Tuesday, 28 June 2016

விசார இல்லத்து விசனங்கள்!




உயர்ந்த மலையுச்சியிலிருந்து
வரும் தெளிந்த நன்னீர் அருவி
இங்கிருப்பது தெரிந்தும்
அவர்களுக்கு இங்கு வந்து
தண்ணீர் அருந்துவதற்கு
மனமில்லாதிருக்கிறது!
மாறாக அவர்கள்
தம்மிடத்திலேயேயுள்ள
சேற்று நீரையே
அருந்துகின்றனர்!
01.08.2011

   *

சமீப காலங்களில்
நான் தனியே என்னுடனே
பேசுவதும், புலம்புவதும்
என்னை நானே தேற்றிக்
கொள்வதுமாக இருக்கிறேன்!
சுவருடனும் காற்றுடனும்
மரங்களுடனுன் பேசுகிற
கலையை சீக்கிரமாக நான்
கற்றுக்கொண்டு விடுவேன்
போலுள்ளது!
அல்லது ஒருவேளை நான்
மௌனியாகி விடுவேனோ!
16.08.2011

   *

அடடா,
என்னுடைய உலகம்தான்
எவ்வளவு சுருங்கிப்
போய்விட்டது!
உங்கள் ஐந்தாறு பேர்களுடன்
அது முடிந்து விடுகிறது!
போகிற போக்கில் அது
இன்னும் சுருங்கி
என்னுடனேயே
முடிந்து விடுமோ!?
16.08.2011

   *

ஆகா! எவ்வளவு அருமையான
வீட்டுப்பிராணிகள் நீங்கள்!!!!!
16.08.2011

   *

ஆ! இப்பதிவுகளிலேயே
இந்தக்கருத்து, இந்த
வெளிப்பாடு
நன்றாக உள்ளது என்று
சொல்லாதீர்!
எல்லாமே ஒரே பாடலின்
தொடர்ச்சி தான்!
முற்பகுதி இல்லாமல்
இடைப்பகுதியோ
இடைப்பகுதி இல்லாமல்
பிற்பகுதியோ இல்லை!
17.08.2011

    *

நீங்கள் இங்கு வரும் போதெல்லாம்
என்னிடமுள்ளவற்றில் மிகச்
சிறந்தவற்றை எடுத்து உங்களுக்குக்
கொடுத்திருக்கிறேன்!
பதிலுக்கு நீங்கள் உங்களிடமிருந்து
எதை எனக்குக் கொடுத்தீர்கள்,
சொல்லுங்கள்?
ஒன்றே ஒன்றைச்
சொல்லுங்கள்!
குறைந்தபட்சம்
ஒரே
ஒரு
'உட்-பார்வை'?
17.08.2011

    *

முட்டாள்களா, அழைத்தால்தான்
வருவீர்களா?
17.08.2011

    *

இந்த ஆன்மீக விசார விவகாரத்தை
இத்துடன் ஊற்றி மூடிவிடலாம் என்று
எண்ணுகிறேன்!
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
17.08.2011

    *

இங்கு வந்த பிறகு
நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்றே ஒன்றுதான்!
அது, விசார விதிகளுக்கேற்ப
உங்களை நீங்கள்
மாற்றிக்கொள்வது மட்டுமே!
உங்களுக்கேற்ப
விசார விதிகளை மாற்றுவது
விசார இல்லத்தை
கேளிக்கை-விடுதியாக
ஆக்கிவிடும்!
31.08.2011

   *

நான் உங்களிடையே  இருந்தும்
இல்லாதவனைப்போல்
உணர்கிறேன்!
உங்கள் காதுகள் ஒலியை
மட்டுமே கேட்கின்றன!
என் சொற்களின் அர்த்தத்தை
அவை கிரகிப்பதில்லை!
10.12.2012

   *

இனி, விசாரம் பதிவுகளாக வலைப்பதிவில்
ஏற்றப்பட்டு ஒரு-வழிப் பேச்சாகத்தொடரும்!
உமது குறிப்புரைகள், பதிலுரைகள்,
விமர்சனங்கள், விளக்கங்கள், கேள்விகள்,
சந்தேகங்கள் எல்லாவற்றுக்கும்
வலைப்பதிவுகளே
பதில்களாயிருக்கும்!
23.06.2016

   *

உங்களை நான் கைவிடவில்லை!
உங்கள் கைகளில் விட்டுள்ளேன்!
23.06.2016

   *

இனி நான் உங்களுடன் அமர்ந்து
பேசப்போவதில்லை!
அதற்குரிய பொறுமையை நான்
இழந்து விட்டேன்!
என்னுடன் அமர்ந்து பேசுவதற்கான
அடிப்படையை
நீங்கள் இழந்துவிட்டீர்கள்!

அர்த்தமறியா உங்கள் வாழ்க்கைக்கு
ஊறுகாய் அல்ல நான்!
தொடங்காத உங்கள் பயணத்திற்கு
வழித்துணையும் அல்ல!
உங்கள் அபிப்பிராயங்களை அரங்கேற்ற
உடந்தை யுமல்ல!
நீங்கள் இலவசமாகப் பிரயாணிப்பதற்கு
என் முதுகில் இடமுமில்லை!

முப்பதாண்டுப் (பரி)சோதனைக்காலம்
முடிந்தது!
வெற்றி-தோல்வி இல்லாமல்!
17.06.2016

    *

எனக்கு சீடர்கள் எவருமில்லை
என்னைத்தவிர!
எனக்கு குருவும் எவருமில்லை
என்னைத்தவிர!
17.06.2016

    *
நான் ஒரு குரு அல்ல, ஆனாலும்
ஞானத்தின் அடிப்படைகளை
அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்!
ஆண்டுகள் பல சென்றன, கடைசியில் தான்
தெரிந்தது, அவர்கள் காத்திருந்தது
ஞானத்திற்காக அல்ல
தாயத்துக்களுக்காக!
17.06.2016

    *

நான் உங்களுக்காகக் காத்திருந்தேன்
என்று சொல்ல முடியாது, ஆனால்
அபரிமிதமான எனது ஓய்வு நேரத்தை
கொஞ்சம் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்!

இப்போதெல்லாம் என் ஓய்வு நேரத்தையும்
சேமிக்கத்தொடங்கிவிட்டேன்!
17.06.2016

     *

போலிச்சீடர்களுக்குக் குருவாக இருப்பவன்
போலிக் குருவாகத்தானே இருக்கமுடியும்!
ஆகவே, குருஸ்தானத்திலிருந்து நான் விலகிக்
கொண்டுவிட்டேன்!
17.06.2016

     *

முன்பின் தெரியாதவர்களாயிருந்தோம்!
முன்பின் தெரிந்து கொண்டோம், மீண்டும்
முன்பின் தெரியாதவர்களாகிவிட்டோம்!
23.06.2016

     *

ஆனால், உங்களுக்கு நான் சொல்ல
வேண்டிய எல்லாவற்றையும் சொல்லி
விட்டேன்!
எதையும் நான் உங்களிடம் மறைக்க
வில்லை!
பேச்சுவாக்கில் அனைத்து ரகசியங்களையும்
சொல்லிவிட்டேன்!
ஆனால், அவற்றை நீங்கள் புரிந்து
கொள்ளும்வரை அவை புரியாத
புதிர்களாகவே, ரகசியங்களாகவே
தொடரும்!
ரகசியங்களை மறைத்து வைக்காததின்
ரகசியம் இதுதான்!
உங்களுடைய அலாதியான அலட்சியப்
போக்கினால் அப்பொக்கிஷங்களை
நீங்கள் புரிந்துகொள்ளாமல்
இழந்து விட்டிருக்கும் வாய்ப்புகள்
அதிகம்!
25.06.2016

    *

என்னை நீங்கள் இனி எதிர்பார்க்க
மாட்டீர்கள் என நம்புகிறேன்!
ஏனெனில், நீங்கள் நிகழ்த்தும்
எந்த  அற்புதத்திற்கு சாட்சியாக
நிற்க என்னை எதிர்பார்ப்பீர்கள்?

ஆகவே என்னை அழைக்காதீர்கள்!
உங்களுக்கு நீங்களே சாட்சியாக
இருங்கள்!
25.06.2016

    *
உங்களைக் கட்டுப்படுத்தும், நெறிப்படுத்தும்
ஆசான் பொறுப்பிலிருந்து என்னை நான்
விடுவித்துக்கொண்டதால் நீங்களும்
விடுவிக்கப்பட்டீர்கள்!
ஆகவே நீங்கள் சுதந்திரமாக உங்களது
பொறுப்பில் எப்போதும் போல் இருக்கலாம்!
உங்கள் மீது எனக்கு வெறுப்பும் இல்லை
விருப்பும் இல்லை!
என்ன, உங்களுடன்  இப்போது எனக்குப்
பொறுமையில்லை!
25.06.2016

    *

என்னைப் பின்பற்றாதீர்கள், அது
ஆபத்தானது!
நான் உங்களை ஏற்கனவே செய்யச்
சொன்னவற்றை மட்டும் செய்யுங்கள்!
வாழ்க்கை-விதிகளைத்தான் நான்
சொன்னேன்!
அவை கடினமானவை என்றாலும்
அவற்றைத்தான் நிறைவேற்றச்
சொன்னேனே தவிர என்னைப்பின்
பற்றச்சொல்லவில்லை!

தவறான உங்களது வழிகளிலிருந்து
உங்களை திசைப்படுத்தினேன்!
எவரையும் நான் தவறாக
வழி நடத்தவில்லை என்பதில்
எனக்கு மகிழ்ச்சி உண்டு!

ஏனென்றால், எவரும் உங்களை உங்களது
வழக்கமான வழியிலிருந்து சிறிதும்
மாற்றமுடியாது என்பதில் எனக்கு
அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு!
26.06.2016

    *

ஆன்மீக உயரங்களை  என்னால் எட்ட
முடியாது என்பவன் தனது இயலாமையைச்
சொல்லவில்லை!
மாறாக, தான் ஏற்கனவே தெரிவுசெய்துவிட்ட
ஆழங்குறைந்த வாழ்க்கையில் தான்
அமோகமாக இருக்கிறேன்
என்கிறான்!

தனது விருப்பமின்மையை நேரடியாகச்
சொல்லாமல், ஆன்மீகமெல்லாம்
மகான்களுக்குத்தான் சாத்தியம் தமக்கல்ல
என்று பசப்புகிறான்!
ஆனால், அவன் தவிர்க்க விரும்புவது
ஆன்மீகத்தையல்ல, மாறாக தனது சொந்த
வளர்ச்சியையும் முழுமையையும் தான்!
தனது அசலான உயரத்தை அடைய
முயற்சிக்காமல், சமூக அந்தஸ்து ஏணியில்
உயர ஆசைப்படுகிறான்

தன்னையறிதலைத் தலைகீழாகப் புரிந்து
கொண்டவன் திடீர் அறிவு ஜீவியாகி தன் மனதின்
இயல்புகளைப் பகுப்பாய்வு செய்து தனது மனக்
கோணல்களையும், திரிபுகளையும் கண்டு
வியந்து தன்னை மெச்சிக்கொள்கிறான்!

அவன் என்ன செய்வான், உள்ளதைத்தானே
அவன் கொண்டாட முடியும்!

பகட்டும் கவர்ச்சியுமான உலக விஷயங்களுக்கும்
பொருட்களுக்கும், மதிப்புகளுக்கும் தன்னைக்
கொடுத்துவிட்டவனுக்கு ஆன்மீகம் வெறும்
ரசனைக்குரியது மாத்திரமே தவிர அது
அவனுக்கு ஒரு ஆத்மார்த்தத்
தேவையல்ல!
26.06.2016

    *
நான் ஒரு ஆன்மீகவாதி அல்ல!
எனது ஆன்மீகம் முற்றிலும் வேறானது!
நான் ஒரு ஆன்மீககுருவும் அல்ல!
ஆனால் ஒரு குருவுக்கான தகுதிகள்
என்னிடம் இல்லாமலில்லை!
ஒரு உண்மையான சீடனுக்குரிய
தகுதிகளைக்கொண்ட ஒருவனுக்காகக்
காத்திருந்ததுதான் மிச்சம்!
முப்பதாண்டு குரு-பயிற்சியில் ஒரு
தேர்ந்த குருவாக உருவானதும்
எனது பயிற்சிகளை முடித்துவிட்டு
தற்போது ஓய்வெடுத்துக்கொண்டு
விட்டேன்!
26.06.2016

    *

முப்பதாண்டு காலம்
காதுகேளாதோருக்கான
பள்ளியை நடத்தி வந்ததின்
விளைவு : முடிவில் நான்
ஊமையாகிப் போனேன்!
26.06.2016

    *
ஒளியை விழுங்கும் கருந்துளைகளைப்போல
அவர்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு
எதுவுமே சொல்லப்படாதது போல நடந்து
கொண்டதுதான் அதிக விசனத்திற்குரியது!
26.06.2016

    *

விசார மையத்தை நான் இழுத்து
மூடிவிடவில்லை!
பங்கேற்பாளர்கள் நீங்கள்
ஒவ்வொருவரும் தான்
மூடுவிழாவிற்கான பங்களிப்பைச்
செய்தீர்கள்!
இது சீர்தூக்கிப்பார்க்காது எடுத்த
திடீர் முடிவல்ல
பலவருடங்களாக ஆறப்போட்டு
நிகழ்ந்தேறிய ஒன்று!
வாய்ப்பு திறந்திருந்தபோது பயன்
படுத்தாதது உங்கள் தவறு!
மையத்தை மூடியது குற்றமல்ல, திறந்த
குற்றத்திற்குப் பரிகாரம்!
26.06.2016

    *

இனி, மறுபரிசீலனை செய்யவேண்டியது
நீங்கள் உங்களைத்தான்!
27.06.2016

    *
அனைத்து பிரமைகளுக்கும்
பின்னால் உள்ள பிரமை!
அனைத்து மட்டுப்பாடுகளுக்கும்
ஆதாரமான மட்டுப்பாடு!
அனைத்துக் கற்பிதங்களுக்கும்
ஆணி வேரான கற்பிதம்!
அனைத்து பிறழ்ச்சிகளுக்கும்
மூலகாரணமான பிறழ்ச்சி!
அனைத்துத் தடைகளுக்கும்
அடியிலுள்ள பெருந்தடை!
அனைத்துப்பிரச்சினைகளுக்கும்
அடிப்படையான அந்த ஒன்றை
மாற்ற உங்களால் முடியாது!
ஏனென்றால் உங்களால் மிகவும்
நேசிக்கப்படும் அகந்தையாகிய
நீங்கள் தான் அந்த ஒன்று!
27.06.2016

    *

உங்கள் கடந்த காலத்தை
தற்காலிகமாக மறந்திருப்பதற்குப்
பெயர் தான் தியானம் என்றால்,
அதை நிரந்தரமாக உங்கள் உனர்வில்
குறுக்கிடாமல்செய்வதற்குப்
பெயர் தான் ஞானம்!
ஆனால், தியானம் உங்களுக்குச்
சாத்தியமில்லை!
ஏனென்றால், உங்களால் உங்கள்
கடந்த காலத்தை ஒரு நிமிடம் கூட
மறந்திருக்கமுடியாது!
ஏனென்றால், கடந்தகால ஞாபகங்களின்
தொகுப்புதானே நீங்கள்!
ஞானமும் உங்களுக்குச்
சாத்தியமில்லை!
ஏனென்றால், உங்களால் உங்கள்
அறிவீனத்தின் குறுக்கீட்டை
நிறுத்தமுடியாது!
ஆனால், கடந்தகாலத்தை மறப்பது,
தியானம், ஞானம், . . . .இவை
எதுவும் ஆன்மீகம் அல்ல!
உங்களிடம் உணர்வுத்துடிப்பு உள்ளதா
என்பதை மட்டும் உணருங்கள்!
27.06.2016

   *

வாழ்க்கையின் மேற்புறமே இவ்வளவு
இனிமையையும், அழகையும், ஆனந்தத்தையும்
அற்புதங்களையும் கொண்டுள்ளதென்றால்

வாழ்க்கையின் உட்புறமும், ஆழமும்
எவ்வளவு இனிமையையும், அழகையும்,
ஆனந்தத்தையும் அற்புதங்களையும்
கொண்டிருக்கும்!

ஆனால், இனிமை, அழகு, ஆனந்தம், அற்புதங்கள்
இவை யாவும் ஆழத்தில் உறையும் அர்த்தத்தின்
மேலோட்டமான வெளிப்பாடுகளே!

வாழ்க்கையின் சாரமான அர்த்தம் தரும் நிறைவை
முழுமையை மேற்புறத்திலுள்ள எதுவும்
அளிக்கமுடியாது!
27.06.2016

   *

மனிதர்களில் சிந்திக்கும் மனிதன்
சிந்திக்காத மனிதன் என இரண்டு
வகை கிடையாது!
சிந்திப்பவன் தான் மனிதன்
சிந்திக்காதவன் ஒரு விலங்கு!
சிந்திக்க இயலாதவனாக எவரும்
பிறப்பதில்லை!
சிந்திக்கத்தவறுபவர்கள்
ஏராளம், ஏராளம்!
வாழ்க்கையின் மிக மையமான
மகா கேள்விகள்:

* பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும்
  (தனக்கும்) உள்ள தொடர்பு யாது?
* வாழ்க்கையின் அர்த்தம், இலக்கு
   யாவை?
* உண்மையில் 'தான்' யார்?
* மெய்ம்மை என்பது யாது?
* மெய்ம்மைக்கும் தனக்கும்
   உள்ளதொடர்பு யாது?
* நான் ஏன் இருக்கிறேன்?

இக்கேள்விகளுக்கு தானே நேரடியாக
பதில்களைக் கண்டடையாதவன் ஒரு
மனிதனாக வாழ்ந்ததற்கான
அடையாளம் அற்றவனாவான்!
27.06.2016

    *
"சகமனிதன்" என்பது வெறும் ஒரு கோட்பாடு!

நான் விதைக்கும் போது என்னுடன் சேர்ந்து
விதைத்தது யார்?
நான் நடும்போது உடன் இணைந்து நட்டது யார்?
நான் தண்ணீர் பாய்ச்சும் போது உடன் நின்று
வாய்க்கால் பறித்தது யார்?
நான் அறுக்கும்போது உடன் சேர்ந்து அறுத்தது யார்?
எவருமில்லையே!

என்னுடன் பயணிக்காதவன் எனக்கு நண்பன்
என்று சொல்லாதிருப்பானாக, அதற்கு அவன்
தகுதியில்லாதவன்!


எனக்கு நானே நண்பன், சகமனிதன்,  எல்லாமும்!
28.06.2016

    *

வண்ணத்துப்பூச்சி ஒரு காலத்தில்
கம்பளிப்புழுவாக இருந்தது தான்!

வண்ணத்துப்பூச்சியாக  மாறுவதற்காகவே
கம்பளிப்புழு இருக்கிறது!

இரண்டின் வாழ்க்கையும் வேறுவேறாயினும்
கம்பளிப்புழுவும் வண்ணத்துப்பூச்சியும்
சந்தித்துக்கொள்ளவும், உரையாடவும்
செய்யலாம்!

அவற்றின் சந்திப்பும், உரையாடலும்
வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையைப் பற்றியதாயும்
கம்பளிப்புழு வாழவிருக்கும் வாழ்க்கையைப்
பற்றியதாயும் இருக்கும் பட்சத்தில்
அர்த்தமுள்ளதாக அமையும்!

வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து முடித்த
வாழ்க்கையைப் பற்றியதாயும்
கம்பளிப்புழு வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையைப் பற்றியதாயும்
இருக்கும் பட்சத்தில் யாவும்
அனர்த்தமாகிவிடும்!

     *

மா.கணேசன்/28.06.2016












No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...