூற்று பொருந்தவில்லை.
ஏனெனில், 'கடவுளின் இருப்பு' குறித்த அனுபவம் எனப் பெயர் பொறிக்கப்பட்ட
யாதொரு அனுபவமும் இல்லை! அதிலும்,அவ்வனுபவம் நம்பிக்கையை அடிப்
படையாகக்கொண்டதென்றால், அது இன்னும் சந்தேகத்திற்குரியதாகும்!
வேண்டுமானால், ஆழமான அக - அனுபவம், அதாவது, உணர்வியல் ரீதியாக,
மனித உணர்வைக் கடந்த பேருணர்வுடன் பொருந்திய அனுபவம், அல்லது
அக-மலர்ச்சி, உணர்வுநிலையில் ஏற்படும் ஒரு பெரும்மாற்றம் போன்ற அரிய
அனுபவங்களை, கடவுள்-அனுபவத்திற்கு இணையானவை எனக்குறிப்பிடலாம்!
இவ்வனுபவங்கள் அனைத்திற்கும் மையமான, அனைத்தின் சாரமான,ஒருமை
யும் முழுமையுமான ஒரு மெய்ம்மையைச் சுட்டுவனவாகும்! இத்தகைய ஒரு
மெய்ம்மையை நாம் "கடவுள்" என்று அழைப்பது பொருத்தமாகவே இருக்கும்!
ஆனால், இத்தகைய அனுபவத்தைப்பெற்ற ஒருவன், அதன்பிறகு, ஆத்திகனாக
வும், நாத்திகனாகவும், அல்லது இப்படியுமில்லாத,அப்படியுமில்லாத இரண்டும்
கெட்டானாகவும், அதாவது அறியொணாமைவாதியாகவும்(Agnostic)இருக்க
மாட்டான்!
நாத்திகர்களின் அதிகரிப்புக்கு இன்னொரு காரணம், விஞ்ஞானத்தின் தாக்கம்
என ரிச்சர்ட் ஸ்வின்பர்ன் கூறுகிறார்.அதாவது நவீனகால விஞ்ஞானஅறிவின்
வளர்ச்சியையும்,அதன் வீச்சையும் கண்டுபிரமித்துப்போன பலர், கடவுளுக்கான
இடம் இப்பிரபஞ்சத்தில் மிகச் சொற்பமே என எண்ணும்படி தள்ளப்பட்டனர்.
இக்கூற்று ஓரளவிற்கு சரியே எனலாம்.
ஜெரார்ட் ஜெ.ஹ்யூஸ் (தத்துவத்துறைத் தலைவர்,லண்டன் பல்கலைக்கழகம்)
அவர்களது பார்வையில், நாத்திகம் ஏன் மனத்தைக் கவரக்கூடியதாகவுள்ளது
என்றால், 'பல, அல்லது, அனைத்து மதங்களும் பொய்யான கருத்துகளைத்
தாங்கிப் பிடித்ததும், மூட நம்பிக்கைகள், மற்றும் நெறிதவறிய வழிகளைக்
கைக்கொண்டதும், பிரறது பார்வையில் மோசமான விஞ்ஞானம், மற்றும்
நியாயப்படுத்த முடியாத நடத்தைகளின் கலவையாகத் தெரிந்தது. இதற்கு
மாறான வகையில், நாத்திகமானது, மதத்தின் முதிர்ச்சியற்ற தன்மையிலிருந்
தும், மதக்கொள்கையின் கொடுங்கோன்மைலிருந்தும் விடுதலை பெறுவதற்
கான ஒரு வழியாகத் தன்னைக்காட்டிக்கொண்டது' என்று குறிப்பிடுகிறார். இக்
கூற்று ஒருவகையில், பொருத்தமானதாகவே தெரிகிறது. எனினும், நாத்திகம்,
ஆத்திகத்தைப் போலவே மட்டுப்பாடானது, முதிர்ச்சியற்றது, சிறுபிள்ளைத்தன
மானது என்பதில் ஐயமில்லை!
மேலும், மதத்தில், குருட்டுப் பிடிவாதக் கொள்கையாளர்கள் (religious
bigots) இருப்பதைப்போல, அவர்களுக்குச் சமமாக நாத்திகர்களும் மூடிய-
மனங்களுடனும், கொள்கை வெறியுடனும் இருக்கிறார்கள் என ஹ்யூஸ்
அவர்கள் கூறுகிறார்!
ஏன் பல சிந்தனையாளர்கள் நாத்திகர்களாக இருக்கிறார்கள்? என்ற கேள்விக்
கான பதிலாக, சமயத்துறை ஆய்வு பேராசிரியர் ஹ்யூகோ மெய்னெல் (HUGO
MEYNELL) இவ்வாறு சொல்கிறார், 'ஆம், தீமை குறித்த பிரச்சினை, அதுதான்
மனிதர்கள் ஏன் கடவுளை மறுக்கிறார்கள் என்பதற்கான சரியான காரணம்'
என்கிறார். 'மேலும்,சிலர், வில்ஃப்ரட் செல்லார்ஸ் குறிப்பிட்டபடி,விஞ்ஞானமே
அனைத்திற்கான அளவுகோல் என எண்ணத் தலைப்படுகிறார்கள். மேலும்,
பெரும்பாலான சமகால தத்துவச் சிந்தனையாளர்கள், கடவுள் இருக்கிறார் என்
பதற்கான வாதங்கள் எதுவும் பிழைபடாததாக இருக்கவில்லை என எண்ணு
கிறார்கள். சில தத்துவவாதிகள் கடவுள் இருக்கிறார் என்பது முற்றிலும் அர்த்த
மற்ற பேச்சு; ஏனெனில், கடவுளை ஒருவர் பார்க்கவோ, கேட்கவோ, தொட்டு
உணரவோ முடியாது என்கிறார்கள் எனக்குறிப்பிடும் ஹ்யூகோ மெய்னெல்,
ஆனால், நீங்கள் எலக்ட்ரான்கள் அல்லது பாஸிட்ரான்கள் ஆகியவற்றையும்
தான் தொட்டுணரவும், கேட்கவும், முகர்ந்தறியவும் முடியாது; ஏன், அப்படிப்
பார்த்தால், பிற மனிதர்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் தான்;
ஆயினும் அவை யாவும் இருக்கவே செய்கின்றன என்கிறார். முடிவாக,
ஹ்யூகோ மெய்னெல் சொல்வது, தீமை குறித்த பிரச்ச்சினை ஒருபுறமிருக்க,
விஞ்ஞானவாதம் (scientism), மற்றும் நேர்க்காட்சிவாதம் (positivism)
ஆகியவை பலருக்கு நாத்திகம் ஏற்புடையதாகக்காட்டிற்று என்கிறார்.
ஆனால், மேற்சொல்லப்பட்ட காரணங்களுக்காக பலர் நாத்திகத்தைத் தழுவு
கிறார்கள் எனில், அவர்களது அறிவுக்கூர்மை சந்தேகத்திற்குரியதே! ஏனெனில்,
'கடவுள்' என்பது புலன்களின் வழியாக அறியப்படுகிற அம்சம் அல்ல! மாறாக,
ஒவ்வொருவரும் தம்உணர்வின் உச்சத்திற்குஉயர்ந்து நேரடியாக உணர்ந்தறிய
வேண்டிய அம்சமாகும். மேலும், "கடவுள்" என்பது வாதப்பிரதிவாதங்களைக்
கொண்டு நிலைநாட்டப்படவேண்டிய விஷயம் எனக்கருதுவது பேரபத்தமாகும்!
"கடவுள்"என்பது உணர்வுள்ள மனிதஜீவிகளுக்கேயுரிய பிரத்யேகச் சவாலாகும்!
ஆம், எலிகளுக்கும், தவளைகளுக்கும் இத்தகைய சவால் ஏதும் இல்லை! சுய-
உணர்வுடைய மனிதஜீவியானவன் முழு-உணர்வை அடைந்தேயாகவேண்டும்
என்பது பரிணாம நியதியாகும்! ஏனெனில், "முழு-உணர்வு" தான் கடவுள்!
ஒரு வட்டம் என்றிருந்தால், அதற்கு நிச்சயம் ஒரு மையம் இருக்கும்! ஆக,
உலகம் (பிரபஞ்சம்) என்றிருந்தால், அதற்கு ஒரு மூலம், அதாவது, "கடவுள்"
நிச்சயம் இருந்தாகவேண்டும்! விருட்சம் என்றிருந்தால், நிச்சயம் வித்து இருந்
தாகவேண்டும்! வித்து இல்லையென்றாலும், அவ்விருட்சம் கனிகளாக மாறும்
வரை காத்திருக்கவேண்டும்; அதாவது, பிரபஞ்ச விருட்சத்தின் பிஞ்சுகளாக
(அகந்தை எனும் அரை-உணர்வாக) உள்ள நாம் ஒவ்வொருவரும் உணர்வில்
முற்றிக்கனிந்து முழு-உணர்வாக மாறியாகவேண்டும்!
தத்துவச் சிந்தனையாளர் ஜோஸெப் செய்ஃபெர்ட்(Josef Seifert) அவர்கள்,
நாத்திகத்திற்கு பல வேர்கள் உள்ளனவென்று கூறுகிறார். 'அகம்பாவம்(pride)
கொண்ட மனிதர்கள் கடவுள் மீது சார்ந்திருப்பதை விரும்பவில்லை, அதோடு,
அவர்கள் தங்கள் ஆளுமையை இப்பிரபஞ்சத்தில் மிகமேன்மையான விஷயம்
எனப் பிரகடனம் செய்திட விரும்புகின்றனர்; அதாவது, தங்களைக் கட்டுப்படுத்
துகிற எவ்வொரு அறநெறிமுறையும், உயர்-நீதிபதியும் இருக்கக்கூடாது; தாம்
தம் மனம்போன போக்கில் வாழவேண்டும் என விரும்புகிறார்கள்', என்பதாக
செய்ஃபெர்ட் கூறுகிறார். மேலும், பொருள்முதல்வாதம், நியதிவாதம் (deter-
minism) போன்ற பல அறிவுஜீவியப் பிழைகளும் ஒருவரை நாத்திகத்திற்கு
இட்டுச்செல்வதாயுள்ளன எனவும் கூறுகிறார்.
ஆம், 'சுதந்திரம்' என்பதை தலைகீழாகப்புரிந்து கொண்டவர்கள் இந்நாத்திகர்கள்!
அவர்கள் விரும்புவது எலிகளுக்கான சுதந்திரமேயாகும்! ஆகவேதான்,அவர்கள்
'கடவுள் இல்லை!', 'அறநெறிமுறைகள் வேண்டாம்!', 'மனிதனுக்கு சுதந்திர சித்
தம் (Free-will)என்பதில்லை!' உணர்வு (Consciousness) என்பதில்லை!',
'பரிணாமம் குறிக்கோளற்றது!', 'மனிதவாழ்க்கை இலக்கற்றது!', 'உலகம் என்பது
இயக்கத்திலுள்ள பருப்பொருளே!', 'உயிர்-பிழைத்திருத்தலே மொத்தவாழ்க்கை
யும்!', 'மரபணுக்களை பிரதியெடுப்பதற்காக இனப்பெருக்கம் செய்தலே இலக்கு!'
என்றெல்லாம் தத்துவம் பேசிவருகிறார்கள்; எலிகளுக்கு சிந்திக்கும் திறனும்,
பேசும்திறனும் இருந்தால் அவற்றின் தத்துவமும் இவ்வாறுதான் இருக்கும்!
இதுவரை மேலே குறிப்பிடப்பட்ட தத்துவச்சிந்தனையாளர்கள் வெளிப்படுத்தி
யவை யாவும் நாத்திகத்தின் பக்க வேர்கள் அல்லது சல்லி வேர்கள் மட்டுமே
யாகும்! ஆம், நாத்திகத்தின் ஆணிவேரை, வாழ்க்கையை அணுகும் முறையி
லிருந்தும், வாழும் முறையிலிருந்தும்தான் அறியமுடியும்! ஏனெனில்,கடவுள்
என்பது அறிவுஜீவியப் பிரச்சினை(Intellectual Problem)அல்ல! 'கடவுள்
இருக்கிறாரா?' 'இல்லையா?' என்கிற கோணத்தில் கடவுள் எனும் மெய்ம்மை
யை அணுகவியலாது! மாறாக, வாழ்க்கை இருக்கிறது! வாழ்க்கையை வாழ்வ
தற்காக (உணர்வு கொள்வதற்காக) மனிதன் இருக்கிறான்! வாழ்க்கையை ஒரு
வர் முழுமையாக உணர்வு கொள்வதன் வழியாக மட்டுமே உண்மை என்பது
உய்த்துணரப்படமுடியும்!
ஆம், "வாழ்க்கை" என்பது தயார்- நிலையில் அப்படியே எடுத்துச் சாப்பிடும்
வகையில் கிடைக்கும் ஒரு உணவுப் பண்டம் போன்றதல்ல; மாறாக, நன்கு
சமைத்துச் சாப்பிடுவதற்காக அளிக்கப்பட்டுள்ள கச்சாப்பொருட்களின் பொதி
(பொட்டலம்) போன்றதாகும்! அதாவது, வாழ்க்கையைப் பற்றிய எவ்விதக்
கேள்வியும், கேள்வியைத்தொடரும் நெடிய சிந்தனையும்,ஆழமான விசாரமும்
இல்லாமல் ஒருவர் வாழ்க்கையை வாழமுடியாது! நாம் எலிகளாக இருந்தால்
மட்டுமே கேள்வி இல்லாமல் வாழமுடியும்! அதே நேரத்தில், நம் அனைவரிட
மும் கேள்விகள் இல்லாமலுமில்லை! ஆனால், அக்கேள்விகள் அனைத்தும்
வாழ்க்கையின் மேற்புறத்துத் தேவைகளைக் குறித்தவை மட்டுமே! ஆக, நாத்
திகர்கள், ஆத்திகர்கள், மற்றும், இப்படியுமில்லாத, அப்படியுமில்லாத அறியொ
ணாவாதிகள் என அனைவரும் வாழ்வின் மேற்புறத்துப்பொருட்களைத் தேடிப்
பெறுவதையே 'வாழ்க்கை' என வாழ்ந்து செல்கின்றனர்! வெகு அரிதாக, கோடி
யில் ஓரிருவர் மட்டுமே வாழ்க்கையின் உட்பொருளை முதலில் தேடுகிறவர்
களாக இருக்கிறார்கள்! வாழ்வின் அர்த்தத்தைத் தேடும் இவர்கள் மட்டுமே
அர்த்தமுள்ள மனித-வாழ்க்கையை வாழ்பவர்கள்! ஏனெனில், அர்த்தம்தான்
'கடவுள்'!
இக்கட்டுரை நாத்திகத்தின் ஆணிவேரைப் பற்றியது என்பதால், இது நாத்திகத்
தையும், நாத்திகர்களையும் குறிவைத்ததல்ல! ஏனெனில், வாழ்க்கையை ஆழ
மாக வாழத்தவறிய அனைவருமே நாத்திகர்களே ஆவர்! வாழ்க்கையின் மிக
அசலான குறிக்கோள், மற்றும் இலக்கை அறியாது வாழ்ந்துசெல்லும் உணர்
வற்ற தன்மையே நாத்திகத்தின் ஆணிவேர் ஆகும்!
மா.கணேசன் / நெய்வேலி / 07-05-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment