
உங்கள்வீட்டில் தான் எத்தனை அறைகள்! ஒரு நாளில் நீங்கள் எந்தெந்த
அறைக்குள் எத்தனையெத்தனை முறை சென்று புழங்கி வருகிறீர் என்பது
உங்களுக்குத்தெரியுமா? படுக்கையறையில் உங்களது நாள் தொடங்குகிறது!
குளியலறையில் பல்தேய்த்து உடலைச்சுத்தம் செய்கிறீர்! கழிப்பறையில்
உங்களது குடலைக் காலிசெய்கிறீர்! சமையல் அறையில் உங்கள் மனைவி
சிற்றுண்டி செய்கிறாள்! உணவு-அறைக்குச்சென்று சாப்பிடுகிறீர்!
அந்தந்த அறைக்கு உரியதை தவறாமல் அன்றாடம் செய்கிறீர், அவற்றையே
உங்கள் ஆயுட்காலம் முழுவதும் செய்வீர்! இதைத்தானே நீங்கள் வாழ்க்கை
என்கிறீர்? ஒரு நாளுக்கு உரியவற்றையெல்லாம் செய்து முடித்து மீண்டும்
படுக்கை அறைக்கு உறங்கச்செல்கிறீர்!
உண்மையில் நீங்கள் ஒரு நாளுக்கு உரிய எல்லாவற்றையும், எதுவுமே விடு
படாமல் செய்து முடித்துவிட்டதாக நம்புகிறீரா?
உங்களது ஒவ்வொரு நாளும் படுக்கை அறையில் தொடங்கி படுக்கையறை
யில் முடிவடைகிறதையாவது நீங்கள் கவனித்திருக்கிறீரா? கடைசியில் கதவு
கள், சன்னல்கள் இல்லாத காற்றோட்டமில்லாத அறைக்குள் கொண்டு வைக்
கப்படுகிறீர்! இவ்வளவுதான் வாழ்க்கையா?
ஒரு வீட்டிலுள்ள அறைகள் வெறும் சுவர்களைக்கொண்டு தடுக்கப்பட்ட வெளி
அல்ல; அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை அம்சத்தை, மிகவும்
அடிப்படையான பகுதியை நிறைவேற்றுவதற்கான இடங்களாகும்.
வீட்டின் மத்தியில், ஒரு பெரிய கூடம், அதை வாழும் அறை (Living Room)
என்கிறீர்! ஆனால், அங்கு நீங்கள் வாழ்கிறீர்களோ இல்லையோ அங்கேதான்
குடும்பப் பிரச்சினைகள், சண்டைகள் யாவும் அரங்கேற்றப்படுகின்றன!
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை உள்ளது! அங்கே குடும்பத்தினருக்கான
உணவு மட்டுமல்லாமல், குடும்பத்தை நிர்வகிப்பதற்கான சர்வ அதிகாரமும்
சமைக்கப்படுகின்றன! உணவு மிகவும் அடிப்படையானது, உணவுதான் ஒரு
நாள் முழுவதும் இயங்குவற்கான செயல்படுவதற்கான சக்தியை, ஆற்றலைத்
தருகின்றது!
சாப்பாட்டு அறை, அங்கே தான் நீங்களும், உமது குடும்பத்தாரும் உண்கிறீர்.
சில குடும்பச் சண்டைகள் இங்கே தான் தொடங்குகின்றன!
படுக்கை அறை, இங்குதான் நீங்கள் ஒய்வு கொள்கிறீர், உறங்குகிறீர், வாரிசு
களை உருவாக்குகிறீர்! சில சண்டைகள் இங்கே தீர்வுகாண்கின்றன, ஆனால்,
சில பெரும் பிரச்சினைகளும்,மண-முறிவுகளும் இங்குதான் ஆரம்பமாகின்றன!
அடுத்து, குளியலறை இங்கு நீங்கள் பல்தேய்த்து உடலைக்குளிப்பாட்டி சுத்தம்
செய்கிறீர்! கழிப்பறையில் உங்களது குடல்களைக் காலிசெய்கிறீர்! மீண்டும்
உணவைக்கொண்டு வயிற்றை நிரப்புவதற்கு முன்னேற்பாடாக!
ஆம், உண்டு, உறங்கி, இனம்பெருக்கி வாழும் வாழ்க்கையின் பிரதான அம்சங்
களை நிறைவேற்றுவதற்கான அறைகளுடன் நம் ஒவ்வொருவரின் வீடும் நம்
முடைய பொருளாதார நிலைக்கேற்ப சிறியதாகவோ, அல்லது பெரியதாகவோ
அமைத்துக்கொள்கிறோம்! ஆனால், ஒரு வீடு என்பது எதுவும் விடுபடாமல்
வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டதாக பெரும்
பாலும் அமைக்கப்படுவதில்லை! ஒரு வீடு என்பது நாம் வாழும் வாழ்க்கை
யைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்பதை நாம் அறிந்திருக்கவில்லை!
நம்மில் பலர் நம் வீட்டில் இறைவழிபாட்டிற்கென பூஜை அறை ஒன்றையும்
அமைக்கத்தான் செய்கிறோம்! அங்கே நாம் பலவித கோரிக்கை மனுக்களை
பிரார்த்தனை என்ற பெயரில் சமர்ப்பிக்கிறோம்! மொத்தத்தில், பூஜை அறை
என்பது இறைவனுக்கு நாம் அளிக்கும் உதட்டளவு உபசரிப்புக்கான ஒருஅறை
என்பதற்கு மேல் வேறெதுவுமல்ல!
நம்மில் சாதாரணமாக வாழப்பிடிக்காத சிலர், தங்கள் பொருளாதார அந்தஸ்து
வெளியே தெரியும்படி வீட்டை பெரிதாக, பகட்டாக மாளிகை போல
அமைத்துக்கொள்கிறோம்! பெரிய பெரிய 'பங்களாக்கள்', மாளிகைகள், அரண்
மனை போன்ற வீடுகளை எழுப்புபவர்கள் அவற்றில் வசிக்கிறார்களே தவிர
வாழ்வதில்லை! ஒருவனுடைய வீடு பெரிதாக பெரிதாக அவனது இதயம்
சிறுத்துவிடுகிறது! அவன் மனித சமூகத்திலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு
விடுகிறான்! வீடு, வாசல், வாழ்க்கை குறித்த விஷயத்தில் எவ்வகையிலும்
இவர்களை, இந்த பணக்காரர்களை, சிறந்த உதாரணமாக, பின்பற்றத்தக்க முன்-
மாதிரியாகக் கொள்ளவியலாது என்கிற எச்சரிக்கையுடன் நாம் இவர்களை
இப்போதைக்கு விட்டு விலகிச் செல்வோமாக!
பொதுவாக, வீடுகள், அவை சிறிதோ, பெரிதோ அவை உடலை மையமாகக்
கொண்ட வாழ்க்கைக்கு மட்டுமே இடமளிப்பதாக அமைந்துள்ளன, அல்லது
அமைக்கப்படுகின்றன! உயிர்-வாழ்தல் என்பது அடிப்படையானது, ஆனால்,
அதைவிட உயிர்-வாழ்வதன் நோக்கமும், குறிக்கோளும் அதிமுக்கியமானவை;
ஏனெனில், அதில்தான் உயிர்-வாழ்வதன் அர்த்தம் அடங்கியுள்ளது! ஆக,அர்த்த
முள்ள மனித வாழ்க்கையை, அதாவது, உள்ளத்தை மையமாகக் கொண்ட
உயர்-வாழ்க்கையை வாழ்வதற்கு இடமளிப்பதாக, வீடானது அமைக்கப்படுவது,
குறைந்த பட்சம் ஒரு அறையாவது அமைக்கப்படுவது மிகவும் முக்கியமாகும்!
அத்தகைய ஒரு அறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம்மில் வெகு சிலர்
ஏற்கனவே தங்கள் வீடுகளில் திட்டமிட்டு அமைத்துள்ளார்கள், அல்லது,அதிகப்
படியாக இருக்கும் ஒரு அறையை ஒதுக்கியுள்ளார்கள். அதற்குப்பெயர் தான்
"படிப்பறை" என்பதாகும்!
ஆனால், படிப்பறை என்றவுடன் அது பள்ளிக்குழந்தைகள் படிப்பதற்கும்,வீட்டுப்
பாடங்களை எழுதுவதற்குமான அறை என்று கருதிட வேண்டாம்! ஏனெனில்,
படிப்பு, கல்வி, கற்றல், அறிவு என்பவை பள்ளிக்குச்செல்லும் சிறுவர்களுக்கும்,
கல்லூரிக்குச் செல்லும் இளைஞர்களுக்கும் மட்டுமேயுரியது அல்ல! மாறாக,
படிப்பு, கல்வி, கற்றல், அறிவு, ஞானம் ஆகியவை சிறுவர்களைவிட வளர்ந்த
பெரியவர்களுக்குத்தான் அதிகம் தேவைப்படுகிறது! தற்காலப் பள்ளி, மற்றும்,
பல்கலைக்கழகக் கல்வி என்பது பெரிதும் பிழைப்புக்கான கல்வியாக மட்டுமே
யுள்ளன; வாழ்க்கைக்கான கல்வியாக இல்லை! நாம் தான் பிழைப்புக்கான
கல்வியை கற்று முடித்து நல்ல உத்தியோகத்தில் அமர்ந்து விட்டோமே இனி
எதற்கு நமக்குப் படிப்பு, கல்வி, கற்றல், அறிவு என்றெண்ணுவது பெருந்தவறு
ஆகும்!
மேலும், படிப்பறை என்பது படிப்புக்கானது மட்டுமல்ல; மாறாக, ஒருவன் தன்
னுடன் தனித்திருக்க, தன்னுள் ஆழமாகச்செல்ல உதவும் வகையிலானதொரு
இடமாகும்! அங்கே ஒருவன் அமர்ந்து ஆழமாகச் சிந்திக்கவும், தியானிக்கவும்,
தன்னை ஆட்கொண்ட இசைப்பாடல்களைக் கேட்கவும், இசைக்கருவியின்
துணையுடன் தன்னுடைய ஆன்மாவின் பாடல்களை இசைக்கவும், ஓவியம்
தீட்டவும், சிறிய அளவிலான சிற்பங்களைச் செதுக்கவும், கைவினைப்பொருட்
களை வடிவமைக்கவும், சுருக்கமாகச் சொன்னால், உடல், நாடிநரம்புகள்,மனம்,
இதயம் யாவும் ஒத்திசைவுடன் இயங்குவதன் உச்சமாக ஆன்மாவின் தரிசனத்
தைப் பெறுவதற்கான ஒரு ஆரவாரமற்ற வெளிதான் படிப்பறை என்பதாகும்!
ஆக, ஒவ்வொரு வீட்டிலும் படிப்பறை என்பது மிகவும் அவசியமாகத்தேவை!
ஆனால், அதற்காக படிப்பறை என்பது வீட்டின் மையத்தில்தான் அமைக்கப்பட
வேண்டும் என்பதில்லை! மனித வாழ்வின் மிக மையத்துவமான அம்சமான
உள்ளத்தின் (ஆன்மீக) வாழ்க்கைக்கு உதவும் வகையிலான படிப்பறை என்பது
ஒவ்வொரு வீட்டிற்கும் மையமாக விளங்கவேண்டும் என்பதைக் குறிப்பதற்கா
கவே "வீட்டின் மையத்தில் ஒரு படிப்பறை!" என்று இக்கட்டுரைக்குத் தலைப்
பிடப்பட்டுள்ளது! ஆம், வீடு சிறியதோ, பெரியதோ அதில் ஒரு படிப்பறையும்
இடம் பெறவேண்டும், அந்த அறை ஓரத்தில் இருந்தாலும்,வீட்டின் மையத்தில்
இருந்தாலும் அவ்வீட்டின் ஈர்ப்பு-மையம் (Center of Gravity)படிப்பறை
யில் அமையுமாறு ஒருவர் தன் வாழ்க்கையை வாழ்ந்திடவேண்டும்!
ஒருவரது படிப்பறையானது வீட்டினுள் (ஏதோவொரு பகுதியில்) தான் இருக்
கிறது என்றாலும், அதை இப்பிரபஞ்சத்திற்கு வெளியே திறக்கும் ஒரு கதவாக
மாற்றுவது அவரது உணர்வார்ந்த முயற்சியில் தான் உள்ளது!
மா.கணேசன்/ நெய்வேலி/ 02-07-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment