Sunday, 5 February 2017

மனிதனின் சித்தமா? உலகின் சித்தமா?






   கட்டற்ற சுதந்திரம் என்பது ஒரு மாயை
   மேலும் அது அர்த்தமற்றது!
   அப்படியொரு சுதந்திரம் இருந்தாலும்
   அது விரும்பத்தக்கதுமல்ல!
   தெரிவுகள் ( நன்)மதிப்புகளை பிரதிபலிக்காவிடில்
   அவை அர்த்தமற்றவை!
   உன்னிடம் ஏற்கனவே  (நன்)மதிப்புகள் இல்லாமல்
   அர்த்தமுள்ளவகையில் அவைகளைத்
   தெரிவு செய்யமுடியாது!

        <•>

உண்மை, பொய்மை இரண்டில் ஒன்றை நீ தேர்வு செய்திடலாம்!
உண்மையை நீ தேர்வு செய்யும் பட்சத்தில் சில கட்டுப்பாடுகளுக்குள் நீ
வாழவேண்டியிருக்கும் - மனம் போனபடி நீ வாழ முடியாது!
ஆனால், முடிவில் நீ விடுதலை அடைவாய்!
பொய்மையை நீ தேர்ந்துகொள்ளும் பட்சத்தில் நீ உன் விருப்பம் போல
வாழலாம்! ஆனால், விடுதலை உன்னை விலக்கிவிடும்!
       
        <•>

மனிதனுக்கு சுதந்திர சித்தம்  (Free will)உள்ளதா?  அல்லது யாவும்   ஏற்
கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டனவா?  சிலர், மனிதனுக்கு சுதந்திர சித்தம்
"உள்ளது"   என்கின்றனர்.   சிலர்,  " இல்லை"  என்கின்றனர்!     இரண்டில்   எது
உண்மை?    பல  விஞ்ஞானிகள்  பௌதீகஉலகையும்,  அதன்  விதிகளையும்
ஆராய்ந்து கண்டு,   எல்லாம்    ஏற்கனவே   தீர்மானிக்கப்பட்டு    விட்டதாகச்
சொல்லுகிறார்கள்;  மனிதனுக்கு   சுதந்திர சித்தம் கிடையாது   என்று  திட்ட
வட்டமாகச் சொல்லுகிறார்கள்.   ஆனால்,  எல்லோரும்  மனிதனின்  சுதந்திர
சித்தம் பற்றியும்,  உலகின் சித்தம் பற்றியும் மட்டுமே பேசுகிறார்களே தவிர
இவ்விரண்டையும்  கடந்து மூன்றாவதாக வேறு எவ்வொரு சித்தம் பற்றியும்
குறிப்பிடுவது இல்லை!  சமயவாதிகள் மட்டுமே "கடவுளின் சித்தம்"  பற்றிப்
பேசுகிறார்கள்!     ஆனால்,    நான்    மூன்றாவது  விதியாக   மெய்ம்மையின்
அல்லது முழுமையின் சித்தம் அல்லது விதியை முன்வைக்கிறேன்!

சித்தம்,   மனம்,   விருப்பம்,   முனைப்பு,  தெரிவு,  சுதந்திரம்  இவை   ஒன்றுக்
கொன்று தொடர்புடையவை;    அதே வேளையில்,       இவையனைத்துக்கும்
அடிப்படையாக  அமைவது "உணர்வு" (Consciousness) ஆகும்!  உணர்வு
இல்லாமல், மனிதனுக்குச் சித்தமும் இல்லை, சுதந்திரமும் இல்லை!

மனிதனுக்கு  சுதந்திர சித்தம்  (Free will)உள்ளதா? இல்லையா? என்பது
குறித்து  ஒரு முடிவிற்கு வருவதற்கு முன்னர்,  சுதந்திரம் என்றால் என்ன என்
றும், சித்தம் என்றால் என்ன என்றும் அறிவது அவசியமாகும். இந்த மாலைப்
பொழுதில்,  ஒரு   நல்ல  உணவகத்திற்குச்  சென்று  நான்  மிகவும்  விரும்பும்
அந்தச் சிற்றுண்டியைச் சாப்பிட விரும்புகிறேன்; அது போலவே சாப்பிடவும்
செய்கிறேன்  என்றே  வைத்துக்கொண்டாலும்,  எனக்குப்பிடித்த உணவு என்
பது பல காரணிகளால் - நான்  பிறந்த குடும்பத்தின் உணவுப்பழக்கம், இந்த
உணவு ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று அறிவுறுத்தப்பட்டது, பலவகைப்
பட்ட   உணவுகளில்  சிலவற்றை   எனது  நாக்கின்  சுவையரும்புகள்   இவை
சுவையானவை என்று தெரிவு செய்தது என்பதுபோன்ற காரணிகளால் -தீர்
மானிக்கப் பட்டதாக இருக்கலாம்! பணி நிமித்தம், நான் ஒரு வெளி நாட்டிற்
குச்செல்லுகிறேன்,  அங்கு  எனக்குப் பிடித்த  வழக்கமான  உணவு கிடைக்க
வில்லை  என்பதால்,  நான்  பட்டினியாக இருக்கப்போவதில்லை!  ருசிக்காக
இல்லாவிட்டாலும்,     எனது   பசியைப்   போக்கிக்  கொள்வதற்காக   அங்கே
கிடைக்கின்ற  உணவு வகைகளில் எவை எனக்குப் பிடிக்கிறதோ அவற்றை
உண்டு, எனது பணி முடிந்ததும் சொந்த நாடு திரும்புவேன். எனது வீட்டிற்கு
வந்ததும்  எனக்குப் பிடித்த   உணவுவகைகளைச் செய்யச் சொல்லி  உண்டு
மகிழ்வேன்!

உண்மையில், எல்லா நேரங்களிலும், சுதந்திரமாக நான் விரும்பியவற்றைச்
செய்யவோ,  அடைந்திடவோ இயலாது.  அதே வேளையில்,  அனைத்திலிருந்
தும்  உளவியல்  ரீதியாக  விடுபட்டு சுதந்திரமாக  இருப்பதென்பது யாவருக்
கும்  சாத்தியமில்லை என்றாலும்,  சிலருக்கு  நிச்சயம்  அது  சாத்தியமாகும்!
ஆனால்,  ஒவ்வொருவரும்  சில  வரையறைகளுக்குள்  சுதந்திரமாக இருக்க
வும், செயல்படவும் செய்கிறார்கள் என்பதென்னவோ உண்மைதான்!

அப்படியானால்,வரையறைக்கு உட்படாத,வரம்பற்ற முற்றும் முழுமையான
சுதந்திரம்  (Absolute Freedom) என்பது  இல்லையா  என்றால்,  இல்லை,
ஆம்,  இரண்டும்தான்!  ஏன்  'இல்லை ' என்றால், மனிதஜீவிகளாகிய நாம் எப்
போதும்   ஒன்றுக்கு   மேற்பட்ட   அமைப்புகளுக்குள்,      அவ்வமைப்புகளின்
பகுதிகளாகத்தான் உள்ளோம் -  குடும்பம்,  சமூகம்,  தேசம், உலகம், பிரபஞ்
சம் ஆகிய அமைப்புகள். இந்த  அமைப்புகளுக்குள், அவற்றின் பகுதிகளாக
உள்ளவரை,  வரம்பற்ற  முற்றும்  முழுமையான சுதந்திரம் என்பது சாத்திய
மில்லை;   மேலும்,   அவற்றின் பகுதிகளாக  இல்லாமலும்  மனிதன்   இருக்க
முடியாது.    ஆகவே,   சார்பு  ரீதியிலான  சுதந்திரம்  (Relative Freedom)
மட்டுமே சாத்தியம்!  வரையறைக்கு உட்படாத, வரம்பற்ற முற்றும் முழுமை
யான சுதந்திரம் என்பது இவ்வமைப்புகளுக்கு வெளியே, கடப்பு  நிலையில்
(Transcendentally) மட்டுமே  சாத்தியம்!   ஏனெனில்,   முழுச்சுதந்திரம்
என்பது இறுதியான,  முடிவான இலக்கு நிலை ஆகும்.  அதாவது, முழுச்சுதந்
திரம் மட்டுமல்லாமல், "அர்த்தம்", "உண்மை" மற்றும்   "முழுமை" ஆகிய
இறுதியான அம்சங்கள் யாவும் மறுகரையைச் சேர்ந்தவையாகும்! இக்கரை
யில் யாவும் சார்பு ரீதியில் மட்டுமே சாத்தியம்! உண்மையில்,  நாம் இக்கரை
யில் தான் தோன்றினோம் என்றாலும்,  மறுகரையை அடைவதே நம் வாழ்
வின் இலக்கு ஆகும்!

மனித ஜீவிகளாகிய நாம் குடும்பம், சமூகம், தேசம், உலகம், பிரபஞ்சம்
ஆகிய அமைப்புகளுக்குள் தான் இருக்கிறோம், வாழ்கிறோம்  எனக் கண்
டோம். இவ்வமைப்புகளில், பிரபஞ்சம் தான் அடிப்படையானதும் பிரதான
மானதும் ஆகும். பிரபஞ்சத்தை பௌதீகவிதிகள் செலுத்துகின்றன, கட்டுப்
படுத்துகின்றன என்பது விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பும், முடிவுமாகும்!
ஆனால், பௌதீகவிதிகள் என்பவை மூல-விதிகள் அல்ல. மாறாக,அவற்றிற்
கும் மூலமாகத் திகழ்பவை பரிணாம விதிகளே என்பது விஞ்ஞானம் கண்டு
பிடிக்கத் தவறிய உண்மையாகும்! பரிணாம ரீதியாக பௌதீகவிதிகளுக்கு
அடுத்தபடியாக எழுந்தவை உயிரியல் விதிகள், அதற்கடுத்தபடியாக உணர்
வியல் விதிகள் அமுலுக்கு வந்தன. இவ்விதிகள் யாவும் பரிணாமபூர்வமான
வையாகும். ஆனால், குடும்பம், சமூகம், தேசம் ஆகியவற்றின் விதிகள் அவ்
வமைப்புக்களுக்கே  உரிய சொந்த விதிகளாகும்; அவை மானுட வாழ்க்கை
பற்றிய  அரைகுறையான புரிதலைக்கொண்டு,  மானுட அங்கத்தினர்களை
நிர்வகிப்பதற்காக  உருவாக்கப்பட்டவையாகும்!  ஆகவே,   அவை   மானுடர்
களை பலவகைகளிலும் கட்டுப்படுத்துவதாகவும், மட்டுப்படுத்துவதாகவும்
அமைவது அவ்வமைப்புகளுக்கே  உரிய இயல்புகளின் வழிப்பட்டதாகும்.

பௌதீக விதிகள்   பௌதீகப் பிரபஞ்சத்தையும்,   அதன்  பொருட்களையும்
மட்டுமே   கட்டுப்படுத்தக்கூடியவையாகும்.  நமது உடலும் பருப்பொருளால்
ஆனது  என்பதால்,  ஓரளவிற்கு  அவ்விதிகள்  நமது உடலையும்  கட்டுப்படுத்
தக்கூடும்.  உதாரணத்திற்கு,  நமது உடல்,  ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டதா
கும்.  நாம் மொட்டை மாடியில் நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கும் போது
கால்  இடறினால்  கீழே  தரையில் தான் வீழ்வோம்;  ஒரு பறவையைப்போல
அப்படியே விண்ணில் உயர்ந்து பறக்க நம்மால் இயலாது. ஒரு சிறிய சிட்டுக்
குருவியினால் கூட பறக்கமுடியும் என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஏனெ
னில்,  மனிதனுக்குப்  பறக்க வேண்டிய தேவையும்,  அவசியமும்  இருந்தால்
அவனுக்கும்   சிறகுகள்  முளைத்திருக்கும்!   ஆனால்,    மனிதன்    என்பவன்
வெறும் ஆகாயவெளியில் பறப்பதற்காக அல்லாமல்; மேன்மேலும் உணர்வு
எனும்   ஆன்மீக  வெளியில்  உயர்ந்தெழுவதற்காக  உருவானவன்  ஆவான்!
பௌதீக விதிகள் மனிதனைப்பற்றியும், அவனது வாழ்க்கை மற்றும் அவன்
அடையவேண்டிய விசேடமான பரிணாம இலக்கு பற்றியும் பெரிதாக  எதை
யும் விளக்கிடவில்லை!

இவ்வுலகம்,  அதாவது பிரபஞ்சம் ஏன் எதற்காகத் தோன்றியது, அதில் உயிர்
ஜீவிகளும்,  உணர்வுள்ள  மனித ஜீவிகளாகிய  நாமும்  ஏன்  தோன்றினோம்
என்பதை பௌதீக விதிகளும், பௌதீக விஞ்ஞானிகளும் ஒருபோதும்   (நம்
வாழ்-காலத்திற்குள்)  நமக்கு எடுத்துச் சொல்லப் போவதில்லை! அப்படியே
சொன்னாலும்,  அவை பருப்பொருளின் பண்புகளைப்பற்றி மட்டுமே சொல்
லக்கூடும்! மேலும், பிரபஞ்சத்தையும், அதன் பௌதீகவிதிகளையும் பற்றித் தெரிந்துகொள்வதைவிட,  பிரபஞ்சம்  ஏன்  எதற்காகத்  தோன்றியது,  அதில்
உயிர்ஜீவிகளும்,   உணர்வுள்ள   மனித ஜீவிகளாகிய   நாமும்  ஏன்  தோன்றி
னோம் என்பதையும்,  மற்றும்  பிரபஞ்சத்தின்  அடியோட்டமான பரிணாமத்
திட்டத்தையும்,   அதன் இறுதி இலக்கையும் பற்றிப் புரிந்து கொள்வதே அதி
முக்கியமானதாகும்!

ஏனெனில்,   பிரபஞ்சம் என்கிற அமைப்பின் பகுதியாக நாம் தோன்றியுள்ள
தால்,  குறிப்பாக  நாம்  அவ்வமைப்பின்  எத்தகைய பகுதி என்பதை அறியா
மல்,  நம்முடைய வாழ்வின் இலக்கை அறிய முடியாது;  வாழ்வின்  இலக்கை
அறியாமல், நம் வாழ்க்கையை முறையாகவும், முழுமையாகவும் வாழ  விய
லாது! ஒட்டுமொத்த பிரபஞ்ச அமைப்பில், மனிதனே மிக விசேடமான பகுதி
யாக விளங்குகிறான்;  அதற்குக்காரணம்,  பிரபஞ்சத்தின்  வேறு  எவ்வொரு
பகுதியும்  பெற்றிராத  "உணர்வு"  எனும்  அம்சம்  மனிதனிடம் துளிர்த்துள்ள
தேயாகும்.   ஒட்டு மொத்த  பிரபஞ்சமும்  எத்தகைய  இலக்கை  அடைந்தாக
வேண்டுமெனும்  விழைவைக் கொண்டுள்ளதோ,  அந்த   இலக்கை  அடைவ
தற்கான  வழிமுறையில்  தத்தம் பங்கு பணியை  -  சிறியதோ, பெரியதோ -
ஆற்றுவதே ஒவ்வொரு பகுதியின் வாழ்க்கையும், கடமையுமாகும்!

இவ்விடத்தில், வாழ்க்கையும், கடமையும் என்று இரண்டு விஷயங்கள் குறிப்
பிடப்படுவது சீரிய கவனத்திற்குரியது ஆகும்! ஒருவகையில், இவ்விரண்டும்
ஒன்றுக்கொன்று   பொருந்தாத  அம்சங்கள்   எனலாம்!   வாழ்க்கை   என்பது
சுதந்திரத்தை விரும்புவதையும், கடமை என்பது சில கட்டுப்பாடுகளுக்குள்
இயங்க வேண்டியிருப்பதையும் குறிப்பதாகவுள்ளது. ஆம்,சுதந்திரம் என்பது
வரையறைக்கு  உட்பட்டதாகும்!  அதே நேரத்தில்,  வரையறுக்கும் பரிணாம
விதிகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவது தான் விடுதலைக்கான வழி
யுமாகும்!  ஏனெனில்,   "இறுதி விடுதலை"  என்பதே பரிணாமத்தின் இலக்கு
ஆகும்!

ஏனெனில்,  கட்டற்ற  சுதந்திரம்  என்பது  அடிப்படையற்றது,  ஆகவே அர்த்த
மற்றதாகும்.  ஒரு  நதியானது   இரு கரைகளுக்கு  இடையில்  சுதந்திரமாகப்
பாய்ந்து செல்லலாம்! கரைகளற்ற அல்லது கரைகளை உடைத்துச் செல்லும்
நதியானது நாலாபுறமும் சிதறியோடி பூமியினால் உறிஞ்சப்பட்டு விரைவில்
காணாமல்  போய்விடக்  கூடும்!  ஆனால்,  கரைகள்  எனும்  கட்டுப்படுத்தும்
விதிகளுக்குள்    பாய்ந்தோடிடும்    நதி   முடிவில்  வற்றாத   சமுத்திரத்தைச்
சென்றடைந்து  நித்திய வாழ்வு  எனும்   உண்மையான   சுதந்திரத்தை, முழு
விடுதலையை அடைகிறது!

பரிணாம ரீதியாக,  பிரபஞ்ச அமைப்பின் பகுதியான நம்முடைய வாழ்வின்
இலக்கு  ஏற்கனவே  தீர்மானிக்கப்பட்ட  ஒன்றாகும். எவ்வாறு, ஒரு மரத்தின்
பிரதான  இலக்கு,  அதாவது  கனிகளை பிறப்பிப்பது என்பது ஏற்கனவே தீர்
மானிக்கப்பட்டதாக  உள்ளதோ,  அவ்வாறே  பிரபஞ்சத்தின் இலக்கும்  ஏற்க
னவே   முடிவான  ஒன்றாகும்!   அதாவது  நதியின்   இலக்கு  சமுத்திரத்தைச்
சென்றடைவதே என்பது முடிவான ஒன்று என்பதைப்போல! இங்கு நாம் கவ
னிக்கவேண்டிய  ஒரு  முக்கிய விஷயம்  என்னவென்றால், நதியின் இலக்கு
மட்டுமே  முன்-தீர்மானிக்கப் பட்டதாயுள்ளதே தவிர,  அது  சமுத்திரத்தைச்
சென்றடையும்  பாதை  முன்-குறிக்கப்படவில்லை  என்பது தான்!  அதாவது,
பரிணாமம்  எவ்வாறு  படிப்படியாக  மடிப்பவிழ்க்கப்படுகிறது  (Unfold),
வெளிப்படுகிறது  என்பதில்  சிறிது   சுதந்திரம்  உள்ளது எனலாம்;  எனினும்,
அவ்வெளிப்பாட்டு நிலைகள் முடிவான இலக்கு நிலைக்கேற்பவே(Teleology) வடிவமைக்கப்படுகின்றன,அதாவது கட்டுப்படுத்தப்படுகின்றன!

பரிணாமம் என்பது ஒரு தானியங்கி நிகழ்வுமுறை போன்றதாகும்;எவ்வாறு
ஒரு  விதையானது  விருட்சமாக விரிந்து மீண்டும் விதையினுள் உள்ளடங்கு
கிறதோ அவ்வாறு! ஏனெனில், உணர்வற்ற உலகிற்கு சித்தம் என்பதில்லை,
எனினும்  அதற்கு  பிரதானமாக  உள்ளார்ந்த  ஒரு  "விழைவு"  உண்டு.  அந்த
விழைவை யுணர்ந்து  நிறைவேற்றுவதற்காக  உருவானவனே  உணர்வுள்ள
சுய-சித்தம் உள்ள மனிதன்!  இவ்வகையில் பிரபஞ்சத்திலிருந்து வேறானவ
னல்ல மனிதன்!   உலகின் விழைவைப் பிரதி நிதித்துவம் செய்யும் சித்தமே
(உணர்வே) மனிதன்!பிரபஞ்சமானது தன்னை உள்ளிருந்து செலுத்தும் அந்த
உந்துதலை  உணர்வுபூர்வமாக அறியும் பொருட்டே மனிதனாக,  மனிதனுள்
மனமாக, சித்தமாக எழுந்தது!

ஏனெனில்,   பருப்பொருளால்  அமைந்த   தொடக்கநிலைப்  பிரபஞ்சத்திற்கு
சித்தம் என்பதில்லை!  மனிதனின் சித்தம்   என்பது  உண்மையில்  மனிதனு
டைய  சித்தம் அல்ல! மிகவும் அசலான வகையில், அது பிரபஞ்சத்தின் சித்த
மேயாகும்! ஆனால்,மிகவும் துரதிருஷ்டவசமாக, மனிதன் தனக்காகத்தோன்
றியவனைப்போல   தன்  மனம் போன போக்கில்  செயல்பட்டுக் கொண்டும்
வாழ்ந்துகொண்டும் செல்கிறான்!   உண்மையில்,    பிரபஞ்சமும்   தமக்காக
இல்லை;  மனிதனும்  தனக்காக இல்லை!  மாறாக,  இருவரும்  இறுதி மெய்ம்
மைக்காகவே இருக்கிறார்கள்! ஏனெனில், இறுதி மெய்ம்மை மட்டுமே நிஜத்
திலும் நிஜம் ஆகும்! மேலும்,பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த விழைவு சுட்டுகின்ற
அம்சம் இறுதியான அந்த மெய்ம்மையைத்தான்! மேலும்,   இறுதியாக  மனி
தனும் பிரபஞ்சத்தின்பகுதியும் அல்ல; மாறாக, அவன் முழுமையின், மெய்ம்
மையின்,   பிரதிநிதியும்  மெய்ம்மையோடு  மெய்ம்மையாக  ஐக்கியமாகிட
வேண்டியவனும்  ஆவான்!

உண்மையில்,   மனிதன்   தன்னிச்சையாகத்தான்  செயல்படுகிறானா   என்
றால்,  இல்லை என்றுதான் சொல்லவேண்டும்! ஏனெனில், தன் மனம் போன
போக்கில்   செயல்படுவது  என்பது வேறு;   மனம்   தனக்கே யுரிய  அசலான
செயல்பாட்டைச்  (Function) செய்வது  என்பது வேறு.  ஆம், மனித மனம்
இன்னும் தனது அசலான செயல்பாட்டைக் கண்டுபிடிக்கவில்லை! அதாவது,
முழுமையை,    இறுதி மெய்ம்மையைப்  பிரதிநிதித்துவம்  செய்வதற்காகத்
தோன்றிய  மனம்  (மனிதன்)  தன் உடலை,    உடலின்  தேவைகளைப்   பிரதி
நிதித்துவம் செய்யும்  ஒரு  ஏவலாளாகத்  தாழ்ந்து போனான்!  ஆக, மனிதன்
மனிதனாக   இல்லாத   நிலையில்,   இன்னும்   தன்னைக்   கண்டு பிடிக்காத
நிலையில் சுதந்திரம் பற்றிய  அவனது கோரிக்கைகள் அனைத்தும் அனர்த்
தமானவையே!  இவ்வகையில்,  மனிதனின் 'சுதந்திர-சித்தம்' பற்றிய பேச்சு
கள்,அதாவது, மனிதனுக்கு சுதந்திர சித்தம் உண்டா, இல்லையா எனும் பேச்
சுகள், விவாதங்கள் யாவும் அடிப்படையற்றவையே!

ஆக,  மீண்டும்  நாம்  அடிப்படைகளுக்குச் செல்வது அவசியமாகிறது!  சுதந்
திரம்  என்றால் என்ன?  சுதந்திரத்திற்காக  சுதந்திரம்  என்றேதும்  உண்டா?
நோக்கமற்ற, இலக்கற்ற சுதந்திரத்தின் அர்த்தம் என்ன? ஆனால், சுதந்திரத்
திற்கான மனிதனின் விழைவில் தவறில்லை! ஏனெனில், அது முக்கியமான
ஏதோவொன்றைச் சுட்டுகிறது! அதைக்கண்டுபிடிப்பது அதிமுக்கியமானது!
ஏனெனில்,      அதில்  தான்  மனிதனின்  அர்த்தமுள்ள   சாரமான வாழ்க்கை
அடங்கியுள்ளது!

நீங்கள்     உடல்  நலக்குறைவினால்,   மருத்துவமனையில்   பல   நாட்களாக
படுக்கையில்  இருக்கவேண்டிய  அசௌகரியமான  நிலையில்,   விரைவில்
வீடு  திரும்ப வேண்டும்   என்பதைத் தவிர,  உங்களது   எண்ணம்,  விருப்பம்
வேறு  என்னவாக  இருக்க முடியும்!   ஆனால்,   வீடு   திரும்பியவுடன் அப்படி
பெரிதாக எதைச் சாதிக்கப்போகிறீர்கள்? அதே அன்றாட உயிர்-பிழைத்தல்
எனும் சுற்றில் ஆழ்ந்து தனது ஆன்மாவைத் தொலைப்பதைத் தவிர! நீங்கள்
செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறையில் தள்ளப்பட்ட நிலையில்,விரைவில்
சிறையிலிருந்து  விடுதலையாவதைத் தவிர, உங்களது எண்ணம், விருப்பம்
வேறு என்னவாக இருக்கமுடியும்!ஆம்,மருத்துவமனையிலிருந்து  வீடு திரும்
புவதும்,  சிறையிலிருந்து  விடுதலையாவாதும்  அவசியமே. விடுதலையாகி
வெளியே  வந்து  நீலவானத்தைக் காண்பதும்,  சூரிய ஒளியில்   குளிப்பதும்
இனிமையான   விஷயங்களே!     இது   ஒரு  இயற்கையான சுதந்திர இருப்பு
நிலையாகும்.   இந்நிலையிலிருந்து  ஒருவன்  சுதந்திரமாக எதையும் செய்ய
இயலும் என்பதற்கான வாய்ப்பு ஆகும். ஒருவன் சிறைக் கைதி எனும் நிலை
யில் அவனால் எதையும் செய்யமுடியாமல் சிறைக்குள் முடக்கப்படுகிறான்.
இன்னொருவனால்  எதையும்  செய்யமுடியும் எனும் வாய்ப்பைப் பெற்றிருந்
தும்   அன்றாட  வாழ்க்கையின்   கைதியாகி  வெறுமனே  உயிர்-பிழைத்துச்
செல்கிறான்!  துரதிருஷ்டவசமாக,  உயிர்-வாழ்தலின் விதிகள் (தேவைகள்),
"உயர்"-வாழ்தலின்  விதிகளை  அறியவியலாதபடிக்குத் தம்மை முன்னிறுத்
திக்  கொண்டுவிடுகின்றன!  மனிதனும்   மனமுவந்து   அதற்குத்  தன்னைப்
பலியாகக் கொடுத்து விடுகிறான்!

ஆக, வாய்ப்பு  இருந்தாலும் மனிதன் சுதந்திரத்தைத் தேர்வுசெய்வதில்லை!
மாறாக, சோம்பியிருப்பதற்கான சுதந்திரம்,துய்ப்பதற்கான சுதந்திரம்,காம
வேட்கைக்கான சுதந்திரம், ஆழமாகச் சிந்திப்பதைத் தவிர்க்கும் சுதந்திரம், விரும்பியதைச்செய்யவும், அடையவுமான சுதந்திரம்,  உணர்வற்றிருப்பதற்
கான  சுதந்திரம் . . .   இவற்றைத்தான்  பொதுவாக  "சுதந்திரம்"  என நம்மில்
அநேகரும்  எண்ணிக் கொண்டிருக்கிறோம்!  ஆனால், இன்பம் தரும் இவை,
நமக்குத்  தெரியாமலேயே  நம்மை அடிமைத்தனத்தில் ஆழ்த்தி வைத்திருப்
பதை நாம் அறிவதில்லை!

உண்மையில்,     ஒருவன்   சிறைப்பட்ட   நிலையில்    இருந்தாலும்,    அல்லது,
சாதாரணமாயிருந்தாலும்,   வாழ்வின்  அர்த்தத்தைக் கண்டடைந்த,  விக்டர்
ஃப்ராங்க்ல்(Viktor E.Frankl)போன்ற ஒருவரை, அவ்வர்த்தம், அனைத்து
அசம்பாவிதங்கள்,இடர்கள்,இன்னல்கள் யாவற்றுனூடேயும் நிலைநிறுத்திக்
காத்திடும்!

"மனிதனின்   சுதந்திர சித்தம்  தான்,   விலங்கு ஜீவிகளிடமிருந்து  அவனை
வித்தியாசப்  படுத்திக்  காட்டுகிறது!"   என்று    சொல்லப்படுவது      மிகவும்
மேலோட்டமான   கூற்றாகும்!    ஏனெனில்,   சுதந்திர சித்தத்தைக்கொண்டு
மனிதன்  அப்படிப்  பெரிதாக  எதைச் செய்துவிட்டான்,  அல்லது  சாதித்துள்
ளான்? மனிதனுடைய  அனைத்து விஞ்ஞான அறிவு மற்றும் தொழில் நுட்பச்
சாதனைகள்  யாவும் சௌகரியமாக  உயிர்-பிழைத்தல்  எனும் ஒற்றை விஷ
யத்தில்   முடக்கப்பட்டதைத் தவிர  வேறேன்ன  சாதனை  படைத்துள்ளான்?
சற்று அதிகமான இ -டை-வெ-ளி கொண்டமைந்த அடைப்புக்குறிகளுக்குள்
மனிதன்   தாம்  விரும்பியதைச் செய்யமுடியும், செய்கிறான் என்பதில் பெரி
தாக  என்ன விசேடம்  இருக்க முடியும்? உண்மையில், விலங்குஜீவிகளைவிட
மனிதன்   அதிகச் சுதந்திரமானவன் அல்ல!     ஏனெனில்,    விலங்குகளுக்கு
தேவைகள்  என்பவை  மிகச்சிலவே யாகும்!   ஆனால்,  மனிதனுக்கு  அப்படி
யில்லை; ஒரு நாளின் 24-மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தேவை
யைப் படித்துக் கூறுகிறது!  உண்மையான அடிப்படையான, அத்தியாவசிய
மான தேவைகள்,அவற்றின் உப-தேவைகள்;அத்தியாவசியமற்ற ஆடம்பரத்
தேவைகள்;  சௌகரியத்தேவைகள்; செயற்கைத்தேவைகள்; படைப்புப்பூர்
வத் தேவைகள். . . . .   என எண்ணற்ற தேவைகள்!  ஆக,  மனிதஜீவிகளாகிய
நாம்  அளவு கடந்த தேவைகளின் அடிமைகளாக இருக்கிறோம்! தேவைகள்
எஜமானர்களாகவும்,   நாம்    அவற்றின்   அடிமைகளாகவும்   இருக்கிறோம்!
அதாவது, தேவைகள் நம்மை விரட்டிச் செலுத்துகையில்,   வெறுமனே தெரி
வுகளும் (Choices),சுதந்திர சித்தமும் இருந்தென்ன பயன்?

மனிதனுக்கு நிச்சயமாக சுதந்திர சித்தம் உள்ளது. ஏனெனில், அவன் உணர்
வுள்ளவன்!  உணர்வில்லாமல்,  சிந்திக்கும் மனமில்லாமல், அவனால் வாழ்க்
கையின்  அர்த்தத்தையும்,  உண்மையையும்,  அதன்  ஒப்பற்ற இலக்கையும்
புரிந்துகொள்ள இயலாது! வாழ்க்கையை என்னவென்று புரிந்து கொள்ளாது
வாழ்வதற்கு  அவன்  ஒன்றும்  எலியோ,  தவளையோ அல்ல!   மனிதனுக்குச்
சுதந்திர சித்தம் இருப்பது சரியாகவும், முறையாகவும் வாழ்வதற்குத்தானே
தவிர  தான்  விரும்பியவாறு  வாழ்வதற்காகவோ, அல்லது வழிதவறிச் செல்
வதற்காகவோ அல்ல!  நதிக்கு,  தான் செல்ல வேண்டிய  பாதையை அறிந்து
முறையான,  தனது  இலக்கான சமுத்திரத்தைச் சென்றடைவதற்கான சுதந்
திரம் உள்ளதே தவிர,  கன்னாபின்னாவென்று அலைவதற்கும், முறையான
தனது  பாதையைவிட்டு அகன்று செல்வதற்கும் அல்ல!  வாழ்வின் அர்த்தம்,
உண்மை இலக்கு குறித்த கேள்வியும்,ஆழமான விசாரமும்,புரிதலும் இன்றி,
மனிதன் சுதந்திரம் பற்றிப்பேசுவது என்பது அடிப்படையற்றதும், அபத்தமா
னதுமாகும்!

அதே போல்,  வாழ்வின் அசலான இலக்கை,  இறுதி உண்மையை  அடைவது
தான் உண்மையான இறுதியான முழுமையான சுதந்திரம் ஆகும்!வாழ்வின்
இலக்கிற்குப்  புறம்பாக மனிதன்ஆசைப்படும்,அனுபவிக்கும்,தேடிடும் சுதந்
திரம் அனைத்தும் கானல் நீர் போன்றே நிஜமற்றவையாகும்!

உண்மையில், 'சுதந்திரம்',  'சுதந்திர சித்தம்'  என்பவை எதைக்குறிக்கிறது?
சுதந்திரம்  என்பது   எதைக்குறித்தாலும்  அது  ஒரு  குறிப்பிட்ட   நிலையைக்
குறிக்கும் ஒன்றாகும். சுதந்திர சித்தம் என்பது நாம் ஒன்றை,  அல்லது விரும்
பியவற்றைத் தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தைக் குறிக்கிறது.  ஆனால்,
ஒன்றை,   அல்லது   நாம்  விரும்பியவற்றைத்  தெரிவு செய்கிறோம்  என்பது
நாம்    அவ்விஷயங்களைச்   சார்ந்திருக்கிறோம்  என்பதையே  குறிக்கிறது!
ஆக,  நாம்  எதையேனும்  சார்ந்திருக்கும் வரை  நாம் உண்மையில் சுதந்திர
மானவர்கள் இல்லை!

அதாவது,   'சுதந்திர சித்தம்'  என்பது அனைத்து விஷயங்களிலிருந்தும் விடு
பட்டு   நிற்பது  என்பதாகும்!   அவ்விஷயங்கள்  நமக்குப்  பிடித்தவைகளாக,
நாம்  மிகவும் விரும்பும் விஷயங்களாக இருந்தாலும்,  அல்லது  வேறு எவ்வா
றிருந்தாலும் சரி!  உண்மையான  சுதந்திர சித்தம்  என்பது  தன்னில் தானே
முடிவான (முழுமையான),  எதையுமே  சார்ந்திராத  ஒரு  மெய்ம்மையாகும்!
சுதந்திரனான ஒருவன்,   'கடவுள்',  அல்லது இறுதி உண்மை அல்லது மெய்ம்
மையின் மீதும் கூட சார்ந்திருக்கமுடியாது!ஆம்,சார்ந்திருப்பும் சுதந்திரமும்
சேர்ந்துசெல்லாது!ஆனால், 'கடவுள்' தான் இறுதியான மெய்ம்மை என்பதாக
இருந்தால்,இரண்டாவதாக, 'சுதந்திர சித்தன்' எனும் இன்னொரு இறுதியான
மெய்ம்மை  இருக்க முடியாது!  அதாவது,  மனிதன்  சுதந்திர சித்தனாக ஆக
வேண்டுமெனில்,அவன் வேறு வழியில்லாமல் கடவுளாக, இறுதி-மெய்ம்மை
யாக மாறிடத் தான் வேண்டும்!

'சுதந்திர சித்தம்'  என்பது ஒரு புதிராகும்! உண்மையில், சுதந்திர சித்தனாக
உள்ள ஒருவனால் எவ்வகைச் சூழலிலும், எந்நிலையிலும், சொர்க்கத்திலும்,
நரகத்திலும்  வாழ  முடியும்!   அவனுக்கு  வாழ்வும்,  மரணமும்  ஒன்று தான்!
சுதந்திரம்  என்பது வாழ்வு,  மரணம்  இரண்டையும்  கடந்ததாகும்!

உலகம் முழுவதிலும், மனிதர்கள் பலவகைப்பட்ட சுதந்திரம் குறித்தும் பேசி
யும் போராடியும் வருகிறார்கள்! ஏழ்மையிலிருந்து சுதந்திரம், அண்டை நாட்
டின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம், அடக்குவோரிடமிருந்து, ஒடுக்குவோரிட
மிருந்து  சுதந்திரம்,  ஆணிடமிருந்து  பெண்ணுக்குச் சுதந்திரம்,  பெண்ணிட
மிருந்து ஆணுக்குச் சுதந்திரம் . . .  இன்னபிற! தனி நபர்களுக்கிடையேயான
பிணக்குகள்,  பிரச்சினைகள்,  முரண்பாடுகள்,  சண்டை சச்சரவுகள்,  நாடுக
ளுக்கிடையேயான  தீராப்பிரச்சினைகள்,  போர்கள்,  இன அழிப்புகள்;   பிற
உயிரினங்களின் மீதான மனிதஇனத்தின் கொலைவெறி ஆதிக்கம்,மற்றும்,
இயற்கை  மீதான மனித இனத்தின்  தற்கொலைத்தனமான தாக்குதல்,  சுற்
றுச்சூழல் பாதிப்புகள்,    புவி வெப்பமயமாதல் ஆகிய இவை யாவற்றுக்கும்
காரணம் மனிதனே, ஒட்டு மொத்த மனித குலமே யாகும்!  மனிதர்கள் தமக்
கிடையேயும்  இணக்கமான உறவில் இல்லை;  பிற யாவற்றுடனும்  சரியான
இசைவான உறவில் இல்லை! இதற்கெல்லாம் காரணம் யாவற்றிடமிருந்தும்
தன்னைத்  தனியே பிரித்துக் காணும்  மனிதனின்  அரை  வேக்காட்டுத்தன
மான சுதந்திர சித்தமே யாகும்!  சுதந்திர சித்தம் கொண்ட இரண்டு மனிதர்
கள் ஒரு போதும் பொருந்திப்போவதில்லை, இருவருக்கும் சாதகமாக அமை
யும்  ஒரு சில விஷயங்களைத்தவிர!  தனது  சுதந்திரத்தை மட்டும் கருத்தில்
கொள்ளும்    ஒருவனின்   சித்தத்தை  ஆரோக்கியமானது  என்று  சொல்வது
உண்மைக்கு  மாறானதாகும்!   அத்தகையவனின் சுதந்திரமும் ஆரோக்கிய
மானதாக இருக்கமுடியாது!

மீண்டும்  மீண்டும்  நம்மை  நாமே  கேட்டுக்கொண்டு தெளிவு காண வேண்
டிய  ஒரு  முக்கிய கேள்வி  என்னவெனில்,  நம்முடைய  சுதந்திர சித்தத்தின்
வீச்சும்,  விளைவும்  எத்தகையது என்பதே!  முதலில், நாம் விரும்பியவற்றை
யெல்லாம்  செய்கிறோம்,  அல்லது  செய்ய முடிகிறது என்பது நமது சுதந்திர
சித்தத்தினால் அல்ல!  மாறாக,  ஒரு  குறிப்பிட்ட  வகையில்  கட்டுப்படுத்தப்
பட்ட  நமது  சித்தத்தினால்  (Conditioned -Will) தான்  அவை சாத்திய
மாகின்றன!  முடிந்தவரையில்,   நாம் அனைவருமே கிட்டத்தட்ட ( சில வரை
யறைகளுக்குள்தான் என்றாலும்), நாம்விரும்பியவாறு தான் நம் வாழ்க்கை
யை  அமைத்துக் கொள்கிறோம்,  வாழ்ந்து  செல்கிறோம்;  என்றாலும்,  நாம்
மகிழ்ச்சியாக இருப்பதில்லை, நிறைவாக உணர்வதில்லை, ஒட்டு மொத்தத்
தில், நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகத் தெரிவதில்லை! ஒருவனின் சித்தம்
தெளிவாகவும்,  கூர்மையாகவும் இருக்கும் பட்சத்தில்,  அவன் தனக்கு நல்ல
தையே,  சிறந்ததையே,  உண்மையானதையே,  இறுதியானதையே  தெரிவு
செய்வான்!  அவனது சரியான தேர்வு, தவறாமல் அவனை நிறைவு செய்யும்,
முழுமைப்படுத்தி  விடுதலைப்படுத்தும்!   ஆனால்,  தவறானதை,  மட்டுப்பா
டானதை, கேடானதை ஒருவனது சுதந்திர சித்தம் தெரிவு செய்திடுமானால்,
அது நிச்சயம் சுதந்திர சித்தமாக இருக்கமுடியாது. மாறாக, அது மிகவும் மட்
டுப்பாடான,  விழிப்படையாத  அவனது  சொந்த  விருப்பச் சித்தமாகத்தான்
இருக்கமுடியும்!  நம்மில்  பெரும்பாலானோர் தமது விருப்பச் சித்தத்தையே
சுதந்திர சித்தம்   என  தவறாக  அடையாளப்படுத்திக் கொண்டு   வாழ்வில்
தடுமாறிக் கொண்டிருக்கிறோம்!  இவ்வகையில் காணும்போது நம்மில் பல
ருக்குச்  சுதந்திர சித்தம்  என்பதே  இல்லை  என்பது தெளிவாகும்!  சுதந்திர
சித்தம் என்பது சுதந்திரம்,விடுதலை என்பதைத்தவிர தன்னை வேறு எதனு
டனும் பிணைத்துக்கொள்வதோ, அடையாளப்படுத்திக் கொள்வதோ கிடை
யாது! தெரிவுகளற்ற சித்தம் தான் சுதந்திர சித்தம் ஆகும்!

சுதந்திரம்  என்பது இறுதியாக  அடையப்படுகிற விஷயம் அல்ல! ஒருவனுள்
சுதந்திர தாகம் ஏற்படும் போதே ஒருவன் சுதந்திரனாக  மிளிரத்  தொடங்கி
விடுகிறான்! ஆனால்,  சுதந்திர தாகம் சாதாரணமாக எல்லோருள்ளும் ஏற்ப
டுவதில்லை!  சுதந்திர சித்தத்திற்கு  எதிராக  இருப்பது  ஒருவனது விருப்பச்
சித்தமே!ஏனெனில்,எல்லோரும் சுதந்திரத்தை விரும்புவதில்லை;அப்படியே
விரும்பினாலும்   அதற்குரிய   விலையைக்  கொடுக்க   முன் வருவதில்லை!
அதற்கான விலை என்பது அப்படி ஒன்றும் அதிகம் இல்லை!  ஒருவனது அறி
யாமையும்,  அவனது  மட்டுப்பாடான  சுயமும்,  அவனுடைய  கீழான இச்சை
களும்,துய்ப்புகளும்,விருப்பத்தெரிவுகளும் தான் அதற்கான  விலையாகும்!
மூடன் தனக்கேயுரிய வகையில்,சுதந்திரத்தையும்,உண்மையையும்,மெய்ம்
மையையும்,  வாழ்வின் அர்த்தத்தையும்  கொச்சையாக வரையறை செய்து
கொள்கிறான்! . . . . .

விழிப்படைந்த  சித்தம்  தான் சுதந்திர சித்தம் ஆகும்!   விழிப்பே அனைத்து மட்டுப்பாடுகளிலிருந்தும் மற்றும்  மாற்றத்தின் உலகிலிருந்தும்  ஓருவனை
வெளியே  எடுத்து  முழுமைப்படுத்தி விடுதலை செய்யக்கூடியதாகும்! ஆம்,
"விழிப்பு" தான் விடுதலை, சுதந்திரம் யாவும் ஆகும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 10.01.2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...