Sunday, 12 February 2017

ஒவ்வொரு கணமும். . . . .





கடந்து  போகும்  ஒவ்வொரு  கணமும்  வாழ்வதற்கான  கணமே!
தவற விடப்படும் ஒவ்வொரு கணமும், விழிப்பதற்கான கணமே!
புரிந்து கொள்வதற்கு  பிரபஞ்சம் நிறைய விஷயங்கள் உள்ளன!
ஆனால், அனைத்தையும் புரிந்து கொள்ளும் அம்சம் ஒன்று தான்!
ஆகவே நீ உடனே உன்னை ஒன்றுதிரட்டி உன் ஒருமையை எட்டிடு!
ஆரம்பமாய், பிரபஞ்ச-விபத்தின் தொடர்ச்சியாய், நீளும்பயணமாய்,
கல்லாய், புல்லாய், புழுவாய், மனிதப் பிராணியாய் இருப்பதைவிட
முதலும் முடிவுமான நிகழ்வாய் முழு-விழிப்பாய் மலர்வது மேன்மை!

விழிப்பைத் தவிர பிறவனைத்தும் விபத்து போன்றவையே!
தூண்டுதலுக்குப் பதிலளிக்கும் உணர்வற்ற பிராணியா, மனிதா நீ?
தேவைகளைக் கடந்து பார், வாழ்வின் முழுமை தெரியும்!
எந்தத் தேவை வாழ்வின் அர்த்தத்தை வெளிப்படுத்தும்?
வாழ்வின் அர்த்தத்தை வெளிப்படுத்தும் தேவை எதுவுமில்லை!
ருசிமிகு உணவு  பசியைப் போக்கி உயிர்-பிழைத்திட உதவும்!
உடை உன் அம்மணத்தையும் அறியாமையையும் மட்டுமே மறைக்கும்!
வசதியாக நீ வசித்த வீடு நீ செத்ததும் உனை வாசலில் கிடத்திடும்!

மனிதா! உயிர்-பிழைத்தல் என்பது உண்மையான வாழ்தலாகுமா?
உயிர்-பிழைக்கக் காரணமோ, நோக்கமோ தேவையா, என்ன?
ஆனால், உண்மையில் வாழ காரணம், குறிக்கோள், இலக்கு அவசியம்!
வாழ்க்கை என்ன,  நீ நினைப்பதுபோல் உன் சொந்த விவகாரமா?
அது ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியதோர் முழுமை!
நீ அதன் ஒரு பகுதியாக தோன்றியிருக்கிறாய் என்பது ஒரு ஆரம்பமே!
ஒரு பகுதியாகவே இருந்து உதிர்வதும், கனிந்து முழுமையாவதும்
வாழ்க்கை பற்றிய உனது புரிதலின் முழுமையைப் பொறுத்ததாகும்!

உனது ஆர்வம் சிறிதாயிருந்தால் சிறிதளவே நீ புரிந்து கொள்வாய்!
உனது ஆர்வம் பெரிதாயிருந்தால் முழுவதுமாகப் புரிந்து கொள்வாய்!
ஆர்வத்திற்கேற்ப உணர்வும், உணர்வுக்கேற்ப புரிதலும், புரிதலுக்கேற்ப
வாழ்க்கையின் தன்மையும், உயர்வும், முழுமையும், உய்வும் வாய்க்கும்!
வாழ்க்கை ஒரு பயணமெனில், பயணத்தின் அர்த்தமும், முழுமையும்
அடையப்படும் உரிய இலக்கு நிலையில் மட்டுமே அடங்கியுள்ளது!
இலக்கறியாத பயணமும், இயக்கமும், வாழ்க்கையும் அர்த்தமற்றவையே!
ஆகவே, மனிதா! உன் பயணத்தைத் தொடரும் முன் இலக்கறிந்திடு!

மனிதா, இடைவழிப்பயன்கள் கருதி  இறுதிப்பயனைத்  தவறவிடாதே!
பிழைப்புக்கான பயன்களைத்தேடி பிறவிப்பயனை இழந்திடாதே!
மனிதா, முதல் காரணமல்ல, முடிவான விளைவாக மலர்வதே முக்கியம்!
இறுதியானது கடைசியில் வருவதல்ல, இக்கணமே அது சாத்தியம்!
மனிதா, மெய்ம்மை இல்லாமல் உலகமும் இல்லை, நீயுமில்லை!
நீயில்லாமல், உன் வழியாகவல்லாமல், உண்மை உய்வதெங்ஙனம்!
மனிதா, செருக்கு கொள்ளாதே! சிறிது, பெரிது, அற்பம், அற்புதம்
புழு, பூச்சி, நீ, நான் என யாவும், யாவற்றையும் கடந்ததும் அப் பிரம்மமே!

மனிதா, இடையிலுள்ள  எதையும், உன்னையும், நீ கொண்டாடாதே!
உனதுண்மை யாதென அறியாமல் உன்னில் எதை நீ கொண்டாடுவாய்?
உன்னைக்கொண்டாடு! அதற்குமுன் இறுதியானதைக் கண்டுபிடித்திடு!
கணந்தோறும் உன்னை மறு-கண்டுபிடிப்பு செய்வதே கொண்டாட்டம்!
இரு! இருப்பதைவிட இருப்பை உணர்வது மேல்! அதைவிட உணர்வாயிரு!
இரு! அதில் தற்பெருமை எதற்கு? உனது இருப்பிற்கு நீ என்ன செய்தாய்?
சுயத்தின் புதிரை விடுவித்தாயா, சுய-முக்கியத்துவம் பாராட்டுகிறாய்?
உன் சிறு சுயம் கடந்து உயர்-சுயம் அடைவதே உண்மை முக்கியத்துவம்!

உன் தற்பெருமை, சுய-முக்கியத்துவம், செருக்கு யாவும் தவறானவையா?
ஆம்! அவை முதிராத மலராத ஒரு நபர் மீது  முதலீடு செய்யப்படுவதால்!
உண்மையைக் கண்டுபிடிக்கும்வரை உன்னை மையமாகக்கொள்ளாதே!
உன் மையம் உன்னிடமில்லை; உண்மை தான் அனைத்தின் மையம்!
நீ மெய்ம்மையின் சாயலில் இருக்கிறாய்! மெய்ம்மையில் உன் சாயல் ஏது!
நீ இருக்கும்வரை முழுமை தோன்றாது; உன் பங்களிப்பின்றி முழுமை ஏது?
முழுவதுமாக மெய்ம்மைக்கு உன்னைத் தருவதே உண்மைப் பங்களிப்பு!
உன்னைக்கொடுத்து உண்மையைப் பெறும் இறுதிப் பண்டமாற்று!

தள்ளிப்போடப்படும் ஒவ்வொரு  கணமும்  வாழ்வதற்கான  கணமே!
தவற விடப்படும் ஒவ்வொரு கணமும், விழிப்பதற்கான கணமே!
தள்ளிப்போடப்படும் ஒவ்வொரு கணமும் தற்கொலைக்கான ஆயத்தமே!
தவற விடப்படும் ஒவ்வொரு கணமும், மரணத்தை நோக்கிய ஓரடியே!
கடந்து போகும் ஒவ்வொரு கணமும் பொன்னான வாய்ப்பின் கணமே!
மனிதா, இன்னும் எதை, யாரை, எதிர்பார்த்து வாளாவிருக்கிறாய்?
உன்னை எதிர்பார்த்து  இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் காத்திருக்கிறது!
உனது முழுமையடைதலில் தனது முழுமையை மீட்சியை எதிர்பார்த்து!


மா.கணேசன்/ நெய்வேலி/ 07.02.2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...