
உங்களைப்பற்றியும், உங்கள் வாழ்க்கையைப்
பற்றியும் நல்லவிதமாகவும்,நேர்மறையாகவும்
சொல்லவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்!
ஆம், விழித்துக்கொள்ளுங்கள்!
வாழ்க்கையைக் கண்டுபிடியுங்கள்!
அது, இந்தப்பிரபஞ்சத்தையே புரட்டிப்போடும்!
புத்துருவாக்கம் செய்திடும்!
நீங்கள் பிரபஞ்சத்தின் உச்சியில் இருப்பீர்கள்!
<>
ஆனால், நீங்கள் வாழ்க்கையை இன்னும்
கண்டுபிடிக்கவேயில்லை, ஆகவே,
நீங்கள் வாழ்ந்து வருகின்ற வாழ்க்கை
எத்தகையது என்பதை அதிகச்சிரமமின்றி
தெரிந்து கொள்ளுங்கள்:
நீங்கள் எவ்வளவுதான் விழுந்து புரண்டு
காரியமாற்றினாலும்,எவ்வளவு
சம்பாதித்தாலும், சொத்துக்களைச்
சேர்த்தாலும், சுகபோகத்தில் மிதந்தாலும்,
சாதனைகள் பல புரிந்தாலும், எட்டுத்திக்கும்
புகழ் பரப்பினாலும் உங்களது வாழ்க்கை
வெறும் உயிர்பிழைத்தலே! அல்லது
அதிகப்பட்சம், உயிர்-பிழைத்தலின் மிகப்
பிறழ்ச்சியானதொரு அலங்கரிக்கப்பட்ட
வடிவமே!
<>
வேற்றுக்கிரகவாசிகளின் ஒரு ஆய்வறிக்கை:
!?@#$()*)(^^)_*_*$%&#@#?!$@@#!?))((
(*)*%^#&&%^**!@#)(*__*&^$%#&^*#$@^&
$%$&&*)(_+_))(((_(*&^%$#@!&*&>>!!!?
மொழியாக்கம்:
பூமிக்கிரக வாசிகள் தங்களது உளவியலில்
மிகவும் பின் தங்கியவர்களாகவே உள்ளனர்!
அவர்களுடைய தலையாய பிரச்சினை தலைப்
'பொடுகு' தான்என்பதாகத் தெரிகிறது! மேலும்
அவர்கள் எந்த நிறுவனத்தின் பற்பசையைப்
பயன் படுத்துவது என்பது குறித்து பெரிதும்
குழப்பமுற்றிருக்கிறார்கள்! மொத்தத்தில்,
அவர்கள் என்னத்தை உண்பது, உடுப்பது,
குடிப்பது என்கிற கவலையில் சதா ஆழ்ந்து
கிடப்பதாகத்தெரிகிறது!
அவர்களது விஞ்ஞானப் பாடப் புத்தகத்தில்
குறிப்பிட்டுள்ளதற்கு மாறாக, அவர்கள்
வாலில்லாக் குரங்கை ஒத்த உருவத்தைக்
கொண்டிருந்தாலும், அவர்கள் என்னவோ
எலியிலிருந்து வந்தவர்களாகத்தான் தெரி
கிறார்கள்!அவர்களுடைய வாழ்க்கை விரிவாக்
கப்பட்டதும், பெருமைப் படுத்தப்பட்டதுமான
தொரு எலியின் வாழ்க்கையாகவே உள்ளது
எனலாம்!
அவர்களுடைய கல்விமுறை அவர்களுடைய
வாழ்க்கைக்குச் சிறிதும் தொடர்பில்லாததாக
அறிவுத்தேடலைவிட பிழைப்புத் தேடலையே
இலக்காகக் கொண்டுள்ளது!
அவர்களுடைய சமுதாய அமைப்பு பலவித
அர்த்தமற்றபேதங்களையும்,பிரிவினைகளயும்
ஏற்றத் தாழ்வு களையும் கொண்டதாயுள்ளது!
அவர்களுடைய அரசியல்முறையை, அவர்கள்
'மக்களாட்சி' என்று குறிப்பிட்டாலும், மிகவும்
அபத்தமானவகையில், மக்களில்மிகவும் மோச
மானவர்களே மக்களை ஆள்பவர்களாக தேர்வு
செய்யப்படுகிறார்கள்!
விஞ்ஞானத் தொழில் நுட்பத்தில், அவர்களது
தரத்திற்கும் மேலாகவே வளர்ச்சி காணப்படு
கிறது! ஆனால், அவை யாவும் அவர்களுடைய
மேலோட்டமான அன்றாடத்திற்குச்சேவை செய்
வதாகவே அமைந்துள்ளது!
ஆன்மீக வளர்ச்சியைப்பொறுத்தவரை, கோடி
யில் ஓரிருவர் மட்டுமே உச்சமடைந்துள்ளனர்!
மொத்தத்தில், மனிதர்கள் மனிதர்களாக
இல்லை என்பதே இந்த ஆய்வின் முடிவாக
உள்ளது!
<>
"எப்போது நீங்கள் வாழத்தொடங்கப்போகிறீர்?"
என்ற இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு படு
அபத்தமாக ஒலிக்கலாம்!
"நாம் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம்!"
என நாம் வியக்கலாம்!
ஆனால், எப்படிப்பார்த்தாலும் நாம் இன்னும்
வாழத்தொடங்கவில்லை என்பது தான் உண்மை!
நாம் ஒரு உயிருள்ள எந்திரம் போல இயங்குகிறோம்!
நமது இயக்கம் எதைக் குறிக்கோளாக இலக்காகக்
கொண்டிருக்கிறது என்பது குறித்து நாம் கேள்வி
எழுப்பியதே இல்லை!
எரிபொருள் இன்றி எந்த எந்திரமும் இயங்காது,
நாமும் அப்படித்தான்!
உணவின்றி நாம் இயங்கமுடியாது!
ஆனால், எவ்வொரு எந்திரத்தையும் ஒரு குறிப்பிட்ட
பணியைச் செய்யும் வகையில் தான் நாம்
அமைத்துள்ளோம்;
ஒரு சிறு கைக்கடிகாரம் தான் என்றாலும்
அது எதற்காக இயங்குகிறது என்பது அதற்குத்
தெரியாவிட்டாலும்;
நேரத்தைக்காட்டுவதற்குத்தான் அதிலுள்ள
முட்கள் சுற்றிவருகின்றன!
ஆனால், நாம் எதற்காக இயங்குகிறோம்?
வேளாவேளைக்கு தவறாமல் எரிபொருளை
(உணவை) நம்முள் நிரப்புகிறோம்!
இயங்கவும் செய்கிறோம்!
ஆனால், நமது இயக்கம் எதைக் குறிக்கோளாக
இலக்காகக் கொண்டிருக்கிறது?
அந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த இலக்கு
வேறெதுவுமல்ல, நமக்கான எரிபொருள் தான்
ஆம், 'உணவு' தான் நம்முடைய ஒரே குறிக்கோள்
ஒரே இலக்கு, ஒரே இலட்சியம்!
எல்லா எந்திரங்களையும், கருவிகளையும்
சாதனங்களையும் இயக்கி, பயன்படுத்தி, நாம்
நமது உணவைப் பெறுவதற்காக, உணவை
உற்பத்தி செய்வதற்காக, உணவைத்
தயாரிப்பதற்காக மட்டுமே இயங்குகிறோம்,
உழைக்கிறோம், வாழ்கிறோம்!
எப்போதாவது நாம் அந்தப் 'பேருண்மை'யைச்
சொல்லத்தான் செய்கிறோம்:
"எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்குத்தான்!"
ஆனால், இது எவ்வளவு அபத்தமானது என்பதை
நாம் ஒருபோதும் உணர்வதேயில்லை!
நாம் உண்கிறோம்! உண்ட பிறகு உழைக்கிறோம்!
'உழைக்கிறோம்' என்பதன் அர்த்தம் என்ன?
எதைப் பலனாகப்பெற உழைக்கிறோம்?
உணவைப்பெறுவதற்காக, உண்பதற்காக
உழைக்கிறோம்!
எதற்காக உண்கிறோம்? உயிர்வாழ்வதற்காக!
எதற்காக உயிர்வாழ்கிறோம்?
இது என்ன கேள்வி, உயிர்வாழ்வதற்காக
உயிர்வாழ்கிறோம்!
ஆம், அர்த்தமின்றி, குறிக்கோளின்றி, இலக்கின்றி
ஏன், எதற்கு என்ற கேள்வியின்றி, ஆகவே பதிலின்
தேவையின்றி, உயிர்வாழ்வதற்காக உயிர்வாழ்
கிறோம்!
'உயிர்வாழ்தல்' என்பது எத்தகைய செயல்பாடு?
ஆம், 'உண்பது' என்பதையே செயலாகவும்,
இலக்காகவும் கொண்டு, உணவைப்பெறுவதற்காக
உழைப்பது என்பதை உள்ளடக்கிய ஒரு விபரீத
வட்டத்தில் சிக்கிய ஒரு அடிமைத்தொழில் ஆகும்!
<>
ஆச்சரியம் ஆனால் உண்மை!
ஆம், உயிர்வாழ்தல் என்பது ஒரு அடிமைத்
தொழில்அல்லது ஒரு அடிமைப்பிழைப்பு!
அப்படி நாம் யாருக்கு அல்லது எதற்கு
அடிமையாக இருக்கிறோம்?
'உடலுக்குத்தான்' என்று சொன்னால்
உங்களால் நம்பமுடியுமா?
நீங்கள் எதுவொன்றையும் புரிந்து
கொள்ளும் பொருட்டு உண்மையிலேயே
சிந்தித்திருந்தால், நீங்களே இந்த
உண்மையைக் கண்டுபிடித்திருப்பீர்கள்!
ஆனால், நீங்களோ உங்களுடைய உடலுடன்
உங்களை அடையாளப்படுத்திக்கொண்டு
ஐக்கியமாகி விட்டதால், உங்களால் உடல்,
உடல்நலம், உடலின் தேவைகள், உடலின்
சௌகரியங்கள் ஆகியவைகளைத்தாண்டி
வேறெதைப்பற்றியும் உங்களால் சிந்திக்க
முடியாதிருக்கிறீர்கள்!
ஆம், உயிர்வாழ்தல் என்பது உடலின்
வாழ்க்கையே ஆகும்.
ஆம், உடலின் நலன்களை,தேவைகளை
சிரமேற்கொண்டு அவைகளை நிறைவேற்றுவதே
உங்களுடைய தலையாய கடமையாகவும்
ஒட்டுமொத்த வாழ்க்கையாகவும் உள்ளது!
ஆம், உடல் உங்கள் எஜமான், நீங்கள்
அதன் அடிமை!
<>
ஆம், 'உயிர்வாழ்தல்' என்பது
அனைத்து உயிரினங்களின் மீதும்
திணிக்கப்பட்டதாக உள்ளது!
உயிர்வாழ்தல் என்பது ஒரு வரமா?
அல்லது சாபமா? உண்மையில்
மனிதஜீவிகள் உள்பட அனைத்து
ஜீவிகளும் உயிர்வாழும்படி
சபிக்கப்பட்டுள்ளோம் என்பதாகவே
தோன்றுகிறது!
உயிர்வாழ்தல் என்பது
கட்டாயமாக்கப்பட்ட கடமையாகவே
உள்ளது! அதைத் தவிர்க்க முடியாது!
என்றாலும் ஒருசில மனிதர்கள் தற்கொலை
செய்து கொள்கிறார்கள் ஆனால், அது
தீர்வு அல்ல!
நம்முடைய விருப்பம் பற்றிக்
கேட்காமலேயே வாழ்க்கைக்குள்
தள்ளப்பட்டுள்ளோம் என்பது
அடிமைப்பிழைப்பு அல்லாமல்
வேறென்ன?
தெரிவுகளில்லா நிர்ப்பந்தம்
எவ்வாறு வரமாகும்?
உயிர்வாழ்தலுக்காக உயிர்வாழ்தல்
என்ற கட்டாய உழைப்பு முகாமுக்குப்
பெயர் 'வாழ்க்கை'யா?
அப்படியானால், 'மரணம்' என்பது
அம்முகாமிலிருந்து விடுவிப்பா?
முதலில் உயிரைக் கொடுப்பது, சில காலம்
கழித்து உயிரை எடுப்பது என்பது
என்ன வகை விளையாட்டு?
இந்த விபரீத விளையாட்டில் வெற்றிபெறுவது
யார்? தோல்வியடைவது யார்?
இது அர்த்தமுள்ளதா? அபத்தமானதா?
இதிலிருந்து விடுபட வழியேதும் உள்ளதா?
(இக்)கேள்விகளும், அவற்றைத்தொடரும்
தீவிர விசாரமும் தான் விடுதலைக்கான
வழியாகும்!
<>
'வாழ்க்கை என்றால் என்ன?' 'வாழ்க்கையின்
குறிக்கோள், இலக்கு, அர்த்தம், உண்மை என்ன?'
எனும் இக்கேள்விகளுடன் தொடரும் தீவிர
விசாரத்துடன் மட்டுமே அசலான மனித வாழ்க்கை
தொடங்குகிறது! அதற்கு முன் ஒருபோதும் இல்லை!
உணவை மையமாகக் கொண்ட உயிர்வாழ்தல்
என்பது உடலை மையமாகக் கொண்டது;
உடலுக்கு அடிமை ஊழியம் செய்வது ஆகும்!
உண்மையை அல்லது அர்த்தத்தை மையமாகக்
கொண்ட உண்மையான வாழ்தல் என்பது
உள்ளத்தை, மனித உணர்வை மையமாகக்
கொண்டது; ஏனெனில், மனிதன் என்பவன்
உடலல்ல, உணர்வே ஆவான்!
உண்மையை இலக்காகக்கொண்ட உண்மையான
வாழ்தல் மட்டுமே உயிர்வாழ்தலை அர்த்தப்
படுத்துவதோடு மனிதனை முழுமைப்படுத்தி
விடுதலைப்படுத்துவதுமாகும்!
<>
ஆகாயத்தில் பறக்க வேண்டுமானால்
பூமியை விட்டுவிடத்தான்
வேண்டும்!
ஆன்மீகத்தில் சிறக்க வேண்டுமானால்
அன்றாடத்தை விட்டு (அவ்வப்போது)
அகன்றிடத்தான் வேண்டும்!
அதி உயரத்தில் பறக்கும் பருந்தும் கூட
மீண்டும் பூமிக்குத்திரும்பிடத்தான்
வேண்டும்!
ஏனெனில், எந்தப் பறவையும் அந்தரத்தில்
கூடு கட்டிக்கொண்டு வாழ முடியாது!
ஆனால், பருந்திடமிருந்து முற்றிலும்
வேறானவன் மனிதன்; அவனால் ஆன்மீக
ஆகாயத்தில் கூடு கட்டி வாழ முடியும்!
அதுதான் அவனுடைய வாழ்வின் சிறப்பும்
இலக்கும்கூட!
அதே நேரத்தில், மனிதனும் அவ்வப்போது
பூமிக்குத் திரும்பிடத்தான் வேண்டும்!
ஏனெனில், அவனது உடல் எனும் பிறந்த கூடு
எப்போதும் இங்கே தரையில் தான்
உள்ளது!
மனிதனால் ஒரே நேரத்தில் முரண்பாடு
ஏதுமின்றி இரண்டு கூடுகளிலும் வாழ
முடியும்!
முரண்பாடு எப்போது எழுகிறதென்றால்
உணர்வின் ஆன்மீக வாழ்க்கைக்கு
உயராமல் உடலின் வாழ்க்கையிலேயே
உழன்று கொண்டிருக்கும் போதுதான்!
ஆன்மீக வெளி மனிதனின் அகத்தேயே
உள்ளதால், நினைத்த மாத்திரத்தில் அவனால்
ஆன்மீக வானில் எழும்பிப்பறக்க முடியும்!
துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான
மனிதர்களுக்கு அப்படியொரு அகவெளி
இருப்பது பற்றிய சிறு பிரக்ஞையும் இல்லை!
ஆகவே தான் அவர்கள் மனிதர்களுக்குரிய
வாழ்க்கையை இன்னும் வாழத்தொடங்கவில்லை
என்று இங்கு நான் குறிப்பிடுகிறேன்!
அதே நேரத்தில், ஆன்மீக வாழ்க்கையை
வாழ்வதற்கு மனிதர்கள் தங்களைத் தாண்டி
எங்கேயும் செல்லத்தேவையில்லை!
ஆன்மீகத்தைக் கற்றுத்தருவதற்கு யாதொரு
பள்ளியும், கல்லூரியும், மடமும், ஆசிரமும் இல்லை!
ஆன்மீக வாழ்க்கையின் அவசியத்தை,
முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி வலியுறுத்து
வதற்கு மேல், உண்மையில், உண்மையான
ஆன்மீகத்தை எவரும் எவருக்கும் கற்றுத்தர
இயலாது!
ஆன்மீகவாதிகள் என்போர் பலர் 'ஞானமடைதல்'
பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்துவதோடு
சுலபத்தவணையில் அதை விற்பனை செய்தும்
வருகிறார்கள்!
'ஞானமடைதல்' என்று ஒரு அம்சம் இருக்கத்தான்
செய்கிறது; ஆனால், மனிதன் விழிப்படைவதன்
அவசியத்தையே நான் பிரதானமாக வலியுறுத்தி
வருகிறேன்!
மனிதன் தன்னை நோக்கி விழிக்காமல்
ஞானம், முக்தி, மோட்சம், எதையும் அடைய முடியாது!
மனிதன் தன்னை முழுமையாக உணர்வு கொள்வது
தான் அசலான ஆன்மீகத்தின் முதல் அடியும்
முடிவான அடியுமாகும்!
மேலும், 'ஆன்மீகம்', 'ஞானமடைதல்' ஆகியவைபற்றி
பரவலாக மலிந்து கிடக்கும் பிரமைகளைக்
களைவதையும் என் ஆன்மீகப் பணிகளில்
ஒன்றெனச் செய்துவருகிறேன்!
<>
வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தறியாமல்
இனி ஒரு கணம் கூட சுய-உணர்வில்லாத ஒரு
விலங்கைப்போல தானியங்கித்தனமாக நான் வாழ
மாட்டேன் என உறுதிபூண்டு தீவிர அர்த்த-நாட்டம்
கொள்ளும் ஒருவனே அசலான ஆன்மீகத்திற்குத்
தகுதி பெறுகிறான்!
எவனொருவன் உணர்வுப்பூர்வமாக வாழ்வதற்கு
தன் மனதை முழுமையாகத் தயார்படுத்திக்
கொள்கிறானோ, அவன் ஏற்கனவே தனது உடலின்
இயல்பான தூண்டுதல்களை நெறிப்படுத்தி
விட்டவனாகிறான்! இனி அவற்றால் அவன்
அலைக்கழிக்கப்படுவதில்லை!
தீவிர ஆன்மீக நாட்டத்திற்கும், மேலோட்டமான
ஆர்வக்கோளாறுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது!
ஒருவன் தனது வழக்கமான பலவித நாட்டங்களுடன்
ஆன்மீக நாட்டத்தையும் சேர்த்துக்கொள்ளமுடியாது!
ஏனெனில், ஆன்மீகத்தின் திசை பிறவனைத்து
விஷயங்களுக்கும் செங்குத்தாக அமைந்துள்ளது!
ஒரு மனிதனின் பிரதான நாட்டம் எதில் உள்ளதோ
அந்தத் திசையில் தான் அவனது மனமும்,சுயமும்
இயல்பாகச் செல்வதாயிருக்கும்! ஆகவே புதிதாக
ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ளும் ஒருவன் தனது
பிற நாட்டங்களின் தன்மைகளை, அவற்றின்
பாதகமான தாக்கங்களை அறியாதவனாய்
இருக்க முடியாது!
மனிதன் உடல், மனம் எனும் இரு எஜமான்களால்
எதிரெதிர்த் திசைகளில் செலுத்தப்பட்டு அலைக்
கழிக்கப்படுகிறான்! பலரது விஷயத்தில், துரதிருஷ்ட
வசமாக, மனதைவிட உடல்தான் மனதையும், ஒட்டு
மொத்த மனிதனையும் செலுத்துவதாயுள்ளது!
அதே நேரத்தில், உடலைவிட மனமே அனைத்து
விதப்பிறழ்ச்சிகளுக்கும், மட்டுப்பாடுகளுக்கும்
காரணமாக விளங்குகிறது! உடலின் ஒரே பிரதான
நோக்கம் உயிர்-வாழ்தலும், இனவிருத்தியும் தான்!
ஆனால், தனது இருப்பிற்கான நோக்கத்தை அறியத்
தவறிய மனமானது, உடலின் வாழ்க்கையைத் தவறாக
தனது வாழ்க்கையாக வரித்துக்கொண்டுவிட்டது!
சமூகக் களத்தில், உயிர்வாழ்தலை பெரும் போராட்டமாக
மாற்றியதும்; செயற்கையும் போலியுமான மதிப்புகளை,
தர-நிலைகளைப் புகுத்தி வாழ்க்கையைச்
சிக்கலாக்கியதும் மனித மனமேயாகும்!
உடலைப்பொறுத்தவரை, உயிர்வாழ்தல் தான் அதன்
நோக்கம் என்றாலும், உயிர்வாழ்வதன் நோக்கத்தை
அதனால் அறிய இயலாது! உயிர்வாழ்வதன்
நோக்கத்தை அறிவதற்கும், வாழ்க்கையின் ஒப்பற்ற
இலக்கை அடைவதற்கும் தான் மனிதனுக்கு மனம்
கொடுக்கப்பட்டிருக்கிறது!
"மனிதனிடமிருந்து மனதைக் கழித்து விட்டால்,
மீதமிருப்பது 'உடல்' எனும் விலங்கு தான்!" என்று
சொன்னால், நம்மில் பலர் கோபம் கொள்கிறார்கள்!
ஆனால், 'மனம்' இருந்தும் அதற்கு அடையாளமாக
யாதொரு ஆழமான வெளிப்பாட்டையும் தம்முள்
ளிருந்து கொண்டுவரவில்லை என்பது குறித்து சிறிதும்
அவர்கள் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை!
சிந்திக்கும் திறன் கொண்ட மனம் இருந்தும்
மனிதர்களிடம் வாழ்க்கை பற்றிய யாதொரு சிறு
புரிதலும் தெளிவான பார்வையும் இல்லை என்பது
மனித இனத்தின் வீழ்ச்சியையே குறிப்பதாகிறது!
இந்நிலையில், என்றைக்கு மனித-மனமானது தனது
அசலான பணி மற்றும் வாழ்க்கைக்கு விழிப்பது?
உடலின் மேலோட்டமான வாழ்க்கையைக் கடந்து
மனதின் அசலான வாழ்க்கைக்குள் பிரவேசிப்பது?
பிறகு எப்போது உடல், மனம் இரண்டையும் கடந்து
ஆன்மாவை அடைவது?
மனிதன் பிறக்கும் போது ஒரு உடல்-ஜீவியாகத்தான்
தோன்றுகிறான், பிறகு ஒரு மன-ஜீவியாக எழுகிறான்.
பிரச்சினை இங்குதான் எழுகிறது; பெரும்பாலான
மனிதர்கள் மன-ஜீவியாக உருவெடுப்பதில்லை;
மாறாக, மனதின் மேலாண்மையை உடலுக்கு
விட்டுக்கொடுத்துவிடுவது ஒருபுறமிருக்க, இன்னொரு
புறம் மனதின் புனைவுலகத்திற்குள் தஞ்சம் புகுந்து
விடுகின்றனர்!
<>
ஆன்மீகம் குறித்து அறிந்து கொண்டவைகளைப்
பற்றி விரிவாகச் சிந்திப்பது, அவற்றுடன் தம்மை
அடையாளப்படுத்திக்கொள்வது, எதையோ
சாதித்துவிட்டதாகப் பிரமைகொள்வது,
முதிரா நிலையில் ஆன்மீகம் குறித்து
அபிப்பிராயம் கொள்வது இவை
எதுவும் ஆன்மீகமாகாது!
ஆன்மீகம் தொடர்பான தரவுகளை,செய்திகளை,
விபரங்களைக் கொண்டு மேலும் தரவுகளைக்
கண்டுபிடிக்கலாமேதவிர உண்மையைக்
கண்டுபிடிக்க இயலாது!
ஆன்மீகம் தொடர்பாக உங்களுக்கென்று ஒரு
நிலைப்பாடு கொள்வது ஆன்மீகமாகாது!
அங்கே உங்களுக்கே இடமில்லை
எனும் நிலையில் உங்களுடைய
நிலைப்பாட்டிற்கு இடமேது?
உங்களுடைய ஆன்மீக வளர்ச்சியை அறிந்திட
உங்களுடைய தன்முனைப்பு எவ்வளவு
குறைந்துள்ளது என்பதைப்
பாருங்கள்!
<>
"வாழ்க்கை என்றால் என்ன?" என்பதைப்
புரிந்து கொள்வது தான் உண்மையான
வாழ்தல், வாழ்க்கை, யாவும் என்று நான்
சொன்னால், மருட்சியடையாதீர்!
இக்கூற்றை உங்களால் நம்பமுடியவில்லை
எனில், வேறு எதை நீங்கள் வாழ்க்கை
என்று சொல்கிறீர்கள், வாழ்கிறீர்கள்
சொல்லுங்கள்?
காலையில் நீங்கள் எழுந்ததிலிருந்து
இரவு உறங்கப்போகும் வரை
உயிர்வாழ்வதற்காக அன்றாடம்
நீங்கள் செய்கின்ற காரியங்கள்
ஈடுபடுகின்ற விவகாரங்கள்
உங்கள் உத்தியோகம், துய்ப்புகள்,
நுகர்வுகள், கேளிக்கைகள் . . . .
இவற்றைத்தான் நீங்கள் வாழ்க்கை
என்கிறீர்களா?
தவிர்க்கவியலாத சில அடிப்படைத்
தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளக்
கூடாது; அதற்காக நீங்கள் உழைக்கக்
கூடாது என்று நான் சொல்லவில்லை!
ஆனால், "அதன் பிறகு என்ன?" என்று
தான் கேட்கிறேன்!
தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்குப்
பெயர்தான் வாழ்க்கையா? எளிமையாகவும்,
கரடுமுரடாகவும், நேர்த்தியற்றவகையில்
செய்தாலும் எலிகளும் தவளைகளும்
இவற்றைத்தானே செய்துவருகின்றன?
உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைக்
குறிக்கும் ஒற்றைச் சொல் தான் 'வாழ்க்கை'
என்பதா? அப்படியானால், நீங்கள் வாழ்வது
சரிதான்! அதை ஆழமாகப் புரிந்து கொள்ள
ஒன்றுமில்லைதான்!
<>
மீனைச்சுற்றி எல்லாப்பக்கங்களிலும்
தண்ணீர் சூழ்ந்திருப்பதைப்போல
மனிதனைச் சுற்றி எல்லாப்பக்கங்களிலும்
சூழ்ந்திருக்கிறது வாழ்க்கை!
மீன் தண்ணீரிலேயே இருந்தாலும் அதற்கு
தண்ணீரைப்பற்றி எதுவும் தெரியாது!
தன்னைப்பற்றியும் தெரியாது!
அதற்குத் தெரிந்ததெல்லாம் இரையும்
தன் இணையும், தன் எதிரிகளும் மட்டுமே!
எல்லாப்பக்கங்களிலும் தண்ணீரால்
சூழப்பட்டிருந்தாலும் தான் இருப்பது குளமா
அல்லது கடலா என்பது மீனுக்குத் தெரியாது!
தன் தேவைகளைத்தாண்டி மனிதனுக்கும்
வேறெதுவும் தெரியாது!
ஒரே சமயத்தில், நெருக்கமாக மிகஅருகிலும்,
எட்டாத் தொலைவிலும்; மிகப்பரிச்சயமான
தாகவும், புரியாப்புதிராகவும் இருக்கிறது
வாழ்க்கை! என்பது ஈரறிவுள்ள மீனுக்குத் தெரிய
வாய்ப்பில்லை! வாய்ப்புள்ள மனிதனுக்கும்
தெரியாதென்றால் நிச்சயம் அவன் ஆறறிவுள்ள
ஒரு மீனாகத்தான் இருக்க வேண்டும்!
<>
கடலை அளந்து ஆராய்ந்து முடித்து உலகை
ஆராய ஆர்வம் கொண்டு
கரையேறிய மீன் பல உருமாற்றங்களைக்
கடந்து மனிதனாகியது!
நிலத்தை, மலைகளை, ஆறுகளை,
பெருங்கடல்களை ஆராய்ந்த மனிதன்
நிலவில் கால்பதித்து, விண்வெளியையும்
ஆராயப்புகுந்துள்ளான்!
பேரண்டத்தை அளப்பது ஒருபுறமிருக்க
அணுவைப்பிளந்து சிற்றண்டத்தையும்
அவன் அலசிக்கொண்டிருக்கிறான்!
ஆயினும் அவன் இன்னும் புதிரின்
நுழைவாயிலைக் கண்டுபிடித்தானில்லை!
அனைத்தையும் அறியும் மனிதன்
அறிபவனாகிய தன்னை அறியாமல்
அறிவு முழுமை பெறாது என்பதை இன்னமும்
உணர்ந்தானில்லை!
<>
உண்மையிலேயே வாழத் தொடங்குவது
என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?
நீங்கள் ஏற்கனவே உணர்வின்றி
தானியங்கித்தனமாக வாழ்ந்துவருவதை
உடனடியாக முடிவிற்குக் கொண்டுவருவதுதான்
உண்மையிலேயே வாழத் தொடங்குவது
என்பதாகும்!
உங்களை உடனடியாக உணர்வுக்கு வருமாறு
சொன்னால் அது உங்களுக்குப்புரியாது!
ஆகவே, உங்களுடைய உணர்வற்ற தன்மையை
கைவிடச் சொல்லுகிறேன்!
அதாவது, உங்களுடைய முட்டாள் தனத்தை
உடனே நிறுத்துங்கள் என்கிறேன்!
உடனே நீங்கள் என்மீது கோபம் கொள்கிறீர்கள்!
அப்போது நீங்கள் ஒரு கணம் உணர்வுக்கு
வருகிறீர்கள்!
உங்களுடைய உணர்வற்ற தன்மையைக் கைவிட
வேண்டுமானால்,
எவ்வாறேனும் நீங்கள் உணர்வுக்கு வந்தாக வேண்டும்!
<>
மா.கணேசன்/ 26.05.2016
No comments:
Post a Comment