
உள்ளதை (உலகை)த் தழுவிக்கொண்டு உண்மை குறித்து வாளாவிருப்பவன்
ஏற்கனவே மரணத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டவனாவான்!
-•-
எங்கிருந்து தொடங்குவது?
உள்ளதிலிருந்து தான்!
எங்கே செல்வது?
உண்மைக்கு!
உண்மை எங்கேயிருக்கிறது?
உண்மை தனியே எங்குமில்லை! உள்ளதிலேயே
உட்பொதிவாய் உள்ளடங்கியுள்ளது!
உள்ளது என்பது எது?
இந்த உலகம், அதாவது பிரபஞ்சம், அதிலுள்ள அனைத்தும்,
மனிதன் உள்பட!
உள்ளதை விட்டு உண்மைக்கு ஏன் செல்ல வேண்டும்?
ஏனெனில், உள்ளதும் உண்மையும் ஒன்றல்ல!
மேலும், உள்ளதை விட்டு உண்மைக்குச் செல்ல வேண்டாம்.
உள்ளது தான் உண்மைக்கு செல்கிறது!
அப்படியானால், உள்ளது உண்மையில்லையா?
உண்மையை நோக்கிய இயக்கம் என்கிற வகையில் மட்டுமே உண்மை!
அப்படியானால் உள்ளதற்கும் உண்மைக்கும் உள்ள தொடர்பு என்ன?
உள்ளது (பிரபஞ்சம்) என்பது ஒரு விருட்சமெனில் உண்மை என்பது
அவ்விருட்சத்தின் வித்து ஆகும்! வித்து விருட்சமாக விரிந்து,
மீண்டும் (தன் கனிக்குள் தோன்றும்) வித்தினுள் அடங்குகிறது!
ஒரு வட்டம் பூர்த்தியாகிறது! வித்தில் தொடங்கியது வித்தில் முடிகிறது
அதாவது முழுமையடைகிறது!
உண்மைக்கு ஏன் செல்ல வேண்டும், உள்ளது போதாதா?
போதாது என்பதால் தானே அது தொடர்ந்து வளர்ந்து செல்லும்
ஒரு (பரிணாம) இயக்கமாக இருக்கிறது! உள்ளது பூரணமாயிருந்தால்
அது இயங்கவோ வளரவோ வேண்டியதில்லையே!
உள்ளது பூரணமற்றது, முழுமையற்றது, ஆகவே நிலையற்றது. ஆகவே,
நிரந்தரமற்றது! நதியின் உய்வும், நிறைவும் சமுத்திரம் சேருவதிலேயே
அடங்கியுள்ளது!
உள்ளதற்கும், மனிதனுக்கும், உண்மைக்கும் உள்ள தொடர்பு என்ன?
உள்ளதன் (உலகின்) பிரதிநிதி தான் மனிதன்; மனிதனின் மலர்ச்சியே
உண்மை! உண்மையில், மனிதனானவன் உலகைவிட உண்மைக்குத்தான்
அதிக அருகில் உள்ளான்! ஆனால், அவன் தனது தவறான விருப்பங்களின்
அடிமையாகி உலகப்பொருட்களுக்கு ஊழியம் செய்துகொண்டிருக்கிறான்!
அதனால் அவன் உண்மையிலிருந்து வெகு தொலைவு விலகியிருக்கிறான்!
உள்ளதன், அதாவது உலகின் பகுதியாக விளங்கும் மனிதன் எவ்வாறு
உண்மைக்கு நெருக்கமாக இருப்பதாகக் காணமுடியும்?
முதலிடத்தில், உலகம் என்பது தனக்குச் சொந்தமானதாக, தன்னைச் சேர்ந்த
தாயிருக்கவில்லை! மேலும், மனிதன் ஏற்கனவே காக்கைக்கூட்டில் வாழும்
குயில் குஞ்சுகளைப்போலத்தான் இவ்வுலகில் வாழ்ந்துவருகிறான்! உலகம்
மொத்தமும் உண்மையைச் சேர்ந்ததும் உண்மைக்குச் சொந்தமானதுமாகும்!
ஏனெனில், உண்மையின் விசேடமானதொரு வெளிப்பாடு, அல்லது
உருமாற்றம் தான் உலகம் என்பதாகும்! உலகின் ஒரே மாபெரும் விழைவு
உண்மையாக உருமாறுவது, அதாவது தனது உண்மையைத் தரிசிப்பதே!
ஆனால், உலகம் நேரடியாக ஒரே முயற்சியில் அதைச் சாதித்து
விட முடியாது! ஆகவேதான் உலகமானது முதலில் உயிர்ஜீவியாக
அவதாரம் எடுத்தது! உயிர்ஜீவிகளின் வழியாக உலகமானது உயிர்-இருப்பு
எனும் சுற்றுவட்டப்பாதையில் மட்டுமே தன்னை எய்துகொள்ள முடிந்தது!
அடுத்ததாக, அது மனிதஜீவியாக அவதாரம் எடுத்ததில், உணர்வு-இருப்பின்
தொடக்க நிலையைக்குறிக்கும் சுற்றுவட்டப்பாதையில் மட்டுமே தன்னை
எய்துகொள்ள முடிந்தது! அதாவது, உயிரும், உணர்வுமற்ற சடப்பிரபஞ்ச
மானது உயிர்-ஜீவியாக மாற்றமடைந்தாலும், உயிர்-ஜீவிகளில் எதுவும்
பிரபஞ்சத்தினுடைய உண்மையை உணர்ந்தறிவதற்கு உதவிடவில்லை!
மாறாக, உயிர்-ஜீவிகள் அனைத்தும் வெறுமனே உயிர்-பிழைப்பதை மட்டுமே
தம் வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாகவும், இலக்காகவும் கொண்டுவிட்டன!
ஆகவே பிரபஞ்சமானது உயிர்-ஜீவி என்ற நிலையிலிருந்து 'மனிதன்' எனும்
அடுத்த நிலைக்கு பரிணமித்தது! ஆனால், மனிதஜீவிகளும் உயிர்-பிழைத்தல்
என்பதிலேயே தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர்! அதாவது,
மிகவும் பிறழ்ச்சியான வகையில், உயிர்-பிழைப்பதை எவ்வளவு அலங்கார
மாகவும், ஆடம்பரமாகவும், பகட்டாகவும் செய்யவியலும் என்பதையே தம்
ஒரே பிரதான குறிக்கோளாகவும், இலக்காகவும் கொண்டுவிட்டனர்!
எனினும், மிக அரிதாக கோடியில் ஓரிருவர், பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த
விழைவைத் தம்முள் உணர்ந்தவராக உண்மை மீது பெருநாட்டம் கொண்டு
உண்மையைக் கண்டடைதலுக்காக தம் வாழ்க்கையை முழுமையாக
அர்ப்பணித்துவிடுவதுடன், உண்மையைத் தம் வாழ்-காலத்திற்குள்ளாகவே
கண்டடைந்தும் விடுகிறார்கள்! ஏனெனில், "உண்மை" தான் பிரபஞ்சம்
மற்றும் மனிதனின் உள்ளார்ந்த விழைவு ஆகும்!
மேலும், ஒருவகையில் மனிதன் உலகின் ஒருபகுதியே என்றாலும் அதுவே
அவனைப்பற்றிய முழுமையான, இறுதியான உண்மையல்ல! இதை நாம்
தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் மனிதன் என்பவன்
உலகின், பிரபஞ்சத்தின் எத்தகைய பகுதி என்பதைப் புரிந்து கொண்டாக
வேண்டும்! அதாவது, பிரபஞ்சம் என்பது ஒரு விருட்சம் எனில், நாம் அதன்
கிளைகளா, இலைகளா, பூக்களா, அல்லது பிஞ்சுகளா, காய்களா, அல்லது
அப்பிரபஞ்ச விருட்சத்தின் கனிகளா என்பதை உடனடியாக அறிந்தாக
வேண்டியது முக்கியமாகும்! பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த பரிணாமவளர்ச்சிக்
கிரமத்தின்படி பார்க்கும் போது, மனிதர்கள் பிரபஞ்ச விருட்சத்தின்
பிஞ்சுகளும், காய்களுமாகவே இருக்கிறார்கள்! ஏற்கனவே சொல்லியவாறு
கோடியில் ஓரிருவர் மட்டுமே பிரபஞ்ச விருட்சத்தின் ஒப்பற்ற கனிகளாக
மாறி பிரபஞ்சத்தை முழுமைப்படுத்துகின்றனர்! அதாவது அவர்கள்
இப்பிரபஞ்சத்தின் பகுதியாக இல்லாமல், உண்மையின் பகுதியாக விளங்கு
கின்றனர்! மிக அரிதான இத் தனிமனிதர்கள் உள்ளதற்கும், உண்மைக்குமான
இடைவெளியை தங்களைக்கொண்டு நீக்கிவிடுகின்றனர்!
அதாவது, மனிதர்கள் பிரபஞ்சத்தின் பகுதியாக அமைந்திருப்பது அவர்களைப்
பற்றிய தொடக்க நிலை நிலவரம் ஆகும்! அதாவது, அவர்கள் முழுமையாக
ஒரு உணர்வாகத் தங்களை உணராத பருவத்தின் நிலையாகும்! மேலும்,
விருட்சத்தின் உவமையைக்கொண்டு சொன்னால், விருட்சத்தின் பிஞ்சுகள்
முற்றிக் கனியாதவரை தான் அவை விருட்சத்தின் பகுதிகளாக நீடிக்கின்றன!
நன்கு முற்றிக்கனிந்ததும் அவை விருட்சத்தை விட்டு நீங்கிவிடுகின்றன!
உண்மையைச் சொன்னால், வித்தினால் தான் விருட்சத்தின் பிறப்பும்,
இருப்பும், முடிவும், முழுமையும், அர்த்தமும் யாவும் அமைகின்றன!
இந்த விளக்கத்தையே ஒரு சூத்திரமாகச் சொன்னால் :
வித்து தான் விருட்சமாகிறது!
விருட்சம் மீண்டும் வித்தினுள் அடங்குகிறது!
விருட்சம் மாயை!
வித்து மட்டுமே நிஜம்!
உண்மையில், "உண்மை" என்பதுதான் என்ன?
உண்மை என்பது ஒருமையும் முழுமையுமான மெய்ம்மை! அதுவே
உள்ளதனைத்தின் சாரம் - மூலமும், முடிவும்! மனிதனைப்பொறுத்தவரை,
உண்மை என்பது அவனை முழுமைப்படுத்தி உய்விக்கும் உயிரின் உயிர்!
மரணம் கடந்த பேரிருப்பு! உலக இயற்கையைக் கடந்த பேரியற்கை!
அவனது ஆன்மாவின் ஆன்மா!
உண்மை என்பது எத்தகைய மெய்ம்மை? அது ஒரு பொருளா, அல்லது
பொருள் தன்மைக்கு மாறானதா?
உண்மையானது அதன் ஆகச்சுருங்கிய அடிமட்ட நிலையில் வெறும் சடப்
பொருளே! அதன் அசலான உச்ச மட்ட நிலையில் அது ஒரு பேருணர்வு!
இவ்விரண்டு எல்லைகளுக்கிடையே அது உயிர்-ஜீவிகளில் உயிராகவும்,
மனிதனுள் சிற்றுணர்வாகவும் உள்ளது! அதே வேளையில், உண்மைக்குச்
சமமான அல்லது நிகரான எதுவும் உலகில் இல்லை! அதோடு, கால-வெளிச்
சட்டகத்தினுள் ஒருபோதும் உண்மை என்பது வெளிப்படப்போவதுமில்லை!
ஏனெனில், "காலாதீதம்" தான் உண்மையின் வீடு ஆகும்!
"காலாதீதம் தான் உண்மையின் வீடு!" என்றால் கால-வெளி உலகில் வாழும்
மனிதன் எவ்வாறு உண்மையை உணரமுடியும்?
உணர்வை (அதாவது மனிதன் தன்னை) காலத்திலிருந்து விடுவித்துக்கொள்
வதன் மூலம் உடனடியாக காலாதீதத்தை உணரலாம்! காலத்திலிருந்து
எவ்வாறு விடுவித்துக்கொள்வது என்றால், கடந்த காலம், வருங்காலம்
இரண்டையும் அவ்வப்போது தற்காலிகமாக மறந்து இப்போதில் வாழ்வதன்
மூலம் ஒருவன் தன்னை மிக எளிதாக காலத்திலிருந்து விடுவித்துக்
கொள்ள இயலும்! அல்லது கால-உணர்வின்றி எல்லா விஷயங்களையும்
தற்காலிகமாக மறந்து இருப்பதன் மூலமும் எளிதாக இதைச் சாதிக்கலாம்!
அதே நேரத்தில், இவற்றை ஒருவன் வெறும் தந்திரோபாயமாகக் கடைபிடிப்
பதன் வழியாக எதையும் சாதிக்க இயலாது! மாறாக, எவனொருவன் தீவிர
மாக உண்மையை நேசிக்கிறானோ அவனால் மட்டுமே உண்மையை அறிய
இயலும்! உலகம் ஏன் எதற்காக உள்ளது? அதில் தாம் ஏன், எதற்காக இருக்
கிறோம்; தனது இருப்பின், வாழ்வின் உண்மையான நோக்கம், குறிக்கோள்,
மற்றும் அர்த்தம் அல்லது இலக்கு தான் என்ன? என்றெல்லாம் ஆழமாக
விசாரம் செய்யாமல், வெறுமனே சில ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்வதன்
மூலம் எவ்வொரு ஆன்மீக வளர்ச்சியும், மாற்றமும் ஏற்படாது!
மனிதனின் பகுத்தறிவு "பருப்பொருளாலான உலகம் மட்டுமே நிஜம்"
என்கிறதே?
மனிதன் பகுத்தறிவுடன் நின்றுவிடுவது மிகவும் ஆபத்தான
மட்டுப்பாடாகும்! ஏனெனில், பகுத்தறிவு என்பது இறுதியான அறிவு அல்ல!
அனைத்தையும் பகுத்தறியும் மனிதன் தொகுத்தறியத் தவறுவது ஏன்?
பகுத்தறிவைத் தாண்டிய மனிதனின் "தொகுத்தறிவு" சொல்கிறது:
"மனித உணர்வைக் கடந்த ஒரு பேருணர்வு தான் இறுதி நிஜம்!"
பருப்பொருளல்லாத நிஜங்கள் இப்பிரபஞ்சத்தில் உள்ளனவா?
இக்கேள்வியை பருப்பொருளாலான மனித-உடல் கேட்பதாகத்
தெரியவில்லை! மாறாக, மனிதமனம், அல்லது மனிதஉணர்வு தான்
கேட்கிறது! ஆம், உணர்வாகிய மனிதன் ஒரு பருப்பொருளல்லாத
நிஜமே ஆவான்! இன்னும், ஒவ்வொரு புழு, பூச்சியின் உயிர் எனும்
அம்சமும் பருப்பொருளல்லாத நிஜமே!
மேலும், பிரபஞ்சம் என்பது கேலக்ஸிகள், நட்சத்திரங்கள், கோள்களைக்
கொண்ட வெறும் சடப் பொருட்களின் மாபெரும் அமைப்பு மட்டுமல்ல!
இதையடுத்து எழுந்த இரண்டாவது பிரபஞ்சம் ஒன்றும் உள்ளது. ஆம்,
உயிர்-ஜீவிகளின் கோளம் தான் அது! இதையடுத்து எழுந்த மூன்றாவது
பிரபஞ்சம் உணர்வு-ஜீவிகளான மனிதர்களின் உணர்வுக்கோளம்!
புழு, பூச்சிகள், விலங்குஜீவிகள் யாவும் பருப்பொருளாலானவை தானே?
ஆம்! அதே நேரத்தில் கூழாங்கற்களும் பருப்பொருளாலானவை தான்;
ஆனால், அவை உயிரற்றவையாக உள்ளனவே! அப்படியானால், பருப்
பொருளில், 'உயிரற்ற', உயிருள்ள' என இரண்டு வகைகள் உள்ளனவா?
இன்னும், இவ்விரண்டையும் கடந்து உணர்வுள்ள பருப்பொருள் என
மூன்றாவது வகையும் உள்ளதா என்ன? ஒரு புழு என்பது பருப்பொருளால்
போர்த்தப்பட்ட, அல்லது வடிவமைக்கப்பட்ட "உயிர்" ஆகும்! அல்லது உயிர்
என்பது ஒரு "இருப்பு நிலை", அந்த நிலையை எட்டித் தொடர்பு கொள்ளும்
வகையில் சுய-அமைப்பாக்கம் பெற்ற ஒரு ஜீவியே புழு என்பதாகும். ஒட்டு
மொத்த சடப் பிரபஞ்சத்தைக்காட்டிலும் உயிருள்ள ஒரு புழு உயர்வானது!
அப்படியானால், மனிதன் எத்தகையவன்?
சடம், உயிர், உணர்வு ஆகிய இம்மூன்று பண்புகளின் சங்கமம் தான்
மனிதன்! மனிதன் உணர்வுள்ளவன் என்பது தான் அவனைப்பற்றிய தனிச்
சிறப்பு! இன்னும் துல்லியமாகச் சொன்னால், மனிதன் உணர்வைக்
கொண்டவன் அல்ல; மனிதனும் உணர்வும் வேறு வேறல்ல! உணர்வு தான்
மனிதன்! இவ்வளவு துல்லியமாக தன்னை உணரும் அளவிற்கு எல்லா
மனிதர்களும் இன்னும் வளரவில்லை! "தான் ஒரு உணர்வே!" என்பதை
உணரும் போதுதான் உண்மையில் மனிதன் பிறக்கிறான்! இதற்கு முந்தைய
அவனது நிலைகள் யாவும் வெறும் முன்னேற்பாடுகளே! இறுதியாக அவன்
பேருணர்வுடன் சங்கமிக்கும் போதுதான் முழுமையடைகிறான்!
ஆனால், உள்ளது (அதாவது உலகம்) மனிதனை முழுமையாக ஆக்கிரமித்துக்
கொள்கிறதே? மேலும், அது, உண்மையைச் சுட்டும் வகையிலான யாதொரு
குறிப்பையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லையே
இல்லை! உண்மையில், உலகம் மனிதனை ஆக்கிரமித்துக்கொள்வதில்லை!
மாறாக, மனிதன் தான், "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்!" என்பதாக
தன்னுணர்வற்றவனாக முழுமையாக உலகைச் சார்ந்தே வாழ்ந்துகொண்டு
இருக்கிறான்! உணர்வுக்கொழுந்தான மனிதனுக்கே "தான் ஏன் இந்த உலகில்
வாழ்ந்த்து கொண்டிருக்கிறோம்?", "உலகம் ஏன் எதற்காக இருக்கிறது?"
என்பது போன்ற கேள்விகள் தோன்றாதபோது, உயிரும் உணர்வுமற்ற
சட- உலகம் எவ்வாறு உண்மையைப் பற்றிய குறிப்பை நேர்முகமாக வழங்க
இயலும்? அதே நேரத்தில், உண்மையின் நிறம், மணம், மற்றும் சுவை
என்னவென்று அறியாவிட்டாலும், அவற்றையெல்லாம் அறியக்கூடிய வகை
யிலான உயிருள்ள உணர்வுள்ள மனிதஜீவியாக உலகம் பரிணமித்தது! ஆம்,
உண்மையில் ஒவ்வொரு மனிதஜீவியும் ஒரு குறும் பிரபஞ்சமே ஆவான்!
அதாவது, பிரபஞ்சத்தின் சார்பாக உண்மையை அறிவதற்கான உணர்வுப்
பூர்வமான பிரதிநிதியே ஒவ்வொரு மனிதனும் ஆவான்! ஆம், பிரபஞ்சத்தின்
ஒரு விசேட வடிவம் அல்லது அவதாரம் தான் மனிதன்! ஆகவே,
உண்மையை அறியும் பொறுப்பு முழுக்கமுழுக்க ஒவ்வொரு மனிதனையும்
சார்ந்ததே!
உள்ளது(உலகம்), உண்மை இவ்விரண்டில் எது முக்கியம்? அல்லது மனிதனின்
வழியாக உலகமானது உண்மையை அறிந்த பிறகு, இவ்வுலகம் என்னாகிறது?
மனிதன் என்னாகிறான்,
சந்தேகத்திற்கிடமில்லாமல் "உண்மை" மட்டுமே முக்கியமானது!
உண்மையை அறிந்த பிறகு, உள்ளது, உண்மை எனும் பிளவு அல்லது
இருமை நீக்கப்பட்டு பிரபஞ்சம், மனிதன், யாவும் ஒருமையில் கலந்து
விடுகின்றன! இதற்கான நிரூபணம் உண்மையை நேரடியாகத் தம்முள்
உணர்பவருக்கு மட்டுமே புலனாகும்! ஏனெனில், உண்மை என்பது உணர்வு
மயமானதொரு மெய்ம்மையாகும்; அதாவது, அதுவே உணர்வின் உச்சமும்,
முழுமையும், இறுதிச் சொல்லும் ஆகும்!
மேலும், எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் எதுவென்றால்,
எந்த உலகைச் சார்ந்து நாம் வாழ்கிறோமோ அந்த உலகம் அநித்தியமானது
என்பதைவிட, மனிதஜீவிகளாகிய நாம் எவ்வளவு தற்காலிகமானவர்கள்
என்பதே நமது சீரிய கவனத்திற்குரிய விஷயமாகும். நாம் வாழ்ந்துகொண்டு
இருக்கும் இந்த உலகம் நம்மை அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகளுக்கு
மேல் உயிருடன் வைத்திருப்பதில்லை! இதில், எவ்வளவு குறுகியது நமது
'வாழ்-காலம்' எனக் குறைபட்டுக்கொள்வது அல்ல நாம் ஒவ்வொருவரும்
செய்யக்கூடிய பெரிய சாதனை! மேலும், அதிக பட்சம் ஒருவர் எவ்வளவு
ஆண்டுகள் உயிருடன் இருக்கப்போகிறார் என்பது எவருக்கும் தெரியாது!
ஆக, எது முக்கியம் எனில், உயிருடன் இருக்கும் இந்தக்கணம் மட்டுமே!
இவ்வாறு சொல்வதன் நோக்கம், வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை பெரிது
படுத்துவதோ, அல்லது, நம்பிக்கை கொள்வதை வலியுறுத்துவதோ அல்ல!
மாறாக, இந்தக்கணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை முழுமையாகவும்,
ஆழமாகவும், தீவிரமாகவும், வாழ்வது, அதாவது, உணர்வுகொள்வது
மட்டுமே முக்கியமாகும்! அதாவது, ஒருவரது வாழ்-காலம் நாற்பது, ஐம்பது
ஆண்டுகளோ, அல்லது அறுபது, எழுபது ஆண்டுகளோ, எவ்வளவாயினும்
அக்காலப்பகுதி மட்டுமே இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில்
அதிமுக்கியத்துவம் வாய்ந்த அம்சமும்; ஒவ்வொரு மனிதனும் பெற்றுள்ள
"அரிய வாய்ப்பும்" ஆகும்!
ஒருவனது வாழ்-காலம் எனும் அரிய வாய்ப்பு குறுகியதோ, அல்லது
நெடியதோ, அது தன்னுள் கொண்டிருக்கும் சாத்தியம் அளவற்றதாகும்!
அதாவது, மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் சாதித்தாக வேண்டிய
அந்த ஒப்பற்ற இலக்கு எதுவோ அதை இக்கணத்திலேயே ஒவ்வொரு
வராலும் சாதிக்க முடியும்!
ஆகவே, ஒவ்வொரு மனிதனும் "வாழ்க்கை" எனும் இந்த அரிய வாய்ப்பை
தன்னுடைய உண்மையான ஆதாரத்தைக் கண்டடைவதற்கான வழியில்
முறையாகப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும்! ஏனெனில்,
இந்த உலகம் மனிதனைக் கைவிட்டுவிடும்! ஆகவே, மனிதன் இவ்வுலகைச்
சார்ந்திருப்பதில் அர்த்தமில்லை! அவ்வாறே அவனது உடலும், இன்னரும்
உயிரும் அவனைக் கைவிட்டுவிடும்! கடவுள் நம்பிக்கை என்பது வெறும்
ஆறுதலை மட்டுமே அளிக்கக்கூடிய சுய-மனோவசியம் ஆகும்! கடவுள்,
உண்மை, அல்லது இறுதி மெய்ம்மை என எதுவாயினும் அது மனிதனின்
உணர்வில் ஏற்படக்கூடிய மாபெரும் மாற்றத்தினால் மெய்ப்பட வேண்டும்!
இல்லாவிடில், கடவுள், உண்மை, மெய்ம்மை, அர்த்தம் என்று
சொல்லப்படும் யாவும் வெறும் கோட்பாடுகள் மாத்திரமேயாகும்!
"உண்மை" என்பது தத்துவவாதிகளின் கற்பனைக் கண்டுபிடிப்போ, அல்லது
அறிவுஜீவிகளின் கோட்பாடோ அல்ல! மாறாக, மிகுந்த பசியோடிருக்கும்
ஒருவனுக்கு உணவு எவ்வாறு ஆருயிர் மருந்தாக அமைகிறதோ, அவ்வாறே
"உண்மை" என்பது உணவை விட அனந்த அளவு மெய்ம்மைத்தன்மை
உடையதாகும்! மேலும், உணவு வயிற்றை நிரப்பி பசியை மட்டுமே நீக்கும்!
உணவு, வாழ்வின் அர்த்தத்திற்கான பசியைப் போக்காது!
ஆனால், உண்மையோ, மனிதனுக்கு வாழ்வின் அர்த்தத்தை அளிப்பதுடன்,
முழு நிறைவையும், அகலாத ஆனந்தத்தையும் தந்து இறவாத்தன்மையை
யும் அளிக்கும் அமிர்தம் ஆகும்!
ஆனால், சாதாரண, சராசரி மனிதர்களுக்கு கண்களுக்குப் புலப்படாத
உண்மையைவிட, கண்முன்னே தெரியும் உலகம் மட்டுமே நிஜமானதாகவும்,
நிரந்தரமானதாகவும் படுகிறது! ஆகவே, பொதுவாக மனிதர்கள் உலகத்திற்கு
மாற்றாக, ஈடாக வேறு எத்தகைய மகா-மெய்ம்மையையும் ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள்! ஒரு தவளையைப் பொறுத்தவரை, அதற்கு தன்னைச் சுற்றி
ஒரு மாபெரும் உலகம் இருப்பதே தெரியாது! மாறாக, தவளைக்கு அதன்
இரையும், இணையும், பகை-விலங்கும் மட்டுமே தெரியும்! தவளையின்
இந்த மட்டுப்பாட்டுடன் ஒப்பிடுகையில் மட்டுமே சராசரி மனிதர்கள்
தவளையைவிட மேலானவர்கள் எனலாம்! அதாவது, மனிதர்களுக்கு உலகம்
என்று ஒன்று உள்ளது என்பது மட்டும் தெரிகிறது. ஆனால், உலகம் ஏன்,
எதற்காக இருக்கிறது? அதில் நாம் ஏன் இருக்கிறோம்? நம்முடைய
வாழ்வின் குறிக்கோள் என்ன? என்பதெதுவும் மனிதர்களுக்குத் தெரியாது!
ஏனெனில், இவற்றைப் பற்றியெல்லாம் புரிந்துகொள்வதன் அவசியத்தையும்,
முக்கியத்துவத்தையும் உணரும் அளவிற்கு இன்னும் அவர்கள்
'உணர்வு-வளர்ச்சி' பெறாதவர்களாக இருக்கிறார்கள்!
உண்மையை அறிந்த பிறகு, இவ்வுலகம் என்னாகிறது? மனிதன்
என்னாகிறான்? எனும் இக்கேள்வி பாமரத்தனமானது! உலகின் இருப்பு
அவர்களுடைய பார்வையை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்ளுமாறு
விட்டுவிட்ட அவர்களால் வேறு எதைப்பற்றியும் கவனம் கொள்ளவும்,
சிந்திக்கவும் இயலுவதில்லை! அவர்களும் தங்களது அன்றாடத்
தேவைகளைத் தாண்டி வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதும் இல்லை!
"உண்மை" என்பது உலகின் ஏதோவொரு சிறு பகுதியைப் பற்றிய விபரம்
அல்ல; மாறாக ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தின் சாரத்தைப் பற்றிய உண்மை!
ஒரு விருட்சத்தின் உண்மை என்பது அவ்விருட்சத்தின் கனிகளுக்குள்
இருக்கும் வித்து ஆகும்! வித்து என்பது விருட்சத்தின் சாரம் மட்டுமல்ல,
அதுவே அதன் மூலமும், முடிவும் (முழுமையும்) ஆகும்! ஒரு வித்தினுள்
ஒரு முழு விருட்சமே அடங்கியுள்ளது; ஆனால், அவ்வித்தினுள்
விருட்சத்தின் எவ்வித சாயலும், அதாவது, விருட்சத்தின் கிளை, இலை, பூ,
பிஞ்சு, காய் போன்ற எவ்வொரு பகுதியின் சாயலும் காணப்படுவதில்லை!
அவ்வாறே, இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் உள்ளடங்குகிற ஒரு வித்து
தான் "உண்மை" எனப்படுவதாகும்! அந்த "உண்மை" தான் பிரபஞ்சத்தின்
ஆதாரமாகும்!
இவ்விடத்தில், பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு
எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்! ஒரு விருட்சத்திற்கும்
(மரத்திற்கும்) அதன் காய்களுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ
அத்தகையதே பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பும் ஆகும்!
ஆம், மனிதர்கள் பிரபஞ்ச விருட்சத்தின் பிஞ்சுகளும் காய்களும் ஆவர்!
இந்த உவமை சற்று கற்பனைக்கு எட்டாததாய்த் தெரியலாம்; ஆனால்,
இது தான் மனிதனைப் பற்றிய உண்மை! அதாவது, பிரபஞ்ச விருட்சத்தின்
பிஞ்சுகளும் காய்களுமான மனிதர்கள் தங்கள் உணர்வில் முற்றிக் கனியும்
போது, கனியினுள் இருக்கும் வித்தில் விருட்சம் அடங்குவது போலவே
உணர்வில் நன்கு கனிந்த மனிதனுள் இப்பிரபஞ்சம் அடங்கிப்போகும்! ஆம்,
உணர்வில் கனிந்த நிலை தான் "உண்மை" என்பதாகும்! ஆக, உண்மையை
உணர்ந்த பிறகு உலகமும், மனிதனும், உணர்வு கனிந்த "முழு-உணர்வு"
நிலையில் அடங்கிப்போவார்கள்!
அதே நேரத்தில், ஒரு விருட்சத்தில் கனிகள் தோன்றிய பிறகும் கூட
இதன் அர்த்தம் ஒரு விருட்சத்தில் கனிகள் தோன்றியவுடன் அவ்விருட்சம்
காணாமல் போய்விடும் என்பதல்ல! நன்கு கனிந்த கனியானது
விருட்சத்திலிருந்து விடுபட்டுவிடும் என்பதும் உண்மையே! அதேநேரத்தில்,
நன்கு கனிந்திருந்தாலும் கனிகள் கீழே விழாமல் விருட்சத்திலேயே சிறிது
காலம் இருப்பதும் உண்டு! அவ்வாறே, உண்மையை உணர்ந்த பிறகும்
மனிதர்கள் இவ்வுலகில் வாழ்வதுண்டு! நன்கு கனிந்ததும், விருட்சத்தின்
கனி கீழே தரையில் விழுந்துவிடும். ஆனால், உணர்வில் முழுமையாகக்
கனிந்த மனிதன் காலாதீதத்துள் ( நித்தியத்துள்) ஐக்கியமாகிறான்!
உண்மையை உணர்ந்த மனிதன் காலத்தின் உலகில் கால்பதித்திருந்தாலும்,
அதேசமயம் அவனது இதயமும், தலையும் காலாதீதத்தினுள்
அடைக்கலம் அடைந்திருக்கும்!
அதேநேரத்தில், ஒரு விருட்சத்தில் தோன்றும் பிஞ்சுகள் எல்லாமும்
காய்களாகி முற்றிக் கனிந்துவிடுவதில்லை என்பதைப்போலவே, பிரபஞ்ச
விருட்சத்தின் பிஞ்சுகளான மனிதர்கள் எல்லாருமே தம் உணர்வில் கனிந்து
விடுவதில்லை! சொல்லப்போனால், பெரும்பாலான மனிதர்கள் பிஞ்சு
நிலையிலேயே உதிர்ந்து போய்விடுகின்றனர்! கொஞ்சம் பேர்கள் மட்டுமே
சிறிது முற்றிய காய்களாக ஆகின்றனர்! அரிதிலும் அரிதாக மிகச் சிலரே
கனிகளாகின்றனர்!
ஆம், "உண்மை" என்பது பிரபஞ்சம் மற்றும் அனைத்தின் முடிவு ஆகும்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 14-07-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment