
•••
பரிணாம (மாற்ற)த்திற்கு உட்பட்டதொரு நிஜம்
தொடக்கத்திலிருந்தது போல
இடையிலும், இடையிலிருப்பதைப்போல
இறுதியிலும் இருப்பதில்லை!
•••
இயற்கையுலகிலிருந்து மனிதன் தனித்தவனா? அதாவது, இயற்கையுலக
மும் மனிதனும் வேறு வேறா? இக்கேள்வி சிந்தனை தொடங்கிய திலிருந்து
இன்றுவரை தொடர்ந்து நீடித்துவரும் பகுதியும் முழுமையும் பற்றிய பெரும்
(தத்துவப்) பிரச்சினையாகும்.
ஒருவகையில், மனிதன் இயற்கையுலகிலிருந்தும், இப்பிரபஞ்சத்திலிருந்தும்
தனித்தவனல்ல! அவனது பரிணாமத் தோற்றத்தினடிப்படையில் அவன்
பிரபஞ்ச இயற்கையின் ஒரு பகுதியே ஆவான்.
இன்னொரு வகையில், அவனது பரிணாம உட்பொதிவு, மற்றும் ஒட்டு
மொத்த பரிணாமத்திட்டத்தின் நோக்கிலிருந்து காணும் போது, மனிதன்
இயற்கையுலகின் முக்கியத்துவமற்ற ஏதோவொரு பகுதியோ அல்லது நிரந்
தரமானதொரு பகுதியோ அல்ல! இப்பார்வையின் கடை முனையிலிருந்து
காண்கையில், இயற்கையுலகம், பிரபஞ்சம் என்பது மனிதனின் பகுதியாக
மாறிவிடுவது அவசியமாகும்! எவ்வாறு கம்பளிப்புழுவானது வண்ணத்துப்
பூச்சியாக மாறிய பிறகு, அக்கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியின் பகுதி
யாக மாறிவிடுகிறதோ அவ்வாறு!
இவ்விடத்தில், இயற்கையும் மனிதனும் வேறு வேறு அல்ல என்று பழம்
தத்துவம் பேசுபவர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் என்னவென்
றால், இயற்கையும் மனிதனும் நிச்சயம் வேறு வேறு தான்! ஏனெனில்,
மனிதனே தற்போதைய "புதிய இயற்கை"யாவான்! மேலும், அவனே இயற்
கையின் உள்ளார்ந்த விழைவை உணர்ந்து பிரதி நிதித்துவம் செய்பவனும்,
அவ்விழைவு சுட்டும் இலக்கை நிறைவேற்றக் கூடியவனுமாக இருக்கிறான்!
மனிதனை "மூன்றாம் இயற்கை", அல்லது "மூன்றாம் பிரபஞ்சம்" என்று
அழைப்பதே மிக்கப் பொருத்தமானதாகும்! அதாவது பௌதீகச் சடப்பொரு
ளாலான தொடக்க நிலை பிரபஞ்சத்தை நாம் "முதலாம் இயற்கை", அல்லது
"முதலாம் பிரபஞ்சம்" என்று அழைப்பது தான் முறையாகும்! ஏனெனில்,
பௌதீகச் சடப்பொருளானது ஒரு கட்டத்தில் உயிர்-ஜீவியாக எழுந்து விட
வில்லையா? ஆம், உயிர்-ஜீவியின் (அல்லது உயிரியல்) கோளம் தான் அந்த
"இரண்டாம் இயற்கை", அல்லது "இரண்டாம் பிரபஞ்சம்" ஆகும்! உயிர்த்
தோற்றத்தை அடுத்து, மனிதஜீவியுடன் தொடங்கிய உணர்வியல் கோளம்
தான் நாம் குறிப்பிடும் அந்த "மூன்றாம் பிரபஞ்சம்" அல்லது "மூன்றாம்
இயற்கை"யாகும்! இயற்கையானது பண்பு ரீதியாக, சடமாகத்தோன்றி,
உயிராக எழுந்து, தற்போது மனிதனாக, மனிதனுள் உணர்வாகவும் உயர்ந்
துள்ள இந்நிலையில், எங்கிருக்கிறது இயற்கைவாதிகளும், பொருள்முதல்
வாதிகளும், இன்னும் விஞ்ஞானிகளும் சொல்லுகிற அந்த ஆதி இயற்கை!
தன் இறுதி இலக்கை அடையும் வரை தொடர்ந்து பண்பு ரீதியாக மாற்றம
டைந்து செல்வது தான் இயற்கையின் இயற்கை (இயல்பு) ஆகும்! தற்போது
இயற்கை எப்பண்பு நிலையை எட்டியுள்ளதோ அப்பண்பைக் கொண்டு
தான் இயற்கையானது சுட்டப்படவும், குறிக்கப்படவும் வேண்டும்!
'லிபரேஷன் அன்லீஷ்ட்' குழுவினர் போன்ற பலர், இந்த உலகத்தின் இயற்
கையிலிருந்து நாம் தனித்தவர்கள் என்ற மாயையிலிருந்து விடுபட
வேண்டும் . . . என்பதாக புதிதாக, 'தலை கீழ்' தத்துவம் பேசி வருகிறார்கள்!
ஆனால், உண்மையில், மனிதஜீவிகளாகிய நாம் இயற்கையிலிருந்தும்,
பிரபஞ்சம் என்பதிலிருந்தும், தனித்தவர்கள், வேறுபட்டவர்கள் மட்டுமல்ல;
இன்னும் நாம் அசலான மனிதன் என்பவனிலிருந்தும் வேறுபட்டவர்களே!
அதாவது நாம் இன்னும் அசலான மனிதனாக எழவில்லை என்பதுதான்
உண்மை நிலையாகும்! ஆகவே, நாம் விடுபடவேண்டுமெனில், அது,
'மனிதனும் இயற்கையும் வேறு வேறு அல்ல' எனும் சிறு பிள்ளைத்தனமான
பிணைப்பிலிருந்தும், அறியாமையிலிருந்தும்தான் அவசரமாக விடுபட்டாக
வேண்டும்!
ஏனெனில்,மனிதன் இயற்கையுலகிலிருந்து தனித்தவன் மட்டுமல்ல!அவன்
இன்னும் தனது மிகவும் மட்டுப்பாடான தற்போதைய நிலையிலிருந்தும்
வேறுபட்டவனாவான்! தற்போதைய மனிதன் உண்மையான மனிதனின்
நிழல் போன்றவனே!
மனிதன் இயற்கையுலகிலிருந்து தோன்றியவன் எனக்காண்பது அவனைப்
பற்றிய மேலெழுந்தவாரியான உண்மையே தவிர, அதுவே முடிவான இறுதி
உண்மையல்ல! ஏனெனில், இயற்கையுலகின் ஒரு விசேடமான "அவதாரம்"
தான் மனிதன்! இதன் அர்த்தம், பிரபஞ்சம் அல்லது இயற்கையுலகம் தான்
பரிணாமம் எனும் வழிமுறையின் மூலமாக மனிதனாக மாறியுள்ளது!
அதாவது, மனிதன் என்பவன் பிரபஞ்சத்தின் புதியதொரு வடிவமாவான்.
இவ்வகையில், மனிதன் வேறு பிரபஞ்சம் வேறு அல்ல! அதே வேளையில்,
பிரபஞ்சப் பரிணாமம் மனிதன் எனும் புதிய வடிவத்துடன் நிறைவடைந்து
விடுவதில்லை! மாறாக,மனிதனையடுத்த, அல்லது மனிதனைக்கடந்த ஒரு
இறுதி வடிவத்தை அடையவேண்டியுள்ளது! இந்த அரிய, இறுதி மாற்றத்தை,
உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும்தான் தன்னுள் கொணர்ந்திடவும்,
நிகழ்த்திடவும் வேண்டியுள்ளது! ஆம்,தொடர்ந்து தன்னை மறுகண்டுபிடிப்பு
செய்பவனே, தொடர்ந்து தன்னை மறு உருவாக்கம் செய்பவனே மனிதன்!
நதியானது தனது முழுமையை, இலக்கு நிலையை அடையும் போது அது ஒரு
நதியாக இருப்பதில்லை!அவ்வாறே, மனிதனும் தனது முழுமையை, இலக்கு
நிலையை அடையும் போது மனிதனாக இருக்கவியலாது!
இயற்கையிலிருந்து தோன்றியவனே மனிதன் என்றாலும், அவன் இயற்கை
யை மீறிச் செல்லும் இயற்கையை, பேரியற்கையைச் சேர்ந்தவனாவான்!
மேலும், இயற்கை சுய-உணர்வு பெற்றிடும் போது அது தொடர்ந்து பழைய
இயற்கையாக இருப்பதில்லை! அதாவது, இயற்கை மனிதனாகி, மனிதனுள்
உணர்வாகிடும் பட்சத்தில், மனிதன் என்பவன் சுய-உணர்வு பெற்ற புதிய
வகை இயற்கையாவான்! அதாவது, இயற்கையின் உள்ளார்ந்த இயற்கை
யின்படி (இயல்பின்படி), இயற்கையானது இயற்கையாகவே இறுதிவரை
தொடரவோ, நீடிக்கவோ இயலாது! ஏனெனில், இயற்கை என்பது மாறாத
இயற்கை அல்ல; மாறாக, அது தொடர்ந்து வளர்ந்து தம்மைத்தாமே கடந்து
செல்லக்கூடிய, பண்பு ரீதியான மாற்றத்திற்கு உட்பட்டதொரு பரிணாம
நிஜமாகும்!
இயற்கை, உலகம், பிரபஞ்சம் என அதை எவ்வாறு அழைத்தாலும், பிரதான
மாக அது ஒரு ஒப்பற்ற இலக்கைக் குறிவைத்து முன்னேறிச்செல்லும் ஒரு
பரிணாம இயக்கமாகும். அது தன் அர்த்தத்தை, தனது நீடித்த இருப்பிலிருந்
தல்லாமல் தனது அந்த ஒப்பற்ற இலக்கை அடைவதிலிருந்தே பெறுகிறது!
ஆக,மனிதன் உட்பட பிரபஞ்சத்தின் வெவ்வேறு பகுதிகளும் அந்த ஒப்பற்ற
இலக்கை அடைவதற்கான கருவிகளாக தத்தம் பங்கு பணியை ஆற்றுவதற்
கென உருவான பிரபஞ்சத்தின் நீட்சியும் வளர்ச்சி நிலைகளுமே யாகும்!
பகுதியும் முழுமையும் பற்றிய பிரச்சினையில், பலர் இயற்கையுலகை,
பிரபஞ்சத்தை ஒரு முழுமையெனக் கருதிக்கொண்டு தங்களது வாதங்களை
முன் வைக்கிறார்கள். ஆனால், அது ஒரு முழுமை அல்ல; அது பலவித பகுதி
களைத் தம்முள் கொண்டஒரு அமைப்பு மாத்திரமே! உண்மையில், உலகம்,
பிரபஞ்சம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு இயக்கமும் ஆகும்.
அந்த இயக்கத்தை நாம் பரிணாமம் என்கிறோம். அதாவது, பிரபஞ்சம்
என்பது நிலையானதும், முழுமையானதுமான ஒரு அமைப்பு அல்ல. மாறாக,
அது முழுமையை நோக்கிச் செல்லும் ஒரு இயக்கம் ஆகும்!
அடுத்து, உலகம் எனும் அமைப்பை ஒரு முழுமையெனக்கொண்டால், அதன்
பகுதிகள் யாவும் ஒரேமாதிரியாகவோ,ஒரே தரத்திலமைந்ததாகவோ, இருப்
பதில்லை. ஒரு கடிகாரத்தைப்பொறுத்தவரை, சந்தேகமின்றி அதை ஒரு
முழுமையான அமைப்பு என்று சொல்லலாம். ஆனால், அதே வேளையில்,
அக்கடிகாரத்தின் அனைத்துப்பகுதிகளும் ஒரே மாதிரியாக இருந்தால், அது
ஒரு கடிகாரமாக, நேரம் காட்டும் கருவியாக இயங்கவியலாது!
அடுத்து, எவ்வொரு அமைப்பைப் பொறுத்தவரையிலும், அதன் பகுதிகள்
அந்த அமைப்பை (முழுமை) யும், அம்முழு-அமைப்பு அதன் பகுதிகளையும்
சார்ந்திருப்பது என்பது தவிர்க்கவியலாததாகும். நாம் இடம்பெறும்(வாழும்)
இப் பிரபஞ்சம் எனும் அமைப்பைப் பொறுத்தவரை, நாம் அதன் பகுதிகளே
என்றாலும்,நாம் ஏதோ அதன் முக்கியத்துவமற்ற சாதாரணபகுதிகள் அல்ல!
மேலும், ஒரு மனித இனம் அல்லது மனித சமூகம் என்கிற வகையில், நாம்
அனைவரும் ஒரு உருப்படியோ, அல்லது ஒரு படித்தானவர்களோ அல்ல.
மாறாக, ஒவ்வொரு தனிமனிதனும் இப்பிரபஞ்சத்தின் முழுமையாக ஆகக்
கூடியவனும், இப்பிரபஞ்சத்தை முழுமைப்படுத்தக்கூடிய பிரதிநிதியும்
ஆவான்! எவ்வாறு ஒரு மரத்திற்கு, கிளைகள், சிம்புகள், இலைகள், பூக்கள்,
பிஞ்சுகள், காய்கள் என பல பகுதிகள் இருந்தாலும், அம்மரத்தின் முழுமை
யைப்பிரதி நிதித்துவம் செய்யக்கூடியதாக, அதாவது, கனியாகக்கூடியதாக
அதன் ஒவ்வொரு பிஞ்சும் காயும் பிரத்தியேகமான பகுதியாக விளங்கு
கிறதோ அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் பிரபஞ்ச விருட்சத்தின் முழுமை
யைக்குறிக்கும் கனியாக மாறக்கூடியவனாக விளங்குகிறான்!
இவ்விடத்தில் நாம் தெளிவாகப்புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்ன
வெனில், ஒரு கடிகார அமைப்பின் முழுமை என்பது வேறு; பிரபஞ்ச அமைப்
பின்முழுமை என்பது வேறு!சரியாக இயங்கக்கூடிய ஒரு கடிகாரஅமைப்பை
நாம் ஒரு முழுமை என்று கொள்ளலாம்; ஒரு கடிகாரத்தைப்பொறுத்தவரை
அதன் பகுதிகள் இல்லாமல் முழுமை இல்லை;மேலும்,பகுதியும் முழுமையும்
பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன எனலாம். இதையே பிரபஞ்ச
அமைப்புக்கும் நாம் பொருத்திக் கூறலாம். ஆனால், ஒரு கடிகாரத்தைப்
போலல்லாமல், பிரபஞ்சஅமைப்பு என்பது வளரக்கூடிய,பரிணமிக்கக்கூடிய
தொரு அமைப்பு ஆகும். பிரபஞ்சமானது மனிதனாகப்பரிணமித்து, மனித
னின் உள்ளேயும், ஊடாகவும் சென்று தன் இலக்கு நிலையான முழுமையை
அடையும் போது அந்நிலையில், பிரபஞ்சமும் இருப்பதில்லை, மனிதனும்
இருப்பதில்லை! மாறாக, பிரபஞ்சம், மனிதன் எனும் இரண்டு மெய்ம்மை
களும் முழுமை எனும் ஒருமையில் கரைந்து, இறுதியான அந்த மெய்ம்மை
யோடு மெய்ம்மையாகக் கலந்து விடுகின்றன!
ஆகவே, இனியும், மனிதனை, பிரபஞ்சத்தின் முக்கியத்துவமற்ற ஏதோ ஒரு
பகுதியாகக் குறைத்துக்கூறுவது என்பது பொருத்தமற்றதும்,அறியாமையின்
வெளிப்பாடுமே ஆகும்! இன்னும், மனிதன் என்பவன் பலவகை உயிரினங்
களில் அவனும் ஒரு உயிரினமோ, அல்லது ஒரு விலங்கு ஜீவியோ அல்ல!
மனிதன் அவனது சாரத்தில் ஒரு உணர்வேயாவான். இன்னும் சொல்லப்
போனால், மனிதன் என்பவன் உடல் எனும் விலங்குஜீவியினுள் தற்காலிக
மாகத்தங்கி வாழும் முற்றிலும் வித்தியாசமானதொரு மெய்ம்மை ஆவான்!
மேலும், பண்பு ரீதியாக, இயற்கை அல்லது பிரபஞ்சம் அடைய வேண்டிய
இலக்கு நிலையான இறுதி மாற்றத்தைப்பொறுத்தவரை அவை மனிதனை,
ஒவ்வொரு தனி மனிதனையுமே சார்ந்திருக்கிறது!
ஆகவே,பிரபஞ்ச இயற்கை,மனிதன், இவ்விரண்டுக்கும் பொதுவான இலக்கு,
என இம்மூன்றும் ஒரே பரிணாம நிகழ்வுமுறையின் வெவ்வேறு நிலைகளை,
கட்டங்களைக் குறிக்கும் மெய்ம்மைகளே! மேலும், பரிணாம நிகழ்வுமுறை
யானது இறுதிக்கட்டத்தை,நிலையை அடையும்போது அங்கே இயற்கையோ,
பிரபஞ்சமோ, இன்னும் மனிதனோ எதுவும் இருக்காது! இறுதி மெய்ம்மை
மட்டுமே இருக்கும்! அந்த இறுதி மெய்ம்மையை ஒவ்வொரு மனிதனும்
நேரடியாக உணர்ந்தடைய முடியும்! அவ்வாறு உணர்ந்தடையும் போது
நீங்கள் ஒவ்வொருவரும் அம்மெய்ம்மையை என்ன பெயர் வைத்து வேண்டு
மானாலும் அழைத்துக் கொள்ளலாம்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 15.02.2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment