Monday, 27 February 2017

மாற்றமனைத்தும் முடிவுறும்!





எங்கு கேட்டாலும்,  யார் பேசினாலும்  "மாற்றம் மட்டுமே மாறாதது!" என்கிற
கோஷத்தை தங்களது நிலையில் பல வருடங்களாக  சிறிதும் மாறாத; தமது
சிந்தனையில்   சிறிதும்  வளராத  மனிதர்கள்  கிளிப் பிள்ளைகளைப் போல
சிந்தனையின்றி திரும்பத் திரும்ப முழங்கி வருகிறார்கள்!

'மாற்றம்'  என்பது   நிச்சயம் உள்ளது!  ஆனால், "ஆதியில் மாற்றம் இருந்தது!"
என்று  சொல்லும்  வகையில்  நிச்சயம்  இல்லை!  அதாவது,  'மாற்றம்'  என்று
தனியே ஏதும் இல்லை!

மாற்றம் என்பது எப்போதும் ஒன்றை, ஒரு பொருளைச் சார்ந்தே  செயல்பாட்
டிற்கு  வருகிறது!   ஆனால்,  ஒரு பொருள்  முழுமையாக,   பூரணமாக   உள்ள
தென்றால்,   அப்பொருள் மாற்றத்திற்கு உட்படும் விதியைக் கடந்தது என்று
தான் கருதவேண்டும். ஆகவே,மாற்றம் என்பது நிரந்தரமான விதியாகவோ,
வகையினமாகவோ இருக்கவியலாது!ஆகவே,"மாற்றம் மட்டுமே மாறாதது!"
எனும் கோஷம் பிழையானது ஆகும்!

மேலும்,  மாற்றம்  என்பது  தன்னளவில் ஒரு விதியும் அல்ல! அது எப்போதும்
வேறு  ஒரு விதியின், செயல் திட்டத்தின் கருவி போன்றதே யாகும்! மாற்றம்
என்பது    எப்போதும்   ஒரு   இயக்கத்தின்  பகுதியாக,   கருவியாக   மட்டுமே
செயல்படமுடியும்!  இயக்கம் என்றாலே அது இலக்கையுடையது என்றுதான்
அர்த்தமாகும்;  இலக்கு  இல்லாமல் எவ்வொரு இயக்கமும் இருக்க முடியாது!
ஆக,   குறிப்பிட்டதொரு   இயக்கம்   தனது   இலக்கை   எட்டியதும்,  அதாவது
முழுமை பெற்றதும், மாற்றம் என்பதும் முடிவிற்கு வந்து விடும்!

ஒரு  விதையானது,  முளைத்து  செடியாக  வளர்ந்து, பிறகு மரமாக உயர்ந்து,
ஒரு கட்டத்தில்,பூக்கிறது,பிறகு பூக்கள் பிஞ்சுகளாக மாறுகின்றன; அடுத்து
பிஞ்சுகள்   காய்களாகின்றன;  பிறகு  காய்கள்  முற்றிக்  கனிகளாகின்றன.
ஆக,  ஒரு  விதையானது  கட்டம்  கட்டமாக  மாற்றத்திற்குள்ளாகி,   முடிவில்
கனிகளுக்குள் விதைகளாக தனது இலக்கை அடைந்ததும் மாற்றம் என்பது
முடிவிற்கு வந்து விடுகிறது!  

மாற்றம்  என்பது  வெறுமனே ஒரு பொருள் மாறுபாடு அடைவதைக் குறிப்ப
தற்கு மேல்,  குறிப்பாக  யாதொரு  அர்த்தத்தையும்,  நிலையையும்,  தன்மை
யையும்  குறிப்பதில்லை.  அதாவது,  வளர்ச்சி,  பரிணாமம்,  இயக்கம் ஆகிய
வற்றின்   கருவியாக   மட்டுமே   மாற்றம்   என்பது   அர்த்தம்    பெற முடியும்!
ஆகவே, மாற்றத்தைப் பெரிதாகச் சிலாகித்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை!

மேலும்,  'மாற்றத்திற்காக மாற்றம்',   'முடிவில்லாத மாற்றம்'   என்று  எதுவும்
இல்லை! ஏனெனில்,  'மாற்றத்திற்காக மாற்றம்',  'முடிவில்லாத மாற்றம்' என்
பவை  இலக்கற்றவை,  ஆகவே அர்த்தமற்றவை!  போய்ச்சேருவதற்கு குறிப்
பாக  யாதொரு முடிவிடமும் இல்லாத முடிவேயில்லாத பயணத்தைப்போல!

ஒரு  விதையானது  தன் வளர்ச்சிப் போக்கையும், அல்லது, அடியோட்டமான
திட்டத்தையும்,   இலக்கையும்   தன்னுள்  உட்பொதிவாகக்   கொண்டுள்ளது!
ஆக  இவ்வம்சங்கள் தான்  முதன்மையானவை;  இவற்றைப்  பிரதானமாகக்
கணக்கில் கொள்ளாமல், வெறுமனே 'மாற்றம்' என்பதை பெரிதுபடுத்துவது
பொருத்தமற்ற பார்வையாகும்!

ஒரு  விதையிலிருந்து  முளைத்தெழுந்து, வளர்ந்து பரந்து விரிந்த மாபெரும்
விருட்சம் தான் இம்மொத்தப்பிரபஞ்சமும்; அதற்கென ஒரு வளர்ச்சிப் போக்
கும்,  அடியோட்டமான  திட்டமும்,  தொலைவான தொரு  இலக்கும்  உள்ளது!
ஆக,  "பிரபஞ்சம் மாறிக்கொண்டே இருக்கிறது!",   "நீங்கள்  நேற்று   குளித்த
அதே  ஆற்றில்  இன்று குளிக்க முடியாது!",   " பிரபஞ்சம்  என்பது   இயக்கத்தி
லுள்ள பொருள்!"   என்பதாகவெல்லாம்  மாற்றத்தைப் பிரதானப்படுத்துகிற
வகையில், மேலோட்டமாகப் பேசுவது பயனற்றது!

பிரபஞ்சம்  என்பது  பருப்பொருளை  ஊடகமாகக் கொண்டு  ஒப்பற்றதொரு
இலக்கு நோக்கிச்செல்லும் இயக்கம் எனக்காண்பதுதான் சரியான பார்வை
யும்,  புரிதலும்  ஆகும்!  இதற்கு மாறாக,  'பிரபஞ்சம்  மாறிக்கொண்டேயிருக்
கிறது!"   என்று  காண்பது  மிகவும் மொண்ணையான பார்வையாகும்! ஏனெ
னில்,பிரபஞ்சம் வெறுமனே மாறிக்கொண்டேயிருக்கவில்லை;அது வளர்ந்து
கொண்டே செல்கிறது; முக்கியமாக, குறிப்பானதொரு இலக்கு நோக்கி முன்
னேறிச் சென்று கொண்டுள்ளது என்று காண்பதுதான் சரியானது! இவ்விடத்
திலும்,   இன்னும் பிற இடங்களிலும்,  'மாற்றம்' என்ற சொல்லுக்குப் பதிலாக
"வளர்ச்சி" அல்லது "பரிணாமம்" எனும் சொற்களைப்பயன்படுத்துவது தான்
மிக்கப்பொருத்தமாக இருக்கும்!

இவ்வாறே,   ஒரு  ஆறு  என்பது  ஓடிக்கொண்டேயிருக்கிறது  என்பதால்,  ஒரு
முறை  நாம்  குளித்த  அதே  தண்ணீரில்,  இரண்டாவது முறை  நாம் குளிக்க
முடியாது  என்பது புரிந்து கொள்ளக்கூடியதே; ஆனால், அப்புரிதல் எவ்வகை
யிலும்  இறுதியானதல்ல!  ஏனெனில், எந்தவொரு ஆறும் முடிவேயில்லாமல் ஓடிக்கொண்டேயிருப்பதில்லை; மாறாக,எல்லா ஆறுகளும் முடிவில் கடலில்
சென்று கலக்கவே செய்கின்றன! ஆக, ஆற்றுக்கு இலக்கு உள்ளதைப்போல,
மனித  வாழ்க்கைக்கும்   இலக்கு   உள்ளது.   மனிதன்  வெறுமனே   வாழ்ந்து
கொண்டேயிருப்பதில்லை;  அதில்  அர்த்தமும் இல்லை!  இன்னும் அவன் எப்
போதும் ஆற்றில் குளித்துக்கொண்டேயிருக்கவும் முடியாது!

இவ்வாறே,பிரபஞ்சம் என்பதும் ஒரு ஆறுதான்!அது வெறுமனே ஒரு எந்திரம்
போல  இயங்கிக் கொண்டேயிருக்கும்  ஒன்றல்ல!  அது ஒரு ஒப்பற்ற இலக்கு
நோக்கிச் செல்லும் ஒரு பரிணாம இயக்கமாகும்!

ஆக,மாற்றத்தைக் கருவியாக, வழிமுறையாகக்கொண்ட எவ்வொரு வளர்ச்
சியும், பரிணாமமும், இயக்கமும் இறுதியில் முடிவைத்தழுவியே ஆகவேண்
டும்!   அதாவது,    இலக்கு  நிலையை அடைந்தேயாக வேண்டும்!  ஏனெனில்,
இலக்கு நிலைதான் எவ்வொரு வளர்ச்சி, பரிணாமம், அல்லது, இயக்கத்தின்
நிறைவும்,   முழுமையும்  ஆகும்!  இம் முழுமை நிலை  என்பது சாத்தியமான
மாற்றங்கள் அனைத்தையும் தீர்த்து முடித்த இறுதி நிலையாகும்!

ஆம், இறுதியில், இலக்குநிலை மட்டுமே முக்கியமாகும்! ஏனெனில், அனைத்
தின்    ஆரம்பமாகவும்,   மாற்றத்திற்கு   உட்படும்  வழிமுறையாக  அமைந்த
வளர்ச்சிப் போக்காகவும், பரிணாமத் திட்டமாகவும், நெடிய இயக்கமாகவும்
விரிந்த  "மெய்ம்மை"  மீண்டும்  தன்னை ஒருங்கே திரட்டி மீட்டிடும்  ஒருமை
யும்   முழுமையுமான நிலையே  இலக்கு ஆகும்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 16.02.2017
----------------------------------------------------------------------------

Saturday, 25 February 2017

உண்மையின் சுவை




உண்மையின் சுவை என்ன?
உண்மையின்   நிறம்,  வடிவம்,  மணம்,  குணம்  ஆகியவற்றை உண்மையை
அறிந்தோர்  என்பவர்களிடமிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்!  ஆனால்,
அவ்வறிவால் உங்களுக்கு ஒரு பயனும் விளையப் போவதில்லை! ஏனெனில்,
உண்மையின் நிறம் வெண்மை என்று புத்தர் சொல்லியுள்ளார்  என்று வைத்
துக்கொள்வோம்;  உடனே நீங்கள் வெண்மையான பொருட்களையெல்லாம்
உற்று  உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்!   ஆனால்,  வெண்மை   நிறத்தி
லுள்ள பொருட்கள்எதுவும் உண்மையல்ல என்றால் நீங்கள் ஏமாற்றமடைவீர்!
"உண்மை நிறமற்றது" என புத்தர் சொல்லியிருந்தால் உடனே நீங்கள் குழப்ப
மடைந்து போவீர்!

ஆம், உண்மைக்கு உண்மையில் நிறம் உள்ளது; ஆனால்,  அந்த அற்புத நிறத்
தையொத்த   எந்த  நிறமும்   இப்பிரபஞ்சத்தில்  எங்குமேயில்லை!  உண்மை
யின் நிறத்தை உண்மையின் கண்களைக்கொண்டு மட்டுமே காண முடியும்!
உண்மை  எனும்  மலருக்கு மணமும் உள்ளது!   ஆனால்,  அதை  நீங்கள்   ஒவ்
வொருவரும் மலரும் போது மட்டுமே முகர முடியும்!

உண்மைக்கு  வடிவம்  ஏதும் உண்டா?    உண்மையால்  எந்த  வடிவத்தையும்
எடுத்துக் கொள்ளமுடியும்  என்பதால்  உண்மையில் உண்மை வடிவமற்றது!
உதாரணத்திற்கு,   ஒட்டு  மொத்தப் பிரபஞ்சமும்,    அதிலுள்ள   அனைத்தும்
உண்மையின் வர்ணமிகு வடிவ-ஜாலங்களே!

உண்மையின் குணம் எத்தகையது? ஓ! உண்மையின் குணம் உண்மை தான்,
அதாவது,  உண்மைத்தன்மை தான்!    மேலும்,   உண்மை  மட்டுமே  உண்மை
யானது! பிற யாவும், இப்பிரபஞ்சம் மொத்தமும் உண்மையின் நிழலேயாகும்!
அதை 'மாயை' என்றும் சொல்வர்!  அதாவது,    இப்பிரபஞ்சம்  நிரந்தரமற்றது!
உண்மை  மட்டுமே  நிஜத்திலும் நிஜமானது,  நிரந்தரமானது,  நித்தியமானது!

உண்மையின் நிறம்,  மணம்,  குணம்,  வடிவம்  இவற்றைப் பற்றிய விவரிப்பு
களையெல்லாம்   நீங்கள் ஞானிகளிடமிருந்து அறிந்து கொள்ளலாம்; அவை
உங்களது  மேலோட்டமான  ஆர்வக்கோளாறைத்  திருப்தி செய்திடக்கூடும்!
அதற்கு மேல்   அவற்றினால்  ஒரு  பயனும்  இல்லை!  ஆனால்,  உண்மையின்
சுவையை  நீங்கள் நேரடியாகச் சுவைக்காமல் ஒரு போதும் உணரமுடியாது!
உண்மையின்  சுவை பற்றி  இன்னொருவரிடம்  கேட்டறிவது என்பது எச்சில்
பண்டத்தைக் கேட்பது போன்றதாகும்!

ஆனால்,  உண்மையைப் பற்றி  நீங்கள்  ஏன் இன்னொருவரிடத்தில் போய்க்
கேட்கவேண்டும்?  அல்லது  மறைந்து போன புத்தர்கள்,  மகரிஷிகள், ஞானி
கள்  ஆகியோரது  செல்லரித்துப்போன  ஒலைச்சுவடிகளைத்  தேடிப்பிடித்து
ஆராய்ந்து குழம்பவேண்டும்?

உண்மை என்ன உங்களுக்கு அந்நியமானதா? அது உங்களுடைய சாரமான
உண்மையிலிருந்து வேறானதா, என்ன?   உண்மை,   அது   உங்கள்  உயிரின்
உயிர்;   உங்கள் ஆன்மாவின்  ஆன்மா  என்பதை  எவ்வாறு  நீங்கள்  உணரத்
தவறினீர்?    எவ்வாறு   நீங்கள்  உங்களை  முழுமையாகக் காணும் விழைவி
லிருந்து விலகி அந்நியமாகிப்போனீர்?எவ்வாறு உங்களால் உங்களது இருப்
பின் மேற்புறத்திலேயே தங்கி வாழவும், திருப்திடையவும் முடிகிறது?

இது எவ்வாறு உள்ளதென்றால், ஒருவனுக்கு அழகிய பெரிய மாளிகை இருந்
தும்  அதனுள்ளே  சென்று எத்தனை அறைகள் உள்ளன,  எவ்வளவு வசதிகள்
உள்ளன   என்பவற்றையெல்லாம்  கண்டு  மகிழ்ந்து,   மிகச்  சௌகரியமாக
வசிக்காமல்,   அம்மாளிகையின் முன்புறத் தாழ்வாரப்பகுதியிலேயே தங்கி
வசிப்பதைப் போலுள்ளது!  இது தான் பொதுவாக மானுடர்கள்  தங்களுக்குத்
தாங்களே உருவாக்கிக்கொண்ட  சிறுமையும், துன்ப நிலையும் ஆகும்!

"உண்மை" என்பது எட்டாக்கனியல்ல! என்றாலும், அது அறிவுஜீவிகளுக்கும்,
தத்துவ வாதிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இன்னும் எட்டாத கனியாகவே
உள்ளது!  இதற்குக் காரணம்,  அவர்கள் உண்மையை புறத்தேயும்,  தவறான
இடங்களிலும்,  தவறான அணுகுமுறைகளைக்  கொண்டும்  தேடுவது தான்!
தாமே  கனிகளாக  மாறவேண்டியவர்கள்  தங்களுக்கு  வெளியே தேடினால்
எவ்வாறு அந்த "உண்மை" எனும் கனி எட்டும்?

பெரும்பாலான மனிதர்கள் தம்மைப் பற்றி யாதொரு கருத்தாக்கமு மின்றி
எலிகளையும்,   தவளைகளையும்  போல  ஜீவித்துச்  செல்கிறார்கள்!  கணிச
மான   எண்ணிக்கையிலானவர்கள்  தம்மைப்பற்றி பலவகைப்பட்ட பிம்பங்
களைக் கற்பித்துக்கொண்டு தங்களுக்கே புறம்பாகவும், எதிராகவும் போலி
யானதொரு நபராக,  பொய்யான தொரு  வாழ்க்கையை  வாழ்ந்துசெல்கின்
றனர்!

உங்களை  நீங்கள் என்னவாக,  எத்தகைய மெய்ம்மையாக அறிகிறீர்களோ,
உணர்கிறீர்களோ,  அதற்குரிய  வாழ்க்கையைத்தான் உங்களால்  வாழ முடி
யும்!உங்களை எதுவாகவும் அறியாதபோது நீங்கள் சுய-உணர்வற்ற விலங்கு
ஜீவிகளைப் போலவே வாழ்வீர்கள்! உங்களை நீங்கள் விரும்பியவாறு ஏதோ
வொன்றாக,     யாரோ  ஒருவராக  எண்ணிக் கொள்ளும்,    கற்பனை  செய்து
கொள்ளும்  பட்சத்தில்,    நீங்கள்  உங்கள்  உண்மையான  சுயத்தைக் கண்டு
கொள்ளாமலும்,   வெளிக் கொணராமலும்  அதைக் கொன்று விடுகிறீர்கள்!
ஆக, உண்மைக்கான அடிப்படையை அழித்துவிட்டு உண்மையை வெளியே
எங்கெங்கோ தேடிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்!
ஆனால்,   உண்மை  என்பது   உங்கள்  உண்மையான  சுயத்திலிருந்து வேறா
னதல்ல!  இதன் அர்த்தம்  உண்மை உங்களுக்குள்,  உங்களுடைய பகுதியாக
உள்ளது என்பதல்ல!  மாறாக,  உங்களது சுயத்தின் மலர்ச்சியே உண்மை என்
பதாகும்!  அவ்வாறு  நீங்கள் மலரும் போது  உங்களுடைய  பழைய சுயத்தின்
சுவடுகள் ஏதுமிராது!

உண்மை, அது நிறைவின் நிறைவு!
உண்மை, அது முழுமையின் பூரணம்!
உண்மை, அது சிருஷ்டியின் சாரம்!
உண்மை, அது உயிரின் உயிர்!
உண்மை, அது ஆன்மாவின் ஆன்மா!
உண்மை, அது மும்மையின் ஐக்கியம்!
                     (உம்மை, இம்மை, மறுமை)
உண்மை, அது மும்மெய்ம்மையின் ஒருமை!
                    (இருப்பு, உணர்வு, ஆனந்தம்)
உண்மை, அது காலாதீதம்!
உண்மை, அது இருப்பின் மலர்ச்சி!
உண்மை, அது மாற்றங்களனைத்தின் முடிவு!

மா.கணேசன்/ நெய்வேலி/ 23.02.2017
----------------------------------------------------------------------------

Thursday, 23 February 2017

நான் யார்?






நான் யார், எத்தகையவன், என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டுமா?
அப்படித் துல்லியமாகத் தெரிந்தால் தான் என்னுடன் உரையாடவும்
உறவாடவும் இயலுமா?
அப்படியானால், அதற்கு முன், உங்களை நீங்கள் யார், எத்தகையவர்
என்பதைத் தெரிந்துகொள்வது முக்கிய முன்-தேவையாகிறது!

இரண்டு வகைகளில் நீங்கள் உங்களைத் தெரிந்து கொள்ளலாம் :

முதல் வகை : ஒப்பீட்டு ரீதியில் அமைவது- பிறருடன் ஒப்பிட்டுப்பார்ப்பதன்
                            வழியாக!   இந்த  வழிமுறை  துல்லியமற்றது,  சராசரி அளவில்
                            அமைவது, நிச்சயமற்றது. . . .
இரண்டாவது வகை : நேரடியானது - ஒருவர் நேரே தனது ஒப்பிடவியலாத
                            உள்ளார்ந்த தன்மையை, மதிப்பை, உண்மையை உணர்ந்தறி
                            வது, இவ்வழிமுறையே சரியானது. . . . .

முதலில் உங்களை நீங்கள் முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்
ளாமல்  பிறரைப்  புரிந்து கொள்வது  என்பது  இயலாது!   உங்களை  நீங்கள்
புரிந்து  கொள்வது   என்பது தான்   அனைத்திற்குமான   அடிப்படை யாகும்!

இப்பிரபஞ்சத்தையும்,  அதிலுள்ள  அனைத்தையும்  நீங்கள்  புரிந்து கொண்
டாலும்,  உங்களை  நீங்கள் புரிந்து கொள்ளாவிடில்  உங்களது இருப்பிற்கும்,
வாழ்க்கைக்கும் யாதொரு அர்த்தமுமில்லை! ஏனெனில், நீங்கள் ஒவ்வொரு
வரும்தான் இப்பிரபஞ்சத்தின் மையம் ஆவீர்கள்!இந்த உண்மையை நீங்கள்
உணராத வரை,     இப் பிரபஞ்சத்தின்   பலவகைப்பட்ட   உள்ளடக்கங்களில்
நீங்களும் ஒருவகைப்  பொருளே, அல்லது ஒரு ஜந்துவே!

உங்களுடைய "முக்கியத்துவம்" என்பது யாரோ உங்களுக்கு வழங்குவதோ,
அல்லது  நீங்களே  உங்களுக்கு வழங்கிக்கொள்ளும் பட்டமோ அல்ல! உங்க
ளுடைய ஆழத்தில் நீங்கள் கண்டடையாத முக்கியத்துவம் எதையும் எவரும்
உங்களுக்கு வழங்கிட முடியாது!  உங்களுடைய  உண்மையான முக்கியத்து
வம் என்பது நீங்கள் ஒரு உணர்வு என்கிற உண்மையை உணரும் போது சுய
-சாட்சியமாக  உணர்ந்தறியப்படுகிற  ஒன்றாகும்!  அவ்வாறு  உணர்வதற்கு
இப் பிரபஞ்சத்திலுள்ள  எதையும்  குறிப்பாகக்  (Reference) கொள்ளவிய
லாது! ஏனெனில், உணர்வு மட்டுமே உணர்வுக்கான குறிப்பும், யாவும்!

இதற்குமாறாக, உங்களைப்பற்றி நீங்கள் அறிந்ததெல்லாம் மேலோட்டமான
விபரங்கள் மட்டுமே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட குலம், கோத்திரத்தைச் சேர்ந்த
இன்னாருடைய மகன்,  இந்த ஊரில் பிறந்தவர், உங்களுடைய கல்வித் தகுதி,
உத்தியோகம்,  இன்ன பிற விபரங்கள்  யாவும்  உங்களுடைய அசலான,  கரு
வான, சுயத்தைச் சுட்டுவதோ, வெளிப்படுத்துவதோ கிடையாது! இவ்விபரங்
கள் யாவும், தனது மையத்தில் தான் யார் என்பதை அறியாத ஒரு நிஜத்தைச்
சுற்றித் தொகுக்கப்பட்ட ஒரு அடையாளம் என்பதற்கு மேல் வேறெதுவுமல்ல!
இந்த  விபரங்களனைத்தையும்  நீங்கள்  அறிவதற்கு  முன்  உங்களைச்சுற்றி
யுள்ள பலர் அறிவர்!ஆனால்,உண்மையான உங்களை உண்மையில் அறியக்
கூடியவர் நீங்கள் ஒருவர் மட்டுமே! அல்லது தன்னையறிந்த இன்னொருவர்
மட்டுமே!

இன்னும்  நீங்கள்  என்னை யார்  என்று அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
இது வரை, நீங்கள் என்னைப் பார்த்தவரை, என்னைப்பற்றி பிறரிடம் கேட்டு
அறிந்தவரை, அல்லது என் பேச்சைக்கேட்டும், எனது எழுத்துக்களை வாசித்
தும் புரிந்து கொண்டவரை,  என்னுடன்  பழகிய வரை, ஓரளவிற்கு என்னைப்
புரிந்து  கொண்டதாக  நீங்கள்  நினைக்கலாம்!    மேலும்,   உங்களது தேவை
மற்றும்  குறிக்கோளுக்கு  உரிய  அளவிற்குமேல்  என்னை அறிந்து கொள்ள
உங்களுக்கு நேரமோ, சக்தியோ, பெரிய விழைவோ இருக்க வாய்ப்பில்லை!
அப்படி  வாய்ப்பு  இருந்திருந்தால்   எப்போதோ  நீங்கள்  உங்களை  அறிந்து
கொண்டிருப்பீர்களே!  உண்மையில், உங்களது தேவைகளின் தரம்  மற்றும்
தன்மைக் கேற்பவே   நீங்கள்   ஒரு விலங்காகவோ,   அரை-மனிதனாகவோ,
அல்லது  முழு-மனிதனாகவோ  அமைகிறீர்கள்,  அல்லது  ஆகிறீர்கள்!   ஆம்,
உங்களது  தேவைகள்  மற்றும்  ஆசைகளைக் கொண்டு  நீங்கள் எத்தகைய
ஜீவியாக  தற்போது  இருக்கிறீர்கள்  என்பதை  நீங்களேகூட கண்டுபிடித்திட
லாம்!  ஒரு மனித ஜீவியாக  இருப்பது  என்பது  முன்-கொடுக்கப்பட்ட தல்ல!
மாறாக, ஒரு மனித ஜீவியாக ஆவதற்கான உட்பொதிவு மட்டுமே ஒவ்வொரு
வருக்கும் குறைவில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது!

உண்மையில், நீங்கள் உங்களைப்புரிந்து கொள்ளவேண்டுமெனில், அதற்கு
பிரத்தியேக விழைவு வேண்டும்! அதற்கு,  முதலில் உங்களை உங்களுக்குத்
தெரியும்  எனும் பிரமையிலிருந்து நீங்கள் வெளியே வரவேண்டும்!  ஆனால்,
உங்கள்  கனவிலும் சரி,  நனவிலும் சரி,  உங்களை நீங்கள் அறிந்து கொள்ள
வேண்டுமென்ற   எண்ணமோ, ஆர்வமோ உங்களிடம் தோன்றியிருக்க சாத்
தியமேயில்லை! ஏனென்றால்,  நீங்கள் தான் உங்களை அப்படியே பூரணமா
கக்  கொடுக்கப் பட்டவராக,   ஒரு   அறுபொருளாக   (Absolute) எடுத்துக்
கொண்டு விட்டீரே!   பிறகு எவ்வாறு  உங்களைத் திரும்பிப் பார்த்து அறிந்து
கொள்ளும் எண்ணமோ, ஆர்வமோ உங்களுக்குத் தோன்றும்? ஆனால்,அதே
நேரத்தில்,உங்களுக்கு உங்களைப்பற்றி யாதொரு நிச்சயத்துவமும், ஸ்திரத்
தன்மையும் கிடையாது!    ஏனெனில்,    உங்களை  நீங்கள்  சிறிதும் அறியாம
லேயே அறிந்துள்ளதாக எடுத்துக்கொண்டது தான் உங்களுடைய பிரதானப்
பிரச்சினையும், மூலப் பிரமையும் ஆகும்!

அடுத்து, உங்களை நீங்கள் மிகத் தவறாக, உடலுடன் அடையாளப்படுத்திக்
கொண்டு  விட்டது  (Mis-Identification) தான்  உங்களது    அனைத்து
மட்டுப்பாடுகளுக்கும் காரணமாகும்! உங்களைப்பற்றிய உண்மை இதுவே :
ஆம்,  உங்களை  ஒரு 'உடல்' எனப் பாவித்துக்கொள்ளும் ஒரு 'மன(-வளர்ச்சி
யற்ற-) ஜீவி'  நீங்கள்!

ஆம்,நீங்கள் எப்போதும் உங்களை மையமாகக்கொண்டு,பிறருடன் எவ்வாறு
பழகுவது,சேர்ந்து செல்வது,இயங்குவது,வாழ்வது என்பதில் மட்டுமே கவனம்
செலுத்துபவராக  உள்ளீர்!  அதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா?  அதில்
எந்தத் தவறும், பிரச்சினையும், சிக்கலும் இருக்காது, முதலில், நீங்கள் உங்க
ளுடன் எவ்வாறு இயங்குகிறீர்,செயல்படுகிறீர், சேர்ந்து செல்கிறீர்,வாழ்கிறீர்
என்பதைக் கவனித்துக் கணக்கில் கொண்டிருந்தீரெனில்!ஏனெனில்,நீங்கள்
ஒவ்வொருவரும்தான் அனைத்தின் (பிரபஞ்சத்தின்) மையம் என்று குறிப்பிட்
டோம்! ஆனால்,  அந்த மையத்தை நீங்கள் ஒரு போதும் திரும்பிப் பார்த்ததே
யில்லை! அது எத்தகைய நிஜம்,மெய்ம்மை என்பதை நீங்கள் அறியவில்லை!
அதாவது,   உங்களைப்   பொறுத்தவரை   நீங்கள்  ஒரு  குருட்டுப்  புள்ளியாக
இருந்து கொண்டு பிற யாவரையும், யாவற்றையும், இந்தப் பிரபஞ்சம் மொத்
தத்தையும் அலசி ஆராய்கிறீர், அறிகிறீர்!

ஆனால்,  தினமும்  அவ்வப்போது உங்கள் முகத்தை மட்டும் திரும்பத் திரும்
பப்  பார்த்துக் கொள்கிறீர்! அதை ஒப்பனை செய்து அலங்கரிக்கிறீர்! ஏதோ,
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"    என்று   சொல்லப்பட்டதால்    அல்ல!
மாறாக, 'எண் சாண் உடலுக்கு முகமே பிரதானம்!' என நீங்கள் தலைகீழாகப்
புரிந்துகொண்டதால்! அதாவது, உங்களுக்கு அகம் என்பது இருந்தால் தானே
அதன் அழகு முகத்தில் தெரிய?   உங்களை   நீங்கள்  அறியாதபோது "அகம்"
என்பது எவ்வாறு அங்கேயிருக்க முடியும்?  அகத்திற்கான அடிப்படைகளும்,
உட்பொதிவும்  இருக்கின்றன; அதை நீங்கள் அறியாததினால் அது இன்னும்
உருப்பெறவில்லை! "அகம்" என்பது தயார்நிலையில் கொடுக்கப்பட்ட ஒன்று
அல்ல! அது ஒவ்வொருவரும் கண்டுபிடித்திட வேண்டிய, தம்முள் எழுப்பப்பட
வேண்டிய மெய்ம்மையாகும்! நீங்கள் எப்போது உணர்வுக்கு வருகிறீர்களோ
(உணர்வுக்கு விழிக்கிறீர்களோ) அப்போதுதான் உங்களது அகம் உருப்பெறத்
தொடங்குகிறது!  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மையே!
இன்னும், அகம்  இல்லாவிட்டாலும் கூட,  அதன் இல்லாமையின் லட்சணமும்
(அதாவது, விகாரம்) முகத்தில் தெரியும்!    எல்லாவற்றையும்   தலை கீழாகப்
புரிந்து கொள்ளும் நாம், முகத்தை ஒப்பனை செய்துகொள்வதன்,அலங்கரித்
துக் கொள்வதன் வழியாக, நம்முடைய அகத்தின் அழகை நாம் அதிகப்படுத்
திக்கொள்வதாக எண்ணிக்கொள்கிறோம்!அகத்தின் அழகு வேறு;முகத்தின்
அழகு வேறு!

நீங்கள் உங்களைத் திரும்பிப் பார்க்காமல்,   உங்களை உள்ளே பார்க்காமல்,
அம் மையம் உருவாவதேயில்லை! உள்ளே பார்க்கவேண்டும் எனும் விழைவு
தன்னெழுச்சியாக    யாதொரு    புறத்தூண்டுதல்  எதுவுமின்றி,    எவருடைய
ஆலோசனையும், கட்டளையும் இன்றி ஏற்படவேண்டும்!   அதே வேளையில்,
நீங்கள் உணர்வுக்கு வருவதன்,விழிப்படைவதன், உங்களுக்குள் அம்மையம்
உருவாவதன்  அவசியத்தை,   உங்களது  வாழ்க்கைத் தேவைகளில் எதுவும்;
புற நிகழ்வுகள்  எதுவும்  ஒரு போதும்  உணர்த்தப்போவதுமில்லை,  தூண்டப்
போவதுமில்லை!மாறாக,உங்கள் இருப்புக்கு அல்லது வாழ்க்கைக்கு நீங்கள்
எவ்வளவு   தீவிரமாகவும்,   முழுமையாகவும்  பதிலளிக்கிறீர்கள் என்பதைப்
பொறுத்தே அவை நிகழ்கிறது!

உங்களது வாழ்க்கைத் தேவைகள் யாவும் உயிர்-வாழ்தலுக்கான தேவைகள்
மட்டுமே தவிர,   அவை   எதுவும்   அசலான   வாழ்க்கையின்    அர்த்தத்துடன்
தொடர்பு  கொண்டவையோ,  அந்த அர்த்தத்தின்  அவசியத்தை எவ்வகையி
லேனும்  உணர்த்துவதோ,  சுட்டுவதோ கூட  கிடையாது!  நீங்கள் எல்லோரும்
எவ்வாறு  உங்களை  அறியாமலேயே  வாழ்ந்து செல்கிறீர்களோ,  அவ்வாறே
"வாழ்க்கை" என்றால் என்ன  என்று அறியாமலேயே வாழ்ந்து  செல்கிறீர்கள்!
எல்லாவற்றையும்  நீங்கள்  சர்வ சாதாரணமாகவும்,  சுலபமாகவும் எடுத்துக்
கொண்டு விடுகிறீரகள்! இவ்வழியே,அதாவது உங்களுடைய படு மேலோட்ட
மான இருப்பைக் கொண்டு,   நீங்கள் உங்களை மட்டுமல்லாமல், வாழ்க்கை
யையும், அனைத்தையுமே கொச்சைப்படுத்தி விடுகிறீர்கள்!

ஆகவே, வாழ்க்கைத்தேவைகள் என்று நீங்கள் உணர்ந்த அனைத்து தேவை
களையும் கடந்து வாழ்க்கையைக் காண்கிற, அறிகிற, அதன் அர்த்தத்தைப்
புரிந்து கொள்கிற உன்னதத் தேவையை உணர்ந்து பற்றுங்கள்! உங்களைச்
சுற்றிலும் நிகழ்கிற சம்பவங்கள், நிகழ்வுகள், விபத்துகள் ஆகியவற்றினால்
கவனச் சிதறலடையாதீர்கள்;அவற்றில் சிக்கிக்கொள்ளாதீர்கள்! ஏனெனில்,
வாழ்க்கை   என்பது   ஒருபோதும்  உங்களை  உட்படுத்தாமல்  உங்களுக்குப்
புறத்தே  நிகழ்வதில்லை!   உங்கள்  வாழ்க்கையின்    மையம்    எப்போதுமே
நீங்கள் தான்; ஆனால், நீங்கள் தான் உங்களுள் மையம் கொள்வதில்லை!

நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது என்பது தான் முக்கியம்; அது செல்லும் வழி
நெடுகிலும், அது எவை யெவற்றையெல்லாம் சந்திக்கிறது, எத்தகைய தடை
களை  எதிர்கொள்கிறது  என்பது போன்ற  விஷயங்கள், அனுபவங்கள், அறி
வுச்சேகரங்கள்,  எவையும்  முக்கியமல்ல!  ஏனெனில்,  அவை  எதுவும்  இறுதி
யானவையல்ல!  மாறாக,  அவை யாவும்,  இறுதி  அர்த்தத்தை நோக்கிய  நதி
யின்  பயணவழிச் சாட்சியங்கள்,  வேடிக்கைக்காட்சிகள்,  அவ்வளவே!   நதி
தன் ஒப்பற்ற இலக்கை நோக்கிச்செல்கிறது என்பது மட்டும்தான் நதிக்கான
உந்துசக்தி, உற்சாகத் தூண்டுதல், இளைப்பாறுதல் யாவுமாகும்! நதியானது
முன்னோக்கிச்   செல்லச்  செல்ல,  தான்   கடந்து  வந்த  பாதையில்  ஏற்பட்ட
அனுபவங்களை மறந்துவிடுகிறது! முடிவில் தன் இலக்கை அடையும்போது
தன்னையும்  அது முற்றிலுமாக மறந்து சுமை நீங்கியதாகி விடுகிறது!

ஆகவே,   நீங்கள்   என்னைப் புரிந்து கொள்ளும்  முயற்சியை   விட்டு விட்டு,
உடனடியாக   உங்களைப் புரிந்து கொள்ளும்    முயற்சியில்     இறங்குங்கள்!
என்னை வேறு எவருடனாவது ஒப்பிட்டுக் காண்பது, எடை போடுவது,என்னி
டம்   குற்றம்  குறை  எதையாவது  கண்டுபிடிக்க  முயல்வது போன்ற யாவும்
வீண் வேலையாகும்!  உங்களுக்குக் கீழானவர்கள் என்று நீங்கள் கருதுபவர்
களை விட நீங்கள் உயர்வானவர் என்று மகிழ்வதும், உங்களுக்கும் மேலான
வர்கள்  என்று  நீங்கள்  கருதுபவர்களை  எண்ணிப்   பொறாமைப்படுவதும்,
அவர்களுடன்  ஒப்பிட்டு  உங்களைத்  தாழ்வாக எண்ணுவதும் பயனற்றவை
யாகும்! ஏனெனில், பிறரது குற்றங்குறைகள் உங்களைத் தூய்மைப்படுத்தப்
போவதோ, அல்லது பிறரது தூய்மை உங்களைக் கறைப்படுத்தப்போவதோ
கிடையாது! மாறாக, உங்களைப் புரிந்து கொள்ளாதிருப்பதே பெருங்குற்றம்
ஆகும்! இந்நிலையில் பிறரைப் பற்றி ஆராய்வது என்பது அளவுகோல் இன்றி
அளப்பதற்கு ஒப்பான அடிப்படையற்ற செயலாகும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 21.02.2017
----------------------------------------------------------------------------

Monday, 20 February 2017

சில விபத்துகள், சில சந்திப்புகள்!





சில விபத்துகள்  சந்திப்புகளில் முடிகின்றன!
சில சந்திப்புகள் விபத்துக்களாய் முடிகின்றன!



"இனிமேல் சிகரெட் புகைத்தால்
அது உன் உயிருக்கு ஆபத்து!"
என்று டாக்டர் சொன்னதும் அவன்
புகைப்பழக்கத்தை விட்டுவிட்டான்
உடனே!

"வழக்கமான உனது வழியில் வாழ்ந்தால்
அது உன் ஆன்மாவிற்கு ஆபத்து!"
என்று அவனது குரு சொன்னதும் அவன்
உடனே விட்டுவிட்டான் சத்-சங்கத்திற்குச்
செல்வதை!


அவர்கள் ஆன்மீகத்தைக்கற்றுக்
கொண்டார்களோ இல்லையோ
மிக விரைவாக ஒரு குருவைப்
போலப் பேசுவது எப்படி என்பதைக்
கற்றுக்கொண்டனர்!

நாளடைவில் ஒவ்வொரு சீடனும்
குருவுக்குப் பாடம் எடுக்கத் தொடங்கி
விட்டான்!

அவர்கள் தர்க்கத்தில் புலிகளாகி
விட்டனர்  - எப்படியென்றால் :
'குரு ஒரு மனிதர்.
அவர் ஞானமுள்ளவர்.
நாமும் மனிதர்கள், ஆகவே நாமும்
ஞானிகளே!'

விஷயம் விபரீதமாய்ப் போவதற்குள்
தப்பிக்கும் வழியைப் பற்றித் தற்போது
யோசித்துக்கொண்டிருக்கிறார் குரு!


சீடன் : உங்கள் உபதேசங்கள், போதனைகள்
              எதற்குப் பயன்படுகின்றன?

குரு   :  காற்றைத் தூய்மையாக்குவதற்கு!


ஆமையும் முயலும் சந்தித்துக்
கொள்ளலாம், உரையாடலாம்!
ஆனால் சேர்ந்து பயணிக்கலாகாது!
நாளடைவில் முயல் ஆமையின் வேகத்திற்கு
ஈடு கொடுத்துச் செல்ல வேண்டியதாகிவிடும்!


வண்ணத்துப்பூச்சி ஒரு காலத்தில்
கம்பளிப்புழுவாக இருந்தது தான்!
வண்ணத்துப்பூச்சியாக
மாறுவதற்காகவே கம்பளிப்புழு
இருக்கிறது!
இரண்டின் வாழ்க்கையும்
வேறுவேறாயினும்
கம்பளிப்புழுவும் வண்ணத்துப்பூச்சியும்
சந்தித்துக்கொள்ளவும், உரையாடவும்
செய்யலாம்!
அவற்றின் சந்திப்பும், உரையாடலும்
வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து
கொண்டிருக்கும் வாழ்க்கையைப்
பற்றியதாயும்;
கம்பளிப்புழு வாழவிருக்கும்
வாழ்க்கையைப்
பற்றியதாயும் இருக்கும் பட்சத்தில்
அர்த்தமுள்ளதாக அமையும்!
வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து முடித்த
வாழ்க்கையைப் பற்றியதாயும்
கம்பளிப்புழு வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையைப் பற்றியதாயும்
இருக்கும் பட்சத்தில் யாவும்
அனர்த்தமாகிவிடும்!


இனம் இனத்தோடு சேரும் என்றனர்!
ஆனால், ஒவ்வொரு அகந்தையும்
ஒரு தனி இனமே!
இனம் ஒன்றாயினும் மனம் வேறாயின்
இனம் இனத்தோடு எவ்வாறு சேரும்?
ஏனெனில் மனம் மனத்தோடு பொருந்தாது!


சுயமற்ற ஆதி மனிதர்களின்
சமூகத்தில்
சுயம் முளைத்த நவீன மனிதன்
அதிக காலம் தங்கி வாழ இயலாது!
அதே போல,
சுயம் கடந்த அதி நவீன மனிதன்
சுயம் முதிராத நவீன மனிதர்களின்
சமூகத்துடன்
அதிக நேரம் உறவாட இயலாது!


நாம் அருகருகே அமர்ந்து
மௌனமாக இருந்தாலும்
பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்!
நாம் ஒளியாண்டுகள் தொலைவில்
இருந்தாலும்
நம் எண்ணங்கள் உடனுக்குடன்
பரிமாற்றம் செய்யப்படுகின்றன!
ஆனால், அதனால் ஒரு பயனுமில்லை!
நீ உன்னிலும், நான் என்னிலும்
இறுகிக் கொண்டே போகிறோம்!
நீ உன் கருத்திலும், நான் என் கருத்திலும்
உறுதியாக நிற்கிறோம்!
நமது சந்திப்புகள் உன்னையும் சரி
என்னையும் சரி, சிறிதும்
மாற்றுவதில்லை!


ஆமையும் முயலும் சந்தித்துக்
கொள்ளலாம், உரையாடலாம்!
ஆனால் சேர்ந்து பயணிக்கலாகாது!
நாளடைவில் முயல் ஆமையின் வேகத்திற்கு
ஈடு கொடுத்துச் செல்ல வேண்டியதாகிவிடும்!
அதைவிட ஆபத்தானது, ஆமையின்
பாராட்டுகளும், விமர்சனங்களும்
முயலின் வேகத்தை மட்டுமல்லாமல்
அதன் விவேகத்தையும் மட்டுப்படுத்திடும்!
பிறகு முயலும் ஆமையைப்போல் ஆகிவிடும்!
ஆனால், பரிணாமத்தில் ஆமை ஆமையாகவே
இருப்பதில்லை; முயலும் முயலாகவே
இருக்க வேண்டியதில்லை!
இன்னும் மனிதனும் மனிதனாகவே
இருக்க வேண்டியதில்லை!
தொடர்ந்து தன்னைக் கடந்து செல்லும்
விதி அணுத்துகளுக்கும் பொதுவானது!
மரத்திற்கும் மண்ணிற்குமான உறவு
வேர்கள் மட்டத்திலேயே!
மரத்தின் அசலான விழைவு விண்ணைத்
தொடுவதே!
மனிதன் தன் சக-மனிதனோடு
பிணைக்கப் பட்டவனல்ல!
ஒருவன் இன்னொருவனைப்போல
இருக்க வேண்டியதுமில்லை!


மனிதர்களுக்கிடையே
ஒரு சில பரிவர்த்தனைகளைக் கடந்து
சந்திப்பு என்பது நிகழ்வதில்லை
என்பதல்ல பிரச்சினை; அது
தேவையேயில்லை என்பதுதான்
உண்மை!


சிலர் தொடர்பைத்
துண்டித்துக் கொண்டதால்
தப்பித்துவிட்டதாக
எண்ணி சுதந்திரமாக
இருப்பதாக மகிழலாம்!
பிரச்சினையே அவர்களது
விருப்பத்தின் வழி செல்லும்
சுதந்திரம் தான் என்பதை
அவர்கள் உணர்வதில்லை!
தன் விதியைத் தானே
தீர்மானித்துக்கொள்ளும்
வாய்ப்பு உள்ளதால் தான்
அவன் மனிதன்!
இல்லையென்றால் அவனும்
ஒரு விலங்கு தான்!
ஆனால், கிடைத்த வாய்ப்பை
எல்லோராலும் முறையாகப்
பயன் படுத்திக்கொள்ள
முடிவதில்லை!


முச்சந்திச் சந்திப்புகள்
தேநீர்க்கடை சந்திப்புகள்
திட்டமிடப்பட்ட சந்திப்புகள்
இலக்கியச் சந்திப்புகள்
தத்துவச் சந்திப்புகள்
ஆன்மீகச் சந்திப்புகள்
காதல் சந்திப்புகள்
எல்லாச் சந்திப்புகளும்
விபத்துகளே! விபத்துகளாகிப்
போன சந்திப்புகளே!


பிறர் கோபமாகப் பேசினாலும்
நடந்து கொண்டாலும்
ஞானி பொறுத்துக்கொள்ளவும்
சாந்தமாகவும் நடந்து கொள்ள
வேண்டும்!

பிறர் அகந்தை நிலையிலிருந்து
ஆணவமாய் நடந்து கொண்டாலும்
ஞானி பக்குவமாக நடந்து
கொள்ளவேண்டும்!

பிறர் எவ்வளவு தான்
முட்டாள் தனமாகப் பேசினாலும்
நடந்து கொண்டாலும்
ஞானி பக்குவமாக நடந்து
கொள்ளவேண்டும்!

ஞானி தன்னுள் அழித்த
கோபதாபத்தை, அகந்தையை
ஆணவத்தை, அறியாமையை
அஞ்ஞானி தன்னுள்
அழிக்கும் வழியைத் தானே
கண்டுபிடித்திடும் வரை
அஞ்ஞானியை ஞானி சந்திக்காமல்
இருப்பதுதான் ஞானிக்கு
நல்லது!

இல்லாவிட்டால் அஞ்ஞானியின்
அபஸ்வரத்துக்கு  ஞானி ஒழுங்காக
நடனம் ஆட வேண்டும் என்ற
முட்டாள் தனமான கோரிக்கையை
நிறைவேற்றியாக வேண்டும்!


ஒரு பிரதி என்பது
(எவ்வொரு பிரதியும்)
ஒரு பாதையைப் போன்றது தான்
இல்லையா?

ஒரு வரிக்கவிதை என்றாலும்
ஒரு பக்கக்கட்டுரை என்றாலும்
நூறு பக்க நாவல் என்றாலும்
முதல் வரியை வாசிக்கத்
தொடங்கியதும் நாம் அந்தப்
பாதையில் இறங்கி நடக்கத்
தொடங்கிவிடுகிறோம்!
நாம் அப்பிரதியின் கடைசி
வரியை வாசித்து முடிக்கும் போது
அப்பிரதி நம்மை எங்கு கொண்டு
சேர்த்துள்ளது; எத்தகைய உணர்வை
நம்மிடம் தொற்றவைத்தது;
எத்தகைய தாக்கத்தை நம் மீது
உண்டாக்கியது என்பது
முக்கியமில்லையா?

ஒரு கவிஞன், கட்டுரையாளன்
நாவலாசிரியன், எழுத்தாளன்
என்பவன் ஒரு வழிகாட்டி
போலத்தான் அல்லவா?

ஒரு பிரதி அல்லது
கவிதையின் முடிவு
நம்மை பாழும் கிணற்றுக்குக்
கொண்டு சேர்க்கிறதா அல்லது
பசும் சோலைக்குக் கொண்டு
சேர்க்கிறதா என்பதைக்
கண்டு கொள்ளாமல் இருக்க
முடியுமா?

ஒரு வழிகாட்டி அல்லது ஒரு பிரதி
நம்மை எங்குமே கொண்டு
செல்லவில்லை; எந்த செய்தியையும்
சொல்லவில்லை என்றால்
அவன் ஒரு வழிகாட்டியுமல்ல,
அது ஒரு பிரதியுமல்ல!
அப்படிப்பட்டவை தேவையேயில்லை!


எல்லாருடைய போதனைகளும்
காற்றில் கலந்து போனதைப்போல
என்னுடைய போதனைகளும் காற்றில்
கலந்து போவது குறித்து நான் மிக்க
மகிழ்ச்சியடைகிறேன்!
காற்றாவது தூய்மையடையட்டும்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 19.02.2017
----------------------------------------------------------------------------

Sunday, 19 February 2017

"இப்போது நேரம் என்ன?"






"இப்போது நேரம் என்ன?"
என்று தான் கேட்டேன்!
உங்களது கருத்தைக் கேட்கவில்லை!
<>

'மெட்டாலிக்கா' ராக் குழுவின் ஒரு பாடல்:

"சுதந்திரப் பேச்சு, சுதந்திரப்பேச்சு, ஊமைகளுக்கு!
"சுதந்திரப் பேச்சு, சுதந்திரப்பேச்சு, ஊமைகளுக்கு!
"சுதந்திரப் பேச்சு, சுதந்திரப்பேச்சு, ஊமைகளுக்கு!
"சுதந்திர  'Fucking' பேச்சு!

<>

செவிடர்களின் ராஜ்ஜியத்தில்
ஊமைகளுக்கு முழுப் பேச்சு சுதந்திரமாம்!
உண்மையை ஊமையாக்கி,
உரக்கப் பேசும் பொய்மைகளின் சமூகம்
இப்படியில்லாமல் வேறெப்படியிருக்கும்?
பிணியாளனுக்கு வைத்தியன் வேண்டிய
காலம் மாறி வைத்தியனுக்கு பிணியாளிகள்
மருத்துவம் பார்க்கும் காலமாச்சுடா!
இதயத்தின் நிறைவினால் வாய் பேசினால்
அது அர்த்தம்!
தலை கனத்துப்போனதால் வாய் பேசுவது
விபரீதம்!

<>

உமது கருத்து என்பது என்ன?
அதன் நீள அகல உயரம் என்ன?
அதன் தோற்றுவாய் எது?
உம்மிடம் எண்ணம் இருந்தாலும்,
இல்லையென்றாலும் சூரியன் உதிக்கும்!
கோள்கள் தத்தம் பாதையில் வலம் வரும்!
உமது கருத்தை உமது இயல்பூக்கிக்களும்
மதிப்பதில்லை!
உமது கருத்துகளை உருவாக்குவதும்
உண்மையில் அவையே!
உமது விருப்பம் என்பது உன்னுள்
உயிர்த்திருக்கும் விலங்கின் கட்டளைகள் தானே!
உமது கருத்தால் ஒரு சிறு அணுவையாவது
உன்னால் மாற்றியமைக்க முடியுமா?
உமது எண்ணங்கள் உலகப் பொருட்களின்
பிரதிபலிப்புகள் தானே!
தன் நிஜத்தைத் தேடிச்செல்லும் பிரபஞ்சம்
ஒரு தற்காலிக நிஜம் எனில்
அதன் பிரதிபலிப்பான உம் எண்ணங்களால்
என்ன பயன்?
உமது அபிப்பிராயம் என்பதென்ன?
சமூகத்தை பிளவுபடுத்தும் கூருளியல்லவா!
உமது அபிப்பிராயமும், உமது சக மனிதர்களின்
அபிப்பிராயங்களும் முரண்படுகையில்
ஒட்டு மொத்தமாக நீங்கள் எங்கே போய்ச்சேர்வீர்?
உமக்கென்று நோக்கம்  ஏதும் உள்ளதா?
உம்மைச் செலுத்தும் இச்சைகளுடையதைத் தவிர!
உமது கருத்துகளால் புனையப்பட்ட சிலந்தி வலை
போன்றதே உமது சுயமும், உமது சுருங்கிய உலகமும்!
அதன் மையத்தில் ஒரு சிலந்தி போலச் சிறைப்பட்ட நீர்
'கருத்து சுதந்திரம்',  'பேச்சு சுதந்திரம்' பற்றி
முழங்குவதென்ன?
அனைத்துக்கருத்துக்களிடமிருந்து விடுபவது தானே
உண்மையான சுதந்திரம்!
அர்த்தமில்லாமல் சுதந்திரமாகப் பிதற்றுவதனால்
என்ன பிரயோசனம்?

<>

• "நான் என்ன நினைக்கிறேன் என்றால்..."

*   அட, நீர் நினைத்து என்ன ஆகப்போகிறது?

• அப்படியானால், என் கருத்தைச் சொல்லவேண்டாமா?

*   உம்முடைய கருத்து வேண்டாம், உண்மையைச்
    சொல்லுங்கள், போதும்!

• அப்படியானால், என் கருத்தில் உண்மை இல்லை
     என்கிறீர்களா?

*    உண்மையை நீர்  அறிந்திருந்தால் உம்மிடம் கருத்து ஏதும்
      இருக்காது! உண்மை கருத்துக்களால் ஆனதல்ல!

• அப்படியானால், நீங்கள் சொல்வது உங்களுடைய கருத்து
     இல்லையா?

*   நான் சொன்னதின் உண்மையைப் பார்த்தீரெனில் அது
    கருத்து இல்லை! நான் சொன்னதை என் கருத்தாகப் பார்த்தால்
    அது உண்மையாகத் தெரியாது!

• அப்படியானால், நான் உண்மையை அறிந்திருக்கவில்லை
     என்கிறீர்களா?

*   உமது சந்தேகமே அதன் நிரூபணம் !

• அப்படியானால், நான் எதுவும் பேசக்கூடாதா? கேட்கக்கூடாதா?

*   பேசலாமே, ஆனால், அறிந்தவற்றை மட்டும்!  கேட்கலாம்,
    முன்-முடிவுகள் இல்லாத, சார்பு நிலை தழுவாத,  உண்மையான
    உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்கலாம்!
    அறியாதவற்றை உங்களது கருத்துக்களைக்கொண்டு எட்ட
    முடியாது! சிந்திப்பது என்பது நேரடியாக உண்மையைக்
    காண்பதற்காக வழியில் உள்ள தடைகளை நீக்குவதே!
    ஆகவே, அறியாதவற்றைப்பற்றி நீங்கள் கருத்து  எதுவும்
    சொல்ல முடியாது!

• நீங்கள் சொல்வது புரியவில்லை!

*   புரியவில்லை என்று சொல்வது உண்மையின் தோல்வியல்ல!
    உம்முடைய தோல்வியும், உம் அறியாமையின் வெற்றியுமாகும்!

• அப்படியானால், நாங்கள் என்ன செய்வது?

*   நீங்கள் செய்வதற்கு எதுவுமில்லை! உண்மையை ஏற்றுக்
    கொள்ளுங்கள்! ஆம், உங்களைப் பற்றிய உண்மையும்
    சேர்த்துத்தான்!

•  !??

<>

"இப்போது நேரம் என்ன?"
என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
உங்களிடம் கடிகாரம் இல்லையெனில்,
"தெரியவில்லை, என்னிடம் கடிகாரம் இல்லை"!
என்றுதானே கூறுவீர்கள்!
ஆக, உண்மையை நீங்கள் அறியாத பட்சத்தில்
அது பற்றி கருத்து சொல்ல என்ன இருக்கிறது?

<>

மா.கணேசன்/ நெய்வேலி/ 18.02.2017
----------------------------------------------------------------------------

Saturday, 18 February 2017

இயற்கையுலகிலிருந்து மனிதன் தனித்தவனா? (பகுதியும் முழுமையும் பற்றிய பிரச்சினை)



               •••
            பரிணாம (மாற்ற)த்திற்கு உட்பட்டதொரு நிஜம்
            தொடக்கத்திலிருந்தது போல
            இடையிலும், இடையிலிருப்பதைப்போல
            இறுதியிலும் இருப்பதில்லை!
               •••
இயற்கையுலகிலிருந்து மனிதன் தனித்தவனா? அதாவது, இயற்கையுலக
மும் மனிதனும் வேறு வேறா? இக்கேள்வி சிந்தனை தொடங்கிய திலிருந்து
இன்றுவரை தொடர்ந்து நீடித்துவரும் பகுதியும் முழுமையும் பற்றிய பெரும்
(தத்துவப்) பிரச்சினையாகும்.

ஒருவகையில், மனிதன் இயற்கையுலகிலிருந்தும், இப்பிரபஞ்சத்திலிருந்தும்
தனித்தவனல்ல! அவனது பரிணாமத் தோற்றத்தினடிப்படையில் அவன்
பிரபஞ்ச இயற்கையின் ஒரு பகுதியே ஆவான்.

இன்னொரு வகையில், அவனது பரிணாம உட்பொதிவு, மற்றும் ஒட்டு
மொத்த பரிணாமத்திட்டத்தின் நோக்கிலிருந்து காணும் போது, மனிதன்
இயற்கையுலகின் முக்கியத்துவமற்ற ஏதோவொரு பகுதியோ அல்லது நிரந்
தரமானதொரு  பகுதியோ  அல்ல! இப்பார்வையின் கடை முனையிலிருந்து
காண்கையில், இயற்கையுலகம், பிரபஞ்சம் என்பது மனிதனின் பகுதியாக
மாறிவிடுவது அவசியமாகும்! எவ்வாறு கம்பளிப்புழுவானது வண்ணத்துப்
பூச்சியாக மாறிய பிறகு, அக்கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியின் பகுதி
யாக மாறிவிடுகிறதோ அவ்வாறு!

இவ்விடத்தில், இயற்கையும் மனிதனும் வேறு வேறு அல்ல என்று பழம்
தத்துவம் பேசுபவர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் என்னவென்
றால், இயற்கையும் மனிதனும் நிச்சயம் வேறு வேறு தான்! ஏனெனில்,
மனிதனே தற்போதைய "புதிய இயற்கை"யாவான்! மேலும், அவனே இயற்
கையின் உள்ளார்ந்த விழைவை உணர்ந்து பிரதி நிதித்துவம் செய்பவனும்,
அவ்விழைவு சுட்டும் இலக்கை நிறைவேற்றக் கூடியவனுமாக இருக்கிறான்!
மனிதனை "மூன்றாம் இயற்கை",  அல்லது "மூன்றாம் பிரபஞ்சம்" என்று
அழைப்பதே மிக்கப் பொருத்தமானதாகும்! அதாவது பௌதீகச் சடப்பொரு
ளாலான தொடக்க நிலை பிரபஞ்சத்தை நாம் "முதலாம் இயற்கை", அல்லது
"முதலாம் பிரபஞ்சம்" என்று அழைப்பது தான் முறையாகும்! ஏனெனில்,
பௌதீகச் சடப்பொருளானது ஒரு கட்டத்தில் உயிர்-ஜீவியாக எழுந்து விட
வில்லையா? ஆம், உயிர்-ஜீவியின் (அல்லது உயிரியல்) கோளம் தான் அந்த
"இரண்டாம் இயற்கை", அல்லது  "இரண்டாம் பிரபஞ்சம்" ஆகும்! உயிர்த்
தோற்றத்தை அடுத்து, மனிதஜீவியுடன் தொடங்கிய  உணர்வியல் கோளம்
தான் நாம் குறிப்பிடும் அந்த "மூன்றாம் பிரபஞ்சம்" அல்லது "மூன்றாம்
இயற்கை"யாகும்! இயற்கையானது பண்பு ரீதியாக, சடமாகத்தோன்றி,
உயிராக எழுந்து, தற்போது மனிதனாக, மனிதனுள் உணர்வாகவும் உயர்ந்
துள்ள இந்நிலையில், எங்கிருக்கிறது இயற்கைவாதிகளும், பொருள்முதல்
வாதிகளும், இன்னும் விஞ்ஞானிகளும் சொல்லுகிற அந்த ஆதி இயற்கை!
தன் இறுதி இலக்கை அடையும் வரை தொடர்ந்து பண்பு ரீதியாக மாற்றம
டைந்து செல்வது தான் இயற்கையின் இயற்கை (இயல்பு) ஆகும்! தற்போது
இயற்கை  எப்பண்பு நிலையை எட்டியுள்ளதோ அப்பண்பைக் கொண்டு
தான் இயற்கையானது சுட்டப்படவும், குறிக்கப்படவும் வேண்டும்!

'லிபரேஷன் அன்லீஷ்ட்' குழுவினர் போன்ற பலர், இந்த உலகத்தின் இயற்
கையிலிருந்து நாம் தனித்தவர்கள் என்ற மாயையிலிருந்து விடுபட
வேண்டும் . . . என்பதாக புதிதாக,  'தலை கீழ்' தத்துவம் பேசி வருகிறார்கள்!
ஆனால், உண்மையில், மனிதஜீவிகளாகிய நாம் இயற்கையிலிருந்தும்,
பிரபஞ்சம் என்பதிலிருந்தும், தனித்தவர்கள், வேறுபட்டவர்கள் மட்டுமல்ல;
இன்னும் நாம் அசலான மனிதன் என்பவனிலிருந்தும் வேறுபட்டவர்களே!
அதாவது நாம் இன்னும் அசலான மனிதனாக எழவில்லை என்பதுதான்
உண்மை நிலையாகும்! ஆகவே, நாம் விடுபடவேண்டுமெனில், அது,
'மனிதனும் இயற்கையும் வேறு வேறு அல்ல' எனும் சிறு பிள்ளைத்தனமான
பிணைப்பிலிருந்தும், அறியாமையிலிருந்தும்தான் அவசரமாக விடுபட்டாக
வேண்டும்!

ஏனெனில்,மனிதன் இயற்கையுலகிலிருந்து  தனித்தவன் மட்டுமல்ல!அவன்
இன்னும் தனது மிகவும் மட்டுப்பாடான தற்போதைய  நிலையிலிருந்தும்
வேறுபட்டவனாவான்! தற்போதைய மனிதன் உண்மையான மனிதனின்
நிழல் போன்றவனே!

மனிதன் இயற்கையுலகிலிருந்து தோன்றியவன் எனக்காண்பது அவனைப்
பற்றிய மேலெழுந்தவாரியான உண்மையே தவிர, அதுவே முடிவான இறுதி
உண்மையல்ல! ஏனெனில், இயற்கையுலகின் ஒரு விசேடமான "அவதாரம்"
தான் மனிதன்! இதன் அர்த்தம், பிரபஞ்சம் அல்லது இயற்கையுலகம் தான்
பரிணாமம் எனும் வழிமுறையின் மூலமாக மனிதனாக மாறியுள்ளது!
அதாவது, மனிதன் என்பவன் பிரபஞ்சத்தின் புதியதொரு வடிவமாவான்.
இவ்வகையில், மனிதன் வேறு பிரபஞ்சம் வேறு அல்ல! அதே வேளையில்,
பிரபஞ்சப் பரிணாமம் மனிதன் எனும் புதிய வடிவத்துடன் நிறைவடைந்து
விடுவதில்லை! மாறாக,மனிதனையடுத்த, அல்லது மனிதனைக்கடந்த ஒரு
இறுதி வடிவத்தை அடையவேண்டியுள்ளது! இந்த அரிய, இறுதி மாற்றத்தை,
உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும்தான் தன்னுள் கொணர்ந்திடவும்,
நிகழ்த்திடவும் வேண்டியுள்ளது! ஆம்,தொடர்ந்து தன்னை மறுகண்டுபிடிப்பு
செய்பவனே, தொடர்ந்து தன்னை மறு உருவாக்கம் செய்பவனே மனிதன்!

நதியானது தனது முழுமையை, இலக்கு நிலையை அடையும் போது அது ஒரு
நதியாக இருப்பதில்லை!அவ்வாறே, மனிதனும் தனது  முழுமையை, இலக்கு
நிலையை அடையும் போது மனிதனாக இருக்கவியலாது!

இயற்கையிலிருந்து தோன்றியவனே மனிதன் என்றாலும், அவன் இயற்கை
யை மீறிச் செல்லும் இயற்கையை, பேரியற்கையைச் சேர்ந்தவனாவான்!
மேலும், இயற்கை சுய-உணர்வு பெற்றிடும் போது அது தொடர்ந்து பழைய
இயற்கையாக இருப்பதில்லை! அதாவது, இயற்கை மனிதனாகி, மனிதனுள்
உணர்வாகிடும் பட்சத்தில், மனிதன் என்பவன் சுய-உணர்வு பெற்ற புதிய
வகை இயற்கையாவான்! அதாவது, இயற்கையின் உள்ளார்ந்த இயற்கை
யின்படி (இயல்பின்படி), இயற்கையானது இயற்கையாகவே இறுதிவரை
தொடரவோ, நீடிக்கவோ இயலாது! ஏனெனில், இயற்கை என்பது மாறாத
இயற்கை அல்ல; மாறாக, அது  தொடர்ந்து வளர்ந்து தம்மைத்தாமே கடந்து
செல்லக்கூடிய, பண்பு ரீதியான மாற்றத்திற்கு உட்பட்டதொரு  பரிணாம
நிஜமாகும்!

இயற்கை, உலகம், பிரபஞ்சம்  என அதை எவ்வாறு அழைத்தாலும், பிரதான
மாக  அது ஒரு ஒப்பற்ற இலக்கைக் குறிவைத்து முன்னேறிச்செல்லும் ஒரு
பரிணாம இயக்கமாகும். அது தன் அர்த்தத்தை, தனது நீடித்த இருப்பிலிருந்
தல்லாமல் தனது அந்த ஒப்பற்ற இலக்கை அடைவதிலிருந்தே பெறுகிறது!
ஆக,மனிதன் உட்பட பிரபஞ்சத்தின் வெவ்வேறு பகுதிகளும் அந்த ஒப்பற்ற
இலக்கை அடைவதற்கான கருவிகளாக தத்தம் பங்கு பணியை ஆற்றுவதற்
கென உருவான பிரபஞ்சத்தின் நீட்சியும் வளர்ச்சி நிலைகளுமே யாகும்!

பகுதியும் முழுமையும் பற்றிய பிரச்சினையில், பலர் இயற்கையுலகை,
பிரபஞ்சத்தை ஒரு முழுமையெனக் கருதிக்கொண்டு தங்களது வாதங்களை
முன் வைக்கிறார்கள். ஆனால், அது ஒரு முழுமை அல்ல; அது பலவித பகுதி
களைத் தம்முள் கொண்டஒரு அமைப்பு மாத்திரமே! உண்மையில், உலகம்,
பிரபஞ்சம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு இயக்கமும் ஆகும்.
அந்த இயக்கத்தை  நாம் பரிணாமம் என்கிறோம். அதாவது, பிரபஞ்சம்
என்பது நிலையானதும், முழுமையானதுமான ஒரு அமைப்பு அல்ல. மாறாக,
அது முழுமையை நோக்கிச் செல்லும் ஒரு இயக்கம் ஆகும்!

அடுத்து, உலகம் எனும் அமைப்பை ஒரு முழுமையெனக்கொண்டால், அதன்
பகுதிகள் யாவும் ஒரேமாதிரியாகவோ,ஒரே தரத்திலமைந்ததாகவோ, இருப்
பதில்லை. ஒரு கடிகாரத்தைப்பொறுத்தவரை, சந்தேகமின்றி அதை ஒரு
முழுமையான அமைப்பு என்று சொல்லலாம். ஆனால், அதே வேளையில்,
அக்கடிகாரத்தின் அனைத்துப்பகுதிகளும் ஒரே மாதிரியாக இருந்தால், அது
ஒரு கடிகாரமாக, நேரம் காட்டும் கருவியாக இயங்கவியலாது!

அடுத்து, எவ்வொரு அமைப்பைப் பொறுத்தவரையிலும், அதன் பகுதிகள்
அந்த அமைப்பை (முழுமை) யும், அம்முழு-அமைப்பு அதன் பகுதிகளையும்
சார்ந்திருப்பது என்பது தவிர்க்கவியலாததாகும். நாம் இடம்பெறும்(வாழும்)
இப் பிரபஞ்சம் எனும் அமைப்பைப் பொறுத்தவரை, நாம் அதன் பகுதிகளே
என்றாலும்,நாம் ஏதோ அதன் முக்கியத்துவமற்ற சாதாரணபகுதிகள் அல்ல!
மேலும், ஒரு மனித இனம் அல்லது மனித சமூகம் என்கிற வகையில்,  நாம்
அனைவரும் ஒரு உருப்படியோ, அல்லது ஒரு படித்தானவர்களோ அல்ல.
மாறாக, ஒவ்வொரு தனிமனிதனும் இப்பிரபஞ்சத்தின் முழுமையாக ஆகக்
கூடியவனும், இப்பிரபஞ்சத்தை முழுமைப்படுத்தக்கூடிய பிரதிநிதியும்
ஆவான்!  எவ்வாறு ஒரு மரத்திற்கு, கிளைகள், சிம்புகள், இலைகள், பூக்கள்,
பிஞ்சுகள், காய்கள் என பல பகுதிகள் இருந்தாலும், அம்மரத்தின் முழுமை
யைப்பிரதி நிதித்துவம் செய்யக்கூடியதாக, அதாவது, கனியாகக்கூடியதாக
அதன் ஒவ்வொரு பிஞ்சும் காயும் பிரத்தியேகமான பகுதியாக விளங்கு
கிறதோ அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் பிரபஞ்ச விருட்சத்தின் முழுமை
யைக்குறிக்கும் கனியாக மாறக்கூடியவனாக விளங்குகிறான்!

இவ்விடத்தில் நாம் தெளிவாகப்புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்ன
வெனில், ஒரு கடிகார அமைப்பின் முழுமை என்பது வேறு; பிரபஞ்ச அமைப்
பின்முழுமை என்பது வேறு!சரியாக இயங்கக்கூடிய ஒரு கடிகாரஅமைப்பை
நாம் ஒரு முழுமை என்று கொள்ளலாம்; ஒரு கடிகாரத்தைப்பொறுத்தவரை
அதன் பகுதிகள் இல்லாமல் முழுமை இல்லை;மேலும்,பகுதியும் முழுமையும்
பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன எனலாம். இதையே பிரபஞ்ச
அமைப்புக்கும் நாம் பொருத்திக் கூறலாம். ஆனால், ஒரு கடிகாரத்தைப்
போலல்லாமல், பிரபஞ்சஅமைப்பு என்பது வளரக்கூடிய,பரிணமிக்கக்கூடிய
தொரு அமைப்பு ஆகும். பிரபஞ்சமானது மனிதனாகப்பரிணமித்து, மனித
னின் உள்ளேயும், ஊடாகவும் சென்று தன் இலக்கு நிலையான முழுமையை
அடையும் போது அந்நிலையில், பிரபஞ்சமும் இருப்பதில்லை, மனிதனும்
இருப்பதில்லை!  மாறாக, பிரபஞ்சம், மனிதன் எனும் இரண்டு மெய்ம்மை
களும் முழுமை எனும் ஒருமையில் கரைந்து, இறுதியான அந்த  மெய்ம்மை
யோடு மெய்ம்மையாகக் கலந்து விடுகின்றன!

ஆகவே, இனியும், மனிதனை, பிரபஞ்சத்தின் முக்கியத்துவமற்ற ஏதோ ஒரு
பகுதியாகக் குறைத்துக்கூறுவது என்பது பொருத்தமற்றதும்,அறியாமையின்
வெளிப்பாடுமே ஆகும்! இன்னும், மனிதன் என்பவன் பலவகை உயிரினங்
களில் அவனும் ஒரு உயிரினமோ, அல்லது ஒரு விலங்கு ஜீவியோ அல்ல!
மனிதன் அவனது சாரத்தில் ஒரு உணர்வேயாவான்.  இன்னும் சொல்லப்
போனால், மனிதன் என்பவன் உடல் எனும் விலங்குஜீவியினுள் தற்காலிக
மாகத்தங்கி வாழும் முற்றிலும் வித்தியாசமானதொரு மெய்ம்மை ஆவான்!

மேலும், பண்பு ரீதியாக,  இயற்கை அல்லது பிரபஞ்சம் அடைய வேண்டிய
இலக்கு நிலையான இறுதி மாற்றத்தைப்பொறுத்தவரை அவை மனிதனை,
ஒவ்வொரு தனி மனிதனையுமே சார்ந்திருக்கிறது!

ஆகவே,பிரபஞ்ச இயற்கை,மனிதன், இவ்விரண்டுக்கும் பொதுவான இலக்கு,
என இம்மூன்றும் ஒரே பரிணாம நிகழ்வுமுறையின் வெவ்வேறு நிலைகளை,
கட்டங்களைக் குறிக்கும் மெய்ம்மைகளே! மேலும், பரிணாம நிகழ்வுமுறை
யானது இறுதிக்கட்டத்தை,நிலையை அடையும்போது அங்கே இயற்கையோ,
பிரபஞ்சமோ, இன்னும் மனிதனோ எதுவும் இருக்காது! இறுதி மெய்ம்மை
மட்டுமே இருக்கும்! அந்த இறுதி மெய்ம்மையை ஒவ்வொரு மனிதனும்
நேரடியாக உணர்ந்தடைய முடியும்! அவ்வாறு உணர்ந்தடையும் போது
நீங்கள் ஒவ்வொருவரும் அம்மெய்ம்மையை என்ன பெயர் வைத்து வேண்டு
மானாலும் அழைத்துக் கொள்ளலாம்!


மா.கணேசன்/ நெய்வேலி/  15.02.2017
----------------------------------------------------------------------------


Wednesday, 15 February 2017

எதற்காக வந்தோம் பூமிக்கு?




இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.

இது தமிழின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான நகுலன் அவர்களின்
"கோட்ஸ்டாண்ட் கவிதைகள்' தொகுதியில் இடம்பெற்ற ஒரு கவிதை யாகும்.

'இக்கவிதையை பெரும்பாலான வாசகர்கள் நிலையாமையின் துக்கமாகவே வாசித்திருக்கிறார்கள். சில மரணங்களுக்கு உதாரணமாகவும் இந்தக்
கவிதை காட்டப்பட்டுள்ளது.'  என்பதாக   ஷங்கர்ராமசுப்ரமணியன்-ன்,
"இல்லாமல் இருப்பதன் இனிமை" என்ற தலைப்பில்,  தமிழ் இந்து நாளிதழ்,
12.02.2017, ஞாயிறு அன்று வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், நாம் இக்கவிதையை, வெறும் கவிதையாகப் பார்க்காமல், தத்துவ
சிந்தனைக்கான ஒரு பயிற்சியாக விரித்துப் பார்க்கப்போகிறோம். ஆகவே,
இந்தக்கட்டுரை,நகுலனின் கவிதைமீதான விமர்சனமோ,பொழிப்புரையோ
அல்ல என்பதை நினைவில் கொண்டு மேலே செல்வோம்.

"இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்." எனும் இக்
கவிதை வரி ஒற்றை வாக்கியம்தான் என்றாலும், நமது சிந்தனை வெளியில்
அது ஒரு பெரும் பிரபஞ்சமாக விரிவடையக்கூடியதாக உள்ளது.

இக்கவிதை வரி, இரண்டு கூற்றுகளின் இணைவாக உள்ளது. முதல் கூற்று, "இருப்பதற்கென்றுதான் வருகிறோம்" என்று சொல்கிறது. ஆனால்,உண்மை
யில், நாம் இங்கு பூமிக்கு 'இருப்பதற்கென்றுதான் வருகிறோமா?' என்றால்,
ஆம், இல்லை; இரண்டும் தான் என்று சொல்லவேண்டும்! ஆம், சில காலம்
மட்டுமே இருப்பதற்காக வருகிறோம்! இல்லை, சாசுவதமாகவோ, நிரந்தர
மாகவோ  இருப்பதற்காக இங்கு வரவில்லை!

பொதுவாக, கவிதை வாசிப்பில் உள்ள பிரச்சினை, கவிஞன் கூறிய வரிகளை
சிந்திக்காமல் அப்படியே எடுத்துக்கொள்வதில் தான் அடங்கியுள்ளது என
லாம்! கவிஞன் தனக்கு ஏற்பட்ட தாக்கத்தை வாசகர்களுக்குத் தொற்ற
வைக்கும் வகையில், சில வரிகளைப்போடுகிறான்; அது பலரது விஷயங்க
ளில் ஏடாகூடமாக ஆகிவிடுகிறது! இதற்கு, ஒருவகையில், கவிஞனும்,
கவிதை பற்றிய பொதுவான கோட்பாட்டும், இன்னும் கவிதைப்பார்வையும்
தான் காரணம்!

அப்படியானால், "இருப்பதற்கென்றுதான் வருகிறோம்" என்ற கூற்றை நாம்
அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், நாம் இங்கு வருவதற்கு
முன் எங்கிருந்தோம், எவ்வாறிருந்தோம், இங்கு எதற்காக வந்தோம் என்பன
போன்ற கேள்விகளைக்கேட்டு  சிந்தித்து அவற்றுக்கான பதில்களைப்
பெற்றாக வேண்டும்! அதாவது, "எதற்காக நாம் பூமிக்கு வந்தோம்?" என்ற
கேள்வி அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், இக்கேள்விக்கான
சரியான பதிலைப் பொறுத்தே நம்முடைய வாழ்வும், அதன் அர்த்தமும்,
சிறப்பும், முக்கியத்துவமும்; நம்முடைய மரணத்தின் தன்மையும் அமையும்!

இப்போது, நாம் நகுலனின் கவிதை சுட்டிய அதே பிரச்சினையைச் சுட்டுகிற
வேறு சில சிந்தனை வரிகளை என்னுடைய "கடைசியாக நீங்கள் எப்போது
இறந்தீர்கள்?" எனும் தொகுப்பிலிருந்து எடுத்துக்காண்போம்.

     இல்லாமலிருந்தோம்!
     பிறப்பு எனும் கதவின் வழியாக
     இருப்பு பெற்றோம்!
     இறப்பு எனும் கதவின் வழியாக
     மீண்டும் இல்லாமல் போகிறோம்!
     அதற்கு ஏன் இவ்வளவு ஒப்பாரி?*

கவிதை வரிகளைப்போலத்தெரியும் இவை உண்மையில் கவிதைகள் அல்ல!
அதாவது இவ்வரிகளை கவிதை போல மட்டும் வாசிப்பது போதாது, இவ்வரி
களைக்கொண்டு சிந்திக்கவும், தியானிக்கவும்(Contemplation)வேண்டும்!
எவ்வொரு கூற்றையும், விஷயத்தையும், கருத்தையும், கோட்பாட்டையும்
சிந்திக்காமல் அப்படியே எடுத்துக் கொள்வது என்பது தவறான புரிதலுக்கும்,
முடிவுகளுக்கும் இட்டுச் செல்வதாக அமைந்துவிடும்.  

அதாவது, "இருப்பதற்கென்றுதான் வருகிறோம்"  என்ற கூற்றை அப்படியே
எடுத்துக்கொண்டு, அடுத்த கூற்றான "இல்லாமல் போகிறோம்" என்பதை
இணைத்து வாசிக்கும் போது, ஷங்கர்ராமசுப்ரமணியன் குறிப்பிட்டவாறு,
'நிலையாமையின் துக்கம்' மட்டுமே நமது அனுபவமாக, வாழ்க்கை தரும்
பரிசாகத் தெரியும்!

"இருப்பதற்கென்றுதான் வருகிறோம்" என்பது நமது பிறப்பைக்குறிக்கிறது.
அதாவது, " பிறக்கிறோம்" என்ற சொல்லுக்குப் பதிலாக, "வருகிறோம்" என்ற
சொல் போடப்பட்டுள்ளது. பிரச்சினை இதில் இல்லை; மொத்தப்பிரச்சினை
யும் "இருப்பதற்கென்றுதான்" எனும் சொற்றொடரில் தான் அடங்கியுள்ளது!
இதில் மறைந்திருக்கும் பிரச்சினை, அல்லது,  'அபாயம்' என்னவென்றால்,
"எதற்காக வந்தோம்?" என்ற கேள்வியை இருட்டடிப்பு செய்ததோடல்லாமல்,
அது குறித்து ஆழமாகச் சிந்திப்பதன் அவசியம், முக்கியத்துவம் ஆகியவற்
றையும் காலிசெய்துவிடுவடுவது தானாகும்! நகுலனும் இவ்விஷயம் குறித்து
ஆழமாகச்சிந்தித்து எழுதியதாகத் தெரியவில்லை என்பதுதான் அவருடைய
வாழ்க்கைப் பார்வையில், புரிதலில் உள்ள பெரும் ஓட்டையாகும்!

இங்கே நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்,
நிச்சயமாக நாம் இங்கே "வருகிறோம்", சில காலம் இருக்கவும் செய்கிறோம்;
ஆனால், சாசுவதமாகவோ, நிரந்தரமாகவோ  "இருப்பதற்கென்று" நாம் வர
வில்லை!அப்படியானால்,பிறகு "எதற்காக வந்தோம்?" என்பதற்கான பதிலை
பிறகு அதற்குரிய இடத்தில் பார்ப்போம்!

இப்போது, வாழ்க்கை குறித்த நமது பார்வை, அணுகுமுறை எப்படியுள்ளது
என்பதைப் பார்ப்போம். நாம் பிறப்பதற்கு முன்பு  இல்லாமலிருந்தோம்! ஒரு
கட்டத்தில், பிறப்பு எனும் கதவின் வழியாக இருப்பு பெறுகிறோம்! ஆனால்,
நாம் பிறப்பதற்கு முன்பு இல்லாமலிருந்தது குறித்து நாம் எவருமே கவலைப்
படுவதோ, துக்கப்படுவதோ கிடையாது! ஆனால், சில காலத்திற்குப்பிறகு,
இறப்பு வரும்போது நாம் இல்லாமல் போகப்போகிறோம் என்பது குறித்து
மட்டும் அஞ்சுகிறோம், கவலைப்படுகிறோம்! இல்லாமலிருந்ததற்கும்,
மீண்டும் இல்லாமல் போவதற்கும், இந்த இரண்டு 'இன்மைக்கும்'   உள்ள
வித்தியாசம் என்ன? ஏன் இந்த முரண்பாடு என்பது குறித்து நாம் யோசிப்ப
தில்லை! ஒருவேளை, சில காலம் நாம் இருந்து இருப்பின் ருசியைச் சுவைத்
ததனால்  தான் இந்தத் தடுமாற்றமா?

இல்லாமலிருந்தோம், திடீரென இருப்புக்கு வருகிறோம், பிறகு மீண்டும்
இல்லாமல் போகப்போகிறோம் என்பதில் உள்ளடங்கியிருக்கும் புதிர் என்ன
என்பதை நாம் ஏன் ஆராய்ந்து கண்டுபிடிக்கக்கூடாது? கொஞ்சகாலம் தான்
நம் புவி வாழ்க்கை என்றாலும், நாம் எதற்காக இங்கே பூமிக்கு வருகிறோம்?
வெறுமனே உண்டு,உறங்கி,இனம்பெருக்கி விலங்கு ஜீவிகளைப்போல, ஏன்,
எதற்காக என்று தெரியாமல் உயிர்-பிழைத்திருந்து பிறகு ஒரு நாள் மாண்டு
போவதற்காகவா? இதன் அர்த்தம் என்ன? சிறிதாயிருந்தாலும், பெரிதாயி
ருந்தாலும் அர்த்தம் ஏதுமில்லாமலா இப்பிரபஞ்சமும், நாமும், எல்லாமும்
தோன்றியிருக்கின்றன?

ஒன்று மட்டும் நிச்சயம், நிச்சயமாக, நாம் இங்கே நிரந்தரமாக இருப்பதற்
கென்று வரவில்லை!அப்படியானால், எதற்காக,எந்த நோக்கத்திற்காக, எந்த
குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக,எந்த இலக்கை அடைவதற்காக நாம்
இங்கு வருகிறோம்? உய்த்துணர்ந்து பார்க்கும் போது, இன்னொன்றும் நிச்ச
யம், அது என்னவென்றால், இறுதியாக  இல்லாமல் போவதற்காகவும் நாம்
இங்கே வரவில்லை!

ஆக, நகுலனுடைய கவிதையில் இடம்பெறும் இரண்டு கூற்றுகளில் இரண்
டாவது கூற்றான "இல்லாமல் போகிறோம்" என்பதும் தவறானதே! ஏனெனில்,
வழக்கமாக, நாம் எண்ணுவது போல :

       பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில்
       அடைபட்ட இருப்பு அல்ல வாழ்க்கை!
       இருப்பை எவ்வாறு உணர்வு கொண்டு
       முழுமைப்படுத்துகிறோம் என்பதே  வாழ்க்கை!*

அதாவது, நாம் இங்கு பூமிக்கு வருவது என்பது, கொஞ்ச காலம் இங்கிருந்து
விட்டு பிறகு மாண்டு மறைந்து போவதற்காக அல்ல! பிரபஞ்சத்தின் படைப்
புத்திட்டம் இதுவல்ல! மாறாக, நாம் இருப்பு பெறுவதென்பது இருப்பிலிருந்து,
மேலுயர்ந்து பேரிருப்புக்குச் செல்வதற்காகத்தான்! எவ்வாறு, "இன்மை",
"இருப்பு"  என்பவை புதிரானவையோ அவ்வாறே "பேரிருப்பு" என்பதும்
புதிரானதே! சில காலம் நாம் இங்கு இருப்பது பேரிருப்புக்குச் செல்வதற்கு
நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்வதற்காகத்தானே தவிர, யாதொரு குறிப்
பிட்ட இலக்கும் இல்லாமல், உயிர்-பிழைத்திருப்பதற்காகவோ,உயிர்-பிழைப்
புக்குரிய பொருட்களை, சொத்துக்களாக எண்ணிக் குவிப்பதற்காகவோ,
சொந்த சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்காகவோ அல்ல! ஏனெனில், பேரிருப்பு,
அல்லது முழுமையான இருப்பு தான் உண்மையான, அழிவில்லாத நிரந்தர
மான சாம்ராஜ்யமாகும்! தேவனின் ராஜ்ஜியம், இரட்சிப்பு, விடுதலை, முக்தி,
மோட்சம், வீடுபேறு, மரணம்கடந்த பெருவாழ்வு,ஞானமடைதல்,நிர்வாணம்
என்று குறிப்பிடப்படுபவையும் இதுவே!

"பேரிருப்பு" என்பது 'இருப்பு', 'இன்மை' இவ்விரண்டையும் கடந்த மெய்ம்மை
யாகும்! இவற்றை சொற்களைக்கொண்டு விளக்குவது கடினம், விளக்கிச்
சொல்ல முடிந்தாலும் அதனால் யாதொரு பயனும் விளையாது! ஏனெனில்,
இவை உணர்வுப்பூர்வமாக நேரடியாக ஒவ்வொருவராலும் உணர்ந்தறியப்பட
வேண்டிய மெய்ம்மை நிலைகளாகும்! இந்நிலைகள் உணர்வு நிலைகளுடன்
சம்பந்தப்பட்டவை என்பதால், 'இன்மை' என்பது முற்றான உணர்வின்மை
யையும், 'இருப்பு' என்பது அரைகுறை உணர்வையும், 'பேரிருப்பு' என்பது
முழுமையான உணர்வு நிலையையும் குறிக்கும் அம்சங்களே எனலாம்!

உணர்வின் சொற்களில் சொன்னால்,முற்றிலும் உணர்வற்ற இன்மை நிலை
யிலிருந்து அரைகுறையாக உணர்வு பெற்ற இருப்பு நிலைக்குள் பிரவேசித்
துள்ள நாம் ஒவ்வொருவரும் உணர்வில் பெருகி உயர்ந்து முழு-உணர்வு
எனும் பேரிருப்பை அடைந்திடும் உணர்வுப்பயணமே "வாழ்க்கை" என்ப
தாகும்!

*காண்க:  "கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்கள்?" முழுதொகுப்பு
  வலைத்தளம் vicharamarg.blogspot.in

மா.கணேசன்/ நெய்வேலி/ 14.02.2017
----------------------------------------------------------------------------

Tuesday, 14 February 2017

உங்கள் உரைகல்லைத் தூக்கி எறியுங்கள்!
















(விசார மார்க்கப் பங்கேற்பாளர்களுக்காக
விசேடமாகச்சொல்லப்பட்டது.)
                                   •••

தங்கத்தின் தரம் அறிய அதை எவரும்
செங்கல் மீது உரசிப்பார்ப்பதுண்டா?
அதற்கென உள்ள உரைகல்லில் தான்
உரசிப்பார்ப்பர் அல்லவா!
ஒவ்வொன்றின் தரம் அறிவதற்கும்
ஒரு உரைகல் உள்ளது!
உங்களது 'விருப்பம்' எனும் உரைகல்
உங்களை உத்தமன் என்றும்
உத்தமனை பொல்லாதவன் என்றும்
மாற்றிச் சொல்லக்கூடும்!
ஆகவே தான் சொல்லுகிறேன்:
உங்கள் உரைகல்லைத் தூக்கி எறியுங்கள்!
இவ்வளவு காலம் நீங்கள் வளராததற்கும்,
முழுமையடையாதிருப்பதற்கும்
காரணம் உங்களது உரைகல் தானாகும்!
                                      •••
அட, உங்களுக்கு இணக்கமாக இருக்கும் வகையிலான தோழமையை,
நட்பை, உங்கள் ஆசிரியரிடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பதன் நோக்கம்
என்ன?

உங்களுடைய வீட்டுப்பாடங்களை நீங்கள் முறையாகச்செய்வதை விடுத்து
அதை இங்கே என் முன்னிலையில் செய்து காட்ட விரும்புவது என்ன?

அட, நீங்கள் நிகழ்த்தும்   எந்த சாதனை, சாகசம், செயற்பாட்டிற்கு என்னை
சாட்சியாக நிற்கவேண்டும் என விரும்புகிறீர்கள், சொல்லுங்கள்?

ஆம், உங்களுடைய பரீட்சார்த்தமான விசாரப்பயிற்சிகளை,சார்புத்தன்மை
கொண்ட உங்களது கருத்துகளை, அபிப்பிராயங்களை, முடிவான உண்மை
களைப்போல நீங்கள் முன் வைப்பதை வரவேற்கவும், பாராட்டவும், ஊக்கு
விக்கவும்  நான் செய்யவேண்டும் என விரும்புவதன் அர்த்தம் என்ன?

அர்ச்சுனன் கிருஷ்ணனின் பிரியமான நண்பனாக இருந்தவரை அவன்
தெளிவடைந்தானில்லை, பக்குவமடைந்தானில்லை! அதாவது, சமமாகப்
பழகினால் ஆலோசனை கிடைக்கலாம்; உபதேசம் கிடைக்காது. தூண்டுதல்
பெறலாம்; "இப்படிச் செய்" என்ற கட்டளை  கிடைக்காது. "எனக்கு அறிவுரை
யோ, தூண்டுதலோ போதாது. எனக்கு ஒரு குரு வேண்டும். அவர் உபதேசம்
எனக்கு வேண்டும். அவர் "இப்படிச் செய்" என்று கட்டளையிட வேண்டும்.
"இதுதான் உனக்கு சிரேயஸ் (நன்மை)" என்று வழிகாட்டுபவர் வேண்டும்
என்றுணர்ந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி கிருஷ்ணனிடம்,
"நான் உங்கள் சீடன். சரணமடைந்த எனக்குப் புத்திமதி கூறுங்கள்" என்று
கூறி அர்ச்சுனன் சரணடைந்தான். அதாவது, அர்ச்சுனன் "நான் உங்கள்
சீடன்." எனக் கூறியதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. "வேறு புகல் எனக்குக்
கிடையாது" என்று மனத்திடத்துடன் கூறினான் என ஸ்ரீமத் பகவத்கீதை -
தத்துவ விவேசனீ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து, சீடர்களாக தானே தேர்ந்தெடுத்த பன்னிருவரிடமும், இனி நீங்கள்
என் ஊழியக்காரர்கள் அல்ல; நீங்கள் என் சிநேகிதர்கள் என்று இயேசுவை
சொல்லவைத்த அந்த அம்சம் எது என்று நினைக்கிறீர்கள், சொல்லுங்கள்?

நட்பையும், தோழமையையும், இணக்கத்தையும்  என்னிடமிருந்து வலிந்து
பெற விரும்பும் நீங்கள் எத்தனை பேருடன் உண்மையில் நட்பில், தோழமை
யில், இணக்கத்தில் இருக்கிறீர்கள்; குறைந்தபட்சம் ஒரே ஒருவருடனாவது
ஆழ்ந்த நட்பில் இருக்கிறீர்களா, சொல்லுங்கள்? நட்பின் இலக்கணம்,
தர்க்கம், விஞ்ஞானம் யாவும் அறிந்தது போல நீங்கள் பேசுவதென்ன?

உங்களுக்குச் சமமானவர்களிடமிருந்து, சகாக்களிடமிருந்து நீங்கள் எதை
யும் கற்றுக்கொள்ளமுடியாது! அவ்வளவு ஏன், உங்களுக்கு இணக்கமாக,
உங்களைவிட வேறு எவர் இருக்கமுடியும்? அத்தகைய உங்களிடமிருந்தே
நீங்கள் கற்றுக்கொண்ட பேருண்மைதான் என்ன, சொல்லுங்கள்? நீங்கள்
ஏன் இவ்வளவு மந்தமாக, உணர்வற்றவர்களாக உள்ளீர்?

ஆகவே, நீங்கள் உண்மையிலேயே சிந்திக்கிறீர்  என்றால், உங்களுடைய
ஆய்வில் குறுக்கிட்ட  உண்மையான சந்தேகங்களைத்  தீர்த்துக்கொள்வதற்
காக இங்கே வாருங்கள்!

இங்கே விசார மையத்தில், என்னிடம் கொண்டுவரப்படும் கருத்துக்களை
யும், கொள்கை கோட்பாடுகளையும் இறுதியானதும், பூரணமானதுமான
ஒரு உரைகல்லில் உரசிப்பார்த்து அவை தவறானவை, அல்லது மட்டுப்பாடா
னவை என ஒதுக்கித்தள்ளிவிடுவதாக நீங்கள் சொல்வதில் என்ன நியாயம்
உள்ளது என நினைக்கிறீர்கள்? ஒரு நியாயமும் இல்லை! தங்கத்தின் தரம்
அறிய அதை உரசிப்பார்க்க ஏதாவது ஒரு கல்லைப் பயன்படுத்துவது முறை
யாகாது; அதற்கென உள்ள உரைகல்லை மட்டுமே பயன் படுத்த வேண்டும்!

ஆம், எவ்வொரு கருத்து, கொள்கை, கோட்பாடு ஆயினும் அவை மிகச்
சரியாக, துல்லியமாக, தெளிவாக, அசலாக, உண்மையாக, மாசில்லாத
பொன் போலவே தான் இருக்கவேண்டும்!

உண்மையில், சராசரி உண்மை, ஏறத்தாழ உண்மை, ஓரளவிற்கு உண்மை
என்றெல்லாம் இருக்கமுடியாது! உண்மை உண்மையாக மட்டுமே இருக்க
வேண்டும்! உண்மை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது எவருக்கும்
இணக்கமாகவோ, நெருக்கமாகவோ; எவரையும் திருப்திப்படுத்தும் வகை
யிலோ,மகிழ்ச்சியூட்டும் வகையிலோ இருக்கவேண்டிய அவசியம் உள்ளதா
என்ன? சொல்லுங்கள்!

உங்களுடைய பேச்சுகளில், கோரிக்கைகளில் அர்த்தம் ஏதுமுள்ளதா என்று
பாருங்கள்! விசாரத்தின் இலக்கு உங்களுக்கு முக்கியமானதாய் இருந்திருந்
தால் இத்தகைய கோரிக்கைகளை நீங்கள் வலியுறுத்துவீர்களா?

உண்மையிலேயே உண்மை மீது உங்களுக்கு நாட்டம் இருப்பின் நீங்கள்
இவ்வாறு பொறுப்பில்லாமல் பேசுவீர்களா?

தனது உண்மையைச் சிறிதளவேனும்  உணர்ந்த நதி தேங்கி நிற்பதில்லை;
மாறாக, பாய்ந்தோடிடும் தனது தன்மையைப் பற்றிச் செல்வதாயிருக்கும்!
ஆகவே, தேங்கிக்கிடக்கும் குட்டையும், பாய்ந்தோடிடும் நதியும் நட்பு
கொண்டாட முடியாது!

உண்மையில் நீங்கள் நட்பை, தோழமையை வேண்டவில்லை, மாறாக,
அங்கீகாரத்தையும், சமமான இருக்கையையும்தான் வேண்டுகிறீர்!

ஆசிரியர் எப்போதுமே சிறந்த ஒரு மாணவனாக கற்றுக்கொண்டேயிருக்
கிறார்; அவர் தொடர்ந்து முன்னேறிச்செல்லும் கற்றலின் அனுபவத்தை தன் மையமாகக்கொள்கிறார்! ஆகவே அவர் அறிவிலும்,தெளிவிலும், பக்குவத்
திலும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்! ஆனால், சிந்தித்தறியாத மாணவர்
களாகிய நீங்களோ உங்களை மையமாகக்கொள்கிறீர்! உயர்-சுயத்தை
வெளிப்படுத்தும் ஒரு கருவியாக அல்லாமல், உங்கள் சுய-புராணத்தை
அரங்கேற்றி மகிழவே விரும்புகிறீர்! அதற்கான களமாக, மேடையாக இந்த
விசார மையம் அமைய வேண்டுமென விரும்புகிறீர், வாதம் செய்கிறீர்!

நீங்கள் எவ்வளவு மொண்ணையாக, உணர்வற்றவராக, நேர்மையற்றவராக,
உண்மையற்றவராக இருந்தாலும் உங்களை நீங்கள் எவ்வாறோ சகித்துக்
கொண்டுவிடுகிறீர், ஏற்றுக்கொண்டுவிடுகிறீர்! ஆனால், அடுத்தவர்கள்
எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் உங்களால் அவர்களை ஏற்றுக்கொள்ள
முடிவதில்லை! பிரச்சினையும், மட்டுப்பாடும் அடுத்தவர்களிடம் இல்லை;
உங்களிடம், உங்கள் அறிவின்மீது நீங்கள் கொண்ட அதீத நம்பிக்கையிலும்,
அவ்வறிவை உரசிப்பார்க்கும் உங்களது உரைகல்லிலும்தான் உள்ளது! அந்த
உரைகல் வேறு எதுவும் இல்லை, அது உங்களுடைய பிரமைகளுக்கு ஆட்பட்ட
"உணர்வு" தான்! ஆகவே, முதலில் பிரமைகளிலிருந்து உங்களது உணர்வை
விடுவியுங்கள்! கருத்தூன்றிச் சிந்தியுங்கள்! சிந்தித்தறியாமல், உணராமல்
எதையும் வெளிப்படுத்தாதீர்! உங்களது சொந்த அபிப்பிராயங்களை,
கூற்றுகளை சீரிய வெளிப்பாடுகள், அரிய உட்-பார்வைகள் என்றெண்ணிப்
பேசாதீர்!

உங்களது பேச்சுத்திறமை, மொழிவளம், விவரிப்புத்திறன் ஆகியவை
முக்கியமானவையல்ல! உண்மையை உணர்ந்தறிவது, உணர்ந்தறிந்ததைப்
பகிர்ந்து கொள்வது மட்டுமே முக்கியமானவையாகும்! எதையேனும் பேசுவ
தற்காக, பொழுதைப் போக்குவதற்காக, உங்கள் அறிவுச் சேகரங்களைக்
காட்டுவதற்காகப் பேசாதீர்! இந்த விசாரச் சிந்தனைப் பள்ளியில், பேச்சுக்
கலைப் பயிற்சியோ, போட்டியோ எதையும் நான் அளிக்கவில்லை! நானோ,
அல்லது உங்களது சக-விசாரப் பங்கேற்பாளார் எவருமோ உங்களுக்குப்
போட்டியாளர் அல்ல! உண்மையான போட்டி உங்களுக்கும் உங்களுக்கும்
தான்! என் அளவிற்கு நீங்கள் சமமாக இல்லை என்பது தேவையற்ற ஒப்பீடு!
உங்கள் அசலான அளவிற்கு நீங்கள் சமமாக இல்லை என்பதுதான் உங்க
ளுடைய உண்மையான பிரச்சினை!

நீங்கள் கேட்டறிந்தவைகளையும், படித்தறிந்தவைகளையும் கொண்டு
கதாகாலட்சேபம் செய்யாதீர். எதிரும் புதிருமான கருத்துக்களை, கோட்
பாடுகளைக்கொண்டு கட்டைப் பஞ்சாயத்து பண்ணாதீர். மொத்தத்தில்,
உண்மையை உணர்வதற்காக எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தையும்
வீணே விரயம் செய்யாதீர்!

நீங்கள் சொல்லவரும் விஷயங்கள், கூற்றுகள் உண்மையானவை, சரியான
வை, முக்கியமானவை என்பதாக எவ்வாறு, எதைக்கொண்டு முடிவுசெய்
கிறீர்கள்! உங்கள் கூற்றுகளை முன்வைப்பதற்கு முன் அவற்றின் துல்லியம்,
தெளிவு, உண்மைத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்!
உங்கள் விருப்பு-வெறுப்பு எனும் உரைகல்லைக்கொண்டு எதையும் முடிவு
செய்யாதீர்கள்! உங்களைப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் அவை
உவப்பாக இருக்கக்கூடும்!

ஆகவே, உண்மையை உரைகல்லாகக் கொள்ளுங்கள்; உண்மைக்குக் குறை
வான எதுவும் குறைபாடுடையதே! உண்மை என்பது உங்களது உணர்வைக்
கடந்த உயர்-உணர்வு, அல்லது முழு-உணர்வே ஆகும்!

உங்களை விமர்சிப்பதோ, குறை கூறுவதோ, குறைத்து மதிப்பிடுவதோ என்
தொழில் அல்ல! மாறாக, உங்களுடைய நெடிய உரைவீச்சும், இழுவையான
சொற்பொழிவும் சாரமான மற்றும் மையமான அம்சம் பற்றியதாக அல்லா
மல் போகும் பட்சத்தில், உங்களது சொல்லாடலில் கவனச்சிதறல் மற்றும்
ஆர்வக்கோளாறின் கூறுகள் இடம்பெற்றுள்ளதை இனம்கண்டு, உங்களது
சிந்தனைப்போக்கை சரியான தடத்தில் திருப்பி விடும் பணியை மட்டுமே
நான் செய்து வருகிறேன்!

ஆகவே,  "விசார மார்க்கம்" எனும்  இந்த "வாழ்க்கைப் பள்ளி" யின் அசலான
நோக்கத்தைப் புரிந்து கொண்டு, விசார-அமர்வுகளில், விசார-பங்கேற்
பாளர்களின் பங்கு, பணி என்ன என்பதை உணர்ந்து செயல்படுவீராக!

மா.கணேசன்/ நெய்வேலி/13.02.2017
----------------------------------------------------------------------------

Sunday, 12 February 2017

ஒவ்வொரு கணமும். . . . .





கடந்து  போகும்  ஒவ்வொரு  கணமும்  வாழ்வதற்கான  கணமே!
தவற விடப்படும் ஒவ்வொரு கணமும், விழிப்பதற்கான கணமே!
புரிந்து கொள்வதற்கு  பிரபஞ்சம் நிறைய விஷயங்கள் உள்ளன!
ஆனால், அனைத்தையும் புரிந்து கொள்ளும் அம்சம் ஒன்று தான்!
ஆகவே நீ உடனே உன்னை ஒன்றுதிரட்டி உன் ஒருமையை எட்டிடு!
ஆரம்பமாய், பிரபஞ்ச-விபத்தின் தொடர்ச்சியாய், நீளும்பயணமாய்,
கல்லாய், புல்லாய், புழுவாய், மனிதப் பிராணியாய் இருப்பதைவிட
முதலும் முடிவுமான நிகழ்வாய் முழு-விழிப்பாய் மலர்வது மேன்மை!

விழிப்பைத் தவிர பிறவனைத்தும் விபத்து போன்றவையே!
தூண்டுதலுக்குப் பதிலளிக்கும் உணர்வற்ற பிராணியா, மனிதா நீ?
தேவைகளைக் கடந்து பார், வாழ்வின் முழுமை தெரியும்!
எந்தத் தேவை வாழ்வின் அர்த்தத்தை வெளிப்படுத்தும்?
வாழ்வின் அர்த்தத்தை வெளிப்படுத்தும் தேவை எதுவுமில்லை!
ருசிமிகு உணவு  பசியைப் போக்கி உயிர்-பிழைத்திட உதவும்!
உடை உன் அம்மணத்தையும் அறியாமையையும் மட்டுமே மறைக்கும்!
வசதியாக நீ வசித்த வீடு நீ செத்ததும் உனை வாசலில் கிடத்திடும்!

மனிதா! உயிர்-பிழைத்தல் என்பது உண்மையான வாழ்தலாகுமா?
உயிர்-பிழைக்கக் காரணமோ, நோக்கமோ தேவையா, என்ன?
ஆனால், உண்மையில் வாழ காரணம், குறிக்கோள், இலக்கு அவசியம்!
வாழ்க்கை என்ன,  நீ நினைப்பதுபோல் உன் சொந்த விவகாரமா?
அது ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியதோர் முழுமை!
நீ அதன் ஒரு பகுதியாக தோன்றியிருக்கிறாய் என்பது ஒரு ஆரம்பமே!
ஒரு பகுதியாகவே இருந்து உதிர்வதும், கனிந்து முழுமையாவதும்
வாழ்க்கை பற்றிய உனது புரிதலின் முழுமையைப் பொறுத்ததாகும்!

உனது ஆர்வம் சிறிதாயிருந்தால் சிறிதளவே நீ புரிந்து கொள்வாய்!
உனது ஆர்வம் பெரிதாயிருந்தால் முழுவதுமாகப் புரிந்து கொள்வாய்!
ஆர்வத்திற்கேற்ப உணர்வும், உணர்வுக்கேற்ப புரிதலும், புரிதலுக்கேற்ப
வாழ்க்கையின் தன்மையும், உயர்வும், முழுமையும், உய்வும் வாய்க்கும்!
வாழ்க்கை ஒரு பயணமெனில், பயணத்தின் அர்த்தமும், முழுமையும்
அடையப்படும் உரிய இலக்கு நிலையில் மட்டுமே அடங்கியுள்ளது!
இலக்கறியாத பயணமும், இயக்கமும், வாழ்க்கையும் அர்த்தமற்றவையே!
ஆகவே, மனிதா! உன் பயணத்தைத் தொடரும் முன் இலக்கறிந்திடு!

மனிதா, இடைவழிப்பயன்கள் கருதி  இறுதிப்பயனைத்  தவறவிடாதே!
பிழைப்புக்கான பயன்களைத்தேடி பிறவிப்பயனை இழந்திடாதே!
மனிதா, முதல் காரணமல்ல, முடிவான விளைவாக மலர்வதே முக்கியம்!
இறுதியானது கடைசியில் வருவதல்ல, இக்கணமே அது சாத்தியம்!
மனிதா, மெய்ம்மை இல்லாமல் உலகமும் இல்லை, நீயுமில்லை!
நீயில்லாமல், உன் வழியாகவல்லாமல், உண்மை உய்வதெங்ஙனம்!
மனிதா, செருக்கு கொள்ளாதே! சிறிது, பெரிது, அற்பம், அற்புதம்
புழு, பூச்சி, நீ, நான் என யாவும், யாவற்றையும் கடந்ததும் அப் பிரம்மமே!

மனிதா, இடையிலுள்ள  எதையும், உன்னையும், நீ கொண்டாடாதே!
உனதுண்மை யாதென அறியாமல் உன்னில் எதை நீ கொண்டாடுவாய்?
உன்னைக்கொண்டாடு! அதற்குமுன் இறுதியானதைக் கண்டுபிடித்திடு!
கணந்தோறும் உன்னை மறு-கண்டுபிடிப்பு செய்வதே கொண்டாட்டம்!
இரு! இருப்பதைவிட இருப்பை உணர்வது மேல்! அதைவிட உணர்வாயிரு!
இரு! அதில் தற்பெருமை எதற்கு? உனது இருப்பிற்கு நீ என்ன செய்தாய்?
சுயத்தின் புதிரை விடுவித்தாயா, சுய-முக்கியத்துவம் பாராட்டுகிறாய்?
உன் சிறு சுயம் கடந்து உயர்-சுயம் அடைவதே உண்மை முக்கியத்துவம்!

உன் தற்பெருமை, சுய-முக்கியத்துவம், செருக்கு யாவும் தவறானவையா?
ஆம்! அவை முதிராத மலராத ஒரு நபர் மீது  முதலீடு செய்யப்படுவதால்!
உண்மையைக் கண்டுபிடிக்கும்வரை உன்னை மையமாகக்கொள்ளாதே!
உன் மையம் உன்னிடமில்லை; உண்மை தான் அனைத்தின் மையம்!
நீ மெய்ம்மையின் சாயலில் இருக்கிறாய்! மெய்ம்மையில் உன் சாயல் ஏது!
நீ இருக்கும்வரை முழுமை தோன்றாது; உன் பங்களிப்பின்றி முழுமை ஏது?
முழுவதுமாக மெய்ம்மைக்கு உன்னைத் தருவதே உண்மைப் பங்களிப்பு!
உன்னைக்கொடுத்து உண்மையைப் பெறும் இறுதிப் பண்டமாற்று!

தள்ளிப்போடப்படும் ஒவ்வொரு  கணமும்  வாழ்வதற்கான  கணமே!
தவற விடப்படும் ஒவ்வொரு கணமும், விழிப்பதற்கான கணமே!
தள்ளிப்போடப்படும் ஒவ்வொரு கணமும் தற்கொலைக்கான ஆயத்தமே!
தவற விடப்படும் ஒவ்வொரு கணமும், மரணத்தை நோக்கிய ஓரடியே!
கடந்து போகும் ஒவ்வொரு கணமும் பொன்னான வாய்ப்பின் கணமே!
மனிதா, இன்னும் எதை, யாரை, எதிர்பார்த்து வாளாவிருக்கிறாய்?
உன்னை எதிர்பார்த்து  இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் காத்திருக்கிறது!
உனது முழுமையடைதலில் தனது முழுமையை மீட்சியை எதிர்பார்த்து!


மா.கணேசன்/ நெய்வேலி/ 07.02.2017
----------------------------------------------------------------------------

Thursday, 9 February 2017

தீர்வின் திறவுகோல் யாரிடமுள்ளது?





வாழ்க்கையில்,  எவ்வாறு  சௌகரியங்களைப்  பெருக்கிக்கொள்வது, அதற்
காக அதிகப் பணம் சம்பாதிப்பது எவ்வாறு, எவ்வாறு உறவுகளைச் சமாளிப்
பது, எவ்வாறு உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது,  நம்மைப்போலவே நமது
குழந்தைகளை    எவ்வாறு   முன்னேற்றுவது,   போன்ற  பல   விஷயங்களில்
ஆழ்ந்திருக்கும்  நாம்  வாழ்க்கை  பற்றிச்  சிந்திப்பதில்லை!  வாழ்க்கையின்
அசலான  குறிக்கோள்  பற்றியும்,  அர்த்தம்,  மற்றும்,  இலக்கு  பற்றியும் நாம்
அக்கறை கொள்வதில்லை! வாழ்க்கைபற்றி பிரத்யேகமாகச் சிந்திப்பதற்கு
நமக்கு நேரமும் இருப்பதில்லை, அதற்குரிய சக்தியும் இருப்பதில்லை!

நம்மில் பலருக்கு,   வாழ்க்கை பற்றி  பிரத்யேகமாகச்  சிந்திப்பதற்கு  என்ன
இருக்கிறது  என்பதாகத் தோன்றலாம்! நாம் நன்றாகவே வாழ்ந்து கொண்டு
இருப்பதாகவும் நாம் நம்புகிறோம்;  என்ன,  இன்னும் கொஞ்சம் அதிக வசதி
வாய்ப்புகளைப்   பெற்றால்,   இன்னும்  சிறப்பாக,   இன்னும்   மகிழ்ச்சியாக,
நிறைவாக,  வாழ இயலும்  எனவும் கருதுகிறோம்!  நாம் ஒரு நெடிய பயணத்
துக்கான  ஆயத்தங்களைச் செய்துகொண்டிருப்பதிலேயே  நம் வாழ்-காலத்
தைக்   கழித்துத்  தீர்க்கிறோமே தவிர,  பயணம்  புறப்படுவதேயில்லை  என்
பதுபோலவே, வாழ்க்கைக்கான முன்னேற்பாடுகளிலேயே நம் வாழ்-காலத்
தின்  பெரும் பகுதியைச்  செலவிட்டு  விடுகிறோம்! ஆனால்,  எப்போது நாம்
உண்மையில் வாழத் தொடங்குவது?

வினாடிகள்   நிமிடங்களாகி,  நிமிடங்கள்  ஒவ்வொரு  மணியாகி,  இருபத்தி
நான்கு மணி நேரம் ஒரு நாள் என்றாகி,  நாட்கள் வாரங்களாகி,    வாரங்கள்
மாதங்களாகி,  மாதங்கள் பன்னிரண்டு சேர்ந்து ஒரு வருடமாகி,  ஒவ்வொரு
வருடமும் ஒரு வயது எனக்குறிக்கப்பட்டு,  ஐம்பது  வயதிலோ,  அறுபது,  அல்
லது   எழுபது  வயதிலோ,  மரணம்  எனும்   மிகத் துல்லியமான  அந்த  முடிவு
உடலுக்கு நேர்வது தவிர்க்கவியலாமல் நிகழ்ந்துவிடுகிறது!அதாவது, "உயிர்
-இருப்பு"   எனும்   சுற்றுப் பாதையில்  தன்னை  நிலை நிறுத்திக் கொள்ளும்
"உடல் " எனும் விசேடப்பொறியமைப்பின் திறன் வயது ஆக ஆக படிப்படியா
கக்  குறைந்து  முடிவில் முற்றிலுமாக முடிந்து விடுகிறது!  "மரணம்"  என்பது
மிகத்துல்லியமாக  உடலின் இறப்பையே குறிக்கிறது!   உடல், அல்லது உடல்-
ஜீவியின்   "பிறப்பு"  என்பது  எவ்வளவு  தவிர்க்கவியலாததோ,  புதிரானதோ,
அவ்வாறே அதன் "இறப்பு" என்பதும் தவிர்க்கவியலாதது, புதிரானது!

ஆக, பிறப்பு குறித்து மகிழ்வதும், இறப்பு குறித்து துக்கப்படுவதும் பொருத்த
மற்றதாகும்! பிறப்பின் முக்கியத்துவத்தையும், நோக்கத்தையும் முறையாக
நாம் புரிந்துகொள்வோமெனில், இறப்பின் தவிர்க்கவியலா தன்மையையும்
நாம் புரிந்து கொள்ளாமல் போகமுடியாது! ஒருவரின் இறப்பு குறித்து துக்கப்
படுவதென்பது  வாழ்க்கையை  நாம் சிறிதும் புரிந்துகொள்ளவில்லை  என்ப
தின் வெளிப்பாடே தவிர வேறில்லை! உண்மையில் நாம் துக்கப்படவேண்டு
மானால்,  அது ஒருவரின் இறப்பு குறித்ததாக இருக்கலாகாது;  மாறாக, பிறப்
புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் சாதித்திருக்க  வேண்டிய
நிலையைச்  சாதிக்கவில்லையே  என்பதைப்  பற்றியதாக வேண்டுமானால்
இருக்கலாம்!   ஏனெனில்,  இது  மட்டுமே  ஓரளவிற்கேனும்   வாழ்க்கையைப்
புரிந்து கொண்டதற்கான ஒரு சிறு அடையாளமாக அமையும்!

ஒரு  உடல்-ஜீவியின்  "பிறப்பு"  என்பது முக்கியமான ஏதோவொன்றை எட்டு
வதற்கான  அடிப்படையே தவிர வேறல்ல!  மனிதன் முதலில் ஒரு உடல்-ஜீவி
யாகத்தான் பிறக்கிறான்;  அசலான மனிதன்,  அதாவது, உணர்வு-ஜீவியான
உண்மையான மனிதன், பிறகே பிறக்கிறான்!பெரும்பாலானோரது விஷயத்
தில்,  அசலான  மனிதன் கடைசிவரை பிறப்பதேயில்லை!  ஆனால்,  மனிதர்
கள் தமது ஒரு பகுதியான உடல்ஜீவியின் பிறப்பையே ஒவ்வொரு வருடமும்
கொண்டாடிச் செல்கிறார்கள்,முடிவில், உடல் மரணித்ததும், ஒவ்வொரு வரு
டமும் இறந்த நாளைக் கொண்டாடத் தொடங்கிவிடுகிறார்கள்!

மனிதனுக்கு தன்னில் எதைக்கொண்டாடுவது என்பது பற்றிய தெளிவு  இன்
னமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை! நிச்சயம் மனிதன் என்பவன் அவனது
உடலல்ல  என்பதை  அவன்  தன்னைக் கண்டடையும்  வரை அறிய வாய்ப்பு
இல்லை!   உடலுடன்  தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுதல்,  பிணைத்
துக்கொள்ளுதல்,    உடலின்    நச்சரிப்பான   தேவைகளை  நிறைவேற்றுதல்,
அதாவது,  உடல்  எனும்  ஊர்தியைப்  பராமரித்துப்  பேணிக்காத்தல்,  வேளா
வேளைக்கு  அதற்கு  எரிபொருள் (உணவு) இடுதல்;  மாறுகின்ற  தட்பவெப்ப
நிலைக்கேற்ப  அதைக் காத்தல் (உடை);  மற்றும்,  அதன்  அனைத்து இச்சை
களையும்,   துய்ப்புகளையும்,  ஒருங்கே  ஓரிடத்தில்  (உறைவிடம்)  வைத்துப்
பூர்த்திசெய்தல் யாவும் எவ்வளவு அத்தியாவசியமாயிருந்தாலும் அவை ஒரு
போதும் மனிதத்தரத்துக்குரிய வாழ்க்கையைச்சிறிதும் நெருங்குவதில்லை!

தன்னை யறிதல், தன்னைக் கண்டடைதல், உணர்வுக்கு வருதல், மெய்ம்மை
யுணர்தல்,  வாழ்வின் அர்த்தமறிதல், இலக்கையடைதல், முழுமையடைதல்,
முக்தி, அல்லது வீடுபேறு அடைதல் என அதை எப்படி அழைத்தாலும்,  அதற்
கென நல்ல நேரம், காலம்;  அதிர்ஷ்டம்,  நட்சத்திரங்கள் அல்லது  கிரகங்கள்
விசேடமாக ஒரு நேர்கோட்டில் அமைவது,ஆன்மீகப்பயிற்சிகள், முயற்சிகள்
போன்ற  எதையுமே  அது  சார்ந்திருப்பதில்லை!  நாளை  அதை நான் எட்டிப்
பிடிப்பேன்,சாதிப்பேன்,என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் தள்ளிப்
போடப்பட்டு கடந்துபோய்க் கொண்டிருப்பது தான் மிச்சம்!

வெறுமனே   காலத்தைக்  கழிப்பது,  வீணான  ஈடுபாடுகளில்   பங்கேற்பது,
ஆன்மீகம்  எனும் பெயரில் அடுத்தவருக்குப் போதிப்பது,  சத்-சங்கம்  எனும்
பெயரில்  தான் படித்தறிந்தவைகளை  வைத்து  வாதம்  புரிவது,  அன்றாடக்
கடமைகளின் மீது பழி கூறுவது,  குடும்பத்தை, உறவுகளைக் காரணம் காட்
டுவது . . . . . போன்ற  யாவும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் வழிகள்
ஆகும்! காரணம் காட்ட, பழி கூற எல்லாம் இருந்தாலும், அவற்றைச் சொல்வ
தன்  மூலம்  தனது ஈடுபாடுகள் வெளியே தெரிந்துவிடும் என்பதற்காக, பழி
கூறவும்,  காரணம்  காட்டவும் எதுவும்  இல்லாதது  போலவும், ஆனால், தனது
இயலாமைக்குப்பின்னே, ஏதோ பெரிய மர்மம் உள்ளதாக நடிப்பது; அல்லது,
தனது   இயலாமையை  வெளிப்படையாக,  "ஆம்,  அது தான்  எனக்குப்  புரிய
வில்லை,  என்னால் முடியவில்லை!" என்று சொல்வது தன் நோயின் தன்மை
புரியாமல் அதைக்கொண்டாடுவதற்கு ஒப்பான பெரும் புரட்டு ஆகும்!

சிலர், தமது பிரச்சினைக்கான தீர்வு ஆன்மீக குருவிடம் இருப்பது போலவும்,
அவர் அத்தீர்வுக்கான வழிமுறையைச் சொல்லாதிருப்பதாகவும், குருவைக்
குறை சொல்வதன் மூலம்  தங்களது நிலையை நியாயப்படுத்திக் கொண்டு
தங்களையே ஏமாற்றிக்கொள்கின்றனர்!

உண்மையில், ஒருவன் தான் எதை 'வாழ்க்கை' யென வாழ்ந்து கொண்டிருக்
கிறோம் என்பதே தெரியாமல் வாழும் வாழ்க்கைதான் அவனது நோயாகும்!
அதற்கு  அவனே  மருந்தும் ஆவான்!  அவனது  நோய் தீர,  அவன்   தன்னைத்
தான்  எதிர் கொண்டாக வேண்டும்! அவனுக்கு அவனேதான் பதில் சொல்லி
யாகவேண்டும்!

வெறும்  'உயிர்'- வாழ்தல்  என்பதிலிருந்து 'உயர்'-வாழ்தலுக்குச் செல்வதெப்
படி,   அதற்கான  வழிமுறை  என்ன  என்று  கேட்பவன்  தன்  வாழ்க்கையின்
நோக்கத்தைத் தொலைத்து விட்டவனாகிறான்!  தான்  தொலைத்தது என்ன
வென்று தானேயறியாத நிலையில், " தொலைத்தது வாழ்க்கையைத்தான்!"
என்று எவர் எடுத்துச்சொன்னாலும் அது எவ்வகையிலும் அவனுக்குப்புரியப்
போவதில்லை, உதவப்போவதுமில்லை!

ஒருவன்  தீர்வின் திறவுகோலைத்  தன்னிடமே  வைத்துக்கொண்டு,  தனக்கு
வெளியே எவ்வளவு காலம் தேடிக்கொண்டிருப்பான் என்பதற்கு காலக்கெடு
என்பதே இல்லை,  சொல்லவும் முடியாது!

ஆனால்,  கடந்து  போகும்  ஒவ்வொரு  கணமும்  வாழ்வதற்கான  கணமே!
தவற விடப்படும் ஒவ்வொரு கணமும், விழிப்பதற்கான கணமே என்பது
மட்டும்  நிச்சயம்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 07.02.2017
----------------------------------------------------------------------------

Sunday, 5 February 2017

மனிதனின் சித்தமா? உலகின் சித்தமா?






   கட்டற்ற சுதந்திரம் என்பது ஒரு மாயை
   மேலும் அது அர்த்தமற்றது!
   அப்படியொரு சுதந்திரம் இருந்தாலும்
   அது விரும்பத்தக்கதுமல்ல!
   தெரிவுகள் ( நன்)மதிப்புகளை பிரதிபலிக்காவிடில்
   அவை அர்த்தமற்றவை!
   உன்னிடம் ஏற்கனவே  (நன்)மதிப்புகள் இல்லாமல்
   அர்த்தமுள்ளவகையில் அவைகளைத்
   தெரிவு செய்யமுடியாது!

        <•>

உண்மை, பொய்மை இரண்டில் ஒன்றை நீ தேர்வு செய்திடலாம்!
உண்மையை நீ தேர்வு செய்யும் பட்சத்தில் சில கட்டுப்பாடுகளுக்குள் நீ
வாழவேண்டியிருக்கும் - மனம் போனபடி நீ வாழ முடியாது!
ஆனால், முடிவில் நீ விடுதலை அடைவாய்!
பொய்மையை நீ தேர்ந்துகொள்ளும் பட்சத்தில் நீ உன் விருப்பம் போல
வாழலாம்! ஆனால், விடுதலை உன்னை விலக்கிவிடும்!
       
        <•>

மனிதனுக்கு சுதந்திர சித்தம்  (Free will)உள்ளதா?  அல்லது யாவும்   ஏற்
கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டனவா?  சிலர், மனிதனுக்கு சுதந்திர சித்தம்
"உள்ளது"   என்கின்றனர்.   சிலர்,  " இல்லை"  என்கின்றனர்!     இரண்டில்   எது
உண்மை?    பல  விஞ்ஞானிகள்  பௌதீகஉலகையும்,  அதன்  விதிகளையும்
ஆராய்ந்து கண்டு,   எல்லாம்    ஏற்கனவே   தீர்மானிக்கப்பட்டு    விட்டதாகச்
சொல்லுகிறார்கள்;  மனிதனுக்கு   சுதந்திர சித்தம் கிடையாது   என்று  திட்ட
வட்டமாகச் சொல்லுகிறார்கள்.   ஆனால்,  எல்லோரும்  மனிதனின்  சுதந்திர
சித்தம் பற்றியும்,  உலகின் சித்தம் பற்றியும் மட்டுமே பேசுகிறார்களே தவிர
இவ்விரண்டையும்  கடந்து மூன்றாவதாக வேறு எவ்வொரு சித்தம் பற்றியும்
குறிப்பிடுவது இல்லை!  சமயவாதிகள் மட்டுமே "கடவுளின் சித்தம்"  பற்றிப்
பேசுகிறார்கள்!     ஆனால்,    நான்    மூன்றாவது  விதியாக   மெய்ம்மையின்
அல்லது முழுமையின் சித்தம் அல்லது விதியை முன்வைக்கிறேன்!

சித்தம்,   மனம்,   விருப்பம்,   முனைப்பு,  தெரிவு,  சுதந்திரம்  இவை   ஒன்றுக்
கொன்று தொடர்புடையவை;    அதே வேளையில்,       இவையனைத்துக்கும்
அடிப்படையாக  அமைவது "உணர்வு" (Consciousness) ஆகும்!  உணர்வு
இல்லாமல், மனிதனுக்குச் சித்தமும் இல்லை, சுதந்திரமும் இல்லை!

மனிதனுக்கு  சுதந்திர சித்தம்  (Free will)உள்ளதா? இல்லையா? என்பது
குறித்து  ஒரு முடிவிற்கு வருவதற்கு முன்னர்,  சுதந்திரம் என்றால் என்ன என்
றும், சித்தம் என்றால் என்ன என்றும் அறிவது அவசியமாகும். இந்த மாலைப்
பொழுதில்,  ஒரு   நல்ல  உணவகத்திற்குச்  சென்று  நான்  மிகவும்  விரும்பும்
அந்தச் சிற்றுண்டியைச் சாப்பிட விரும்புகிறேன்; அது போலவே சாப்பிடவும்
செய்கிறேன்  என்றே  வைத்துக்கொண்டாலும்,  எனக்குப்பிடித்த உணவு என்
பது பல காரணிகளால் - நான்  பிறந்த குடும்பத்தின் உணவுப்பழக்கம், இந்த
உணவு ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று அறிவுறுத்தப்பட்டது, பலவகைப்
பட்ட   உணவுகளில்  சிலவற்றை   எனது  நாக்கின்  சுவையரும்புகள்   இவை
சுவையானவை என்று தெரிவு செய்தது என்பதுபோன்ற காரணிகளால் -தீர்
மானிக்கப் பட்டதாக இருக்கலாம்! பணி நிமித்தம், நான் ஒரு வெளி நாட்டிற்
குச்செல்லுகிறேன்,  அங்கு  எனக்குப் பிடித்த  வழக்கமான  உணவு கிடைக்க
வில்லை  என்பதால்,  நான்  பட்டினியாக இருக்கப்போவதில்லை!  ருசிக்காக
இல்லாவிட்டாலும்,     எனது   பசியைப்   போக்கிக்  கொள்வதற்காக   அங்கே
கிடைக்கின்ற  உணவு வகைகளில் எவை எனக்குப் பிடிக்கிறதோ அவற்றை
உண்டு, எனது பணி முடிந்ததும் சொந்த நாடு திரும்புவேன். எனது வீட்டிற்கு
வந்ததும்  எனக்குப் பிடித்த   உணவுவகைகளைச் செய்யச் சொல்லி  உண்டு
மகிழ்வேன்!

உண்மையில், எல்லா நேரங்களிலும், சுதந்திரமாக நான் விரும்பியவற்றைச்
செய்யவோ,  அடைந்திடவோ இயலாது.  அதே வேளையில்,  அனைத்திலிருந்
தும்  உளவியல்  ரீதியாக  விடுபட்டு சுதந்திரமாக  இருப்பதென்பது யாவருக்
கும்  சாத்தியமில்லை என்றாலும்,  சிலருக்கு  நிச்சயம்  அது  சாத்தியமாகும்!
ஆனால்,  ஒவ்வொருவரும்  சில  வரையறைகளுக்குள்  சுதந்திரமாக இருக்க
வும், செயல்படவும் செய்கிறார்கள் என்பதென்னவோ உண்மைதான்!

அப்படியானால்,வரையறைக்கு உட்படாத,வரம்பற்ற முற்றும் முழுமையான
சுதந்திரம்  (Absolute Freedom) என்பது  இல்லையா  என்றால்,  இல்லை,
ஆம்,  இரண்டும்தான்!  ஏன்  'இல்லை ' என்றால், மனிதஜீவிகளாகிய நாம் எப்
போதும்   ஒன்றுக்கு   மேற்பட்ட   அமைப்புகளுக்குள்,      அவ்வமைப்புகளின்
பகுதிகளாகத்தான் உள்ளோம் -  குடும்பம்,  சமூகம்,  தேசம், உலகம், பிரபஞ்
சம் ஆகிய அமைப்புகள். இந்த  அமைப்புகளுக்குள், அவற்றின் பகுதிகளாக
உள்ளவரை,  வரம்பற்ற  முற்றும்  முழுமையான சுதந்திரம் என்பது சாத்திய
மில்லை;   மேலும்,   அவற்றின் பகுதிகளாக  இல்லாமலும்  மனிதன்   இருக்க
முடியாது.    ஆகவே,   சார்பு  ரீதியிலான  சுதந்திரம்  (Relative Freedom)
மட்டுமே சாத்தியம்!  வரையறைக்கு உட்படாத, வரம்பற்ற முற்றும் முழுமை
யான சுதந்திரம் என்பது இவ்வமைப்புகளுக்கு வெளியே, கடப்பு  நிலையில்
(Transcendentally) மட்டுமே  சாத்தியம்!   ஏனெனில்,   முழுச்சுதந்திரம்
என்பது இறுதியான,  முடிவான இலக்கு நிலை ஆகும்.  அதாவது, முழுச்சுதந்
திரம் மட்டுமல்லாமல், "அர்த்தம்", "உண்மை" மற்றும்   "முழுமை" ஆகிய
இறுதியான அம்சங்கள் யாவும் மறுகரையைச் சேர்ந்தவையாகும்! இக்கரை
யில் யாவும் சார்பு ரீதியில் மட்டுமே சாத்தியம்! உண்மையில்,  நாம் இக்கரை
யில் தான் தோன்றினோம் என்றாலும்,  மறுகரையை அடைவதே நம் வாழ்
வின் இலக்கு ஆகும்!

மனித ஜீவிகளாகிய நாம் குடும்பம், சமூகம், தேசம், உலகம், பிரபஞ்சம்
ஆகிய அமைப்புகளுக்குள் தான் இருக்கிறோம், வாழ்கிறோம்  எனக் கண்
டோம். இவ்வமைப்புகளில், பிரபஞ்சம் தான் அடிப்படையானதும் பிரதான
மானதும் ஆகும். பிரபஞ்சத்தை பௌதீகவிதிகள் செலுத்துகின்றன, கட்டுப்
படுத்துகின்றன என்பது விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பும், முடிவுமாகும்!
ஆனால், பௌதீகவிதிகள் என்பவை மூல-விதிகள் அல்ல. மாறாக,அவற்றிற்
கும் மூலமாகத் திகழ்பவை பரிணாம விதிகளே என்பது விஞ்ஞானம் கண்டு
பிடிக்கத் தவறிய உண்மையாகும்! பரிணாம ரீதியாக பௌதீகவிதிகளுக்கு
அடுத்தபடியாக எழுந்தவை உயிரியல் விதிகள், அதற்கடுத்தபடியாக உணர்
வியல் விதிகள் அமுலுக்கு வந்தன. இவ்விதிகள் யாவும் பரிணாமபூர்வமான
வையாகும். ஆனால், குடும்பம், சமூகம், தேசம் ஆகியவற்றின் விதிகள் அவ்
வமைப்புக்களுக்கே  உரிய சொந்த விதிகளாகும்; அவை மானுட வாழ்க்கை
பற்றிய  அரைகுறையான புரிதலைக்கொண்டு,  மானுட அங்கத்தினர்களை
நிர்வகிப்பதற்காக  உருவாக்கப்பட்டவையாகும்!  ஆகவே,   அவை   மானுடர்
களை பலவகைகளிலும் கட்டுப்படுத்துவதாகவும், மட்டுப்படுத்துவதாகவும்
அமைவது அவ்வமைப்புகளுக்கே  உரிய இயல்புகளின் வழிப்பட்டதாகும்.

பௌதீக விதிகள்   பௌதீகப் பிரபஞ்சத்தையும்,   அதன்  பொருட்களையும்
மட்டுமே   கட்டுப்படுத்தக்கூடியவையாகும்.  நமது உடலும் பருப்பொருளால்
ஆனது  என்பதால்,  ஓரளவிற்கு  அவ்விதிகள்  நமது உடலையும்  கட்டுப்படுத்
தக்கூடும்.  உதாரணத்திற்கு,  நமது உடல்,  ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டதா
கும்.  நாம் மொட்டை மாடியில் நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கும் போது
கால்  இடறினால்  கீழே  தரையில் தான் வீழ்வோம்;  ஒரு பறவையைப்போல
அப்படியே விண்ணில் உயர்ந்து பறக்க நம்மால் இயலாது. ஒரு சிறிய சிட்டுக்
குருவியினால் கூட பறக்கமுடியும் என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஏனெ
னில்,  மனிதனுக்குப்  பறக்க வேண்டிய தேவையும்,  அவசியமும்  இருந்தால்
அவனுக்கும்   சிறகுகள்  முளைத்திருக்கும்!   ஆனால்,    மனிதன்    என்பவன்
வெறும் ஆகாயவெளியில் பறப்பதற்காக அல்லாமல்; மேன்மேலும் உணர்வு
எனும்   ஆன்மீக  வெளியில்  உயர்ந்தெழுவதற்காக  உருவானவன்  ஆவான்!
பௌதீக விதிகள் மனிதனைப்பற்றியும், அவனது வாழ்க்கை மற்றும் அவன்
அடையவேண்டிய விசேடமான பரிணாம இலக்கு பற்றியும் பெரிதாக  எதை
யும் விளக்கிடவில்லை!

இவ்வுலகம்,  அதாவது பிரபஞ்சம் ஏன் எதற்காகத் தோன்றியது, அதில் உயிர்
ஜீவிகளும்,  உணர்வுள்ள  மனித ஜீவிகளாகிய  நாமும்  ஏன்  தோன்றினோம்
என்பதை பௌதீக விதிகளும், பௌதீக விஞ்ஞானிகளும் ஒருபோதும்   (நம்
வாழ்-காலத்திற்குள்)  நமக்கு எடுத்துச் சொல்லப் போவதில்லை! அப்படியே
சொன்னாலும்,  அவை பருப்பொருளின் பண்புகளைப்பற்றி மட்டுமே சொல்
லக்கூடும்! மேலும், பிரபஞ்சத்தையும், அதன் பௌதீகவிதிகளையும் பற்றித் தெரிந்துகொள்வதைவிட,  பிரபஞ்சம்  ஏன்  எதற்காகத்  தோன்றியது,  அதில்
உயிர்ஜீவிகளும்,   உணர்வுள்ள   மனித ஜீவிகளாகிய   நாமும்  ஏன்  தோன்றி
னோம் என்பதையும்,  மற்றும்  பிரபஞ்சத்தின்  அடியோட்டமான பரிணாமத்
திட்டத்தையும்,   அதன் இறுதி இலக்கையும் பற்றிப் புரிந்து கொள்வதே அதி
முக்கியமானதாகும்!

ஏனெனில்,   பிரபஞ்சம் என்கிற அமைப்பின் பகுதியாக நாம் தோன்றியுள்ள
தால்,  குறிப்பாக  நாம்  அவ்வமைப்பின்  எத்தகைய பகுதி என்பதை அறியா
மல்,  நம்முடைய வாழ்வின் இலக்கை அறிய முடியாது;  வாழ்வின்  இலக்கை
அறியாமல், நம் வாழ்க்கையை முறையாகவும், முழுமையாகவும் வாழ  விய
லாது! ஒட்டுமொத்த பிரபஞ்ச அமைப்பில், மனிதனே மிக விசேடமான பகுதி
யாக விளங்குகிறான்;  அதற்குக்காரணம்,  பிரபஞ்சத்தின்  வேறு  எவ்வொரு
பகுதியும்  பெற்றிராத  "உணர்வு"  எனும்  அம்சம்  மனிதனிடம் துளிர்த்துள்ள
தேயாகும்.   ஒட்டு மொத்த  பிரபஞ்சமும்  எத்தகைய  இலக்கை  அடைந்தாக
வேண்டுமெனும்  விழைவைக் கொண்டுள்ளதோ,  அந்த   இலக்கை  அடைவ
தற்கான  வழிமுறையில்  தத்தம் பங்கு பணியை  -  சிறியதோ, பெரியதோ -
ஆற்றுவதே ஒவ்வொரு பகுதியின் வாழ்க்கையும், கடமையுமாகும்!

இவ்விடத்தில், வாழ்க்கையும், கடமையும் என்று இரண்டு விஷயங்கள் குறிப்
பிடப்படுவது சீரிய கவனத்திற்குரியது ஆகும்! ஒருவகையில், இவ்விரண்டும்
ஒன்றுக்கொன்று   பொருந்தாத  அம்சங்கள்   எனலாம்!   வாழ்க்கை   என்பது
சுதந்திரத்தை விரும்புவதையும், கடமை என்பது சில கட்டுப்பாடுகளுக்குள்
இயங்க வேண்டியிருப்பதையும் குறிப்பதாகவுள்ளது. ஆம்,சுதந்திரம் என்பது
வரையறைக்கு  உட்பட்டதாகும்!  அதே நேரத்தில்,  வரையறுக்கும் பரிணாம
விதிகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவது தான் விடுதலைக்கான வழி
யுமாகும்!  ஏனெனில்,   "இறுதி விடுதலை"  என்பதே பரிணாமத்தின் இலக்கு
ஆகும்!

ஏனெனில்,  கட்டற்ற  சுதந்திரம்  என்பது  அடிப்படையற்றது,  ஆகவே அர்த்த
மற்றதாகும்.  ஒரு  நதியானது   இரு கரைகளுக்கு  இடையில்  சுதந்திரமாகப்
பாய்ந்து செல்லலாம்! கரைகளற்ற அல்லது கரைகளை உடைத்துச் செல்லும்
நதியானது நாலாபுறமும் சிதறியோடி பூமியினால் உறிஞ்சப்பட்டு விரைவில்
காணாமல்  போய்விடக்  கூடும்!  ஆனால்,  கரைகள்  எனும்  கட்டுப்படுத்தும்
விதிகளுக்குள்    பாய்ந்தோடிடும்    நதி   முடிவில்  வற்றாத   சமுத்திரத்தைச்
சென்றடைந்து  நித்திய வாழ்வு  எனும்   உண்மையான   சுதந்திரத்தை, முழு
விடுதலையை அடைகிறது!

பரிணாம ரீதியாக,  பிரபஞ்ச அமைப்பின் பகுதியான நம்முடைய வாழ்வின்
இலக்கு  ஏற்கனவே  தீர்மானிக்கப்பட்ட  ஒன்றாகும். எவ்வாறு, ஒரு மரத்தின்
பிரதான  இலக்கு,  அதாவது  கனிகளை பிறப்பிப்பது என்பது ஏற்கனவே தீர்
மானிக்கப்பட்டதாக  உள்ளதோ,  அவ்வாறே  பிரபஞ்சத்தின் இலக்கும்  ஏற்க
னவே   முடிவான  ஒன்றாகும்!   அதாவது  நதியின்   இலக்கு  சமுத்திரத்தைச்
சென்றடைவதே என்பது முடிவான ஒன்று என்பதைப்போல! இங்கு நாம் கவ
னிக்கவேண்டிய  ஒரு  முக்கிய விஷயம்  என்னவென்றால், நதியின் இலக்கு
மட்டுமே  முன்-தீர்மானிக்கப் பட்டதாயுள்ளதே தவிர,  அது  சமுத்திரத்தைச்
சென்றடையும்  பாதை  முன்-குறிக்கப்படவில்லை  என்பது தான்!  அதாவது,
பரிணாமம்  எவ்வாறு  படிப்படியாக  மடிப்பவிழ்க்கப்படுகிறது  (Unfold),
வெளிப்படுகிறது  என்பதில்  சிறிது   சுதந்திரம்  உள்ளது எனலாம்;  எனினும்,
அவ்வெளிப்பாட்டு நிலைகள் முடிவான இலக்கு நிலைக்கேற்பவே(Teleology) வடிவமைக்கப்படுகின்றன,அதாவது கட்டுப்படுத்தப்படுகின்றன!

பரிணாமம் என்பது ஒரு தானியங்கி நிகழ்வுமுறை போன்றதாகும்;எவ்வாறு
ஒரு  விதையானது  விருட்சமாக விரிந்து மீண்டும் விதையினுள் உள்ளடங்கு
கிறதோ அவ்வாறு! ஏனெனில், உணர்வற்ற உலகிற்கு சித்தம் என்பதில்லை,
எனினும்  அதற்கு  பிரதானமாக  உள்ளார்ந்த  ஒரு  "விழைவு"  உண்டு.  அந்த
விழைவை யுணர்ந்து  நிறைவேற்றுவதற்காக  உருவானவனே  உணர்வுள்ள
சுய-சித்தம் உள்ள மனிதன்!  இவ்வகையில் பிரபஞ்சத்திலிருந்து வேறானவ
னல்ல மனிதன்!   உலகின் விழைவைப் பிரதி நிதித்துவம் செய்யும் சித்தமே
(உணர்வே) மனிதன்!பிரபஞ்சமானது தன்னை உள்ளிருந்து செலுத்தும் அந்த
உந்துதலை  உணர்வுபூர்வமாக அறியும் பொருட்டே மனிதனாக,  மனிதனுள்
மனமாக, சித்தமாக எழுந்தது!

ஏனெனில்,   பருப்பொருளால்  அமைந்த   தொடக்கநிலைப்  பிரபஞ்சத்திற்கு
சித்தம் என்பதில்லை!  மனிதனின் சித்தம்   என்பது  உண்மையில்  மனிதனு
டைய  சித்தம் அல்ல! மிகவும் அசலான வகையில், அது பிரபஞ்சத்தின் சித்த
மேயாகும்! ஆனால்,மிகவும் துரதிருஷ்டவசமாக, மனிதன் தனக்காகத்தோன்
றியவனைப்போல   தன்  மனம் போன போக்கில்  செயல்பட்டுக் கொண்டும்
வாழ்ந்துகொண்டும் செல்கிறான்!   உண்மையில்,    பிரபஞ்சமும்   தமக்காக
இல்லை;  மனிதனும்  தனக்காக இல்லை!  மாறாக,  இருவரும்  இறுதி மெய்ம்
மைக்காகவே இருக்கிறார்கள்! ஏனெனில், இறுதி மெய்ம்மை மட்டுமே நிஜத்
திலும் நிஜம் ஆகும்! மேலும்,பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த விழைவு சுட்டுகின்ற
அம்சம் இறுதியான அந்த மெய்ம்மையைத்தான்! மேலும்,   இறுதியாக  மனி
தனும் பிரபஞ்சத்தின்பகுதியும் அல்ல; மாறாக, அவன் முழுமையின், மெய்ம்
மையின்,   பிரதிநிதியும்  மெய்ம்மையோடு  மெய்ம்மையாக  ஐக்கியமாகிட
வேண்டியவனும்  ஆவான்!

உண்மையில்,   மனிதன்   தன்னிச்சையாகத்தான்  செயல்படுகிறானா   என்
றால்,  இல்லை என்றுதான் சொல்லவேண்டும்! ஏனெனில், தன் மனம் போன
போக்கில்   செயல்படுவது  என்பது வேறு;   மனம்   தனக்கே யுரிய  அசலான
செயல்பாட்டைச்  (Function) செய்வது  என்பது வேறு.  ஆம், மனித மனம்
இன்னும் தனது அசலான செயல்பாட்டைக் கண்டுபிடிக்கவில்லை! அதாவது,
முழுமையை,    இறுதி மெய்ம்மையைப்  பிரதிநிதித்துவம்  செய்வதற்காகத்
தோன்றிய  மனம்  (மனிதன்)  தன் உடலை,    உடலின்  தேவைகளைப்   பிரதி
நிதித்துவம் செய்யும்  ஒரு  ஏவலாளாகத்  தாழ்ந்து போனான்!  ஆக, மனிதன்
மனிதனாக   இல்லாத   நிலையில்,   இன்னும்   தன்னைக்   கண்டு பிடிக்காத
நிலையில் சுதந்திரம் பற்றிய  அவனது கோரிக்கைகள் அனைத்தும் அனர்த்
தமானவையே!  இவ்வகையில்,  மனிதனின் 'சுதந்திர-சித்தம்' பற்றிய பேச்சு
கள்,அதாவது, மனிதனுக்கு சுதந்திர சித்தம் உண்டா, இல்லையா எனும் பேச்
சுகள், விவாதங்கள் யாவும் அடிப்படையற்றவையே!

ஆக,  மீண்டும்  நாம்  அடிப்படைகளுக்குச் செல்வது அவசியமாகிறது!  சுதந்
திரம்  என்றால் என்ன?  சுதந்திரத்திற்காக  சுதந்திரம்  என்றேதும்  உண்டா?
நோக்கமற்ற, இலக்கற்ற சுதந்திரத்தின் அர்த்தம் என்ன? ஆனால், சுதந்திரத்
திற்கான மனிதனின் விழைவில் தவறில்லை! ஏனெனில், அது முக்கியமான
ஏதோவொன்றைச் சுட்டுகிறது! அதைக்கண்டுபிடிப்பது அதிமுக்கியமானது!
ஏனெனில்,      அதில்  தான்  மனிதனின்  அர்த்தமுள்ள   சாரமான வாழ்க்கை
அடங்கியுள்ளது!

நீங்கள்     உடல்  நலக்குறைவினால்,   மருத்துவமனையில்   பல   நாட்களாக
படுக்கையில்  இருக்கவேண்டிய  அசௌகரியமான  நிலையில்,   விரைவில்
வீடு  திரும்ப வேண்டும்   என்பதைத் தவிர,  உங்களது   எண்ணம்,  விருப்பம்
வேறு  என்னவாக  இருக்க முடியும்!   ஆனால்,   வீடு   திரும்பியவுடன் அப்படி
பெரிதாக எதைச் சாதிக்கப்போகிறீர்கள்? அதே அன்றாட உயிர்-பிழைத்தல்
எனும் சுற்றில் ஆழ்ந்து தனது ஆன்மாவைத் தொலைப்பதைத் தவிர! நீங்கள்
செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறையில் தள்ளப்பட்ட நிலையில்,விரைவில்
சிறையிலிருந்து  விடுதலையாவதைத் தவிர, உங்களது எண்ணம், விருப்பம்
வேறு என்னவாக இருக்கமுடியும்!ஆம்,மருத்துவமனையிலிருந்து  வீடு திரும்
புவதும்,  சிறையிலிருந்து  விடுதலையாவாதும்  அவசியமே. விடுதலையாகி
வெளியே  வந்து  நீலவானத்தைக் காண்பதும்,  சூரிய ஒளியில்   குளிப்பதும்
இனிமையான   விஷயங்களே!     இது   ஒரு  இயற்கையான சுதந்திர இருப்பு
நிலையாகும்.   இந்நிலையிலிருந்து  ஒருவன்  சுதந்திரமாக எதையும் செய்ய
இயலும் என்பதற்கான வாய்ப்பு ஆகும். ஒருவன் சிறைக் கைதி எனும் நிலை
யில் அவனால் எதையும் செய்யமுடியாமல் சிறைக்குள் முடக்கப்படுகிறான்.
இன்னொருவனால்  எதையும்  செய்யமுடியும் எனும் வாய்ப்பைப் பெற்றிருந்
தும்   அன்றாட  வாழ்க்கையின்   கைதியாகி  வெறுமனே  உயிர்-பிழைத்துச்
செல்கிறான்!  துரதிருஷ்டவசமாக,  உயிர்-வாழ்தலின் விதிகள் (தேவைகள்),
"உயர்"-வாழ்தலின்  விதிகளை  அறியவியலாதபடிக்குத் தம்மை முன்னிறுத்
திக்  கொண்டுவிடுகின்றன!  மனிதனும்   மனமுவந்து   அதற்குத்  தன்னைப்
பலியாகக் கொடுத்து விடுகிறான்!

ஆக, வாய்ப்பு  இருந்தாலும் மனிதன் சுதந்திரத்தைத் தேர்வுசெய்வதில்லை!
மாறாக, சோம்பியிருப்பதற்கான சுதந்திரம்,துய்ப்பதற்கான சுதந்திரம்,காம
வேட்கைக்கான சுதந்திரம், ஆழமாகச் சிந்திப்பதைத் தவிர்க்கும் சுதந்திரம், விரும்பியதைச்செய்யவும், அடையவுமான சுதந்திரம்,  உணர்வற்றிருப்பதற்
கான  சுதந்திரம் . . .   இவற்றைத்தான்  பொதுவாக  "சுதந்திரம்"  என நம்மில்
அநேகரும்  எண்ணிக் கொண்டிருக்கிறோம்!  ஆனால், இன்பம் தரும் இவை,
நமக்குத்  தெரியாமலேயே  நம்மை அடிமைத்தனத்தில் ஆழ்த்தி வைத்திருப்
பதை நாம் அறிவதில்லை!

உண்மையில்,     ஒருவன்   சிறைப்பட்ட   நிலையில்    இருந்தாலும்,    அல்லது,
சாதாரணமாயிருந்தாலும்,   வாழ்வின்  அர்த்தத்தைக் கண்டடைந்த,  விக்டர்
ஃப்ராங்க்ல்(Viktor E.Frankl)போன்ற ஒருவரை, அவ்வர்த்தம், அனைத்து
அசம்பாவிதங்கள்,இடர்கள்,இன்னல்கள் யாவற்றுனூடேயும் நிலைநிறுத்திக்
காத்திடும்!

"மனிதனின்   சுதந்திர சித்தம்  தான்,   விலங்கு ஜீவிகளிடமிருந்து  அவனை
வித்தியாசப்  படுத்திக்  காட்டுகிறது!"   என்று    சொல்லப்படுவது      மிகவும்
மேலோட்டமான   கூற்றாகும்!    ஏனெனில்,   சுதந்திர சித்தத்தைக்கொண்டு
மனிதன்  அப்படிப்  பெரிதாக  எதைச் செய்துவிட்டான்,  அல்லது  சாதித்துள்
ளான்? மனிதனுடைய  அனைத்து விஞ்ஞான அறிவு மற்றும் தொழில் நுட்பச்
சாதனைகள்  யாவும் சௌகரியமாக  உயிர்-பிழைத்தல்  எனும் ஒற்றை விஷ
யத்தில்   முடக்கப்பட்டதைத் தவிர  வேறேன்ன  சாதனை  படைத்துள்ளான்?
சற்று அதிகமான இ -டை-வெ-ளி கொண்டமைந்த அடைப்புக்குறிகளுக்குள்
மனிதன்   தாம்  விரும்பியதைச் செய்யமுடியும், செய்கிறான் என்பதில் பெரி
தாக  என்ன விசேடம்  இருக்க முடியும்? உண்மையில், விலங்குஜீவிகளைவிட
மனிதன்   அதிகச் சுதந்திரமானவன் அல்ல!     ஏனெனில்,    விலங்குகளுக்கு
தேவைகள்  என்பவை  மிகச்சிலவே யாகும்!   ஆனால்,  மனிதனுக்கு  அப்படி
யில்லை; ஒரு நாளின் 24-மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தேவை
யைப் படித்துக் கூறுகிறது!  உண்மையான அடிப்படையான, அத்தியாவசிய
மான தேவைகள்,அவற்றின் உப-தேவைகள்;அத்தியாவசியமற்ற ஆடம்பரத்
தேவைகள்;  சௌகரியத்தேவைகள்; செயற்கைத்தேவைகள்; படைப்புப்பூர்
வத் தேவைகள். . . . .   என எண்ணற்ற தேவைகள்!  ஆக,  மனிதஜீவிகளாகிய
நாம்  அளவு கடந்த தேவைகளின் அடிமைகளாக இருக்கிறோம்! தேவைகள்
எஜமானர்களாகவும்,   நாம்    அவற்றின்   அடிமைகளாகவும்   இருக்கிறோம்!
அதாவது, தேவைகள் நம்மை விரட்டிச் செலுத்துகையில்,   வெறுமனே தெரி
வுகளும் (Choices),சுதந்திர சித்தமும் இருந்தென்ன பயன்?

மனிதனுக்கு நிச்சயமாக சுதந்திர சித்தம் உள்ளது. ஏனெனில், அவன் உணர்
வுள்ளவன்!  உணர்வில்லாமல்,  சிந்திக்கும் மனமில்லாமல், அவனால் வாழ்க்
கையின்  அர்த்தத்தையும்,  உண்மையையும்,  அதன்  ஒப்பற்ற இலக்கையும்
புரிந்துகொள்ள இயலாது! வாழ்க்கையை என்னவென்று புரிந்து கொள்ளாது
வாழ்வதற்கு  அவன்  ஒன்றும்  எலியோ,  தவளையோ அல்ல!   மனிதனுக்குச்
சுதந்திர சித்தம் இருப்பது சரியாகவும், முறையாகவும் வாழ்வதற்குத்தானே
தவிர  தான்  விரும்பியவாறு  வாழ்வதற்காகவோ, அல்லது வழிதவறிச் செல்
வதற்காகவோ அல்ல!  நதிக்கு,  தான் செல்ல வேண்டிய  பாதையை அறிந்து
முறையான,  தனது  இலக்கான சமுத்திரத்தைச் சென்றடைவதற்கான சுதந்
திரம் உள்ளதே தவிர,  கன்னாபின்னாவென்று அலைவதற்கும், முறையான
தனது  பாதையைவிட்டு அகன்று செல்வதற்கும் அல்ல!  வாழ்வின் அர்த்தம்,
உண்மை இலக்கு குறித்த கேள்வியும்,ஆழமான விசாரமும்,புரிதலும் இன்றி,
மனிதன் சுதந்திரம் பற்றிப்பேசுவது என்பது அடிப்படையற்றதும், அபத்தமா
னதுமாகும்!

அதே போல்,  வாழ்வின் அசலான இலக்கை,  இறுதி உண்மையை  அடைவது
தான் உண்மையான இறுதியான முழுமையான சுதந்திரம் ஆகும்!வாழ்வின்
இலக்கிற்குப்  புறம்பாக மனிதன்ஆசைப்படும்,அனுபவிக்கும்,தேடிடும் சுதந்
திரம் அனைத்தும் கானல் நீர் போன்றே நிஜமற்றவையாகும்!

உண்மையில், 'சுதந்திரம்',  'சுதந்திர சித்தம்'  என்பவை எதைக்குறிக்கிறது?
சுதந்திரம்  என்பது   எதைக்குறித்தாலும்  அது  ஒரு  குறிப்பிட்ட   நிலையைக்
குறிக்கும் ஒன்றாகும். சுதந்திர சித்தம் என்பது நாம் ஒன்றை,  அல்லது விரும்
பியவற்றைத் தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தைக் குறிக்கிறது.  ஆனால்,
ஒன்றை,   அல்லது   நாம்  விரும்பியவற்றைத்  தெரிவு செய்கிறோம்  என்பது
நாம்    அவ்விஷயங்களைச்   சார்ந்திருக்கிறோம்  என்பதையே  குறிக்கிறது!
ஆக,  நாம்  எதையேனும்  சார்ந்திருக்கும் வரை  நாம் உண்மையில் சுதந்திர
மானவர்கள் இல்லை!

அதாவது,   'சுதந்திர சித்தம்'  என்பது அனைத்து விஷயங்களிலிருந்தும் விடு
பட்டு   நிற்பது  என்பதாகும்!   அவ்விஷயங்கள்  நமக்குப்  பிடித்தவைகளாக,
நாம்  மிகவும் விரும்பும் விஷயங்களாக இருந்தாலும்,  அல்லது  வேறு எவ்வா
றிருந்தாலும் சரி!  உண்மையான  சுதந்திர சித்தம்  என்பது  தன்னில் தானே
முடிவான (முழுமையான),  எதையுமே  சார்ந்திராத  ஒரு  மெய்ம்மையாகும்!
சுதந்திரனான ஒருவன்,   'கடவுள்',  அல்லது இறுதி உண்மை அல்லது மெய்ம்
மையின் மீதும் கூட சார்ந்திருக்கமுடியாது!ஆம்,சார்ந்திருப்பும் சுதந்திரமும்
சேர்ந்துசெல்லாது!ஆனால், 'கடவுள்' தான் இறுதியான மெய்ம்மை என்பதாக
இருந்தால்,இரண்டாவதாக, 'சுதந்திர சித்தன்' எனும் இன்னொரு இறுதியான
மெய்ம்மை  இருக்க முடியாது!  அதாவது,  மனிதன்  சுதந்திர சித்தனாக ஆக
வேண்டுமெனில்,அவன் வேறு வழியில்லாமல் கடவுளாக, இறுதி-மெய்ம்மை
யாக மாறிடத் தான் வேண்டும்!

'சுதந்திர சித்தம்'  என்பது ஒரு புதிராகும்! உண்மையில், சுதந்திர சித்தனாக
உள்ள ஒருவனால் எவ்வகைச் சூழலிலும், எந்நிலையிலும், சொர்க்கத்திலும்,
நரகத்திலும்  வாழ  முடியும்!   அவனுக்கு  வாழ்வும்,  மரணமும்  ஒன்று தான்!
சுதந்திரம்  என்பது வாழ்வு,  மரணம்  இரண்டையும்  கடந்ததாகும்!

உலகம் முழுவதிலும், மனிதர்கள் பலவகைப்பட்ட சுதந்திரம் குறித்தும் பேசி
யும் போராடியும் வருகிறார்கள்! ஏழ்மையிலிருந்து சுதந்திரம், அண்டை நாட்
டின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம், அடக்குவோரிடமிருந்து, ஒடுக்குவோரிட
மிருந்து  சுதந்திரம்,  ஆணிடமிருந்து  பெண்ணுக்குச் சுதந்திரம்,  பெண்ணிட
மிருந்து ஆணுக்குச் சுதந்திரம் . . .  இன்னபிற! தனி நபர்களுக்கிடையேயான
பிணக்குகள்,  பிரச்சினைகள்,  முரண்பாடுகள்,  சண்டை சச்சரவுகள்,  நாடுக
ளுக்கிடையேயான  தீராப்பிரச்சினைகள்,  போர்கள்,  இன அழிப்புகள்;   பிற
உயிரினங்களின் மீதான மனிதஇனத்தின் கொலைவெறி ஆதிக்கம்,மற்றும்,
இயற்கை  மீதான மனித இனத்தின்  தற்கொலைத்தனமான தாக்குதல்,  சுற்
றுச்சூழல் பாதிப்புகள்,    புவி வெப்பமயமாதல் ஆகிய இவை யாவற்றுக்கும்
காரணம் மனிதனே, ஒட்டு மொத்த மனித குலமே யாகும்!  மனிதர்கள் தமக்
கிடையேயும்  இணக்கமான உறவில் இல்லை;  பிற யாவற்றுடனும்  சரியான
இசைவான உறவில் இல்லை! இதற்கெல்லாம் காரணம் யாவற்றிடமிருந்தும்
தன்னைத்  தனியே பிரித்துக் காணும்  மனிதனின்  அரை  வேக்காட்டுத்தன
மான சுதந்திர சித்தமே யாகும்!  சுதந்திர சித்தம் கொண்ட இரண்டு மனிதர்
கள் ஒரு போதும் பொருந்திப்போவதில்லை, இருவருக்கும் சாதகமாக அமை
யும்  ஒரு சில விஷயங்களைத்தவிர!  தனது  சுதந்திரத்தை மட்டும் கருத்தில்
கொள்ளும்    ஒருவனின்   சித்தத்தை  ஆரோக்கியமானது  என்று  சொல்வது
உண்மைக்கு  மாறானதாகும்!   அத்தகையவனின் சுதந்திரமும் ஆரோக்கிய
மானதாக இருக்கமுடியாது!

மீண்டும்  மீண்டும்  நம்மை  நாமே  கேட்டுக்கொண்டு தெளிவு காண வேண்
டிய  ஒரு  முக்கிய கேள்வி  என்னவெனில்,  நம்முடைய  சுதந்திர சித்தத்தின்
வீச்சும்,  விளைவும்  எத்தகையது என்பதே!  முதலில், நாம் விரும்பியவற்றை
யெல்லாம்  செய்கிறோம்,  அல்லது  செய்ய முடிகிறது என்பது நமது சுதந்திர
சித்தத்தினால் அல்ல!  மாறாக,  ஒரு  குறிப்பிட்ட  வகையில்  கட்டுப்படுத்தப்
பட்ட  நமது  சித்தத்தினால்  (Conditioned -Will) தான்  அவை சாத்திய
மாகின்றன!  முடிந்தவரையில்,   நாம் அனைவருமே கிட்டத்தட்ட ( சில வரை
யறைகளுக்குள்தான் என்றாலும்), நாம்விரும்பியவாறு தான் நம் வாழ்க்கை
யை  அமைத்துக் கொள்கிறோம்,  வாழ்ந்து  செல்கிறோம்;  என்றாலும்,  நாம்
மகிழ்ச்சியாக இருப்பதில்லை, நிறைவாக உணர்வதில்லை, ஒட்டு மொத்தத்
தில், நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகத் தெரிவதில்லை! ஒருவனின் சித்தம்
தெளிவாகவும்,  கூர்மையாகவும் இருக்கும் பட்சத்தில்,  அவன் தனக்கு நல்ல
தையே,  சிறந்ததையே,  உண்மையானதையே,  இறுதியானதையே  தெரிவு
செய்வான்!  அவனது சரியான தேர்வு, தவறாமல் அவனை நிறைவு செய்யும்,
முழுமைப்படுத்தி  விடுதலைப்படுத்தும்!   ஆனால்,  தவறானதை,  மட்டுப்பா
டானதை, கேடானதை ஒருவனது சுதந்திர சித்தம் தெரிவு செய்திடுமானால்,
அது நிச்சயம் சுதந்திர சித்தமாக இருக்கமுடியாது. மாறாக, அது மிகவும் மட்
டுப்பாடான,  விழிப்படையாத  அவனது  சொந்த  விருப்பச் சித்தமாகத்தான்
இருக்கமுடியும்!  நம்மில்  பெரும்பாலானோர் தமது விருப்பச் சித்தத்தையே
சுதந்திர சித்தம்   என  தவறாக  அடையாளப்படுத்திக் கொண்டு   வாழ்வில்
தடுமாறிக் கொண்டிருக்கிறோம்!  இவ்வகையில் காணும்போது நம்மில் பல
ருக்குச்  சுதந்திர சித்தம்  என்பதே  இல்லை  என்பது தெளிவாகும்!  சுதந்திர
சித்தம் என்பது சுதந்திரம்,விடுதலை என்பதைத்தவிர தன்னை வேறு எதனு
டனும் பிணைத்துக்கொள்வதோ, அடையாளப்படுத்திக் கொள்வதோ கிடை
யாது! தெரிவுகளற்ற சித்தம் தான் சுதந்திர சித்தம் ஆகும்!

சுதந்திரம்  என்பது இறுதியாக  அடையப்படுகிற விஷயம் அல்ல! ஒருவனுள்
சுதந்திர தாகம் ஏற்படும் போதே ஒருவன் சுதந்திரனாக  மிளிரத்  தொடங்கி
விடுகிறான்! ஆனால்,  சுதந்திர தாகம் சாதாரணமாக எல்லோருள்ளும் ஏற்ப
டுவதில்லை!  சுதந்திர சித்தத்திற்கு  எதிராக  இருப்பது  ஒருவனது விருப்பச்
சித்தமே!ஏனெனில்,எல்லோரும் சுதந்திரத்தை விரும்புவதில்லை;அப்படியே
விரும்பினாலும்   அதற்குரிய   விலையைக்  கொடுக்க   முன் வருவதில்லை!
அதற்கான விலை என்பது அப்படி ஒன்றும் அதிகம் இல்லை!  ஒருவனது அறி
யாமையும்,  அவனது  மட்டுப்பாடான  சுயமும்,  அவனுடைய  கீழான இச்சை
களும்,துய்ப்புகளும்,விருப்பத்தெரிவுகளும் தான் அதற்கான  விலையாகும்!
மூடன் தனக்கேயுரிய வகையில்,சுதந்திரத்தையும்,உண்மையையும்,மெய்ம்
மையையும்,  வாழ்வின் அர்த்தத்தையும்  கொச்சையாக வரையறை செய்து
கொள்கிறான்! . . . . .

விழிப்படைந்த  சித்தம்  தான் சுதந்திர சித்தம் ஆகும்!   விழிப்பே அனைத்து மட்டுப்பாடுகளிலிருந்தும் மற்றும்  மாற்றத்தின் உலகிலிருந்தும்  ஓருவனை
வெளியே  எடுத்து  முழுமைப்படுத்தி விடுதலை செய்யக்கூடியதாகும்! ஆம்,
"விழிப்பு" தான் விடுதலை, சுதந்திரம் யாவும் ஆகும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 10.01.2017
----------------------------------------------------------------------------

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...