
மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்
ஆனால் காலம் மாறுகிறது என்கிறோம்!
நமது சந்திப்புக்களின் உச்சம் தொடப்பட்டுவிட்டது!
நாம் அமர்ந்து அளவளாவிய சதுக்கங்களில்
யார் யாரோ அமர்ந்துள்ளனர்!
தேய் பிறைக்காலம் வெகு விரைவாகத் தொடங்கிவிட்டது!
நாம் தனிமைப் பயணியாகி விட்டோமோ?
காற்றுப்புகாத குறுகலான அறை காத்திருக்கிறது!
எங்கோ தொடங்கினோம், எங்கே போகிறோம்?
வாழ்வின் மிச்சமீதங்களை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
சுற்றிலும் மனிதர்கள் ஆனால் பேச்சுத்துணை இல்லை!
இருந்தாலும் பகிர்ந்து கொள்ள ஏதுமில்லை!
தனக்குள்ளே பேசிக்கொள்ளும் காலம் வந்திட்டதோ?
காலம் கடந்த ஞானோதயம் காலத்தைக்கடன் கேட்கிறது!
காலமோ வட்டியைக்கொண்டு வாழ்ந்து கொள் என்கிறது!
ஓய்வில்லாத சம்பாத்தியம் ஒதுக்கித் தந்த ஓய்வூதியம்
ஓயாத தேவைகளுக்கு ஓய்வுகொடுக்கச் சொல்லுமோ?
*
நண்பர்களைப் பற்றிய செய்தி எதுவும் வராதவரை நல்லது!
என்னைப்பற்றிய செய்தி அவர்களை எட்டாத வகையிலமைந்த
ஒரு தீவைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
எனது மிச்ச மீதக்காலத்தை வாழ்ந்து முடிக்க!
*
நண்பர்களை நினைத்தாலே நயவஞ்சகமும்
நன்றிகெட்ட தனமும் தான் நினைவில் எஞ்சுகிறது!
கொஞ்ச காலம் ஆகலாம் எல்லோரையும் மறப்பதற்கு!
*
ஆர்மீனிய அவெட்டிக் இஸாஹாக்கியானின்
அபு அலா அல் மஹரி யைப் போல,
முன்பு நான் நேசித்தவர்களை, நேசித்தவைகளை எல்லாம்
தற்போது வெறுக்கத்தொடங்கிவிட்டேனோ!
ஒரு இரவு யாருக்கும் தெரியாமல் அபு அலா அல் மஹரி
பாக்தாத் நகரை விட்டு வெளியேறியது போல,
(சபிக்கப்பட்ட இந்த) நெய்வேலி நகரை விட்டு
நான் வெளியேறும் காலம் வெகு தொலைவில் இல்லை!
எந்த பாக்தாத் நகரம் அபு அலா அல் மஹரியை மதிக்காது
விரட்டியதோ
நிச்சயம் அது சபிக்கப்பட்டதாகத்தான் இருக்கவேண்டும்!
இல்லாவிட்டால், அந்த அமெரிக்கப் பாவிகள் அதை
அழித்து நிர்மூலமாக்கியிருப்பார்களா?
எல்லா நகரங்களும், சாம்ராஜ்ஜியங்களும், நாகரிகங்களும்
சபிக்கப்பட்டவையே! ரோம சாம்ராஜ்ஜியம் என்னவாயிற்று?
ஆம், மனிதர்களும், மக்களும் சாபங்களைத் தம்மீது
தாமே வருவித்துக்கொள்கின்றனர்!
மனிதர்களாயினும், நாகரிகங்களாயினும் தம்மை
உள்ளிருந்தே புதுப்பித்துக் கொள்ளும் அந்த அம்சத்தை
கண்டடையவில்லையெனில், அவை அழிந்து போகும்!
நம்முடைய நவீன நாகரிகமும் அதற்கு விதிவிலக்கல்ல!
தாம் கொண்ட ஒரு மேலோங்கிய கருத்தை வாழ்ந்து
முடித்ததும் மனிதர்களும், சாம்ராஜ்ஜியங்களும்,
நாகரிகங்களும் வீழ்ச்சியடையத் தொடங்குகின்றன!
எதிர்கால அழிவுகளை ஆருடங்களாகச் சொல்லி நிகழ்கால
அழிவைத் தவிர்க்க முடிந்ததா, நாஸ்ட்ராடாமஸ்?
நாம் விதைத்ததை நாம் அறுவடை செய்தேயாக வேண்டும்!
*
(சபிக்கப்பட்ட அந்த நகரத்து)
நண்பர்களைப்பற்றி ஒரு நல்ல வார்த்தையாவது
சொல்லவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்!
ஆனால், எவ்வளவு யோசித்தாலும் எதுவும் சொல்லத்
தோன்றவில்லை!
அது போகட்டும், ஒரு கெட்ட வார்த்தையாவது
சொல்லவேண்டும் என்றாலும், அவர்களுக்கென்று புதிதாய்
ஒரு வார்த்தையை உருவாக்கினால் தான் உண்டு!
எல்லா தீய வார்த்தைகளையும் உள்ளடக்கிய அந்த
ஒற்றை வார்த்தையை தேடிக்கொண்டிருக்கிறேன்!
*
அவ்வளவு மோசமானவர்களா அவர்கள் என்று
கேட்காதீர்கள்; மோசம் என்பதற்கும் மேலே!
அவர்களை "மண்" என்று சொல்லலாம் என்றாலும்
மண்ணைவிட அவர்கள் மோசமானவர்களாக அல்லவா
இருக்கிறார்கள்!
மண் கடைசிவரை மண்ணாகவே இருந்தாலும்
அதில் எண்ணற்ற செடி கொடிகளும், மரங்களும்
வளர்கின்றனவே!
ஆனால், இவர்கள் மண்டையிலிருந்து புதிதாக
ஒரு சிந்தனையும் உட்-பார்வையும் எதுவும்
பிறந்ததில்லையே!
*
அவர்கள் என் பொறுமையை எவ்வளவோ சோதித்தார்கள்!
அவர்களை நேர்வழிக்குக் கொண்டுவரும்
என் முயற்சிகள் அனைத்தையும் தோற்கடித்தார்கள்!
என்னை தோல்வியுறச்செய்வதில் வெற்றி கண்டவர்கள்
தங்கள் இலக்கை அடைவதில் தோற்றுப்போயினர்!
என்னை வெற்றி பெறச்செய்திருந்தால் நிச்சயம் அவர்களும்
வெற்றி பெற்றிருப்பர்!
*
உயரிய நோக்கம் பற்றிய பேச்சு அவர்களைப் பொறுத்தவரை
சாதாரணமானதாகும். தானியக் கதிர்களை இழுத்து வந்து
தங்கள் வளைகளுக்குள் சேமிக்கும் எலிகளுடைய உன்னத
நோக்கத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல அவர்களுடையது!
*
எப்போதும் நான் ஏன் எதிர்மறையாகவே பேசுகிறேன்
என்று எண்ணுபவர்கள் தங்களது உயரிய நோக்கம் என்ன
என்பதை முதலில் கண்டுபிடித்துச் சொல்லட்டும்!
*
எனக்குப் பிடிக்காத யாரைப்பற்றியோ நான் பேசுகிறேன்,
நண்பர்களுடன் கொண்ட பிணக்குகளால் அவர்களைத்
தூற்றுகிறேன் என்பதாக வாசகர்கள் சிலர் நினைக்கலாம்!
ஆனால், இதை வாசிக்கும் ஒவ்வொருவரைப்
பற்றியும் தான் இப்படிப் பேசுகிறேன்!
ஏனெனில், பிறருடனான எனது நட்பில், பழகுதலில் எவ்வித
கொடுக்கல்-வாங்கலும் கிடையாது; ஆகவே அதில்
சண்டை சச்சரவுகளுக்கு இடமேது?
மேலும் கொடுப்பது மட்டுமே என் பணி - இதோ
உங்கள் வாசிப்புக்கு கொடுக்கப்பட்ட இந்த எனது
செய்தியைப்போல!
எனது செய்தியை எவ்வாறு (உள்) வாங்கிக்கொள்கிறீர்
என்பதைப்பொறுத்தது உங்கள் மீதான எனது விமர்சனம்!
ஒருவேளை எனது இப்புலம்பல்களுக்கு கருத்து வேறுபாடு
காரணமாக இருக்கலாம் என்று நீங்கள் எண்ணலாம்!
ஆனால், பாருங்கள்! எனக்கும் பிறர்க்கும் வேறுபாடு உள்ளது
என்பது உண்மையே! ஆனால், கருத்தே இல்லாதவர்களுடன்
எவ்வாறு கருத்து வேறுபாடு கொள்ள முடியும்?
*
கருத்துகள் இருக்கின்றன, ஆகவே கருத்து வேறுபாடுகளும்!
ஆனால், உண்மை என்பது ஒன்றே!
*
"சத்தியத்தை செவியுறும் வல்லமை எல்லோருக்கும்
கிடைத்துவிடுவதில்லை. அத்திப்பழம் எல்லா
அற்பப் பறவைகளுக்கும் ஆகாரம் ஆகாது."
எனும் ரூமியின் வாசகத்தை மாற்றி எழுதிடமுயன்று
தோற்றுப்போனேன்!
ஆம், சத்தியத்தை செவியுறும் வல்லமையை எல்லோரும்
பெறவேண்டும் என விரும்பினேன்!
அத்திப்பழம் உன்னதமானது எனும்போது ஏன் எல்லா
பறவைகளும் அதை உண்ணக்கூடாது?
*
உங்களுடைய முதல் நாற்பதாண்டுகள் வாலிப அலட்சியத்திலும்
அக்கறையின்மையிலும், ஆணவத்திலும் கழிந்து போயிருக்கட்டும்!
இனியாவது உங்களுடைய பதினாறில் ஒரு பங்கு நேரத்தையும்,
கவனிப்பையும் ஆன்மீகத்தில் செலுத்துங்கள்!
இந்த பதினொன்றாம் மணியில் முயற்சித்தாலும் கூட
நீங்கள் முக்தியடையலாம்!
ஒவ்வொரு கணமும் விழிப்புக்குரிய கணமே!
*
மா.கணேசன்/ நெய்வேலி/ 23-07-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment