
முன்பொரு காலத்தில், நெய்வேலி எனும் ஊரில்
"விசாரமார்க்கம்" என்றொரு ஆன்மீக மையம்
முப்பது ஆண்டுகாலமாக இயங்கிவந்தது.
^^^^
விசாரமார்க்கத்தில் இணைந்திருக்கும் வரை
எவரும் வழிதவறிச் செல்லுவதில்லை!
விசாரமார்க்கத்திலிருந்து வெளியேறினாலும்
எவரும் வழிதவறிப்போகார் என நம்புகிறேன்!
^^^^
விசார ஆசிரியர் தனக்கு எதைப்போதித்துக்
கொள்கிறாரோ அதையே அவர் உங்களுக்கும்
போதிக்கிறார்!
விசாரத்தின் சீரிய இலக்கின் முன் விசார
ஆசிரியரும் சக்தியற்றவராகவே உள்ளார்!
ஏனெனில்,
உண்மைக்குக் குறைவான எதையும் அவர்
விரும்பவோ, நாடவோ, பின்பற்றவோ
முடியாதவாறு அவர் தடுக்கப்பட்டுள்ளார்!
ஆகவே, அவர் விரும்பினாலும் உங்களுக்கு
யாதொரு சலுகையையும், விலக்கையும்,
தள்ளுபடியையும் அளிக்க முடியாது!
ஆகவேதான், விசாரமார்க்கத்தின் விதி முறைகள்
இவ்வளவு கடினமானதாகவும், கண்டிப்பு நிறைந்த
தாகவும் உள்ளன!
அவை எதுவும் விசார ஆசிரியரின் சொந்த விருப்பு-
வெறுப்பிலிருந்து பிறந்தவையோ, அவரின் சொந்த
உள்-நோக்கங்களை மறைத்து வைத்திருப்பவையோ
அல்ல!
^^^^
விசாரமார்க்கம் என்பது ஒரு இலாப நோக்கற்ற, மரபு
மற்றும் பயிற்சி சாராத, புரிதல் மற்றும் உணர்வின் வழி
செல்லும் ஆன்மீக இயக்கம் ஆகும்!
இது அறிதல், ஆராய்தல், கற்றல், தெளிதல், புரிதல் . . . .
ஆகியவைகளுக்கான மையம்.
இங்கு சிந்தனை, விசாரம் மட்டுமே பிரதானம். வேறு
பயிற்சிகள், அனுஷ்டானங்கள், சடங்கு முறைகள்
எதுவும் கிடையாது.
ஒவ்வொரு மனிதனும் அடைந்தாக வேண்டிய இறுதி
உண்மை, அர்த்தம், முழுமை . . . ஆகியவையே விசார
மார்க்கத்தின் சீரிய இலக்குகளாகும்.
^^^^
"விசார-ஆசிரியர்" "விசார-நடத்துனர்" "விசார-குரு"
"விசாரத்தலைவர்" என்பது ஒரு பட்டமோ, பதவியோ
அல்ல! விசாரத்திற்கு, விசார வழிக்கு தன்னை முழுமை
யாக அர்ப்பணித்துக்கொள்ளும் எவரும் விசார-
குருவாகத் திகழலாம்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விசார மார்க்கத்தின் பங்கேற்பாளர்களுக்கு :
இவ்விசார மார்க்கத்தின் விதிகள் புதியவையல்ல! அவை
அவ்வப்போது உரைக்கப்பட்டவையே. அவை தற்போது
(05.12.2014 அன்று) தொகுக்கப்பட்டு, 01.01.2015 முதல் தளர்வு
நீக்கி புதிய ஒழுங்குமுறையுடன் நடைமுறைக்குவருகின்றன.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விசாரச்செயல்பாடு என்பது வாழ்க்கை விடுக்கும் பிரதானச்
சவாலை ஏற்றுக் கொள்வதே - அது, உணர்வுள்ள மனித
ஜீவிகளுக்கானது. அதை நீங்கள் உணர்ந்து ஏற்றுக் கொண்டுள்
ளீரா? . . . . . இல்லையெனில், நீங்களும் எலிகளும் ஒன்றுதான்,
ஆகவே உங்களுக்கு விசாரம் தேவைப்படாது!
^^^^
விசார மார்க்கம் சமுதாய அமைப்பின் அங்கமோ, நீட்சியோ
அல்ல. ஆகவே, இது ஒரு பொது-அரங்கமோ, விவாதமேடையோ,
பொழுதுபோக்குக் கூடமோ அல்ல.
^^^^
இது, சுய-மேதாவிலாசத்தையும், புகழையும், சமூக
அந்தஸ்தையும் வெளியரங்கப்படுத்துவதற்கான
களம் அல்ல!
இது, சுய-மேம்பாடு காண விழைபவர்க்கும், தன்னை
முன்னிறுத்தும் தனி நபருக்குமான புகலிடமும் அல்ல!
மாறாக, இது, தொடர்ந்து தனது சுயத்தைக்கடந்து செல்லத்
தயாராக உள்ளவர்களுக்கான சிந்தனைப்பள்ளி ஆகும்.
^^^^
தொடர்ந்து தன்னைக்கடந்து வளராமல் தேக்கமடையும்
விசாரப்பங்கேற்பாளர்களும், விசார-அமர்வுகளை சடங்கு
போல மேற்கொள்பவர்களும், பிரமைகளுக்கு ஆட்படுபவர்
களும் அவ்வப்போது சுட்டிக்காட்டப்படுவர், இடித்துரைக்கப்
படுவர், திருத்தப்படுவர்.
^^^^
விசாரமையம் ஒரு ஓய்வகம் அல்ல;
ஆய்வகம் ஆகும்!
^^^^
விசாரமார்க்கத்தில் முழு-விருப்பத்துடன் இணபவருக்கான
அடையாளம் "விசார-பங்கேற்பாளர்" "உண்மை-நாடுபவர்"
என்பவை மட்டுமே.
ஆகவே, பங்கேற்பாளர்களுக்கிடையே யாதொரு ஏற்றத்
தாழ்வு பாராட்டவும்; முன்னுரிமை, முதல்-மரியாதை,
முதலிடம், சிறப்புக்கவனம் அளிக்கவும் இடமில்லை!
குறிப்பு : எனினும், நோய்க்கேற்றவாறு சிகிச்சை மாறு
படுவது போல, ஒவ்வொருவரது பக்குவம், தீவிரம்
ஆர்வம் ஆகியவற்றிற்கேற்ப பாடங்கள்
மாறுபடலாம்.
^^^^
ஒருவர், வெளியே, சமூகத்தில் 'யாராக' 'என்னவாக'
இருக்கிறார் என்பதெதுவும் விசாரவட்டத்திற்குள் ஒரு
பொருட்டல்ல! இங்கே, ஒருவரது "உட்பொதிவு" மட்டுமே
கணக்கில் கொள்ளப்படும். ஒருவருள் உறங்கும் அந்த
ஆற்றலை உலுக்கி எழுப்புவது ஒன்றே விசார-மையத்தின்
சீரிய ஆன்மீகப்பணியாகும்.
^^^^
விசாரத்திற்கு வரும் ஒவ்வொருவரும் தனியே(எந்தப்
படையுடனும் அல்லாமல்), ஒரு தனி நபராக மட்டுமே
வருதல் வேண்டும். அவர் தன்னை, தனது "உயர்-சுயத்தை"
மட்டுமே பிரதிநிதித்துவம் செய்பவராக இருத்தல்வேண்டும்.
அவர் சார்ந்திருக்கும் யாதொரு குழுவையோ,
வர்க்கத்தையோ, சமூகத்தையோ, கட்சியையோ,
சித்தாந்தத்தையோ, மதத்தையோ, தத்துவத்தையோ
பிரதிநிதித்துவம் செய்பவராக வருதல் கூடாது.
ஆம், விசாரத்திற்கு வரும்போது நீங்கள் யாருடைய, அல்லது
எதனுடைய பிரதிநிதியாக வருகிறீர்கள் என்பதை தெளிவு
படுத்திக்கொண்டு வருவது அழகு.
^^^^
நீங்கள் உங்களுக்காகப் பேசுங்கள் - உங்கள் புரிதலில்
இருந்து, நீங்கள் புரிந்துகொண்டதிலிருந்து மட்டுமே
பேசுங்கள். நீங்கள் படித்த, கேள்விப்பட்ட அறிவிலிருந்து
பேசாதீர்கள். அவற்றை மேற்கோள் காட்டாதீர்கள்.
நீங்கள் யாருக்காகவோ, யாருடைய விஷயங்களையோ
பேசாதீர்கள்.
நீங்கள் உங்களைப்பற்றி பேசுங்கள். உங்களுடைய
கருத்துகளை, பிரச்சினைகளை, கண்டுபிடிப்புகளைப்
பேசுங்கள். உங்களுடைய சீரிய உட்-பார்வைகளை
மேற்கோள் காட்டுங்கள்.
முக்கியமாக, உங்களுடைய பிரச்சினைகளை, மட்டுப்
பாடுகளை, இயலாமையை, குறைபாடுகளை ஒருபோதும்
பொதுமைப்படுத்தாதீர்கள்.
^^^^
முதலிடத்தில், உங்கள் கேள்விகள் உங்களுடையதாக
இருக்கட்டும்! உங்களுடைய பதில்களும் உங்களுடைய
தாக, உங்களுக்கானவையாக இருக்கட்டும்!
^^^^
ஒருவருக்கு என்னென்ன தெரியும், எவ்வளவு தெரியும்
என்பதை அரங்கேற்றுவதற்கான மேடை அல்ல விசார
மையம். மாறாக, தெரிந்த அறிந்த தகவல்களிலிருந்து
என்ன அறிவைக் கறந்துள்ளோம், அந்த அறிவு உண்மை
யோடு எத்தகைய தொடர்பில் இணைந்துள்ளது என்பதை
அறிகின்ற புரிதல் மட்டுமே முக்கியமானது.
^^^^
நீங்கள் விசாரமையத்திற்குள் நுழையும்போது
உங்களுடன் அன்றைய அன்றாடவிஷயங்களையும்
சம்பவங்களையும், சமூக நிகழ்வுகளையும், சொந்தக்
கதைகளையும்கொண்டுவந்து இறைக்காதீர்கள்.
மாறாக, அன்று நீங்கள் சிந்தித்த பிரதான, மையமான
முக்கியமான அம்சங்கள் குறித்த புரிதல்களை,
முடிவுகளை மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
^^^^
நீங்கள் எவையெவற்றைத் தெரிந்து கொள்ள விழை
கிறீர்கள், எத்தகைய அறிவைச் சேகரிக்கிறீர்கள் என்பது
நீங்கள் உங்களுள் எத்தகைய சுயமாக இருக்கிறீர்கள்
என்பதைப்பொறுத்தது!
"என்னால் உயரிய விஷயங்களை, உண்மைகளைப்
புரிந்து கொள்ள இயலவில்லை!" எனும் உங்களது புகார்
அர்த்தமற்றது.
ஏனெனில், ஒன்றைப்புரிந்து கொள்வதற்கான தீவிர
தாகமும், பேரார்வமும், கடின உழைப்பும் உங்களிடம்
இல்லை! இது தான் உங்களைப்பற்றிய உண்மை நிலை
யாகும்
இந்த உண்மை நீங்கள் ஒரு 'மேலோட்டமான சுயம்'
என்று சொல்கிறது!
^^^^
விசார -அமர்வுகள் விசாரப் பொருளை மையமாகக்
கொண்டமைய வேண்டுமே தவிர வேறு சொந்த மற்றும்
பொது விஷயங்கள், வியாபாரப் பரிவர்த்தனைகள்,
கதைகள், தகவல் மற்றும் நகைச்சுவைத் துணுக்குகள்
போன்ற கவனச்சிதறலை ஏற்படுத்தும் காரணிகளுக்கு
இடமில்லை. அவை அறவே தவிர்க்கப்படவேண்டும்.
^^^^
விசார-அமர்வுகளின் போது பங்கேற்பாளர்கள் பரஸ்பரம்
பக்கத்தில் உள்ளவர்களிடம் குசலம் விசாரிப்பது, பிற
விஷயங்களை அலசுவது, பரிமாறிக்கொள்வது யாவும்
தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.
நலம் விசாரிப்பு, மற்றும் நட்பார்ந்த வேறு விசாரிப்புகள்
யாவும் பரஸ்பரம் ஒருவர் இன்னொருவரது வீட்டிற்குச்
சென்று செய்யப்படவேண்டியவையாகும்.
ஆகவே, விசாரச் சந்திப்பின், அமர்வின் போது விசார
விஷயங்களை மட்டுமே பேசவும், பரிமாறிக்கொள்ளவும்
வேண்டும்.
நமது பேச்சு (எப்போதும்) விசாரப்பேச்சாக இல்லை
யெனில், அப்பேச்சு சராசரி வாழ்க்கையின் பாற்பட்டதே;
ஆகவே அர்த்தமற்றது!
^^^^
விசாரம் என்பது எவ்வகையிலேனும் அன்றாடத்தின்
நீட்சியாகவும், தொடர்ச்சியாகவும் இருக்குமானால், அது
பெரும் அசம்பாவிதமே - அதிலிருந்து நாம் விடுதலை
அடையவே இயலாது!
விசாரம் என்பது அன்றாடப் பரப்பிலிருந்து விடுபட்டு
மேலுயர்ந்து அசலான வாழ்க்கையுள் பிரவேசிக்கும்
ஒப்பீடற்ற செயல்பாடாகும்.
அன்றாடம் முடிவடைகிற போது விசாரம் (ஆன்மீகம்)
தொடங்குகிறது. விசாரம் தொடங்காமல் அன்றாடம்
ஒருபோதும் முடிவிற்கு வருவதில்லை!
^^^^
எல்லாவகையிலும் உங்களை, உங்களது மனம்,
எண்ணம், சொல், செயல், நீங்கள் புழங்கும் இடம்,
வீடு அல்லது படிப்பறை உட்பட யாவற்றையும்
அன்றாடத்திலிருந்து விடுவிக்காமல் விசாரத்தில்
நீங்கள் முறையாக ஈடுபட முடியாது!
ஆகவேதான் "விசார மையம்" என்பது அவசியமாகிறது,
முக்கியத்துவம் பெறுகிறது.
^^^^
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விசார மார்க்கம், விசார மையம், விசார அமர்வு என்பவை
நட்பு, பாசம், அன்பு, உறவுகள், அன்றாடவாழ்க்கை . . .ஆகிய
எதற்கும் அந்நியமானதல்ல. ஆனால், விசாரத்தைச் சேர்ந்த
வர்கள் என்கிற வகையில் நாம் கடைபிடிக்கவேண்டியது
விசார-நட்பு, விசார-பாசம், விசார-அன்பு, விசார-வாழ்க்கை,
. . . . . . விசார-, விசார- என ஒவ்வொன்றுடனும், எல்லாவற்று
டனும் விசாரத்தைச் சேர்க்கும் போது நாமும், நம் வாழ்க்கை
யும், யாவும் மாறிவிடும், அர்த்தமுள்ளதாகிவிடும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
"மனிதர்கள் சமமானவர்கள்", "எல்லோரும் ஒன்றுதான்"
என்பன போன்ற வாதங்கள் அடிப்படையற்றவை; ஆகவே
தவறானவை. நாமெல்லோரும் தவளைகளோ, ஓணான்
களோ அல்ல! மாறாக, நாம் மனித இனத்தைச்சேர்ந்தவர்கள்
என்கிற வகையில், "மனிதன்" என்கிற பொதுப்பெயரைச்
சமமாகப் பெற்றுள்ளோம், அவ்வளவுதான், மற்றபடி,
நாமனைவரும் புத்தர்களோ, ஞானிகளோ அல்ல! நாம்
ஒவ்வொருவரும் மனிதனாக மலர்வதற்குரிய உட்பொதிவை
சமமாகப்பெற்றுள்ளோம். ஆனால், அதைப் பயன்படுத்துவதில்
நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு படி நிலையில் உள்ளோம் . . . .
இன்னமும் நாம் மனிதர்களாக ஆகவில்லை!
அதாவது, அடிப்படையில் இன்னமும் நாம் விலங்குகள் தான்.
உச்சிப்படியை அடையும் போதுதான் ஒருவர் மனிதராக
ஆகிறார். . . . . . ஆகவே, ஒருவர் இன்னொருவருக்குச் சமமாக
இருக்கவேண்டிய அவசியமில்லை! எது முக்கியமெனில்,
ஒருவர் தனக்குத்தானே, தனது 'உயர்-சுயத்துடன்' , சமமாக
ஆகுதல் மட்டுமேயாகும்.
^^^^
விசார பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர்
போட்டியாளர்கள் அல்ல. மாறாக, விசாரத்தில்
இணையும் அனைவரும் தனித்துவமான விசார
சமூகத்தைச் சேர்ந்தவர்களாகிறீர்கள். ஆகவே,
உங்களுக்கிடையே "விசார-சகோதரத்துவம்"
பழகுவது இனிது!
^^^^
விசாரத்திற்கு விடுமுறை தினம் கிடையாது!
ஏனெனில், வாழ்வதற்கு விடுமுறை தினம்
கிடையாது!
^^^^
சீரிய விசாரகன் ஒவ்வொருவருக்கும் விசாரம் தான்
விழா, பண்டிகை, கொண்டாட்டம், குதூகலம் . . யாவும்
ஆகும்! ஆகவே, அனைத்து விடுமுறை நாட்களிலும்
சிறப்பு விசார அமர்வுகள் நடத்தப்படும்.
^^^^
விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள்
என்பவை என்ன? அவை, எவ்வகையிலும் உங்களது
அன்றாடத்திலிருந்து வேறுபட்டவையா? இல்லை!
அவை, உங்களை அன்றாடத்திலிருந்து மீட்பதோ
விடுவிப்பதோ இல்லை! அவை அன்றாடச் சழக்கின்
உச்சக்கட்டம் ஆகும்! உங்களது சுய நலமானஅன்றாட
இச்சைகளை, துய்ப்புகளை, நுகர்வுகளை பன்மடங்காக
அதிகரித்து அவற்றில் மூழ்கித்திளைப்பதற்கான
சந்தர்ப்பமும், ஏற்பாடும்தான்!
விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள்
உங்களை மேம்படுத்துவதோ, ஆன்மீகரீதியாக மாற்ற
முறச்செய்வதோ கிடையாது. அவை உங்களை அதிகப்
படியாகச் சந்தோஷமடையச் செய்வதும் கிடையாது!
உங்களது களிப்பும், சந்தோஷமும் உண்மையில்
பாசாங்குத்தனமானது. ஏனெனில், ஒரு விழா, அல்லது
பண்டிகைக் கொண்டாட்டத்திற்கான உங்களது ஏற்பாடு
களும், தயாரிப்புகளும் (புத்தாடைகள், இனிப்புகள்,
விருந்துணவு . . . .போன்றவை) நீங்கள் (விஷேடமாக)
சந்தோஷமடைவதாகக் காட்டிக்கொள்ளவைக்கின்றன,
அவ்வளாவுதான்!
'உயிர்-வாழ்தல்' என்பதற்கு மேல் வேறு விஷேட
மதிப்பையும், அர்த்தத்தையும் கொண்டிராத உங்களது
அன்றாடத்தின் பயனின்மையை, மேலதிகப்பயனின்மை
யைக்கொண்டு கடக்கும் பயனற்ற முயற்சிகளே
விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் யாவும்!!
குறிப்பு : ஆகவே, விசாரகர்கள் விருந்து, கேளிக்கை,
கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்வுகளைத்
தவிர்ப்பது நல்லது!
^^^^
உண்மையில், உங்களது சாரத்தில் "நீங்கள் யார்?"
என்பதையும், "வாழ்க்கை என்றால் என்ன?" என்பதையும்
அறியாத, புரிந்து கொள்ளாத, நிலையில் நீங்கள் எதைக்
கொண்டாடுகிறீர்கள்? சொல்லுங்கள்!
^^^^
உண்மையில், உங்களைப்ப்புரிந்து கொள்வதையும்
வாழ்க்கையைப் புரிந்து கொள்வதையும் போல
அர்த்தமுள்ள வேறு யாதொரு கொண்டாட்டமும் இல்லை!
^^^^
ஒவ்வொரு விழா, பண்டிகை, கொண்டாட்டம், விருந்து
முடிந்ததும், அடுத்த நாள், நீங்கள் தவிர்க்கவியலாமல்
மீண்டும் உங்களது அன்றாடச் சழக்கிற்கு, அதே பீடை
நிறைந்த சுற்றிற்கு, பயனின்மைக்கு, சிறுமைக்கு
திரும்ப வேண்டியுள்ளது என்பது எத்தகைய அபத்தம்
என்பதை நீங்கள் என்று புரிந்துகொள்ளப் போகிறீர்கள்?
^^^^
உண்மையில், "விசாரம்" தான் கொண்டாட்டம் என்பதன்
அசலான பெயர் ஆகும். "கற்றலை" "புரிதலை" அடிப்படை
யாகக் கொண்ட விசார ஈடுபாடு மட்டுமே வாழ்க்கையை
தினம் தினம், கணத்திற்கு கணம் கொண்டாடும் செயல்
பாடாகும்.
ஒரு விசாரகனது வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும்
தினமும் விழாவே, பண்டிகையே, கொண்டாட்டமே!
அவன் அன்றாடத்தின் கைதியல்ல. மாறாக, அன்றாடம்
அவனுக்கு அடிமை - சேவகம் புரியும் ஒரு கருவி!
^^^^
'விசார-வட்டம்' என்பது நண்பர்கள் குழாம் அல்ல - கூடிக்
குலவிக் கும்மாளம் போடுவதற்கு! மாறாக, உங்கள்
அனுபவித்தல், ரசனை, நகைச்சுவை, கேளிக்கை யாவும்
அடுத்த கட்டத்திற்கு பரிணமித்து உயரவேண்டும்!
^^^^
'விசார-வட்டத்தினுள்' நீங்கள் எதிர்கொள்ளவேண்டியது
உங்களை, உங்களை, உங்களை மட்டுமே தவிர, விசார
நடத்துனரையோ, பிற சக-பங்கேற்பாளர்களையோ அல்ல!
அதே நேரத்தில், நீங்கள் எல்லோராலும் சீண்டப்படலாம்;
இதற்குக் காரணம், ஒவ்வொருவருக்கும் தம்மிடமுள்ள
குறைகளை விட அடுத்தவர்களிடமுள்ள குறைகள் உடனே
எளிதாகக் காணக்கூடியதாக இருப்பதே யாகும்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விசார-அமர்வின்போது நீங்கள் ஒவ்வொருவரும் மிகக் கவன
மாகவும், கூருணர்வோடும் நடந்து கொள்ளுங்கள். உங்களது
ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சொல்லும், செய்கையும்,
பேச்சின் தொனியும், உங்களது மூச்சும், பெருமூச்சும், இச்சுக்
கொட்டலும், உங்களது வளவள பேச்சும், உள்ளீடற்ற மௌனமும்,
உங்களது ஒட்டுமொத்த இருப்பும் . . . . யாவும் உங்களை வெளிப்
படுத்திக்காட்டிவிடும்!
அதே நேரத்தில், நீங்கள் எதன் பின்னாலும் - யாதொரு கொள்கை,
கோட்பாடு, நபர், கருத்து, தந்திரம், சித்தாந்தம், வேதாந்தம்,
போன்ற எதன் பின்னாலும் மறைந்துகொள்ள, பாதுகாப்பு தேட
முயற்சிப்பதும் வீணே!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விசாரம் என்பது தற்போது நீங்கள் அடைந்திருக்கும் நிலையிலேயே
உங்களை நிறுவிக்கொள்வதல்ல! மாறாக, உங்களை மேலே உச்சி
யில் நிறுவுவதற்கான பெருமுயற்சியாகும்!
^^^^
விசாரம் என்பது நேர்செங்குத்தான
மலைமீது ஏறுவது போன்றது!
'உச்சம்' என்று ஒன்றுள்ளது என்பது
தெரிந்த பிறகும் வாளாவிருப்பது
முட்டாள்தனத்தின் உச்சம்!
மலைமீது ஏறத்தொடங்கிய பிறகு
ஓய்வு கொள்ள இடமோ, அவகாசமோ
கிடையாது, உச்சியைத் தவிர!
மலைமீது ஏறும்போது பற்றிக்கொள்ள
ஏதுமிராது, எவரது உதாரணமும்
வரைபடமும் உதவாது!
ஏறுவது கடினம் எனக்கண்டு மீண்டும்
அடிவாரத்திற்குத் திரும்புவது
அவலத்தின் அதலபாதாளம்!
உச்சியை அடையும் வரை சிகரமும்
பார்வைக்குத் தென்படாது!
தொடர்ந்து ஏறுவதைத் தவிர வேறு
வழியேயில்லை!
^^^^
புத்தர் அடைந்த உச்சமும், இயேசு
ரமணர் அடைந்த உச்சமும்
ஒவ்வொருவரும் அடையவேண்டிய
உச்சமும் ஒன்றுதான்!
எனினும், புத்தர் ஏறிய மலையில்,
வழியில், நீங்கள் ஏற முடியாது!
மலையேற்றம் தொடர்பான அனைத்து
அறிவையும், குறிப்புகளையும்,
யுக்திகளையும், வழிமுறைகளையும்
வரலாற்றையும் தெரிந்து கொள்வதால்
என்ன பயன்?
உங்களது முதல் அடியை எடுத்து
வைக்காமல் யாதொரு வழித்தடமும்
தோன்றுவதில்லை; ஏற்றமும்
தொடங்குவதில்லை!
அதில், அடுத்த அடி பற்றிய கற்பனையும்
சிலாகிப்பும் படு வியர்த்தமானது!
^^^^
விசாரமார்க்கம் தனித்துவமானதொரு
மார்க்கமாகும். அது தனது வழிகளில்,
அணுகுமுறைகளில் நுட்பத்திலும்
நுட்பமானது. திட்பமான, தூல உலகின்
கைதிகளுக்கு அது அந்நியமானது,
சீரணிக்க இயலாதது. சிலருக்கு
மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தக்
கூடும்!
^^^^
விசாரமார்க்கம் எவருடைய
அபிப்பிராயங்களையும்,
ஆலோசனைகளையும்,
விமர்சனங்களையும்,
கேள்விக் கணைகளையும்,
புகார்களையும், மதிப்பீட்டையும்
எதிர் நோக்கிக் காத்திருக்க
வில்லை!
ஏனெனில், அது எவரைக்கேட்டும்
தொடங்கப்படவில்லை!
^^^^
விசாரத்தின் முதல்படி, அன்றாட
விஷயங்களை, விவகாரங்களை
அப்படியே விட்டது விட்டபடி மறந்து
விட்டு அமைதியாக இருப்பது தான்!
^^^^
உங்கள் வாழ்க்கை இரண்டாகப்பிரிந்து
"விசாரத்திற்கு முன்", "விசாரத்திற்குப் பின்"
என வித்தியாசப்படவில்லையெனில்,
உங்களிடம் விசாரம் இன்னும் துளிர்க்க
வில்லை என்றுதான் அர்த்தம்!
^^^^
மா.கணேசன்/29.06.2016
No comments:
Post a Comment