
மனிதன் என்பவன் தன்னில் தானே தோன்றினவனல்ல!
ஆனால், அவன் தன்னில் தானே முடிவானவன்!
அதற்கு அவன் தன் எல்லைகளை அறிந்திடல் வேண்டும்!
உடலைப் போர்த்திய தோல் அல்ல மனிதனின் எல்லை!
அது பிரபஞ்சப் பெருவெளியையும் உள்ளடக்கியது!
பிரபஞ்சம் தன் மையம் அடையும் நெடிய முயற்சியில்
உருமாற்றம் பெற்ற தற்காலிக மையம் தான் மனிதன்!
மனிதனின் மையமோ அவனது அகம் கடந்த புள்ளியில்!
மனிதனே! நீ உன் உண்மை மையம் அறிவதெப்போது?
மனிதன் வாழப்பிறந்தவன், எம்மனிதனும் எவ்வொரு குறிப்பிட்ட
பணிக்காகவும், தொழிலுக்காகவும் உருவாக்கப்பட்டவனல்ல!
ஆனால், அவனவன் தன் விருப்பப்படியும், திறமைக்கேற்பவும்
எப்பணியையும், தொழிலையும் தேர்ந்து மேற்கொள்ளலாம்!
பணியையும், தொழிலையும் ஒருவன் மீது திணிப்பதும்
தொழிலை வைத்து மனிதனை இனம்பிரிப்பதும் மடமையாகும்!
மனிதன் வாழப்பிறந்தவன், வாழ்தலே அவனது முதல்தொழில்!
வாழ்வின் உண்மையை அறிதலே உண்மையான வாழ்தல்!
பிறயாவும் முதல்தொழிலுக்குச் சேவை புரியும் உபதொழில்களே!
முதல் தொழிலுக்கு மனமுவந்து வாய்ப்பு வழங்காத சமுதாயம்
மனிதர்களைப் பிரித்தாளும் நயவஞ்சகர்களின் கூடாரம்!
அவனவன் தன் தரம் அறிந்து தன் இடம் வகிப்பது இசைவு!
மனிதன் ஒருவனுக்கு இன்னொருவன் மாற்று அல்ல!
சமமற்றவர்களை சமப்படுத்துவது சமத்துவ விரோதமாகும்!
ஏற்றம் இறக்கம் இரண்டுக்கும் இடமளிப்பதே சமத்துவம்!
குள்ளமானவன் உயரமானவனுக்கு எதிராகச் சுருங்கியவனல்ல!
உயரமானவன் குள்ளமானவனுக்கு எதிராக வளர்ந்தவனல்ல!
மனிதர்கள் அனைவரும் தம் உச்சத்தில் மட்டுமே சமமானவர்கள்!
அளப்பவன் இல்லையேல் அளக்கப்படுபவனும் இல்லை!
வளர்ச்சியை வாழ்பவனுக்கு அளவுகோல் எதற்கு?
மனிதர்கள் உருவத்தில் ஒன்றானவர்கள் உள்ளீட்டில் வேறானவர்கள்!
உருவ ஒற்றுமை சமத்துவத்திற்கு அடிப்படையாகாது!
உயிர் - வாழ்தலில் ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை
புல்,பூண்டு; புழு,பூச்சி; விலங்கு, மனிதன் யாவரும் சமமே!
அ,ஆ, இரண்டிற்கும் வித்தியாசம் இல்லையேல் மொழியில்லை!
மல்லிகையும், ரோஜாவும் மலர்களே - ஆயின் வாசம் வேறுவேறு!
சமத்துவம்பேசும் மனிதர்கள் மலர்வதுமில்லை, மணம்வீசுவதுமில்லை!
ஒப்பிடுதல் பொறாமையை வளர்த்து வளர்ச்சியைக் கெடுக்கும்!
பொறாமை வெறுப்பை விதைத்து மனஅமைதியைக் குலைக்கும்!
தேவைகளின் அளவை அறியாதிருப்பது மகிழ்ச்சியை அழிக்கும்!
பேராசை உள்ளதையும் துய்க்கவிடாது தடுத்து ஏழையாக்கிவிடும்!
உடமை-பாவம் அற்றவன்- பொருளென்ன, உயிரை இழக்கவும் அஞ்சான்!
தான் தனக்குச் சொந்தமில்லை என அறிந்தவன் கவலையில்லான்!
பொறாமை பேராசை சுயநலச்சுமைகள் இல்லையேல் அச்சமில்லை!
வாழ்க்கைநேசனுக்கு நற்குணம் தீக்குணம் இரண்டும் சுமைகளே!
முதல்தொழிலில் மூழ்கித்திளைப்பவனுக்கு ஊரும் உலகமுமில்லை!
உலக வழக்கில் உழலும்வரை உண்மை மீது ஆர்வம் எழுவதில்லை!
மனிதனே! உண்மை அறியாதவரை உனக்கில்லை விடுவிப்பு!
உள்ளதற்கும் உண்மைக்கும் இடைவெளியுள்ளவரை ஒருமையில்லை!
மனிதனே! ஒருமையடையும் வரை உனக்கில்லை முழுமை!
மனிதனே! முழுமையடையும் வரை உனக்கில்லை நிறைவு!
மாறாத மாற்றத்தை தன்னுள் மாற்றியமைப்பவனே முழு மனிதன்!
மனிதனே! இலக்கை அடையும்வரை உனக்கில்லை இரட்சிப்பு!
தம்மைக் கண்டடைந்து மனிதரானவர் அரிதிலும் அரிதான சிலரே!
மனிதனே! வாழ்க்கையே நம் அனைவருக்குமான ஒரே குலத்தொழில்!
எத்தொழிலைச் செய்யினும் முதல்தொழிலில் மூழ்கியவாறே செய்!
பிழைப்புக்கான தொழிலில் மூழ்கி வாழ்க்கையை தொலைத்திடாதே!
பிழைப்புக்காக அல்ல வாழ்க்கை, வாழ்க்கைக்காகவே பிழைப்பு!
பிழைப்புக்கும் வாழ்க்கைக்குமான பெரும் வித்தியாசம் அறிவாய் நீ
பிழைப்பு விலங்கிற்குரியது, வாழ்க்கை மனிதனுக்குரியது!
வாழ்வின் அர்த்தம் அறிதலே வாழ்தல்,மனிதனின் ஒரே சீரியதொழில்!
அர்த்தமறியப்படாத வாழ்க்கை வெறும் பகட்டுப் பிழைப்பே!
அரிய மானிடப்பிறவியை அறியாமையில் வாழ்ந்து அழிந்திடாதே!
சர்ச்சை, விவாதம், விமர்சனம், தூற்றுதல், இடித்துரைத்தல்
ஏதுமின்றி நல்லவிதமாக எடுத்துச்சொல்லவே விரும்புகிறேன்!
என்ன செய்வது, நிலத்தைப் பண்படுத்தாமல் விதைப்பது கூடாதே!
பிழைப்புக்கும் வாழ்க்கைக்குமான வித்தியாசத்தை வாழ்வதும்
போதிப்பதுமே எனது வாழ்க்கைப்பணியும், ஆன்மீகப்பணியும்!
மனிதனே! வாழ்க்கை என்றால் என்ன என்று நீ நினைக்கிறாய்?
வயிற்றுப்பிழைப்பல்ல வாழ்க்கை என்பதை உடனே உணர்ந்திடு!
பிழைப்பின் ஆதார மந்திரம் உணவு, உடை, உறையுள்!
வாழ்வின் மந்திரம் அர்த்தமறிதல், தன்னையறிதல், உண்மையறிதல்!
உன்னையறியும் உன்னுடனான உன் பணியை நன்கு நீ செய்தால்
பிறருடன் உனக்கேது சண்டை, சச்சரவு, ஒப்பீடு, முரண்பாடு?
பிழைப்புக்காக பிறருடன் நீ சேர்ந்துழைக்கும் களம் சமூகம்!
பிழைப்பை போட்டியும் போராட்டமுமாக நடத்துவது ஏன்?
எத்தனை மடங்கு பிழைத்தாலும் பிழைப்பு வாழ்க்கையாகாது!
வாழ்க்கைக்காக உன்னுடன் நீ தனியே உழைக்கும் களம் அகம்!
உன்னைக் கண்டடையும்வரை இடைவிடாது உன்னைத் தோண்டு!
"மறைத்துவைக்கப்பட்ட பொக்கிஷம்" மட்டுமே தரும் மகா சுகம்!
வாழ்க்கையே முதலும் முடிவுமான முழுமையான தொழில்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 09-07-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment