
தற்கொலைச் செய்திகளைப் படிக்காதீர்கள்
பேசாதீர்கள்!
முதலில், உங்களுடைய தற்கொலையைத்
தவிர்த்திடுங்கள்!
தன்னையறியாமல், அர்த்தமறியாமல்
வாழ்வதென்பது தற்கொலையல்லாமல்
வேறென்ன?
நிகழ்ந்து போன தற்கொலைகளுக்கான
காரணங்களைத் தேடாதீர்கள்!
நிகழ்ந்துகொண்டிருக்கும் தற்கொலைகளை
தள்ளிப்போடாமல் தவிர்த்திடுங்கள்!
இத் தற்கொலைச் சமுதாயத்தில், 'தற்கொலை'(யா)?
அட! வாழ்முறை எவ்வாறு 'செய்தி'யாகும்?
அபத்தத்திலும் அபத்தம் இது தானோ!
வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்காதது தான்
தற்கொலைகளுக்கான ஒரே காரணம்!
பிற யாவும் நொண்டிச் சமாதானங்களே!
பொய்யானதை, பகட்டானதை, போலியானதை
மட்டுப்பாடானதை, தற்காலிகமானதை, முழுமை
யற்றதைத் தவிர்ப்பதே வாழ்க்கையைத்
தேர்ந்தெடுப்பது என்பதாகும்!
வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்காத சமுதாயத்தில்
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை,
அநீதி, அக்கிரமம், ஏற்றத்தாழ்வு மலிந்து விளங்கும்!
இவை தற்கொலையின் பன்முக வெளிப்பாடுகள்!
தலைகீழ் மதிப்பீடுகளைத் தழுவிக்கொண்ட
சமுதாயத்தில், வீடென்ன, நாடென்ன? வீட்டைவிட்டு
குழந்தைகள் ஓடிப்போனாலென்ன? மதிப்பெண்கள்
குறைந்த மாணவர்கள் செத்தாலென்ன?
வீணே கவலைப்படுவானேன்?
கவலைக்கிடமான உங்கள் வாழ்க்கை முறையில்
கவலைகளுக்கேது அர்த்தம்? ஐயத்திற்கிடமான உங்கள்
அக்கறைகள், தவறான லட்சியங்களின் தூண்டில்களில்
உங்கள் குழந்தைகளை சரியாக மாட்டுவது
குறித்தது தானே!
அசலான வாழ்க்கை அடுத்த நாள் தடித்த எழுத்துக்களில்
தலைப்புச்செய்தியாக வருவதில்லை!
அது அன்றாட நாட்டு நடப்புகளிலும் வெளிப்படுவதில்லை!
ஏனெனில், அது நிகழ்வுகள், சம்பவங்களின் தொடரால்
எட்டப்படுவதில்லை!
மாறாக, உங்கள் பொறாமை, போட்டி-மனப்பான்மை
பேராசை, துவேஷம், வஞ்சகம், ஏமாற்றுத்தனம்,
சுய- நலம் எல்லாவற்றையும் நீங்கள் கொன்று
விடும் போது அகத்தே தோன்றும்
முழுமை-உணர்வே அது!
^^^^
இதுதான் உங்கள் பிரச்சினை!
வாழ்க்கையை நீங்கள் எப்போதும்
மேற்புறத்திலேயே வாழ்ந்து திளைக்கிறீர்!
ஒருபோதும் ஆழத்திற்குச் செல்வதில்லை!
பெரிதாக அசம்பாவிதமோ, துன்பமோ,
விபத்தோ, தோல்வியோ நேரும் வரையில்
ஆழங்குறைந்த குட்டை வாழ்க்கை ஆனந்தம்
தருவதாயுள்ளது!
சகமனிதர்கள் உங்களைப் பின் தள்ளி
முன் செல்லும் போது, சமூகம் உங்களைக்
கண்டுகொள்ளாது போகும் போது, உடலும்
உங்களுக்கு ஒத்துழைக்காத போது
உங்களுக்குள்ளே சுருங்குகிறீர்!
உள்ளே போதிய இடத்தை ஆயத்தம் செய்யத்
தவறியதால் சுருங்க இடமில்லாமல் சுக்கு
நூறாக உடைந்து போகிறீர்!
^^^^
நீர் விரும்பியவாறு வாழ்வதைச்
சுதந்திரம் எனக்கருதுகிறீர்!
ஆனால் உமது விருப்பங்களின்
அடிமையாக நீர் இருப்பது
உமக்குத் தெரிவதில்லை!
துய்ப்பு, நுகர்ச்சி, இச்சை நிறைவு,
மனக்கிளர்ச்சியூட்டும் விஷயங்கள்,
பொருட்கள், கேளிக்கைகள் . . .
இவைதானே உமது விருப்பங்கள்!
எவ்வளவு மேலோட்டமானது
உமது ரசனை!
பிழைப்புக்கும் வாழ்க்கைக்கும்
வித்தியாசம் அறியாத நீர்
உடனடிப்பயன்களைத்தேடியலைந்து
பிறவிப்பயனைத் தொலைத்து
விடுகிறீர்!
உமது விருப்பத்தின் வழி செல்வது
தற்கொலைத்தனமானது!
ஏனெனில், வாழ்க்கையின் விருப்பம்
என ஒன்று உள்ளது!
அது உமக்கு ஒரு ஒப்பற்ற
இலக்கை நிர்ணயித்துள்ளது!
அந்த இலக்கை அடைபவர்
அரிதிலும் அரிதான சிலரே!
ஏனெனில், தம் விருப்பங்களைத்
தள்ளி வைத்து வாழ்வின் விருப்பத்தை
முதன்மையாகக் கொள்பவர் சிலரே!
மனிதா, உனது விருப்பத்திற்கும்
வாழ்வின் விருப்பத்திற்கும் உள்ள
வித்தியாசம் நீ அறிவாயா?
மனிதா, மகிழ்ச்சி, நிறைவு, அமைதி
பாதுகாப்பு இவையே உனது
விருப்பங்களின் இலக்குகள்!
ஆனால், இவற்றை நீ, நிரந்தரமற்ற
விஷயங்களிலும், பொருட்களிலும்,
உறவுகளிலும் தேடுகிறாய்
ஆகவே,இவற்றின் மூலம் நீ அடையும்
மகிழ்ச்சி, நிறைவு, அமைதி, பாதுகாப்பு
எதுவும் நீடித்து நிலைப்பதில்லை!
ஆகவே நீ மேன்மேலும் அவற்றை வேறு
புதியபுதிய விஷயங்களிலும்,
பொருட்களிலும், உறவுகளிலும்
தேடித் தோற்று விரக்தியுறுகிறாய்!
உனது நோக்கம் சரியானதே!
ஆனால், உனது தேடலின் திசைகளும்
இடங்களும் பொருட்களும் தவறானவை!
மனிதா, மகிழ்ச்சி, நிறைவு, அமைதி
பாதுகாப்பு இவையே வாழ்க்கையின்
விருப்பமும்!
இவை மட்டுமா, இன்னும்
அர்த்தம், ஆனந்தம், முக்தி, மோட்சம்
முழுமை, மரணம்-கடந்த -பெருவாழ்வு
ஆகியவை அடங்கிய அரிய
ஆன்மீகப் புதையலையல்லவா
கொண்டுள்ளது!
ஆனால், வாழ்க்கை இவற்றை உனக்கு
முழுமையாகவும், நிரந்தரமாகவும்
அளிப்பதற்காகக் காத்திருக்கிறது!
அந்த அரிய, பொக்கிஷப் புதையலை
உன்னுள்ளே ஆழத்தில் மறைத்து
வைத்துள்ளது!
அதை நீ கண்டடைய வேண்டும் என்பதே
வாழ்க்கை உனக்கு நிர்ணயித்துள்ள
இலக்கு!
அதற்கான திறவுகோலையும் வாழ்க்கை
உன்னிடம் தான் கொடுத்து
வைத்துள்ளது!
உனது "உணர்வு" தான் அந்தத்
திறவுகோல்!
உண்மையில் நீ தான் அந்தப்
புதையல் பேழை!
உன்னை நீயே உணர்வு கொண்டு
திறந்து உன்னுள் ஆழ்ந்து சென்று அந்த
ஆன்மீகப் பொக்கிஷத்தை
அள்ளிக்கொள்ள வேண்டும்!
ஆனால், நீயோ அனைத்துப்
பொக்கிஷங்களையும் உனக்குள்ளே
வைத்துக்கொண்டு
பணத்தையும், பொன்னையும்,
பொருட்களையும் பெரிதெனத் தேடி
அலைந்து கொண்டிருக்கிறாய்!
மனிதா, நீ ஒன்றை தெளிவாகப் புரிந்து
கொள்வாயாக :
உனக்கு வெளியே மனதைக்கவரும்
ஆயிரம் விஷயங்கள், பொருட்கள்,
தங்கம், வைரம், வைடூரியம்,
இரத்தினங்கள் எல்லாம்
இருக்கலாம்!
ஆனால், நீ உண்ணும் உணவு உன்னுள்,
உனது உடலில், இரத்தத்தில் கலப்பதுபோல
உனது உணர்வில் கலக்காத எதுவும்
உனக்குப்பயன் தராது!
உண்மை, மெய்ம்மை, வாழ்க்கை, அர்த்தம்
ஞானம், முழுமை எதுவாயினும் உன்னுள்
உன்னால், உனது உணர்வால்
கண்டுபிடிக்கப்படாத, தழுவப்படாத
எதுவும் உனக்குரியதாகாது!!
^^^^
தயவுசெய்து வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்!
உங்களது விருப்பப்படி நீங்கள் எதையும்
தேர்ந்தெடுக்காதபோது
வாழ்க்கை உங்களைத் தேர்ந்தெடுக்கும்!
முக்தியையும் தரும்!
வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுக்காவிடில்
மரணம் உங்களைத் தேர்ந்தெடுத்து விடும்!
^^^^
மா.கணேசன்/21.01.2016
No comments:
Post a Comment