Friday, 24 June 2016

சீரிய விசாரகனுக்கு சில குறிப்புகள்



 



உனக்கு ஆன்மீகம் பற்றியோ
ஆன்மீகப்பயிற்சிகள் பற்றியோ
தியானம் பற்றியோ, அல்லது ஆன்மா
பற்றியோ, மறுபிறப்பு பற்றியோ
பல்வேறு ஆன்மீக நூல்கள் பற்றியோ
எதுவும் தெரிந்திருக்க வேண்டும்
என்பதில்லை!

        /

ஏனெனில், வாழ்க்கையைத்தவிர்த்து
வாழ்க்கைக்கு வெளியே, வாழ்க்கைக்கு
அப்பால், ஆன்மீகம் என்று எதுவும் இல்லை!
அப்படியானால், 'வாழ்க்கை' தான் ஆன்மீகமா
என்றால், ஒருவகையில் "இல்லை" என்பதும்,
இன்னொரு வகையில்"ஆம்" என்பதும்
தான் அதற்கான பதில்!

    \

முதலில், ஏன் 'இல்லை!' என்பதைப்பார்ப்போம்!
ஏனெனில், 'வாழ்க்கை' என்ற சொல்லே
அதற்கான அர்த்தமோ, விளக்கமோ அல்ல!
பலர் நினைப்பது போல  'வாழ்க்கை' என்பது
அவ்வளவு எளிமையானதுமல்ல, அல்லது
சிலர் எண்ணுவது போல அதிகச்
சிக்கலானதுமல்ல!

     /

மாறாக,  'வாழ்க்கை' என்பது, பொதுவாக நாம்
அறிந்துள்ளதைவிட அதிகம் ஆழமானது!

     \

எதை நாம்  'வாழ்க்கை' எனக் கூறுகிறோம்?
எதை நாம்  'வாழ்க்கை' என வாழ்ந்து
செல்கிறோம்?
எதை நாம்  'வாழ்க்கை' எனக் கருதுகிறோம்?
நம்மிடம் "வாழ்க்கைப்பார்வை" என்று
ஏதுமுள்ளதா?
'இது' தான்  'வாழ்க்கை' என்று தீர்மானித்துக்
கொண்டுதான் நாம் வாழ்கிறோமா?

      /

இல்லை! "வாழ்க்கை என்றால் என்ன?" என்ற
கேள்வியைக் கேட்பதற்கு முன்னே நாம்
வாழத் தொடங்கி நெடிய வரலாறும்
படைத்துள்ளோம், இன்னும் படைத்துக்
கொண்டும் உள்ளோம்!

      \

ஒருவகையில், எப்போது, மேற்குறிப்பிட்ட
கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோமோ
அப்போதே நம்முடைய ஆன்மீகமும்
தொடங்கி விட்டது எனலாம்!

      /

இதுதான் அசலான, உண்மையான ஆன்மீகம்!
"வாழ்க்கை என்றால் என்ன?"  என்ற
கேள்வியுடன் தொடரும் ஆழமான விசாரத்துடன்
தான் அசலான, ஆழமான வாழ்க்கை, அதாவது
"மானிட வாழ்க்கை" தொடங்குகிறது-
அதற்கு முன் ஒரு போதும் இல்லை!

      \

வாழ்க்கையின் உள்ளார்ந்த நோக்கம்,
குறிக்கோள், இலக்கு, அர்த்தம், உண்மை
ஆகியவற்றை உணர்ந்தறிவதும், அவற்றை
நிறைவேற்றுவதும் தான் அசலான ஆன்மீகமும்
உண்மையான, ஆழமான, மானிட-வாழ்க்கையும்
ஆகும்!

      /

இதற்கு மாறாக,
வாழ்வின் குறிக்கோள், இலக்கு, அர்த்தம்
ஆகியவற்றை அறியாமல் வாழ்வதற்குப் பெயர்
தான் லௌகீகம், உலகியல் என்பதும், விலங்கு
வாழ்க்கை என்பதும் ஆகும்!

       \

ஆனால், " வாழ்க்கையை , அதன் குறிக்கோளை
இலக்கை, அர்த்தத்தை எவ்வாறு, எதைக்கொண்டு
அணுகுவது, அறிவது?  எவ்வாறு, எதைக்கொண்டு
அவற்றை அடைவது?"  என்கிறீர்களா?

       /

நல்லது! இவ்விடத்தில் நாம் வாழ்க்கையைவிட
அதிமுக்கியமான, வாழ்க்கையின் ஆதாரமான
அம்சம் பற்றி விசாரிக்கிறோம்!

       \

ஆம், " வாழ்க்கையை , அதன் குறிக்கோளை,
இலக்கை, அர்த்தத்தை, முழுமையை
எவ்வாறு, எதைக்கொண்டு
அணுகுவது, அறிவது?"

        /

அருமை விசாரகனே, உன்னுடைய உணர்வைக்
கொண்டுதான்! உன்னைச் சுற்றியுள்ள இருப்பையும்
உலகையும், இன்னும் உன்னையும் நீ உணர்வது,
அறிவது,  உணர்வைக்கொண்டுதான்!

        \

(நீ உணர்வற்றவனாய் இருந்தால், நீயும் ஒரு
தவளையைப்போலத்தான் இருப்பாய்!)

        /

"உணர்வு" தான் இப்பிரபஞ்சத்திலுள்ள
அனைத்தையும், ஏன், இப்பிரபஞ்சத்தையும்
வாழ்க்கையையும் விட அதிமுக்கியமானது,
மையமானது!
ஏனெனில், "உணர்வு" தான் " வாழ்க்கை"!

        \

இப்போது, வாழ்க்கையை , அதன் குறிக்கோளை
இலக்கை, அர்த்தத்தை, முழுமையை எவ்வாறு,
எதைக்கொண்டு அடைவது என்பதைப்
பார்ப்போம்!

        /

ஆம், மீண்டும், உணர்வைக்கொண்டுதான் அவற்றை
நீ அடைந்தாக வேண்டும்!

        \

நீ உயிர்த்துடிப்புடன் இருக்கிறாய், ஆனால் அது
போதாது!
உணர்வுத்துடிப்புடன் இருக்கவேண்டும்!

        /

அதாவது, வாழ்க்கையை , அதன் குறிக்கோளை
இலக்கை, அர்த்தத்தை, முழுமையை அடைவது
என்றால் என்ன என்பதை இப்போது பார்ப்போம்:

        \

"உணர்வு" தான் " வாழ்க்கை!" என்று சொன்னோம்!
அப்படியானால், இந்தச் சமன்பாட்டின் அடுத்தக்
கட்ட வளர்ச்சியாகக் காணும்போது
"முழு- உணர்வு" தான் "முழு-வாழ்க்கை!" என்று
சொல்லியாக வேண்டும்!

         /

அதாவது, வாழ்க்கையின் குறிக்கோள், இலக்கு,
அர்த்தம், முழுமை, உண்மை எனும் இவை யாவும்
ஒரே ஒரு அம்சத்தைத்தான் குறிக்கின்றன, அது
என்னவென்றால் : "முழு- உணர்வு" அல்லது
"பேருணர்வு" என்பதே!

         \

"வாழ்க்கை என்றால் என்ன?" என்றும்,
வாழ்க்கையின் குறிக்கோள், அர்த்தம், இலக்கு
பற்றியும் தன்னுள் விசாரிக்கும் ஒரு விசாரகனுக்கு,
அவனது உணர்வுக்கு, என்ன நிகழ்கிறது என்றால்,
இக்கேள்விகளால் கிளறப்பட்டு பெரும்
உறுத்தலுக்குள்ளான அவனது உணர்வு
அக்கேள்விகளுக்கான பதில்களைத் தன்னுள்
கொள்ளும்வகையில், விரிவடையவும்
அதிகரிக்கவும் செய்கிறது!

          /

சாதாரணமாக, நம்முடைய அன்றாடநடைமுறை
சார்ந்த கேள்விகளுக்குப் பதில் கண்டறியும்
வழிமுறையில், நம் உணர்வு பெரிதாக யாதொரு
மாற்றத்திற்கும் உள்ளாவாதில்லை,
விரிவடைவதுமில்லை,
உணர்வு அதிகரிப்பதுமில்லை!

          \

ஆனால், வாழ்க்கை பற்றிய ஆழமான
அடிப்படையான கேள்விகள் என்று வரும்போது,
அதிலும் முக்கியமாக, ஒருவன் அக்கேள்விகளின்
முக்கியத்துவம் அறிந்தவனாய், பேரார்வத்துடன்,
தீவிரமாய் தனது விசாரத்தை மேற்கொள்ளும் போது
அவனது உணர்வு ஒரு மாபெரும் மாற்றத்திற்கு
உள்ளாகும் அற்புதம்  உடன் நிகழ்வாக நடந்திடும்!

          /

உண்மையான, ஆழமான அறிவு, ஞானம் என்பது
ஒருவனது உணர்வினுடய அதிகரிப்பின், விரிவின்,
ஆழத்தின் விளைவே, வெளிப்பாடே தவிர வேறல்ல!

          \

ஆம், "முழு- உணர்வு" அல்லது
"பேருணர்வு" தான்
வாழ்க்கையின் குறிக்கோள்,
அதுவே வாழ்க்கையின் இலக்கு,
அதுவே வாழ்க்கையின் அர்த்தம்,
அதுவே வாழ்க்கையின் முழுமை,
அதுவே வாழ்க்கையின் உண்மை,
அதுவே முழுமையான வாழ்க்கையும்!
          /
உண்மையான, உணர்வுப்பூர்வமான வாழ்க்கை,
உனது பிறப்பிலிருந்து தொடங்குவதில்லை!
மாறாக,  எப்போது, "நான்" என்று, நீ உச்சரிக்கிறாயோ
அப்போதிலிருந்துதான் தொடங்குகிறது!
"நான்" என்பது உனது மூளையில் உற்பத்தியாகும்
சிற்றுணர்விலிருந்து தோன்றுகிறது!
ஏனெனில், நீ (அல்லது மனிதன்) என்பது அந்த
சிற்றுணர்வு தான் - உனது உடலல்ல நீ!
உணர்வாகிய மனிதன் உற்பத்தியாவதற்கு
நன்கு வளர்ந்த மூளை-அமைப்பைக்கொண்ட
உயிருள்ள உடல்-அமைப்பு தேவைப்படுகிறது!

         \

ஏற்கனவே சொல்லப்பட்ட சமன்பாடுகளான:

    உணர்வு = வாழ்க்கை  
    முழு-உணர்வு = முழு-வாழ்க்கை

இவற்றுடன் இப்போது,

     உணர்வு = மனிதன்

என்பதும் சேர்ந்து கொள்கிறது!

          /

இப்போது, நாம், ஆன்மீகத்தை அதன் சாரத்தில்
விளக்கும் சமன்பாட்டைக் காண்போம் :
   அதாவது, வாழ்க்கையை, அதன் குறிக்கோள்,
   இலக்கு, அர்த்தம், உண்மை, முழுமை ஆகிய
   வற்றைப் புரிந்துகொள்வதும், அவற்றை
   அடைவதும் தான் அசலான ஆன்மீகம், மற்றும்
   ஆழமான மானிட-வாழ்க்கை எனக்கண்டோம்!

   அதில், வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கு
   உணர்வின் தேவை மையமானது எனக்கண்டோம்!

   அடுத்து, வாழ்வின் குறிக்கோள், இலக்கு, அர்த்தம்
   முழுமை என்பது 'முழு-உணர்வு' எனக்கண்டோம்!
   அப்படியானால், 'உணர்வார்ந்த செயல்பாடு'தான்
   உண்மையான ஆன்மீகம்! 'முழு-உணர்வு' தான்
   ஆன்மீக இலக்கு! என்பது தெளிவான முடிவாகிறது!
   இதோ சமன்பாடு :

        உணர்வார்ந்த செயல்பாடு = ஆன்மீகம்
        முழு-உணர்வு = ஆன்மீக இலக்கு = மானிட
        வாழ்வின் இலக்கு

             \

உணர்வோடிருத்தல், உணர்வில் மேன்மேலும்
பெருகுதல், வளர்ந்துயருதல், முழு-உணர்வு
அடைதல் என்பது தான் ஆன்மீகம்!

             /

உணர்வு               ?       
               |              _!
        ^     |           _/
        |      |      _/
               |   _/
               |_/_________
                             இருப்பு --->


இருப்பு நிலை வளர வளர உணர்வு நிலை உயருகிறது!
இதுதான் பரிணாம வழிமுறையின் அடிப்படை விதி!
பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வே!

விஞ்ஞானம் உயிரியல் பரிணாமத்தைப் பற்றி மட்டுமே
ஆராய்கிறது, அதன் அடியோட்டமாக அமைந்துள்ள
உணர்வுப்பரிணாமத்தை அது கணக்கில் கொள்ள
வில்லை! ஆனால், ஆன்மீகம் எனும் 'மெய்ஞானம்'
முழுமையான விஞ்ஞானம் ஆகும், அது எல்லா
வற்றையும் கணக்கில் கொள்ளத்
தவறுவதில்லை!

             \


சிறிதாகத் தொடங்கி மிகப்பெரிதாக வளர்தல்,
முழுமைக்குறைவானதாகத் தொடங்கி முழுமையடைதல்,
பூரணமற்றதாகத் தொடங்கி பூரணமாதல் என்பதுதான்
பரிணாமப்படைப்பின் அடிப்படை நியதி!

எல்லையில்லா இப் பௌதீகப்பிரபஞ்சம், ஒரு
பெரு-வெடிப்பில் ஒரு சிறுஅணுவாகத்தான் தோன்றியது!

உயிர்த் தோற்றம் முதன்முதலில் ஒரு நுண்ணிய ஒற்றைச்
'செல்'லாகத்தான் உருவானது!

மாபெரும் விருட்சம் சிறு விதையிலிருந்துதான் முளைத்து
எழுகிறது!

             /

மீண்டும் சொல்கிறேன்,உனக்கு ஆன்மீகம் பற்றியோ
ஆன்மீகப்பயிற்சிகள் பற்றியோ, தியானம் பற்றியோ,
அல்லது ஆன்மா பற்றியோ, மறுபிறப்பு பற்றியோ
பல்வேறு ஆன்மீக நூல்கள் பற்றியோ எதுவும்
தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை!

ஏனெனில், வாழ்க்கையை நேசிக்கும் விசாரகனே,
வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவேண்டும் என்கிற
உனது குன்றாப் பேரார்வம் தான் உனது வழிகாட்டி!

அலைகள் தவழும் மேற்புறம் மட்டுமல்ல சமுத்திரம்!
முத்துக்களைத் தேடி மூழ்கும் வீரனே அறிவான்
அதன் ஆழம்!

சமுத்திரம் என்ன, இப்பிரபஞ்சத்தையும் தன்னுள்
கொண்டது வாழ்க்கையின் ஆழம்!

அர்த்தம் தேடி தன்னுள் மூழ்கும் விசாரகனே
அடைவான் ஞானம்!

          /

அருமை விசாரகனே, நீ உன் உடலின்
விலங்கியல்புகளை வெற்றி கொள்வது
அவ்வளவு எளிதல்ல!

அதை நீ வெற்றி கொண்டாலும், மிக
எளிதாக பிரமைகளுக்கு ஆட்படும் உன்
மனதின் மட்டுப்பாடுகளை வெற்றி
கொள்வது இன்னும் கடினமானது!

வெகு அரிதான சிலரே அசலான
ஆன்மீகத்திற்குள் பிரவேசிக்கிறார்கள்!

வெகுபலர் ஆன்மீகக் கோட்பாடுகளைத்
தெரிந்துகொள்வதிலேயே மிதப்படையும்
போலிகளாகத் தேங்கிவிடுகின்றனர்!
           
          /

அருமை விசாரகனே, நீ உன் அகந்தையின்
மேற்பார்வையில் உன் விசாரத்தை நடத்திச்
செல்லும்வரை உண்மை ஆன்மீகம்
தொடங்குவதில்லை!

ஆகவே, சிறு மாற்றம் செய்திடு!
உயர்-விசாரத்தின் மேற்பார்வையில்
உன் அகந்தையை வழி நடத்திச் சென்றிடு!
மாபெரும் மாற்றம் நிகழ்ந்திடும்!


          /

அருமை விசாரகனே, நீ உனது அன்றாடத்
துன்பங்களிலிருந்தும், பிரச்சினைகளிலிருந்தும்,
கடன் தொல்லைகளிலிருந்தும், உனது தவறுகளால்
நீ சிக்கிக்கொண்ட தளைகளிலிருந்தும் விடுபடுவதை
விடுதலை என எண்ணுவாயெனில் உனது பார்வை
தவறானது!

துன்பங்கள், பிரச்சினைகள்,  தொல்லைகள், மற்றும்
தளைகளிலிருந்தும் விடுபடுவது அவசியம் தான்!
ஆனால், அதற்கும் உண்மையான விடுதலை மற்றும்
ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

வாழ்க்கையின் அர்த்தம், இறுதி உண்மை, மற்றும்
மெய்ம்மை பற்றிய கேள்வியும், நாட்டமும் உன்னிடம்
இல்லையெனில், உனக்கும் ஆன்மீகத்திற்கும் யாதொரு
சம்பந்தமும் இல்லை!

          /

உனது ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும்
உணர்ச்சியும், அசைவும் உனது  சொந்த-சுயத்துடன்
அல்லது அகந்தையுடன்  சம்பந்தப்பட்டதே!

உனது சொந்த-சுயத்துடன், அல்லது அகந்தையுடன்
தொடர்பில் அமையாத, சம்பந்தப்படாத
எவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும்,
உணர்ச்சியும் உன்னிடமிருந்து வெளிப்படுமானால்
உண்மையில் நீ ஆன்மீகத்தில் வளர்ந்துள்ளாய்
என நீயே அறிந்து கொள்ளலாம்!

         /

ஒட்டடையின் பண்பு தூசு மாசுகளைச்
சேர்த்துக்கொள்வதுதான்!
தினம்தினம் உன் ஆயுள் முழுவதும் நீ ஒட்டடை
நீக்கி உனது அறையைச் சுத்தம் செய்து
கொண்டேயிருக்கலாம்!
ஆனால், ஒட்டடைக்குக் காரணமான
சிலந்தியைக் கண்டுபிடித்து அறையைவிட்டு
அகற்றாமல் தூசு மாசுகளை
ஒழிக்க முடியாது!
கற்பனை, பிரமை, மாயை ஆகிய இழைகளைக்
கொண்டு பின்னிய வலையில், சுய நலம்
எனும் மையத்தில் அமர்ந்து
ஆட்சி செய்யும் அகந்தைச் சிலந்தியை
மனதைவிட்டு அகற்றாமல்
ஆன்மாவை மறைக்கும் மன மாசுக்களைக்
களையமுடியாது!

          /

அகந்தையின் இருப்பை முற்றிலுமாக மறுப்பது
அதன் இருப்பிற்கு அதிமுக்கியத்துவமும்
நிரந்தரமும் அளிப்பதைப்போன்றே தவறானது!

உணர்வின் தொடக்கப்புள்ளியான அகந்தைக்கு
உரிய இடமும்,  முக்கியத்துவமும் உள்ளது!
ஒரு ஓவியத்தின் தொடக்கப்புள்ளிக்குரிய
இடமும், முக்கியத்துவமும் மறுக்கவியலாது!

ஒற்றைப் புள்ளி ஒருபோதும் ஓவியமாகாது!
முழுமையடைந்த ஓவியத்தில் தொடக்கப்புள்ளி
முடிவுப்புள்ளி இரண்டும் தெரியாது!

எவ்வொரு தொடக்கமும் வளர்ந்து முழுமையில்
முடிவடைவது பரிணாம நியதி!
தொடக்கப்புள்ளி தன்னை முற்றுப்புள்ளியாகக்
கொண்டாடுவது தற்கொலைவிதி!

அகந்தை அகந்தையாகவே தேங்குவது அதன் வீழ்ச்சி!
வளர்ச்சி அழிவென்றும், மாற்றம் மரணமென்றும்  அஞ்சி            
தன்னைக் காத்திடும் அகந்தை அழிவது உறுதி!

          /

எவர் சொல்வதையும் கேட்காதீர்கள்!
அவசரப்பட்டு உங்கள் அகந்தையை
அழித்துவிடாதீர்கள்!

தானே முதலும் முடிவும் சாசுவதமும்
என இறுமாந்திருக்கும் அகந்தையின்
பேச்சையும் கேட்காதீர்கள்!

அகந்தையின் பிரச்சினை இதுதான்:
உணர்வின் வகையினத்தில் அதுதான்
முதலாவதானது!

அகந்தைக்கு மாற்றாக அதனிடத்தை
நிரப்புவதற்குப் பொருத்தமான எதுவும்
இப்பிரபஞ்சத்தில் இல்லை!

சக -அகந்தைகள் உள்ளனவென்றாலும்
ஒரு அகந்தை இன்னொரு அகந்தையைவிட
மேலானதல்ல!

ஆகவேதான் சமமான அகந்தைகள்
தம் தம் மேலான்மையை நிறுவிட
சதா சண்டையிட்டுக்கொண்டுள்ளன!

ஒரு அகந்தையால் இன்னொரு அகந்தையைச்
சகிக்கமுடியாதென்பது உண்மையானால்
தன்னையும் சகிக்கமுடியாது என்பதும்
உண்மையே!

அகந்தையின் அசலான பணி பிற அகந்தைகளுடன்
போட்டியிட்டுக்கொண்டிருப்பதல்ல!
இன்னும் அநித்தியமான தன்னைப் போற்றிப்போர்த்தி
பாதுகாப்பதுமல்ல!

தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பிரயத்தனங்களில்
மூழ்கிப்போன அகந்தை, தன்னைக்கடந்து வளர்ந்து
தான் ஒரு உயர்-உணர்வாக மலர முடியும் என்பதை
அது ஒருபோதும்  யோசிப்பதில்லை!

அகந்தை  தன்னைப்பாதுகாத்துக் கொள்ளவிரும்புவதில்
அணுவளவும் தவறேதுமில்லை!
ஏனெனில், அழிவதற்காகத் தோன்றியதல்ல அகந்தை!
அல்லலுற்றாலும் அழியா நிலை அடையும் வரை
மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கும் வினோத விந்தை!

கடவுளின் சாயலில் பிறந்ததாலேயே தன்னைக்
கடவுளாகப்பாவிப்பது தான் அகந்தையின் பெருந்தவறு!
சாயல் போதாது அசலாக மாறுவதொன்றே தன்னைப்
பாதுகாத்துக் கொள்ளும் நிச்சயமான வழி!

அகந்தையின் அழிவில் தோன்றுவதில்லை ஆன்மா!
அகந்தை கடவுள் அல்ல! அகந்தையில்லாமலும்
கடவுள் இல்லை!
அகந்தையின் மலர்வே கடவுள்!

                    /

மா.கணேசன்/ 19.06.2016







No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...