
இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதி திரு. வேங்கடம் அவர்களால் எழுதப்
பட்டு விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "இதற்கா இத்தனை ஓட்டம்"
எனும் நூலின் பின்னட்டைச் செய்தி (Blurb) யாகும். இச்செய்தியைத்
தொடர்ந்து அதிலுள்ள முக்கிய கருத்துக்களை இக்கட்டுரை அலசுகிறது.
•>>>•<<<•
---------------------------------------------
பிறப்பிலிருந்து கடைசி வரை நாம் எதை நோக்கியோ, எதற்காகவோ ஓடிக்
கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆரம்பக்கோடு எது, ஓடவேண்டிய திசை
என்ன என்பதைத் தெளிவாக தெரிந்து வைத்துக்கொண்டுதான் ஓட ஆரம்பித்
தோமா நாம்?
ஒருவேளை நாம் தற்போது ஓடிக்கொண்டிருப்பது,ஆட்டக்களத்தைத் தாண்டிய
கால்பந்து மைதானமாகவோ, ஆட்ட அரங்குக்கு வெளியிலோ என்று கூட
இருக்கலாம். அடிப்படையிலேயே கூட சந்தேகம் இருக்கிறது. முதலில், நாம்
படைக்கப்பட்டதே எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கத்தானா?
யார் கண்டது?
நம்முடைய அன்றாட வாழ்க்கை, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக்
கொள்ளும் போராட்டமாகவே இருந்து கழிந்துவிடுகிறது.ஆனால்,ஒரு சிருஷ்டி
கர்த்தா நாம் நம்முடைய மிகச் சாதாரண அன்றாட வேலைகளை செய்து
கொண்டிருப்பதற்காக மட்டுமே நமக்கு உயிர் கொடுத்திருப்பானா என்று
யோசிக்கவைக்கிறது. அல்லது, சிருஷ்டித்தவன் 'தன்னைப் புகழ் பாட ஒரு
கூட்டம் வேண்டும்!' என்று எண்ணி மனிதர்களை படைத்தானோ என்றும்
எண்ணத்தோன்றுகிறது.
ஆனால், ஒரு மிகப்பெரிய சிருஷ்டிகர்த்தா இத்தகைய சாமானியமான, தன்
புகழ் பாடும் ஒரு அற்பச்செயலுக்காக ஒரு சிருஷ்டியை செய்திருப்பார்
என்பதை நம்மால் நம்பமுடியவில்லை! நாம் வாழும் வாழ்க்கைக்கு உண்மை
யில் அர்த்தம் அல்லது குறிக்கோள் என்று ஏதாவது இருக்கிறதா?
நாம் ஏன் படைக்கப்பட்டிருக்கிறோம்?
நீங்கள் பிறந்ததற்கு என்ன காரணம்?
நான் பிறந்ததற்கு என்ன அவசியம்?
உலக ஞானிகள் இதைப்பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள்?
- வேங்கடம்/ இதற்கா இத்தனை ஓட்டம்/விஜயா பதிப்பகம்
--------------------------------------------------
•>>>•<<<•
நல்லது, இக்கட்டுரை ஒட்டு மொத்த புத்தகத்தைப்பற்றிய முழு அளவிலான
மதிப்புரையோ, அல்லது, விமர்சனமோ அல்ல. மாறாக, பின்னட்டைச் செய்தி
யிலுள்ள முக்கிய கருத்துக்களையும், மேலும் அதற்குத்தொடர்பான நூலின்
உள்ளே காணப்படும் ஒரு சில கருத்துக்களையும் பற்றிய அலசல் மட்டுமே.
முதலில், திரு.வேங்கடம் அவர்களுடைய "இதற்கா இத்தனை ஓட்டம்" எனும்
நூலின் தலைப்பு பற்றிச் சொல்லியாக வேண்டும். இத்தலைப்பு இந்நூலின்
மையக்கருத்தை மிகக் கச்சிதமாக எடுத்துச்சொல்லுகிறது. இந்நூலின் மையக்
கருத்து மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும், பின்னட்டையில்
எழுப்பப்படும் கேள்விகள் மனித வாழ்க்கையை மிக ஆழமாகக் காணவும்,
புரிந்துகொள்ளவும் வேண்டிய அவசியத்தைச் சுட்டுகின்றன.
நூலாசிரியர் தனது 'என்னுரை' எனும் பகுதியில் சொல்லியுள்ளபடி, இந்நூல்
ஒரு 'வித்தியாசமான' சுயமுன்னேற்ற நூல்தான். மேலும்,நூலாசிரியர் எழுதிய
படி, 'இதில் விவாதிக்கப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் மனம் சார்ந்தவை,
அக உலகு சம்பந்தப்பட்டவை,ஆழமானவை,அழகானவை' என்பதிலும் சந்தேக
மில்லை!
நூலாசிரியர் தனது உரையில் சொல்லியுள்ள,
"சுய நலம் கருதிய வெற்றியாளனாக ஆவதில் ஒரு விசேஷமும்
இல்லை, பலரும் அதைச் செய்திருக்கிறார்கள்."
எனும் இக்கருத்து சுட்டும் உண்மை அதி முக்கியமானதாகும். மேலும்,
"ஆனால், வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, திருப்தியாக
முடித்துக் கொண்டவர்கள் மிக மிகச் சொற்பம்."
எனும் இக்கருத்து,அதாவது, 'வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர்கள் மிக
மிகச் சொற்பமே' என்பது உண்மையிலும் உண்மையாகும்! ஆனால், ஏனோ
ஆசிரியர், 'வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து திருப்தி கண்டவர்கள்' என்று
சொல்லாமல், 'திருப்தியாக முடித்துக்கொண்டவர்கள்' என்று குறிப்பிடுவது
சற்று நெருடலாக இருக்கிறது. 'திருப்தியாக முடித்துக்கொள்வது' என்றால்
என்ன என்று அவர் விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! அதாவது,
வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தாலும், அல்லது அரைகுறையாக வாழ்ந்
தாலும்; திருப்தியடைந்தாலும், அடையாவிட்டாலும் எவரும் வாழ்ந்தது
போதும் என்று முடித்துக் கொள்வதாகவோ, முடித்துக்கொள்ள முடியும் என்ப
தாகவோ தெரியவில்லை! ஏனெனில், முழுமையான வாழ்க்கை என்பது
அதனளவிலேயே முடிவானதாகும்! அதாவது, வாழ்க்கை உண்மையில்,முடிவ
துமில்லை, முடிவேயில்லாமல் தொடரவேண்டும் என்ற கட்டாயமும் அற்றது!
ஆம், முழுமையான வாழ்க்கை என்பது ஒரு அசாதாரணமான இயக்கமாகும்!
அது, இயக்கத்தில் இருப்பதாகவேத்தெரியாத சலனமற்ற பேரியக்கமாகும்!
"பிறப்பிலிருந்து கடைசி வரை நாம் எதை நோக்கியோ, எதற்காகவோ
ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால்,ஆரம்பக்கோடு எது,ஓடவேண்டிய
திசை என்ன என்பதைத் தெளிவாக தெரிந்து வைத்துக்கொண்டுதான் ஓட
ஆரம்பித்தோமா நாம்?"
எனும் ஆசிரியரது இக்கேள்விக்கு பதில் 'இல்லை' என்பதே! மனிதர்கள் பிறந்த
திலிருந்து கடைசிவரை எதை நோக்கியோ,எதற்காகவோ ஓடிக்கொண்டேதான்
இருக்கிறார்கள்! மனிதர்கள் அறிந்தோ, அறியாமலோ சந்தோஷத்தைத் தான்
தேடுகிறார்கள்; ஆனால், தவறான திசையில் தேடுகிறார்கள்; அகத்தே தேட
வேண்டியதை புறத்தே தேடுகிறார்கள்! பணமும்,பொருட்களும்,சொத்துக்களும்
சந்தோஷத்தைப் பெற்றுத்தரும் என்ற தவறான எண்ணத்தில், நேர்மையான
வழியிலோ, அல்லது நேர்மையற்ற வழிகளிலோ அவற்றைத் தேடித் தேடிச்
சேர்க்கிறார்கள்!
அடுத்து,
"நாம் படைக்கப்பட்டதே எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்
கத்தானா? யார் கண்டது?"
என்று பின்னட்டையில் கேள்வியெழுப்பி வியக்கிறார் ஆசிரியர். உண்மையில்,
நாம் படைக்கப்பட்டது எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்க
அல்ல! ஆனால், 'யார் கண்டது?' என்று ஆசிரியர் சொல்லி வியப்பது பொறுப்
பற்றதொரு குறிப்பாகவே தெரிகிறது; அதில் சலிப்பும், களைப்பும் தெரிகிறது!
ஏனெனில், இக்கேள்விக்கான பதிலை நாம் ஒவ்வொருவரும்தான் கண்டாக
வேண்டும், அதாவது, கண்டுபிடித்தாக வேண்டும்! ஒருவேளை, வாசகர்களின்
சிந்தனையைத் தூண்டுவதற்கான ஒரு உத்தியாக 'யார் கண்டது?' என்று
ஆசிரியர் குறிப்பிட்டிருக்கலாம்!
"நாம் படைக்கப்பட்டதே எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கத்
தானா?" எனும் ஆசிரியரின் கேள்விக்கான பதில் அக்கேள்வியிலேயே உள்ளது!
அதாவது அக்கேள்வியை சற்று மாற்றிக் கேட்பதன் மூலம் அதற்கான சரியான
பதிலைப்பெறலாம். ஆம், "நாம் படைக்கப்பட்டது எதற்காக?" என்பதுதான் அந்த
சரியான கேள்வி! சந்தேகமில்லாமல், "நாம் படைக்கப்பட்டது எதற்காக?" என்
பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்! நிச்சயமாக
வேறு எதற்காகவும் இல்லை! ஏனெனில், வாழ்க்கை ஒரு புதிர்! அதை நாம்
ஆரம்பத்திலேயே உணரவில்லையெனில், இறுதிவரை உணராமலேயே போய்
விடுவோம்!
அடுத்து,
"நம்முடைய அன்றாட வாழ்க்கை, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக்
கொள்ளும் போராட்டமாகவே இருந்து கழிந்துவிடுகிறது."
என்கிற ஆண்டாண்டுகாலமாகத் தொடர்கிற, நாம் அனைவருமே ஈடுபட்டுள்ள
நிதரிசனமான நடைமுறையை ஆசிரியர் குறிப்பிடுகிறார். உண்மையைச்
சொன்னால், இது நாமே நமக்கு உருவாக்கிக்கொண்ட பிரச்சினையாகும்! அதா
வது, வாழ்க்கையை என்னவென்று அறிந்து புரிந்து வாழ்கின்ற அணுகுமுறை
நம்மிடம் இருந்தால், அன்றாடவாழ்க்கை என்பது அரைத்த மாவையே அரைக்
கும் அடிமைத்தொழிலாக இருக்காது! அடிப்படைத்தேவைகள் உண்மையில்,
அடிப்படைத் தேவைகள் தான், அத்தியாவசியமான தேவைகள் தானே தவிர
அவையே முழுமையான, இறுதியான தேவைகள் அல்ல! பிரச்சினைகள் இங்
கிருந்துதான் ஆரம்பிக்கின்றன! அடிப்படைத்தேவைகளே அனைத்துத்தேவை
களும் என்பதாகக் கொண்டு வாழ்வதுதான் பிரச்சினையின் மூலவேர் ஆகும்!
ஆனால்,அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் விவகாரமென்பது
எவ்வாறு போராட்டமாக ஆகியது? வாழ்வின் அசலான மதிப்புகளை (Values)
நாம் உணர்ந்தறியாததினால், அடிப்படைத்தேவைகள் சுட்டும் பொருட்களும்,
அவற்றின் அளவும், எண்ணிக்கையும், தரமும் உயர்ந்த மதிப்புக்களாகக் கொள்
ளப்பட்டு கொண்டாடப்படும் பிறழ்ச்சி ஏற்பட்டது! அம்மதிப்புக்களை அடையும்
முனைப்பு சமூகத்தை பெரும் போட்டிக்களமாக மாற்றிவிட்டது! மேலும், முக்
கியமாக, உயிர்-வாழ்தல் என்பது அதனளவிலேயே அர்த்தமளிக்கும் ஒன்றோ,
நிறைவு தரும் ஒன்றோ அல்ல என்பதால், உயிர்-வாழ்தலை அலங்கரித்து
ஆடம்பரமாக மேற்கொள்ளத் தலைப்பட்டதன் விளைவாக; அடிப்படை வாழ்க்
கைத்தேவைகளையும், பிற பயன்பாட்டுத்தேவைகளையும் விட பரிவர்த்தனை
மதிப்பான பணம் அனைத்துக்குமான மாற்றாக, பதிலீடாக, இறுதி மதிப்பாகக்
கொள்ளப்படும் நடைமுறை வாழ்க்கையைப் போராட்டமாக மாற்றிவிட்டது!
அடுத்து,
"ஒரு சிருஷ்டிகர்த்தா நாம் நம்முடைய மிகச் சாதாரண அன்றாட வேலை
களை செய்துகொண்டிருப்பதற்காக மட்டுமே நமக்கு உயிர் கொடுத்திருப்
பானா என்று யோசிக்கவைக்கிறது. அல்லது, சிருஷ்டித்தவன் 'தன்னைப்
புகழ் பாட ஒரு கூட்டம் வேண்டும்!' என்று எண்ணி மனிதர்களை படைத்
தானோ என்றும் எண்ணத்தோன்றுகிறது."
எனக் குறிப்பிடும் ஆசிரியரின் கருத்து சிந்தனைக்குரியது என்பதில் சந்தேகம்
இல்லை! நிச்சயம், பேரறிவான சிருஷ்டிகர்த்தா, நம்முடைய மிகச் சாதாரண
அன்றாட வேலைகளை செய்துகொண்டிருப்பதற்காக மட்டுமே நமக்கு உயிர்
கொடுத்திருக்க மாட்டார்! அவ்வாறிருப்பின், நமக்கு சுய-உணர்வும், சிந்திக்கும்
திறனும் கொடுத்திருக்க வேண்டியதில்லையே! புழு பூச்சிகளிலிருந்து, எல்லா
விலங்குஜீவிகளும் தம்முடைய மிகச் சாதாரண அன்றாட வேலைகளைத்
தானே பல கோடியாண்டுகளாகச் செய்துகொண்டிருக்கின்றன! ஏற்கனவே
குறிப்பிட்டபடி, வாழ்க்கை என்பது ஒரு அற்புதப்புதிர் ஆகும்! அதை அன்றாட
நடைமுறை விவகாரமாகச் சுருக்கியது மனிதஜீவிகளாகிய நாம்தான்!
வெறுமனே சிலகாலம் உயிர்-பிழைத்திருந்துவிட்டு பிறகொரு நாள் மாண்டு
போவதற்காகப் படைக்கப்பட்டவனல்ல மனிதன்!
அடுத்து,
"சிருஷ்டித்தவன் 'தன்னைப் புகழ் பாட ஒரு கூட்டம் வேண்டும்!' என்று
எண்ணி மனிதர்களை படைத்தானோ என்றும் எண்ணத்தோன்றுகிறது."
ஆசிரியரின் இந்த என்ணம் 'கடவுள்' எனப்படும் இறுதி மெய்ம்மைக்கும் மனித
னுக்கும் ஏற்படவேண்டிய தொடர்பின் முக்கியத்துவம் குறித்த பிரச்சினையை
முன்வைப்பதாயுள்ளது! தொடர்ந்து இப்பிரச்சினையை அலசுவதற்கு முன்னர்,
இதற்குத்தொடர்புடைய ஆசிரியரின் இன்னொரு கருத்தையும் சேர்த்துக் காண்
போம்.
"ஆனால், ஒரு மிகப்பெரிய சிருஷ்டிகர்த்தா இத்தகைய சாமானியமான,தன்
புகழ் பாடும் ஒரு அற்பச்செயலுக்காக ஒரு சிருஷ்டியை செய்திருப்பார்
என்பதை நம்மால் நம்பமுடியவில்லை! நாம் வாழும் வாழ்க்கைக்கு
உண்மையில் அர்த்தம் அல்லது குறிக்கோள் என்று ஏதாவது இருக்கிறதா?"
முதலிடத்தில், இறையின் புகழ் பாடுவது என்பது ஒரு அற்பச்செயல் அல்ல;
மாறாக, அது ஒரு அற்புதச்செயல் ஆகும்! இரண்டாவதாக, அதை நாம் நம்ப
வேண்டாம், புரிந்துகொண்டால் போதும்! அதாவது,வாழ்வில் மிக முக்கியமாக
நாம் மகிழ்ச்சியையும், அமைதியையும், நிறைவையும் தான் தேடுகிறோம்!
நம்மிடம் எவ்வளவு பணமும்,பொருளும் இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி,
அமைதி, நிறைவு ஆகியவற்றை அவை பெற்றுத்தராது! ஏனெனில்,சந்தோஷம்,
அமைதி, நிறைவு, அர்த்தம் ஆகியவை உலகிலுள்ள எவ்வொரு பொருளையும்
சார்ந்திருப்பவையல்ல! பணம், பொன், பொருள், செல்வம், சொத்து, ஆகிய
எதுவும் இறுதியானதல்ல! மாறாக, எது முழுமையானதோ, இறுதியானதோ,
நித்தியமானதோ அத்தகைய மெய்ம்மை மட்டுமே மனிதனை நிறைவுசெய்யும்!
அத்தகைய மெய்ம்மையைத்தான் 'கடவுள், 'இறை', 'சிருஷ்டிகர்த்தா' என்றெல்
லாம் பாமரத்தனமாக நாம் குறிப்பிடுகிறோம்,கும்பிடுகிறோம்,கூத்தாடுகிறோம்!
எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த, எங்கும் நிறைந்த ஒரு சிருஷ்டிகர்த்தா
இருக்கிறாரா, இல்லையா என்கிற சர்ச்சைகளுக்கு அப்பால், ஒரு மாபெரும்
பிரபஞ்சம் இங்கே இருக்கிறது; அதில் நாமும் இருக்கிறோம்! பிரபஞ்சம் ஏன்,
எதற்காக, எந்த நோக்கத்திற்காக இருக்கிறது? அதில் நாம் ஏன் இருக்கிறோம்,
அதாவது, உண்மையில் 'நாம்' யார், எத்தகைய மெய்ம்மை? நமது வாழ்வின்
குறிக்கோள், இலக்கு, அர்த்தம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதொன்றே நமது
ஒரே சீரிய தொழிலும், பிரதான வாழ்க்கைச் செயல்பாடும் ஆகும்!
இப்பிரபஞ்சம் 'கடவுளால் படைக்கப்பட்டது' என்பதும், 'இல்லை, தானே தோன்
றியது' என்பதுமான அனுமானங்கள், ஊகங்கள், புராணிகங்கள், கோட்பாடுகள்,
வாதங்கள் ஒருபுறமிருக்க, பிரபஞ்சத்தின் உண்மையை அறிவதற்கு மனிதஜீவி
களாகிய நமக்கு இருக்கும் ஒரே கருவி, ஆயுதம், உணர்வு (Consciousness)
மட்டுமேயாகும்! மேலும், சிருஷ்டியின் ரகசியத்தை மட்டுமல்லாமல், சிருஷ்டி
கர்த்தாவின் (கடவுளின்) ரகசியத்தையும் அறியக்கூடிய ஒரே ஜீவி மனிதன்
மட்டுமே! இன்னும் மனிதனின் ரகசியத்தை (உண்மையை) யும் வெளிப்படுத்தக்
கூடிய அதிசய மெய்ம்மை மனித-உணர்வே ஆகும்! அதாவது, சிருஷ்டிகர்த்தா
வின் ரகசியத்தை அறியக்கூடிய மனிதனின் விசேடத்துவம் என்னவெனில்,
அவனும் அந்த இறை-மெய்ம்மையில் பங்குபெறுபவனாகிறான் என்பதேயாகும்!
பாமரத்தனமான கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ; நிச்சயம் இப்பிரபஞ்சம்
தோன்றுவதற்குக் காரணமான ஒரு அம்சம், பண்பு, அல்லது, மூலமெய்ம்மை
ஒன்று இருந்தாகவேண்டும்! அம்மூலமெய்ம்மையை மனிதனால் உணரவும்
அறியவும் இயலும் எனும் பட்சத்தில், நிச்சயம் அந்த மூலமெய்ம்மைக்கும்,
மனிதனுக்கும் ஒரு ஒற்றுமை, அல்லது, ஒத்த-தன்மை இருந்தாகவேண்டும்!
ஆம்,எதுவொன்றையும் அறிவதற்கான ஒரே கருவியாக மனிதன் பெற்றிருப்பது
உணர்வே என்றால், அதே உணர்வைக்கொண்டுதான் கடவுளையும் அறிந்தாக
வேண்டும்! அதாவது, மனித உணர்வின் பிடிக்குள் அகப்படுபவராக கடவுள்
இருப்பாரெனில், நிச்சயம் அவர் உணர்வுமயமானதொரு மெய்ம்மையாகத்தான்
இருந்தாக வேண்டும்! ஆம், உணர்வு தான் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள
அந்த ஒத்த-தன்மை! ஆனால், இருவரும் உணர்வின் இருவேறு முனைகளில்
உள்ளனர்! மனிதன் உணர்வின் தொடக்க நிலையிலும், கடவுள் உணர்வின்
முழுமையாகவும் உள்ளனர்! இவ்வுண்மையைத்தான், "கடவுள் மனிதனைத்
தன் சாயலில் படைத்தார்" என்பதாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது!
'கடவுள்' என்று சொன்னாலும், அல்லது மூல-சக்தி, ஆற்றல் என்று எப்படிச்
சொன்னாலும்; அனைத்திற்கும் காரணமான மகத்துவமானதொரு மெய்ம்மை,
உண்மை இருந்தாகவேண்டும்!
கடவுளை வழிபடவும், அவரது புகழ் பாடவும்தான் அவர் மனிதனைப் படைத்
தாரோ இல்லையோ, நிச்சயம் "இப்பூமியில் பல்கிப்பெருகி, பூமியை நிரப்பி,
அதைக்கீழ்ப்படுத்துவதற்காக..." அல்ல! இதைச்செய்வதற்கு, 'பாக்டீரியா' எனப்
படும் நுண்ணுயிரிகள் உள்ளன! அதே வேளையில், யாதொரு உருப்படியான,
உன்னதமான குறிக்கோளும், இலக்கும் இன்றி, பூமியின் வளங்களைச் சுரண்டி
தின்று, சுற்றுச்சூழலை வெகுவாக மாசுபடுத்தி இப்பூமியை அழித்துவிடும் அள
விற்கு மனித இனமானது ஏற்கனவே விஷக்கிருமிகளைப்போல பல்கிப்பெருகி
யுள்ளது!
மனிதன் கடவுளை வழிபடுகிறானோ, அவரது புகழ்பாடுகிறானோ இல்லையோ;
சிற்றுணர்வு கொண்ட அவன் தன்னை வழிபடுபவனாகவும், தன் புகழ் பாடுபவ
னாகவும் அகந்தையில் ஆழ்ந்திருக்கிறான்! உலகெங்கும் மக்கள் திரளானது
அரசியல் தலைவர்களையும், சினிமா நட்சத்திரங்களையும், அல்லது விளை
யாட்டு வீரர்களையும், அல்லது, வேறு பிரபலங்களையும் வழிபடும் போக்கு
நிலவுகிறது! சிற்றுணர்வாளனான மனிதன் தன்னை வழிபடுவதை விட
பேருணர்வான கடவுளை வழிபடவும், புகழ் பாடவும் செய்வது மேலானதாகும்!
ஆனால், கடவுளை வழிபடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல! அதாவது,
கற்களையும், சிலைகளையும், வேறு பொருட்களையும் மக்கள் மிக எளிதாக
அணுகவும், வழிபடவும் முடியும்! அதாவது, ஒரு துரும்பைக் கூட ஒருவன்
கடவுள் எனப் பாவித்து அதை வழிபட முடியும்! ஆனால், உண்மையான
கடவுளை அணுகுவதற்கு, ஒருவன் உண்மையானவனாக இருக்கவேண்டும்!
உண்மையாக இருப்பது என்றால், மனிதனாவன் மனிதனுக்குரிய இயல்பில்,
அதாவது, உணர்வாய்,உணர்வுக்கு வந்தவனாய் இருத்தல்வேண்டும்! அப்போது
தான், அவனால் பேருணர்வாகிய கடவுளை அணுகவும், அடையவும் இயலும்!
ஆகவேதான், "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிற
வர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்"
என்று இயேசு அறிவுறுத்துகிறார்! இன்னொரு இடத்தில், "தேவன் மரித்தோ
ருக்குத் தேவனாயிராமல் ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்" எனவும்
அவர் சொல்லியுள்ளார்! உணர்வு இருந்தும் உணர்வாயிராமல் இருக்கும் அகம்
செத்தவர்களை, உணர்வற்றவர்களைத்தான் இயேசு மரித்தோர் என்கிறார்;
இவர்களுக்கு மாறாக, உணர்வுள்ளவர்களையே அவர் ஜீவனுள்ளோர் என்று
குறிப்பிடுகிறார்!
ஆசிரியர் வேங்கடம் தனது நூலில் காட்டியுள்ள சூஃபி ஞானி, ஹாதித் குட்ஸி
யின் மேற்கோளானது 'எதற்காகப் படைக்கப்பட்டான்?' என்பதற்கான பதிலை
மிக அழகாகச்சொல்கிறது! "நான் மறைத்துவைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷம்!
என்னை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.ஆகவே நான் உங்களைப்படைத்து
இருக்கிறேன்!" என்று கடவுளே சொல்வது போன்று குட்ஸி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கடவுளுடைய சந்தோஷத்திற்காகவே இந்த பிரபஞ்சம் இயங்குகிறது!"
எனும் சூஃபிக்களின் புரிதலும் மிகப்பொருத்தமாகவே உள்ளது! "கடவுளுடைய
சந்தோஷம் என்பது அவர் படைத்த படைப்புக்களைச் சார்ந்தது அல்ல! அவர்
படைப்புகள் அனைவரும் கடவுள் சந்தோஷம் அடையும் விதமாக எப்படி
விளையாடி பரிசைப்வெறுகிறார்கள் என்பதுதான் வாழ்க்கை!" என்று சூஃபிக்கள்
சொல்கிறார்கள்.
உண்மையில், இப்பூமியின் மேற்பரப்பிலுள்ள விஷயங்களுக்கும்,பொருட்களுக்
குமான மதிப்பு என்பது இருக்கவே செய்கிறது! எனினும், பூமிக்கடியில் மறைந்
துள்ள நிலக்கரி, எண்ணை, உலோகங்களுக்கு இன்னும் அதிக மதிப்பு உள்ளது;
அதிலும், அனைத்து உலோகங்களிலும் அதிக மதிப்புடையதாக தங்கம் விளங்
குகிறது! இன்னும், வைரம் போன்ற விலை மதிப்புள்ள கற்களும் பூமிக்கடியில்
தான் மறைந்துள்ளன! அழகிய முத்துக்கள் கடலின் ஆழத்தில் மறைந்துள்ளன!
உண்மையில், இப்பொருட்கள் யாவும் மனிதனால் மதிப்பேற்றப்பட்டு விலை
குறிக்கப்பட்ட இயற்கையான பொருட்கள் ஆகும்!
பொருட்களைப் பொக்கிஷங்களாகக் கருதும் மனிதர்கள் இருக்கிறார்கள்; அவர்
களுக்கு மத்தியில்,இந்த இயற்கை,இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சம் எங்கிருந்து,
எவ்வாறு தோன்றியது என்பதற்கான விடையை; அதாவது, படைப்பில் உள்ள
டங்கியிருக்கும் மிகச் சிக்கலான அறிவைக் கண்டு வியக்கும் சிந்தனையாளர்
கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் அவரவர் வழியில் (அணுகு முறையில்)
இறுதியான அறிவை, அல்லது, அந்த மூல-அறிவை அறிவதற்காக, வெளிக்
கொணருவதற்காகத் தங்களைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்! அதாவது,
சாதாரண சராசரி மனிதர்கள் பொருட்களைப் பொக்கிஷமாகக் கருதுகிறார்கள்,
சிந்திக்கும் மனிதர்களாகிய, தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் அனைத்தையும்
விளக்கும் பேரறிவைப் பொக்கிஷமாகக் கருதுகிறார்கள்! இவர்களில் பலர்
உண்மையில் "மறைத்து வைக்கப்பட்டுள்ள பொக்கிஷமான" கடவுளைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!
முடிவாக, ஆசிரியர் வேங்கடம் அவர்கள் தன் நூலின் பின்னட்டையில் குறிப்
பிட்டிருந்த ஒரு கேள்விக்கான பதில் குறித்துப்பார்ப்போம்.
"நாம் வாழும் வாழ்க்கைக்கு உண்மையில் அர்த்தம் அல்லது குறிக்கோள்
என்று ஏதாவது இருக்கிறதா?"
இதற்கு பதில் 'இருக்கிறது!' என்பதுதான். இக்கட்டுரை முழுவதும் அதற்கான
சாட்சியமே ஆகும்! நல்லது, பல வருடங்களுக்குப்பிறகு, சிந்தனைக்கும், கேள்
விகளுக்கும் முக்கியத்துவம் தரும் "இதற்கா இத்தனை ஓட்டம்" நூலைத்
தந்தமைக்கு ஆசிரியர் திரு. வேங்கடம் அவர்களுக்கு நன்றி!
மா.கணேசன்/நெய்வேலி/11-05-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment