
"இப்போது நேரம் என்ன?"
என்று தான் கேட்டேன்!
உங்களது கருத்தைக் கேட்கவில்லை!
<>
'மெட்டாலிக்கா' ராக் குழுவின் ஒரு பாடல்:
"சுதந்திரப் பேச்சு, சுதந்திரப்பேச்சு, ஊமைகளுக்கு!
"சுதந்திரப் பேச்சு, சுதந்திரப்பேச்சு, ஊமைகளுக்கு!
"சுதந்திரப் பேச்சு, சுதந்திரப்பேச்சு, ஊமைகளுக்கு!
"சுதந்திர 'Fucking' பேச்சு!
<>
செவிடர்களின் ராஜ்ஜியத்தில்
ஊமைகளுக்கு முழுப் பேச்சு சுதந்திரமாம்!
உண்மையை ஊமையாக்கி,
உரக்கப் பேசும் பொய்மைகளின் சமூகம்
இப்படியில்லாமல் வேறெப்படியிருக்கும்?
பிணியாளனுக்கு வைத்தியன் வேண்டிய
காலம் மாறி வைத்தியனுக்கு பிணியாளிகள்
மருத்துவம் பார்க்கும் காலமாச்சுடா!
இதயத்தின் நிறைவினால் வாய் பேசினால்
அது அர்த்தம்!
தலை கனத்துப்போனதால் வாய் பேசுவது
விபரீதம்!
<>
உமது கருத்து என்பது என்ன?
அதன் நீள அகல உயரம் என்ன?
அதன் தோற்றுவாய் எது?
உம்மிடம் எண்ணம் இருந்தாலும்,
இல்லையென்றாலும் சூரியன் உதிக்கும்!
கோள்கள் தத்தம் பாதையில் வலம் வரும்!
உமது கருத்தை உமது இயல்பூக்கிக்களும்
மதிப்பதில்லை!
உமது கருத்துகளை உருவாக்குவதும்
உண்மையில் அவையே!
உமது விருப்பம் என்பது உன்னுள்
உயிர்த்திருக்கும் விலங்கின் கட்டளைகள் தானே!
உமது கருத்தால் ஒரு சிறு அணுவையாவது
உன்னால் மாற்றியமைக்க முடியுமா?
உமது எண்ணங்கள் உலகப் பொருட்களின்
பிரதிபலிப்புகள் தானே!
தன் நிஜத்தைத் தேடிச்செல்லும் பிரபஞ்சம்
ஒரு தற்காலிக நிஜம் எனில்
அதன் பிரதிபலிப்பான உம் எண்ணங்களால்
என்ன பயன்?
உமது அபிப்பிராயம் என்பதென்ன?
சமூகத்தை பிளவுபடுத்தும் கூருளியல்லவா!
உமது அபிப்பிராயமும், உமது சக மனிதர்களின்
அபிப்பிராயங்களும் முரண்படுகையில்
ஒட்டு மொத்தமாக நீங்கள் எங்கே போய்ச்சேர்வீர்?
உமக்கென்று நோக்கம் ஏதும் உள்ளதா?
உம்மைச் செலுத்தும் இச்சைகளுடையதைத் தவிர!
உமது கருத்துகளால் புனையப்பட்ட சிலந்தி வலை
போன்றதே உமது சுயமும், உமது சுருங்கிய உலகமும்!
அதன் மையத்தில் ஒரு சிலந்தி போலச் சிறைப்பட்ட நீர்
'கருத்து சுதந்திரம்', 'பேச்சு சுதந்திரம்' பற்றி
முழங்குவதென்ன?
அனைத்துக்கருத்துக்களிடமிருந்து விடுபவது தானே
உண்மையான சுதந்திரம்!
அர்த்தமில்லாமல் சுதந்திரமாகப் பிதற்றுவதனால்
என்ன பிரயோசனம்?
<>
• "நான் என்ன நினைக்கிறேன் என்றால்..."
* அட, நீர் நினைத்து என்ன ஆகப்போகிறது?
• அப்படியானால், என் கருத்தைச் சொல்லவேண்டாமா?
* உம்முடைய கருத்து வேண்டாம், உண்மையைச்
சொல்லுங்கள், போதும்!
• அப்படியானால், என் கருத்தில் உண்மை இல்லை
என்கிறீர்களா?
* உண்மையை நீர் அறிந்திருந்தால் உம்மிடம் கருத்து ஏதும்
இருக்காது! உண்மை கருத்துக்களால் ஆனதல்ல!
• அப்படியானால், நீங்கள் சொல்வது உங்களுடைய கருத்து
இல்லையா?
* நான் சொன்னதின் உண்மையைப் பார்த்தீரெனில் அது
கருத்து இல்லை! நான் சொன்னதை என் கருத்தாகப் பார்த்தால்
அது உண்மையாகத் தெரியாது!
• அப்படியானால், நான் உண்மையை அறிந்திருக்கவில்லை
என்கிறீர்களா?
* உமது சந்தேகமே அதன் நிரூபணம் !
• அப்படியானால், நான் எதுவும் பேசக்கூடாதா? கேட்கக்கூடாதா?
* பேசலாமே, ஆனால், அறிந்தவற்றை மட்டும்! கேட்கலாம்,
முன்-முடிவுகள் இல்லாத, சார்பு நிலை தழுவாத, உண்மையான
உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்கலாம்!
அறியாதவற்றை உங்களது கருத்துக்களைக்கொண்டு எட்ட
முடியாது! சிந்திப்பது என்பது நேரடியாக உண்மையைக்
காண்பதற்காக வழியில் உள்ள தடைகளை நீக்குவதே!
ஆகவே, அறியாதவற்றைப்பற்றி நீங்கள் கருத்து எதுவும்
சொல்ல முடியாது!
• நீங்கள் சொல்வது புரியவில்லை!
* புரியவில்லை என்று சொல்வது உண்மையின் தோல்வியல்ல!
உம்முடைய தோல்வியும், உம் அறியாமையின் வெற்றியுமாகும்!
• அப்படியானால், நாங்கள் என்ன செய்வது?
* நீங்கள் செய்வதற்கு எதுவுமில்லை! உண்மையை ஏற்றுக்
கொள்ளுங்கள்! ஆம், உங்களைப் பற்றிய உண்மையும்
சேர்த்துத்தான்!
• !??
<>
"இப்போது நேரம் என்ன?"
என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
உங்களிடம் கடிகாரம் இல்லையெனில்,
"தெரியவில்லை, என்னிடம் கடிகாரம் இல்லை"!
என்றுதானே கூறுவீர்கள்!
ஆக, உண்மையை நீங்கள் அறியாத பட்சத்தில்
அது பற்றி கருத்து சொல்ல என்ன இருக்கிறது?
<>
மா.கணேசன்/ நெய்வேலி/ 18.02.2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment