Sunday, 19 June 2016

சிந்திக்கத் துணிபவர்களுக்கு மட்டும்!



 
கடவுளின் 'சாயலில்' படைக்கப்பட்ட மனிதனே!
சாயலுக்கே இத்தனை ஆரவாரம், அகங்காரம்
ஆணவம் என்றால்,

அசலான நிலைக்கு நீ உயர்ந்தால் என்னாவது?

நப்பாசை கொள்ளாதே -  ஒன்றுமாகாது!

ஏனென்றால், உன் அகந்தையின் உருமாற்றமே
அசலான நிலையை அடைவதற்கான ஒரே வழிமுறை!

உருமாற்றும் உலைத்தீயில் புடமிடப்படுகையில்
சாயலின் பண்புகள் யாவும் உதிர்ந்துவிட
அவ்விடத்தை அசலின் பண்புகள் நிரப்பிடும்!

மனிதா! நீ முட்டாள்தனமாக யோசிக்காதே!
நீ கடவுளாகிடும் போது, அற்பமான மனித ஆசைகள்
உன்னிடம் இருக்காது!

எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல நிலை உனக்கு
வாய்த்தால் நீ நினைக்கும் எதையும் சாதித்துக்
கொள்ளலாம் என கனவு காணாதே!

ஞானியின் ரகசியத்தை உனக்குச் சொல்லுகிறேன்:
எல்லாம் அறிந்த அந்த முழுமை நிலையில் உனக்கு
எந்த எண்ணமும், விருப்பமும், தேவையும் எழாது!

அப்படியே நீ ஒன்றை  விரும்பினாலும்
எல்லாம் வல்ல  நிறைவு நிலையில் நினைத்த
மாத்திரத்தில் எல்லாவற்றையும் நீ செய்துமுடித்துவிட
மேற்கொண்டு செய்ய, சாதிக்க மீதம் எதுவுமிராது!

கடவுளின் சாயலில் படைக்கப்பட்டதின் நோக்கம்
கடவுளின் அசலான நிலைக்கு நீ உயரவேண்டும்
என்பதற்காகத்தான்!

    ><

எனக்கு சீடர்கள் எவருமில்லை
என்னைத்தவிர!
எனக்கு குருவும் எவருமில்லை
என்னைத்தவிர!

    ><

நான் ஒரு குரு அல்ல, ஆனாலும்
ஞானத்தின் அடிப்படைகளை
அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்!
ஆண்டுகள் பல சென்றன, கடைசியில் தான்
தெரிந்தது, அவர்கள் காத்திருந்தது
ஞானத்திற்காக அல்ல
தாயத்துக்களுக்காக!

    ><

நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன்
என்று சொல்ல முடியாது, ஆனால்
அபரிமிதமான எனது ஓய்வு நேரத்தை
கொஞ்சம் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்!

அவர்கள் என்னிடமிருந்து சில சொற்களைத்தவிர
வேறெதையும் கற்றுக்கொள்ளவில்லை!
இக்கூற்று தவறென அவர்களது அகநிலை மாற்றம்
சாட்சிகூறுமெனில் அவர்கள் மேன்மேலும் வளர்க!

அவர்களைக்கொண்டு நான் மிகக் கடினமான
தத்துவங்களை விளக்கும் கலையைக் கற்றுக்
கொண்டேன், உறங்கிக்கிடந்த வெளிப்பாடுகளை
வெளிக்கொணர்ந்தேன்!

என்ன, அவர்கள் என்னை முறையாகப்பயன்படுத்திக்
கொள்ளவும் இல்லை, முழுமையாக அவர்களுக்கு
உதவிட அவர்கள் எனக்கு உதவிடவும் இல்லை
என்பது தான் ஒரு வருத்தமளிக்கும் விஷயம்!

இப்போதெல்லாம் என் ஓய்வு நேரத்தையும் நான்
சேமிக்கத்தொடங்கிவிட்டேன்!


     ><

மனிதன் ஏற்கனவே அரைக்கடவுள் தான்!
உணர்வுள்ள எவ்வொரு மனிதனும் கடவுளே!
இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் மனிதனைத்தவிர
வேறெதற்கும், பிரபஞ்சத்திற்கும் கூட உணர்வு கிடையாது!
ஆனால், உணர்வின் மையத்துவத்தை முக்கியத்துவத்தை
மனிதர்கள் உணராததால் உணர்வின் முழுமையான
கடவுளாக மலரும் வாய்ப்புரிமையைப் பயன்படுத்த
அவர்கள் தொடர்ந்து தவறி வருகின்றனர்!
இதன்விளைவாக, மனிதர்கள் மனிதர்களாக
அதாவது மனதின் ஜீவிகளாகவும் எழாமல்
உடலின் ஜீவிகளாக, அதாவது
விலங்குகளாகவே உழன்று
கொண்டுள்ளனர்!

     ><

பிளேட்டோவின் அகாதமி வாயிலில் :
 "ஜியோமிதி அறிந்தவர்கள் மட்டும் உள்ளே நுழைக!"

வள்ளலார் ஞானசபை வாயிலில் :
  "கொலை, புலை தவிர்த்தோர் உள்ளே வருக!"

விசார மார்க்கம் புதிர்-ஞானப்பள்ளி வாயிலில் :
  "சாதி, மதச் சழக்கைக் கடந்தோர் மட்டும்  உள்ளே நுழைக!"

     ><

அது வெறும் வதந்தி அல்ல, உண்மைதான்!
ஆம், என்னுடன் சேர்ந்தீர்களென்றால்
உங்கள் வாழ்க்கையின் அற்ப-சொற்ப
இனிமையையும் நீங்கள் இழந்து விடுவீர்கள்!!

அற்பமானது, சிறுமையானது, மட்டுப்பாடானது
போலியானது, அன்றாடம் சேர்ந்தது, பிரமை
வயப்பட்டது, உண்மைக்குக் குறைவானது எதையும்
நான் சிறிதும் அனுமதிப்பதில்லை!!



    ><

எண்ணங்களைக் விரட்டிக் காலிசெய்யச்
சொல்வது எதற்கு?
எண்ணங்கள், விளைவுமிக்கவகையில்
பயன்படுத்தப்பட வேண்டிய கருவிகள்!
அவற்றை முறையாகப் பயன் படுத்தாமல்
அவசரப்பட்டுத் தூக்கி எறிந்துவிடாதீர்!

மனதைக் கடந்து செல்லச் சொல்வது
எதற்கு?
மனமில்லையேல், நீங்களும் தவளை
களைப்போல்தான் இருப்பீர்கள்!
முழுமையாக மன-வளர்ச்சி அடையாமல்
மனதைக் கடக்க முடியாது - அதற்கு முன்
மனதைப் பயன்படுத்துங்கள், முதலில்
மனம் எதற்கு? சிந்தனை எதற்கு? எனச்
சிந்தியுங்கள்!

மூச்சைக் கவனித்து ஒன்றும் நடக்கப்
போவதில்லை! அதை உடல் கவனித்துக்
கொள்ளும்!
ஒன்றைத் தவிர்க்கப் பிறிதொன்றை எடுத்தால்,
பிறகு அதைத் தவிர்க்க வேறொன்று வேண்டும்!
எது தேவையோ அதை நேரடியாக எடுத்துக்
கொள்ளுங்கள் - உணர்வோடிருங்கள்,
உணர்வாய் இருங்கள் போதும்!

கால்களை மடக்கிப்போட்டுக்கொண்டு
கண்களை மூடிக்கொண்டு அமர்வதை தியானம்
என்று எவர் சொன்னது?
இரவுத்தூக்கம் போதும், விழித்துக்கொள்ளுங்கள்!
அனைத்தையும் உணர்வு கொள்ளும் உணர்வை
உணர்வு கொள்ளுங்கள்!

     ><

"நீங்கள் எதைப்பற்றியும் உருப்படியாகச்
சிந்திப்பதில்லை!"
என்று நான் சொன்னவுடன் உடனே நீங்கள்
சிந்திக்கத் தொடங்கிவிடப்போவதில்லை!
அது உங்களால் முற்றிலும் முடியாது என்பது
எனக்குத் தெரியாத விஷயமல்ல!

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய
விஷயம் என்னவெனில், நீங்கள் எவற்றைப்
பற்றியெல்லாம் அதிகப்பிடிப்புடன்
சிந்திக்கிறீர்களோ, அவற்றையெல்லாம்
நீங்கள் கடந்தாக வேண்டும், ஏனென்றால்
உங்களுக்குப்பிடித்த விஷயங்களைத்தாண்டி
வேறெதைப்பற்றியும் உங்களால் ஒருபோதும்
சிந்திக்கவே இயலாது!

அதில், உருப்படியாகச் சிந்திப்பது என்கிற
பேச்சுக்கு இடமேது?

    ><

கேள்விப்பட்டும் ஆன்மீகம் என்று எதுவும்
இல்லாதது போல கண்டும் காணாதது போல
தன் போக்கில் வாழ்ந்து செல்பவன் மூடன்!

வழக்கமான போக்கில் வாழ்ந்து கொண்டு
ஆன்மீகம் தனக்குக் கடினமாக உள்ளது என
தனது இயலாமையை அறிக்கையிடுபவன்
பசப்புக்காரன்!

காலத்துக்கேற்ற புதுப்புதுப்பாணிகளில்
ஒன்றாக ஆன்மீகத்தையும் சேர்த்துக்
கொள்ளுபவன் பகட்டுக்காரன்!

ஆன்மீக நூல்களில், தடைகள் எனக் கூறப்பட்ட
விஷயங்களையும், கீழியல்புகளையும்
ஒவ்வொன்றாகவோ, அல்லது ஒரேடியாகவோ
விட்டால்தான் ஆன்மீகம் சாத்தியமாகும்
என்பவன் பாசாங்குக்காரன்!

தனக்கு வீடு, குடும்பம், மனைவி, குழந்தைகள்
கடமைகள், பொறுப்புகள் உள்ளன; ஆகவே
ஆன்மீகத்திற்கு நேரமேயில்லை என்று
அப்பிராணியைப்போல் நடிப்பவன் பொய்யன்!

அட, ஆன்மீகத்தை விட்டுத்தள்ளுங்கள்!
இத்தகைய  மூடர்கள், பசப்புக்காரர்கள், பகட்டுக்
காரர்கள், பாசாங்குக்காரர்கள், பொய்யர்கள்
நிறைந்த சமுதாயம் எப்படிப்பட்டதாக விளங்கும்?

    ><

உண்மையில், அசலான ஆழமான அர்த்தமுள்ள
வாழ்க்கைக்கு வெளியே ஆன்மீகம் என்று
தனியே ஏதுமில்லை!

அனுஷ்டானம், அப்பியாசம், யாகம், பூசை, சடங்கு,
வழிபாடு, ஆராதனை இவை எதுவும் ஆன்மீகமல்ல!

மனித வாழ்க்கையின் குறிக்கோள், இலக்கு
அர்த்தம், உண்மை, முழுமை ஆகியவற்றை ஆழ்ந்து
உணர்ந்தறிந்து அடைதல்  மட்டுமே உண்மையான
ஆன்மீகம்!

    ><

ஆமாம், குறிக்கோள், இலக்கு, அர்த்தம், உண்மை
எதுவும் தேவைப்படாத வாழ்க்கையும் உள்ளது,
அது எலிகளுக்கும், தவளைகளுக்கும் உரியது!

    ><

போலிச்சீடர்களுக்குக் குருவாக இருப்பவன்
போலிக் குருவாகத்தானே இருக்கமுடியும்!
ஆகவே, குருஸ்தானத்திலிருந்து நான் விலகிக்
கொண்டுவிட்டேன்!

    ><

நான் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்த
ஆன்மீகம் ஒன்று!

அதிலிருந்து அவர்கள் புரிந்து கொண்ட
ஆன்மீகம் வேறொன்று!

அரைகுறையாக, தப்பும் தவறுமாகப் புரிந்து
கொள்ளப்பட்ட ஒன்றிலிருந்து அவர்கள்
பயன்பெறுவதாகக் கருதுகையில்,

முறையாக முழுமையாகப் புரிந்து கொள்ளப்
படும் ஆன்மீகம்  அவர்களுக்கு எவ்வளவு
பயனுள்ளதாக, விடுதலைப்படுத்துவதாக
அமையும்!!

    ><

ஆட்டை அடித்து உண்ணும் சிங்கத்தின்
தோலைப்  போர்த்திக்கொண்ட ஆடு
தன்னை மிடுக்காக உணரலாம்!
மற்ற ஆடுகளும் அதைக்கண்டு மிரண்டு
போகலாம்!
சிங்கத்தின் தோலைப் போர்த்திக்
கொண்டாலும், ஆடு வழக்கம்போல
மேய்வது என்னவோ பசும்புற்களையே!

    ><

வாழ்க்கை என்பது பிரபஞ்சம் தழுவியதோர்
அற்புதப்புதிர்!
அது உள்ளூர் நிகழ்வோ, சொந்த விவகாரமோ
அல்ல!
அது உயிர்-வாழ்தலைச் சுற்றிச்சுழலும் குறுகிய
வட்டமல்ல!
உங்களை நட்சத்திரங்களுடனும், ஒட்டு மொத்த
பிரபஞ்சத்துடனும் தொடர்பு படுத்த
முடியவில்லையெனில்
உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை!
நீங்களும் மனித-ஜீவிகள் இல்லை!

     ><

உன் வீட்டில் தான் எத்தனை அறைகள்!
ஒரு நாளில் நீ எந்தெந்த அறைக்குள்
எத்தனையெத்தனை முறை சென்று புழங்கி
வருகிறாய்  என்பது உனக்குத்தெரியுமா?
படுக்கையறையில் உனது நாள்
தொடங்குகிறது!
குளியலறையில் பல்தேய்த்து உடலைச்
சுத்தம் செய்கிறாய்!
கழிப்பறையில் உனது குடலைக்
காலிசெய்கிறாய்!
சமையல் அறையில் உன் மனைவி
சிற்றுண்டி செய்கிறாள்!
உணவு-அறைக்குச்சென்று சாப்பிடுகிறாய்!
அந்தந்த அறைக்கு உரியதை தவறாமல்
அன்றாடம் செய்கிறாய், அவற்றையே உன்
ஆயுட்காலம் முழுவதும் செய்வாய்!

(இதைத்தானே நீ வாழ்க்கை என்கிறாய்?)

ஒரு நாளுக்கு உரியவற்றையெல்லாம்
செய்து முடித்துவிட்டு மீண்டும் படுக்கை
அறைக்கு  உறங்கச்செல்கிறாய்!

(உண்மையில் நீ ஒரு நாளுக்கு உரிய
எல்லாவற்றையும்- எதுவுமே விடுபடாமல்-
செய்து முடித்துவிட்டதாக நம்புகிறாயா?)

உனது ஒவ்வொரு நாளும் படுக்கை அறையில்
தொடங்கி  படுக்கை அறையில் முடிவடை
கிறதையாவது நீ கவனித்திருக்கிறாயா?

கடைசியில் கதவுகள், சன்னல்கள் இல்லாத
காற்றோட்டமில்லாத அறைக்குள் கொண்டு
வைக்கப்படுகிறாய்!

     ><

நன்றாகக் கூர்ந்து கவனித்துப் பார்!

உனது எண்ணம், மனம், சிந்தனை, அறிவு,
திறமைகள், உழைப்பு, வாழ்க்கை யாவற்றையும்
சுரண்டி ஏய்த்துப் பயன்படுத்திக்கொண்டு

உன்னை மேய்த்து வாழ்வது எது என்று கண்டுபிடி!


     ><

இன்னும் 'அந்தப் பாடல்' என் காதுகளில்
ஒலிக்கிறது!
பேசத்தெரிந்த அக்கிளி நன்றாகப் பாடக்கூடும்
என்று அற்புதமான பாடல்களை அதற்குக்
கற்றுக் கொடுத்தேன்!
"எவ்வளவு முயன்றாலும் தன்னால் சரியாகப்
பாட இயலவில்லை!" என வெவ்வேறு தொனியில்
இந்த ஒரே பாடலையே அக்கிளி ரசித்துப் பாடியது!
பிறகு தான் தெரிந்தது, அது பாடக் கற்றுக்
கொள்ளவில்லை; பாடுவது போல நடிக்கக்
கற்றுக்கொண்டது!
ஆகவே கூண்டைத் திறந்து விட்டுவிட்டு
நான் தப்பி வந்து விட்டேன்!
அதுவும் இந்நேரம் தப்பியிருக்கும்!

   ><

"என்னங்க இது, சிந்திக்க எதற்கு துணிவு
அது, இது, எல்லாம் வேண்டும் என்று சொல்றீங்க?"
என்று கேட்கிறீர்களா?
உண்மையிலேயே நீங்கள் சிந்தித்திருந்தால்
இந்நேரம் நீங்கள் மனிதஜீவிக்குரிய
உயர்- வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்!
வெறும் உயிர்-வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருக்க மாட்டீர்கள்!
சிந்திக்காத போதுதான் உங்களால் இவ்வாறு
எலிகளைப்போல வாழ்வின் குறிக்கோள்
இலக்கு, அர்த்தம் எதையும் அறியாமல்
வாழ இயலும்!

    ><


நீங்கள் உண்மையில் சிந்திக்கிறீர்கள் என்பதற்கு
அடையாளமாக உங்களுடைய வெளிப்பாட்டை
ஒரு நான்கு வரிகளில் இங்கே எழுதி வையுங்கள்,
தவறில்லை!

*
*
*
*

    ><

மா.கணேசன்/ 17.06.2016









No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...