Monday, 6 June 2016

பாதையற்ற பயணம்

                                                                                                                                                     

                                                                           

                                       
ஞானமடைவதற்காக யாதொரு
நெடுஞ்சாலையும்
தயார்-நிலையிலமைந்த பாதையும்
கிடையாது!
எல்லோருக்கும் பொதுவான பாதை
என்று எதுவும் இல்லை!
மேலும், ஒவ்வொருவருக்குமான பாதை
எனவும் எதுவும் இல்லை!
ஒவ்வொருவரும் பாதையைப்
பயணிப்பதன்,அதாவது வாழ்க்கையைப்                                                                                                                  
புரிந்து வாழ்வதன் மூலம் கண்டு
கொண்டேசென்றிடவேண்டும்!
எது முக்கியமானது என்றால்
பாதையல்ல, பயணத்தைத்                                                                                                        
தொடங்கிவிடுவது தான்!                                                                                                                                                  

                       
      *

உண்மையிலேயே ஆன்மீகத்திற்குத்
தயாராகாத அகந்தையின் தெரிவுதான்
நெடும்பாதை!

      *

தனது ஆன்மீகக் கடமைகளையும்
பொறுப்புகளையும் ஏற்க விரும்பாதவனின்
சாக்குப்போக்குத் தான் நெடும்பாதை!

      *

நெடும்பாதை எத்தனை பிறவிகளுக்கு
நீளும் என்பதை எவராலும் சொல்ல
இயலாது!

      *

நீங்கள் உமது பயணத்தை நிறுத்திவிடும்
இடத்தில் உங்களது பாதையும் நின்று விடுகிறது!
அப்போது நீங்கள் தேக்கமடையத்தொடங்கி
விடுகிறீர்!
பிறகு மீண்டும் பயணத்தைத்தொடர்வது என்பது
கடினமாகி விடுகிறது!

ஆகவேதான் நீங்கள் சுலபமான சிரமமில்லாத
நிச்சயம்வாய்ந்த பாதையைத் தெரிவுசெய்திட
அதிக ஆர்வம் காட்டுகிறீர்!
இவ்வாறு பாதையைத் தேடிக்கொண்டே
யிருப்பதால் நீங்கள் உமது பயணத்தை ஒருபோதும்
தொடங்குவதேயில்லை!

ஆனால்,  நீங்கள் ஒரு முடிவோடு தீர்மானகரமாய்
பயணத்தைத்தொடங்கிடும்போது பாதை
புலப்படத் தொடங்கிவிடுகிறது!
அதுவரையிலும் பாதை அங்கிருப்பதில்லை!
உமது பயணத்தைத்தொடங்கியவுடன்
உமது ஒவ்வொரு அடியும் பாதையைத் தோன்றச்
செய்திடுகிறது!

ஆனால், நீங்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனும்
பாதுகாப்பாகவும் பயணிக்க விரும்பும்வரையில்
உமது பயணம் உண்மையில்
தொடங்குவதேயில்லை!

எல்லா (சாகசப்) பயணங்களைப்போலவே
ஆன்மீகப்பயணமும் அதற்கேயுரிய
அபாயங்களைக் கொண்டிருக்கிறது!

சில வேளைகளில், உமது பயணம் பரவசமூட்டும்
உற்சாகத்தின் உச்சத்தைத் தரும்!
சில வேளைகளில், திகிலூட்டித் திடுக்கிடச்
செய்யும்!

எல்லாவேளைகளிலும், நிலைமைகளிலும்
உமது ஆன்மீகப்பாடங்களை நீங்கள் கற்றுத்தான்
ஆகவேண்டும்!

உண்மையில் உமது பயணத்தின் தன்மைக்
கேற்பவே பாதையும் அமைகிறது!

உமது அன்றாட வாழ்க்கையில் தேவை
என்று நீங்கள் உணரும் இலக்குகளுக்கேற்பவே
உமது பாதைகளை அமைத்துக்கொள்கிறீர்
ஒற்றையடிப்பாதையாகவோ, அல்லது அகல
நெடுஞ்சாலையாகவோ!

முழுமையாதலின் தேவையை நீங்கள்
உணர்ந்து அதையே இலக்காகக் கொள்ளும்வரை
உமது ஆன்மீகப்பயணம் தொடங்குவதில்லை!

அவசியம் மேற்கொள்ளவேண்டிய பயணத்தைத்
தவிர்த்துவிட்டு, கோயில்கள் புண்ணியத்தலங்கள்
புனித யாத்திரை என்று எங்கெங்கெல்லாமோ
பிரயாணம் செய்கிறீர்!

சாகசம் அல்லது ஆராய்ச்சி என்கிற பெயரில்
சமுத்திரங்களின் எட்டாத ஆழங்களுக்கும்
துருவப்பிரதேசங்களுக்கும் செல்கிறீர்!
சந்திரமண்டலத்துக்கும் சென்று வருகிறீர்!

ஆனால்,  நீங்கள் பயணிக்கவேண்டிய பிரதேசம்
உங்களுக்குப் புறத்தே வெளியே எங்கும் இல்லை!
நீங்கள் சென்று சேர்ந்திடவேண்டிய இறுதிப்
புகலிடமும் உங்களுக்கு  வெளியே இல்லை!

அதேவேளையில், உங்களுக்கும், உண்மையான
உங்களுக்கும் இடையே கடக்க முடியாத
அளவிற்கான பெருந்தூரம் உள்ளது!

பாதையின் தன்மை பயணத்தின் தன்மையைப்
பொறுத்தது!
பயணத்தின் தன்மை பயணிப்பவனின்
தன்மையைப்  பொறுத்தது!
இறுதியில், பயணி, பயணம், பாதை, போய்ச்
சேருமிடம் யாவும்
ஒன்றாகி விடுகின்றன!

      *

உன்னுடைய  ஆன்மீக முழுமையை அடைவதற்கு
நெடும்பாதை எனவும், குறும்பாதை எனவும்
எதுவும் இல்லை!
உனது மந்தபுத்தியும், ஆர்வக்குறைவும் உன்னை
நெடும்பாதையில் செலுத்துகிறது!
உனது ஆயத்த நிலையும் ஆர்வமிகுதியும் உன்னை
குறும் பாதையில்  சேர்க்கிறது!
உன்னிடம் தீவிரமும் பேரார்வமும் இருப்பின்
உடனடியாக நீ இலக்கை அடைந்து விடுவாய்!

      *

நெடும்பாதை என்பது ஒரு பாதையே அல்ல!
அது நோக்கமிழந்தவர்களின் ஒரு மாபெரும்
அகதிகள் முகாம்!
ஒட்டு மொத்த மனிதகுலமும் நெடும்பாதையில்
தான் பயணிக்கிறது!
மனிதகுலம் என்பது ஒரு ஆன்மீக சேமப்படை!
ஆனால், அதற்கு யாதொரு ஆன்மீகத்தாகமும்
தேடலும் ஏற்படுவதில்லை!
பலர் உலகியல் நெருக்கடிகளால் துரத்தப்பட்டு
நெடும்பாதையில் தஞ்சம்புகுகின்றனர்!
முதல் முயற்சியாக ஆன்மீக வளர்ச்சிக்குத்
தடைகளாக விளங்கும் விஷயங்களை
இனம்காண்பதும், இரண்டாவதாக
அத்தடைகளைக் களைவதும் தான்
நெடும்பாதையின் பிரதான கடமைகள்!
ஆனால், அவற்றை நிறைவேற்றுவதற்கு
காலவரம்பு ஏதுமில்லை என்பதுதான்
நெடும்பாதையின் கவர்ச்சியும், சலுகையும்!

      *

உண்மையை அறிய விடாமல் மனதைத்
தடுப்பது மனதின் குற்றங்களும்,
குறைபாடுகளும், மட்டுப்பாடுகளும்;
மற்றும் மனம் வரித்துக்கொண்ட
இச்சைகளும், தன்-மையப்பாங்கும்,
உடமை- சுபாவமும் தான்!

ஆகவே,ஒருவன் தன் கீழியல்புகளிடமிருந்து
விலகி நிற்கவும், தன்பெரும்பகுதி
குற்றங்குறைகளைக் கழுவிக்களையவும்
நெடிய வழிமுறையினூடாகச் சென்றாக
வேண்டும்!

ஒளியின் கிரணங்கள் எவ்வொரு
மனிதனின் அகத்துள்ளும்  இப்போதும்
கூடப் பாயும்!
அவனது கவனம் புற-நோக்கால்
சிதறடிக்கப்படாதிருந்தால்;
அவனது உணர்ச்சிகள்
கொந்தளிக்காதிருந்தால்;
அவனது தர்க்க அறிவு குறுகிய
வழியில் சிந்திக்காதிருந்தால்;
அவனது அகந்தை
பிணைப்புகளில் சிக்காதிருந்தால்!

ஆனால், இம்மாசுக்களை நெடும்பாதை
நீக்கிவிடுமா?

    *

வாழ்வின் அர்த்தத்தை வெளிப்படுத்துவதற்கு
பயிற்சிகள் ஏதுமில்லை!
அது ஆழ்ந்தவிசாரத்தாலும், உட்-பார்வையினாலும்
மட்டுமே வெளிப்படுத்தப்படும்!

    *

உண்மையை உணர்ந்தறிவதற்கான
ஆன்மீகவிசாரத்தில்,
கசப்பு
எதிர்ப்பு
வெறுப்பு
மிதப்பு
தாபம்
கோபம்
வஞ்சகம்
பாரபட்சம்
கயமை
சிறுமை
பொறாமை
தற்பெருமை
பேராசை
போலித்தனம்
கஞ்சத்தனம்
ஒட்டுண்ணித்தனம்
ஆகியவற்றால் விகாரப்பட்ட மனம்
வெற்றியடையுமா?

     *

"உங்கள் அகந்தையை
சொந்த அடையாளத்தை
பிரபஞ்ச-சுயத்தினுள் கரைந்து
போகும்படி இழந்துவிடுங்கள்!" என்று
ஒரு சில சொற்களில் ஞானிகள் சொன்னதை
செயல்படுத்த உங்கள்  வாழ்காலம்
மொத்தமும் அல்லது அதற்கு மேலும்
எடுத்துக் கொள்ளப்படலாம்!

     *

நெடும்
பாதையில்
செல்லும்
சீரிய சாதகனுக்கு
வாழ்க்கை என்பது
தனக்கும்
தனது அகந்தைக்கும்
தனது இச்சைகளுக்கும்
தனதுஆசைகளுக்கும்
தனது புறப்போக்குக்கும்
விருப்புவெறுப்புகளுக்கும்
எதிராகத்  திரும்பத்திரும்ப
நிகழும்போரட்டமாகத்தான் இருக்கும்!
அதன்விளைவாக அவனது வாழ்க்கை
சுலபமானதாகவும் இருக்காது!
சுமுகமானதாகவும் இருக்காது!

     *

உயர்-சுயம் குறித்த விசாரமானது
கீழ்-சுயத்தினை நெறிப்படுத்துவதில்
தொடங்குகிறது!

ஆன்மீக விசாரகனின் முதல் கடும்பணி
தன்னைத்தோண்டி  உள்ளே ஆழத்தில்
மறைந்திருக்கும் தனது நடத்தையின்,
முக்கியமாக, தனது பற்றுக்களின்
தனது பலவீனங்களின் வேர்களைப்
பறித்தெடுப்பதே!

     *

ஆன்மீக விசாரகன் தனது பொறுப்புகளை
தன் தோள்களின் மீது ஏற்றிக்கொண்டு
தனது துணிவை, அறிவை,
தானே வளர்த்துக்கொண்டு
சவால்களைச் சந்திக்கவேண்டுமே தவிர
'சரணாகதி' என்ற பெயரில்
தனது பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பது
தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகும்!
ஏனெனில், ஆன்மீகம் என்பது
ஒருவன் தன்னைத்தானே கண்டடைவதே!
தன்னைத் தானே உடைத்து தனது
அசலான அகச்சுயத்தை அடைவதே தவிர
வேறல்ல!

     *
சாதகன் ஒருவன் மன-மாசுக்களும்
கீழியல்புகளும் கொண்ட தனது
அசிங்கம்-பிடித்த சுயத்தை
'சரணாகதி' என்ற பெயரில்
கடவுளிடமோ, அல்லது குருவிடமோ
ஒப்படைக்க முடியாது!
உள்ளத்தூய்மையற்றவன் கடவுளை
நெருங்கவும் இயலாது!
குரு என்பவர் கழிவு நீர்த்தொட்டியல்ல!

தன்னைத்தானே சுத்திகரித்துத்
தூய்மைப்படுத்தத் தவறியவனை
நெருப்பிலிடாமல் நரகமும் ஏற்காது!

குரு என்பவர் புனிதக் கழுதையல்ல!
அவர் மீது உப்பு-மூட்டை ஏறிப்பயணிக்க!

மற்றவர்களைச் சார்ந்து பயனடைந்து
மற்றவர்களுக்கு உதவாதவன் ஒட்டுண்ணி!
தனக்குத்தானே உதவாதவன்
தற்கொலைவாதி!

     *

நிச்சயம், ஒளிவிளக்கம்பெறுதல் என்பது
ஆனந்தமயமானது தான்!
ஆனால், அதற்கான வழியில் கடும் ஒழுக்க
முறைகளுக்கு உட்படவும்
சில வேளைகளில், பெருந்தியாகங்களைச்
செய்யவும் வேண்டியுள்ளது!

     *

ஆன்மீக வளர்ச்சி சில தியாகங்களைக்
கோருகிறது:
உமது
அறியாமை, மந்தபுத்தி, மந்தைபுத்தி,
சிறுமை, கயமை,
பொறாமை, வெறுப்பு, பேராசை, தற்பெருமை
சுய-முக்கியத்துவம்,
சோம்பல், சொகுசு-வாழ்க்கை, ருசி நாடும் நாக்கு
ஆகியவை!
இவை சற்று அதிகப்படியாகத் தோன்றினால்,
ஒன்று செய்யுங்கள்: உமது
போலித்தனத்தை விட்டுவிடுங்கள் போதும்!!!

     *

உங்களால் முடிந்தால்,

உமது இயல்பூக்கிகளை
ஒழுங்குமுறைப்படுத்துங்கள்!
உமது இச்சைகளை மடைமாற்றி
படைப்புப்பூர்வமாகச் செயல்பட வையுங்கள்!
உமது உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்துங்கள்!
உமது எண்ணங்களை இலக்கு நோக்கித்
திசைப்படுத்துங்கள்!

முடியாவிட்டால், கொச்சைப்படுத்தாமல்
விட்டுவிடுங்கள் ஆன்மீகத்தை!

     *

ஞானம், முக்தி, மோட்சம், முழுமை
இரட்சிப்பு, விடுதலை, வீடுபேறு
மரணம் கடந்த பெருவாழ்வு,
நித்திய ஜீவன், இறைவனடி
அடைவது மிக மிக எளிது!
இவற்றை மட்டுமே ஒருவன்
எண்ணும் போது, விரும்பும் போது!

     *

நெடுங்காலமாக ஒருவன்
நெடும்பாதையிலேயே பயணிக்கும்வரை
அகந்தையைப் பற்றிக்கொண்டிருக்கும்
தன்பிடியை அவன் விடுவதேயில்லை!
தன்னைத்தூய்மைப்படுத்திக்கொள்ளும்
பயிற்சிகளின் வழியாக அகந்தை தன்னை
காப்பாற்றிக்கொள்ளலாம் என்று எண்ணியே
அவற்றில் ஈடுபடுகிறது!
ஆனால், தூய்மையான அகந்தை இன்னும்
அகந்தையே!
அகந்தையில் சுத்தமான அகந்தை
அசுத்தமான அகந்தை என்பதில்லை!
சுத்தம், தூய்மை அல்ல முக்கியம்!
அகந்தையின் உருமாற்றம் மட்டுமே!

     *

அட!  போதுமான காலம் எப்போதும்
இருக்கிறது!
வருங்காலம் முழுவதும் உள்ளது!
ஆன்மீக விசாரத்தை அப்போது
பார்த்துக்கொள்ளலாம் என்று
சௌகரியமாக ஒத்திப்போடும்
அகந்தைக்கு,
அன்றாட வாழ்க்கைதான்
எவ்வளவு அவசரமானதாகவும்
உடனடிக் கவனிப்பிற்குரியதாகவும்
உள்ளது!

      *

பிழைப்புக்கான வழிகளைத்
தேடிப்பெறவும், மேம்படுத்தவும்;
இடையே எதிர்ப்படும் தடைகளைச் சந்திக்கவும்
தாண்டிச்செல்லவும் நாம் எவ்வளவு தயாராக,
உடனடியாக நம் எண்ணத்தையும், நேரத்தையும்
சக்தியையும், உழைப்பையும் அளிக்கிறோம்!

ஆனால், அசலான வாழ்க்கைக்கான
ஆன்மீக வழியில் செல்லும் போது எதிர்ப்படும்
தடைகளைச் சந்திக்கும் விஷயத்தில் நாம்
எவ்வளவு படு மோசமான தோல்வியாளராகி
விடுகிறோம்!

       *

வழி பற்றிய தேடலற்றவர்களே!
தம் சொந்த வழிகளில் வழிதவறிப்
போனவர்களே!
வழி சொல்லியும் தடுமாறுபவர்களே!
உங்கள் எல்லோருக்கும் சொல்லுகிறேன்
வழியற்ற என் வழியை!
பிழைக்க வழி கண்டவர்களுக்கு
வாழ வழி தெரியவில்லையா?
வழியைத்தேடாதீர்கள் - வாழுங்கள்!
வாழ்வதெப்படி என்று கேட்காதீர்கள்
வாழ்க்கையை நேசியுங்கள்!
முதலில் வாழ்க்கையைப் புரிந்து
கொள்ளுங்கள்!
அதைவிட வேறு முக்கிய வேலை
எதுவுமிருக்க முடியாது!

      *

தங்கள் பாதங்களுக்குக் கீழேயுள்ள தரை
அப்படியே நழுவிச் செல்வது போன்ற உணர்வு
நிஜமானதுதான்!
அது ஏற்படுத்தும் பீதி சிலரை ஆன்மீகத்திலிருந்து
பின் வாங்கச்செய்திடுகிறது!
ஏனெனில், தாங்கள் சார்ந்திருக்கும் பாதுகாப்பு
மற்றும் மதிப்புகளுக்கு ஆபத்து வந்துவிட்டதாக
அவர்கள் உணர்கிறார்கள்!
ஆனால், அவர்கள் உடனடிப்பாதுகாப்பு மற்றும்
பயன்களுக்காக உண்மையான பாதுகாப்பையும்
இறுதிப்பயனையும் பரிமாற்றம்
செய்துகொள்கிறார்கள்!

     *

ஒருவன் தனது பலவீனங்களைப் பற்றியும்
தனது இயலாமைகளப் பற்றியும்
அளவுகடந்து வருந்துவது
அலட்டிக்கொள்வது
கலவரப்படுவது
ஆன்மீகச்
செயல்பாடோ
அக்கறையோ
அல்ல!

அது மிதமிஞ்சிய சுய-முக்கியத்துவ
நோயால் பீடிக்கப்பட்ட
தற்பெருமைகொண்ட
அகந்தையின்
முதலைக்
கண்ணீர்!

    *

ஆன்மீகத்தேடல் அதிகச் சிக்கலானதாகவோ
ஆன்மீகப்பயிற்சிகள் மிக விரிவாகவோ
ஆன்மீகக் கோட்பாடுகள் மறைபொருளாகவோ
இருக்கவேண்டியதில்லை!
அவ்வாறிருப்பின் அது மிகச்
செயற்கையாகவும்
அதன் முடிவான விளைபலன்கள்
இட்டுக்கட்டியதாகவும் ஆகிவிடும்!
உண்மையான ஆன்மீகத்தேடல் நேரடியானது!
பயிற்சிகளும், முயற்சிகளும் தேவைப்படாதது!
ஏனெனில், விழிப்பைப் பயிற்சி செய்யமுடியாது,
ஏனெனில், படிப்படியாக விழிப்பது என்பது
கிடையாது!
கோட்பாடுகள் திரைகள், அவை உண்மையை
வெளிப்படுத்தாது!

    *
மனிதன் விழிப்படையாதது அவனது
தோல்வி மட்டுமல்ல - அது
அவனுள் இன்னும் விழித்திருக்கும்
விலங்கின் வெற்றியுமாகும் !

     *

ஆன்மீக நோக்கத்திற்காக என்றாலும்
அகந்தையானது விருப்பத்துடன் முன்வந்து
தன்னுடைய  'அழிவு'க்குத் தானே இறங்கிப்
பாடுபடும் என எண்ணிப் பார்க்கமுடியுமா?
முடியாது!
ஆனால், நெடும்பாதையில் பயணிக்கும்
அனைவரும் அகந்தையின் நடிப்பை
ஏமாற்றுத்தனத்தை உண்மையென்றே
நம்பிக்கொண்டு பயணிக்கின்றனர்!

ஆனால், அகந்தையின் 'அழிவைத்'
தவிர்க்க
ஒரு உபாயம் உள்ளது!

அதாவது, 'அழிவு' என்ற கரடுமுரடான
சொல்லுக்குப்பதிலாக, 'உருமாற்றம்'
எனும் நுட்பமான சொல்லைப் புரிதலுடன்
பதிலீடு செய்வதுதான் அது!

வண்ணத்துப்பூச்சியாக உருமாற்றம்
பெறும் வழிமுறையில் தாம்
அழிந்துபோய்விடுவோம் என்பதை
கம்பளிப்புழு முன்னமே அறியுமானால்
அத்தகைய திட்டத்தை ஏற்காது!
மாறாக, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள
தனது ஆற்றல் முழுவதையும் திரட்டிப்
போராடும்!

நல்லவேளையாக, கம்பளிப்புழுக்களுக்கு
இந்த உண்மை தெரியாததால் அவை
உருமாற்றத்தை எதிர்ப்பதில்லை!

ஆனால், மனிதப்புழுக்கள் எவ்வாறோ
'உருமாற்ற வழிமுறையில் அழிவும்
உள்ளடங்கியுள்ளது' என்பதை
ஊகித்தறிந்துகொள்வதால் அவை
பீதியுற்று உருமாற்றத்திற்கு உட்பட
மறுக்கின்றன!

மனித அகந்தை எப்போதும்
அரை-உண்மைகளை மட்டுமே உண்டு
அரை-வாழ்க்கையையே வாழ்ந்து
அரை-உணர்வுடன் அரைகுறையாகச்செத்து
மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அல்லல்
படுகிறது!

'உருமாற்றம்' என்பதில் 'அழிவு' மட்டுமல்ல
'ஆக்கம்' என்பதும் உள்ளது எனும்
இன்னொருபாதி உண்மையை அது
எப்போது புரிந்து கொள்ளும்?

     *

சமுத்திரம் செல்ல வழிகேட்கும்
நதியும் உண்டோ?

சமுத்திரம் சென்றடைய நதிக்கு
வழி சொல்பவன் மூடன்!

தனது நோக்கத்தை இழந்த நதி
நதியல்ல, தேங்கிய குட்டை!

சேற்றுக்குட்டைக்கு சமுத்திரம்
சேரும் எண்ணம் தோன்றுமா?

வெள்ளப்பெருக்கெடுக்காத நதி
ஒருபோதும் சமுத்திரம் சேராது!

தன்னிலிருந்தே உத்வேகம்,விவேகம்
வேகம் மூன்றையும் நதி பெறுகிறது!

தன்னுள் வெள்ளம் கொண்ட நதிக்கு
தடைகள் ஒரு பொருட்டல்ல!

நதிமூலம் ஆராய்வதில்லை நதி
தன் இலக்கு மறப்பதில்லை
தவறுவதுமில்லை!

      *
தான் தோன்றிய கணத்திலிருந்து
இடைவழியில் என்ன நேர்ந்தாலும்
நேராவிட்டாலும் தங்காமல், தேங்காமல்
தடைகளைக்கண்டு தயங்காமல், மயங்காமல்
தன் போக்கில் போய்க்கொண்டேயிருக்கும்
நதியின் எண்ணம், குறிக்கோள், இலட்சியம்,
இலக்கு யாவும் சமுத்திரச் சங்கமம் மட்டுமே!

       *

நதி செல்லும் வழி நெடுகிலும் அதற்கு
பற்பல அனுபவங்கள்!
எதிலும் சிக்கித் தேங்கிடாத நதியே
சமுத்திரம் அடையும்!
வற்றாத சமுத்திரமே நதியின் முற்றான
பாதுகாப்பும் இறுதிப் புகலிடமும்!
இடைவழியிடங்களோ இன்னும்
நெடும் பயணமோ அல்ல முக்கியம்!
வெள்ளப் பெருக்கெடுத்திடும் வேகமே
வெற்றியின் ரகசியம் !
சமுத்திரச் சங்கமமே நதியினை
முழுமைப்படுத்திடும் , நிரந்திர
நிறைவு தந்திடும் இணையிலா
இறுதி அனுபவம்!

      *
 இங்கு பறக்கக் கற்றுத் தரப்படுகிறது !
 முன்-அனுபவம் எதுவும் தேவையில்லை !
 ஊர்தல் நடத்தல் குதித்தல் ஓடுதல்
 போன்ற உங்களது அனுபவங்கள் உதவிடாது !
 பறக்க வேண்டும் என்ற தீவிர ஆர்வம்
 மட்டும் இருந்தால் போதும்.

      *

வாழ்வின் நோக்கத்தை அறியாத மனிதன்
மனிதனல்ல, இன்னுமொரு விலங்கு!

சொந்த நோக்கம் கொண்ட மனிதன்
வழி தவறிப்போனவன்!

வழி கேட்டு அலைந்துகொண்டிருப்பவன்
ஊர் போய்ச் சேருவதில்லை!

உணர்வுப்பெருக்கு கொள்ளாத மனிதன்
உண்மையை ஒருபோதும் அறியமுடியாது!

உயிர்த்துடிப்புள்ளவன் வெறுமனே
உயிர்பிழைத்திருக்கிறான்!

உணர்வுத்துடிப்புள்ளவன் மட்டுமே
உண்மையில் வாழ்கிறான்!

நோக்கம் உணர்ந்தவன் தானே வழியும்
இலக்குமானவன்!

     *

நதியைப்போல் வாழுங்கள்!

      *

மா.கணேசன்/ 02.06.2016





No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...