Friday, 28 July 2017

வண்ணத்துப்பூச்சியின் செய்தி!

























         வண்ணத்துப்பூச்சியின் செய்தி கம்பளிப்புழுக்களைப்
         பொறுத்தவரை மரணத்திற்கான அழைப்பே!
                                                -•-

பகிர்ந்து கொள்ள உங்கள் எல்லோரிடமும் எப்போதும்
ஏதாவதொரு செய்தி, தகவல் இருக்கவே செய்கிறது
என்பதுதான் உங்களுடைய துரதிருஷ்டம்!
ஏனெனில், நீங்கள் பரிமாறிக்கொள்ளும் செய்திகள்
எத்தகையவை, எவற்றைப் பற்றியவை?
நீங்கள் விரும்புகிற 'நல்ல' செய்திகளைக்கேட்டு மகிழ்வீர்!
நீங்கள் விரும்பாத 'கெட்ட' செய்திகளைக்கேட்டு அழுவீர்!

உங்களுடைய இன்பங்களும் துன்பங்களும்
உங்களைப்போலவே மேலோட்டமானவை!
உங்களைப்போலவே உங்களது வாழ்க்கையும் ஆழமற்றதே!
நீங்கள் பரிமாறிக்கொள்ளும் செய்திகள் அனைத்தும்
அன்றாடம் சேர்ந்தவை - அன்றாட அலுவல்கள்
அன்றாட விஷயங்கள், அன்றாட விவகாரங்கள், மற்றும்
அன்றாட சம்பவங்கள் ஆகியவை மட்டும் தானே?

அன்றாடம் கடந்த செய்திகளைப் பொறுத்தவரை
நீங்கள் செவிடர்களும், குருடர்களுமாக ஆகிவிடுகிறீர்!
பிறகு எனது செய்திக்கு பதிலளிப்பதிலிருந்து தப்பிப்பதற்காக
நீங்கள் ஊமைகளாக நடிக்கிறீர்! அல்லது மனத்தாங்கல்
கொண்டவராக என்னிடமிருந்து விலகிச் சென்றுவிடுகிறீர்!

உங்களில் சிலர் எப்போதாவது அன்றாடம் கடந்த செய்திகளைத்
தேடுகிறீர் என்பதை உமது கவிதை நாட்டத்திலிருந்து
நான் அறியாமலில்லை!
ஆனால், உமது கவிதா ரசனை என்பதென்ன,
பழைய கள்ளை புதுப்புது மொந்தைகளில் பருகுவது தானே!
மேலும், உமது ஆன்மீக ஈடுபாடு என்பதென்ன, உமது
அகந்தையின் இன்னொரு முகமூடி விளையாட்டு தானே!
உமது தத்துவ ஈடுபாடு என்பதென்ன, ஞானிகளின்
சிந்தனைகளை மனப்பாடம்செய்து ஒப்பிப்பது தானே!
பிறகு, தவளை குட்டை நீரைக் கண்டதும்  உடனே அதில்
தாவிக்குதிப்பதைப்போல உமது அன்றாடத்தில் மூழ்கிப்போவது
தானே உமது வாடிக்கையான வாழ்க்கை!
                                 
எனது செய்திகள் எப்போதும் உமக்கு ஏற்புடையதாய்
இருக்கவேண்டுமா என்ன?
உமக்கு ஏற்புடைய செய்தி என்பது உம்முடைய
அகந்தையை மகிழ்விக்கும் செய்தி தானே!
அச்செய்தி உம்மைப்போலவே பழசாகத்தானே இருக்கும்!

எனது செய்திகள் எல்லோருக்கும் ஏற்புடையதாய்
இருக்குமா என்ற சந்தேகம் உமக்கு இருக்கலாம்!
'எல்லோரும்' என்பது வெறும் எண்ணிக்கையல்லாமல்
வேறென்ன? அல்லது பெரும் எண்ணிக்கையாக
இருந்தாலும் தான் என்ன? அது வெறும் "பூச்சாண்டி"!
ஆயிரம் கம்பளிப்புழுக்கள் சேர்ந்தாலும் ஒரு
வண்ணத்துப்பூச்சிக்கு ஈடாகுமா?

நான் சொல்லும் செய்தியானது நீர் எப்போதும்
விரும்பி அசைபோடும் அதே பழைய வைக்கோல் அல்ல!
மாறாக, உமது ஆன்மாவைக் காண ஏக்கம் கொள்ளச்செய்யும்
தூண்டுகோல் ஆகும்!

எனது செய்தி உம்மை நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்குவதாக
உணர்கிறீரா? உம்மை நிர்ப்பந்திக்காத, தொந்திரவு செய்யாத,
உமது திருப்தியை அழிக்காத, மன அமைதியைக்
குலைக்காத, உறக்கத்தை கெடுக்காத, கனவுகளைக்
கலைக்காத செய்தி ஒரு செய்தியே அல்ல!
உமது பழைய வார்ப்பை உடைக்காமல் உம்மைப் புதுப்பிக்க
இயலாது! உருக்குலைக்காமல் உம்மை
உருமாற்ற வியலாது!

எனது செய்தி உமது சுதந்திரத்தைப் பறிப்பதாகத் தெரிகிறதா?
தனது ஓட்டிற்குள் சுருங்கிக்கொள்ளும் ஆமையின் பாதுகாப்பு
தற்காலிகமானது! ஏனெனில், உமக்குள்ளிருந்தே உம்மை
அழிக்கும் விதி ஒன்றுள்ளதை மறந்திடாதீர்!
எனது செய்தி உண்மையான சுதந்திரத்தையும்
முழுமையான பாதுகாப்பையும் பற்றியது!

எனது செய்தி உமக்குக் கசப்பாகத் தெரியலாம்!
ஆனால், உமது பிறவி நோயை குணப்படுத்தும் மருந்து
எனது செய்தியில் அடங்கியுள்ளது!

எனது செய்தி உங்களுக்குத் தேவைப்படாது, பயன்படாது
என்றெண்ணி நீர் நகைக்கலாம்!
ஆனால், உமக்கு மிகவும் தேவைப்படுபவை, பயன்படுபவை
யாவும் ஒரு நாள் தேவைப்படாமல், பயன்படாமல் போகும்!
அப்போது உம்மை கரைசேர்க்கும் படகு இச்செய்தியே!

உம்மிடமும் இத்தகைய செய்தி உள்ளதெனில்
அதையும், அதற்காக உம்மையும் நான் வணங்குகிறேன்!
அவ்வாறே முந்தைய-கால செய்தியுடையோர், தூதுவர்,
தீர்க்கதரிசி என எல்லோரையும் அவர்களுடைய
செய்திகளையும் வணங்குகிறேன்!

எனது செய்தி இதுதான்: பேருணர்வு மட்டுமே முக்கியமானது,
நிஜத்திலும் நிஜமானது, இறுதியானது!
நான் பேருணர்வு என்றழைப்பதை சிலர் இறை என்பர்!
சிலர் கடவுள் என்பர்! சிலர் அன்பு என்பர்! சிலர் பிரம்மம் என்பர்!

உமது சக மனிதர்களை நீர் சந்திக்கும் போது அவர்களிடம்
பகிர்ந்து கொள்ள என்ன செய்தி வைத்திருக்கிறீர்?
குசல விசாரிப்பு, பொருட்களின் விலையேற்றம், வந்து சேராத
ஊக்கத்தொகை, ஊர்வம்பு, பயனற்ற அரசியல், அரட்டை
தற்பெருமைப் பேச்சு இவ்வளவு தானே!

உம்முடைய அனைத்து செய்திகளும் தகவல்களும்
முடிவுறும்போது எனது செய்தி தொடங்குகிறது!
ஆனால் உம்முடைய செய்திகளும் தகவல்களும் ஒருபோதும்
முடிவடைவதில்லை என்பதால்
அதிரடியாக நான் அவற்றை மறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு
எனது செய்தியைச் சொல்லத் தொடங்கிவிடுவதால்
மேலும் நீர் வாழ்ந்துவரும் வாழ்க்கையைப்பற்றிய யாதொரு
குறிப்பும் என்னுடைய செய்தியில் இடம்பெறாததால்
நீர் அதிர்ச்சியும் குழப்பமும் அடைகிறீர்!

அசலான வாழ்க்கை பற்றியது எனது செய்தி, அதுவே எனது
செய்தியின் விசேடம்!
நீர் வாழும் வாழ்க்கை எலியின் வாழ்க்கையைவிட
மேலானதல்ல!
எலிக்கு எது அசலான வாழ்க்கையோ அது மனிதனுக்குக்
கீழானது!
வாழ்வின் அர்த்தமறியாத, நோக்கமறியாத, இலக்கற்ற
வாழ்க்கையும் மனிதனுக்குக் கீழானதே!

உம்மைப் பற்றிய உண்மையை எவ்வாறு நான்
கூறுகிறேன் என்றால், உம்மிடம் அன்றாடம் கடந்த எந்த
செய்தியும் இல்லை என்பதைக்கொண்டு!
உம்மைச் சந்திக்கும்போது எவ்வாறு நீர் பசப்புகிறீர்!
என்னைத் தவிர்ப்பதற்காக நீர் கையாளும் யுக்திகள் தான்
எத்தனையெத்தனை!
இவ்வாறே உம்மைப்பற்றிச் சொல்லிக்கொண்டே
போகலாம்!

நீர் எண்ணுகிறீர், நீர் நீராகவே இருக்கிறீர் என்பதாக!
கம்பளிப்புழு ஒரு கம்பளிப்புழுவாகவே இருப்பதில்
ஒரு மேன்மையும் இல்லை! ஏனெனில்,
கம்பளிப்புழுவின் முழுமை வண்ணத்துப்பூச்சியாக
மாறுவதிலேயே அடங்கியுள்ளது!
கம்பளிப்புழு தன் கம்பளிப்புழு இயல்புக்கு மரிக்காமல்
வண்ணத்துப்பூச்சியாக மாற இயலாது!  

மா.கணேசன்/ நெய்வேலி/ 26-07-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...