
'உங்கள் வாழ்க்கையை'
அப்படியே ஒரு ஓரமாக
ஒதுக்கி வைத்துவிட்டு
வாழ்க்கையைப் பாருங்கள்!
<>
(படிக்கட்டைப் பயன் படுத்துங்கள்!)
தற்கொலையே!
இலக்கைத்தவறவிடுவது
வழியைப்ப்பற்றிக்கொண்டு
அவை "வாழ்க்கை"யல்ல!
ஏற்பாடுகளே, படிக்கட்டுகளே தவிர
"வாழ்க்கை"யை எட்டுவதற்கான
உள்ளவையனைத்தும்
தனியம்சம் உள்ளது!
"வாழ்க்கை" என்றொரு
உண்மையில்
<>
உண்மையில் நீங்கள் சிந்திப்பீரெனில்
வாழ்க்கை பற்றிய உங்கள் சிந்தனையைக்
கட்டமைக்க, கட்டுப்படுத்த, தீர்மானிக்க
எதற்கும், எவருக்கும், ஏன், உங்களுக்குமே
அதிகாரமில்லை!
எந்த அடைப்புக்குறிகளுக்குள்ளும் அடங்காது
வாழ்க்கை!
<>
வாழ்-காலம் வாழ்க்கையல்ல!
வாழ்க்கையில் தேவைகள் உள்ளன
ஆனால், தேவைகளே வாழ்க்கையல்ல!
வாழ்க்கையில் நிலைமைகள், சந்தர்ப்ப
சூழ் நிலைகள், நிகழ்வுகள், சம்பவங்கள்
விபத்துகள் பேரிடர்கள் இடம்பெறத்தான்
செய்கின்றன!
அவை வாழ்வின் உட்-கூறுகளை இடம்
மாற்றியும் புரட்டியும் போடுகின்றன!
உள்ளவற்றில் நம்மையும் ஒரு உருப்படியாகக்
காணும்வரை நாமும் பாதிக்கப்படுவோம்!
ஆனால், அவை வாழ்க்கையைத் தொடுவதில்லை!
ஏனெனில் வாழ்வின் உட்-கூறுகள் வாழ்க்கையல்ல!
வாழ்வில் இன்பம் துன்பம் இரண்டும் உள்ளன!
ஆனால், அவையும் வாழ்க்கையல்ல!
இவையே வாழ்க்கையென வாழ்ந்திடும் வரை
உண்மையில் நாம் வாழ்வதில்லை!
ஏனெனில், எதையும் சார்ந்திருப்பதில்லை
வாழ்க்கை!
<>
வாழ்க்கை : தொடர்ந்து தன்னைத்தானே
கடந்து செல்லும் பேரியக்கம்!
<>
"வாழ்க்கைப் பிரச்சினைகள்" என்பது
முரண்பாடான சொற்களின்
சேர்க்கையாகும்!
வாழ்க்கையும் பிரச்சினைகளும்
சேர்ந்து செல்லாது!
வாழ்க்கையைத் தரிசிக்கத்
தவறியவர்கள் பிரச்சினைகளை
வாழ்ந்து கொண்டுள்ளனர்!
<><>
(துன்பம், துயரம், மற்றும் மரணத்தின்)
கலப்படமேயில்லாத தூய வாழ்க்கை
ஒன்றுள்ளது என நான் சொன்னால்
அது வெறும் கற்பனை என்கிறீர்கள்!
அதைக் கண்டுபிடிக்காதவரை நீங்கள்
சொல்வது உண்மையே! ஆனால்,
அவ்வாழ்க்கை குறித்த கற்பனைகூட
இல்லாத உங்கள் வாழ்க்கை எவ்வளவு
பொய்யானது!
<>
சமூகம் : பிழைப்புக்கான பயன்களைத்தேடி
பிறவிப்பயனைத் தொலைத்திட்ட
பெருங்கூட்டம்!
<>
வாழ்க்கையை ஒரு புதிராகக் கண்டு
நீங்கள் அதிசயிக்கவில்லையெனில்
அதை வெறும் நடைமுறை விவகாரமாகச்
சுருக்கிவிடுவீர்கள் தற்போது நீங்கள்
வாழ்ந்து செல்வது போல!
வாழ்க்கையை, வரப்புச்சண்டையாக
எல்லைப்பிரச்சினையாக, சாதிச்சண்டையாக
சோற்றுப்பிரச்சினையாக, வர்க்கப்போராட்டமாக
எலிப்பந்தயமாக, சாக்கடை அரசியலாக
மாற்றியது வாழ்க்கையல்ல!
<>
உண்மையில் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன
என்பதைக் கண்டுபிடிப்பதே வாழ்க்கையின்
குறிக்கோள் ஆகும்!
<>
வாழ்க்கை என்பது
விடுவிக்கப்படவேண்டிய
அற்புதப்புதிர்!
அது வாழ்ந்து தீர்க்கப்படவேண்டிய
பிரச்சினைகளின் தொகுப்பு அல்ல!
<>
உணவு, உடை, உறையுள், உறவுகள்
இவைகளச் சுற்றி வாழ்பவன்
விலங்குமனிதன்!
உலகம், உணர்வு, கடவுள், உண்மை
இவைகளைச்சுற்றி வாழ்பவன்
அசல் மனிதன்!
<>
இன்னும் எத்தனைகாலம் நீ
கட்டடத்தின் அடித்தளத்தை
அமைத்துக் கொண்டிருப்பாய்?
எப்போது அதன்மீது பக்கச்சுவர்களை
எழுப்பப்போகிறாய்?
எப்போது அதன்மீது மேற்கூரையை
அமைக்கப்போகிறாய்?
பிறகு எப்போது நீ அதனுள் பிரவேசித்து
வாழப்போகிறாய்?
<>
இன்னும் எத்தனை காலம் நீ
உன் வீட்டின் கீழ்த்தளத்திலேயே
வசித்துக்கொண்டிருப்பாய்?
உன் வீட்டிற்கு ஒரு மேற்தளம்
உள்ளதை நீ அறியாயோ?
உடனே மேலேறிச்சென்று பார்!
அங்கிருந்து நீ அதிகமான
காட்சிகளையும்
புதிய காட்சிகளையும்
விஷயங்களையும் காணலாம்!
உனது புரிதல் விரிவடையும்!
நீ உயர் வாழ்க்கையை வாழ்வாய்!
ஒரு முறை நீ மேற்தளத்திற்குச்
சென்று பார்த்தால், அதன் பிறகு
நீ கீழ்த்தளத்து வாழ்க்கைக்குத்
திரும்பி வர விரும்ப மாட்டாய்!
உண்மையில் நீ மேற்தளத்திற்குச்
சொந்தமானவன்!
<>
எந்த பரிணாம வழிமுறையானது இப்போதிருக்கும்
இந்த இடத்தில் மனிதனைச் சேர்த்ததோ அதுவே
அவனை முன்னேற்றி இன்னும் உயரிய இடத்தில்
கொண்டு சேர்க்கும் என்றால் அது மிகவும்
விரும்பத்தக்க நல்ல விஷயம்தான்!
ஆனால், அவ்வாறு நிகழ வாய்ப்பேயில்லை!
ஏனெனில், மனிதனைக் கொண்டுவரும் வரை
செயல்பட்ட நெடிய பரிணாம வழிமுறை முற்றிலும்
உணர்வற்றது!
உணர்வுபெறுவதற்கான அடிப்படையைக்கொண்ட
மனிதனின் வரவுடன் அவ்வழிமுறை முடிவிற்கு
வந்துவிட்டது!
இனி மனிதனின் உணர்வார்ந்த ஒத்துழைப்பின்றி
பரிணாமம் ஓரடிகூட முன்னோக்கி நகரமுடியாது!
உணர்வின் உதயமாக மனிதனை உதிக்கச்
செய்ததுடன் இயற்கையின் பரிணாமக்கடமை
முடிந்துவிட்டது!
இனி பரிணாமம் என்பது இயற்கையினுடையதோ
அல்லது பிரபஞ்சத்தினுடையதோ அல்ல!
மாறாக, ஒவ்வொரு தனிமனிதனுடைய தனிப்பட்ட
சவாலாகும்!
ஏனெனில், பிரபஞ்சமானது பரிணாம மாற்றத்தின்
மூலமாக தனிமனிதனாக அவதாரமெடுத்துள்ளது!
இனி ஒவ்வொரு தனிமனிதனும் உணர்வில் வளர்ந்து
உணர்வின் உச்சத்தை அடைவதன் வழியாக
பிரபஞ்சமளாவியவனாக ஆகிடுவது மட்டுமே
எஞ்சியுள்ளது!
அந்த உச்சத்தில் மனிதனுடன் பிரபஞ்சமும் முழுமை
பெறுகின்றது!
<>
உங்களில் சிலரைப் 'பாவிகள்' என்று கூட
குறிப்பிட முடியாது!
ஏனெனில், 'பாவிகள்' என்போர் மனந்திருந்த
வாய்ப்புள்ளது!
ஆனால், நீங்களோ உயிர் இருந்தும்
செத்தவர்களாயுள்ளீர்!
உங்களை உணர்வுக்குக் கொண்டுவருவது
சற்றும் சாத்தியமற்றது!
நீங்கள் "பூர்ஷுவா-மனப்பான்மை" மற்றும்
அன்றாடத்தனத்தினால் மரத்துப்
போயுள்ளீர்!
உயர்பேரறிவின் உன்னதங்களை உங்களிடம்
எடுத்துசொன்னால் அவற்றுக்கு என்ன
உத்தரவாதம் என்கிறீர்!
உங்களுடைய ஆன்மாவை முயன்றடைவதன்
அவசியத்தை உங்களுக்குச் சொன்னால்
உமது அகந்தையின் இயலாமையையும்
கீழியல்புகளின் மேலாண்மையையும் வியந்து
போற்றி பாடிக்கொண்டிருக்கிறீர்!
<>
நான் வியக்கிறேன்!
உங்களில் எவரிடமாவது
அசலான ஒரு எண்ணமாவது
ஒரு கருத்தாவது, ஒரு புரிதலாவது
ஒரே ஒரு உட்-பார்வையாவது
உள்ளதா?
உங்களுக்கு உங்களுடைய
உயர்-சுயம் பற்றி யாதொரு சிறு
நேரடிப்புரிதலும் இல்லை!
உமது தாழ்வு-மனப்பான்மையின்
எதிர்-வினை வெளிப்பாடான போலி
'உயர்வு-மனப்பானமை'யைத்தவிர!
ஆகவே முயன்றடைய யாதொரு
இலக்கும் உம்மிடம் இல்லை!
தயவுசெய்து 'மனிதன்' எனும்
பட்டத்தை இயற்கையிடமே
திரும்ப ஒப்படைத்து விடுங்கள்!
குறைந்தபட்சம் அது உங்கள்
'நேர்மை'யின் அடையாளமாக
இருக்குமல்லவா?!
<>
நான் உங்களை அளவுக்கதிகமாய்
குறைத்து மதிப்பிடுவதாக
உங்களுக்குத் தோன்றினால் அது
உங்களை நீங்கள் அளவுக்கதிகமாய்
உயர்த்தி மதிப்பிட்டுள்ளதன்
பிழையால் இருக்கலாம்!
பிரச்சினை என்னவென்றால்
இதற்கு மேல் உங்களைக் குறைத்து
மதிப்பிட உங்களிடம் என்ன
இருக்கிறது?
<>
சிலர் அமைப்பை மாற்றுவதன் மூலம்
மட்டுமே மனிதர்களை மாற்றமுடியும்
என்கிறார்கள்!
சிலர் மனிதர்களை மாற்றுவதன் மூலம்
மட்டுமே அமைப்பை மாற்றமுடியும்
என்கிறார்கள்!
ஆனால், எந்த அமைப்பையும் மாற்ற
முடியாது, ஏனெனில் மனிதர்கள்
மாற மாட்டார்கள்!
ஆகவே, எந்த அமைப்பினாலும் சக்தி
யினாலும் மனிதர்களை மாற்றவும்
முடியாது!
<>
தங்களது அன்றாட வாழ்க்கைச் சுற்றைத்
தாண்டி எவ்வொரு உயரிய குறிக்கோள்
அர்த்தம், செயல்பாடு குறித்தும் சிறிதும்
ஆர்வமில்லாதவர்கள் ஆன்மீகம் கோரும்
உயர் உணர்வு அற்றவர்கள்; அவர்களை
நிந்திப்பது தேவையற்றது!
ஏனெனில், எலிகளையும், தவளைகளையும்
நெறிப்படுத்த முயற்சிப்பது முற்றிலும்
பயனற்றது!
<>
சில ஆன்மீகச் சிந்தனையாளர்கள்
ஆன்மீகத்தையும் லௌகீகத்தையும்
சம நிலையில் பராமரிப்பது பற்றி
கரிசனத்துடன் பேசுகிறார்கள்!
ஆன்மீகம் சிறிதும் துளிர்க்காது
மனித மனங்கள் தரிசாகக் கிடக்கையில்
லௌகீகம் அழிந்து விடுமோ என்கிற
அவர்களது அச்சம் அடிப்படையற்றது!
லௌகீகம் என்பதென்ன?
உலகியல் பொருட்கள் மீதான பற்று,
சௌகரிய சம்பத்துக்கள், சொத்து,
சுகம், செல்வம், பகட்டு, ஆடம்பரம்,
துய்ப்பு, நுகர்வு, இச்சை நிறைவேற்றம்
இவைதானே! சுருங்கச்சொன்னால்
உயிர்-வாழ்தலின் உண்மையான அர்த்தம்,
குறிக்கோள், இலக்கு ஆகியவற்றை அறிந்து
அதற்கேற்ப வாழ்வதைத் தவிர்த்துவிட்டு
வெறுமனே (விலங்குகளைப்போல)
உயிர்-வாழ்வதை நியாயப்படுத்தும்
ஒரு கேடயச்சொல் தானே 'லௌகீகம்'?
அருமை லௌகீகிகளே! அஞ்சாதீர்!
கூண்டோடு மனித இனத்தை
அழிக்கும்வரை லௌகீகம்
அழிந்துவிடாது!
குறிப்பு :
பூமியின் மீது தொடர்ந்து உயிர்வாழும்
ஆசை இருந்தால், 'சீதோஷ்ண நிலை மாற்றம்'
மற்றும் 'புவிக்கோளம் சூடேறுதல்'
என்றால் என்ன என்று இணையம் வழியே
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் முதலில்!
<>
வாழ்க்கையின் அர்த்தம் குறித்த பிரத்யேக
தேடல் இல்லாதவனின் வாழ்க்கை
அர்த்தமற்றது!
<>
அகந்தையின் அனைத்து இடறுகுழிகளின்
அபாயங்களும் எடுத்துச் சொல்லியாயிற்று!
உயர்-சிந்தனையற்ற மேலோட்டமான அன்றாட
உயிர்வாழ்தலின் அர்த்தமற்ற தன்மைகளும்
சொல்லப்பட்டாயிற்று!
பிரபஞ்ச ரகசியங்கள், உயர்- உண்மைகளின்
உன்னதங்களும் வெளிப்படுத்தியாயிற்று!
வாழ்வின் இனிமைகளைச் சொல்லி
உற்சாகமூட்டியும்
மரணத்தின் உணர்த்துதல்களைச் சொல்லி
உலுக்கியும் பார்த்தாயிற்று!
திட்டியும் அதட்டியும் அதிர்ச்சியூட்டியும்
அச்சமூட்டியும் எச்சரிக்கைகள் விடுத்தும்
பார்த்தாயிற்று!
ஐந்து, பத்து, இருபது, முப்பது ஆண்டுகளாக
ஆர்வமுட்டும், ஊக்கப்படுத்தும் அனைத்து வித
முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாயிற்று!
எதுவும் உங்களை அசைக்கவில்லை, சிந்திக்கச்
செய்யவில்லை, உணர்வுக்குக் கொண்டு
வரவில்லை, விழிக்கச் செய்யவில்லை!
ஆகவே, இனியும் நாம் சேர்ந்து பயணிப்பதில்
அர்த்தமில்லை!
<>
மா.கணேசன்/06.06.2016
No comments:
Post a Comment