
உண்மையின் சுவை என்ன?
உண்மையின் நிறம், வடிவம், மணம், குணம் ஆகியவற்றை உண்மையை
அறிந்தோர் என்பவர்களிடமிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்! ஆனால்,
அவ்வறிவால் உங்களுக்கு ஒரு பயனும் விளையப் போவதில்லை! ஏனெனில்,
உண்மையின் நிறம் வெண்மை என்று புத்தர் சொல்லியுள்ளார் என்று வைத்
துக்கொள்வோம்; உடனே நீங்கள் வெண்மையான பொருட்களையெல்லாம்
உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்! ஆனால், வெண்மை நிறத்தி
லுள்ள பொருட்கள்எதுவும் உண்மையல்ல என்றால் நீங்கள் ஏமாற்றமடைவீர்!
"உண்மை நிறமற்றது" என புத்தர் சொல்லியிருந்தால் உடனே நீங்கள் குழப்ப
மடைந்து போவீர்!
ஆம், உண்மைக்கு உண்மையில் நிறம் உள்ளது; ஆனால், அந்த அற்புத நிறத்
தையொத்த எந்த நிறமும் இப்பிரபஞ்சத்தில் எங்குமேயில்லை! உண்மை
யின் நிறத்தை உண்மையின் கண்களைக்கொண்டு மட்டுமே காண முடியும்!
உண்மை எனும் மலருக்கு மணமும் உள்ளது! ஆனால், அதை நீங்கள் ஒவ்
வொருவரும் மலரும் போது மட்டுமே முகர முடியும்!
உண்மைக்கு வடிவம் ஏதும் உண்டா? உண்மையால் எந்த வடிவத்தையும்
எடுத்துக் கொள்ளமுடியும் என்பதால் உண்மையில் உண்மை வடிவமற்றது!
உதாரணத்திற்கு, ஒட்டு மொத்தப் பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்தும்
உண்மையின் வர்ணமிகு வடிவ-ஜாலங்களே!
உண்மையின் குணம் எத்தகையது? ஓ! உண்மையின் குணம் உண்மை தான்,
அதாவது, உண்மைத்தன்மை தான்! மேலும், உண்மை மட்டுமே உண்மை
யானது! பிற யாவும், இப்பிரபஞ்சம் மொத்தமும் உண்மையின் நிழலேயாகும்!
அதை 'மாயை' என்றும் சொல்வர்! அதாவது, இப்பிரபஞ்சம் நிரந்தரமற்றது!
உண்மை மட்டுமே நிஜத்திலும் நிஜமானது, நிரந்தரமானது, நித்தியமானது!
உண்மையின் நிறம், மணம், குணம், வடிவம் இவற்றைப் பற்றிய விவரிப்பு
களையெல்லாம் நீங்கள் ஞானிகளிடமிருந்து அறிந்து கொள்ளலாம்; அவை
உங்களது மேலோட்டமான ஆர்வக்கோளாறைத் திருப்தி செய்திடக்கூடும்!
அதற்கு மேல் அவற்றினால் ஒரு பயனும் இல்லை! ஆனால், உண்மையின்
சுவையை நீங்கள் நேரடியாகச் சுவைக்காமல் ஒரு போதும் உணரமுடியாது!
உண்மையின் சுவை பற்றி இன்னொருவரிடம் கேட்டறிவது என்பது எச்சில்
பண்டத்தைக் கேட்பது போன்றதாகும்!
ஆனால், உண்மையைப் பற்றி நீங்கள் ஏன் இன்னொருவரிடத்தில் போய்க்
கேட்கவேண்டும்? அல்லது மறைந்து போன புத்தர்கள், மகரிஷிகள், ஞானி
கள் ஆகியோரது செல்லரித்துப்போன ஒலைச்சுவடிகளைத் தேடிப்பிடித்து
ஆராய்ந்து குழம்பவேண்டும்?
உண்மை என்ன உங்களுக்கு அந்நியமானதா? அது உங்களுடைய சாரமான
உண்மையிலிருந்து வேறானதா, என்ன? உண்மை, அது உங்கள் உயிரின்
உயிர்; உங்கள் ஆன்மாவின் ஆன்மா என்பதை எவ்வாறு நீங்கள் உணரத்
தவறினீர்? எவ்வாறு நீங்கள் உங்களை முழுமையாகக் காணும் விழைவி
லிருந்து விலகி அந்நியமாகிப்போனீர்?எவ்வாறு உங்களால் உங்களது இருப்
பின் மேற்புறத்திலேயே தங்கி வாழவும், திருப்திடையவும் முடிகிறது?
இது எவ்வாறு உள்ளதென்றால், ஒருவனுக்கு அழகிய பெரிய மாளிகை இருந்
தும் அதனுள்ளே சென்று எத்தனை அறைகள் உள்ளன, எவ்வளவு வசதிகள்
உள்ளன என்பவற்றையெல்லாம் கண்டு மகிழ்ந்து, மிகச் சௌகரியமாக
வசிக்காமல், அம்மாளிகையின் முன்புறத் தாழ்வாரப்பகுதியிலேயே தங்கி
வசிப்பதைப் போலுள்ளது! இது தான் பொதுவாக மானுடர்கள் தங்களுக்குத்
தாங்களே உருவாக்கிக்கொண்ட சிறுமையும், துன்ப நிலையும் ஆகும்!
"உண்மை" என்பது எட்டாக்கனியல்ல! என்றாலும், அது அறிவுஜீவிகளுக்கும்,
தத்துவ வாதிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இன்னும் எட்டாத கனியாகவே
உள்ளது! இதற்குக் காரணம், அவர்கள் உண்மையை புறத்தேயும், தவறான
இடங்களிலும், தவறான அணுகுமுறைகளைக் கொண்டும் தேடுவது தான்!
தாமே கனிகளாக மாறவேண்டியவர்கள் தங்களுக்கு வெளியே தேடினால்
எவ்வாறு அந்த "உண்மை" எனும் கனி எட்டும்?
பெரும்பாலான மனிதர்கள் தம்மைப் பற்றி யாதொரு கருத்தாக்கமு மின்றி
எலிகளையும், தவளைகளையும் போல ஜீவித்துச் செல்கிறார்கள்! கணிச
மான எண்ணிக்கையிலானவர்கள் தம்மைப்பற்றி பலவகைப்பட்ட பிம்பங்
களைக் கற்பித்துக்கொண்டு தங்களுக்கே புறம்பாகவும், எதிராகவும் போலி
யானதொரு நபராக, பொய்யான தொரு வாழ்க்கையை வாழ்ந்துசெல்கின்
றனர்!
உங்களை நீங்கள் என்னவாக, எத்தகைய மெய்ம்மையாக அறிகிறீர்களோ,
உணர்கிறீர்களோ, அதற்குரிய வாழ்க்கையைத்தான் உங்களால் வாழ முடி
யும்!உங்களை எதுவாகவும் அறியாதபோது நீங்கள் சுய-உணர்வற்ற விலங்கு
ஜீவிகளைப் போலவே வாழ்வீர்கள்! உங்களை நீங்கள் விரும்பியவாறு ஏதோ
வொன்றாக, யாரோ ஒருவராக எண்ணிக் கொள்ளும், கற்பனை செய்து
கொள்ளும் பட்சத்தில், நீங்கள் உங்கள் உண்மையான சுயத்தைக் கண்டு
கொள்ளாமலும், வெளிக் கொணராமலும் அதைக் கொன்று விடுகிறீர்கள்!
ஆக, உண்மைக்கான அடிப்படையை அழித்துவிட்டு உண்மையை வெளியே
எங்கெங்கோ தேடிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்!
ஆனால், உண்மை என்பது உங்கள் உண்மையான சுயத்திலிருந்து வேறா
னதல்ல! இதன் அர்த்தம் உண்மை உங்களுக்குள், உங்களுடைய பகுதியாக
உள்ளது என்பதல்ல! மாறாக, உங்களது சுயத்தின் மலர்ச்சியே உண்மை என்
பதாகும்! அவ்வாறு நீங்கள் மலரும் போது உங்களுடைய பழைய சுயத்தின்
சுவடுகள் ஏதுமிராது!
உண்மை, அது நிறைவின் நிறைவு!
உண்மை, அது முழுமையின் பூரணம்!
உண்மை, அது சிருஷ்டியின் சாரம்!
உண்மை, அது உயிரின் உயிர்!
உண்மை, அது ஆன்மாவின் ஆன்மா!
உண்மை, அது மும்மையின் ஐக்கியம்!
(உம்மை, இம்மை, மறுமை)
உண்மை, அது மும்மெய்ம்மையின் ஒருமை!
(இருப்பு, உணர்வு, ஆனந்தம்)
உண்மை, அது காலாதீதம்!
உண்மை, அது இருப்பின் மலர்ச்சி!
உண்மை, அது மாற்றங்களனைத்தின் முடிவு!
மா.கணேசன்/ நெய்வேலி/ 23.02.2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment