Saturday, 23 April 2016

தன்னை அறிதல்



          அனைத்து அடையாளங்களும் மனிதனைக்
          கட்டிப்போடுபவையே, மட்டுப்படுத்துபவையே
          கட்டுப்படுத்துபவையே!

ஒருவர்   இன்னாருடைய மகன், அல்லது மகள்;  சொந்த ஊர் இது;
இன்ன  குலம்,  கோத்திரம்,   மதம்,  தாய்மொழி;  இன்ன தொழில்
செய்கிறார் . . .   போன்ற   இன்ன பிற யாவும்   ஒருவரைப் பற்றிய
மேலோட்டமான    விபரங்களே தவிர    அவை      ஒரு மனிதனின்
கருவான,      அசலான மையத்தைத் தொடுவதில்லை,  விவரிப்ப
துமில்லை!      இவையெல்லாம்,     சமூகத்தில்     ஒரு    மனிதனை
இன்னொரு   மனிதனிடமிருந்து நடைமுறை காரியங்களுக்காக
பிரித்தறிவதற்கு   உதவுகிற  மேற்புற அடையாளங்கள் மட்டுமே!
இவற்றில்   ஒரு மனிதன்  தன்னையும்,  தனது வாழ்க்கையையும்
முதலீடு செய்வதும்,    இவற்றின்   மீது    நிறுவ  முயல்வதும்   சுய-
அழிவிற்கான அடிப்படைகளேயாகும்!

ஒரு   மனிதன்   குறிப்பிட்ட   ஒரு துறையில் நிபுணனாக, வல்லுன
னாக, திறமை வாய்ந்தவனாக இருக்கலாம். ஆனால், திறமைகள்
யாவும்   மேற்புறத்  தேவைகளுக்குச் சேவை செய்திடுகிற கருவி
களைப்போன்றவையே! அவை ஒருபோதும் அசலான மனிதனை
வெளிக்கொணர உதவிடாது!

அதேவேளையில்,   ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  ஒரு அசலான
மனிதன்  உள்ளான்;   ஒரு  'ஆன்மா '  உள்ளது   என்பவை   யாவும்
அழகிய   கட்டுக்கதைகளே!     அக்கதை களினால்,    ஒருவருக்கு
யாதொரு  பயனும்  விளையாது!    உங்கள் வீட்டுத்  தோட்டத்தில்
அரிய    பொக்கிஷங்கள்   அடங்கிய புதையல் உள்ளது;   ஆனால்,
அது  பற்றி  உங்களுக்கு   எதுவுமே தெரியாது என்றால்  அதனால்
உங்களுக்கு      எவ்வளவு    பயன்    விளையுமோ,     அதே    அளவு
பயனைத்தான்    இந்த  அழகிய  கட்டுக்கதைகளும்  உங்களுக்கு
அளித்திடும்!

சாதாரணமாக,     போகிற   போக்கில்,       சிலர்       சொல்வதுண்டு:
"ஒரு   சமுதாயம்   பலதரப்பட்ட,   பலவகைப்பட்ட வித்தியாசமான
நபர்களைக்    கொண்டே   அமைகிறது!"    'பலதரப்பட்ட',     மற்றும்
'வித்தியாசமான'     நபர்கள்-- அதாவது,   ஒழுக்கக்கேடானவர்கள்,
அற்பர்கள்,   ஒட்டுண்ணிகள்,  மூடர்கள்,  பொய்யர்கள், திருடர்கள்,
பாவணைக் காரர்கள்,      எத்தர்கள்,    போலிகள்,    பலவகைப்பட்ட
தொழில்களைச்    செய்பவர்கள்,    பெரும் புள்ளிகள்,   சாதாரணர்,
சாமானியர் . . . .   ஆகியோர்!?     ஆக,    எவ்வகையிலும்,  எவ்வொரு
சமுதாயமும்   (அசலான) மனிதர்களைக் கொண்டுஅமைவதாகத்
தெரிவதில்லை!  அப்படியொரு   வரலாறு  ஏதும் இருந்தால்  தானே
அதை உதாரணமாகக் கொண்டு பேச  இயலும்?

சிலர்,    அல்லது  பலர்,    ஒரு  குறிப்பிட்ட   துறையில்,   திறமைசாலி
களாக   விளங்குவதைக்கொண்டு     'அகந்தை'யுடன்,      'ஆணவத்'
துடன்  நடந்து  கொள்வதுண்டு!  அவர்கள்  ஆணவம் கொள்வதற்கு
'திறமை'   என்கிற  அடிப்படையாவது   உள்ளது!  ஆனால், எவ்விதத்
திறமையும்  இல்லாமல் ,  யாதொரு  சாதனையும் செய்யாமலேயே
நம்மில்   பலர்  செறுக்கும்,   இறுமாப்பும்,    தற்பெருமையும்  கொள்
வதை  என்னவென்று சொல்வது?  இவர்களை எந்தவகைப்பாட்டில்
சேர்ப்பது?

பரவலாக   'மனிதர்கள்'   பிறருடைய  சொற்களை அண்டியே  வாழ்
கிறார்கள்!   பிறருடைய கருத்துக்கள், கொள்கை கோட்பாடுகளின்
நிழல்களிலேயே   வாழ்கிறார்கள்!   பிறருடைய    அனுபவங்களைச்
சிலாகித்துக் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்!

ஏதோவொரு       வகையில்,     "மொழி"   யானது,         எல்லோரையும்
சமப்படுத்திவிடுகிறது! நம்முடைய  மொழித்திறன் அலாதியானது!
நம்முடைய   பேச்சுகள்  நம்முடைய  "உள்-நோக்கங்களை"  சாதுர்ய
மாக  மறைத்து  விடுவதாயுள்ளது!     இதனால்,     "ஓநாய்"களையும்,
"செம்மறியாடு" களையும் பிரித்தறிய இயலாமல் போய் விடுகிறது!
இல்லாவிட்டால், செம்மறியாடுகள் நனைவது குறித்த ஓநாய்களின்
வஞ்சகப் பேச்சை    "அக்கறை"     என்பதாக      எடுத்துக் கொள்ளும்
"அரசியல்-அறியாமை"   செம்மறியாடுகளுக்கு   எளிதில்    சாத்திய
மாகுமா?

தேர்ந்தெடுக்கப்பட்ட    சொற்களை       அழகிய     வாக்கியங்களில்
அமைத்து பரிமாறப்படும் இனிய மொழியானது, கள்ளதீர்க்கதரிசி
களையும்,     போலி-ஞானிகளையும்     காட்டிக்  கொடுப்பதில்லை!
மேலும்,    எவ்வொரு   மொழியின் அகராதியும் எப்போதும் திறந்தே
கிடப்பதால்,        படித்தவர்களும்,      படிக்காத       சாதாரணர்களும்,
சாமானியர்களும்,      எல்லோரும்      பல்வேறு   சொற்களைப் பயன்
படுத்துவது           சர்வ- சாதாரண     விஷயமாக   உள்ளது!     மேலும்,
பேச்சுரிமை, கருத்துச்சுதந்திரம் ஆகிவற்றைக்காக்க  சட்டங்களும்
உள்ளதால்;   காற்று மண்டலம்   முழுவதும் 'வெட்டி'-விவாதங்களில்
உதிர்க்கப்படும்  அர்த்தமற்ற   வெற்றுச் சொற்களால் நிரப்பப்பட்டு
சிந்தித் தறியாத           மனித-மனங்களைப்      போலவே     பெரிதும்
மாசடைந்து   விட்டது   எனலாம்!    வருங்காலங்களில்,    'மன-மாசுக்'
களைக்    குறைக்கும்  விதமாக,   அர்த்தம்   அறியாமல் சொற்களை,
அல்லது     மொழியைப்   பயன்-படுத்தக்கூடாது      என    "சொற்கள்-
தடைச்சட்டம்"     அல்லது     "மொழி-தடைச்சட்டம்"    கொண்டு வரப்
படலாம்!

இச்சிறு மொழி ஆராய்ச்சியின் முடிவு என்னவென்றால், மனிதர்கள்
எவ்வொரு    மொழியையும்,    அதன்     அனைத்துச்  சொற்களையும்
பயன்படுத்தலாம்.    ஆனால்,  அனுபவமும்,  அர்த்தமும், மொழியின்  
வழியாகப்    பெறப்படுவதில்லை.    நாம்  செய்திகளையும்,   கருத்து
களையும்  பரிமாறிக்  கொள்ளலாமே  தவிர அர்த்தத்தையும், அனுப
வத்தையும் பரிமாறிக்கொள்ள இயலாது!

ஒரு  பொருளை,  அல்லது   ஒரு  விஷயத்தை   புறத்தேயிருந்தவாறே
புரிந்து  கொள்வதற்கும்   உள்ளேயிருந்து    புரிந்து    கொள்வதற்கும்
மாபெரும்  வித்தியாசம்  உள்ளது!  ஒரு அழகிய மாளிகையை அதன்
உள்ளேசெல்லாமல், வெளியேயிருந்துமட்டுமே பார்த்துவிட்டு அதை
முழுமையாகக்    கண்டு  விட்டதாகக்   கொள்ளமுடியுமா? " தன்னை
அறிதல் "   என்பதும் அப்படித்தான்!

ஒரு மனிதன், "தான்" என்று தன்னை அறிவது தனது உடலைத்தான்!
ஆகவேதான்,  அதை "உடல்-மைய அடையாளம்" என்று இங்கு குறிப்
பிடுகிறோம். இதன் அர்த்தம் மனிதர்கள் தங்கள் உடலை அவ்வளவு
முழுமையாக     அறிந்துள்ளார்கள்,    புரிந்துள்ளார்கள்    என்பதல்ல!
மாறாக,   மனிதர்கள்  தங்கள்  உடலைப்பற்றி அறிந்துள்ளதும் மிகக்
குறைவே, மேலோட்டமானதே! இவ்விடத்தில், மருத்துவ விஞ்ஞானம்
வழியாக நாம் அறிந்துள்ள 'உடல்-கூற்றியல்' மற்றும் உடல் எவ்வாறு
இயங்குகிறது  என்பதைப் பற்றிய  விலாவாரியான அறிவைக் குறிப்
பிடவில்லை!   இந்த   அறிவு  'உயிர்-வாழ்தலு'க்கு  உதவுமே யொழிய
அசலான வாழ்தலுக்கு உதவிடாது!

உடலைப்பற்றி   நாம்  அறிந்து கொள்ளவேண்டியது, "உடல் என்றால்
என்ன?  உடலுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு, உறவு என்ன?"  "உடல்
ஏன்,   எந்த  நோக்கத்திற்காக உயிர்-வாழத் துடிக்கிறது?"   என்பவை
குறித்தே ஆகும். ஆனால்,பொதுவாக,சாதாரணமாக   இக்கேள்விகள்
எதுவும் மனிதர்களுக்குத் தோன்றாது! ஒருவகையில், இக்கேள்விகள்
ஆபத்தானவை -  எவ்வாறென்றால்,   இக்கேள்விகள்    உடலிலிருந்து
மனிதனைப் பிரித்துவிடும்!   இன்னொரு  வகையில், இக்கேள்விகள்
ஒருபோதும் மனிதர்களின் மனதில் எழாது  - ஏனென்றால், உடலுடன்
மனிதன் கொண்டிருக்கும் பிணைப்பு அத்தகையது;   கேள்வியின்றி
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அதீதப் பிணைப்பு!

மேலும்,  பொதுவாக "மனம்" பற்றிய மனிதர்களது புரிதலும் அலாதி
யானதே!    அதாவது,     "மனம்"   தான்  "தாம்"   என்பதும்,   "மனிதன்"
என்பதும்   மனிதர்களுக்குத் தெரியாது!  அதாவது,  மனித உடலுக்கு,  
இரண்டு  கைகளும் ,    இரண்டு   கால்களும்       உள்ளது      போலவே,    
'உடலாகிய' தமக்கு ஒரு 'மனமும்' உள்ளது என்பதாகவே மனிதர்கள்
எடுத்துக்கொண்டுள்ளார்கள்!  இதன் தொடர்ச்சியாக, 'மனம்'  இருப்
பதே  உடலுக்குச் சேவை  செய்வதற்காகத்தான்;  உடலின் நலனைப்
பேணிக்காப்பதற்குத்தான் என்பது தவிர்க்கவியலாத விதியாகிறது!

ஒரு மனிதன் "நான்" என்று குறிப்பிடுவது, தனது உடலை பிரதி நிதித்
துவம் செய்திடும் ஒரு பிரதிநிதியாக,   ஒரு முகவராகத் தானே தவிர
உண்மையில் தான் ஒரு "மன-ஜீவி" என்கிற மையத்திலிருந்து அல்ல!
மேலும்,   "நான்"  என்று  சொல்வது மனிதனின் உடலல்ல; ஏனெனில்,
மனிதனைத்தவிர வேறு எந்த (விலங்கு)ஜீவியும் "நான்" என்று சொல்
வதில்லை!     அடுத்து,    மனித-உடலில்     மனம்      தோன்றியதற்குக்
காரணம்,  உடலைப்   பிரதிநிதித்துவம் செய்வதற்காகவோ  அல்லது
உடலுக்கு    ஊழியம்    செய்வதற்காகவோ   அல்ல!         விலங்கு-ஜீவி
களுக்கும் , மனிதஜீவிக்கும் உள்ள 'ஒரே' வித்தியாசம்,   ஒரு  விலங்கு
ஜீவி தன்னைத்தானே (தனது உடலை) பிரதிநிதித்துவம் செய்யாமல்
(அப்படிச் செய்வதற்கு யாதொரு வழிவகையும் இல்லாததால்)    அது
நேரடியாக முண்டுகிறது, முனைந்து நிற்கிறது;  ஆனால், மனித-ஜீவி
களோ  தங்களது  முண்டுதலுக்கு  முன்புறமாக "நான்" என்கிற    ஒரு
"ஒட்டுச் சீட்டை"    ஒட்டியுள்ளோம்  என்பது  மட்டும்  தான்!   அதாவது,
தனது  உடலுக்கு முன்புறமாக, "நான்" என்று எழுதப்பட்ட ஒரு ஒட்டுச்
சீட்டாக "மனமாகிய மனித-ஜீவி" தொங்கிக்கொண்டிருக்கிறான்!

மனிதன்  உண்மையிலேயே  'மனித'   வாழ்க்கையை  வாழ வேண்டு
மெனில், அவன் இரண்டுபிரதானச்சிக்கலிலிருந்து தன்னைத்தானே
விடுவித்துக்கொண்டாக வேண்டும்! முதல்பிரதானச்சிக்கல் என்பது
'அடையாளச் சிக்கல்' ஆகும். இரண்டாவது பிரதானச்சிக்கல் என்பது
'பிரதி நிதித்துவச்சிக்கல்' ஆகும்.  உண்மையில்,  இவ்விரண்டும் ஒரே
சிக்கலின் இரு முகங்களே எனலாம்!   மனம்   பக்குவப்படாத   அதன்
தொடக்ககாலத்தில், "ஏன்?" என்ற கேள்வி யின்றி அது உடலை 'தான்"
என்று வரித்துக்கொண்டுவிட்டது! இவ்வாறு,தொடக்கத்தில் ஏற்பட்டு
விட்ட  'உடல்-மைய அடையாளம்'   இறுதி வரை  தொடர்வது  என்பது
ஒரு ஆச்சரியமான 'புதிர்' தான் எனலாம்!

"முதல் கோணல் முற்றும் கோணல்"   என்பதற்கு    இணங்க மனிதன்
தன்  வழியை,    வாழ்க்கையை     தொடக்கத்திலேயே     தவற விட்டு
விட்டான்! மனதின் "தலைமை"யை உடல் பறித்துக்கொண்டுவிட்டது.
உடலின்     நச்சரிப்பான   தேவைகளையும்,      கோரிக்கைகளையும்,
சௌகரியங்களையும் நிறைவு செய்வது தான் மனதின், மனிதனின்
தலையாய     கடமையாகவும்,   வாழ்க்கையாகவும்    மாற்றிவிட்டது!
'உடலை'  தன் மைய - அடையாளமாகக் கொண்டுவிட்ட பிறகு மனம்
அல்லது  மனிதன்   தன்   'அசலான அடையாளத்தை'  அறிவதற்கான
யாதொரு  அடிப்படையும்,  தேவையும்    இல்லாமல் போய்விடுகிறது!

உண்மையில்,   "தன்னையறிதல்"  என்பது    ஒருவகையில், இயற்கை
மீறியது  எனலாம்!  அதன்  அவசியத்தையும், முக்கியத்துவத்தையும்
எந்தச்   சமூகமும்   சொல்லித் தருவதில்லை;   அது   எவ்வொரு சமூக,
கலாச்சார,   பண்பாட்டு  விழுமியங்களின் பட்டியலிலும்   இடம்பெறு
வதில்லை! எந்த 'உயர்' கல்வி, பொறியியல், தொழில்நுட்ப நிறுவனத்
திலும்     அது    கற்பிக்கப் படுவதில்லை!         ஏனெனில்,     அவற்றின்
"வாழ்க்கை பார்வை" யும்,      'உடல்-மைய அடையாளத்தில்'     ஊறிய
வையே!  மேலும்,    ஒரு   தனிமனிதனை விட   எவ்வொரு     சமூகமும்
அதன்   நிறுவனங்களும்  மேலானவையோ,  மெய்ம்மைக்கு நெருக்க
மானவையோ அல்ல!

ஒருவகையில்,     உடல்-மைய அடையாளம்    என்பது     இயல்பானது;
ஆனால்,   அதையடுத்த பிற அடையாளங்கள் யாவும் சமூகத்தினால்
வழங்கப்படுபவையும்,  சுமத்தப்படுபவையும்; மேலும், சமூகத்துடன்
தகவமைதலின்  வழியே  மனிதர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டவை
யுமே ஆகும்!  ஆனால், மனிதன் தன் உண்மையான அடையாளத்தை
உணர்ந்தறியாத வரை,    அனைத்து   அடையாளங்களும் மனிதனை
கட்டிப்போடுபவையே, முடமாக்குபவையே, கட்டுப்படுத்துபவையே!

இப்போது நாம்,  பிரதி நிதித்துவச் சிக்கலுக்கு   வருவோம்.  உண்மை
யில்,     மனம்   'எதை'   அல்லது   'யாரை'    பிரதி நிதித்துவம் செய்திட
வேண்டும்?    மனம்  முறையாக   'எதையாவது'       பிரதி  நிதித்துவம்
செய்திடவேண்டுமென்றால், அது தன்னைக்கடந்த உயரிய, மேலான
அல்லது       இறுதியான  "மெய்ம்மையைத்"  தான்   பிரதி நிதித்துவம்
செய்திட வேண்டும்.   ஏனெனில்,    அது தான்    பரிணாம     ரீதியாகச்
சரியானது!   ஆனால்,  அதற்குமுன்,    மனமானது  முதலில் தன்னைத்
தான் பிரதி நிதித்துவம் செய்திட வேண்டும்.   அப்போது தான்,  மனம்
என்பது    தன்னளவில்  ஒரு   சுயமாக,  ஒரு  மெய்ம்மையாக   எழவும்,
தன்னை  நிறுவிக் கொள்ளவும் முடியும்!  இதன் அர்த்தம், மனமானது
முதலில் தன்னை நோக்கி விழித்தாக வேண்டும்!  அதாவது, மனிதன்
தனது     'உடல்-மைய அடையாளத்தை'    விலக்கி   தான் வேறு, உடல்
வேறு என்ற புரிதலை அடைவதும்,  மனம் விழிப்பதும் ஒரு சேர நிகழ்
வதாகும்! இது நாள் வரை, உடலுடன் அடையாளப்படுத்திக்கொண்டு
உடலை பிரதி நிதித்துவம் செய்து வந்த மனமானது தன்னை நோக்கி
விழித்ததும், முதன் முறையாக, மனிதன் மனிதனாக, ஒரு "மன-ஜீவி"
யாக ஆகிறான்!   அதாவது,   இதுவரை,   தனது  'உடலை' மையமாகக்
கொண்டிருந்த மனிதன்,    முதன் முறையாக, தனது  'மனதை' மைய
மாகக் கொள்கிறான்!

அதன் பிறகு,  மனமானது  தனது  அசலான பணியை மேற்கொள்ளத்
தொடங்கிவிடும்!   ஆம்,   "மெய்ம்மை-நாட்டம்"  தான் மனதின் தலை
யாய,  அசலான பணியாகும்!  ஆம்,  அறிதல் , தெளிதல், புரிதல்  ஆகி
யவைதான்   மனதின்    பிரதான    நோக்கமாகும்!        ஒரு வகையில்,
'மெய்ம்மை"யை   அறிவது   தான்   மனமாகிய    மனிதனின் இலக்கு
என்ற போதிலும்,   'மெய்ம்மையை  அறியும்  "தான்" யார்?'  என்பதை
அறியாமல்,   மெய்ம்மையை  அறிய முடியாது!    ஏனெனில்,    மெய்ம்
மைக்கும்,  மனிதனுக்கும்  நெருங்கிய  தொடர்பு  உள்ளது!  இவ்விடத்
தில்தான்   "நான் யார்?"   எனும்   கேள்வி   அதி முக்கியத்துவம்  பெறு
கிறது! மனிதன் முதலில் தன்னை அறியாமல் உலகையும்அதிலுள்ள
பொருட்களையும்,   விஷயங்களையும், நிகழ்வுகளையும் அறிவதால்
என்ன பயன்!   அறிதலுக்கான அடிப்படை  இல்லாமல் அந்த அறிதலி
னால் மேலோட்டமான பயன்கள் கிட்டலாம்;   ஆனால்,     ஒரு போதும்
"அர்த்தம்" கிட்டாது! அர்த்தமில்லாத  'வாழ்க்கை'  மனித-தரத்திற்குக்
கீழானது.   விலங்கு-ஜீவிகள்   உணவைத் தவிர   வேறு  எந்த அர்த்தத்
தையும் தேடுவது இல்லை!     அவைகளுக்கு    உயிர்- வாழ்தல்    தான்
ஒரே அர்த்தம்.   ஆனால்,  மனித ஜீவிக்கோ,  "அர்த்தம்"   தான்     உயிர்,
வாழ்க்கை, யாவும்!

       யாதொரு அடையாளத்திலிருந்தும் தன்னைக்
       காணாதிருக்கும் நிலையிலேயே "தன்னையறிதல்"
       தொடங்குகிறது; ஒருவனிலிருந்து அசலான மனிதன்    
       எழத் தொடங்குகிறான்!

மா.கணேசன்/ 21.04.2016

2 comments:

  1. நமக்கு உடலுக்கும் சம்மதம் உண்டு உடல் இல்லை என்றால் நீ இல்லை உன் மூளை என்ன பார்கிறதோ கேட்க்க றதோ அது தான் உன்னை வடிவம் அமைத்து கொண்டது

    ReplyDelete

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...