Thursday, 9 February 2017

தீர்வின் திறவுகோல் யாரிடமுள்ளது?





வாழ்க்கையில்,  எவ்வாறு  சௌகரியங்களைப்  பெருக்கிக்கொள்வது, அதற்
காக அதிகப் பணம் சம்பாதிப்பது எவ்வாறு, எவ்வாறு உறவுகளைச் சமாளிப்
பது, எவ்வாறு உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது,  நம்மைப்போலவே நமது
குழந்தைகளை    எவ்வாறு   முன்னேற்றுவது,   போன்ற  பல   விஷயங்களில்
ஆழ்ந்திருக்கும்  நாம்  வாழ்க்கை  பற்றிச்  சிந்திப்பதில்லை!  வாழ்க்கையின்
அசலான  குறிக்கோள்  பற்றியும்,  அர்த்தம்,  மற்றும்,  இலக்கு  பற்றியும் நாம்
அக்கறை கொள்வதில்லை! வாழ்க்கைபற்றி பிரத்யேகமாகச் சிந்திப்பதற்கு
நமக்கு நேரமும் இருப்பதில்லை, அதற்குரிய சக்தியும் இருப்பதில்லை!

நம்மில் பலருக்கு,   வாழ்க்கை பற்றி  பிரத்யேகமாகச்  சிந்திப்பதற்கு  என்ன
இருக்கிறது  என்பதாகத் தோன்றலாம்! நாம் நன்றாகவே வாழ்ந்து கொண்டு
இருப்பதாகவும் நாம் நம்புகிறோம்;  என்ன,  இன்னும் கொஞ்சம் அதிக வசதி
வாய்ப்புகளைப்   பெற்றால்,   இன்னும்  சிறப்பாக,   இன்னும்   மகிழ்ச்சியாக,
நிறைவாக,  வாழ இயலும்  எனவும் கருதுகிறோம்!  நாம் ஒரு நெடிய பயணத்
துக்கான  ஆயத்தங்களைச் செய்துகொண்டிருப்பதிலேயே  நம் வாழ்-காலத்
தைக்   கழித்துத்  தீர்க்கிறோமே தவிர,  பயணம்  புறப்படுவதேயில்லை  என்
பதுபோலவே, வாழ்க்கைக்கான முன்னேற்பாடுகளிலேயே நம் வாழ்-காலத்
தின்  பெரும் பகுதியைச்  செலவிட்டு  விடுகிறோம்! ஆனால்,  எப்போது நாம்
உண்மையில் வாழத் தொடங்குவது?

வினாடிகள்   நிமிடங்களாகி,  நிமிடங்கள்  ஒவ்வொரு  மணியாகி,  இருபத்தி
நான்கு மணி நேரம் ஒரு நாள் என்றாகி,  நாட்கள் வாரங்களாகி,    வாரங்கள்
மாதங்களாகி,  மாதங்கள் பன்னிரண்டு சேர்ந்து ஒரு வருடமாகி,  ஒவ்வொரு
வருடமும் ஒரு வயது எனக்குறிக்கப்பட்டு,  ஐம்பது  வயதிலோ,  அறுபது,  அல்
லது   எழுபது  வயதிலோ,  மரணம்  எனும்   மிகத் துல்லியமான  அந்த  முடிவு
உடலுக்கு நேர்வது தவிர்க்கவியலாமல் நிகழ்ந்துவிடுகிறது!அதாவது, "உயிர்
-இருப்பு"   எனும்   சுற்றுப் பாதையில்  தன்னை  நிலை நிறுத்திக் கொள்ளும்
"உடல் " எனும் விசேடப்பொறியமைப்பின் திறன் வயது ஆக ஆக படிப்படியா
கக்  குறைந்து  முடிவில் முற்றிலுமாக முடிந்து விடுகிறது!  "மரணம்"  என்பது
மிகத்துல்லியமாக  உடலின் இறப்பையே குறிக்கிறது!   உடல், அல்லது உடல்-
ஜீவியின்   "பிறப்பு"  என்பது  எவ்வளவு  தவிர்க்கவியலாததோ,  புதிரானதோ,
அவ்வாறே அதன் "இறப்பு" என்பதும் தவிர்க்கவியலாதது, புதிரானது!

ஆக, பிறப்பு குறித்து மகிழ்வதும், இறப்பு குறித்து துக்கப்படுவதும் பொருத்த
மற்றதாகும்! பிறப்பின் முக்கியத்துவத்தையும், நோக்கத்தையும் முறையாக
நாம் புரிந்துகொள்வோமெனில், இறப்பின் தவிர்க்கவியலா தன்மையையும்
நாம் புரிந்து கொள்ளாமல் போகமுடியாது! ஒருவரின் இறப்பு குறித்து துக்கப்
படுவதென்பது  வாழ்க்கையை  நாம் சிறிதும் புரிந்துகொள்ளவில்லை  என்ப
தின் வெளிப்பாடே தவிர வேறில்லை! உண்மையில் நாம் துக்கப்படவேண்டு
மானால்,  அது ஒருவரின் இறப்பு குறித்ததாக இருக்கலாகாது;  மாறாக, பிறப்
புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் சாதித்திருக்க  வேண்டிய
நிலையைச்  சாதிக்கவில்லையே  என்பதைப்  பற்றியதாக வேண்டுமானால்
இருக்கலாம்!   ஏனெனில்,  இது  மட்டுமே  ஓரளவிற்கேனும்   வாழ்க்கையைப்
புரிந்து கொண்டதற்கான ஒரு சிறு அடையாளமாக அமையும்!

ஒரு  உடல்-ஜீவியின்  "பிறப்பு"  என்பது முக்கியமான ஏதோவொன்றை எட்டு
வதற்கான  அடிப்படையே தவிர வேறல்ல!  மனிதன் முதலில் ஒரு உடல்-ஜீவி
யாகத்தான் பிறக்கிறான்;  அசலான மனிதன்,  அதாவது, உணர்வு-ஜீவியான
உண்மையான மனிதன், பிறகே பிறக்கிறான்!பெரும்பாலானோரது விஷயத்
தில்,  அசலான  மனிதன் கடைசிவரை பிறப்பதேயில்லை!  ஆனால்,  மனிதர்
கள் தமது ஒரு பகுதியான உடல்ஜீவியின் பிறப்பையே ஒவ்வொரு வருடமும்
கொண்டாடிச் செல்கிறார்கள்,முடிவில், உடல் மரணித்ததும், ஒவ்வொரு வரு
டமும் இறந்த நாளைக் கொண்டாடத் தொடங்கிவிடுகிறார்கள்!

மனிதனுக்கு தன்னில் எதைக்கொண்டாடுவது என்பது பற்றிய தெளிவு  இன்
னமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை! நிச்சயம் மனிதன் என்பவன் அவனது
உடலல்ல  என்பதை  அவன்  தன்னைக் கண்டடையும்  வரை அறிய வாய்ப்பு
இல்லை!   உடலுடன்  தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுதல்,  பிணைத்
துக்கொள்ளுதல்,    உடலின்    நச்சரிப்பான   தேவைகளை  நிறைவேற்றுதல்,
அதாவது,  உடல்  எனும்  ஊர்தியைப்  பராமரித்துப்  பேணிக்காத்தல்,  வேளா
வேளைக்கு  அதற்கு  எரிபொருள் (உணவு) இடுதல்;  மாறுகின்ற  தட்பவெப்ப
நிலைக்கேற்ப  அதைக் காத்தல் (உடை);  மற்றும்,  அதன்  அனைத்து இச்சை
களையும்,   துய்ப்புகளையும்,  ஒருங்கே  ஓரிடத்தில்  (உறைவிடம்)  வைத்துப்
பூர்த்திசெய்தல் யாவும் எவ்வளவு அத்தியாவசியமாயிருந்தாலும் அவை ஒரு
போதும் மனிதத்தரத்துக்குரிய வாழ்க்கையைச்சிறிதும் நெருங்குவதில்லை!

தன்னை யறிதல், தன்னைக் கண்டடைதல், உணர்வுக்கு வருதல், மெய்ம்மை
யுணர்தல்,  வாழ்வின் அர்த்தமறிதல், இலக்கையடைதல், முழுமையடைதல்,
முக்தி, அல்லது வீடுபேறு அடைதல் என அதை எப்படி அழைத்தாலும்,  அதற்
கென நல்ல நேரம், காலம்;  அதிர்ஷ்டம்,  நட்சத்திரங்கள் அல்லது  கிரகங்கள்
விசேடமாக ஒரு நேர்கோட்டில் அமைவது,ஆன்மீகப்பயிற்சிகள், முயற்சிகள்
போன்ற  எதையுமே  அது  சார்ந்திருப்பதில்லை!  நாளை  அதை நான் எட்டிப்
பிடிப்பேன்,சாதிப்பேன்,என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் தள்ளிப்
போடப்பட்டு கடந்துபோய்க் கொண்டிருப்பது தான் மிச்சம்!

வெறுமனே   காலத்தைக்  கழிப்பது,  வீணான  ஈடுபாடுகளில்   பங்கேற்பது,
ஆன்மீகம்  எனும் பெயரில் அடுத்தவருக்குப் போதிப்பது,  சத்-சங்கம்  எனும்
பெயரில்  தான் படித்தறிந்தவைகளை  வைத்து  வாதம்  புரிவது,  அன்றாடக்
கடமைகளின் மீது பழி கூறுவது,  குடும்பத்தை, உறவுகளைக் காரணம் காட்
டுவது . . . . . போன்ற  யாவும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் வழிகள்
ஆகும்! காரணம் காட்ட, பழி கூற எல்லாம் இருந்தாலும், அவற்றைச் சொல்வ
தன்  மூலம்  தனது ஈடுபாடுகள் வெளியே தெரிந்துவிடும் என்பதற்காக, பழி
கூறவும்,  காரணம்  காட்டவும் எதுவும்  இல்லாதது  போலவும், ஆனால், தனது
இயலாமைக்குப்பின்னே, ஏதோ பெரிய மர்மம் உள்ளதாக நடிப்பது; அல்லது,
தனது   இயலாமையை  வெளிப்படையாக,  "ஆம்,  அது தான்  எனக்குப்  புரிய
வில்லை,  என்னால் முடியவில்லை!" என்று சொல்வது தன் நோயின் தன்மை
புரியாமல் அதைக்கொண்டாடுவதற்கு ஒப்பான பெரும் புரட்டு ஆகும்!

சிலர், தமது பிரச்சினைக்கான தீர்வு ஆன்மீக குருவிடம் இருப்பது போலவும்,
அவர் அத்தீர்வுக்கான வழிமுறையைச் சொல்லாதிருப்பதாகவும், குருவைக்
குறை சொல்வதன் மூலம்  தங்களது நிலையை நியாயப்படுத்திக் கொண்டு
தங்களையே ஏமாற்றிக்கொள்கின்றனர்!

உண்மையில், ஒருவன் தான் எதை 'வாழ்க்கை' யென வாழ்ந்து கொண்டிருக்
கிறோம் என்பதே தெரியாமல் வாழும் வாழ்க்கைதான் அவனது நோயாகும்!
அதற்கு  அவனே  மருந்தும் ஆவான்!  அவனது  நோய் தீர,  அவன்   தன்னைத்
தான்  எதிர் கொண்டாக வேண்டும்! அவனுக்கு அவனேதான் பதில் சொல்லி
யாகவேண்டும்!

வெறும்  'உயிர்'- வாழ்தல்  என்பதிலிருந்து 'உயர்'-வாழ்தலுக்குச் செல்வதெப்
படி,   அதற்கான  வழிமுறை  என்ன  என்று  கேட்பவன்  தன்  வாழ்க்கையின்
நோக்கத்தைத் தொலைத்து விட்டவனாகிறான்!  தான்  தொலைத்தது என்ன
வென்று தானேயறியாத நிலையில், " தொலைத்தது வாழ்க்கையைத்தான்!"
என்று எவர் எடுத்துச்சொன்னாலும் அது எவ்வகையிலும் அவனுக்குப்புரியப்
போவதில்லை, உதவப்போவதுமில்லை!

ஒருவன்  தீர்வின் திறவுகோலைத்  தன்னிடமே  வைத்துக்கொண்டு,  தனக்கு
வெளியே எவ்வளவு காலம் தேடிக்கொண்டிருப்பான் என்பதற்கு காலக்கெடு
என்பதே இல்லை,  சொல்லவும் முடியாது!

ஆனால்,  கடந்து  போகும்  ஒவ்வொரு  கணமும்  வாழ்வதற்கான  கணமே!
தவற விடப்படும் ஒவ்வொரு கணமும், விழிப்பதற்கான கணமே என்பது
மட்டும்  நிச்சயம்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 07.02.2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...