Monday, 20 February 2017

சில விபத்துகள், சில சந்திப்புகள்!





சில விபத்துகள்  சந்திப்புகளில் முடிகின்றன!
சில சந்திப்புகள் விபத்துக்களாய் முடிகின்றன!



"இனிமேல் சிகரெட் புகைத்தால்
அது உன் உயிருக்கு ஆபத்து!"
என்று டாக்டர் சொன்னதும் அவன்
புகைப்பழக்கத்தை விட்டுவிட்டான்
உடனே!

"வழக்கமான உனது வழியில் வாழ்ந்தால்
அது உன் ஆன்மாவிற்கு ஆபத்து!"
என்று அவனது குரு சொன்னதும் அவன்
உடனே விட்டுவிட்டான் சத்-சங்கத்திற்குச்
செல்வதை!


அவர்கள் ஆன்மீகத்தைக்கற்றுக்
கொண்டார்களோ இல்லையோ
மிக விரைவாக ஒரு குருவைப்
போலப் பேசுவது எப்படி என்பதைக்
கற்றுக்கொண்டனர்!

நாளடைவில் ஒவ்வொரு சீடனும்
குருவுக்குப் பாடம் எடுக்கத் தொடங்கி
விட்டான்!

அவர்கள் தர்க்கத்தில் புலிகளாகி
விட்டனர்  - எப்படியென்றால் :
'குரு ஒரு மனிதர்.
அவர் ஞானமுள்ளவர்.
நாமும் மனிதர்கள், ஆகவே நாமும்
ஞானிகளே!'

விஷயம் விபரீதமாய்ப் போவதற்குள்
தப்பிக்கும் வழியைப் பற்றித் தற்போது
யோசித்துக்கொண்டிருக்கிறார் குரு!


சீடன் : உங்கள் உபதேசங்கள், போதனைகள்
              எதற்குப் பயன்படுகின்றன?

குரு   :  காற்றைத் தூய்மையாக்குவதற்கு!


ஆமையும் முயலும் சந்தித்துக்
கொள்ளலாம், உரையாடலாம்!
ஆனால் சேர்ந்து பயணிக்கலாகாது!
நாளடைவில் முயல் ஆமையின் வேகத்திற்கு
ஈடு கொடுத்துச் செல்ல வேண்டியதாகிவிடும்!


வண்ணத்துப்பூச்சி ஒரு காலத்தில்
கம்பளிப்புழுவாக இருந்தது தான்!
வண்ணத்துப்பூச்சியாக
மாறுவதற்காகவே கம்பளிப்புழு
இருக்கிறது!
இரண்டின் வாழ்க்கையும்
வேறுவேறாயினும்
கம்பளிப்புழுவும் வண்ணத்துப்பூச்சியும்
சந்தித்துக்கொள்ளவும், உரையாடவும்
செய்யலாம்!
அவற்றின் சந்திப்பும், உரையாடலும்
வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து
கொண்டிருக்கும் வாழ்க்கையைப்
பற்றியதாயும்;
கம்பளிப்புழு வாழவிருக்கும்
வாழ்க்கையைப்
பற்றியதாயும் இருக்கும் பட்சத்தில்
அர்த்தமுள்ளதாக அமையும்!
வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து முடித்த
வாழ்க்கையைப் பற்றியதாயும்
கம்பளிப்புழு வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையைப் பற்றியதாயும்
இருக்கும் பட்சத்தில் யாவும்
அனர்த்தமாகிவிடும்!


இனம் இனத்தோடு சேரும் என்றனர்!
ஆனால், ஒவ்வொரு அகந்தையும்
ஒரு தனி இனமே!
இனம் ஒன்றாயினும் மனம் வேறாயின்
இனம் இனத்தோடு எவ்வாறு சேரும்?
ஏனெனில் மனம் மனத்தோடு பொருந்தாது!


சுயமற்ற ஆதி மனிதர்களின்
சமூகத்தில்
சுயம் முளைத்த நவீன மனிதன்
அதிக காலம் தங்கி வாழ இயலாது!
அதே போல,
சுயம் கடந்த அதி நவீன மனிதன்
சுயம் முதிராத நவீன மனிதர்களின்
சமூகத்துடன்
அதிக நேரம் உறவாட இயலாது!


நாம் அருகருகே அமர்ந்து
மௌனமாக இருந்தாலும்
பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்!
நாம் ஒளியாண்டுகள் தொலைவில்
இருந்தாலும்
நம் எண்ணங்கள் உடனுக்குடன்
பரிமாற்றம் செய்யப்படுகின்றன!
ஆனால், அதனால் ஒரு பயனுமில்லை!
நீ உன்னிலும், நான் என்னிலும்
இறுகிக் கொண்டே போகிறோம்!
நீ உன் கருத்திலும், நான் என் கருத்திலும்
உறுதியாக நிற்கிறோம்!
நமது சந்திப்புகள் உன்னையும் சரி
என்னையும் சரி, சிறிதும்
மாற்றுவதில்லை!


ஆமையும் முயலும் சந்தித்துக்
கொள்ளலாம், உரையாடலாம்!
ஆனால் சேர்ந்து பயணிக்கலாகாது!
நாளடைவில் முயல் ஆமையின் வேகத்திற்கு
ஈடு கொடுத்துச் செல்ல வேண்டியதாகிவிடும்!
அதைவிட ஆபத்தானது, ஆமையின்
பாராட்டுகளும், விமர்சனங்களும்
முயலின் வேகத்தை மட்டுமல்லாமல்
அதன் விவேகத்தையும் மட்டுப்படுத்திடும்!
பிறகு முயலும் ஆமையைப்போல் ஆகிவிடும்!
ஆனால், பரிணாமத்தில் ஆமை ஆமையாகவே
இருப்பதில்லை; முயலும் முயலாகவே
இருக்க வேண்டியதில்லை!
இன்னும் மனிதனும் மனிதனாகவே
இருக்க வேண்டியதில்லை!
தொடர்ந்து தன்னைக் கடந்து செல்லும்
விதி அணுத்துகளுக்கும் பொதுவானது!
மரத்திற்கும் மண்ணிற்குமான உறவு
வேர்கள் மட்டத்திலேயே!
மரத்தின் அசலான விழைவு விண்ணைத்
தொடுவதே!
மனிதன் தன் சக-மனிதனோடு
பிணைக்கப் பட்டவனல்ல!
ஒருவன் இன்னொருவனைப்போல
இருக்க வேண்டியதுமில்லை!


மனிதர்களுக்கிடையே
ஒரு சில பரிவர்த்தனைகளைக் கடந்து
சந்திப்பு என்பது நிகழ்வதில்லை
என்பதல்ல பிரச்சினை; அது
தேவையேயில்லை என்பதுதான்
உண்மை!


சிலர் தொடர்பைத்
துண்டித்துக் கொண்டதால்
தப்பித்துவிட்டதாக
எண்ணி சுதந்திரமாக
இருப்பதாக மகிழலாம்!
பிரச்சினையே அவர்களது
விருப்பத்தின் வழி செல்லும்
சுதந்திரம் தான் என்பதை
அவர்கள் உணர்வதில்லை!
தன் விதியைத் தானே
தீர்மானித்துக்கொள்ளும்
வாய்ப்பு உள்ளதால் தான்
அவன் மனிதன்!
இல்லையென்றால் அவனும்
ஒரு விலங்கு தான்!
ஆனால், கிடைத்த வாய்ப்பை
எல்லோராலும் முறையாகப்
பயன் படுத்திக்கொள்ள
முடிவதில்லை!


முச்சந்திச் சந்திப்புகள்
தேநீர்க்கடை சந்திப்புகள்
திட்டமிடப்பட்ட சந்திப்புகள்
இலக்கியச் சந்திப்புகள்
தத்துவச் சந்திப்புகள்
ஆன்மீகச் சந்திப்புகள்
காதல் சந்திப்புகள்
எல்லாச் சந்திப்புகளும்
விபத்துகளே! விபத்துகளாகிப்
போன சந்திப்புகளே!


பிறர் கோபமாகப் பேசினாலும்
நடந்து கொண்டாலும்
ஞானி பொறுத்துக்கொள்ளவும்
சாந்தமாகவும் நடந்து கொள்ள
வேண்டும்!

பிறர் அகந்தை நிலையிலிருந்து
ஆணவமாய் நடந்து கொண்டாலும்
ஞானி பக்குவமாக நடந்து
கொள்ளவேண்டும்!

பிறர் எவ்வளவு தான்
முட்டாள் தனமாகப் பேசினாலும்
நடந்து கொண்டாலும்
ஞானி பக்குவமாக நடந்து
கொள்ளவேண்டும்!

ஞானி தன்னுள் அழித்த
கோபதாபத்தை, அகந்தையை
ஆணவத்தை, அறியாமையை
அஞ்ஞானி தன்னுள்
அழிக்கும் வழியைத் தானே
கண்டுபிடித்திடும் வரை
அஞ்ஞானியை ஞானி சந்திக்காமல்
இருப்பதுதான் ஞானிக்கு
நல்லது!

இல்லாவிட்டால் அஞ்ஞானியின்
அபஸ்வரத்துக்கு  ஞானி ஒழுங்காக
நடனம் ஆட வேண்டும் என்ற
முட்டாள் தனமான கோரிக்கையை
நிறைவேற்றியாக வேண்டும்!


ஒரு பிரதி என்பது
(எவ்வொரு பிரதியும்)
ஒரு பாதையைப் போன்றது தான்
இல்லையா?

ஒரு வரிக்கவிதை என்றாலும்
ஒரு பக்கக்கட்டுரை என்றாலும்
நூறு பக்க நாவல் என்றாலும்
முதல் வரியை வாசிக்கத்
தொடங்கியதும் நாம் அந்தப்
பாதையில் இறங்கி நடக்கத்
தொடங்கிவிடுகிறோம்!
நாம் அப்பிரதியின் கடைசி
வரியை வாசித்து முடிக்கும் போது
அப்பிரதி நம்மை எங்கு கொண்டு
சேர்த்துள்ளது; எத்தகைய உணர்வை
நம்மிடம் தொற்றவைத்தது;
எத்தகைய தாக்கத்தை நம் மீது
உண்டாக்கியது என்பது
முக்கியமில்லையா?

ஒரு கவிஞன், கட்டுரையாளன்
நாவலாசிரியன், எழுத்தாளன்
என்பவன் ஒரு வழிகாட்டி
போலத்தான் அல்லவா?

ஒரு பிரதி அல்லது
கவிதையின் முடிவு
நம்மை பாழும் கிணற்றுக்குக்
கொண்டு சேர்க்கிறதா அல்லது
பசும் சோலைக்குக் கொண்டு
சேர்க்கிறதா என்பதைக்
கண்டு கொள்ளாமல் இருக்க
முடியுமா?

ஒரு வழிகாட்டி அல்லது ஒரு பிரதி
நம்மை எங்குமே கொண்டு
செல்லவில்லை; எந்த செய்தியையும்
சொல்லவில்லை என்றால்
அவன் ஒரு வழிகாட்டியுமல்ல,
அது ஒரு பிரதியுமல்ல!
அப்படிப்பட்டவை தேவையேயில்லை!


எல்லாருடைய போதனைகளும்
காற்றில் கலந்து போனதைப்போல
என்னுடைய போதனைகளும் காற்றில்
கலந்து போவது குறித்து நான் மிக்க
மகிழ்ச்சியடைகிறேன்!
காற்றாவது தூய்மையடையட்டும்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 19.02.2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...