
சோம்பி சும்மாயிருக்கும் மனம் மட்டுமல்ல, எதனாலும்
ஆக்கிரமிக்கப்பட்ட மனமும் கூட சாத்தானின் பட்டறையே!
- 'புதுமொழி'
மனிதன் என்பவன் அவனது உடலல்ல,
அவனது உணர்ச்சிகளும் அல்ல,
அவனது சிந்திக்கும் மனமுமல்ல,
எவையெல்லாம் அவனுடையவையோ
அவையெதுவும் அவன் அல்ல!
- மா.கணேசன்/ "பேசும் ஆடி"
எதனாலும் ஆக்கிரமிக்கப்படாத மனமே தூய்மையான, புனிதமான மனம்
என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை! தூய்மையானது, புனிதமானது என்ப
தெல்லாம் வெறும் அழகிய சொற்களே! இதன் அர்த்தம், அற்புதமானது, புனித
மானது என்றெதுவும் இல்லை என்பதல்ல; மாறாக, அவை நம்மால் நேரடியாக
அனுபவரீதியாக உணர்ந்தறியப்படும் வரை இல்லாதவை தான்.
உங்கள் மனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் விஷயம் எவையெவை என்
பதை நீங்கள் அவ்வப்போது அறிவதும்,அவற்றைக்கடந்து செல்வதும் அவசியம்!
அதற்குப்பெயர்தான் உண்மையில் "தியானம்" என்பதாகும்!
உங்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ உங்கள் அடி-மனத்திலிருந்தும், புற-
உலகிருந்தும் உள்புகும் பலவித எண்ணங்களாலும், உணர்ச்சிகளாலும், பிம்பங்
களாலும் எப்போதும் உங்கள் மனம் முற்றுகையிடப்படுகிறது, ஆக்கிரமிக்கப்படு
கிறது! அவற்றில் எத்தகைய அம்சங்கள் உங்கள் மனத்தை ஆக்கிரமிக்க நீங்கள்
அறிந்தோ,அறியாமலோ அனுமதிக்கிறீர்கள் என்பதுதான் உங்களது தன்மையை,
நீங்கள் எத்தகைய மனிதர் என்பதைத் தீர்மானிப்பதாகிறது!
பொதுவாக விதிவிலக்கின்றி எல்லா மனிதர்களின் மனங்களும் ஆக்கிரமிக்கப்
படுவது பெரிதும் உடல், மற்றும் உடல் சார்ந்த விஷயங்களைப் பற்றிய எண்
ணங்களாலும், உணர்ச்சிகளாலும் தான்! ஆனால், மனத்தின் மீதான உடலின்
இந்த ஆக்கிரமிப்பு ஒன்றே போதும், மனிதஜீவிகளை விலங்குகளாக்கி அவர்
களின் வாழ்க்கையைச் சிறுமைப்படுத்துவதற்கு!
மனிதர்கள் யாவரும் பிரதானமாகக் கருதுவது உடல்நலத்தைத் தான்! ஆனால்,
உடல் நலம் அடிப்படையானது, ஆகவே, முக்கியமானது தான்! அதையடுத்து,
மனநலம் இன்னும் முக்கியமானது; அதையடுத்து ஆன்ம நலம் அதிமுக்கிய
மானது! ஆம், உடல்நலம், மனநலம், ஆன்மநலம் இவை மூன்றும் ஒருங்கே
ஒரே சமயத்தில் பராமரிக்கப்பட வேண்டியவையாகும்! இவற்றில் ஒன்றின்
செலவில் இன்னொன்றின் நலத்தைப்பேணுவது முறையாகாது; அது மூன்றின்
நலன்களையும் பாதிக்கும்! சொல்லப்போனால், இம்மூன்றில், அச்சு போல
மையமானது மனநலம் தானாகும்! ஆகவே, நாம் அதிக கவனம் செலுத்த
வேண்டியது மனநலம் குறித்துத்தான்!
ஒருவனது மனநலம் குன்றினால், அல்லது பாதிக்கப்பட்டால் உடல் நலமும்,
ஆன்மநலமும் பாதிக்கப்படும்! பொதுவாக, மனிதசமூகத்தில், பைத்தியநிலை
யைத்தான் மன நலம் குன்றிய, அல்லது பாதிக்கப்பட்ட நிலை என்று கருதப்
படுகிறது! மற்ற யாவரும் மனநலம் பெற்றவர்களாகக் கருதப்படுகிறது! ஆனால்,
இது உண்மையல்ல! முறையாகச் சிந்திக்காத மூளையை, அல்லது மனத்தை
யும் பைத்திய நிலையுடன் தான் சேர்க்கவேண்டும்! அதாவது, ஆரோக்கியமான
மூளையைக்கொண்ட ஆனால் சிந்திக்காத மனத்தையுடைய மனிதர்களை மன
நலம் உள்ளவர்களாகக் கொள்ளவியலாது! மனிதமனமானது, தன்னையல்லாத
வேறு எதனுடனும் தன்னை, குறிப்பாக உடலுடன், அல்லது பிற பொருட்கள்,
உடமைகள், சொத்து, வங்கிக்கணக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி, உத்தியோகம்
போன்றவற்றுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் வரை, அது, மனநலம் என்
பதிலிருந்து வெகு தொலைவு விலகியே இருக்கிறது என்பதுதான் உண்மை!
ஏனெனில், மனிதன் என்பவன் அவனது உடல் அல்ல! 'மனிதன்' என்பதற்கான
முதல் தொடக்கநிலை எனும்வகையில், இப்போதைக்கு "மனம்" தான் மனிதன்
எனக் கொள்வதுதான் சரி! ஏனெனில், மனிதன் என்பதன் முழுமை நிலையான
"ஆன்மா" என்பதிலிருந்து காணும் பட்சத்தில், மனிதன் என்பவன் அவனது
மனமும் அல்ல என்றுதான் சொல்லியாக வேண்டும்! மனிதன் முதலில் ஒரு
உடல்-ஜீவியாக, ஒரு உதவியற்ற குழந்தையாகப் பிறக்கிறான்! பிறகு, இரண்டு
அல்லது மூன்றாம் வயதில் அவன் ஒரு மனஜீவியாகப் பிறக்கிறான், அல்லது,
எழுகிறான்! ஆனால், அதன்பிறகு, அவன் தன் மனத்திற்கு விழிப்பதைப்
பொறுத்து, அவன் ஒரு ஆன்மஜீவியாகப் பிறக்கிறான், அல்லது பிறக்காமல்
வெறும் மனஜீவியாகவே தேங்கிப் போகிறான்! உண்மையைச் சொன்னால்,
மனிதகுலத்தின் பெரும்பகுதி மனஜீவி எனும் கட்டத்திலேயே சிக்கிக்கொண்ட
தாக, முழுமை பெறாததாகவே உழன்று கொண்டிருக்கிறது எனலாம்!இன்னும்
சொல்லப்போனால், மனிதகுலத்தின் மிகப்பெரும்பகுதி மனஜீவி எனும் கட்டத்
திற்குள்ளேயே இன்னும் நுழையவில்லை எனலாம்!
ஆம், "ஆன்மா" எனும் உயர்-உணர்வுநிலையை ஒவ்வொருவரும் எட்டும்வரை,
மனம் என்ற அச்சில் தான் ஒவ்வொரு மனிதனும் அவனது வாழ்க்கையும்
சுழன்றாக வேண்டும்! மனிதன் உண்மையில் மனிதனாக ஆகவேண்டுமெனில்,
அவன் தனது மனத்திற்கு விழித்தாக வேண்டும். உண்மையில் "தான்" யார்,
எத்தகைய மெய்ம்மை என்பதை அவன் உணர்ந்தறிந்தாக வேண்டும். மனம்
என்பது உண்மையில் ஒரு தற்காலிக மையம் போன்றதே ஆகும்! எவ்வளவு
விரைவாக ஒருவன் மனம் எனும் மையத்திலிருந்து தன் உயர்-மையத்திற்குத்
தாவுகிறானோ, உயருகிறானோ, அவ்வளவிற்கு அவன் முழுமையைத்தழுவி
தனது பிறவிப்பயனை அடைவான்! இல்லையெனில், அவனது உடல் மரணத்
தைத்தழுவிடும்; அவனது மனம் மறு-சுழற்சிக்கு (Re-cycling) உட்படுத்தப்
படும். அதாவது, மன-ஜீவியான மனிதன் மறு-சுழற்சிக்கு உட்படுத்தப்படுவான்.
ஒருமுறை மனஜீவியாகப் பிறந்த மனிதன் தனது வாழ்-காலத்திற்குள் ஒரு
ஆன்மஜீவியாக மலரவில்லையெனில், அவன் மீண்டும் மீண்டும் பிறப்பது
என்பது தவிர்க்கவியலாத ஆன்மீகப்பரிணாம விதியாகும்! ஆகவேதான் பழம்
தமிழ்நாட்டின் ஞானிகள், சித்தர்கள் "பிறவிப்பெருங்கடல்" நீந்துதல் பற்றியும்
"மீண்டும் பிறவாமை" பற்றியும், "பிறப்பறுத்தல்", "முக்தி","மோட்சம்","வீடுபேறு",
"மரணமிலாப்பெருவாழ்வு" அடைதல் என்றெல்லாம் உயர் ஆன்மீகம் பேசியும்,
பாடியும் சொல்லிச்சென்றுள்ளார்கள்!
உண்மையில், தமிழ் நாட்டுச் சித்தர்களின், ஞானிகளின் "வாழ்க்கைப்பார்வை"
தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று என்றுதான் சொல்லவேண்டும்! உலகெங்கும்
மனிதர்கள் ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், கடைசியில் இறந்து போகிறோம்
என்கிற ரீதியில், வாழ்க்கையை மிக மேலோட்டமாக வாழ்ந்து செல்கையில்,
தமிழ்ச் சித்தர்கள், "மரணமில்லாப் பெருவாழ்வை" வாழ்ந்தும் சொல்லியும்
சென்றுள்ளார்கள்! "மரணமில்லாப்" "பெருவாழ்வு" - என்ன ஒரு பதச்சேர்க்கை!
'மரணமில்லாத வாழ்வு' என்று மட்டும் சொல்லாமல் மரணமில்லாத "பெரு
வாழ்வு" என்று சொல்லியுள்ளார்கள்! உலகத்தத்துவங்கள் மனித வாழ்க்கை
மரணத்தில் முடிந்துவிடுவதாகக் காண்கையில், தமிழ்ஞானிகள் மனித வாழ்க்
கையானது வீடு பேறு அடைவதிலும், மரணமில்லாப் பெருவாழ்விலும்
முழுமையடைவதாகக் கண்டுள்ளனர்!
ஆனால், மனம் தன்னை நோக்கி விழிக்காதவரை, அதாவது, மனிதன் தன்னை,
தனது உண்மையான அடையாளத்தை நேரடியாக உணர்ந்தறியாதவரை, பகல்
வெளிச்சத்தில் நடமாடும் ஒரு இருட்டு தான் அவன்!
மனத்தின் தவறான அடையாளப்படுத்துதல் தான் அனைத்து மனநலக்குறைவு
களுக்கும், மனக்கோணல்களுக்குமான ஒரே பிரதான காரணி ஆகும்! மனம்
என்பது நிறமற்றதொரு திரவம் போன்றது; ஆகவேதான், அது எதனுடன்
தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறதோ அதன் நிறத்தையும், வடிவத்தை
யும் எடுத்துக்கொள்கிறது! மேலும், உடலுக்கும், மனதிற்கும் மிக நெருக்கமான
தொடர்பு உள்ளதால், அதாவது, மனமானது உடல் எனும் அமைப்பில் (குறிப்
பாக மூளையின் இயக்கத்தில்) தான் உதயமாகிறது என்பதாலும், மனத்தின்
தொடர்ந்த இருப்பு உடலையே சார்ந்திருப்பதாலும், மிக இயல்பாக மனமானது
உடலுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது நிகழ்ந்துவிடுகிறது! இதன்
விளைவாக, உடலின் உபாதைகளையும், வலிகளையும், அதன் விதியையும்
மனமும் சேர்ந்து அனுபவிக்கவேண்டியுள்ளது! மனத்தின் தொடக்கக்காலத்தில்
நிகழ்ந்துவிடும் இத்தவறான அடையாளப்படுத்துதலிலிருந்து மிக அரிதாக சில
ரால் மட்டுமே தங்களை விடுவித்துக்கொள்ளமுடிகிறது!
ஆனால், உடலைப்பற்றிய ஒரு ரகசியம் என்னவென்றால், உடலானது தனது
நலத்தைத் தானே கவனித்துக்கொள்ளும் என்பதுதான்! மனமோ, பெரிதாகச்
சிந்திக்கும் திறனோ இல்லாத விலங்குஜீவிகள் பெரிதாக நோய்வாய்ப்படுவது
மில்லை, மருத்துவம் பார்ப்பதும் இல்லை! மனிதஜீவிகளைப் பொறுத்தவரை
மனத்தின் குறுக்கீடு தான் நோய்களுக்கான திறந்த கதவாகவுள்ளது! மனிதமன
மானது, தனது மிகஅசலான ஒரே பணியை உணர்ந்து அதில் தீவிரமாக ஈடுபடு
மெனில், பலவித மன-நோய்களும் மனிதனை அண்டாது!
மனம் தனது (உண்மையான)அடையாளம் குறித்து தனக்குத்தானே விசாரிக்கத்
தொடங்கும்போதுதான் உண்மையான மன-நலம் என்பது தொடங்குகிறது! அது
வரை, அதாவது, மனம் தன்னைத்தானே உணர்ந்தறியும் வரை தனது சொந்த
நிலையை அடைவதில்லை! தனது உண்மையான வாழ்க்கையையும் வாழ்வ
தில்லை! மாறாக, தானல்லாத, பிறிதொன்றிற்கு (உதாரணத்திற்கு, உடலுக்கு)
சேவை புரிவதை தனது வாழ்க்கையாகக்கொள்கிறது!
பொதுவாக விதிவிலக்கின்றி எல்லா மனிதர்களின் மனங்களும், உடல்,மற்றும்
உடல் சார்ந்த விஷயங்களைப் பற்றிய எண்ணங்களாலும், உணர்ச்சிகளாலும்
தான் ஆக்கிரமிக்கப்படுகின்றன எனக் கண்டோம்' இதையடுத்து, பொதுவாக
எல்லா மனிதர்களின் மனங்களும் ஆக்கிரமிக்கப்படுவது அன்றாட வாழ்க்கை,
மற்றும் அதுதொடர்பான அனைத்து விஷயங்கள், விவகாரங்கள், அலுவல்கள்
பிரச்சினைகள் ஆகியவை பற்றிய எண்ணங்களாலும், எதிர்பார்ப்புகளாலும்,
கவலைகளாலும் தான்! உண்மையில், உடல் சார்ந்த விஷயங்கள் என்பதும்,
அன்றாட வாழ்க்கை தொடர்பான விஷயங்கள் என்பதும் ஒன்றுதான்! அதைப்
பிரித்து விரிவாகச்சொல்லும் போது, தனித்தனி விஷயங்களாகத் தெரிகின்றன!
ஏனெனில், பொதுவான மனிதஜீவிகளைப்பொறுத்தவரை, வாழ்க்கை என்றாலே
அது "அன்றாட வாழ்க்கை" தான்! இன்னும் ஒட்டுமொத்தவாழ்க்கை என்பதும்
அதுதான், "அன்றாட வாழ்க்கை" மட்டும் தான்! இதையே வேறு சொற்களில்
சொன்னால், உடலை மையமாகக்கொண்ட, உடலின் தேவைகளைச் சுற்றிச்
சுழலுகின்ற வாழ்க்கைக்குப் பெயர்தான் "அன்றாட வாழ்க்கை"!
ஆகவேதான் ஏற்கனவே சொன்னோம், மனத்தின் மீதான உடலின் ஆக்கிரமிப்பு
ஒன்றே போதும், மனிதஜீவிகளை விலங்குகளாக்கி அவர்களின் வாழ்க்கை
யைச் சிறுமைப்படுத்துவதற்கு!" என்றோம்! பொதுவான மனிதஜீவிகளைப்
பொறுத்தவரை,உடல்பற்றிய அல்லது உடலின் பலவகைப்பட்ட தேவைகளைப்
பற்றிய சிறு குறிப்பும் இல்லாமல் போய்விடுமெனில், அவர்களது வாழ்க்கை
மொத்தமும் உடனடியாகச் சூனியமாகிப்போய்விடும்!
அப்படியானால், எதனாலும், எவ்வொரு விஷயத்தினாலும் ஆக்கிரமிக்கப்படாத
வகையில் ஒருவன் தனது மனத்தைக் காலியாக வைத்துக் கொள்வதுதான்
சரியானதா? அவ்வாறு வைத்துக் கொள்வது சாத்தியம் தானா? மேலும், உடலு
டனான அடையாளத்தைத் துறக்கும்பட்சத்தில் எதைக்கொண்டு வாழ்க்கையை
வாழ்வது? மனிதன் என்றாலே பிரதானமாக அவனது உடல்தானே முன்னே
நிற்கிறது? உடலைக் கவனிக்காமல் அதன் பசிகளை, பிற தேவைகளை நிறை
வேற்றாமல் எவ்வாறு உயிர்-வாழ்வது? என்றெல்லாம் நாம் கேட்கலாம்!
ஆனால், உடலுடனான அடையாளத்தைத் துறப்பதன் அவசியம் தான் இங்கு
வலியுறுத்தப்படுகிறதே தவிர, உடலைத் துறப்பது பற்றியல்ல! ஏனெனில்,
உடலைத்துறப்பது என்பது இயலாது; ஏனெனில், உடல் எனும் கூட்டில் தான்
மனம் எனும் பறவை, அதாவது மனிதன் வசிக்கிறான்! அப்படியே உடலைத்
துறக்க ஒருவன் முயற்சிப்பானெனில் அதில் அவன் வெற்றி பெறுவதற்குமுன்,
அவனது உடலானது அதன் ஆயுட்காலத்தை தீர்த்துமுடித்து அவனைத் துறந்து
விடும்! ஆகவேதான், வெறும் உடல் நலம் மட்டும் போதாது! மேலும், முழு-
உடல் ஆரோக்கியம் என்பது வெறும் இலட்சிய நிலையே தவிர, அதை அடை
வது இயலாது என்பதைவிட அதுவதல்ல மனித வாழ்வின் இலக்கு என்கிற
புரிதல் தான் முக்கியமாகும்!
ஆகவேதான், ஒருவன் உயிரோடிருக்கும் போதே, ஓரளவிற்கு ஆரோக்கியமாக
வும், சிந்தனைத்திறன் மங்காமலும் இருக்கும்போதே, தனது உண்மையான
அடையாளத்தைக் கண்டடைவது அவசர அவசியம் என ஞானிகள் அறிவுறுத்
துகின்றனர்!
அடுத்து, எதனாலும், எவ்வொரு விஷயத்தினாலும் ஆக்கிரமிக்கப்படாத மனத்
தின் பணிதான் என்ன? அதன் உண்மையான அடையாளம் என்பதுதான் என்ன?
ஆம், மனத்தின் ஒரே பிரதானப்பணி மெய்ம்மையை அறிவதுதான்; தன்னைப்
பற்றியதும், அனைத்தைப் பற்றியதுமான மெய்ம்மையை அறிவதே! மனத்தின்
உண்மையான அடையாளம் என்பது அது ஒரு "அறியும் உணர்வு" என்பதுதான்!
வேறு அடைமொழிகள் எதுவும் அதற்குப்பொருந்தாது! அப்படியே பொருந்தினா
லும் அவை அவனது மேற்புறத்தைச் சேர்ந்தவையும், தற்காலிகமானவையுமே
ஆகும்! அவை மனிதனை முழுமையாக வெளிப்படுத்தாது,விளக்காது! மனிதன்
தன்னைப் பிறவிஷயங்களுடன், அம்சங்களுடன் பினைத்துக்கொள்ளும் போது
மட்டுமே, 'தான் ஒரு சமூகப்பிரஜை', 'ஒரு பெண்ணுக்குக் கணவன்', 'தனது
குழந்தைகளுக்குத் தகப்பன்', 'தான் ஒரு பொறியாளன்', அல்லது 'சாதாரணத்
தொழிலாளி' என்பன போன்ற பிற உறவுகளும், அடையாளங்களும் அவற்றுக்
குரிய கடமைகளும் உருவாகின்றன!
ஆனால், மனிதனுக்கும், மெய்ம்மைக்கும் யாதொரு உறவுமில்லை, தொடர்பு
மில்லை எனில், பிற உறவுகள், கடமைகள் ஆகியவை அவனுக்கும், அவனது
வாழ்விற்கும் வழங்கிடும் அர்த்தம் பெரிதாக ஒன்றுமில்லை என்றே சொல்லி
விடலாம்! அதாவது, அவை அவனை, உயிர்-வாழ்தலின் விவகாரங்களில் ஈடு
படுத்துவதன் வழியாக, அவன் அர்த்தபூர்வமாகச் செயல் புரிவதாகவும், வாழ்
வதாகவுமான ஒரு பிரமையைத் தோற்றுவிக்கும், அவ்வளவுதான்!
ஆக, மனத்தின் ஒரே பிரதானப்பணி மெய்ம்மையை அறிவது, அதாவது,
தன்னைப்பற்றியும், அனைத்தையும் பற்றியுமான மெய்ம்மையை அறிவதுதான்
எனில், மெய்ம்மையை அறிய உதவும், சிந்தனைகள், செயல்பாடுகள் மட்டுமே
மனிதனை, அவனது மனத்தை ஆட்கொள்ளவும்,ஆக்கிரமிக்கவும் அனுமதிக்கக்
கூடிய மிகச்சரியான விஷயங்களாக இருக்க முடியும்! மனித மனம் தனது
ஒரே பிரதானப் பணியை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் வழிமுறையில்
மாபெரும் ரசவாத மாற்றத்தைத்தழுவி மலர்ந்திடும் ஆன்மாவாய் வெளிக்குள்
வெளிகடந்து நித்தியத்தினுள்!
மனம் என்பது வேறெதுவுமல்ல, அது கடவுள் மொட்டு! மலர்ந்து காணுங்கள்
அந்த இறுதி அற்புதத்தை!
மா.கணேசன்/ நெய்வேலி/ 29-06-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment