Sunday, 12 June 2016

அகந்தையின் இடறுகுழிகள்





எதுவொன்றையும் சிறிய விஷயம் தானே
என்று அனுமதித்துவிடாதே!
அது உனது ஆன்மீக வளர்ச்சியில்
பெருந்தடையாக நிற்கக்கூடும்!

எதுவொன்றையும் சிறிய விஷயம் தானே
என்று புறக்கணித்துவிடாதே!
அது உனது ஆன்மீக வளர்ச்சியில்
பெருங்குறையாகிவிடக்கூடும்!

    ^^^
    *|*
     _

எவ்வொரு கூற்றும் ஒரு முடிவை
   முன்மொழிகிறது, அல்லது தன்னுள்
   மறைத்து வைத்துள்ளது, அல்லது
   அதுவே ஒரு முடிவாக உள்ளது!
முன்முடிவுகளுடன் செய்யப்படும்
   சிந்தனை, ஆராய்ச்சி உண்மையான
   (ஆன்மீக) விசாரமல்ல!
முடிவான உண்மைகள் புரிந்துகொள்ளப்
   படவேண்டியவை; அவற்றுடன் சர்ச்சை
   செய்துக்கொண்டிருப்பவன்  மூடன்,
   அப்படியே ஏற்றுக்கொள்பவனும் மூடன்!
உண்மைகளை ஆராயாமல் சந்தேகிப்
   பவன் (சிந்தனைச்)சோம்பேறி, தனது
   சந்தேகங்களை உண்மைகளாகப்
   பாவிப்பவன் புரட்டன்,
   இருவரும் நல்முடிவு சேருவதில்லை!

     *

நீ சரியான வழியில்தான் செல்கிறாயா
இல்லையா என்பதை
நீ பிரபஞ்ச-மனதின் விருப்பத்தை நிறைவேற்ற
முயல்கிறாயா அல்லது
உனது சொந்த-மனதின் விருப்பங்களைப் பூர்த்தி
செய்யமுனைகிறாயா என்பதிலிருந்து
அறிந்து கொள்வாயாக!

     *
உயரிய ஆன்மீக இலக்கு என்பது
எதையோ பயிற்சி செய்தோ, அல்லது
எவ்வாறோ எட்டிப்பறித்திடக்கூடியதோ அல்ல!
அல்லது ஒரு குருவின் கருணைப் பரிசாகப்
பெற்றிடக்கூடியதோ அல்ல!
ஒவ்வொரு மனிதனும் தன்னில், தனது
உணர்வில் வளர்ந்து அடையப்படவேண்டிய
உச்சமாகும்!
ஒவ்வொருவரின் ஆர்வம், உத்வேகம்,விவேகம்
வேகம், வளர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்து
இலக்கை அடையும் காலம்
தீர்மானிக்கப்படுகிறது!

     *

'உணர்வின்மை' என்பது தான் உனது நோய்!
அதற்கு எங்கேயும், எந்த குருவிடமும்,
யாதொரு மருந்தும் இல்லை!
மருந்து உன்னிடமே உள்ளது!
உணர்வுக்கு வருவது, விழித்துக்கொள்வது
தான் அதற்கு மருந்து!

     *

தன்னைவிஞ்சிய தன்னைவிட பன்மடங்கு
பெரிதாக வளர்ந்து அடையவேண்டிய
உயர் நிலையை அடையாமலேயே
அதை அடைந்துவிட்டதான பிரமையில்
ஆழ்ந்திருப்பதுதான் அகந்தை!

     *
ஆன்மாவாய் மலர வேண்டியதும்
அகந்தைதான்!
ஆன்மதரிசனம் கிட்டவில்லை
என அங்கலாய்ப்பதும்
அதே அகந்தைதான்!

    *

"தாம் இருக்கிறோம்!" என்பதை அறியாத
தவளைக்கு இரை, இணை, இனப்பெருக்கம்
இம்மூன்றும் தான் பிரதானம்!

"தாம் இருக்கிறோம்!" என்பதை அறிந்தும்
"தாம் ஏன், எதற்காக  இருக்கிறோம்?"
என்பதை அறியாத

மனிதனுக்கும்
இரை, இணை, இனப்பெருக்கம்
இம்மூன்றும் தான் பிரதானம்!

    *
அஞ்ஞானி, ஞானி இருவரும்
சுயத்தின் முக்கியத்துவத்தைத்தான்
கொண்டாடுகிறார்கள்!

ஆனால்,
அஞ்ஞானியின் சுயம், ஞானியின் சுயம்
இரண்டுக்கும் மாபெரும் வித்தியாசம்
உள்ளது!

அஞ்ஞானி தனது சொந்த சுயத்தைப்
போற்றுகிறான்!
ஞானி தனது சொந்த சுயத்தைக்கடந்து
அனைவருக்கும் சொந்தமான,
அனைத்திற்கும்
மூலமும் முடிவுமான ஆன்மாவைப்
போற்றுகிறான்!

     *

பிறவனைத்து இடறுகுழிகளையும் விட
அதிக ஆபத்தானது, மீண்டுவர முடியாதது
அகந்தையின் 'சுய-முக்கியத்துவம்' எனும்
அதலபாதாளம் தான்!

அதில் வீழ்ந்தவனை எவரும், கடவுளும்கூட
மீட்கவியலாது!
ஏனெனில், அது ஒன்றுமில்லாத, உள்ளீடு
ஏதுமற்ற மாபெரும் பிரமையாகும்!

அகந்தை தன்னைக்குறித்துப் பெருமிதம்
கொள்வதற்கு அது எதுவாகவும் இல்லை,
பிரமைகளுக்கு ஆட்படும் ஒரு உணர்வு
என்பதைத்தவிர!

அகந்தையின் பெருந்தவறு அது
தன்னைப்பற்றிய உணர்வுக்கு வராததும்,
தனது அசலான முக்கியத்துவத்தை
அறிந்து அதை முன் நிறுத்தாததும்,
தானல்லாத உடலை முன் நிறுத்துவதும்,
உடலின் தேவைகளை பிரதி நிதித்துவம்
செய்வதும் தனது உடமைகளாகச் சேர்த்துக்
கொண்ட பொருட்களையும் விஷயங்களையும்
கொண்டு தனது முக்கியத்துவத்தைக்
கட்டியெழுப்புவதும், அவை குறித்துப்
பெருமிதம் கொள்வதும் தான்!

     *

மையம் தொலைந்ததால் எழுந்த
பிரபஞ்சத்தின் மையம் மனிதன்!
தனது மையத்தில் தான் எத்தகைய
மெய்ம்மை என்பதை அவன்
உணர்ந்தறியுங்கால்!

பிரபஞ்சத்திலுள்ள யாவற்றிலும்
அதிமுக்கியமானவன் மனிதன்!
உள்ளவற்றில் அவனும் ஓர் உருப்படி
அல்ல!

ஆனால், மனிதனின் முக்கியத்துவம்
கொடுக்கப்பட்ட ஒன்றல்ல!
அவனது ஆன்மீக இலக்கை அடைவதன்
மூலம் ஈட்டப்படவேண்டிய ஒன்று!

     *

மனிதா! உண்மையான ஆன்மீகம் என்பது
உன்னை நீ எவ்வாறு அணுகுகிறாய்,அறிகிறாய்
ஆராய்கிறாய்,என்பதிலிருந்து தொடங்குகிறது!

உன்னை அறியும் வழியில் நீ ஒரு தத்துவவாதி
யாவது தவிர்க்கவியலாது நிகழலாம்!
ஆனால், எத்தனை தத்துவப்பிரச்சினைகளை
கோட்பாடுகளை அறிந்துவைத்திருக்கிறாய்,
அவற்றை எப்படியெல்லாம் புரட்டிப்போடுகிறாய்
உனக்கு ஏற்றாற்போல் வளைக்கிறாய்
என்பதெதுவும் முக்கியமல்ல!

மாறாக, உன்னை எவ்வாறு புரட்டிப்போடுகிறாய்
உன்னை நீயே எவ்வாறு பிரித்து அடுக்கி
புத்துருவாக்கம் செய்கிறாய் என்பதே முக்கியம்!

     *

அளவுக்கதிகமாய் சுய-பச்சாதாபம், சுய-பரிவு
சுய-காதல் கொள்வதன் வழியே தன்னைப்
பாதுகாத்துக்கொள்ளவிழைபவன் ஏற்கனவே
தன்னால் கைவிடப்பட்டவனாயுள்ளான்!
அவனை வேறு எவரும் காப்பாற்ற இயலாது!

அளவுக்கதிகமாய் சுய-வெறுப்பு, சுய-கசப்பு
சுய-அதிருப்தி கொண்டு குமைபவன் புதியதொரு
பிறப்பெடுத்து புதிதாய்த் தொடங்குவதொன்றே
கரையேற வழி - உடனடியாகவோ, அல்லது
இன்னொரு  பிறவியிலோ!

     *

ஆன்மீகத்திற்கு -
இன்றைவிட நாளை அதிகம் சாதகமாய்
இருக்கப்போவதில்லை!
இப்பிறவியைவிட அடுத்த பிறவி அதிகம்
சுலபமாய் இருக்கப்போவதில்லை!
நேற்று தள்ளி, இன்று வந்தது, இன்று தள்ளி
நாளை வரும், . . . .இப்படி தள்ளிப்போடப்பட்ட
பிறவிகள் எத்தனையோ?
இன்று எட்டாதது நாளையும் எட்டாது!
இன்று இயலாதது நாளையும் இயலாது!
காலம் ஒரு செக்குமாடு அதன் மீதேறி
காலாதீதம் சேர முடியாது!
மறுபிறப்பு மீது நம்பிக்கை கொள்வது
தப்பித்தல்வாதம்!

     *

அகந்தை மிக எளிதாக விழக்கூடியதொரு
இடறுகுழி :  'பொறாமை'!

உம்மிடம் பொறாமையுணர்வு எவ்வாறு
தோன்றுகிறது?
பிறருடன் ஒப்பிடும் போதுதான் பொறாமை
தோன்றுகிறது!
உம்மிடம் அதிகம் பணம், அல்லது பொருள்
இல்லாததினால் நீ பாதிக்கப்படுவதில்லை
வருந்துவதில்லை!
மாறாக, பிறரிடம் அவை அதிகமாய்
இருக்கிறது என்பதே உனை உறுத்துகிறது
வருத்துகிறது!
பொறாமை கொண்ட சுயம் போலிச்சுயம்!

அகந்தை மிக எளிதாக விழக்கூடிய
இன்னொரு இடறுகுழி :  'பேராசை'!

பேராசை என்பது பெரிய ஆசை அல்ல!
மாறாக அது தவறானதும் தகுதியற்றதுமான
ஆசை; உனது நிறைவான நல்வாழ்வு எதைச்
சார்ந்துள்ளது என்பது தெரியாமல் புறத்தே
பலவிதமான பொருட்களில் அடங்கியிருப்பதாகக்
காணும் தலை-கீழ்ப்பார்வையே பேராசை!
பேராசை பிடித்த சுயம் மேலோட்டமான சுயம்!

அடுத்து, இந்த இடறுகுழியில் அகந்தையானது
பிரத்யேகமாய் விழவேண்டியதில்லை, ஏனெனில்
அகந்தை பிறந்ததே இந்த இடறுகுழியில்தான்!
'சுய-நலம்' என்பது அதன் பெயர்!

ஆம், எவரும் தமக்குத்தெரிந்தே சுய நலமாய்
இருப்பதில்லை!
தன்னை அறியாத அகந்தையின் ஒரே நலம்
சுய நலம்!
சுய நலம் மனிதனை தன்னறிவற்ற விலங்காக
நீடிக்கச்செய்கிறது!

     *

எவனொருவன் தனது வழியில் உள்ள
தடைகளைப்பற்றியே எண்ணிக்
கொண்டிருக்கிறானோ
அவன் ஒருபோதும் தனது  இலக்கைச்
சென்றடைவதில்லை!

எவனொருவன் தனது ஆன்மீக
வளர்ச்சியை அளந்து பார்த்துக்கொண்டும்
தனது ஒவ்வொரு அடியையும் கணக்கிட்டுக்
கொண்டும், தன்னைத்தானே வியந்து
பாராட்டிக்கொண்டும் இருக்கிறானோ
அவன் அபாயகரமான வகையில்
அகந்தையின் மீது
காதல்வயப்பட்டவனாவான்!

'ஆன்மீகம்' எனும் பெயரில் அவன்
மூழ்கியிருப்பது அகந்தையின் 'தன்மீகம்'!

      *

ஆன்மீகம் என்பது
ஆன்மாவைச் சார்ந்திருப்பது,
ஆன்மாவைச் சேருவது
ஆன்மாவாய் மலர்வது
என்பதைத் தவிர வேறெதுவுமல்ல!

'தன்மீகம்' என்பது
அகந்தையைச் சார்ந்திருப்பது,
அகந்தையில் மூழ்கியிருப்பது,
அகந்தை ஊதிப் பெருப்பது
என்பதல்லாமல் வேறென்ன?

    *

நீ மிகவும் சிரமப்பட்டு
தொடர்ந்து எதிர்வாதங்களை
முன் வைத்து உனது நிலைப்பாட்டை
நிறுவ முயல்வதன் நோக்கம் என்ன?

நீ  பிரமைகளின்றி முறையாக
ஆன்மீக வழியில் செல்கிறாயெனில்
எவரது பாராட்டும்  அங்கீகாரமும்
ஊக்குவிப்பும் உனக்கு அதிகப்படியாக
உதவப்போவதில்லை!

உனக்கு நீயே உதவிக்கொண்டு
உனது தவறுகளை நீயே திருத்திக்கொண்டு
பின்னிட்டுப்பார்க்காமல் முன்னோக்கிச்
செல்வாயெனில் எவரது விமர்சனமும்
ஊக்கங்கெடுப்பும் உனை ஒன்றும்
செய்யவியலாது!

உனது ஆன்மீக வெற்றியின்
உண்மையான அடையாளம் நிரூபணம்
இறுதியான அங்கீகாரம் பாராட்டு யாவும்
உனக்கும் உனது ஆன்மாவுக்கும் இடைவெளி
இல்லாமல் போவதில் மட்டுமே
அடங்கியுள்ளது!

நீ இன்னும் அகந்தையாய் நீடிக்கிறாயா
அல்லது  ஆன்மாவாய் மலர்ந்து விட்டாயா
என்பதைக்கண்டறிந்து சலுகை காட்டாமல்
விலக்கு அளிக்காமல் உனது தீர்ப்பை எழுத
வேண்டியவன் நீயே!

      *

மா.கணேசன்/ 08.06.2016







No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...