(விசார மார்க்கப் பங்கேற்பாளர்களுக்காக
விசேடமாகச்சொல்லப்பட்டது.)
•••
தங்கத்தின் தரம் அறிய அதை எவரும்
செங்கல் மீது உரசிப்பார்ப்பதுண்டா?
அதற்கென உள்ள உரைகல்லில் தான்
உரசிப்பார்ப்பர் அல்லவா!
ஒவ்வொன்றின் தரம் அறிவதற்கும்
ஒரு உரைகல் உள்ளது!
உங்களது 'விருப்பம்' எனும் உரைகல்
உங்களை உத்தமன் என்றும்
உத்தமனை பொல்லாதவன் என்றும்
மாற்றிச் சொல்லக்கூடும்!
ஆகவே தான் சொல்லுகிறேன்:
உங்கள் உரைகல்லைத் தூக்கி எறியுங்கள்!
இவ்வளவு காலம் நீங்கள் வளராததற்கும்,
முழுமையடையாதிருப்பதற்கும்
காரணம் உங்களது உரைகல் தானாகும்!
•••
அட, உங்களுக்கு இணக்கமாக இருக்கும் வகையிலான தோழமையை,
நட்பை, உங்கள் ஆசிரியரிடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பதன் நோக்கம்
என்ன?
உங்களுடைய வீட்டுப்பாடங்களை நீங்கள் முறையாகச்செய்வதை விடுத்து
அதை இங்கே என் முன்னிலையில் செய்து காட்ட விரும்புவது என்ன?
அட, நீங்கள் நிகழ்த்தும் எந்த சாதனை, சாகசம், செயற்பாட்டிற்கு என்னை
சாட்சியாக நிற்கவேண்டும் என விரும்புகிறீர்கள், சொல்லுங்கள்?
ஆம், உங்களுடைய பரீட்சார்த்தமான விசாரப்பயிற்சிகளை,சார்புத்தன்மை
கொண்ட உங்களது கருத்துகளை, அபிப்பிராயங்களை, முடிவான உண்மை
களைப்போல நீங்கள் முன் வைப்பதை வரவேற்கவும், பாராட்டவும், ஊக்கு
விக்கவும் நான் செய்யவேண்டும் என விரும்புவதன் அர்த்தம் என்ன?
அர்ச்சுனன் கிருஷ்ணனின் பிரியமான நண்பனாக இருந்தவரை அவன்
தெளிவடைந்தானில்லை, பக்குவமடைந்தானில்லை! அதாவது, சமமாகப்
பழகினால் ஆலோசனை கிடைக்கலாம்; உபதேசம் கிடைக்காது. தூண்டுதல்
பெறலாம்; "இப்படிச் செய்" என்ற கட்டளை கிடைக்காது. "எனக்கு அறிவுரை
யோ, தூண்டுதலோ போதாது. எனக்கு ஒரு குரு வேண்டும். அவர் உபதேசம்
எனக்கு வேண்டும். அவர் "இப்படிச் செய்" என்று கட்டளையிட வேண்டும்.
"இதுதான் உனக்கு சிரேயஸ் (நன்மை)" என்று வழிகாட்டுபவர் வேண்டும்
என்றுணர்ந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி கிருஷ்ணனிடம்,
"நான் உங்கள் சீடன். சரணமடைந்த எனக்குப் புத்திமதி கூறுங்கள்" என்று
கூறி அர்ச்சுனன் சரணடைந்தான். அதாவது, அர்ச்சுனன் "நான் உங்கள்
சீடன்." எனக் கூறியதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. "வேறு புகல் எனக்குக்
கிடையாது" என்று மனத்திடத்துடன் கூறினான் என ஸ்ரீமத் பகவத்கீதை -
தத்துவ விவேசனீ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்து, சீடர்களாக தானே தேர்ந்தெடுத்த பன்னிருவரிடமும், இனி நீங்கள்
என் ஊழியக்காரர்கள் அல்ல; நீங்கள் என் சிநேகிதர்கள் என்று இயேசுவை
சொல்லவைத்த அந்த அம்சம் எது என்று நினைக்கிறீர்கள், சொல்லுங்கள்?
நட்பையும், தோழமையையும், இணக்கத்தையும் என்னிடமிருந்து வலிந்து
பெற விரும்பும் நீங்கள் எத்தனை பேருடன் உண்மையில் நட்பில், தோழமை
யில், இணக்கத்தில் இருக்கிறீர்கள்; குறைந்தபட்சம் ஒரே ஒருவருடனாவது
ஆழ்ந்த நட்பில் இருக்கிறீர்களா, சொல்லுங்கள்? நட்பின் இலக்கணம்,
தர்க்கம், விஞ்ஞானம் யாவும் அறிந்தது போல நீங்கள் பேசுவதென்ன?
உங்களுக்குச் சமமானவர்களிடமிருந்து, சகாக்களிடமிருந்து நீங்கள் எதை
யும் கற்றுக்கொள்ளமுடியாது! அவ்வளவு ஏன், உங்களுக்கு இணக்கமாக,
உங்களைவிட வேறு எவர் இருக்கமுடியும்? அத்தகைய உங்களிடமிருந்தே
நீங்கள் கற்றுக்கொண்ட பேருண்மைதான் என்ன, சொல்லுங்கள்? நீங்கள்
ஏன் இவ்வளவு மந்தமாக, உணர்வற்றவர்களாக உள்ளீர்?
ஆகவே, நீங்கள் உண்மையிலேயே சிந்திக்கிறீர் என்றால், உங்களுடைய
ஆய்வில் குறுக்கிட்ட உண்மையான சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்
காக இங்கே வாருங்கள்!
இங்கே விசார மையத்தில், என்னிடம் கொண்டுவரப்படும் கருத்துக்களை
யும், கொள்கை கோட்பாடுகளையும் இறுதியானதும், பூரணமானதுமான
ஒரு உரைகல்லில் உரசிப்பார்த்து அவை தவறானவை, அல்லது மட்டுப்பாடா
னவை என ஒதுக்கித்தள்ளிவிடுவதாக நீங்கள் சொல்வதில் என்ன நியாயம்
உள்ளது என நினைக்கிறீர்கள்? ஒரு நியாயமும் இல்லை! தங்கத்தின் தரம்
அறிய அதை உரசிப்பார்க்க ஏதாவது ஒரு கல்லைப் பயன்படுத்துவது முறை
யாகாது; அதற்கென உள்ள உரைகல்லை மட்டுமே பயன் படுத்த வேண்டும்!
ஆம், எவ்வொரு கருத்து, கொள்கை, கோட்பாடு ஆயினும் அவை மிகச்
சரியாக, துல்லியமாக, தெளிவாக, அசலாக, உண்மையாக, மாசில்லாத
பொன் போலவே தான் இருக்கவேண்டும்!
உண்மையில், சராசரி உண்மை, ஏறத்தாழ உண்மை, ஓரளவிற்கு உண்மை
என்றெல்லாம் இருக்கமுடியாது! உண்மை உண்மையாக மட்டுமே இருக்க
வேண்டும்! உண்மை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது எவருக்கும்
இணக்கமாகவோ, நெருக்கமாகவோ; எவரையும் திருப்திப்படுத்தும் வகை
யிலோ,மகிழ்ச்சியூட்டும் வகையிலோ இருக்கவேண்டிய அவசியம் உள்ளதா
என்ன? சொல்லுங்கள்!
உங்களுடைய பேச்சுகளில், கோரிக்கைகளில் அர்த்தம் ஏதுமுள்ளதா என்று
பாருங்கள்! விசாரத்தின் இலக்கு உங்களுக்கு முக்கியமானதாய் இருந்திருந்
தால் இத்தகைய கோரிக்கைகளை நீங்கள் வலியுறுத்துவீர்களா?
உண்மையிலேயே உண்மை மீது உங்களுக்கு நாட்டம் இருப்பின் நீங்கள்
இவ்வாறு பொறுப்பில்லாமல் பேசுவீர்களா?
தனது உண்மையைச் சிறிதளவேனும் உணர்ந்த நதி தேங்கி நிற்பதில்லை;
மாறாக, பாய்ந்தோடிடும் தனது தன்மையைப் பற்றிச் செல்வதாயிருக்கும்!
ஆகவே, தேங்கிக்கிடக்கும் குட்டையும், பாய்ந்தோடிடும் நதியும் நட்பு
கொண்டாட முடியாது!
உண்மையில் நீங்கள் நட்பை, தோழமையை வேண்டவில்லை, மாறாக,
அங்கீகாரத்தையும், சமமான இருக்கையையும்தான் வேண்டுகிறீர்!
ஆசிரியர் எப்போதுமே சிறந்த ஒரு மாணவனாக கற்றுக்கொண்டேயிருக்
கிறார்; அவர் தொடர்ந்து முன்னேறிச்செல்லும் கற்றலின் அனுபவத்தை தன் மையமாகக்கொள்கிறார்! ஆகவே அவர் அறிவிலும்,தெளிவிலும், பக்குவத்
திலும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்! ஆனால், சிந்தித்தறியாத மாணவர்
களாகிய நீங்களோ உங்களை மையமாகக்கொள்கிறீர்! உயர்-சுயத்தை
வெளிப்படுத்தும் ஒரு கருவியாக அல்லாமல், உங்கள் சுய-புராணத்தை
அரங்கேற்றி மகிழவே விரும்புகிறீர்! அதற்கான களமாக, மேடையாக இந்த
விசார மையம் அமைய வேண்டுமென விரும்புகிறீர், வாதம் செய்கிறீர்!
நீங்கள் எவ்வளவு மொண்ணையாக, உணர்வற்றவராக, நேர்மையற்றவராக,
உண்மையற்றவராக இருந்தாலும் உங்களை நீங்கள் எவ்வாறோ சகித்துக்
கொண்டுவிடுகிறீர், ஏற்றுக்கொண்டுவிடுகிறீர்! ஆனால், அடுத்தவர்கள்
எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் உங்களால் அவர்களை ஏற்றுக்கொள்ள
முடிவதில்லை! பிரச்சினையும், மட்டுப்பாடும் அடுத்தவர்களிடம் இல்லை;
உங்களிடம், உங்கள் அறிவின்மீது நீங்கள் கொண்ட அதீத நம்பிக்கையிலும்,
அவ்வறிவை உரசிப்பார்க்கும் உங்களது உரைகல்லிலும்தான் உள்ளது! அந்த
உரைகல் வேறு எதுவும் இல்லை, அது உங்களுடைய பிரமைகளுக்கு ஆட்பட்ட
"உணர்வு" தான்! ஆகவே, முதலில் பிரமைகளிலிருந்து உங்களது உணர்வை
விடுவியுங்கள்! கருத்தூன்றிச் சிந்தியுங்கள்! சிந்தித்தறியாமல், உணராமல்
எதையும் வெளிப்படுத்தாதீர்! உங்களது சொந்த அபிப்பிராயங்களை,
கூற்றுகளை சீரிய வெளிப்பாடுகள், அரிய உட்-பார்வைகள் என்றெண்ணிப்
பேசாதீர்!
உங்களது பேச்சுத்திறமை, மொழிவளம், விவரிப்புத்திறன் ஆகியவை
முக்கியமானவையல்ல! உண்மையை உணர்ந்தறிவது, உணர்ந்தறிந்ததைப்
பகிர்ந்து கொள்வது மட்டுமே முக்கியமானவையாகும்! எதையேனும் பேசுவ
தற்காக, பொழுதைப் போக்குவதற்காக, உங்கள் அறிவுச் சேகரங்களைக்
காட்டுவதற்காகப் பேசாதீர்! இந்த விசாரச் சிந்தனைப் பள்ளியில், பேச்சுக்
கலைப் பயிற்சியோ, போட்டியோ எதையும் நான் அளிக்கவில்லை! நானோ,
அல்லது உங்களது சக-விசாரப் பங்கேற்பாளார் எவருமோ உங்களுக்குப்
போட்டியாளர் அல்ல! உண்மையான போட்டி உங்களுக்கும் உங்களுக்கும்
தான்! என் அளவிற்கு நீங்கள் சமமாக இல்லை என்பது தேவையற்ற ஒப்பீடு!
உங்கள் அசலான அளவிற்கு நீங்கள் சமமாக இல்லை என்பதுதான் உங்க
ளுடைய உண்மையான பிரச்சினை!
நீங்கள் கேட்டறிந்தவைகளையும், படித்தறிந்தவைகளையும் கொண்டு
கதாகாலட்சேபம் செய்யாதீர். எதிரும் புதிருமான கருத்துக்களை, கோட்
பாடுகளைக்கொண்டு கட்டைப் பஞ்சாயத்து பண்ணாதீர். மொத்தத்தில்,
உண்மையை உணர்வதற்காக எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தையும்
வீணே விரயம் செய்யாதீர்!
நீங்கள் சொல்லவரும் விஷயங்கள், கூற்றுகள் உண்மையானவை, சரியான
வை, முக்கியமானவை என்பதாக எவ்வாறு, எதைக்கொண்டு முடிவுசெய்
கிறீர்கள்! உங்கள் கூற்றுகளை முன்வைப்பதற்கு முன் அவற்றின் துல்லியம்,
தெளிவு, உண்மைத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்!
உங்கள் விருப்பு-வெறுப்பு எனும் உரைகல்லைக்கொண்டு எதையும் முடிவு
செய்யாதீர்கள்! உங்களைப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் அவை
உவப்பாக இருக்கக்கூடும்!
ஆகவே, உண்மையை உரைகல்லாகக் கொள்ளுங்கள்; உண்மைக்குக் குறை
வான எதுவும் குறைபாடுடையதே! உண்மை என்பது உங்களது உணர்வைக்
கடந்த உயர்-உணர்வு, அல்லது முழு-உணர்வே ஆகும்!
உங்களை விமர்சிப்பதோ, குறை கூறுவதோ, குறைத்து மதிப்பிடுவதோ என்
தொழில் அல்ல! மாறாக, உங்களுடைய நெடிய உரைவீச்சும், இழுவையான
சொற்பொழிவும் சாரமான மற்றும் மையமான அம்சம் பற்றியதாக அல்லா
மல் போகும் பட்சத்தில், உங்களது சொல்லாடலில் கவனச்சிதறல் மற்றும்
ஆர்வக்கோளாறின் கூறுகள் இடம்பெற்றுள்ளதை இனம்கண்டு, உங்களது
சிந்தனைப்போக்கை சரியான தடத்தில் திருப்பி விடும் பணியை மட்டுமே
நான் செய்து வருகிறேன்!
ஆகவே, "விசார மார்க்கம்" எனும் இந்த "வாழ்க்கைப் பள்ளி" யின் அசலான
நோக்கத்தைப் புரிந்து கொண்டு, விசார-அமர்வுகளில், விசார-பங்கேற்
பாளர்களின் பங்கு, பணி என்ன என்பதை உணர்ந்து செயல்படுவீராக!
மா.கணேசன்/ நெய்வேலி/13.02.2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment